இறவாப்புகழுடைய மக்கள்: இரண்டாம் உலகப் போரைப் பற்றிய சோவியத் எழுத்தாளர் வாசிலி குரோஸ்மானின் முதல் நாவல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வாசிலி குரோஸ்மான்: இறவாப்புகழுடைய மக்கள் ரோபர்ட் மற்றும் எலிசபெத் சாண்ட்லரால் மொழிபெயர்க்கப்பட்டது. நியூயோர்க் ரிவ்யூ புக்ஸ் கிளாசிக்ஸ், 2022 (352 பக்கங்கள்).

செப்டம்பரில், இரண்டாம் உலகப் போரைப் பற்றிய சோவியத் எழுத்தாளர் வாசிலி குரோஸ்மானின் மூன்று சிறந்த நாவல்களில் (ஸ்டாலின்கிராட், வாழ்வும் விதியும்) உடன் முதல் நாவலான இறவாப்புகழுடைய மக்கள் ரோபர்ட் மற்றும் எலிசபெத் சாண்ட்லரின் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்டது.

ரோபர்ட் சாண்ட்லரின் அற்புதமான ஸ்டாலின்கிராட் புதிய மொழிபெயர்ப்பைப் போலவே, இந்த மொழிபெயர்ப்பிலும் குரோஸ்மானின் கையெழுத்துப் பிரதியில் இருந்து இதுவரை வெளியிடப்படாத பகுதிகளும் அடங்கும். குரோஸ்மானின் தாய்மொழியான ரஷ்யா உட்பட எந்த மொழியிலும் இதுவரை வெளியிடப்படாத இந்த படைப்பின் முழுமையான பதிப்பை இது பிரதிபலிக்கிறது.

இறவாப்புகழுடைய மக்களின் புதிய பதிப்பின் அட்டைப்படம்

இந்தப் பதிப்பில் குரோஸ்மானின் கூடுதல் கட்டுரைகள் மற்றும் அறிமுகம் மற்றும் பின்னுரை மற்றும் இந்தப் பதிப்பின் வரலாற்றை விளக்கும் குறிப்புகள் மற்றும் குறிப்பிட்ட பத்திகளைச் சேர்க்க மொழிபெயர்ப்பாளர்கள் எடுத்த முடிவு ஆகியவற்றைக் கொண்ட பின்னிணைப்பும் உள்ளது. இதன் விளைவாக கணிசமான இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பு மட்டுமல்ல, ஒரு முக்கியமான வரலாற்று ஆவணமுமாகவும் உள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்பின் முதல் சில மாதங்களில் இறவாப்புகழுடைய மக்கள்கவனம் செலுத்துகிறது. அப்போது 10 மில்லியன் வலிமையான ஜேர்மன் வெர்மாஹ்ட்டும் அவர்களின் உள்ளூர் பாசிச கூட்டாளிகளும் இன்றைய உக்ரேன் மற்றும் பெலாருஸ் ஆகிய நாடுகளில் கணிசமான பகுதிகளை கைப்பற்றினர். செம்படையும் சோவியத் மக்களும் நாஜிகளின் படையெடுப்பிற்கு முற்றிலும் தயாராக இருக்க்கவில்லை. ஸ்ராலின் வரவிருக்கும் படையெடுப்பு பற்றிய டஜன் கணக்கான எச்சரிக்கைகளை நிராகரித்தது மட்டுமல்லாமல், 1936-1938 பெரும் பயங்கரத்தில் செம்படையின் தலைமையையும் அதன் அணிகளின் பெரும் பகுதியையும் கொலை செய்திருந்தார்.

இதன் விளைவாக, 1941 ஆம் ஆண்டின் செம்படையானது இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மோசமாக வழிநடத்தப்பட்டதுடன், மேலும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் பாரிய தாக்குதலை எதிர்கொள்வதற்கு மிகவும் குறைவான ஆயுதங்களைக் கொண்டிருந்தது. போரின் முதல் மாதங்களில், மில்லியன் கணக்கான செம்படை வீரர்கள் கைப்பற்றப்பட்டனர். அவர்களில் சுமார் இரண்டு மில்லியன் பேர் 1942 வசந்த காலத்தில் பட்டினியால் இறந்துவிட்டார்கள். மேலும் ஏராளமானோர் போர்க்களத்தில் கொல்லப்பட்டும், காயமும் அடைந்தனர்.

