கோவிட்-19 மறுதொற்றுக்கள் இறப்பு மற்றும் நெடுங்கோவிட்டுக்கான அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

Nature Medicine விஞ்ஞான இதழில் நவம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வு, ஒவ்வொரு கோவிட்-19 மறுதொற்றும் நோயாளிகளுக்கு மொத்த சேதத்தை ஏற்படுத்துகிறது என்றும், அவர்கள் இறக்கும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் மற்றும் ‘நெடுங்கோவிட்’ என்ற பாதுகாப்பு வார்த்தையின் கீழ் குறிப்பிடப்படும் நீண்ட கால தொடர்ச்சியான பாதிப்பை அடையும் அபாயங்களை கணிசமாக அதிகரிக்கிறது என்றும் கண்டறிந்துள்ளது.

“SARS-CoV-2 மறுதொற்றுடன் தொடர்புடைய கடுமையான மற்றும் நோய்க்குப் பிந்தைய கடுமையான விளைவு,” என்ற தலைப்பிலான ஆய்வு, செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல கோவிட்-19 ஆராய்ச்சியாளர் டாக்டர். ஜியாத் அல்-அலி மற்றும் அவரது சகாக்களால் நடத்தப்பட்டது. இது கோவிட்-19 மறுதொற்றுக்களுடன் தொடர்புடைய ஆபத்துகள் பற்றிய முதல் ஆய்வாகும், கடந்த ஆண்டில் அதிகளவு தொற்றும் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு-தவிர்க்கும் தன்மை கொண்ட ஓமிக்ரோன் துணைமாறுபாடுகளினால் பரவிய தொற்றுக்களினால் இது மிகவும் பொதுவாகிவிட்டது. சிங்கப்பூரின் உத்தியோகபூர்வ தரவு, அங்கு நிகழ்ந்த ஓமிக்ரோன் XBB துணைமாறுபாட்டின் சமீபத்திய எழுச்சியின் உச்சத்தில், ஒட்டுமொத்த நோய்தொற்றுக்களில் தோராயமாக 18 சதவீதம் மறுதொற்றுக்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

மற்ற எந்த ஆய்வையும் விட, இந்த ஆய்வறிக்கை அமெரிக்காவில் உள்ள பைடென் நிர்வாகம் மற்றும் சீனாவிற்கு வெளியே உள்ள மற்ற அனைத்து உலக அரசாங்கங்களும் திணித்த ‘என்றென்றும் கோவிட்’ கொள்கையின் திகிலூட்டும் யதார்த்தத்தை அம்பலப்படுத்துகிறது. ‘தொற்றுநோய் முடிந்துவிட்டது,’ என்ற பைடெனின் பொய் பற்றி ஆராய்ந்ததில், ஒவ்வொரு புதிய கோவிட்-19 தொற்றுக்களும் மற்றும் மறுதொற்றுக்களும் மக்கள்தொகையின் பரவலான பிரிவினரை படிப்படியாக கொல்லும் மற்றும் பலவீனப்படுத்தும் என்பதை ஆய்வு தெளிவுபடுத்துகிறது.

ஆசிரியர்கள் தங்கள் கண்டுபிடிப்புக்களை இவ்வாறு சுருக்கமாக குறிப்பிடுகிறார்கள், “முதல் தொற்றுடன் ஒப்பிடும்போது, மறுதொற்றானது இறப்பு… மருத்துவமனையில் சேர்த்தல்… மற்றும் நுரையீரல், இருதயம், இரத்தக்கசிவு, நீரிழிவு, இரைப்பை குடல், சிறுநீரகம், மனநலம், தசைக்கூட்டு மற்றும் நரம்பியல் கோளாறுகள் உள்ளிட்ட பின்விளைவுகளின் கூடுதல் அபாயங்களுக்கு பங்களித்தது. தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல் அபாயங்கள் தெளிவாகத் தெரிந்தன. அபாயங்கள் பற்றி நோயின் கடுமையான கட்டத்தில் மிகவும் பேசப்பட்டாலும், நோய்க்குப் பிந்தைய 6 மாதங்களிலும் அபாயங்கள் தொடர்ந்தன. நோய்த்தொற்று இல்லாத கட்டுப்பாடுகளுடன் ஒப்பிடுகையில், நோய்தொற்றுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூட்டு அபாயங்களும் மறுதொற்றுக்களின் சுமைகளும் அதிகரித்தன.”

