ரிஷி சுனாக்: பிரிட்டனின் புதிய, பல கோடி மில்லியனிய பிரதம மந்திரி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பழமைவாதக் கட்சி அதன் புதிய கட்சித் தலைவராக ரிஷி சுனாக்கை நியமித்துள்ளது. சுமார் 730 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடன், அவர் இது வரையிலான பிரிட்டன் வரலாற்றிலேயே இப்போது மிகப் பெரிய பணக்கார பிரதம மந்திரியாக ஆக இருக்கிறார்.

சுனாக் வெறும் 200 க்கும் அதிகமான டோரி நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டு, தலைமைப் பதவிக்கான தேர்தலில் அவருக்கு எஞ்சியிருந்த ஒரே போட்டியாளரான பென்னி மோர்டான்டு கடைசி மணி நேரத்தில் வெளியேறியதும், திங்கட்கிழமை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Rishi Sunak leaves the Conservative Campaign Headquarters in London, Monday October 24, 2022. Rishi Sunak will become the next Prime Minister after winning the Conservative Party leadership contest [AP Photo/Aberto Pezzali]

மூன்று மாதங்களில் மூன்றாவது பிரதம மந்திரியை மக்கள் மீது திணிக்க, நெருக்கடியில் சிக்கிய அவர்கள் அரசாங்கத்தை மக்கள் கோபத்தில் இருந்து பாதுகாக்க, டோரி கட்சியின் பெரும்பான்மையினர் எதை அடைய நினைத்தார்களோ, லிஸ் ட்ரஸின் பிரதியீடாக ஒரு வேகமான, சவாலுக்கிடமற்ற பதவி மாற்றம் நடத்தப்பட்டது. இருப்பினும், வெறும் ஆறு வாரங்களுக்கு முன்னர், பெருவாரியான மக்கள் வெறுப்புக்கு மத்தியில் வரலாற்றில் மிகப் பெரிய மந்திரிசபை இராஜினாமாவால் வெளியேற்றப்பட்ட போரிஸ் ஜோன்சன் அரசியல் கல்லறையில் இருந்து வேதாளம் போல மீண்டும் வெளிப்பட்டதால், அந்த முற்றிலும் ஜனநாயக-விரோதமான வலதுசாரி தலைமை தேர்தல் கடைசி நான்கு நாட்களில் பட்டவர்த்தனமாக அம்பலமாகி உள்ளது.

கோவிட் பெருந்தொற்றுக்கு 'சடலங்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்' என்ற விடையிறுப்பால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களை வெளிப்படையாக அவமதிக்கும் வகையில், ஜோன்சன் வாக்குச்சீட்டில் இடம் பெறுவதற்குத் தேவைப்பட்ட 100 ஆதரவு ஓட்டுக்களை நோக்கி முன்னேறியதுடன், ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் பிரச்சாரத்தை முடிப்பதற்கு முன்னர் இந்த வரம்பை எட்டு விட முடியும் என்றும் கூறப்பட்டது.

போட்டியில் இருந்து அவர் அடிபணிந்து வெளியேறியமை, ஏறக்குறைய அதில் அவர் இணைந்ததைப் போல அதே விதத்தில் உள்ளது. ஜோன்சன் அறிவித்தார், “இப்போது ஒரு பொதுத் தேர்தல் நடத்துவது பெரும் கேடாக இருக்கும்,” அவர் கவலையோடு, “நாடாளுமன்றத்தில் ஓர் ஒன்றுபட்ட கட்சி இல்லாமல் உங்களால் திறம்பட ஆட்சி செய்ய முடியாது… ஆகவே என் வேட்பு மனுவை முன்நகர்த்தாமல், யார் ஜெயித்தாலும் அவருக்கு என் ஆதரவை வழங்குவதே நான் செய்யக் கூடிய சிறந்த விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்றார்.

