முசோலினியின் ரோம் அணிவகுப்பின் 100 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 31, 1922 அன்று, தேசிய பாசிசக் கட்சியின் தலைவரான பெனிட்டோ முசோலினி பல ஆயிரம் கருஞ்சட்டைகளின் தலைமையில் ரோம் வழியாக அணிவகுத்துச் சென்றார். அதற்கு முந்தைய நாளே, இத்தாலியின் மன்னர் மூன்றாம் விட்டோரியோ இமானுவேலெ அவரை இத்தாலிய பிரதமராக நியமித்திருந்தார்.

இது 23 ஆண்டுகள் நீடித்த ஒரு மிருகத்தனமான சர்வாதிகாரத்திற்கு முன்னோடியாக இருந்தது. பாசிஸ்டுகள் ஜனநாயக உரிமைகளை அடக்கி, ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்தை பயமுறுத்தி நசுக்கி, கொடூரமான காலனித்துவ போர்களை நடத்தி, இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் ஜேர்மனியுடன் கூட்டணி வைத்து 9,000 யூதர்களை எரிவாயு அறைகளுக்கு அனுப்பினர்.

முசோலினி (இடமிருந்து இரண்டாவது) ரோமில் அணிவகுப்புக்கு முன்னர் கருஞ்சட்டைகளை பரிசோதிக்கிறார் செய்கிறார்

“தலைவர்” ('Il Duce') இன் ஆட்சி பல சர்வாதிகாரங்களுக்கு முன்மாதிரியாக மாறியதுடன், மேலும் பாசிசம் என்ற சொல் கொடுங்கோன்மை மற்றும் காட்டுமிராண்டித்தனத்தின் சுருக்கமாக மாறியது. அடோல்ஃப் ஹிட்லர் முசோலினியின் மிகவும் ஆர்வமுள்ள சீடரானார். ஒரு வருடம் கழித்து அவர் முனிச் நகரில் ஒரு சதித்திட்டத்துடன் 'ரோம் அணிவகுப்பை' பின்பற்றினார். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வியடைந்தபோதிலும், ஆனால் 10 வருடங்களுக்கு பின்னர் ஹிட்லர் பேர்லினில் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

முசோலினி அதிகாரத்தைக் கைப்பற்றியதன் நூறாவது ஆண்டு நிறைவானது வரலாறு பற்றிய ஆர்வத்தை மட்டுமல்ல, எரியும் அரசியல் உண்மைகளையும் கொண்டுள்ள நிகழ்வும் ஆகும். ஒரு வாரத்திற்கு முன்பு, முசோலினியின் அரசியல் வாரிசுகள் இத்தாலிய அரசாங்கத்தை கையில் எடுத்துள்ளனர்.

புதிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி, தந்திரோபாய காரணங்களுக்காக பாசிசத்தை ஒரு 'வரலாற்று கேள்வி' என்று அறிவித்திருக்கலாம், ஆனால் அவரும் அவரது கட்சியும் பாசிச பாரம்பரியத்தில் உறுதியாக வேரூன்றியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஃப்ராடெல்லியின் அணிகளில் முசோலினியின் அபிமானிகளும், பாசிச போர்க் குற்றவாளிகளிகளும் நிரம்பி வழிகின்றனர். அவர்கள் வெறிபிடித்த நவ-நாஜிக்கள் மற்றும் அரசு எந்திரத்தில் உள்ள தீவிர வலதுசாரிக் கூறுகளுடன் நெருங்கிய உறவுகளை கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் ஆக்கிரோஷமான தேசியவாதம் மற்றும் இனவெறிக்கு ஆதரவளிக்கின்றனர்.

முசோலினியின் கீழ், பாசிச நாளிதழான இல் டெவெரே (Il Tevere) மற்றும் யூத-விரோத சஞ்சிகையான La difesa della raza (இனத்தை பாதுகார் - Defence of Race) மற்றும் 1946 முதல் 1987 வரை Movimento Sociale Italiano (இத்தாலிய சமூக இயக்கம் - MSI) ஆகியவற்றை இயக்கிய ஜியோர்ஜியோ அல்மிராண்டேவின் முன்னாள் அலுவலகத்தில் இருந்து கட்சியை மெலோனியே வழிநடத்துகிறார். MSI, முசோலினியின் பாசிச கட்சியின் வாரிசு அமைப்பும் ஃப்ராடெல்லியின் முன்னோடியுமாகும்.

