சீனப் பொருளாதாரத்தில் பெருகிவரும் பிரச்சனைகள் உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒரு வார தாமதத்திற்குப் பின்னர், சீனாவின் புள்ளிவிவர அதிகாரிகள் மூன்றாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவை வெளியிட்டுள்ளனர். இது வருடத்தில் பொருளாதாரம் 3.9 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

இது சந்தை எதிர்பார்ப்புகளான 3.3 சதவிகித வளர்ச்சியை விட அதிகமாக இருந்தபோதிலும், இது அரசாங்கத்தின் இலக்கான 5.5 சதவிகிதத்தை விட மிகக் குறைவாக இருந்தது. இது மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக குறைந்த விகிதமாகும்.

பிப்ரவரி 14, 2020 வெள்ளிக்கிழமை, சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் பங்குச் சந்தைக் கட்டிடத்தின் முன்மண்டபத்தில் உள்ள இலத்திரனியல் தகவல் திரையின் முன் பாதுகாப்பு கவசம் அணிந்த ஒருவர் நடந்து செல்கிறார் [AP Photo]

தரவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு உத்தியோகபூர்வ காரணம் எதுவும் கூறப்படவில்லை. ஆனால் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு மூன்றாவது முறையாக சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்ட கடந்த வாரம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸில் இருந்து இது திசைதிருப்பப்படும் என்பதால் இருக்கலாம் என பல கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

தாமதம் மற்றொரு ஆச்சரியமான முடிவுடன் சேர்ந்து கொண்டது. வழக்கமான நடைமுறைக்கு மாறாக, காலாண்டுத் தரவுகளைப் பற்றி விவாதிக்க ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தாமலேயே தேசிய புள்ளியியல் அலுவலகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

புள்ளிவிவரங்கள் சீனப் பொருளாதாரத்திற்கு தொடர்ச்சியான பெருகிவரும் பிரச்சனைகளைக் காட்டுகின்றன. சில்லறை விற்பனை ராய்ட்டர்ஸ் முன்னறிவித்த 3.3 சதவிகிதத்திற்கு குறைவாக 2.5 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

தொழில்துறை உற்பத்தி 6.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இது எதிர்பார்ப்புகளை விட சிறப்பாக இருந்ததுடன், நிலையான முதலீடு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 5.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், மாபெரும் கட்டிட அபிவிருத்தியாளர் எவர்கிராண்டே மற்றும் பிற நிறுவனங்களின் தீர்க்கப்படாத நிதிச் சிக்கல்களின் தாக்கத்தின் கீழ் சொத்துச் சந்தை தொடர்ந்து சுருங்கியது.

ஏனைய பகுதிகளுக்கு அதன் தாக்கத்தின் விளைவுகளைக் கருத்தில் கொள்ளும்போது சீனப் பொருளாதாரத்தில் கட்டிட அபிவிருத்தித்துறை 25 சதவீதத்திற்கும் மேலாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. சொத்து விற்பனை 22 சதவீதம் குறைந்துள்ளது. புதிய கட்டுமான பணிகள் 38 சதவீதம் குறைந்து, சொத்து முதலீடு 8 சதவீதம் குறைந்துள்ளது.

குறைந்த வளர்ச்சி என்பது ஒரு காலகட்டத்திற்குரிய சரிவு அல்ல, மாறாக சீனப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது என்ற முடிவு எடுக்கப்படுகிறது. மாபெரும் முதலீட்டு நிதியான BlackRock இன் இரண்டு பொருளாதார நிபுணர்களான அலெக்ஸ் பிரேசியர் மற்றும் செரீனா ஜியாங் ஆகியோரின் வலைப்பதிவு இடுகையில் சில முக்கிய சிக்கல்கள் சுருக்கமாக கூறப்பட்டுள்ளன.

அரசாங்கங்கள் மற்றும் நிதி நலன்கள் சீனா மீதான சர்வதேச அழுத்தத்தின் ஒரு பகுதியாக, அதன் 'பூஜ்ஜிய கோவிட்' கொள்கையை தளர்த்த அல்லது முடிவுக்குக் கொண்டுவர கோரப்படுகிறது. குறைந்த வளர்ச்சிக்கான குற்றங்களில் பெரும்பாலானவை சீன அதிகாரிகளால் நிறுவப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் மீது வைக்கப்பட்டுள்ளன.