பார்பரோசா நடவடிக்கையின் போது நாஜி படைகள் முன்னேறுகின்றன

வாசிலி குரோஸ்மான் இந்த நாவலை, அவர் விவரிக்கும் நிகழ்வுகள் நடந்த சில மாதங்களுக்கு பின்னர் எழுதத் தொடங்கி, 1942 வசந்த காலத்தில் இரண்டு மாதங்களுக்குள் அதை முடித்தார். உண்மையில் இது போரைப் பற்றிய முதல் சோவியத் நாவலாகும்.

மோதல் வெடித்ததில் இருந்து, குரோஸ்மான் செம்படையின் செய்தித்தாளான சிகப்பு நட்சத்திரத்தின் (Red Star) நிருபராக முன்னரங்கில் பணியாற்றி வந்தார். இது புத்தகத்தின் 18வது அத்தியாயங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பணியில் இருந்தனால், பெலாருஸின் ஒரு முக்கிய நகரமான கோமெல் ஜேர்மன் வான்வழி குண்டுவீச்சினால் அழிக்கப்பட்டதை அவர் கண்டார். அதை அவர் 'ஒரு நகரத்தின் மரணம்' என்ற தலைப்பில் சக்தி வாய்ந்தவிதத்தில் சித்தரித்தார். அவர் பல தளபதிகள், வீரர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார். அவர்கள் இந்த மற்றும் அவரது அடுத்தடுத்த நாவலில் உள்ள கதாபாத்திரங்களுக்கு அடிப்படையாக செயல்பட்டார்கள்.

1945 இல் செம்படையுடன் குரோஸ்மான் ஜேர்மனியின் ஸ்வெரின் நகரில் (Wikipedia)

குறிப்பாக புத்தகத்தின் முதல் மூன்றில் பல பத்திகள் குரோஸ்மானின் மக்கள்தொகையினரையும், செம்படையினரையும் ஊக்குவிக்கும் முயற்சிகள் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டுடன் இணைந்து கடினமான விளக்கங்களை உருவாக்குவதுடன், கதைக்கும் பங்களிக்கவில்லை. ஆனால் அவர் நிகழ்வுகளைப்பற்றி எவ்வளவு அதிகமாக விரிவுபடுத்துகிறாரோ, அனைத்திற்கும் மேலாக குரோஸ்மானின் எழுத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கும் அவரது கதாபாத்திரங்களை வளர்த்துக் கொள்வதுடன், பிந்தைய ஸ்ராலின்கிராட் மற்றும் வாழ்வும் விதியும் என்பவற்றை எழுதிய எழுத்தாளருடன் எழுச்சியுற்று வருவதைக் காண்பதுடன் நாவலில் மூழ்கிவிடுவோம்.

நடவடிக்கையின் மையத்தில் ஒரு செம்படை பட்டாலியன் உள்ளது. அது பெலாருஸில் உள்ள ஜேர்மனியர்களிடமிருந்து பின்வாங்க வேண்டியிருந்த்துடன் காடுகளுக்குச் சென்று போருக்கு மூன்று மாதங்களுகுப் பின்னர் சோவியத் படைகளின் முதல் எதிர் தாக்குதல்களில் ஒன்றை உருவாக்குகிறது. அதில் முக்கிய கதாநாயகர்கள் பட்டாலியனின் அரசியல் ஆணையர் பொகாரியோவ், தளபதி பாபட்ஜானியன் மற்றும் சிப்பாய் இக்னாரீவ் ஆவர். போகாரியோவ் மாஸ்கோவில் உள்ள மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் அமைப்பின் முன்னாள் ஊழியரும், லெனின் மற்றும் ஆரம்பகால ரஷ்ய சோசலிஸ்டுகளின் பாரம்பரியத்திற்காக அர்ப்பணித்தவர். அவர் இப்போது மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் எழுத்துக்களுக்கு செய்ததைப் போலவே போர்க் கலையிலும் ஈடுபடுகிறார்.