சுவாசிப்பதை விட மிகவும் சுலபமாக ஜோன்சன் பொய் சொல்கிறார். ஆனால் வாக்குச்சீட்டில் இடம் பெற தேவைப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உண்மையிலேயே அவருக்கு இருந்ததா அல்லது ஆதரவு இல்லாமல் அவர் இந்த நடவடிக்கைக்குத் தள்ளப்பட்டாரா, அவரின் அடுத்த நடவடிக்கைகள் என்னவாக இருந்தாலும், அவர் பின்வாங்கியதற்கு ஒரே காரணம் தான் உள்ளது.

கட்சியைப் பிளவுபடுத்தி வரும் கோஷ்டி பூசல்களை ஒடுக்கி விளிம்பில் இருந்து நகருமாறு டோரிக்கள் மீது ஆளும் வர்க்கம் பெரும் அழுத்தம் கொடுத்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, 'கலங்கடிக்கும் கடுமையான' சிக்கன நடவடிக்கைகள், ரஷ்யாவுடன் தொடர்ச்சியான போர் மற்றும் பாரிய கோவிட்-19 நோய்தொற்றை தொடர்வது என திட்டமிடப்பட்ட திட்டநிரலுக்குத் தொழிலாள வர்க்கத்தில் நிலவும் பெரும் எதிர்ப்பு ஒரு பொதுத் தேர்தலில் ஒருகுவிந்து விடலாம் என்பதால், நாட்டை ஒரு பொதுத் தேர்தலுக்குள் தள்ளாமல் இருக்க அவர்கள் பணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இத்தகைய கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல மிகச் சிறந்த ஆளாக டோரி கட்சியின் பெரும்பான்மையினரின் ஆதரவை சுனாக் வென்றுள்ளார். உக்ரேன் மீதான நேட்டோ போர் முனைவில் முக்கிய பங்கு வகித்த அந்த அரசாங்கத்தில் இரண்டாவது மிக முக்கிய நபராக, அவர் ஜோன்சனின் சான்சலராக, இருந்தவர். சுதந்திரமான இலாபத் திரட்சிக்காக, இந்தப் பெருந்தொற்று மீதான கட்டுப்பாடுகளை நீக்க தொடர்ந்து அழுத்தமளித்தவர்.

At the height of the pandemic in September 2020, the then Chancellor of the Exchequer Rishi Sunak (centre) meets at 11 Downing Street with (left) Frances O'Grady, General Secretary of the Trades Union Congress and (right) Dame Carolyn Julie Fairbairn, Director General of the Confederation of British Industry. London, September 24, 2020 [AP Photo/Frank Augstein]

பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்த வரையில் சுனாக் அவருக்கு முன்பு இருந்தவர்களை விட மேம்பட்டவராகப் பார்க்கப்படுகிறார். பாரியளவில் அரசு கடன் வாங்குவதற்கான ட்ரஸின் திட்டங்களுக்கு எதிராக பிரிட்டிஷ் பொருளாதாரத்தைப் போராட்டத்தில் மூழ்கடித்த உலகளாவிய நிதிய தன்னலக்குழுவால், ட்ரஸின் அரசியல் குரல்வளை நெரிக்கப்பட்டது. முன்னாள் தனியார் முதலீட்டு வங்கி பங்காளியான கொழுத்த செல்வந்தர் சுனாக்கைக் கொண்டு, அவர்கள் தங்களில் ஒருவர் மூலமாகவே ட்ரஸைப் பிரதியீடு செய்துள்ளனர். கடைசியாக, அவரைப் பதவிக்குக் கொண்டு வந்துள்ள டோரிக்கள், சந்தைகளின் கட்டளைகளுக்கு இணங்க செயல்பட்டு வருகிறார்கள்.