அனைத்து இத்தாலிய கட்சிகளாலும் ஐரோப்பிய அரசாங்கங்களாலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பகிரங்கமாக வரவேற்கப்பட்ட மெலோனி அரசாங்கத்தை கையகப்படுத்தியது, முழு சர்வதேச முதலாளித்துவமும் வலது பக்கம் திரும்பியதன் ஒரு பகுதியாகும். தீர்க்க முடியாத பொருளாதார நெருக்கடியையும் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியையும் எதிர்கொண்டுள்ள நிலையில், அது ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான போரை நோக்கியும், தொழிலாள வர்க்கத்தை நசுக்கும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கும் திரும்புகிறது.

இது, ரோம் அணிவகுப்பு மீதான படிப்பினைகளுக்கு ஒரு தற்காலத்திற்கு பொருத்தமான முக்கியத்துவத்தை அளிக்கிறது. வரலாறு திரும்பத் திரும்ப அப்படியே நிகழ்வதில்லை அல்லது குறைந்தபட்சம் அதே வடிவத்திலும் நிகழ்வதில்லை. ஆனால் முசோலினியின் வாரிசுகள் இத்தாலிய அரசாங்கத்தின் தலைமைக்கு திரும்புவதையும் அவர்கள் ஏற்படுத்தும் ஆபத்துகளையும் புரிந்துகொள்வதற்கும் எதிர்த்துப் போராடுவதற்கும், இந்தப் பாடங்களைப் படிப்பது இன்றியமையாதது.

ரோம் மீதான அணிவகுப்பு

பாசிஸ்டுகள் ரோம் மீதான அணிவகுப்பை ஒரு கட்டுக்கதையாக மாற்றியுள்ளனர். அதன்படி மக்களால் சூழ்ந்து செல்லப்பட்ட 300,000 கருஞ்சட்டைகள் ஒரு தேசிய புரட்சியை நிறைவேற்றி, அதற்கு 3,000 தியாகிகள் தங்கள் உயிரைக் கொடுத்தனர் என்கின்றனர்.

யதார்த்தம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. ரோம் மீது அணிவகுத்துச் செல்ல முசோலினி விடுத்த அழைப்புக்கு அக்டோபர் 27 அன்று வெறும் 5,000 பாசிஸ்டுகள் பதிலளித்தனர், அவர்கள் பட்டினியால் வாடி, வசதியில்லாமல், தலைநகருக்கு அருகில் மழையிலும் சேற்றிலும் சிக்கிக்கொண்டனர். அடுத்த நாள் சுமார் 10,000 பேர் அவர்களுடன் இணைந்தனர். முசோலினி இசைநாடக நிகழ்வில் தொடர்ந்து இரண்டு மாலைகளில் கலந்து கொண்டு மிலான் நகரில் இருந்தார். அவர் தோல்வியுற்றால் அருகிலுள்ள சுவிட்ஸலாந்து எல்லையைத் தாண்டி தப்பியோடத் தயாராக இருந்தார்.

இந்தக்கும்பலை கலைப்பது இராணுவத்திற்கு எளிதாக இருந்திருக்கும். மிகுந்த தயக்கத்திற்குப் பின்னர், பிரதமர் லூய்கி ஃபேக்டா அதற்கான உத்தரவை பிறப்பித்தார். ஆனால் மன்னர் அவசரநிலைப் பிரகடனத்தில் கையெழுத்திட மறுத்து, அதற்குப் பதிலாக அக்டோபர் 29 அன்று மாலை புதிய அரசாங்கத்தை அமைக்க முசோலினிக்கு அறிவுறுத்தினார். முசோலினி உறங்கும் இரயில் வண்டியில் ரோமுக்குச் சென்று, அங்கு அவர் அக்டோபர் 30 அன்று பதவியேற்றார். அடுத்த நாள் வரை புதிய அரசாங்கத் தலைவர் கவனமாக அரங்கேற்றப்பட்ட வெற்றிகரமான அணிவகுப்பின் தலைமையில் தலைநகருக்குள் அணிவகுத்துச் சென்றார்.