BlackRock பொருளாதார வல்லுனர்களின் கூற்றுப்படி, “கோவிட் தொடர்பான ஏற்றத் தாழ்வுகளில் அதிக கவனம் செலுத்துவது” மிகவும் அடிப்படையான பிரச்சினைகளை புறக்கணிக்கிறது.

'தொற்றுநோய்க்கு முந்தைய பத்து ஆண்டுகளில் சீனப் பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7.7 சதவிகிதம் வேகமாக வளர்ந்தது. ஆனால் அது இப்போது கடுமையான சவால்களின் தொகுப்பை எதிர்கொள்கிறது... அதாவது அது கணிசமாக மெதுவான வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் நுழைகிறது.

கோவிட் கட்டுப்பாடுகள் சாத்தியமான பொருளாதார உற்பத்தியைக் குறைக்கின்றன. மேலும் அவை எளிதாக்கப்பட்டாலும், பொருளாதாரத்தின் சாத்தியமான வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழே வீழ்ச்சியடைந்திருக்கலாம் மற்றும் தசாப்தத்தின் முடிவில் வெறும் 3 சதவீதத்திற்கு இன்னும் கீழே செல்லக்கூடும் என்று அவர்கள் எழுதினர்.

காரணங்களைக் கோடிட்டுக் காட்டி, அவர்கள் தொடர்ந்தனர்: “மிக முக்கியமாக, உழைக்கும் வயது மக்கள் தொகை, வேகமாக வளர்ந்து இப்போது குறைந்து வருகிறது. …குறைவான தொழிலாளர்கள் என்பது உற்பத்தித்திறன் வளர்ச்சியை துரிதப்படுத்தும் வரை, பணவீக்கத்தை உருவாக்காமல் பொருளாதாரம் அதிக உற்பத்தி செய்ய முடியாது என்பதாகும்.

ஆனால் அதற்கு பைடென் நிர்வாகத்தின் போர் தயாரிப்புகளின் ஒரு பகுதியாக சீனாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட கடுமையான தடைகளால் கட்டுப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி தேவைப்படுகிறது.

தொழில்நுட்ப நிறுவனமான Huawei இனை முடக்கிய அமெரிக்கா, ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறைக்கும் தாக்குதலை விரிவுபடுத்துகிறது. இந்த நகர்வுகள் 1930களின் பிற்பகுதியில் ஜப்பான் மீது விதிக்கப்பட்ட எண்ணெய் தடையை நினைவுபடுத்துகிறது. இது இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியான பசிபிக் பகுதியில் போரைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகித்தது.

BlackRock வலைப்பதிவின்படி, 'சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளும், சீனாவில் செயல்படும் நிறுவனங்களின் மீதான இறுக்கமான கட்டுப்பாடுகள் ஆகியவை உற்பத்தித்திறன் வளர்ச்சியைக் குறைக்கும்.'

குறுகியகால மற்றும் நீண்டகால கட்டத்தில் வளர்ச்சியின் குறைவு உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் உலகளாவிய தாக்கங்களை எடுத்துக்காட்டி, BlackRock பொருளாதார வல்லுநர்கள் பின்வருமாறு எழுதினார்கள்: “கடந்த காலத்தில், நாடுகள் மந்தநிலையை எதிர்கொண்டபோது, அவர்கள் இன்னும் சீன நுகர்வோர் மற்றும் அதன் நிறுவனங்களை தங்கள் கார்கள், இரசாயனங்கள், இயந்திரங்கள், எரிபொருள் ஆகியவற்றை வாங்க நம்பியிருக்கலாம். சொந்த நாட்டில் உள்ள நுகர்வோர் தங்கள் வயிற்றை இறுக்கிக் கொண்டாலும் கூட.'

மேலும், வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை உற்பத்திச் செலவைக் குறைவாக வைத்திருக்க உதவுவதால், ஏராளமான மலிவான பொருட்களை தொடர்ந்து வழங்குவதற்கு அவர்கள் சீனாவை நம்பியிருக்கலாம்.