படம் 1: அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு, மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், குறைந்தபட்சம் ஒரு பின்விளைவு மற்றும் உறுப்பு அமைப்பில் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவை உள்ளிட்ட அபாயங்களையும் 6 மாதங்கள் வரை நீடிக்கும் அதிகப்படியான சுமையையும் குறிப்பிடுகிறது [Photo by Benjamin Bowe et al / CC BY 4.0]

இந்த ஆய்வின் பிரசுரத்திற்கு முந்தைய பதிப்பு ஜூன் மாதம் வெளியிடப்பட்டபோது, அதன் பயங்கரமான கண்டுபிடிப்புகள் தொற்றுநோயின் நிகழ்ந்து வரும் ஆபத்துக்களை குறைத்துக் காட்டிய பல்வேறு வலதுசாரி பிரமுகர்கள் மற்றும் கொள்கையற்ற விஞ்ஞானிகளால் கண்டனம் செய்யப்பட்டன. இருப்பினும், அதன் அடிப்படை முடிவுகளும் பகுப்பாய்வும் தொழில்முறை மதிப்பாய்வின் புறநிலை செயல்முறையை பாதித்தது, மற்றும் பிரசுரத்திற்கு முந்தைய பதிப்பில் இருந்து மாறாமல் உள்ளது.

மறுதொற்றுக்குப் பின்னர் அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்புகளின் ஆபத்து இரட்டிப்பாகிறது

நெடுங்கோவிட் பாதிப்புகளை ஆவணப்படுத்தும் அவர்களின் முந்தைய ஆய்வுகளைப் போலவே, ஆராய்ச்சி குழு, அமெரிக்க முன்னாள் படைத்துறை வீரர் விவகாரத் துறையின் மகத்தான மின்னணு சுகாதார தரவுத்தளங்களை நம்பியிருந்தது.

இந்த ஆய்வு, ஒருமுறை கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்ட 443,588 நோயாளிகளுடன் 40,947 மறுதொற்று ஏற்பட்ட நோயாளிகளை ஒப்பீடு செய்தது. மறுதொற்றாளர்களில், இரண்டு முறை நோய்தொற்று ஏற்பட்ட 37,997 நோயாளிகள், மூன்று முறை நோய்தொற்று ஏற்பட்ட 2,572 நோயாளிகள், மற்றும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் பாதிக்கப்பட்ட 378 நோயாளிகள் அடங்குவர். அவர்கள் அனைவரும் அவர்களின் கடைசி நோய்தொற்று அல்லது மறுதொற்றுக்குப் பின்னர் 180 நாட்கள் வரை கண்காணிக்கப்பட்டனர், மேலும் இறப்பு உட்பட பல்வேறு உடல்நல விளைவுகள் தொடர்பான அபாயங்கள் மதிப்பிடப்பட்டு ஒப்பிடப்பட்டன.

இந்த ஆய்வில், ஒரு தொற்று ஏற்பட்ட மற்றும் மறுதொற்று ஏற்பட்ட குழுவினரின் சராசரி வயது ஒரேமாதிரி சுமார் 60 ஆக இருந்தது. அதே 180-நாள் கண்காணிப்பிற்குட்பட்ட தொற்று இல்லாதவர்களுக்கான அனைத்து காரணங்களின் இறப்பு விகிதங்களையும் ஆய்வு வழங்கவில்லை என்றாலும், தேசிய சுகாதார புள்ளியியல் மையத்தின் (National Center for Health Statistics-NCHS) வாழ்க்கை அட்டவணைகள், நோய்தொற்றுக்கு முன்னர், 60 வயதுடைய ஒரு நபர், 12-மாத கால கண்காணிப்பில் 1,000 பேருக்கு 11.5 என்ற விகிதத்தில் மரணச் சுமையைக் கொண்டிருந்தார், அதாவது ஒட்டுமொத்த 60 வயதினரில் சுமார் 1.15 சதவீத வயோதிபர்கள் 61 வயதை அடைவதற்கு முன்பே இறந்திருப்பார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