குரோஸ்மானுக்கு நல்ல அரசியல் தலைமையாக கருதுவதன் உருவகமாக பொகாரியோவ் மாறுகிறார். மக்களும் சிப்பாய்களும் எதிர்கொள்ளும் பாரிய ஆபத்துக்கள் மற்றும் போரின் போது அதிகாரத்துவத்தின் தொடர்ச்சியான பொய்கள் ஆகியவற்றிற்கு முகங்கொடுத்து மக்களை மயக்கமடையச் செய்யும் ஸ்ராலினிச முயற்சியின் அப்பட்டமான கண்டனமாக மட்டுமே படிக்க முடியும். குரோஸ்மான் எழுதுகிறார், 'அந்த கடினமான நாட்களில் அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் மகிழ்ச்சியற்றதாக இருந்தாலும் சரி மக்கள் உண்மையை மட்டுமே விரும்பினர். பொகாரியோவ் அவர்களிடம் இந்த உண்மையைச் சொன்னார்”.

போகாரியோவ் இது போன்ற அறிக்கைகளுடன் ஆபத்தின் போது வீரர்களுக்கு உரையாற்றுகிறார்:

நீங்கள் அனைவரும் உங்கள் மக்களின் வயது முதிர்ந்த மகன்கள். உழைப்பின் கடுமையான பள்ளி மற்றும் இந்த மக்களின் போரை நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். எங்கள் நிலை கடினமானது, ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் செம்படையின் மரபார்ந்த பிரிவாகும். இரண்டு அல்லது மூன்று நாட்களில் நாம் மேம்பட்ட எதிரிப் படைகளுடன் மோதுவோம். நாங்கள் கடுமையாக தாக்கி, அவர்களின் முன்வரிசைகளை உடைத்து மீண்டும் எங்கள் பிரிவுடன் இணைவோம். நீங்கள் வெல்ல வேண்டும் தோழர்களே, நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்குள் லெனினின் இதயம் துடிக்கிறது.

ஜோசப் ஸ்ராலினின் பெயரை ஒருமுறை கூட குறிப்பிடவில்லை.

இன்னும் பல கதாபாத்திரங்களும் உள்ளன. அவற்றின் சித்தரிப்பு, ஒரு சில பக்கங்களை மட்டுமே எடுக்கும் போதும், போர்க்கால சோவியத் சமுதாயத்தின் பரந்த உருவப்படத்தை வழங்குகிறது. இதை குரோஸ்மான் தனது எதிர்கால நாவல்களில் உருவாக்குவார்.

இந்தக் கதாபாத்திரங்களில் உக்ரேனிய நகரத்தில் ஒரு வயதான விவசாயப் பெண்மணியும் அடங்குவர். அவர் தனது சொந்த ஊரான பெர்டிசேவில் நாஜிகளால் யூத-எதிர்ப்பு படுகொலையில் கொல்லப்பட்ட குரோகிஸ்மானின் தாயைப் போன்று தெளிவாக உருவமைக்கப்பட்டுள்ளார். அவர் இந்த நாவலை எழுதுகையில், குரோகிஸ்மான் தனது தாயின் தலைவிதியை இன்னும் உறுதியாக அறியவில்லை. ஆனால் அவர் அதை சந்தேகித்தார். அவரது இழப்பு அவருக்கு பேரழிவை ஏற்படுத்தியது. மேலும் ஸ்ராலின்கிராட்டிலும்,வாழ்வும் விதியிலும் அவரது முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றிற்கு அவர் மீண்டும் மீண்டும் உருமாதிரியாக மாறுவார்.

1917 புரட்சிக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் தனது அண்டையில் வசிக்கும் விவசாயிகளின் உழைப்பை சுரண்டும் ஒரு செல்வந்த 'எஸ்தோனிய குலாக்' ஆக வேண்டும் என்று கனவு கண்ட அதே ஊரைச் சேர்ந்த கோடென்கோ என்ற விவசாயியையும் வாசகர்கள் சந்திக்கின்றனர். ஜேர்மனியர்கள் வரும்போது, அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, அவர்களுக்கு தனது சேவைகளை வழங்குகி அவருடைய வாழ்நாள் கனவு இப்போது இறுதியாக நனவாகும் என்று நம்புகிறார். எல்லோரிடமும் இருக்கும் அதே அவமதிப்புடன் அவர்கள் தன்னை நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்தபோது, கோடென்கோ தன்னை தூக்கிலிட்டார்.

