முன்னோக்கு

அமெரிக்க குழந்தைகள் மருத்துவமனைகளின் நெருக்கடியும் சோசலிச பொது சுகாதாரத்தின் தேவையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த மாதத்தில், அமெரிக்கா முழுவதும் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் சிக்கியுள்ளன. டிசம்பரில் சாதாரண உச்சநிலைக்கு முன்னதாகவே, பலவித சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கைக்குழந்தைகள் மற்றும் குறுநடை போடும் குழந்தைகளின் அலைகளால் அவை மூழ்கடிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்படுவதற்கான மிகப் பொதுவான காரணமாக தற்போது சுவாச ஒத்திசைவு வைரஸ் (respiratory syncytial virus-RSV) உள்ளது, ஆனால் ரைனோவைரஸ் (rhinovirus), என்ட்ரோவைரஸ் (enterovirus), அடினோவைரஸ் (adenovirus), காய்ச்சல் மற்றும் கோவிட்-19 ஆகியவற்றில் ஏதோவொன்றினாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர், மேலும் ஒரே நேரத்தில் பல வைரஸ்களால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் உள்ளன.

நாடு முழுவதும், குழந்தைகளுக்கான மருத்துவமனைகள், தற்போது அமெரிக்காவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கான மருத்துவமனை படுக்கைகளில் முக்கால்வாசிப் பகுதியை ஆக்கிரமித்துள்ள நிலையில், அதன் திறனை எட்டியுள்ளன அல்லது அதிகமாக உள்ளன. ரோட் தீவில் 99 சதவிகித அளவிற்கு அனைத்து குழந்தைகள் மருத்துவமனை படுக்கைகளும் நிரம்பியுள்ளன, டெக்சாஸில் 91 சதவிகிதம், மிசூரியில் 89 சதவிகிதம் மற்றும் பிற மாநிலங்களும் உட்பட ஒட்டுமொத்த மாநிலங்களிலும் இதே கட்டுக்கடங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

சியாட்டில் குழந்தைகள் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை அறைகள் (emergency room – ER) இப்போது 200 சதவீத பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கிறது. கலிபோர்னியாவின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையான சான் டியாகோவில் உள்ள ரேடி குழந்தைகள் மருத்துவமனையில், கடந்த சில நாட்களாக அவசரப் பிரிவுகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதோடு, காத்திருப்பு நேரமும் அதிகரித்து ஆறு மணிநேரம் வரை இருமடங்காகியுள்ளது. சிகாகோ, நியூயோர்க் நகரம், நியூ ஓர்லியன்ஸ், டெட்ராய்ட், வாஷிங்டன் டி.சி., பிலடெல்பியா, பால்டிமோர், ஆஸ்டின் மற்றும் பல நகரங்கள் உட்பட பிற முக்கிய நகரங்களிலும் குழந்தைகள் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி வழிவதோடு, பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. பல குடும்பங்கள் தங்கள் பிராந்தியத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் அவற்றின் திறனைத் தாண்டி இயங்கும் நிலையில், பல மணிநேரங்கள் தங்கள் வாகனங்களில் பயணித்து அல்லது விமானத்தில் பயணித்து பிற மாநிலங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகளில் அவர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க நேரிடுகிறது.

கனெக்டிகட்டின் ஹார்ட்ஃபோர்டில் உள்ள கனெக்டிகட் குழந்தைகள் மருத்துவ மையத்தில், RSV பாதிப்புள்ள குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு மருத்துவமனையின் புல்வெளியில் ஒரு கள கூடாரத்தை அமைக்க தேசிய காவலர் படை மற்றும் மத்திய அவசரகால நிர்வாக சங்கத்தை (Federal Emergency Management Association-FEMA) கேட்கலாமா என்று அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். கனெக்டிகட் குழந்தைகள் மருத்துவ மையத்தில் RSV பாதிப்புடன் தனது இரண்டு மாத மகன் கிராண்டை சேர்த்துள்ள மெரிடனுக்கு அருகிலிருந்து வந்துள்ள ஒரு தாயான கேத்தரின் மோர்கன் உள்ளூர் செய்திகளுக்கு தெரிவிக்கையில், ‘நாங்கள் உள்ளே நுழைந்ததும், நடைகூடங்கள் முழுவதும் குழந்தைகளுடன் பல குடும்பங்கள் அறைக்காக காத்திருக்கின்றன’ என்று கூறினார்.