மறுத்தொற்றுக்கள் குறித்த ஆய்வின் தரவுகளின்படி, ஒரே ஒரு முறை கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டவர்களுக்கு, நோய்தொற்றுக்கு பிந்தைய ஆறு மாதங்களில் இறப்புக்கான சுமை 1,000 பேருக்கு 16.77 என்ற விகிதத்தில் இருந்தது. எனவே, ஒருமுறை கோவிட்-19 நோய்தொற்றுக்கு ஆளான ஒருவர் நோய்தொற்றின் கடுமையான கட்டத்திலிருந்து உயிர் பிழைத்திருந்தால், அவர் இறப்பதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கிறது.

இருப்பினும், மறுதொற்றுக்கு ஆளான கோவிட்-19 நோயாளிகளின் இறப்பு சுமை 1,000 பேருக்கு 36.10 என்ற விகிதத்தில் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நோய்தொற்றுக்கு முன்னர் எதிர்பார்க்கப்படும் இறப்பு விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகமாகவும், மற்றும் முதல் நோய்தொற்றுக்குப் பிந்தைய இறப்பு சுமையை விட இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது. சாராம்சமாக, ஒருவர் ஒருமுறை கோவிட்-19 மறுதொற்றால் பாதிக்கப்பட்டாலும், அவரது தற்போதைய வயதைத் தாண்டி பல ஆண்டுகள் வயதாகிவிட்டதற்குச் சமமான பாதிப்பை அவர் அடைவார்.

தடுப்பூசிகள், ‘கலப்பின நோயெதிர்ப்பு சக்தி’ மற்றும் நெடுங்கோவிட்

ஆய்வின் மிகவும் ஆபத்தான அம்சங்களில் ஒன்று, மறுதொற்றுக்கு முன்னர் ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசி அளவுகளைப் பெற்றிருப்பது, நீண்டகால அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு அபாயங்களைக் குறைக்கவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. நோய்தொற்றின் கடுமையான கட்டத்திற்குப் பின்னர் (முதல் 30 நாட்கள்) அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு அபாயங்கள் குறைந்தாலும், மூன்று மாதங்களுக்குப் பின்னர், பகுப்பாய்வின் ஆறு மாத காலப்பகுதி முழுவதும் இறக்கும் அபாயம் அடிப்படைக்கு மேல் உள்ளது.

படம் 2: அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு, மருத்துவமனையில் அனுமதித்தல், குறைந்தபட்சம் ஒரு பின்விளைவு மற்றும் உறுப்பு அமைப்பில் ஏற்படும் பின்விளைவுகள் ஆகிய அபாயங்கள் குறித்து திட்டமிடப்பட்டுள்ளன. ஒப்பிடும்போது, மறுதொற்று ஏற்பட்டவர்களில், தடுப்பூசி போடாதவர்கள், ஒருமுறை தடுப்பூசி போட்டவர்கள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் தடுப்பூசி போட்டவர்களின் விகிதம் முறையே 51.3%, 12.6% மற்றும் 36.2% என்று இருந்தன. ஒப்பிடும்போது, மறுதொற்று ஏற்படாதவர்களில், தடுப்பூசி போடாதவர்கள், ஒருமுறை தடுப்பூசி போட்டவர்கள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் தடுப்பூசி போட்டவர்களின் விகிதம் முறையே 41.1%, 11.7% மற்றும் 47.2% என்று இருந்தன [Photo by Benjamin Bowe et al / CC BY 4.0]

மறுதொற்றுக்களின் கூட்டுச் சேதம் “முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையே கூட தெளிவாகத் தெரிந்தது, இது இயற்கையான நோயெதிர்ப்பு சக்தி (முந்தைய நோய்தொற்றிலிருந்து கிடைத்தது) மற்றும் தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு சக்தி ஆகியவை இணைந்த (ஒரு கலப்பு) சக்தி கூட மறுதொற்றுக்குப் பிந்தைய பாதகமான உடல்நல பாதிப்புகளின் அபாயத்தை குறைக்காது என்பதை பரிந்துரைக்கிறது” என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