இந்த நாவல், சண்டையிடும் செம்படை வீரர்களை ஊக்குவிப்பதாக இருந்தபோதிலும், போர் அதன் ஆரம்ப வரிசைப்படுத்தலுக்குப் பின்னர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வரை முடிவுக்கு வரவில்லை. அது அவர்களின் அனுபவங்களையும் எண்ணங்களையும் உண்மையாக சித்தரிக்க முயன்றது. இது தவிர்க்க முடியாமல் குரோஸ்மானை தணிக்கையாளர்களுடன் மோதலுக்கு கொண்டு வந்தது. நாவலின் மிகவும் சுவார்சயமான பல பத்திகள் (இப்போது அதிர்ஷ்டவசமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளன) முன்பு வெளியிடப்பட்ட பதிப்புகளில் சேர்க்கப்படவில்லை. அவை வெளியீட்டாளர்களால் அல்லது குரோகஸ்மானால் ஒரு சுய தணிக்கை முயற்சிபோல வெட்டப்பட்டது.

இந்த தணிக்கைக்கான காரணங்கள் வேறுபட்டவை. ஆனால் அனைத்தும் தவிர்க்க முடியாமல் ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஜேர்மனியில் பாசிசத்தின் வெற்றிக்கும் போரின் வெடிப்புக்கும், மோதலின் போது அதன் குற்றவியல் மற்றும் முட்டாள்தனமான தவறுகளுக்கான அதன் சொந்த பொறுப்பை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொய்மைப்படுத்தல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் கையெழுத்துப் பிரதியுடன் தங்கள் படைப்புகள் மற்றும் இந்த பதிப்பின் வரலாறு குறித்து வழங்கிய குறிப்புகள், போரைப் பற்றி மட்டுமல்ல, இந்த வரலாற்றின் ஸ்ராலினிச பொய்மைப்படுத்தல்களையும் வாசகர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும். அதிகாரத்துவத்தின் நிலையான அரசியல் மற்றும் வரலாற்று பொய்கள் அந்த நேரத்தில் கலாச்சார மற்றும் சமூக-அரசியல் சூழ்நிலையை எந்த அளவிற்கு பாதித்தது என்பதற்கான உணர்வையும் இந்த தகவல்கள் வழங்குகின்றது.

இந்த வெட்டுக்களில் சில சிறியதாகத் தோன்றின. உதாரணமாக, சோவியத் வீரர்கள், போரின் முதல் மாதங்களில், பெரும்பாலும் ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூட இல்லை என்ற உண்மையைப் பற்றிய குறிப்பு, மற்றும் உடல் ரீதியான வன்முறை பற்றிய விளக்கங்கள் மிகவும் உருவாக்கப்பட்டதாக கருதப்பட்டன. (1980களின் பிற்பகுதியில், எலெம் கிளிமோவ் இன் சிறந்த சோவியத் போர்-எதிர்ப்புத் திரைப்படமான Come and See, தணிக்கையாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. அவர்கள் பெலாருஷ்யன் கிளர்சிக்காரர்களுக்கு எதிரான நாஜிகளின் போரின் சித்தரிப்பு மிகவும் வெளிப்படையானது என்று வாதிட்டனர்.)

மற்ற வெட்டுக்கள் மிகவும் கணிசமானவை மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள காரணத்தையும் அவற்றின் தாக்கங்களையும் புரிந்து கொள்ள சோவியத் வரலாற்றின் அறிவு தேவைப்படுகிறது. ரோபர்ட் சாண்ட்லரும் ஜூலியா வோலோஹ்வாவும் போகாரியோவின் போருக்கு முந்தைய வரலாறு கிராஸ்மனுக்கு முக்கியமானதாக இருந்தது என்பதை சரியாக எடுத்துக்காட்டுகின்றனர். முந்தைய பதிப்பில் இது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருந்தது.

