எண்ணெய் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வான் கோக்கின் சூரியகாந்தி ஓவியத்தின் மீது தக்காளிச் சாற்றை வீசினர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளிக்கிழமை, இரண்டு எண்ணெய் எதிர்ப்பு ஆர்வலர்கள் இலண்டனில் உள்ள தேசிய கண்காட்சியகத்தில் வன்சென்ட் வான் கோக்கின் சூரியகாந்தி (1888) ஓவியத்தின் மீது இரண்டு குவளைகள் தக்காளிச் சாற்றை வீசினர். அதில் இலண்டனைச் சேர்ந்த போப்பே பிளம்மர் 21, மற்றும் நியூகாஸில் இனை சேர்ந்த அன்னா ஹாலண்ட் 20, ஆகியோர் Just Stop Oil (எண்ணையை நிறுத்து) என்ற அமைப்பின் ஆதரவாளர்களாவர். இவ்வமைப்பு பிரித்தானிய அரசாங்கம் 'இங்கிலாந்தில் புதைபடிவ எரிபொருட்களின் ஆய்வு, மேம்பாடு மற்றும் உற்பத்திக்கான அனைத்து எதிர்கால உரிமம் மற்றும் ஒப்புதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று கோரும் குழுக்களின் கூட்டணியாகும்.

இவ்வமைப்பு சமீபத்திய வாரங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறது. இது 'இலண்டனில் இடையூறு ஏற்படுத்தும் நீண்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாதம் முழுவதும் தொடரும்.'

எண்ணெய்யை நிறுத்துங்கள் போராட்டம் [Photo: juststopoil.org]

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நடவடிக்கையின் போது, பிளம்மர் பார்வையாளர்களிடம் “கலை வாழ்க்கையை விட மதிப்புள்ளதா? உணவை விட? நீதியை விட மேலானதா?” எனக் கேட்டார்.

அவர் தொடர்ந்தார், “வாழ்க்கைச் செலவு நெருக்கடியானது புதைபடிவ எரிபொருட்களால் உந்தப்படுகிறது. மில்லியன் கணக்கான குளிர், பசியுள்ள குடும்பங்களுக்கு அன்றாட வாழ்க்கை கட்டுப்படியாகாததாகிவிட்டது. அவர்களால் ஒரு குவளை சூப்பைக் கூட சூடாக்க முடியாதுள்ளது. இதற்கிடையில், பருவமழை, பாரிய காட்டுத் தீ மற்றும் காலநிலை சீர்குலைவு காரணமாக ஏற்படும் முடிவில்லாத வறட்சி ஆகியவற்றால் அறுவடை தோல்வியடைந்து, மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுவை எங்களால் வாங்க முடியாது. அது எல்லாவற்றையும் எடுக்கவுள்ளது. நாங்கள் உடனடியாகச் செயல்படாவிட்டால், நாங்கள் இழந்த அனைத்தையும் திரும்பிப் பார்த்து துக்கப்படுவோம்”.

'புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் சாதனை இலாபம் ஈட்டுவதால், இங்கிலாந்தின் குடும்பங்கள் இந்த குளிர்காலத்தில் வீடுகளை சூடாக்குவதா அல்லது சாப்பிடுவதா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். ஆனால் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை எங்கள் கட்டணங்களுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. சோமாலியா இப்போது ஒரு பேரழிவு பஞ்சத்தை எதிர்கொள்கிறது. இது வறட்சி மற்றும் காலநிலை நெருக்கடியால் தூண்டப்படுகிறது. மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியை எதிர்கொள்கின்றனர். புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்காக நாம் அழுத்தம் கொடுத்தால், நமக்காகத் தேர்ந்தெடுக்கும் எதிர்காலம் இதுதான்” என அன்னா ஹாலண்ட் கூறினார்.

தேசிய கண்காட்சியகத்தில் எதிர்ப்பும், அதை வழிநடத்தும் கண்ணோட்டமும் அரசியல்ரீதியாக திவாலானவை. குழுவின் வலைத் தளத்தின்படி, ஒரு மாத கால 'இடையூறுக்கான திட்டத்தை' தன்னைத்தானே இறுதியில், பரிதாபகரமான வேண்டுகோளான 'Just Stop Oil டோரி உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மனை தம்மை வந்து சந்திக்கும்படி அழைப்பதை அவர் ஏற்றுக்கொண்டால் நாங்கள் தக்காளி சாற்றை வீசுவதை நிறுத்துவோம்' என்றளவிற்கு குறைக்கிறது.

பிரேவர்மேன் ஒரு தீவிர வலதுசாரி அரசியல்வாதி ஆவார். அவர் மார்ச் 2019 இல் 'கலாச்சார மார்க்சிசம்' என்று கண்டனம் செய்தார். இந்த வார்த்தை நோர்வே பயங்கரவாதி ஆண்டர்ஸ் பிரேவிக் உட்பட யூத-விரோத, பாசிச சக்திகளுடன் தொடர்புபட்ட ஒன்றாகும்.