அவர்கள் மேலும் இவ்வாறு குறிப்பிட்டனர், “மறுதொற்றின் காரணமான இறப்பின் அதிகரித்தளவிலான அபாயங்கள் மற்றும் பாதகமான உடல்நல விளைவுகளுக்கான அடிப்படை வழிமுறை முற்றிலும் தெளிவாக இல்லை. வைரஸின் முந்தைய வெளிப்பாடு, மறுதொற்றின் அபாயத்தையும் அதன் தீவிரத்தையும் அனுமானமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கலாம்; இருப்பினும், SARS-CoV-2 வேகமாக பிறழ்வடைந்து புதிய மாறுபாடுகளாக, துணைமாறுபாடுகளாக ஒவ்வொரு சில மாதங்களில் உருவெடுத்து பழைய மாறுபாடுகளை மாற்றுகின்றன. குறிப்பாக, ஓமிக்ரோன் மாறுபாட்டின் காரணமான மறுதொற்றின் அபாயம் அதிகமாக உள்ளது, அதாவது முந்தைய நோய்தொற்றுக்களிலிருந்து கிடைத்த நோயெதிர்ப்பு சக்தியைத் தவிர்ப்பதற்கான குறிப்பிடத்தக்க திறனை அது வெளிப்படுத்திக் காட்டியுள்ளது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கண்டுபிடிப்புகள், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் உத்தியோகபூர்வ விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்ட ‘கலப்பின நோயெதிர்ப்பு சக்தி,’ பற்றிய தவறான மற்றும் விஞ்ஞானமற்ற கருத்தாக்கத்தின் மீதான மோசமான குற்றச்சாட்டாகும், இதில் ஓமிக்ரோனால் ஏற்படும் ‘இயற்கை’ நோய்தொற்றுக்கள் கோவிட்-19 நோய்தொற்றை ‘நிரந்தர’ நோயாக மாற்றும் ஒரு நேர்மறையான நன்மை இருப்பதாக வலியுறுத்தப்படுகிறது.

கடந்த ஜனவரியில், டாக்டர். அந்தோனி ஃபவுசி, “ஓமிக்ரோன் அனைவரும் எதிர்பார்க்கும் நேரடி வைரஸ் தடுப்பு மருந்தாக இருக்கப் போகிறதா இல்லையா என்பது ஒரு வெளிப்படையான கேள்வியாகும்” என்று கூறினார். இந்தப் பொய்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) தவிர, அனைத்து அரசியல் போக்குகள் மற்றும் செய்தி ஊடகங்களால் சவால் செய்யப்படவில்லை.

குறிப்பிடத்தக்க வகையில், இதயம், சிறுநீரகம், நுரையீரல், மூளை, மற்றும் பொது அமைப்பு போன்ற பல்வேறு உறுப்புகளை பாதிக்கும் நீண்டகால பின்விளைவுகள் அனைத்தும் மறுதொற்றுக்குப் பிந்தைய ஆறு மாத கால மதிப்பீட்டில் தொடர்ந்து அதிகரித்திருந்ததை ஆய்வு கண்டறிந்துள்ளது. கூடுதலாக, மோசமான ஆரோக்கியத்தின் இந்த சுமை முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது மறுதொற்றுகளுக்கு இடையே அடுத்தடுத்து கூட்டாக அதிகரித்திருந்தது. குறிப்பாக, நுரையீரல், இதயம் மற்றும் குருதி நாள அமைப்பு ஆகியவை மறுதொற்றுக்களால் மிகவும் பாதிக்கப்பட்டன, இது நோயின் கணிசமான சுமைக்கு வழிவகுத்தது.

படம் 4: SARS-CoV-2 மறுதொற்றால் உறுப்பு அமைப்புகளுக்கு ஏற்படும் ஆபத்து மற்றும் அவற்றின் 6 மாத கால பின்விளைவுகளின் சுமைக்கும் மற்றும் மறுதொற்றின் கடுமையான மற்றும் பிந்தைய கடுமையான கட்டங்களை உட்படுத்தும் 30-நாள் இடைவெளிகள் கொண்ட மறுதொற்று ஏற்படாத காலத்திற்கும் இடையேயான ஒப்பீடு [Photo by Benjamin Bowe et al / CC BY 4.0]

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், டாக்டர் அல்-அலியும் அவரது குழுவும், தடுப்பூசி போடப்பட்ட பின்னர் திடீர் நோய்தொற்று வெடிப்புக்குள்ளான மக்களுக்கு நெடுங்கோவிட் ஏற்பட 15 சதவீதம் குறைவான வாய்ப்பு உள்ளது என்றும், ஒருபோதும் நோய்தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் இவர்களை ஒப்பிடும்போது இவர்களுக்கு இறப்பு மற்றும் உறுப்பு சேதம் ஏற்படுவதற்கான அதிகரித்தளவிலான அபாயம் உள்ளது என்பதை கண்டறிந்தனர்.