அவர்கள் விளக்குவது போல், இது 1930களின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அரசியல் மற்றும் கருத்தியல் ஒடுக்குமுறையுடன் நேரடியாக பிணைக்கப்பட்டிருந்தது. மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் அமைப்பு (Marx-Engels Institute) 1919 இல் நிறுவப்பட்டது. அதன் முதல் இயக்குனரான டேவிட் ரியாசனோவின் கீழ், இது உலகின் மிகப் பெரிய மார்க்சிச நூலகத்தை திரட்டியது மட்டுமல்லாமல், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் இதுவரை அறியப்படாத படைப்புகளை வெளியிடும் முன்னோடிப் பணியிலும் ஈடுபட்டது. மார்க்ஸின் முன்னைய பொருளாதார கையெழுத்துப் பிரதிகள், எங்கெல்ஸின் இயற்கையின் இயங்கியல் மற்றும் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கடிதங்கள் இதில் உள்ளடங்கும்.

1923 இல் (பொது உரிமை) மாஸ்கோவில் உள்ள மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் நிறுவனத்தின் முதல் இயக்குநரான டேவிட் ரியாசனோவ்

இடது எதிர்ப்பிற்கு எதிரான ஸ்ராலினிச எந்திரத்தின் உட்கட்சி பிரச்சாரம் இன்னும் வன்முறையாக மாறியதால், தொழிலாள வர்க்கத்தில் மார்க்சிசம் மற்றும் சோசலிச நனவுக்கான போராட்டத்திற்காக தனது வாழ்நாளின் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அர்ப்பணித்த ரியாசனோவ், தனது நிறுவனத்தை பல துன்புறுத்தப்பட்ட புரட்சியாளர்களுக்கான புகலிடமாக மாற்றினார். சாண்ட்லரும் வோலோவாவும் அவர் இடது மற்றும் வலது எதிர்ப்பாளர்களை வேலைக்கு அமர்த்தினார் என்று எழுதினாலும், எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் அதிகமான மற்றும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடது எதிர்ப்பாளர்கள் இவ்வமைப்புடன் இணைந்திருந்தனர். எனவே, முன்னாள் இடது எதிர்ப்பாளர்களான வகர்ஷாக் டெர்-வாகானியன் மற்றும் எவ்சி காகோனோவிச் போன்றோர் 1930 ஆம் ஆண்டு வரை நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டனர்.

இன்னும் ஆபத்தானது, ரியாசனோவ் ஏற்கனவே நாடுகடத்தப்பட்ட இயங்கிக்கொண்டிருந்த எதிர்ப்பாளர்களுக்கு மொழிபெயர்ப்புகளுக்கு பணம் கொடுத்து, மேலும் அவர்களுக்கு அரசியல் மற்றும் தத்துவார்த்த இலக்கியங்களை அனுப்பினார். 1928 இல், அவர் ஏற்கனவே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு நாடு கடத்தப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கியை கார்ல் மார்க்சின் உரையின் மொழிபெயர்ப்பில் ஈடுபடுத்தினார். இதற்கு மிகப்பெரிய அரசியல் தைரியம் தேவைப்பட்டது. சோவியத் அதிகாரத்துவம் மற்றும் ஸ்ராலினிச மத்திய குழுவிற்கு, அவரது நடத்தை பெருகிய முறையில் ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிட்டது. 1930 ஆம் ஆண்டில், மத்திய குழு ஜோசப் ஸ்ராலினின் நேரடி உத்தரவின் பேரில், அவருக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது. இது 1931 இல் அவர் கைது செய்யப்பட்டு, அவரது நிறுவனத்தை களையெடுத்து, 1938 இல் அவர் இறுதியில் தூக்கிலிடப்பட்டதில் முடிவடைந்தது.