பெருவணிகத்தின் முகவர்களான கன்சர்வேடிவ் கட்சியோ அல்லது தொழிற் கட்சியோ காலநிலை மாற்றத்தைத் தடுக்க எதையும் செய்ய மாட்டார்கள். முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கி இளைஞர்களை ஊக்கப்படுத்துவது ஒரு முட்டுச்சந்தையும், தீவிரமான திசைதிருப்புதலும் ஆகும்.

வான் கோக்கின் பிரபல்மான ஓவியத்தின் மீதான தாக்குதல், ஓவியம் பாதிப்பில்லாமல் இருக்கும் என்று ஆர்வலர்கள் அறிந்திருந்தாலும், பல கோணங்களிலும் பிற்போக்குத்தனமானது. இது துல்லியமாக தவறான சமிக்ஞையை அனுப்புகிறது.

இது Just Stop Oil இன் உறுப்பினர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக கலைப் படைப்புகளை குறிவைத்த முதல் நடவடிக்கை அல்ல. ஜூலை மாதம், இலண்டனின் ரோயல் கலைக்கூடத்தில் லியோனார்டோ டா வின்சியின் The Last Supper (சி. 1495) நகலை பல கூட்டணியின் ஆர்வலர்கள் தம்மில் ஒட்டிக்கொண்டனர்.

இந்த அழிவுச் செயல்களுக்கு Just Stop Oil மட்டும் ஏகபோக உரிமை கொண்டிருக்கவில்லை. மே மாதத்தில், டாவின்சியின் மோனாலீசா (சி. 1503) கண்ணாடியை அதன் மேற்பரப்பில் கிரீம் தடவுவதற்கு முன்பு ஒரு நபர் உடைக்க முயன்றார். பாரிஸில் ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள லூவர் இல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர், தாக்கியவரை அங்கிருந்து அகற்றும்போது, “பூமியை நினைத்துப் பாருங்கள்! மக்கள் பூமியை அழிக்கிறார்கள்!” எனக் கத்தினார்.

Just Stop Oil, தேசிய கண்காட்சியகத்தில் எதிர்ப்பை நியாயப்படுத்தும் வகையில், அதன் அக்கறையின்மை மற்றும் செயலற்ற தன்மைக்கு மக்களைக் குற்றம் சாட்டுகிறது. அது பொதுமக்களை நோக்கி திரும்பி வான் கோ தாக்குதலால் மக்கள் சீற்றமடைந்துள்ளதாக கூறியது. ஆனால் “பாகிஸ்தானில் 33 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தபோது, 1000 மில்லியன் நண்டுகள் நமது பெருங்கடலில் இருந்து வெளியெடுக்கப்பட்டது, 40°C வெப்பத்தால் தீயணைப்பு சேவை செயலிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டபோது உங்கள் சீற்றம் எங்கே?. நாம் எதைப் பாதுகாக்க வேண்டும், கலையை உருவாக்க, ஆக்கபூர்வமாக இருக்க மனிதகுலத்தை அனுமதிக்கும் நிலைமைகளையா அல்லது அவற்றைப் பார்க்க யாரும் இல்லாத தலைசிறந்த படைப்புகளையா?”

திட்டவட்டமாக, பதில் இரண்டையுமாகும்.

இந்த ஆர்வலர்கள் செய்வது போல், மனிதகுலம் 'கலைக்கும் வாழ்க்கைக்கும்' இடையே தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது முற்றிலும் தவறானது. அறியாமலோ அல்லது தெரியாமலோ, எதிர்ப்பாளர்கள் ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தேவைப்படும் சமூக சேவைகளுக்கோ அல்லது கலாச்சாரத்திற்கோ செலவழிக்கும் பணத்தை மக்கள் விரும்புகிறார்களா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பது அதிகாரத்திலிருப்போரின் வாதம். இரண்டிற்கும் போதுமான பணம் அல்லது வளங்கள் இல்லை, அவர்கள் கூறுகின்றனர்.

எண்ணெய் எதிர்ப்பு குழு தொடர்கிறது, “கலைக்கூடங்கள் அழகான படங்களை பாராட்டுவதற்கான இடங்கள் மட்டும் அல்ல: அவை விஷயங்களைப் பற்றிய நமது வசதியான பார்வையை பற்றி கேள்வி கேட்கவேண்டும். குறிப்பாக இதுபோன்ற ஒரு நேரத்தில், நமது வசதியான மண்டலத்தில் தங்கியிருப்பது நாம் மதிக்கும் அனைத்தையும் அழிக்க வழிவகுக்கும்” என்கிறது. இவ்வாறான கருத்து குட்டி முதலாளித்துவ எதிர்ப்பின் குரலாகும். எது 'வசதியான மண்டலம்'? பிரிட்டிஷ் தொழிலாளர்கள் இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

சோசலிச சமத்துவக் கட்சி (பிரிட்டன்) சமீபத்தில் விளக்கியது போல், “தொழிலாள வர்க்கத்தின் மீது போரை அறிவித்துள்ள ஒரு ட்ரஸ் அரசாங்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய மற்றும் தீவிரமான கட்டத்தின் தொடக்கத்தை அக்டோபர் குறிக்கிறது. 1930களில் இருந்து உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கு மத்தியில், மூன்றாம் உலகப் போரை அச்சுறுத்தும் ரஷ்யாவிற்கு எதிரான தீவிரமான போரை ஆதரிப்பதற்கு சிக்கன நடவடிக்கை மற்றும் 'தியாகம்' போன்ற கோரிக்கைகளுடன் டோரிகளும் தொழிற் கட்சியினரும் ஒன்றாக அணிவகுத்து வருகின்றனர்”.