“இனி அப்படி இல்லை. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் தற்போது மந்தநிலை உருவாகியுள்ளது. ஆனால் இந்த நேரத்தில், சீனா தனது சொந்த அல்லது வேறு யாரையும் காப்பாற்ற வராது” என்று அவர்கள் முடித்தனர்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளின் வெளியீடு, திங்களன்று Xi அதிகாரத்தை ஒருங்கிணைத்ததற்கும் மற்றும் அவரது ஆதரவாளர்களை முக்கிய பதவிகளுக்கு நியமித்ததற்கும் ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் வன்முறையான பதிலடியுடன் ஒரே காலத்தில் வெளிவந்தது.

ஹாங்காங்கின் ஹாங் செங் டெக் குறியீடு 9.7 சதவீதம் சரிந்தது. இது அதன் இரண்டாவது பெரிய ஒரு நாள் சரிவு மட்டுமல்லாது, 2008 நிதி நெருக்கடியின் பிரதிபலிப்பிலான அதன் சரிவை மட்டுமே தாண்டியது. ஒட்டுமொத்தமாக, ஹாங்காங் சந்தை நாளுக்கு 6 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது.

அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்களின் பங்குகளைக் கண்காணிக்கும் NASDAQ Golden Dragon இன்டெக்ஸ் 14.4 சதவிகிதம் சரிந்து. இந்த ஆண்டு இதுவரை 50 சதவிகிதம் குறைந்துவிட்டது.

சீனாவின் பிரதான நிலப்பரப்பில், சந்தைகள் 3 சதவீதம் சரிந்ததுடன், அமெரிக்க டாலருக்கு எதிராக ரென்மின்பி 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தது.

Kingston Securities இன் நிர்வாக இயக்குனர் டிக்கி வோங், ஹாங்காங் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியை 'பீதி விற்பனையான தருணம்' என்று விவரித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி 'தலைமை மறுசீரமைப்பு மற்றும் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்கள்' வீழ்ச்சிக்கு காரணம் என்று அவர் கூறினார். இது தொடர்ந்து இந்த உணர்வை கீழே இழுத்து, நிச்சயமற்ற தன்மையை அதனுடன் சேர்த்தது.

பைடென் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு விடையிறுக்கும் வகையில், 'தேசிய பாதுகாப்பில்' முக்கிய கவனம் செலுத்தும் நிலைமைகளின் கீழ், 'சந்தைக்கு நட்பாக' இல்லாத கொள்கைகளை அவர் தொடருவார் என்பதே Xiயின் நியமனங்கள் தொடர்பான சந்தைகளில் பொதுவான பிரதிபலிப்பாகும்.

அக்டோபர் 16 அன்று, கட்சி காங்கிரஸில் தனது தொடக்க உரையில், பொருளாதாரம் பற்றிக் குறிப்பிட்டதை விட ஆறு மடங்கு பாதுகாப்பை பற்றி ஜி குறிப்பிட்டதாக நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

சீனாவை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான Gavekal ஆராய்ச்சித் தலைவரான ஆர்தர் க்ரோபர் டைம்ஸிடம் பின்வருமாறு கூறினார்: “கட்சி காங்கிரஸுக்கு முன்பு நிதிச் சமூகத்தின் பெரும்பகுதியில் பாரம்பரிய தாராளவாத பொருளாதார சீர்திருத்தத்திற்கான உறுதிப்பாட்டின் தெளிவான சமிக்ஞை பற்றிய சில ஆசைகள் இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது. அது இப்போது ஒரு மாயை என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது”.

அதன் மீது சுமத்தப்பட்டுள்ள தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளின் விளைவாக சீனப் பொருளாதார உற்பத்தியில் எதிர்பார்க்கப்படும் நீண்டகாலச் சரிவு மற்றும் கட்சி மாநாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில் உடனடி சந்தை விற்பனை ஆகிய இரண்டும், சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் துரிதமான போர் உந்துதலுக்கான விடையிறுப்பாகும். சமீபத்திய தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணம் தெளிவுபடுத்துவது போல், அமெரிக்கா சீனாவை அதன் தொடர்ச்சியான உலகளாவிய மேலாதிக்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகிறது.

Loading