பிராங்கோ-ஜேர்மன் பதட்டங்கள் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை வடிவமைக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழக்கிழமை நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு 30 ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையேயான கூர்மையான பதட்டங்களால் குறிக்கப்பட்டது.

வழமை போல், புரூஸ்ஸெல்ஸில் கூடியிருந்த 27 தலைவர்களும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போருக்கு தங்கள் ஆதரவை வழங்க உறுதியளித்தனர், காணொளி மூலம் இணைந்த உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கியை பாராட்டினர், மேலும் ஆயுத விநியோகங்களுக்கு உறுதியளித்தனர். கூடுதலாக, வரும் ஆண்டில் 18 பில்லியன் யூரோ நிதி வழங்கி உக்ரேனிய அரசின் வரவு-செலவுத் திட்டத்திற்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. ஒவ்வொரு மாதமும் புரூஸ்ஸெல்ஸில் இருந்து 1.5 பில்லியன் யூரோக்களை கியேவ் எதிர்பார்க்கலாம் என்று ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் உறுதியளித்தார்.

இருப்பினும், உச்சிமாநாட்டில் பங்கேற்றவர்கள், போரின் பேரழிவுகரமான பொருளாதார விளைவுகளை யார் சுமக்க வேண்டும் என்பது பற்றி கசப்பான முறையில் வாதிட்டனர். ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளால் தூண்டப்பட்ட எரிசக்தி நெருக்கடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்ற கேள்வி தான் சர்ச்சையின் முக்கிய புள்ளியாக இருந்தது. வானியல் எரிவாயு மற்றும் மின்சார விலைகள் மில்லியன் கணக்கான உழைக்கும் குடும்பங்களை வறுமையில் ஆழ்த்துகிறது, மற்றும் சிறிய, நடுத்தர வணிகங்களை திவாலாக்குகிறது, அதேவேளை பெரிய நிறுவனங்கள் ஆலைகளை மூடுகின்றன அல்லது எரிபொருள் செலவுகள் குறைவாக இருக்கும் மற்ற நாடுகளை நோக்கி நகர்கின்றன.

இப்போது வரை, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் எரிசக்தி நெருக்கடிக்கு தேசிய நடவடிக்கைகளுடன் பதிலளித்தன. வெளிப்படையான கிளர்ச்சிகள் அல்லது எழுச்சிகள் வெடிக்காத அளவுக்கு அவர்கள் விலைவாசி உயர்வைக் குறைக்க முயன்றனர் மற்றும் குறைந்தபட்சம் சில சிறிய நிறுவனங்களையாவது தக்கவைத்துக்கொள்வதன் அடிப்படையில், இந்த விலைகளுக்கு அரசாங்க உதவி கிடைக்கிறது, மற்றும் அதனால் பெரிய எரிசக்தி நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் மானியங்கள் மூலம் பெரியளவில் இலாபம் ஈட்டுகின்றன.

French President Emmanuel Macron, left, greets German Chancellor Olaf Scholz as he arrives for an EU summit at the Palace of Versailles on March 10, 2022. [AP Photo/Michel Euler, File]

மார்ச் 10, 2022 அன்று, வேர்சாய் அரண்மனையில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸை, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (இடது) வரவேற்கிறார். [AP Photo/Michel Euler, File]

பிரான்ஸ், இத்தாலி மற்றும் உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பகுதி நாடுகள் ஐரோப்பிய எரிவாயு விலையில் ஒரு வரம்பை நிர்ணயிக்க வற்புறுத்தின. ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பினர்களும் ஒரு குறிப்பிட்ட விலை உச்சவரம்பு வரை மட்டுமே எரிவாயுவை வாங்குவார்கள் என்பதே இதன் பொருள்.

ஜேர்மனி இதை கடுமையாக எதிர்க்கிறது. சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், அது நிகழ்ந்தால், எரிசக்தி நிறுவனங்கள் தங்கள் எரிவாயுவை வேறு இடங்களுக்கு விற்பார்கள் என்று கூறி தனது எதிர்ப்பை நியாயப்படுத்தினார். என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அது செயல்பட வேண்டும், என்றார்.

