முன்னோக்கு

அயன் சூறாவளியும், அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பொறுப்பற்ற அலட்சியமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சக்தி வாய்ந்த நான்காம் வகை புயல், 1 மில்லியன் மக்கள் வசிக்கும் பகுதியான கேப் கோரல்-ஃபோர்ட் மியர்ஸ் பகுதியைத் தாக்கி ஐந்து நாட்களுக்குப் பின்னர், புளோரிடாவில் அயன் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை 101 ஆக அதிகரித்தது. அந்தப் புயல் அட்லாண்டிக் கடலை நோக்கி நகர்வதற்கு முன்னர் மத்திய புளோரிடாவைச் சேதப்படுத்தியது, தெற்கு கரோலினாவில் மற்றொரு நிலச்சரிவை உண்டாக்கியது. உயிரிழந்தவர்கள் மற்றும் உயிர் பிழைத்திருப்பவர்களை மீட்புக் குழுவினர் தொடர்ந்து வீடு வீடாக சென்று தேடி வருகின்ற நிலையில், மரண எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 3, 2022 திங்கட்கிழமை, நோர்த் போர்ட், ஃப்ளா., இயன் சூறாவளிக்குப் பின், வெள்ளம் சூழ்ந்த சுற்றுப்புறத்தின் வழியாக அதிக நீர் வாகனம் செல்கிறது [AP Photo/Gerald Herbert]

புதன்கிழமை அயன் சூறாவளியின் ஆரம்பத்தில், மணிக்கு 115 மைல் வேகத்தில் (185 km/h) காற்று நீடித்திருந்தது, சில இடங்களில் 30 அங்குலங்களுக்கும் அதிகமாக மழை பெய்தது மற்றும் பயங்கரமாக 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி, ஆயிரக் கணக்கான வீடுகளை மூழ்கடித்ததுடன், தரைக்கு அருகில் இருந்த படகுகளைச் சின்னாபின்னமாக்கின. அலைகளால் வீடுகள் சிதைந்து போயின அல்லது அஸ்திவாரங்களோடு அடித்துச் செல்லப்பட்டன. புயலின் உச்சக் கட்டத்தில், 2.4 மில்லியனுக்கும் அதிகமான புளோரிடாவாசிகளுக்கு மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. அந்தப் புயலால் 63 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

வேகமாக வலுவடைந்து வந்த அந்தப் புயல் தென்மேற்கு புளோரிடாவை நோக்கி நகர்வதைக் குறித்து வானிலை ஆய்வாளர்கள் முன்னெச்சரிக்கை செய்திருந்த போதினும், கேப் கோரல் மற்றும் ஃபோர்ட் மியர்ஸை உள்ளடக்கிய லீ உள்ளாட்சித் துறை அதிகாரிகள், நிலச்சரிவுக்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் வரை கடலோர வெள்ள அபாயத்தால் பாதிக்கப்பட இருந்த அந்தப் பகுதிகளில் இருந்து மக்களைக் கட்டாயம் வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க ஆயிரக் கணக்கானவர்களுக்குக் குறைந்த அவகாசமே கிடைத்தது, இது எண்ணற்ற உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியது.

அமெரிக்காவில் ஒவ்வொரு புயலின் போதும், வெளியேறுபவர்களுக்கு உதவியாக நிதியுதவிகள் வழங்கப்படுவதில்லை என்ற நிலையில், ஏழைகளுக்கும், வீடற்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும், கார் அல்லது பேருந்து வசதியை மேற்கொள்ள இயலாதவர்களுக்கும், அந்தப் புயலில் உயிர் பிழைக்க அவர்களால் ஆன மட்டும் போராடுவதைத் தவிர வேறு விருப்பத் தெரிவு இருக்கவில்லை. வெள்ள நீர் வேகமாக அதிகரித்த போது, பலர் அவர்கள் வீட்டு மேல் விட்டத்தில் ஏறி அமர்ந்தார்கள், அதேவேளையில் அந்த புயலில் படகுகள் மூலம் தப்ப முயன்றவர்கள் காற்று மற்றும் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டார்கள்.

அமைதியாக ஆரம்பித்த இந்த 2022 அட்லாண்டிக் சூறாவளி பருவக்காலம், அமெரிக்க வரலாற்றில் மரணகதியான மற்றும் அதிக அழிவுகரமான ஒன்றாக வடிவெடுத்து வருகிறது.