ஆசிரியர்கள் தங்கள் மறுதொற்றுக்களின் ஆய்வில், “முதல் நோய்தொற்றின் விளைவாக ஏற்படும் உடல்நலக் குறைபாடு” மறுதொற்றுக்களால் ஏற்படும் மிக மோசமான உடல்நல விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கருதுகின்றனர். உண்மையில், கோவிட்-19 நோய் ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கக்கூடும் என்றும், கோவிட்-19 அல்லது பிற வைரஸ்களால் ஏற்படும் மறுதொற்றுக்கள் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. ஒருவரின் தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல், SARS-CoV-2 வைரஸால் ஏற்படும் நோய்தொற்று, ஒருவரது ஏற்கனவே உள்ள உடல் ஆரோக்கிய நிலையின் விளைவாக ஏற்படுகிறது என்பதற்கு இந்த ஆய்வுகள் உறுதியான ஆதாரங்களை வழங்குகின்றன.

The Tyee இன் சமீபத்திய அறிக்கை, இந்தக் கவலைகளுக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானத்தையும், நோய் எதிர்ப்பு நிபுணர் டாக்டர் அந்தோனி லியோனார்டியின் முக்கியப் பங்கையும் மதிப்பாய்வு செய்கிறது, அவர் ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ மூலோபாயத்தின் ஆபத்துகள் குறித்து, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து தொடர்ந்து பேசினார். இறுதியில் இங்கு நடத்தப்படும் விளையாட்டின் நோக்கம், வைரஸை சமூகத்தின் ஊடாக வெடித்துப் பரவ அனுமதிப்பதால் உருவெடுக்கும் அடுத்தடுத்த நோய்தொற்று அலைகளால், மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொது சுகாதார அபாயத்தை ஏற்படுத்துவதே.

முடிவுரை

மனிதகுலத்திற்கு மேலாக வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களை முன்னிலைப்படுத்தும் ‘என்றென்றும் கோவிட்’ கொள்கைக்கு எதிராக பல விஞ்ஞானிகள் வாதிட்ட முன்னெச்சரிக்கை கொள்கையை எதிர்மறையாக சரிபார்ப்பதில் மறுதொற்று ஆய்வின் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கோவிட் நோயை எந்த வகையிலும் காய்ச்சலுடன் ஒப்பிட முடியாது என்ற முக்கிய புள்ளியையும் அவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. உண்மையில், SARS-CoV-2, ஆபத்தானதாக இல்லாவிட்டால், நோய்தொற்றாளர்களின் ஆரோக்கியத்திற்கு நீண்டகால விளைவுகளுடன் கூடிய பல உறுப்பு சேதங்களுக்கு வழிவகுக்கும், மேலும் ஒவ்வொரு மறுதொற்றின்போதும் இந்த அபாயங்களை அதிகரிக்கும்.

கோவிட்-19 ஐ தணிப்பதற்கான அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் நனவாக நிராகரிப்பதன் காரணமாக, சமூகம் பெருகிய முறையில் நோயெதிர்ப்பு-தவிர்க்கும் மாறுபாடுகளின் தடையற்ற பரிணாமத்தை எதிர்கொள்கிறது, இது மறுதொற்றுக்களின் அபாயத்தை சீராக அதிகரிக்கிறது. நோய்தொற்றின் ஒவ்வொரு அலையும், பொதுமக்கள் இன்னும் காண முடியாத, கோவிட் அல்லாத அதிகப்படியான இறப்புகளை மேலும் தூண்டும், மேலும் தொற்றுநோயின் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் உலகளவில் காலடியின் கீழ் கொண்டுவரப்பட்ட பொது சுகாதார அமைப்புகளை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும்.