சாண்ட்லரும் வோலோஹ்வாவும் குறிப்பிடுவது போல், குரோஸ்மான் பெரும்பாலும் ரியாசனோவை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தார். அவர் 1930களின் முற்பகுதியில் இடது எதிர்ப்பின் தீவிர உறுப்பினராக இருந்த விக்டர் சேர்ஜையும் ஒரு மைத்துனர் மூலம் அறிந்திருந்தார். சேர்ஜியுடனான இந்த தொடர்பின் காரணமாக, அவர் மீது மிகப்பெரிய அரசியல் செல்வாக்கைக் கொண்டிருந்த குரோஸ்மானின் மைத்துனரான உறவினரான நாட்யா அல்மாஸ் 1933 இல் கைது செய்யப்பட்டார்.

போகாரியோவின் போருக்கு முந்தைய படைப்புகள் மற்றும் அவரது பார்வைகள், நாவலில் உத்தியோகபூர்வ அரசியல் பிரமுகராக அவரது பாத்திரம் மற்றும் அவரது அறிக்கைகள் (அவற்றில் பல வெட்டப்பட்டன, குறைந்தபட்சம் ஒரு பகுதி), குரோஸ்மான் தெளிவாக மதிக்க விரும்பினார். ரியாசனோவ் மற்றும் அவரது அமைப்பின் நினைவை மட்டும் மதிக்காமல், ஆனால் அது பாதுகாத்த மார்க்சிசம் மற்றும் புரட்சிகர சோசலிசத்தின் மரபுகளை பொகாரியோவைப் போலவே குரோஸ்மான் நாஜிசத்திற்கு எதிரான போரில் இன்னும் உறுதியுடன் பாதுகாத்து வந்தார்.

புத்தகத்தின் மிகவும் உணர்ச்சிமிக்க பத்திகளில் ஒன்றில், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திலும் சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதிலும் என்ன ஆபத்தில் உள்ளது என்பதைப் பற்றி போகாரியோவ் சிந்திப்பது பற்றி குரோஸ்மான் விவரிக்கிறார்.

இங்கே, காட்டின் விளிம்புகளில், மக்களின் நிலத்தில் பரவியிருந்த கறுப்புப் படையை அவர் தெளிவாகக் கற்பனை செய்தார். இந்த மக்களின் நிலம், தாமஸ் மோரின் கனவுகள் மற்றும் ரோபர்ட் ஓவனின் தரிசனங்கள், பிரெஞ்சு அறிவொளியின் பிரகாசமான சிந்தனையின் படைப்புகள், டிசம்பர்வாதிகளின் எழுத்துக்கள், பெலின்ஸ்கியினதும் ஹெர்சனினதும் கட்டுரைகள், ஜெலியாபோவிற்கும் மிகைலோவிற்கும் இடையேயான கடிதத்தொடர்புகள், ஜவுளித் தொழிலாளி அலெக்ஸீவின் வார்த்தைகள் இவை அனைத்தும் அடிமைத்தனத்தை அறியாத நிலம், நியாயம் மற்றும் நீதியின் சட்டங்களில் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை, சமமானவர்களுக்கிடையிலான நிலம், தொழிலாளர்களுக்கும் அவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கும் இடையிலான சமத்துவமின்மை அகற்றப்பட்ட நிலம் ஆகியவற்றிற்கான மனிதகுலத்தின் நித்திய ஏக்கத்தின் வெளிப்பாடாகும்,

இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ரஷ்யப் புரட்சியாளர்கள் உயிரிழந்தனர். பொகாரியோவைப் பொறுத்தவரை, இந்த ஆண்கள் மூத்த சகோதரர்களை போன்றவர்கள். அவர் அவர்களைப் பற்றி எல்லாவற்றையும் படித்தார். அவர்களின் கடைசி வார்த்தைகளையும் அவர்கள் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் எழுதிய கடிதங்களையும் அவர் அறிந்திருந்தார். அவர்களின் நாட்குறிப்புகளும், சுதந்திரம் காண வாழ்ந்த நண்பர்கள் பதிவு செய்த இரகசிய உரையாடல்களும் அவருக்குத் தெரியும். சைபீரியாவில் இந்த மனிதர்கள் நாடுகடத்தப்பட்ட மற்றும் கட்டாய உழைப்புக்குச் சென்ற சாலைகள் அவருக்குத் தெரியும். அவர்கள் இரவைக் கழித்த தபால் நிலையங்களும், அவர்களை கட்டிப்போட்டிருந்த சிறைச்சாலைகளும் அவருக்குத் தெரியும். அவர் இந்த மனிதர்களை நேசித்தார் மற்றும் கௌரவித்தார். அவர்கள் அவருக்கு நெருக்கமானவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருந்தனர். பலர் கியேவில் இருந்து வந்த தொழிலாளர்கள், மின்ஸ்கில் இருந்து அச்சுப்பதிப்பாளர்கள், வில்னாவில் இருந்து தையல்காரர்கள், பீலோஸ்ரொக்கில் இருந்து நெசவாளர்கள் இருந்த நகரம், இப்போது நாஜிக்கள் வசம் உள்ளது.