அயன் சூறாவளி புளோரிடாவைத் தாக்குவதற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைந்த நாட்களுக்கு முன்னர், நான்காம் வகை மற்றொரு புயலான ஃபியோனா (Fiona) சூறாவளிவால் அமெரிக்கப் பகுதியான போர்த்தோ ரிக்கோ மிகப் பெரியளவில் தாக்கப்பட்டது. அது முழு பலத்துடன் அத்தீவைச் சுழற்றி அடித்ததில், 25 பேர் உயிரிழந்தார்கள். ஏறக்குறைய இன்றிலிருந்து சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அத்தீவு முழுவதும் கிட்டத்தட்ட 3,000 பேரைக் கொன்ற பேரழிவுகரமான மரியா சூறாவளிக்குப் பின்னர், இந்த ஃபியோனா சூறாவளி பெரும் வெள்ளப் பெருக்கைக் கொண்டு வந்து, செய்யப்பட்டிருந்த கொஞ்சநஞ்ச நிவாரணங்களில் பெரும்பகுதியையும் நாசமாக்கியது. இந்தச் சூறாவளி அட்லாண்டிக் கனடாவையும் சுழற்றி எடுத்தது, அங்கே மூன்று பேர் கொல்லப்பட்டார்கள், 2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நாசமாகி இருந்தன.

நிலைமையை ஆய்வு செய்ய போர்த்தோ ரிக்கோவின் பொன்ஸ் க்கு திங்கட்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி ஜோ பைடென், “அடுத்த சூறாவளி போர்த்தோ ரிக்கோவை எப்போது தாக்கும் என்பதை நாம் உறுதிப்படுத்தி, தயாராக இருக்க வேண்டும்,” என்றார். ஆனால், வெறும் 60 மில்லியன் டாலர் பெடரல் உதவிகளை மட்டுமே அவர் அறிவித்தார், இது 10 பில்லியன் டாலர் சேதம் என்று மதிப்பிடப்படும் தொகைக்கு முன்னால், அதேபோல உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரை எரியூட்ட காங்கிரஸ் சபை சமீபத்தில் ஒப்புதல் அளித்த 12 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு முன்னால் மிகவும் அற்பத் தொகையாகும். இதேபோன்ற ஓர் அற்ப உதவியை வழங்க பைடென் புதன்கிழமை புளோரிடா விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

பெடரல் அவசரகால மேலாண்மை ஆணையத்தின் பைடெனின் இயக்குனர் தீன்னா கிறிஸ்வெல் ஞாயிற்றுக்கிழமை CNN இன் 'ஒன்றிய அரசு' (State of the Union) நிகழ்ச்சியில் கூறுகையில், நாட்டில் அனைவரும் வெள்ள நிவாரணக் காப்பீடு செய்திருக்க வேண்டும் என்றார், அதாவது பத்து மில்லியன் கணக்கானவர்கள் அவர்களை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சுற்றி வளைத்து கூறுகிறார். “நீங்கள் கடலுக்கு அருகிலோ அல்லது மழை பெய்யும் இடத்திலோ வசிக்கிறீர்கள் என்றால், நிச்சயமாக அங்கே வெள்ளப்பெருக்கு ஏற்படும்,” என்று கூறிய கிறிஸ்வெல், “வெள்ள நிவாரணக் காப்பீடு உங்களுக்குத் தேவைப்படாது என்றாலும், அதற்காக அந்தக் காப்பீட்டை மேற்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று அர்த்தம் இல்லை,” என்பதையும் குறிப்பிட்டார்.

தற்போது பெடரல் அரசு 40,000 டாலருக்கும் குறைவான தொகையை மறுகட்டமைப்புச் செலவாக வழங்கும், வெள்ள நிவாரணக் காப்பீடு இல்லாதவர்களுக்கு மற்றொரு 40,000 டாலர் சொத்துச் சேதத்திற்காக வழங்குகிறது, அதாவது அயன் மற்றும் ஃபியோனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குடும்பங்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்காது, அவர்கள் மீண்டு வருவதற்காக வரவிருக்கும் ஆண்டுகளில் போராட விடப்படுவார்கள் என்பதே இதன் அர்த்தமாகிறது.

இதற்கிடையே, முன்னாள் ஆளுநரும், புளோரிடா குடியரசுக் கட்சியின் செனட்டருமான ரிக் ஸ்காட், புயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதி உதவிகளை அவர்கள் பெறுவதை இன்னும் கடினமாக்கும் வகையில், கடுமையான கட்டிட கட்டுமான விதிமுறைகளுக்கும் மற்றும் காப்பீட்டுச் சந்தையில் நடக்கும் 'மோசடியை' சரி செய்வதற்கான முயற்சிகளுக்கும் ஒரு பரிந்துரையை அறிவுறுத்த உள்ளார்.

