பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் அதி-வலது பிரதிநிதி, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தாக்குதலை தொடங்கினார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நவம்பர் 3 அன்று, அடிபணியா பிரான்ஸ் (La France Insoumise — LFI) கட்சியின் பிரதிநிதி கார்லோஸ் மார்டென் பிலோங்கோ (Carlos Martens Bilongo), பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் தேசிய பேரணியின் (National Rally — RN) பிரதிநிதி பியர் டு ஃபோர்னா (Pierre de Fournas) இன் இனவெறி தாக்குதலுக்கு உட்பட்டார். குடியேற்றம் பற்றிய விவாதத்தின் போது பிலோங்கோ பேசுகையில்,'அவர் ஆபிரிக்காவுக்கு திரும்பலாம் [Qu’il retourne on Afrique].” என்று ஃபோர்னா கூறினார்.

டு ஃபோர்னாவின் கூற்றுக்கு மாறாக, கறுப்பராக இருக்கும் பிலோங்கோ உண்மையில் பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள வில்லியே-லு-பெல் நகரில் பிறந்தார். பிலோங்கோ ஒரு முன்னாள் ஆசிரியர் மற்றும் LFI இன் உறுப்பினர். ஜூன் 2022 சட்டமன்றத் தேர்தலில் LFI தலைமையிலான புதிய மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஒன்றியம் (NUPES) கூட்டணியின் வேட்பாளராக Val d'Oise இன் 8வது தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டு ஃபோர்னாவின் கருத்துக்களுக்குப் பின்னர் சட்டமன்றம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டது. டு ஃபோர்னாவின் வெளியேற்றத்திற்கான அழைப்புகள் இருந்தபோதிலும், அவர் ஒரு இலேசான தண்டனையுடன் தப்பினார். நவம்பர் 4 அன்று, சட்டமன்றம் பிரதிநிதிக்கு 15 நாட்களுக்கு தடை விதிப்பதாகவும், இரண்டு மாதங்களுக்கு அவரது பாராளுமன்ற கொடுப்பனவில் பாதியை நிறுத்தி வைக்கவும் வாக்களித்தது. RN இன் பிரதிநிதிகள் தவிர அனைத்து பிரதிநிதிகளும் தடைகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

டு ஃபோர்னாவின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, பிலோங்கோ ஒரு அறிக்கையில், 'இந்த வெறுக்கத்தக்க கோபாவேச தாக்குதல் RN இன்னும் நம் நாட்டிற்கு பிரதிநிதித்துவப்படுத்தும் ஆபத்தின் முகமூடியை உயர்த்துகிறது.' LFI தலைவர் ஜோன் லூக் மெலோன்சோன் (Jean Luc Mélenchon) RN ஐ, 'அவர்கள் எப்போதும் இனவாதிகள், பாசிஸ்டுகள்' என்று கண்டித்தார். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இந்த 'சகிக்க முடியாத வார்த்தைகளால்' தன் 'மனம் புண்பட்டதாக' கூறினார்.

முதலாளித்துவ அரசியல் வர்ணனையாளர்கள் இந்த நிகழ்வை, RN தலைவர் மரீன் லு பென் இன் 20 ஆம் நூற்றாண்டின் பாசிசத்துடன் அதன் வரலாற்று மற்றும் அரசியல் உறவுகளை குறைத்து மதிப்பிடுவதன் மூலம் தனது தீவிர வலதுசாரி கட்சியை 'கொடூரத்தனம் அற்றதாக' (de-demonize) காட்டச் செய்யும் முயற்சிகளுக்கு ஒரு அடி என்று முன்வைத்தனர்.