உண்மையில், முதலாளித்துவம் காலநிலை பேரழிவை அச்சுறுத்தும் அதே நேரத்தில் கலாச்சாரத்தையும் தாக்குகிறது. Just Stop Oil வேண்டுகோள் விடுக்கும் அரசியல்வாதிகள் மூலம், பெருநிறுவன, நிதிய தன்னலக்குழு தனது பெரும் இலாபத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் கலை மற்றும் கலைக் கல்விக்கான நிதியை திட்டமிட்டு, இரக்கமின்றியும் வெட்டுகின்றது. ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பின் அறிக்கையானது, 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 10 மில்லியன் கலைத்துறை சார்ந்த வேலைகள் இழந்துவிட்டதாக குறிப்பிடுகிறது. ஆயினும்கூட, உலக அரசாங்கங்கள் முதலீட்டாளர்களையும் நிறுவனங்களையும் கோவிட்-19 இற்கு ஆளும் வர்க்கத்தின் கொலைவெறி பதிலால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க டிரில்லியன் கணக்கான டாலர்களை வழங்கின. இவ்வாறு, பணம் படைத்த உயரடுக்கு உலகின் செல்வத்தை பதுக்கி வைத்திருக்கும் அதே வேளையில், பெருந்திரளான மக்களுக்கு கலாச்சார படைப்புகளை அணுகுவதற்கோ அல்லது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வழிகள் எதுவும் இல்லாதுள்ளது.

காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள விஞ்ஞான ரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு எந்த ஒரு முதலாளித்துவக் கட்சிக்குள்ளும் எந்த பிரிவினரும் இல்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், உலகின் பசுமைக்கட்சி மற்றும் பிற போலி-இடது சக்திகள் உலகை சுற்றுச்சூழல் பேரழிவை நோக்கி இட்டுச் செல்லும் இந்த அமைப்புமுறைக்கு தங்கள் விசுவாசத்தை விரைவாகக் காட்டியுள்ளன.

Just Stop Oil ஆர்வலர்களின் பிரதிபலிப்பு வெறுமனே தவறானது மட்டுமல்ல. மனித குலத்தின் கலாச்சார பொக்கிஷங்களை சேதப்படுத்த அல்லது அழிக்க ஊக்குவிப்பதால், இது ஒரு அதிர்ச்சியூட்டும் அநாகாரிகத்தையும், ஆரோக்கியமற்ற உலகத்தை வெறுப்பதையும் காட்டுகிறது. மீண்டும், கலை என்பது ஒரு ஆடம்பரமாகும் என்பதும், அது மனித உயிர்வாழ்வை உறுதிப்படுத்த தியாகம் செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரை தவறானதும், அபத்துமானதுமாகும். இதற்கு மாறாக, சுற்றுச்சூழலை பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் மிகப்பெரிய கலைத்துவ சாதனைகளின் அடிப்படையில் பரந்த அளவிலான மக்களின் கலாச்சார நிலை உயர்த்தப்பட வேண்டும்.

ஆளும் உயரடுக்கு மனித கலாச்சாரத்தை மேம்படுத்தவோ, பாதுகாக்கவோ அல்லது அதற்கான பரந்த அணுகலை வழங்கவோ தனது இயலாமையைக் காட்டியுள்ளது. அது, பூமியின் சுற்றுச்சூழல் சமநிலையை அழிக்கும் அபாயம் இல்லாத வகையில் உற்பத்தியை ஒழுங்கமைக்க இயலாது என்பதை நிரூபித்துள்ளது. இந்த அடிப்படைத் தேவைகளை அடைவதற்கான வழங்களும் தொழில்நுட்ப வழிமுறைகளும் ஏற்கனவே உள்ளன. இங்குள்ள கேள்வி தொழில்நுட்பம் அல்ல, ஆனால் அரசியலாகும். இது தனியார் இலாபத்தை உருவாக்குவதற்கு மற்ற அனைத்து விடயங்களையும் கீழ்ப்படுத்தும் ஒரு சமூக ஒழுங்கமைப்பை இல்லாதொழிப்பதை வேண்டுகின்றது. உலகப் பொருளாதார வாழ்க்கையை மறுசீரமைக்க உணர்வுடன் செயல்படும் தொழிலாள வர்க்கம் மட்டுமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும்.

Loading