அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் புவிசார்அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஜி20 ஒன்றுகூடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2008 உலகளாவிய நிதி நெருக்கடியை அடுத்து 2009 இல் ஜி20 அமைப்பு முக்கிய சர்வதேச பொருளாதார பேரவையாக முன்னெடுக்கப்பட்டதற்குப் பின்னர், இந்த மிக மோசமான உலகளாவிய பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில், இந்த முறை இந்தோனேசியாவின் பாலியில் ஜி20 உச்சிமாநாடு நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு துறையிலும் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன. உலகளாவிய பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாதளவில் அதன் அதிகபட்ச மட்டத்தில் உள்ளது. அமெரிக்கா உட்பட அதிக எண்ணிக்கையிலான முக்கிய பொருளாதாரங்களில் மந்தநிலை பெருகி வருகிறது. மத்திய வங்கிகள் நாணயக் கட்டுப்பாட்டுக் கொள்கையை கடுமையாக்கி வருவதால் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. ஆழமடைந்து வரும் உணவு நெருக்கடி மில்லியன் கணக்கான மக்களை பட்டினியில் தள்ளி வருகிறது.

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக நடந்து வரும் அமெரிக்கா தலைமையிலான போர், அதிகரிக்கப்பட்ட இராணுவச் செலவுகளுடன் சேர்ந்து, பணவீக்கச் சுழற்சியை அதிகரிக்கச் செய்கிறது. அதேவேளையில் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களும் மோதல்களும் பெருகி வரும் உலகளாவிய பொருளாதார பிரச்சினைகளுக்கு எந்தவித ஒருங்கிணைந்த விடையிறுப்பையும் மேற்கொள்வதை சாத்தியமற்றதாக்குகின்றது.

சர்வதேச நாணய நிதிய நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா (Kristalina Georgieva) நேற்று வழங்கிய ஓர் உரையில், மோசமடைந்து வரும் இந்தக் கண்ணோட்டத்தைச் சுட்டிக் காட்டினார்.

'மீண்டு வருவதற்கான கடந்தாண்டு நம்பிக்கையின் அறிகுறிகள், கோவிட் காரணமாகவும், உக்ரேன் போர் மற்றும் எல்லா கண்டங்களிலும் நிலவும் காலநிலை மாற்ற பேரழிவுகளாலும், உலகப் பொருளாதாரத்தில் ஓர் எதிர்பாரா வளர்ச்சிக் குறைவாக மாறிவிட்டன” என்றார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை கூறிய கருத்துக்களில், இந்த இருண்ட காட்சியைப் பார்க்கையில் 'நாம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்க வேண்டிய இந்த மிக முக்கிய வேளையில் — அதிகரித்த பிளவுகளை நோக்கிய போக்கு இன்னும் அதிகமாக கவலைப்படுத்துகிறது. இதன் விளைவாக மிகவும் வறிய மற்றும் பாதுகாப்பற்ற ஓர் உலகை நோக்கி நாம் தூக்கத்தில் நடப்பதைப் போல சென்று கொண்டிருக்கிறோமோ என்று எனக்குக் கவலையாக உள்ளது” என்று அவர் கூறினார்.

ஆழமடைந்து வரும் மந்தநிலை போக்குகள் சர்வதேச நாணய நிதியத்தின் மிகவும் சமீபத்திய பொருளாதார அறிக்கைகளில் எடுத்துக் காட்டப்படுகின்றன. 2023 இல் உலகளாவிய வளர்ச்சி வெறும் 2.7 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று அது எதிர்பார்க்கிறது. அடுத்தடுத்து இரண்டு காலாண்டு பொருளாதாரச் சரிவுகள், அதாவது மந்தநிலைக்கான ஒரு தொழில்நுட்ப வரையறையான இதை, 72 நாடுகளில் 31 நாடுகளது பொருளாதாரங்கள் பதிவு செய்யும் என்று அது எதிர்பார்க்கிறது.