படம் 5: ஆபத்து மற்றும் மருத்துவமனைகளில் அனுமதித்தல் குறித்த 1 ஆண்டு கால அதிகப்படியான சுமை, உறுப்பு அமைப்பில் ஏற்படும் குறைந்தது ஒரு பின்விளைவு மற்றும் பின்விளைவுகள் குறித்து திட்டமிடப்பட்டுள்ளன. ஒருமுறை ஏற்பட்ட SARS-CoV-2 நோய்தொற்றுக்கள் (n=234,990), இருமுறை ஏற்பட்ட SARS-CoV-2 நோய்தொற்றுக்கள் (n=28,509), மற்றும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் ஏற்பட்ட SARS-CoV-2 நோய்தொற்றுக்கள் (n=1,023) ஆகியவற்றுக்கும் தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கும் (n=5,334,729), குறிப்பாக ஓமிக்ரோன் அலைக்கு முன் முதல் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கும் இடையேயான ஒப்பீடுகளின் முடிவுகள் [Photo by Benjamin Bowe et al / CC BY 4.0]

கோவிட்-19 ஆல் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை தொற்றுநோய்களின் காலத்தில் குறைவாக இருப்பதாக பலமுறை கூறப்பட்டாலும், பெரு, இங்கிலாந்து, வடக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் பதிவான அதிகப்படியான கோவிட் அல்லாத இறப்புகள் தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தை விட 5 முதல் 20 சதவீதம் வரை உள்ளன. இவை பெருநிறுவன ஊடகங்களால் குறிப்பிடப்படாத வானளவு உயர்ந்த புள்ளிவிபரங்களாகும்.

இந்த கூடுதல் இறப்புகள் பற்றி கடந்த மூன்று ஆண்டுகளின் பயங்கரமான அனுபவங்களால் மட்டுமே விளக்கப்பட முடியும், இதில் மக்கள் தம்மைத் தாமே தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மற்றும் பாரிய நோய்தொற்று, இறப்பு மற்றும் பலவீனம் ஆகியவற்றின் முடிவில்லாத அலைகளின் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

பல அம்சங்களில், டாக்டர் அல்-அலி மற்றும் அவரது சகாக்களின் அறிக்கைகள் அவர்களுக்கு ஒரு சான்று தரத்தைக் கொண்டுள்ளன. அவை உலகளவில் ஆளும் உயரடுக்கினரால் நிகழ்த்தப்பட்ட ‘சமூக படுகொலை’ குற்றத்தின் தடயவியல் பகுப்பாய்வாக செயல்படுகின்றன. இறந்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அல்லது நோயை உன்னிப்பாக விவரிப்பதில் பிரேத பரிசோதனை அறிக்கை பிரிக்கப்பட்டு முறையானதாக இருந்தாலும், ஒரு விசாரணையில், ஒருமுறை அவற்றை பற்றி உணர வைக்கப்பட்ட உண்மைகளின் உணர்ச்சியற்ற மற்றும் புறநிலையான அறிமுகத்தை கவனிக்காமல் இருக்க முடியாது.

இந்த சமூக குற்றத்தின் குற்றவாளிகளான கொள்கை வகுப்பாளர்கள், உலகளவில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்ததற்கும், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் நெடுங்கோவிட் நோயால் முடமானதற்கும் பொறுப்பாக்கப்பட வேண்டும். அடிப்படையில், தொற்றுநோயின் தற்போதைய பேரழிவானது உலக முதலாளித்துவத்தின் மீதான மறுக்க முடியாத குற்றச்சாட்டாகும், இது அனைத்து சமூகத் தேவைகளையும் ஒரு கொள்ளையடிக்கும் நிதிய தன்னலக்குழுவின் இலாப நலன்களுக்கு கீழ்ப்படுத்துகிறது. இந்த காலாவதியான அமைப்பானது, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ஆரோக்கியம் மற்றும் கண்ணியமான வாழ்க்கை நிலைமைகளை உறுதிப்படுத்தும் வகையில் உலக பொருளாதாரத்தை மறுசீரமைக்கக்கூடிய உலக சோசலிச சமூகத்தால் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

Loading