பிரெஞ்சு தீவிரத் தலைவர் மரீன் லு பென், பிப்ரவரி 5, 2022 சனிக்கிழமை, கிழக்கு பிரான்சின் ரான்ஸில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகிறார் [AP Photo/Michel Euler]

நவம்பர் 3 விவாதம், 230 புலம்பெயர்ந்தோருடன் மத்தியதரைக் கடலில் சிக்கித் தவித்த SOS மத்திய தரைக்கடல் மீட்புக் கப்பலான ஓஷன் வைக்கிங் (Ocean Viking) இன் தலைவிதியைப் பற்றியது. டு ஃபோர்னா தனது கருத்துக்கள் உண்மையில் ஓஷன் வைக்கிங்கில் இருப்பவர்களை குறிப்பிடுவதாகக் கூறுகிறார். ஒரு ட்விட்டர் பதிவில், டு ஃபோர்னா 'உண்மைகளின்படி முற்றிலும் நிரபராதி' என்று கூறினார், ஆனால் 'நிறுவனத்தை [தேசிய சட்டமன்றத்தை] மதிக்க வேண்டும், நான் அதற்குக் கீழ்ப்படிகிறேன்' என்று அவர் முடிவை ஏற்றுக்கொண்டார்.

மரீன் லு பென், டு ஃபோர்னாவின் கூற்றை ஆதரித்தார், அவருடைய கருத்துக்களை 'கவனக்குறைவான தன்மை' என்று விவரித்தார் மற்றும் RN இன் எதிப்பாளர்களின் 'முரட்டுத்தனமான' வாதத்தைக் கண்டித்தார்.

டு ஃபோர்னாவின் இனவெறிச் சொல்லாட்சியின் பதிவை நவ-பாசிஸ்டுகள் பாதுகாப்பது அரசியல் ரீதியாக இழிவானது. 2019 ஆம் ஆண்டில், பிரான்சில் எந்த நகரங்கள் மிகவும் மாறுபட்டவை என்ற ஒரு ஆபிரிக்க மனிதனின் ட்வீட்டுக்கு, அவர் 'கறுப்பின மக்களுடன் இருக்க விரும்பினால், அவர் ஆபிரிக்காவுக்கு செல்லலாம்' என்று அவரிடம் கூறுவதன் மூலம் டு ஃபோர்னா பதிலளித்தார். அவர் ஒரு பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக இனவெறி தாக்குதலை செய்யவில்லை ஆனால் புவி வெப்பமடைதல் மற்றும் லிபியா மற்றும் சஹேல் மீதான பிரான்சின் சட்டவிரோத போர்களின் பேரழிவுகரமான தாக்கத்திலிருந்து தப்பியோடிய பாதுகாப்பற்ற அகதிகளுக்கு எதிராக என்று கூறுவது அவரது வாதமாகும்.

டு ஃபோர்னாவின் கருத்துக்கள், பெருகிய முறையில் முழு பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தினதும் குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இனவெறி பரிணாம வளர்ச்சியின் விளைவாகும், இது மெலன்சோனின் LFI முதல் தீவிர வலது வரையிலான ஒவ்வொரு ஸ்தாபகக் கட்சியாலும் ஆதரிக்கப்படுகிறது.

டு ஃபோர்னாவின் சொல்லாட்சியில் ஜனாதிபதி மக்ரோனின் சொந்த 'குற்றம்' பாசாங்குத்தனத்துடன் காட்டப்பட்டது. டு ஃபோர்னா பிலோங்கோவிடம் வார்த்தைகளில் கூறியதை, மக்ரோனின் அரசாங்கம் புலம்பெயர்ந்தோர் மற்றும் பிரெஞ்சு முஸ்லிம்களுக்கு எதிராக நடைமுறையில் கொண்டுவந்தது. லு பென்னுக்கு எதிராக 'குடியரசின் மதிப்புகளை' பாதுகாப்பதைப் பற்றி பிரச்சாரம் செய்வதன் மூலம் இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்ற போதிலும், அவரது அரசாங்கத்தின் 2021 இனவெறி 'பிரிவினைவாத எதிர்ப்பு' (anti-separatist) சட்டம் பிரான்சில் உள்ள முஸ்லிம்களை சட்டபூர்வமாக இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் தீவிர வலதுசாரிகளின் இலக்கை நோக்கி கணிசமான வழியில் சென்றது.