மிகப் பெரும் செலவுக் குறைப்புக்கள் மற்றும் வரி அதிகரிப்புகளைத் தயாரிக்க, அக்டோபர் 31 (ஹாலோவீன் தினம்) நிதி அறிக்கைக்காக, சந்தைகளின் உத்தரவின் பேரில் ட்ரஸால் மீண்டும் கொண்டு வரப்பட்ட தற்போதைய சான்சிலர் ஜெர்மி ஹன்ட், சுனாக்கின் முன்னணி ஆதரவாளர்களில் ஒருவராக உள்ளார். அவர் Sunday Telegraph இல், 'ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க, நமக்கு, கடினமான தேர்வுகளைச் செய்யும் நம்பகமான ஒரு தலைவர் தேவைப்படுகிறார்,” என்று எழுதினார்.

'மக்கள் விரும்பாவிட்டாலும், தேச நலனுக்காக செயல்படுவதே,” சுனாக்கின் பணியாக இருக்கும்.

பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் முன்னாள் ஆளுநர் மெர்வின் கிங் பிபிசி க்கு அளித்த பேட்டியில் இதன் அர்த்தத்தை விளக்கினார். திட்டமிடப்பட்டு வரும் இந்த வெட்டுக்களை 2010-15 க்கு இடையில் முன்னாள் டோரி சான்சிலர் ஜோர்ஜ் ஆஸ்போர்ன் நடத்திய சிக்கன நடவடிக்கையுடன் ஒப்பிடுவீர்களா என்று கேட்டதற்கு, 'சில வழிகளில் இது மிகவும் சிரமம்' என்று கிங் பதிலளித்தார்.

அவர் தொடர்ந்து கூறினார், 'இது, அடுத்த சில ஆண்டுகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான சித்திரத்தை உருவாக்காது என்றாலும், ரஷ்யாவை எதிர்த்து உக்ரேனுக்கு உதவ நாம் முடிவெடுத்துள்ளோம், அதன் சுமையை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம் என்பதால் நம் தேசிய வாழ்க்கை தரம் குறையும் என்பதை நேர்மையாக கூறக் கூடிய ஓர் அரசாங்கம் நமக்குத் தேவைப்படுகிறது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

கிளாஸ்கோ பல்கலைக்கழகம் மற்றும் மக்கள் சுகாதாரத்திற்கான கிளாஸ்கோ மையத்தின் (GCPH) ஒரு 'மிதமான மதிப்பீட்டின்'படி, ஆஸ்போர்ன் செய்த வெட்டுக்கள் 2012-2019 இல் 330,000 கூடுதல் இறப்புகளுக்கு வழி வகுத்தன. இந்த ஒவ்வொன்றும், சமூக சேவைகளில் செய்யப்பட்ட வெட்டுக்கள் மற்றும் முன்னோடியில்லாத வகையில் கூலிகள் தேக்கம் அடைந்ததால் ஏற்பட்ட கொடூரமான விளைவாக இருந்தது, நினைவு தெரிந்த வரையில் அவை தொழிலாளர்களை மிக மோசமான வாழ்க்கைச் செலவு பேரழிவை முகங்கொடுக்கச் செய்தது.

சுனாக் பதவி ஏற்றிருப்பது சர் கீர் ஸ்டார்மரின் கீழ் தொழிற்கட்சி செயல்பாடுகளை அழிவுகரமாக அம்பலப்படுத்துகிறது.

ட்ரஸ் இராஜினாமா செய்ததில் இருந்து அந்த தொழிற்கட்சி தலைவர் “தேசத்துக்கு முதலிடம் கொடுக்குமாறு' டோரி கட்சிக்கு முறையிட்டு பல நாட்களைச் செலவிட்டுள்ளார் மற்றும் அரசாங்கம் மீதான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பைத் தடுக்க உதவி உள்ளார், அதேவேளையில் சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதிலும் தேவைப்பட்டால் போர் நடத்துவதிலும் டோரிகள் எங்கே விட்டுச் செல்கிறார்களோ அங்கே இருந்து அதைத் தொடர உறுதி அளித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை ஸ்கை நியூஸ் இல் பேசுகையில், நிழல் அமைச்சரவையில் மேம்பாட்டுத் துறை செயலர் (Levelling Up Secretary) லீசா நாண்டி நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசினார், “இப்போது இது முழுக்க முழுக்க டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசம் உள்ளது… கட்சியை விட தேசத்துக்கு முன்னுரிமை கொடுத்து, சரியானதைச் செய்யுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்,” என்றார்.