“அதன்பின்னர் எரிவாயு கிடைக்காது என்று அர்த்தம் இல்லை,” என்று அவர் கூறினார். “அது யாருக்கும் உதவாது” என்றார். அவருக்கு நெதர்லாந்து ஆதரவு அளித்தது, அது அதன் சொந்த எரிவாயுவை உற்பத்தி செய்கிறது, மற்றும் அதன் துறைமுகங்கள் மூலம் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை பெரியளவில் இறக்குமதி செய்கிறது. மேலும், அயர்லாந்து, ஹங்கேரி மற்றும் சில சிறிய நாடுகளும் அவருக்கு ஆதரவளித்தன.

எரிவாயு விலை வரம்பை ஆதரிப்பவர்கள், ஜேர்மனி தனது பொருளாதார சக்தியைப் பயன்படுத்தி போட்டி நன்மைகளைப் பெறுவதாக குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, எரிவாயு விலை நெருக்கடி குறித்து ஜேர்மனிக்கு நிதியளிக்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்தாலோசிக்காமல் செப்டம்பரில் ஜேர்மன் அரசாங்கம் ஏற்றுக்கொண்ட 200 பில்லியன் யூரோ எரிபொருள் விலை பாதுகாப்புக் கவசமானது ஐரோப்பா முழுவதும் சீற்றத்தை எதிர்கொண்டது. இது, விலைகள் அதிகமாக இருந்தாலும் ஜேர்மனியின் எரிவாயு விநியோகத்தைப் பாதுகாக்கும் நிலையில், அதிக அளவு கடன்களைக் கொண்ட வறிய நாடுகளால் அத்தகைய தொகையை ஏற்பாடு செய்ய முடியாது.

உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஜேர்மன் சான்சிலரை பகிரங்கமாக தாக்கும் அளவிற்கு மோதல் தீவிரமடைந்தது. 'நான் ஐந்து ஆண்டுகளாக ஒற்றுமையை உருவாக்க முயற்சித்து வருகிறேன்,' ஆனால் ஜேர்மனி தனியாக செல்கிறது என்று மக்ரோன் குற்றம் சாட்டினார். ‘ஜேர்மனி தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது ஜேர்மனிக்கோ அல்லது ஐரோப்பாவிற்கோ நல்லதல்ல’ என்று அவர் மேலும் கூறினார்.

பேர்லினும் பாரிஸூம் நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டிருந்த கூட்டு அரசாங்கக் கூட்டத்தை இரத்து செய்துள்ளன. அதற்கு பதிலாக, ஜனாதிபதி மக்ரோனும் சான்சிலர் ஷோல்ஸூம் அடுத்த புதன்கிழமை பாரிஸில் சந்திக்கவுள்ளனர்.

பதினோரு மணிநேரம் நீடித்த இரவு அமர்வுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு இரு தரப்புக்கும் பொருந்தக்கூடிய ஒரு சமரசத்திற்கு ஒப்புக்கொண்டது, ஆனால் அனைத்து முக்கிய கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படவில்லை. விநியோக பாதுகாப்பில் சமரசம் செய்யாது என்ற நிபந்தனையுடன், எரிவாயு விலை வரம்பு “தற்காலிக மாறும் விலை வரம்பு” மூலம் பதிலீடு செய்யப்பட்டுள்ளது.

இலக்கு 'தன்னிச்சையாக விலைகளை நிர்ணயிப்பதை உறுதி செய்வதாகும். ஆனால், அது எரிவாயுவைப் பெறுவதை சாத்தியமற்றதாக ஆக்கக்கூடாது,” என்று ஷோல்ஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் தற்போது, உறுப்பு நாடுகளின் சிறப்பு அமைச்சர்களின் இணைந்து, தொடர்புடைய சட்ட முன்மொழிவை உருவாக்கவுள்ளது. கூட்டு ஐரோப்பிய எரிவாயு கொள்முதல் ஒரு குறிப்பிட்ட அளவு வரை சாத்தியமானதாக இருக்க வேண்டும்.