தனது மகனின் நோய் அச்சுறுத்தும் வகையில் அதிகரிப்பது குறித்து பேசுகையில் மோர்கன், “இது மிகவும் பயமாக இருக்கிறது. சுவாசக் கோளாறு மிகவும் கவலைக்குரியது. அவனது சிறு நுரையீரல் மூலம் உண்மையில் சுவாசிக்க முடியாது. … நான்கு மணிநேரத்திற்குள் அவன் தனது முழு உடலையும் சுவாசிக்க பயன்படுத்தினான். அதை நினைக்கும் போது அழுகை வருகிறது” என்று கூறினார்.

நாடு முழுவதும், ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் ஏற்படும் அதிர்ச்சிக்கு ஆளாகிறார்கள், இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அவர்களின் பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் குழந்தைகளின் பக்கத்தில் பதட்டத்துடன் அமர்ந்து, அவர்களைப் பிடித்துக் கொள்கின்றனர், அல்லது பணியாளர் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளில் இருந்து வேறு இடங்களை நாடிச் செல்கின்றனர்.

'இலேசான' ஓமிக்ரோன் மாறுபாடு ஒரு நாளைக்கு சராசரியாக 914 குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்தது மற்றும் அந்த மாதத்தில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற போது, இந்த அளவு குழந்தைகளின் ஒரே ஒப்பிடக்கூடிய அளவு, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மருத்துவமனையில் நிகழ்ந்தது.

வரவிருக்கும் வாரங்களில், பெரும்பாலும் தடுப்பூசி போடப்படாத குழந்தைகளிடையே எதிர்பார்க்கப்படும் காய்ச்சல் மற்றும் கோவிட்-19 இன் எழுச்சிகள், குழந்தைகள் மருத்துவமனைகள் அவற்றின் முறிவுப் புள்ளியை எட்டும் அளவிற்கு ‘மூன்று அச்சுறுத்தல்களை’ ஏற்படுத்தும்.

RSV என்பது ஒரு பருவகால வைரஸ் ஆகும், இது இளம் குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியை (bronchiolitis) ஏற்படுத்தும், அவர்களின் சுவாசிக்கும் திறனை கடுமையாக பாதிக்கும், மேலும் உயிருக்கு கூட ஆபத்தானதாகும். இது வரலாற்று ரீதியாக, வருடத்திற்கு சராசரியாக 58,000 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கும், 5 வயதுக்குட்பட்ட 500 குழந்தைகள் இறப்பதற்கும் காரணமாகவுள்ளது, அத்துடன் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்களிடையே வருடத்திற்கு சராசரியாக 177,000 மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் 14,000 இறப்புக்கள் நிகழ்வதற்கும் காரணமாகவுள்ளது. ஒட்டுமொத்தமாக, சுவாச நோய்க்கிருமிகள் உலகின் மிக மோசமான கொலையாளிகளில் ஒன்றாகும், உலக சுகாதார அமைப்பு (WHO), இறப்பு அல்லது இயலாமை அடிப்படையில் பல ஆண்டுகள் அளவிடப்பட்ட நோய்களின் உச்சபட்ச உலகளாவிய சுமையை அது விளைவிப்பதை கண்டறிந்துள்ளது.