ஸ்டார்மர் அவரின் வலதுசாரி தொனியை Sunday Times க்கு அளித்த ஒரு பேட்டியில் வெளிப்படுத்தினார், அரசாங்கம் அமைப்பது சம்பந்தமாக தொழிற்கட்சியில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் 'ஸ்திரத்தன்மை' வழங்குவதற்காக உரிய நபர்களை மாற்றுமாறு தொழிற்கட்சி ஆளும் வர்க்கத்திற்கு முன்மொழிகிறது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

Sir Keir Starmer, the leader of Britain's Labour Party makes his speech at the party's annual conference in Liverpool, England, September 27, 2022 [AP Photo/Jon Super]

அவர் வாதிட்டார், 'நமக்கு ஒரு தீவிரமான, நம்பகமான தொழிற்கட்சி அரசாங்கம் தேவை, அது பணத்தின் பலமான கட்சியாக இருக்கும், அது தான் சந்தையை முழுவதுமாகச் சாந்தப்படுத்தக் கூடிய ஒரே விஷயமாக இருக்கும்… இந்த குழப்பமான, ஒழுங்கீனமான கட்சி என்ன செய்து வருகிறதோ அதில் நம்பிக்கை இல்லாமல் மிகப் பெரியளவில் பணத்தை வைத்து காத்திருக்கும் முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள்.”

டோரி நெருக்கடியானது 'நம் பொருளாதாரத்தின் மீது சந்தைகளும் மற்றவர்களும் வைத்திருக்கும் நம்பிக்கையை குறைப்பதுடன், வெளிநாடுகளில் நம் மதிப்பைக் கெடுக்கிறது' என்று எச்சரித்த அவர், 'கடந்த சில வாரங்களில் பயணம் செய்து வந்துள்ள எந்தவொரு வியாபார பிரமுகரிடமும் பேசிப் பாருங்கள், அவர்களே உங்களுக்குக் கூறுவார்கள்' என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

'நம் எல்லோருக்கும், அதாவது ஒரு பொதுத் தேர்தல் சம்பந்தமான ஆபத்தைக் குறைக்கும் கடமை உள்ளது' மற்றும் 'ரசீல் ரீவ்ஸை சான்சிலராக கொண்ட வரவிருக்கும் ஒரு தொழிற்கட்சி அரசாங்கம் முற்றிலும் தெளிவான நிதி நெறிமுறைகளைக் கொண்டிருக்கும்,” என்றவர் தொகுத்தளித்தார்.

இறுதியில், ஓர் ஒன்றுபட்ட பழமைவாத கட்சியைக் காட்சிப்படுத்த சுனாக் பின்னால் அணிவகுக்குமாறு ஸ்டார்மர் டோரிக்களுக்கு முறையிட்டார். இதுவும் தோல்வி அடையலாம். அதிருப்தி ஜோன்சன் ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்காக நிற்கும் டோரி எதிர்ப்பாளர்கள் மத்தியில் தொழிற்கட்சியின் முறையீடு ஆதரவாளர்களைப் பெறாமல் போகலாம்.

டோரி நாடாளுமன்ற உறுப்பினர் நாடின் டோரிஸ் பின்வருமாறு ட்வீட் செய்தார், “போரிஸின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டு இருப்பதற்கு மத்தியில், ரிஷியும் பென்னியும் ஒற்றுமையாக இருக்க மறுப்பது, ஆட்சி அமைப்பதை முற்றிலும் சாத்தியமற்றதாக ஆக்கிவிடும். இந்த நிலைமையில் ஒரு பொதுத் தேர்தலைத் தவிர்ப்பது சாத்தியம் இல்லாமல் போய்விடும்.”