ரோம் மீதான அணிவகுப்பின் புராணக்கதை, பாசிஸ்டுகளுக்கும், அவர்கள் அதிகாரம் பெற உதவிய அனைவருக்கும் நன்கு சேவை செய்தது. பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை, இது ஒரு ஸ்தாபக கட்டுக்கதையாகவும் ஒருங்கிணைக்கும் சடங்காகவும் சேவை செய்தது; அவர்களின் பொருளாதார மற்றும் அரசு ஆதரவாளர்களுக்கு, சர்வாதிகாரி அதிகாரத்திற்கு வர உதவியது அவர்கள்தான் அன்றி 'மக்கள்' அல்ல என்ற உண்மையை அது திரிப்பதற்கு உதவியது.

ஆனால் வணிகம், இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த சக்திவாய்ந்த சக்திகள் முசோலினியைத் தேர்வு செய்யுமாறு மன்னரை வலியுறுத்தின என்பது வெளிப்படையானது. ரோம் மீதான அணிவகுப்புக்கு முசோலினி கணிசமான போர் நிதியை பெற முடிந்தது. தொழிலதிபர்களின் கூட்டமைப்பு அவருக்கு 20 மில்லியன் லீராவை கையளித்திருந்தது. நான்கு ஆண்டுகளாக நாடு சோசலிசப் புரட்சியின் விளிம்பில் இருந்தபின் தொழிலாளர் இயக்கத்தை நசுக்க பாசிஸ்டுகள் தேவைப்பட்டனர்.

பாசிசத்தின் சிறப்புப் பணி, அவநம்பிக்கையான குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை 'தொழிலாள வர்க்கத்தையும் ஜனநாயக அமைப்புகளையும் தகர்த்தெறியும் கருவியாக பயன்படுத்துவது' என்று 1932ல் லியோன் ட்ரொட்ஸ்கி அறிவித்தார். இந்த நோக்கத்திற்காக, அது தேசிய, இனவெறி, ஆனால் சமூக மற்றும் முதலாளித்துவ-விரோத வாய்வீச்சைப் பயன்படுத்துகிறது. எவ்வாறாயினும், அதிகாரத்திற்கு வந்ததும், அது நிதி மூலதனத்தின் ஒரு அப்பட்டமான சர்வாதிகாரம் என்பதை நிரூபிக்கிறது:

பாசிசத்தின் வெற்றி என்பது, நிதி மூலதனம், அரசின் கல்வி, நிர்வாக, நிறைவேற்று அதிகாரத்திற்கான அனைத்து அமைப்புக்களையும், அரசு எந்திரம், இராணுவம், நகராட்சி நிர்வாகங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், பத்திரிகைகள், தொழிற்சங்கங்கள், கூட்டுறவுகள் இன்னபிற நிறுவனங்களையும் நேரடியாகவும் உடனடியாகவும் கைப்பற்றுகிறது. ஒரு அரசு பாசிசமாக மாறும்போது, முசோலினியின் வடிவங்களுக்கு ஏற்ப அரசாங்கத்தின் வடிவங்கள் மற்றும் முறைகள் மாற்றப்படுகின்றன என்று மட்டும் அர்த்தப்படுத்துவதில்லை (இந்த துறைகளில் ஏற்படும் மாற்றங்கள் இறுதியில் ஒரு சிறிய பாத்திரத்தை வகிக்கின்றன) ஆனால் முதன்மையாகவும் எல்லாவற்றிற்கும் மேலாகவும் தொழிலாளர் அமைப்புக்கள் அடித்து நொறுக்கப்படுகிறது. பாட்டாளி வர்க்கம் மீண்டும் ஒரு அமைப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது என்று அர்த்தப்படும். இது வெகுஜனங்களுக்குள் ஆழமாக ஊடுருவி, பாட்டாளி வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான படிகமயமாக்கலைத் விரக்தியடையச் செய்ய உதவும்வகையில் ஒரு நிர்வாக அமைப்பு உருவாக்கப்படுகிறது. இதில்தான் பாசிச ஆட்சியின் துல்லியமான சாராம்சம் உள்ளது. ….. (லியோன் ட்ரொட்ஸ்கி, 'இப்போது என்ன?')