கோவிட்-19 நோய்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த 2020 ஆம் ஆண்டில் பூட்டுதல், முகக்கவசம் அணிதல், தொலைநிலை கல்வி கற்றல் மற்றும் சமூக இடைவெளி உட்பட செயல்படுத்தப்பட்ட தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய நெருக்கடியைக் குறை கூற கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் முயல்கின்றன, இவை RSV மற்றும் பிற வைரஸ்களுக்கு வெளிப்படாத குழந்தைகளிடையே ‘நோயெதிர்ப்பு சக்தி கடன்’ என்று அழைக்கப்படுவதை உருவாக்கியது. இந்த விஞ்ஞானபூர்வமற்ற சொல், தற்போதைய பேரழிவிற்கான அரசியல் பொறுப்பாளிகள் மீதான பழியைத் திசைதிருப்பும் ஒரு சிவப்பு எச்சரிக்கை ஆகும்.

உண்மையில், இந்த சுவாச வைரஸ்களின் எழுச்சியானது தற்போது பைடென் நிர்வாகமும் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் பின்பற்றும் ‘என்றென்றும் கோவிட்’ கொள்கையின் நேரடி விளைவாகும், இது கடந்த ஆண்டில் அனைத்து கோவிட் எதிர்ப்புத் தணிப்பு நடவடிக்கைகளையும் முறையாகத் தகர்த்துவிட்டன. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டைப் போலல்லாமல், இந்த பள்ளி ஆண்டு அமெரிக்கா முழுவதும் உள்ள ஒவ்வொரு பெரிய பள்ளி மாவட்டத்திலும் முகக்கவச கட்டுப்பாடு இல்லாமல் தொடங்கியது, இது 50 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளிடையே அனைத்து சுவாச நோய்க்கிருமிகளும் தடையின்றி பரவ அனுமதிக்கிறது, அவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பாதுகாப்பு இல்லாமல் பல சுவாச வைரஸ்களை எதிர்க்கும் நோயெதிர்ப்பு திறன் இல்லாமல் இருந்தனர். பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தும், தற்போதைய நோய்தொற்று எழுச்சியை எதிர்கொள்ள எதுவும் செய்யப்படவில்லை.

நோய் எதிர்ப்பு நிபுணர் டாக்டர். அந்தோனி லியோனார்டி, குழந்தைகளின் பாரிய நோய்தொற்றுக்கு வழிவகுத்த ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ கோவிட்-19 கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார், சமீபத்தில் அவர் எழுதிய ‘நோயெதிர்ப்பு சக்தி கடன்’ என்று கட்டுரை இவ்வாறு முடிக்கிறது, “நோய்தொற்றுக்கள் உண்மையில் நன்மை அளிக்கின்றன என்றோ அல்லது செலுத்தப்பட வேண்டிய கடன் என்றோ நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. வருடாந்திரம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க வைக்கும் வைரஸ் நோய்களைத் தடுக்கும் அளவிற்கு நம் நாகரிகம் வளர்ச்சியடையாததற்கு குழந்தைகளின் ஆரோக்கியம் வரியாக செலுத்தப்படுவது போல் உள்ளது.”

கோவிட்-19 ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் வளர்ந்து வரும் ஆராய்ச்சிக் குழு மீது கவனம் செலுத்த டாக்டர். லியோனார்டி அழைப்பு விடுத்தார்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) சமீபத்திய மதிப்பீடுகளின்படி, அமெரிக்க குழந்தைகளில் 86.3 சதவீதம் பேர் குறைந்தது ஒரு முறையாவது கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த 62 மில்லியன் குழந்தைகளில் ஒரு மிகச்சிறிய சதவிகிதத்தினருக்கு மட்டுமே நோயெதிர்ப்பு அமைப்புகளை சேதப்படுத்தியிருந்தாலும் கூட, குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் தற்போதைய எழுச்சிக்கு பங்களிக்கும் காரணியாக அது இருக்கலாம். பொதுவாக கடுமையான நோயால் பாதிக்கப்படாத ஆரோக்கியமான குழந்தைகள் கூட RSV மற்றும் பிற வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக பல நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு அமெரிக்க மாநிலத்திலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையின் மதிப்பிடப்பட்ட சதவீதத்தைக் காட்டும் வரைபடம் [Photo: CDC]