நாடாளுமன்ற உறுப்பினர் ஜாக் கோல்ட்ஸ்மித் கூறுகையில், “நாட்டை நாடாமல் நாம் எப்படி மூன்றாவது புதிய பிரதம மந்திரியைப் பெற முடியும் என்பதோ, அசல் அறிக்கையில் இருந்து பல மைல் தூரம் விலகிய ஒரு கொள்கை வேலைத்திட்டத்தை நாம் எப்படி பெற முடியும் என்பதோ எனக்குத் தெரியவில்லை,” என்றார்.

மற்றொரு டோரி நாடாளுமன்ற உறுப்பினர், கிறிஸ் சோப்பெ, பிபிசி ரேடியோ 4 இல் கூறுகையில், 'நாடாளுமன்றக் கட்சியின் ஆதரவையும் மரியாதையையும் பெற்ற ஒருவர் நம் நாடாளுமன்ற தலைவராக இருக்க முடியாவிட்டால், உண்மையில் நாம் நடைமுறையில் ஆட்சி அமைக்க முடியாது… ஒரு பொது தேர்தல் இன்றியமையாதது என்பதே இதன் பதில்,” என்றார்.

உண்மையான எதிர்க்கட்சி, அதாவது தொழிலாள வர்க்கம், அரசியல் வாழ்க்கையில் இருந்து தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதால், பிரிட்டிஷ் அரசியலானது அரண்மனை ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள், நீதிமன்ற சூழ்ச்சிகள் மற்றும் கொல்லைப்புற உடன்படிக்கைகளின் பைஸன்டைன் (Byzantine) அமைப்பு முறையாக மாற்றப்பட்டு உள்ளது.

இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் விரக்தியிலும் வறுமையிலும் தள்ளப்படுகின்ற நிலையில், அவர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இருந்தாலும், 180,000 க்கும் அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் — ஒரேயொரு நாள் கூட — ஒன்றாக வேலைநிறுத்தத்தில் கொண்டு வரப்படவில்லை.

அதிகாரத்துவத்திடம் இருந்து இந்தப் போராட்டங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கும், ஒரு பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாரிப்பு செய்வதற்கும் சாமானியத் தொழிலாளர் குழுக்களை அமைக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. ஓர் உடனடி பொது தேர்தலை நடத்தக் கோருவதே இந்தக் குழுக்களின் ஓர் இன்றியமையா பணியாக இருக்கும்.

முக்கிய தொழில்துறை நடவடிக்கைகள் அரசாங்கத்தை கவிழ்த்து விடும். ஆனால் அதை எது பிரதியீடு செய்யும்? தொழிற்சங்க காங்கிரஸூம் தொழிற்சங்க தலைவர்களும் தொழிலாளர்களை ஸ்டார்மருக்குப் பின்னால் அணித்திரள ஊக்குவித்து வருகிறார்கள். இது நிராகரிக்கப்பட வேண்டும், எதிர்க்கப்பட வேண்டும், அத்துடன் மிகவும் முன்னேறிய தொழிலாளர்கள் ஒரு புதிய சோசலிச தலைமையைக் கட்டமைக்க முடிவெடுக்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த தேர்தலை, டோரி-தொழிற்கட்சி சூழ்ச்சியை சவால் விடுத்து அம்பலப்படுத்த, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அவர்களின் பகிர்ந்து கொள்ளப்படும் போர் திட்டநிரலைக் குறித்து தொழிலாளர்களை எச்சரிக்க, முதலாளித்துவம் மற்றும் அதன் கட்சிகளுக்கு மாற்றாக அவசியமான சோசலிச மாற்றீட்டுக்கு ஆதரவைக் கட்டமைக்க பயன்படுத்தும்.

Loading