ஒரு பேரழிவு எதிர்நோக்கப்படுகிறது என்று மீண்டும் மீண்டும் வழங்கப்பட்ட எச்சரிக்கைகளுக்கு முன்னால், அமெரிக்க ஆளும் உயரடுக்கு, மீண்டும் ஒருமுறை, மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு தெளிவாக அதன் கொலைபாதக அலட்சியத்தைக் காட்டி உள்ளது. அனாவசியமாக 1 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்தப் பெருந்தொற்றுக்கு 'பரவினால் பரவட்டும்' அணுகுமுறையைக் காட்டியது போலவே, புளோரிடாவாசிகளும் அயன் சூறாவளிக்கு முன்னால் அவர்களின் தலைவிதிப்படி விடப்பட்டுள்ளார்கள். வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் உட்பட மக்களில் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களை வெளியேற்றக் கூட அங்கே எந்தத் திட்டமும் இல்லை.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் காலநிலை மாற்றத்தின் கொடிய பாதிப்புகள் அதிகரித்தளவில் உணரப்பட்டு வருகின்றன என்றாலும், அதைக் கையாள்வதற்கான ஜனநாயகக் கட்சியினரின் வாக்குறுதிகள் கைவிடப்பட்டு விட்டன. காலநிலை மாற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க எதுவும் செய்யப்படவில்லை, அதை அதிகரித்து வரும் நிலத்தடி எரிபொருள் உமிழ்வுகளைக் கையாளவும் மிகவும் குறைவாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடல் மட்டம் உயர்வது மற்றும் சூறாவளிகள் தீவிரமடைவது உட்பட காலநிலை மாற்றங்களின் பாதிப்புகளால் அதிகமாக பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ள கேப் கோரல் மற்றும் ஃபோர்ட் மியர்ஸ் போன்ற ஒட்டுமொத்த நகரங்களையும் கட்டமைப்பதில் இருந்து பெருநிறுவன ஊகவணிகர்களும் முதலீட்டாளர்களும் இலாபங்கள் திரட்டுவதையே தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர்த்தோ ரிக்கோ, புளோரிடா மற்றும் பிற இடங்களில் புயல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவசர உதவி வழங்குவதற்காக பில்லியன் கணக்கான டாலர்களை உடனடியாக ஒதுக்கீடு செய்ய சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அழைப்பு விடுக்கிறது. வீடுகள் சேதமடைந்த அல்லது வீடு இழந்த அனைவருக்கும் முழு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவசரகால குடியிருப்புகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

சூறாவளியால் தொடர்ந்து ஏற்பட்டு வரும் ஆபத்தை எதிர்கொள்ள, சமூக உள்கட்டமைப்பைக் கட்டமைப்பதற்காக நூற்றுக்கணக்கான பில்லியன்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஒரு சூறாவளி நெருங்கும் போது, அவரவர் வழியில் ஏதாவது செய்து கொள்ளுங்கள் என்று விட்டு விட முடியாது. ஆபத்தில் இருப்பவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பான இருப்பிடத்தை வழங்க சூறாவளி பாதிக்கும் அனைத்து பகுதிகளிலும் அவசரகால வெளியேறும் அமைப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க இராணுவத்திற்கும் அதன் உயிர்பறிக்கும் அழிவுகரமான கருவிகளுக்கும் நூறு பில்லியன் கணக்கான தொகைகள் செலவிடுவதை நிறுத்துவதன் மூலம் இது போன்ற வசதிகளை ஏற்படுத்த பணம் ஒதுக்க முடியும். உலகையே அணு ஆயுதத்தால் நிர்மூலமாக்க அச்சுறுத்துகின்ற, ரஷ்யாவுக்கு எதிராக விரிவடைந்து வரும் அமெரிக்க-நேட்டோ போர் தொடுப்பதற்காக உக்ரேனுக்குப் பத்து பில்லியன் கணக்கான டாலர்கள் அனுப்புவதை உடனடியாக நிறுத்துமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

இறுதியாக, காலநிலை மாற்றம் முன் நிறுத்தும் அச்சுறுத்தலைச் சமாளிக்க, பெரிய வங்கிகள் மற்றும் மிகப் பெரிய பெருநிறுவனங்களைக் கையகப்படுத்தி அவற்றைத் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பொது நிறுவனங்களாக மாற்றுவதற்குச் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், அவர்களின் உழைப்பு சக்தியின் மூலம், சமூகத்தின் அனைத்து செல்வங்களையும் உருவாக்குகிறார்கள்; இந்தச் செல்வ வளம் மீது அவர்கள் கட்டுப்பாட்டை எடுத்து, அதை அவர்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும். பொருளாதாரத்தை மாற்றியமைத்து, அதை விஞ்ஞானபூர்வ சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பு செய்வதன் மூலம் மட்டுமே அயன் மற்றும் ஃபியோனாவுக்குப் அடுத்து வரும் இதுபோன்ற பேரிடர்களைத் தவிர்த்து, எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

Loading