ஷோல்ஸும் மக்ரோனும் உச்சிமாநாட்டின் முடிவில் தங்கள் திருப்தியை தெரிவித்தனர். ‘நாங்கள் ஒன்றாக வந்துள்ளோம்,’ என்று ஷோல்ஸ் கருத்துரைத்தார். ஆனாலும் எதுவும் தீர்க்கப்படவில்லை என்பது வெளிப்படையானது. மேலும், பாரிஸ் மற்றும் பேர்லினைப் பிரிக்கும் பல சிக்கல்களில் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்துவதும் ஒன்றாகும்.

உதாரணமாக, மிட்கேட் (Midcat) குழாய்வழி என்று அழைக்கப்படுவது குறித்து கடுமையான தகராறு உள்ளது. ஜேர்மனிக்கு பிரான்ஸ் வழியாக இயற்கை எரிவாயுவையும், பின்னர் ஸ்பெயினில் இருந்து பச்சை ஹைட்ரஜனையும் விநியோகிக்க பிரனே (Pyrenees) மலைப்பகுதி வழியாக குழாய்வழியை உருவாக்க பேர்லின் நீண்டகாலமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சாத்தியம் உள்ளது என்று குறிப்பிட்டு, பாரிஸ் அதை நீண்டகாலமாக தடுத்து வந்துள்ளது. அதற்கு பதிலாக, பார்சிலோனாவை மார்சேய் உடன் இணைக்கும் பிரனே மலைப்பகுதி வழியாக எரிவாயுக் குழாய்வழி அமைக்க ஸ்பெயின் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸூடன் மக்ரோன் இப்போது ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆயுதக் கொள்கை தொடர்பாகவும் கடுமையான பதட்டங்கள் நிலவுகின்றன. ஐரோப்பாவின் முன்னணி இராணுவ சக்தியாக எழுச்சியடைவதற்கான ஜேர்மனியின் முயற்சிகள் பாரிஸில் பெருகிய முறையில் அவநம்பிக்கைகளை தூண்டி வருகின்றன. ஜேர்மனி அதன் ஆயுதச் செலவை அதிகரிக்க வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் முன்பு அழுத்தம் கொடுத்தது, ஆனால் கூட்டு FCAS ஆயுதத் திட்டம் தடுமாறி வருகையில் ஜேர்மனி அமெரிக்க போர் விமானங்களை வாங்குவதும், கிழக்கு ஐரோப்பாவிற்கு டாங்கிகளை வழங்குவதும் இப்போது பிரான்சை ஆத்திரமடைய வைத்துள்ளது.

பிரெஞ்சு பாதுகாப்பு நிபுணர் காஸ்பார்ட் ஷ்னிட்ஸ்லரை (Gaspard Schnitzler) மேற்கோள் காட்டும் ஸ்டேர்ன் இதழின்படி, நம்பிக்கை குறித்த உண்மையான பிரச்சனை உள்ளது. “கிழக்கு ஐரோப்பா நாடுகளில் ஜேர்மனி காலூன்றிவிடும் என்ற அச்சம் உள்ளது”.

15 நாடுகளை ஈடுபடுத்தி ஒரு ஐரோப்பிய வான் பாதுகாப்பு அமைப்பை கட்டமைப்பதற்கான ஷோல்ஸின் சமீபத்திய முன்மொழிவு, பாரிஸை அவமதிப்பதாகக் கருதப்படுகிறது என ஷ்னிட்ஸ்லர் கூறினார். இத்தாலியுடன் தனது சொந்த அமைப்பை உருவாக்கி வரும் பிரான்ஸ் இதில் பங்கேற்கவில்லை. “ஜேர்மனி தனியாக முன்னோக்கி செல்கிறது என்ற உணர்வும் உள்ளது,” என்று ஷ்னிட்ஸ்லர் மேலும் கூறினார்.