ஹிட்லரின் எழுச்சிக்கு எதிராக ஜேர்மன் தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவதற்காக ட்ரொட்ஸ்கி இந்த வரிகளை எழுதியபோது, அவர் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்த இத்தாலியின் படிப்பினைகளை எடுத்துக் கொண்டார். ட்ரொட்ஸ்கி முக்கிய பங்கு வகித்த கம்யூனிச அகிலத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாநாடுகள் இத்தாலிய கேள்வியை தீவிரமாக கலந்துரையாடின.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பயங்கரம்

முதலாம் உலகப் போருக்குப் பின்னர், சோசலிசப் புரட்சியை நிகழ்ச்சி நிரலில் வைத்த போர்க்குணமிக்க தொழிலாளர் போராட்டங்கள், கிராமப்புற அமைதியின்மை மற்றும் எழுச்சிகளின் அலைகளால் இத்தாலி அடித்துச் செல்லப்பட்டது. போரின் போது ஒரு சோசலிசவாதியாக இருந்து தீவிர தேசியவாதியாகவும், போர் ஆதரவாளராகவும் மாறிய முசோலினி, தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக ஆயுதமேந்திய குழுக்களை, ஃபாஸ்சி (fasci) என அழைக்கப்படுபவர்களை ஏற்பாடு செய்தார். அவர்கள் நடத்திய பயங்கரம் விளக்குவதற்கு அப்பாற்பட்டது.

தொழிலதிபர்கள் மற்றும் நில உரிமையாளர்களால் நிதியுதவி பெற்று, காவல்துறையினரால் பாதுகாக்கப்பட்டு, பெரிதும் ஆயுதம் ஏந்திய பாசிஸ்டுகள், நன்கு அறியப்பட்ட தொழிலாளர் தலைவர்களின் சந்திப்பு இடங்கள் அல்லது தனிப்பட்ட வீடுகளுக்கு சந்திக்க சென்றனர். அங்கு அவர்கள் கொள்ளையடித்து, சித்திரவதை செய்து கொலை செய்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் தாங்கள் தேடுபவர்களை சரணடைய கட்டாயப்படுத்துவதற்காக அடிக்கடி அச்சுறுத்தப்பட்டனர். 1921 மற்றும் 1922 ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 3,000 சோசலிஸ்டுகளையும், தொழிற்சங்கவாதிகளையும் இந்த வழியில் பாசிஸ்டுகள் கொலை செய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், தொழிலாளர்களும், பண்ணை தொழிலாளர்களும் அடிமை போன்ற நிலைமைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்த கிராமப்புற பகுதிகளிலும், சிறிய நகரங்களிலும் பாசிச பயங்கரவாதம் குவிந்திருந்தது. ஆனால் 1920 ஆம் ஆண்டின் இறுதியில், இது பெரிய தொழில்துறை நகரங்களுக்கும் விரிவடைந்தது.

1920 கோடையில் பணியாளர்களின் ஆக்கிரமிக்கப்பட்ட செயல்பாடு

அந்த ஆண்டின் கோடையில், புரட்சிகர அலை அதன் உச்சத்தை எட்டியது. 500,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் மற்றும் கப்பல் கட்டும் தளங்களை ஆக்கிரமித்து, சிவப்பு மற்றும் கறுப்பு (அராஜகவாத) கொடிகளை ஏற்றி ஆலைகளில் இருந்து உரிமையாளர்களையும் மேலாளர்களையும் தூக்கி எறிந்தனர். மிலான் நகரில் உள்ள ஆல்ஃபா ரோமியோ ஆலை பூட்டப்பட்டதற்கு அவர்கள் எதிர்வினையாற்றினர். தொழிலாளர்களின் அதிகாரம் அங்கு நிலவுவதுபோல் உணரப்பட்டது.

ஆனால் 1917 இல் போல்ஷிவிக்குகள் ரஷ்யாவில் செய்ததைப் போல, அதிகாரத்தை கைப்பற்றத் தயாராக எந்த அரசியல் தலைமையும் இருக்கவில்லை. உண்மையில், சோசலிஸ்ட் கட்சியின் தலைமை ஜியாசிண்டோ செராட்டியின் (Giacinto Serrati) கீழ் அதிகபட்சவாதிகளின் (Maximalists) கைகளில் இருந்தது. அவர் முதலாம் உலகப் போரை எதிர்த்தார் மற்றும் கம்யூனிச அகிலத்தில் சேர்ந்தார். ஆனால் தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான அதிகபட்சவாதிகளின் அர்ப்பணிப்பு முற்றிலும் மேம்போக்கானதாக இருந்தது. அந்த நேரத்தில் தொழிலாளர் அமைச்சரை வழங்கிய மற்றும் தொழிற்சங்கங்களில் ஆதிக்கம் செலுத்திய சீர்திருத்தவாதிகளுடன் முறித்துக் கொள்ள அவர்கள் மறுத்துவிட்டனர்,.மேலும் அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மூலோபாயமோ தந்திரோபாயமோ இருக்கவில்லை.