ஓஷன் வைக்கிங் கப்பல் மீட்பு தொடர்பாக சட்டசபை விவாதித்துக் கொண்டிருந்தது என்பது மக்ரோனின் தீய புலம்பெயர் எதிர்ப்புக் கொள்கையின் மற்றொரு குற்றச்சாட்டாகும். ஓஷன் வைக்கிங்கின் 230 பயணிகள் மத்தியதரைக் கடலில் சிக்கித் தவித்தனர், அதே நேரத்தில் பிரெஞ்சு மற்றும் இத்தாலிய அரசாங்கங்கள் கப்பலை கப்பல்துறைக்கு அனுமதிக்க மறுத்துவிட்டன. கப்பல் இறுதியாக நவம்பர் 11 அன்று துலோனில் தரையிறங்கியது, அது 'மருத்துவ மதிப்பாய்வுக்கு' மட்டுமே.

சர்வதேச சட்டத்தின்படி அகதிகளுக்கு புகலிடம் வழங்குவதற்குப் பதிலாக, டு ஃபோர்னாவின் தாக்குதலுக்கு இணங்க, மக்ரோன் அரசாங்கம் அவர்களை 'ஆபிரிக்காவுக்கு திரும்ப' செய்வதற்கான தனது சொந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

அவரது இடதுசாரி வாய்வீச்சு இருந்தபோதிலும், மெலோன்சோன் அரசின் குடியேற்ற எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு பயனுள்ள ஆதரவை வழங்கியுள்ளார். பல ஆண்டுகளாக அவர் பிரெஞ்சு முஸ்லிம்களின் முக்காடு அணியும் உரிமை மீதான பிரெஞ்சு அரசின் தாக்குதலுக்கு ஆதரவளித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில், சட்டமன்றத்தின் வழியாக நிறைவேற்றப்பட்ட பிரிவினைவாத எதிர்ப்புச் சட்டத்தின் முக்கியமான பிரிவு 4 க்கான வாக்கெடுப்பில் LFI வாக்களிக்கவில்லை. மாலி மற்றும் லிபியாவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் தலையீடுகளையும் மெலோன்சோன் ஆதரித்துள்ளார்.

பிரான்சில் தீவிர வலதுசாரி அரசாங்கத்திற்கு ஆளும் வர்க்கம் பரந்த தயாரிப்புகளை செய்து வரும் நிலையில், டு ஃபோர்னாவின் கருத்துக்கள் மீதான அவதூறு வந்துள்ளது. அரச எந்திரம் மற்றும் இராணுவத்தின் பெரும் பிரிவுகள் பிரான்சில் பாசிசத்தை திரும்ப கொண்டுவர முயல்கின்றன. இந்த ஆண்டு, பாசிச வர்ணனையாளரும் 'சிறந்த மாற்று' (“great replacement”) சதி தத்துவத்தின் வக்கீலுமான எரிக் செம்மூர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். செம்மூர் இன் ஜனாதிபதி முயற்சியை ஆதரித்த Valeurs actuelles இதழில், பிரெஞ்சு இராணுவ அதிகாரிகள் பிரான்சிற்குள் வரவிருக்கும் 'உள்நாட்டுப் போரை' நடத்தத் தயாராகி வருவதைப் பற்றி எழுதினர், அதில் இறப்புகள் 'ஆயிரக்கணக்கில் கணக்கிடப்படும்' என்றனர்.