வெள்ளியன்று உச்சிமாநாட்டில் பங்கேற்பாளர்கள் விவாதித்த சீனாவுடனான உறவுகள் குறித்தும் உச்சிமாநாட்டில் கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டன. ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவை, சீனாவுடனான மோதலை ஆதரிக்கும் ஐந்து பக்க மூலோபாயக் கட்டுரையை முன்வைத்துள்ளது. அது “எங்கள் ஐக்கிய நிலையை பலவீனப்படுத்தக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஒருங்கிணைக்கப்படாத முயற்சிகளுக்கு” எதிராக எச்சரிக்கிறது.

வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கும் கிழக்கு ஐரோப்பிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் சீனா மீதான கடுமையான நிலைப்பாட்டிற்கு அழுத்தம் கொடுக்கின்றன. இதற்கு நேர்மாறாக, சீனாவுடன் நெருங்கிய உறவைப் பராமரித்துக் கொண்டு, அங்கு அதிக இலாபம் ஈட்டுகின்ற சில நிறுவனங்களைக் கொண்ட ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் மிகுந்த மிதமான அணுகுமுறையை பின்பற்றுகின்றன. சான்சிலர் ஷோல்ஸ் நவம்பர் தொடக்கத்தில் ஒரு பெரிய வணிகக் குழுவுடன் பெய்ஜிங்கிற்கு செல்வார், ஜனாதிபதி மக்ரோனும் இதேபோன்ற பயணத்திற்கு தயார் செய்து வருகிறார்.

இந்த விவகாரத்திலும், உச்சிமாநாடு ஒரு எழுத்தளவிலான சமரசத்துடன் முடிவடைந்தது. சீனாவைக் கையாள்வதில் ஐரோப்பிய ஒன்றியம் இரு வழி அணுகுமுறையைத் தொடர விரும்புகிறது என்று கவுன்சில் தலைவர் சார்லஸ் மிஷேல் தெரிவித்தார். அது சீனாவில் இருந்து மேலும் சுதந்திரமாக மாற விரும்புகிறது, ஆனால் அதே நேரத்தில் மோதலுக்கான முனைப்பை தவிர்க்கிறது. மறைமுகமாக மிஷேல், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலில் தடையின்றி அமெரிக்க தரப்பை ஆதரிப்பதற்கு எதிராக அவர் எச்சரித்தார். ஐரோப்பிய ஒன்றியம் அதன் சொந்த மூலோபாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம், “ஐரோப்பிய மக்களின் ஒற்றுமை” அல்லது “ஜனநாயகம்” இரண்டையும் உள்ளடக்கவில்லை என்பதை உச்சிமாநாடு மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டியது. இது ஏகாதிபத்திய கொள்ளைக்காரர்களின் ஒன்றியம், ஒவ்வொன்றும் தன்னைத்தானே கவனித்துக் கொள்கின்றன. ரஷ்யாவிற்கு எதிரான போர்த் தாக்குதலும், மறுஆயுதமயமாக்கலுக்கான செலவினங்களும், தொழிலாள வர்க்கத்தின் மீதான மிருகத்தனமான தாக்குதல்கள் மற்றும் ஏற்கனவே இரண்டு உலகப் போர்களுக்குள் ஐரோப்பாவை உந்தித் தள்ளிய தேசிய பதட்டங்களின் தீவிரம் ஆகியவற்றுடன் கைகோர்த்துச் செல்கின்றன.

இந்த முட்டுக்கட்டையிலிருந்து வெளியேற ஒரே ஒரு வழி தான் உள்ளது: அதாவது, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட வேண்டும். ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கம், சமூக வெட்டுக்கள் மற்றும் பணிநீக்கங்களுக்கு எதிரான எதிர்ப்பை, போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த, சுயாதீனமான இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஏகாதிபத்திய சக்திகளின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாற்று என்பது, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகள் ஆகும்.

Loading