2020-21 குளிர்காலத்தில், பல நாடுகளில் RSV, காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்க்கிருமிகள் கிட்டத்தட்ட அகற்றப்பட்டுவிட்டன, இவை வரையறுக்கப்பட்ட முகக்கவச பயன்பாடு மற்றும் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளின் குறிப்பிடத்தக்க ஆனால் திட்டமிடப்படாத துணை தயாரிப்பு ஆகும். இந்த குளிர்காலத்தில், அமெரிக்காவில் ஒரு குழந்தை மட்டுமே காய்ச்சலால் இறந்தது, கடந்த வாரம் நிகழ்ந்த 7,000 க்கும் அதிகமான RSV நோய்தொற்றுக்களுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டு இதே வாரத்தில் வெறும் 10 உறுதிப்படுத்தப்பட்ட RSV நோய்தொற்றுக்கள் மட்டுமே இருந்தன.

அக்டோபர் 2020 முதல் தற்போது வரை அமெரிக்காவில் உறுதிசெய்யப்பட்ட வாராந்திர RSV நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையைக் காட்டும் விளக்கப்படம்

தொற்றுநோய்களின் போதான மிகப்பெரிய விஞ்ஞான முன்னேற்றங்களில் ஒன்றாக கோவிட்-19 நோய்தொற்றை விளைவித்த SARS-CoV-2 வைரஸின் ஆரம்பகால அங்கீகாரம் இருந்தது, இது பேசுவது, பாடுவது மற்றும் சுவாசிப்பது போன்றவற்றின் மூலம் மக்கள் வெளிப்படுத்தும் சிறிய தூசுப்படலத்தின் மூலம் முற்றிலும் பரவுகிறது, இது ஒரு நேரத்தில் நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள் கூட காற்றில் நீடித்திருக்கிறது. SARS-CoV-2 காற்றில் பரவுகிறது என்பதை நிரூபிப்பது, 2016 ஆம் ஆண்டிலேயே காற்றில் பரவுவதாகக் காட்டப்பட்ட RSV உள்ளிட்ட பிற நோய்க்கிருமிகளைப் பற்றிய மேலதிக விசாரணையைத் தூண்டியது.

ஒரு பகுத்தறிவு சமுதாயத்தில், உயர்தர காற்று வடிகட்டுதல் மற்றும் காற்றோட்ட அமைப்புகளுடன் கூட கட்டிடங்களை நவீனமயமாக்குவதற்கு, இந்த விஞ்ஞான அறிவு வரலாற்றில் உலகளாவிய உள்கட்டமைப்பின் மிகப்பெரிய மறுசீரமைப்பைத் தூண்டும். மாறாக, உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கம் மற்றும் பொது சுகாதார நிறுவனத்தால், எல்லாவற்றிற்கும் மேலாக, உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களால் (CDC) விஞ்ஞானம் ஒடுக்கப்பட்டு சிதைக்கப்பட்டது.

அடிப்படையில், வான்வழி பரவும் விஞ்ஞானம் தனிநபரிடம் இருந்து வைரஸ் பரவுவதற்கான பொறுப்பை சமூக நிலைக்கு மாற்றுகிறது, இது அனைத்து பொது இடங்களிலும் காற்றை சுத்தம் செய்யும் பொறுப்பை அரசாங்கங்கள் மீது வைக்கிறது. ஆனால் முதலாளித்துவத்தின் கீழ், தனியார் இலாபத்தின் மீதான இந்த குறைந்தபட்ச அத்துமீறல் கூட குறைந்து போனது.

புதன்கிழமை ஒரு குறிப்பிடத்தக்க செய்தியாளர் கூட்டத்தில், வெள்ளை மாளிகையின் கோவிட் நடவடிக்கை ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஆஷிஷ் ஜா, கோவிட்-19 ‘முற்றிலும் காற்றில் பரவுகிறது’ என்று கூறினார், இது வான்வழி பரவல் குறித்த ஒரு வெள்ளை மாளிகை அதிகாரியின் மிக வெளிப்படையான ஒப்புதலாகும். பின்னர் அவர் கோவிட்-19 ஐ RSV க்கு பொய்யாக எதிர்த்தார், இது கை கழுவுதல் மற்றும் ‘குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அவர்கள் வீட்டில் வைத்திருப்பது’ போன்றவற்றின் மூலம் குறைக்க முடியும் என்றார், ஆனால் இது பெரும்பாலான தொழிலாள வர்க்க குடும்பங்களுக்கு சாத்தியமற்றது. RSV மற்றும் பிற சுவாச நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முகக்கவசங்களை வழங்க வேண்டுமா என்று ஒரு நிருபர் கேட்டபோது, டாக்டர் ஜா அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார்.