கோடீஸ்வரர்களுக்கு சொந்தமான ஊடகங்களில், பரவலாக வெறுக்கப்பட்ட மக்ரோன் அரசாங்கத்திற்கு ஒரே சாத்தியமான மாற்றாக, மரீன் லு பென் மற்றும் அவரது RN கட்சி தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. RN இன் கொள்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பு இருந்தபோதிலும், மக்ரோன் மீதான பரவலான வெறுப்பு இந்த ஏப்ரல் ஜனாதிபதித் தேர்தலில் லு பென் 41.45 சதவீத வாக்குகளை பெற அனுமதித்தது, இது பிரான்சில் தீவிர வலதுசாரி வேட்பாளருக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச வாக்குகளாகும். இது அமெரிக்காவில் ட்ரம்ப் மற்றும் மிக சமீபத்தில் இத்தாலியில் முசோலினியின் அரசியல் வழித்தோன்றலான மெலோனியின் அதிகாரத்திற்கு எழுச்சி கண்ட, ஒரு சர்வதேச நிகழ்வுப்போக்கின் ஒரு பகுதியாகும்.

ஐரோப்பா முழுவதும் தீவிர வலதுசாரிகளின் வெற்றி, முதன்மையாக ஆளும் ஸ்தாபகம் 'இடது' என்று பொய்யாக ஊக்குவிப்பவர்களின் கோழைத்தனம் மற்றும் திவால்நிலையின் விளைவாகும். மெலோன்சோன், RN ஐ 'இனவாதிகள்' மற்றும் 'பாசிஸ்டுகள்' என்று கண்டனம் செய்த போதிலும், பிரான்சில் தீவிர வலதுசாரிகளால் ஏற்படும் ஆபத்தை பிலோங்கோ ஒப்புக் கொண்டபோதிலும், LFI மற்றும் NUPES கூட்டணி ஆகியவை நவ-பாசிச மற்றும் இராணுவ சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு முற்றிலும் விரோதமாக உள்ளன.

சர்வதேச அளவில் உள்ளதைப் போலவே, தீவிர வலதுசாரிக் கொள்கைகள் பிரான்சிலும் மிகவும் செல்வாக்கற்றவை. பிரெஞ்சு பொதுமக்கள் தீவிர வலதுசாரிக் கொள்கைகளை ஆதரிக்கவில்லை, பெரும்பான்மையானவர்கள் இனவெறியை வெறுக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, 2021 ஹாரிஸ் இன்டராக்டிவ் கருத்துக் கணிப்பில் 89 சதவீத பிரெஞ்சு மக்கள் பணியிடத்தில் பிரெஞ்சு நாட்டவர் அல்லாதவர்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்த்தனர், இது லு பென்னின் 2022 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் முதன்மைக் கொள்கையாகும்.

எவ்வாறாயினும், அதன் சொந்த பிரதிநிதிகள் இனவெறி தாக்குதல்களுக்கு பலியாகும்போது கூட, LFI தீவிர வலதுசாரிகளுக்கு முன்னால் சிரம் தாழ்த்துகிறது. 2022 ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் 8 மில்லியன் மக்கள் மெலோன்சோனுக்கு வாக்களித்திருந்தாலும் கூட, நவ-பாசிச மற்றும் மக்ரோனின் பாசிசக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில், பரந்த தொழிலாள வர்க்கம் ஒருபுறம் இருக்கட்டும், அதன் சொந்த ஆதரவாளர்களை அணிதிரட்டக் கூட அவர் எதுவும் செய்யவில்லை.

தேசிய சட்டமன்றத்தில் டு ஃபோர்னாவின் கருத்துக்கள், RN மட்டுமல்ல, முழு ஆளும் வர்க்கத்திலும் இனவெறி மற்றும் பாசிசவாத அணுகுமுறைகள் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதற்கான மேலதிக அறிகுறியாகும். ஆளும் வர்க்கத்தின் தீவிர வலதுசாரிகளின், இனவாதம், மற்றும் அனைத்து வகையான மதவெறி ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு எதிராக, ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்தும் அளவுக்கு சக்திவாய்ந்த ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே. LFI, தனது சொந்த உறுப்பினர் மீதான இந்த தாக்குதலுக்கு குறிப்பிடத்தக்க பதிலடி கொடுக்க மறுத்தது, பாசிசத்தின் எழுச்சிக்கு எதிரான போராட்டத்திற்கு போலி-இடது கட்சிகளில் இருந்து அரசியல் முறிவும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலும் தேவை என்பதை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Loading