இறுதியில், தொழிற்சங்கங்கள் சில வெற்று சலுகைகளின் உதவியுடன் வேலைநிறுத்தத்தை நிறுத்த முடிந்தது. “சீர்திருத்தவாதம் நாகரீகத்தைக் காப்பாற்றியது!”, “CGdL (தொழிற்சங்கங்களின் சங்கம்) விரும்பாததால் புரட்சி நடக்கவில்லை” என்று ஊடகங்கள் ஆரவாரம் செய்தன.

இப்போது பாசிசம் தாக்குதலைத் தொடங்கியது. நவம்பர் 21 அன்று, 300 ஆயுதமேந்திய பாசிஸ்டுகள் சோசலிச நிர்வாகம் பதவியேற்ற போலோக்னா நகரசபைக்கு அணிவகுத்துச் சென்று ஏழு சோசலிஸ்டுகளை கொலை செய்தனர். அதைத் தொடர்ந்து வந்த வாரங்களில், அவர்கள் காவல்துறையினரின் ஒப்புதலுடன் மற்ற நகரங்களிலும் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்தனர். பாசிச இயக்கம் வேகத்தை அதிகரித்தது. சோசலிஸ்டுகளையும், போர்க்குணமிக்க தொழிலாளர்களை வேட்டையாடுவதற்காக குண்டாந்தடிகள், கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளுடன் கூட ஆயுதம் ஏந்திய சிறிய நடவடிக்கை குழுக்கள் நாடு முழுவதும் சென்றன. ஐந்து மாதங்களில் பாசிச இயக்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 20,000 லிருந்து 180,000 ஆக அதிகரித்தது.

'நாடகபாணியிலான மூடுதிரையின் பின்னால் தொழிலாளர் இயக்கத்தை உடைக்க வடிவமைக்கப்பட்ட நன்கு குறிவைக்கப்பட்ட மிருகத்தனத்தின் மையம் இருந்தது' என்று கிறிஸ்தோபர் டுக்கன் தனது இத்தாலியின் வரலாற்றில் அவர்களின் நடவடிக்கைகளை விவரிக்கிறார். 'கட்சி மற்றும் தொழிற்சங்க கட்டிடங்கள் சூறையாடப்பட்டன, மற்றும் இடதுசாரி செய்தித்தாள்களின் அலுவலகங்கள் அழிக்கப்பட்டன. அதே நேரத்தில் சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர்களான பாராளுமன்ற அங்கத்தவர்கள், நகரசபை தலைவர்கள், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் சங்க தலைவர்கள் ஆகியோர் வேண்டுமென்றே மிரட்டப்பட்டு, தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டனர் மற்றும் சில சமயங்களில் கொலை செய்யப்பட்டனர்.'

ஒரு முதலாளித்துவ தாராளவாதியான பிரதம மந்திரி ஜியோவானி ஜியோலிட்டி (Giovanni Giolitti), 1921 வசந்த காலத்தில் தேர்தல்களில் ஒரு பொதுவான 'தேசிய கூட்டில்' போட்டியிட முசோலினியை அழைத்தார். தேர்தல் முசோலினிக்கு வெற்றியாக அமைந்தது. 37 இடங்களில் பாசிசவாதிகள் வெற்றி பெற்றனர், ஆனால் சோசலிஸ்டுகள் 123 இடங்களைப் பெற்று பலமான கட்சியாக நீடித்தனர்.

ஜனவரி 1921 இல், அமாடியோ போர்டிகா, அந்தோனியோ கிராம்ஷி மற்றும் பிற இடதுசாரி பிரதிநிதிகள் செராட்டியின் சோசலிஸ்ட் கட்சியுடன் முறித்துக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். இருப்பினும், பாட்டாளி வர்க்கத் தலைமையின் நெருக்கடியை உடனடியாக சமாளிக்க இது மிகவும் இளமையாகவும் அனுபவமற்றதாகவும் இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒருங்கிணைத்து அதை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இட்டுச் செல்லும் புரட்சிகர தலைமை இல்லாதது இறுதியில் முசோலினிக்கு வழி வகுத்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்கள் மற்றும் தலைவர்களில் ஒருவரான எழுத்தாளர் இனாசியோ சிலோனே (Ignazio Silone), 1934 இல் சுவிட்சர்லாந்தில் நாடுகடத்தப்பட்டபோது அவர் வெளியிட்ட பாசிசம் என்ற படிக்கத் தகுந்த புத்தகத்தில் பின்வருமாறு எழுதினார்:

இத்தாலிய தொழிலாள வர்க்கம் போராடாமலே அடிபணிந்தது. ரோம் மீதான அணிவகுப்பு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து சிறிதளவு எதிர்ப்பையும் தூண்டாமல் கடந்து சென்றது. சீர்திருத்தவாதிகள், அதிகபட்சவாதிகள் (maximalists) மற்றும் கம்யூனிஸ்டுகள் ரோம் மீதான அணிவகுப்புக்கு தயாராக இல்லை. ... இத்தாலிய பாட்டாளி வர்க்கம் நான்கு ஆண்டுகள் மாயையான போர்களை வீரத்துடன் நடத்திய இராணுவம் போல் தோன்றியது. ... இத்தாலிய தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் இத்தாலிய லெனின்கள் மற்றும் ட்ரொட்ஸ்கிகளை காணவில்லை .…

இருப்பினும், அரசாங்கத்தை கைப்பற்றியதன் மூலம், முசோலினி இன்னும் தனது சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்தவில்லை. பாசிஸ்டுகளுக்கு மேலதிகமாக, அவரது அமைச்சரவையில் கத்தோலிக்க மக்கள் கட்சியின் பிரதிநிதிகள், ஜனநாயகவாதிகள், தாராளவாதிகள் மற்றும் இரண்டு இராணுவ உறுப்பினர்கள் இருந்தனர். அவர் சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரிகளை ஒத்துழைக்க அழைத்தார், அதன் தலைவர்களில் ஒருவரான ஜினோ பல்தேசி அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் அவரும் பின்வாங்க வேண்டியிருந்தது. முசோலினிக்கு தனது கட்டுப்பாடற்ற அதிகாரத்தை “தலைவர்” ('il Duce') என்று நிறுவுவதற்கு மேலும் மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன.

இக்காலகட்டத்திற்கான படிப்பினைகள்

இத்தாலியின் இன்றைய நிலைமை நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட பல விடயங்களில் வேறுபடுகிறது.

சோசலிஸ்டுகள் மற்றும் தொழிற்சங்கங்களால் திசைதிருப்பப்பட்டு, முடக்கப்பட்டு, காட்டிக் கொடுக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிக்குப் பின்னர், முசோலினி ஆட்சிக்கு வந்தார். 1920 வேலைநிறுத்த இயக்கத்தின் தோல்விக்குப் பின்னர் வெறித்தனமாக வலது பக்கம் திரும்பிய முன்னாள் சிப்பாய்கள் மற்றும் கசப்பான குட்டி முதலாளித்துவத்தின் ஒரு வெகுஜன இயக்கத்தை அவரால் நம்பியிருக்க முடிந்தது.

பணவீக்கம், தொற்றுநோய், உக்ரேனிய போர் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் விளைவாக விரைவான வேகத்தில் வளர்ந்து வரும் பகிரங்க வர்க்கப் போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னர் மெலோனி அரசாங்கத்தை எடுத்துக் கொண்டார். அவருக்குப் பின்னால் ஒரு பாசிச வெகுஜன இயக்கம் இல்லை, ஆனால் அவரது வெற்றிக்கு, கடந்த மூன்று தசாப்தங்களில் சமூகத் தாக்குதல்களுக்கு முக்கிய பொறுப்பை ஏற்று, வர்க்கப் போராட்டத்தை திட்டமிட்டு நசுக்கிய 'இடது' கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்று அழைக்கப்படுபவைகளுக்கு கடமைப்பட்டிருக்கிறார். அவர்கள் விட்டுச் சென்ற அரசியல் வெற்றிடம், ஃப்ராடெல்லி டி'இத்தாலியாவை வலிமையான கட்சியாக மாற்றியுள்ளது.