பசியின் வேதனைகளுக்கு மத்தியில், உள்நாட்டுப் போரின் முன்னோடியில்லாத போராட்டங்களில் வென்ற இந்த நிலத்தை போகாரியோவ் தனது ஒவ்வொரு இழையுடனும் நேசித்தார். அது இன்னும் ஏழ்மையாக இருந்தது. அது இன்னும் கடுமையான உழைப்பு வாழ்க்கை வாழ்ந்து, கடுமையான சட்டங்களின்படி-இருப்பினும் அது உலக மக்களின் தாய்நாடாக இருந்தது, அதன் உலக மக்களின் தாய்நாடாகவும், அதன் சிறந்த சிந்தனையினதும் சிறந்த மக்களின் தாய்நாடாகவும் இருந்தது. பொகாரியோவ் அதற்காக இறக்கவும் தயாராக இருந்தார்.

குறிப்புகளில், ரோபர்ட் மற்றும் எலிசபெத் சாண்ட்லர் பின்வருமாறு எழுதுகிறார்கள்,

'அடிமைத்தனம் அறியாத தேசத்துக்காக, பகுத்தறிவு மற்றும் நீதியின் சட்டங்களில் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கைக்காக' என்ற வார்த்தைகளை கையெழுத்துப் பிரதிகளிலிருந்து மீட்டெடுத்துள்ளோம். குரோஸ்மான் தனது கையெழுத்துப் பிரதியிலிருந்து, 'இன்னும் தாய்நாடாக இருந்தது' என்ற சொற்றொடரை நீக்கிவிட்டார். அவரது கையெழுத்துப் பிரதியில் இருந்த இறுதி வாக்கியம் வெளியிடப்பட்ட அனைத்து பதிப்புகளிலிருந்தும் தவிர்க்கப்பட்டது. போகாரியோவின் சர்வதேசியவாத்தின் மீதான தீவிரம் மற்றும் சுதந்திரத்தின் மீதான காதலால் குரோஸ்மானின் பதிப்பாளர்கள் பீதியடைந்தனர் என்பது இதிலிருந்தும், முந்தைய குறிப்பில் குறிப்பிடப்பட்ட தவிர்ப்புகளிலிருந்தும் தெரிகிறது.

இதில் சேர்ப்பதற்குச் சிறிதும் இல்லை. ஸ்டாலின்கிராட் புத்தகத்தை போலவே, இது ஒவ்வொரு தொழிலாளியும் இளைஞனும் படிக்க வேண்டிய புத்தகமாகும். உக்ரேனில் ஒரு புதிய உலகப் போர் உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில், எல்லா இடங்களிலும் ஆளும் வர்க்கங்களால் மிக மோசமான தேசியவாதம், இனவெறி மற்றும் வரலாற்றுப் பொய்கள் ஊக்குவித்து வருகையில், இது போன்ற பணிகள் 1917 இன் சோசலிச மரபுகளுடன் இன்றைய புரட்சிகரப் போர்களை நடத்த வேண்டிய தலைமுறைகளை மீண்டும் இணைக்க இப்படைப்புகள் உதவும். ஸ்ராலினிசத்தின் பாரிய குற்றங்கள் இருந்தபோதிலும், நாஜிசத்திற்கு எதிரான செம்படையின் போராட்டத்தில், ஆழமான முற்போக்கான வெளிப்பாட்டை வாசிலி குரோஸ்மானின் படைப்புகளிலும் இன்னும் காணக்கூடியதாக இருக்கிறது.

Loading