இதே செயல்முறைகள் தான் உலகளவில் வெளிப்படுகின்றன. அனைத்து கோவிட் எதிர்ப்பு தணிப்பு நடவடிக்கைகளும் கைவிடப்பட்ட கனடாவின் ஒன்டாரியோவில், குழந்தைகள் மருத்துவமனைகள் RSV மற்றும் பிற சுவாச நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் மூழ்கடிக்கப்படுகின்றன, அதேவேளை பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைகளில் கண்டறியப்படும் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பற்றி தெரிவிக்க கூட அனுமதிக்கப்படுவதில்லை.

பரிசோதனைகளின் பாரியளவிலான விரிவாக்கம், நவீனமயமாக்கப்பட்ட தொடர்புத் தடமறிதல், சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல், உள்கட்டமைப்பைப் புதுப்பித்தல், தற்காலிகமாக விதிக்கப்பட்ட பூட்டுதல்கள் மற்றும் பல தணிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம், SARS-CoV-2, RSV, காய்ச்சல் மற்றும் பல நோய்க்கிருமிகளை உலகளவில் அகற்ற முடியும் என்பதை நிரூபிக்கும் பொது சுகாதாரக் கொள்கைகளுக்கு முதலாளித்துவம் முற்றிலும் விரோதமானது என்பதை கோவிட்-19 தொற்றுநோய் காட்டுகிறது.

குழந்தைகள் மற்றும் அனைத்து சமூகத்தின் மீதான ‘தொற்று வரி’ என்பது முதலாளித்துவ வர்க்கத்தால் விதிக்கப்படுகிறது, இது தொழிலாள வர்க்கத்தை சுரண்டலுக்கான தீவனமாகப் பார்க்கிறது, அதாவது ‘உற்பத்தி செய்ய முடியாத’ எவரது வாழ்க்கையும் முடிந்தவரை குறைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

முதலாளிகள் தங்களின் கொள்கைகள் மூலம், உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளை கிட்டத்தட்ட அழித்துவிட்டனர். அமெரிக்காவில் மட்டும், 2021 ஆம் ஆண்டில் 333,942 சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்கள் பணியாளர்களை கைவிட்டனர், அதே நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு செவிலியர்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கள் தற்போதைய பணியை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் கல்வியாளர்களின் பெரும் பற்றாக்குறையுடன், தொற்றுநோய் காலம் முழுவதும் வைரஸ் பரவுவதற்கான முக்கிய மையங்களாகவுள்ள பள்ளிகளிலும் இதே செயல்முறை வெளிப்பட்டுள்ளது.

முடிவில்லாத தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் போர் வெடித்ததால் தூண்டப்பட்ட பணவீக்க நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில், தொழிலாள வர்க்கம் உலகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த வளர்ந்து வரும் சர்வதேச வர்க்கப் போராட்டம், தொற்றுநோயைத் தடுத்து நிறுத்துவதற்கும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், பொது சுகாதாரம் மற்றும் பிற சமூக சேவைகளை பெருமளவில் விரிவுபடுத்துவதற்கும் அடிப்படையாக இருக்க வேண்டும். தற்போதுள்ள சொத்து உறவுகளை சோசலிசத்தால் முறியடிப்பதன் மூலம் மட்டுமே மனிதகுலம் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும், மற்றும் வறுமை மற்றும் நோயற்ற ஒரு கண்ணியமான, நீண்ட ஆயுளுக்கான உலகளாவிய உரிமைக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.

Loading