ஆனால் அது அவரை குறைவான ஆபத்தானவராக ஆக்கவில்லை. இத்தாலியில் மட்டுமல்லாது ஆளும் வர்க்கம் தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயகவாதிகள், முன்னாள் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் அதிகாரத்துவ எந்திரங்களுக்கு மேலதிகமாக, வர்க்கப் போராட்டத்தை ஒடுக்க சர்வாதிகார ஆட்சி வடிவங்களை மேலும் மேலும் நம்பியுள்ளது. அதனால்தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மெலோனியை இருகரம் நீட்டி வரவேற்றுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் கூறினார்: 'புதிய இத்தாலிய அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான வழியில் பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன் மற்றும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.' பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், மெலோனியை ரோமில் அவரது முதல் நாள் அலுவலகத்தில் சந்தித்தார். பின்னர் அவர் சந்திப்பை 'நட்பு மற்றும் பயனுள்ளது' என்று விவரித்தார். ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் வெள்ளியன்று மெலோனியுடன் தொலைபேசியில் உக்ரேன் போரைப் பற்றி கலந்துரையாடவும், 'ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ மற்றும் G7 இல் நல்ல ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கான ஆர்வத்தை' வெளிப்படுத்தவும் பேசினார்.

மற்ற நாடுகளிலும், ஆளும் வர்க்கம் தீவிர வலதுசாரிக் கட்சிகளை ஊக்குவிக்கிறது, அவற்றை அரசிலும் அரசாங்கத்திலும் ஒருங்கிணைக்கிறது மற்றும் அவர்களின் வலதுசாரி கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறது. இது ஸ்பெயினில், மெலோனியுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ள வோக்ஸ் மற்றும் ஜேர்மனியில் AfD, பிரான்சில் உள்ள தேசிய பேரணி மற்றும் சுவீடனில் உள்ள சுவீடன் ஜனநாயகவாதிகள் போன்ற சிலவற்றைப் பற்றி குறிப்பிடலாம். அமெரிக்காவில், டொனால்ட் ட்ரம்பின் கீழ் உள்ள குடியரசுக் கட்சியினர் வெளிப்படையான பாசிசக் கட்சியாக மாறி வருகின்றனர். அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜோ பைடென் அமெரிக்காவிற்கு வலுவான குடியரசுக் கட்சி தேவை எனக் கூறுகிறார்.

பல்வேறு போலி-இடது குழுக்கள் செய்வது போல, ஜனநாயக கட்சிகள் எனக் கூறப்படும் கட்சிகளை ஆதரிப்பதன் மூலமோ அல்லது கூட்டணி வைப்பதன் மூலமோ பாசிச அச்சுறுத்தலை நிறுத்த முடியும் என்று கூறுவது தொழிலாள வர்க்கத்தை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகும்.

இந்த கட்சிகள் நீண்ட காலமாக குடியேற்றக் கொள்கை, சமூக சிக்கன நடவடிக்கை, வெளிநாடுகளில் மறுஆயுதமயமாக்கம், போர் மற்றும் பிற கேள்விகளில் பாசிஸ்டுகளின் வேலைத்திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அவர்களின் அரசியல் முன்னோர்கள் 1922 இல் முசோலினியின் முதல் அரசாங்கத்தில் இணைந்தபோது இத்தாலியிலும், பின்னர் 1933 இல் ஜேர்மனியில் ஹிட்லரின் செயல்படுத்தல் சட்டத்திற்கு வாக்களித்து அவருக்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்கியதுபோலவும் இன்று தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பாசிஸ்டுகளுடன் பொது முன்னணியில் கூட்டுவைக்க அவர்கள் ஒரு கணம் கூட தயங்க மாட்டார்கள்.

முசோலினியின் சான்றுகள், ஒரு புரட்சிகர சூழ்நிலையில் அதிகாரத்திற்காக போராடுவதில் இருந்து தொழிலாள வர்க்கம் தடுக்கப்படும் போது, அதன் பேரழிவுகரமான விலைசெலுத்தலுக்கு ஒரு ஆழமான மற்றும் மறக்க முடியாத பாடமாக உள்ளது. இன்று, 1922 ஆம் ஆண்டைப் போலவே, வர்க்கப் போராட்டத்தின் மீதான எதிர்ப்புரட்சிகர தேசியவாத அதிகாரத்துவங்களின் பிடியை நொறுக்குவதே முக்கியமான அரசியல் பணியாகும். சமூக வெட்டுக்கள், போர் மற்றும் பாசிசத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பை முதலாளித்துவத்திற்கு எதிரான சமரசமற்ற போராட்டத்தில் எவ்வாறு ஐக்கியப்படுத்துவது என்பதை அறிந்த கட்சிகளை, அதாவது இத்தாலியிலும் உலகெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டமைப்பதுதான் இதன் பொருளாகும்.

Loading