உலகின் முக்கிய பொருளாதாரங்கள் இந்தப் போக்கின் மையத்தில் உள்ளன. இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு காலாண்டுகள் பொருளாதார சரிவைப் பதிவு செய்த பின்னர், அமெரிக்கப் பொருளாதாரம் இந்த மூன்றாம் காலாண்டில் விரிவடைந்தது என்றாலும் உயர் தொழில்நுட்ப தொழில்துறைகளில் நடந்து வரும் பாரிய பணிநீக்க அலையால் இதே போக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் யூரோ மண்டலத்திற்கான S&P குளோபல் பங்குச் சந்தையின் அக்டோபர் மாதத்திற்கான நுகர்வு மேலாண்மை குறியீடுகள் மோசமான சரிவைக் காட்டின. புதிய கொள்முதல் கோரிக்கைகளுக்கான உலகளாவிய குறியீடு, இந்தப் பெருந்தொற்று தொடங்கிய 2020 இன் தொடக்கத்திற்குப் பிந்தைய அதன் மிகக் குறைந்த மட்டத்திற்குச் சரிந்தது.

பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி, 'பொருளாதார வல்லுநர்கள் பணக்கார நாடுகளுக்கான 2023 வளர்ச்சி பற்றிய முன்கணிப்புகளை மறுபரிசீலனை செய்து மாற்றி வருகிறார்கள், ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரிட்டனில் உற்பத்தி வீழ்ச்சி இருக்குமென எதிர்பார்க்கிறார்கள்.'

2008 நெருக்கடிக்குப் பின்னர், சீனா மிகப் பெரியளவில் ஊக்கப்பொதி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவை உலகின் பல பகுதிகளுக்கும், குறிப்பாக வறிய நாடுகளுக்கும், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற முக்கிய பண்டங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கும் பொருளாதார 'அதிர்ச்சி உறிஞ்சிகளாக' செயல்பட்டன.

இது திரும்பவும் நடக்காது. ஏனென்றால் சீன வளர்ச்சி மூன்று தசாப்தங்களில் அதன் மிகக் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளது.வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தவாறு, நேற்று வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் 'நிர்வாகக் குழுவில் பொருளாதார செயல்பாடு மெதுவாகி' இருப்பதைக் காட்டியது.

'தொழிற்சாலை உற்பத்தி மெதுவாகி விட்டதாலும், நில-கட்டிட முதலீடுகள் திரும்பப் பெறுவது வேகமாக நடந்து வருவதாலும் சில்லறை விற்பனை ஐந்து மாதங்களில் முதன்முறையாக எதிர்பாராதளவில் சுருங்கி விட்டது.'

இந்த ஆண்டுக்கான உத்தியோகபூர்வ வளர்ச்சி விகிதம் வெறும் 5.5 சதவீதமாக உள்ளது. இது 1990 களின் முற்பகுதியில் இருந்து மிகக் குறைந்த அளவாகும். ஆனால் பொருளாதாரம் இந்தாண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கு 3 சதவீத ஆண்டு விகிதத்தில் மட்டுமே விரிவடைவதால் அது இன்னும் குறையக் கூடும்.

அமெரிக்காவின் வர்த்தகப் போர் நடவடிக்கைகள் இந்த வளர்ச்சிக் குறைவைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்துடன் சீனாவுக்கான மின்னணு நுண்தகடுகள் ஏற்றுமதிகள் மீதான தடைகள் 2023 க்கான வளர்ச்சி விகிதத்தில் கால் சதவீதப் புள்ளியைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் கட்டவிழ்த்து விட்டு வரும் வர்க்கப் போர் —அதாவது, கூலி அதிகரிப்புக் கோரிக்கைகளை முறியடிப்பதற்காக மிக வேகமாக நடத்தும் வட்டி விகித அதிகரிப்பானது— உலகளாவிய பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்புமுறை எங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இதன் விளைவாக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பது, அடிப்படை அத்தியாவசிய பண்டங்களின் விலையை உள்நாட்டு நாணயங்களில் அதிகரிப்பதால், உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது.

உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஏப்ரலில் அதிகரித்த அளவில் இருந்து குறைந்திருந்தாலும், உணவு விலை பணவீக்கம் 'குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளிலும் மற்றும் அதிக வருமான நாடுகளிலும் ஏறக்குறைய தொடர்ந்து அதிகமாக உள்ளது' என்று உலக வங்கி திங்களன்று வெளியிட்ட அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

கடந்த மாதம், அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மதிப்பு குறைந்ததால், எரிபொருள் எண்ணெய் இறக்குமதி செய்யும் ஏழை நாடுகளில் கிட்டத்தட்ட 60 சதவீத நாடுகள் இந்தாண்டு உள்நாட்டு எண்ணெய் விலை அதிகரிப்பைக் கண்டன. இதில் 90 சதவீத நாடுகள் 'அமெரிக்க டாலர் உயர்வுடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு நாணய அடிப்படையிலான கோதுமை விலைகளில் பெரும் அதிகரிப்புகளை' அனுபவித்து வருகின்றன.

வட்டி விகிதங்களின் அதிகரிப்பும் மற்றும் டாலர் அடிப்படையில் திரும்பச் செலுத்த வேண்டிய கடன்களின் அதிகரிப்பும் ஏற்கனவே இலங்கை போன்ற நாடுகளை திவால்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளன. இவை மிகப்பெரிய சர்வதேச விளைவுகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறும் உள்ளது.

பாலி உச்சி மாநாடு பற்றிய நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று பின்வருமாறு குறிப்பிட்டது: 'அமெரிக்க டாலர் வலுவடைவது வளரும் பொருளாதாரங்களின் கடன் சுமைகளை மோசமாக்கி வருகிறது. இது நாடுகள் கடன் செலுத்தவியலாத நிலையைக் காட்டுத்தீ போல உலக நிதி அமைப்புமுறைக்குள் பரப்பும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.”

அதிக வட்டி விகித முறையானது ஏற்கனவே உலக நிதிய அமைப்பு முறையின் இதயத்தானத்திலேயே கொந்தளிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் மாத இறுதியில் பிரிட்டன் பத்திரச் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள், கடந்த வாரம் கிரிப்டோ நாணய பங்குச்சந்தை FTX இன் முறிவு, உலகளாவிய நிதிய அமைப்புமுறையின் அடிப்படையில் 24 ட்ரில்லியன் டாலர் அரசு நிதித்துறை பத்திரச் சந்தை, மார்ச் 2020 இல் உறைந்த போது ஏற்பட்ட சரிவுகள் அளவுக்குப் பணப்புழக்க மட்டங்கள் சரிந்துள்ளன என்று அதிகரித்து வரும் எச்சரிக்கைகள் ஆகிய அனைத்தும் ஒரு நிதி நெருக்கடி ஒன்றுகூடி வருவதற்கான அறிகுறிகளாக உள்ளன.

இந்த மோசமடைந்து வரும் கொந்தளிப்புக்கு மத்தியில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான போர் மற்றும் சீனாவுடனான ஒரு மோதலுக்கு அது தீவிரப்படுத்தி உள்ள இராணுவ மற்றும் பொருளாதார தயாரிப்புகள் ஆகியவற்றின் விளைவாக பிரதான சக்திகளுக்கு இடையே பிளவுகள் ஆழமடைந்து வருகின்றன என்பது ஒரு மிக முக்கிய அரசியல் காரணியாகும்.

பைடெனுக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பு உட்பட சமீபத்திய நாட்களில் என்ன தந்திரோபாய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் யுரேஷிய பெருநிலப் பகுதி மீது அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்துவதற்கான மூலோபாயம் அப்படியே தான் உள்ளது.

2009 ஜி20 கூட்டத்தில், கொள்கை ஒருங்கிணைப்பு மீது சில உடன்பாடு இருந்தது. இந்தக் கூட்டத்தில், ஓர் இறுதி கூட்டறிக்கை வெளியிடுவதிலும் கூட நிறைய சிக்கல்கள் உள்ளன.

இந்தக் கூட்டத்திற்கும் 13 ஆண்டுகளுக்கு முந்தைய கூட்டத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை, இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள நாடான இந்தோனேசியாவின் நிதித்துறை அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி கடந்த மாதம் அளித்த ஒரு பேட்டியில் தொகுத்து வழங்கி இருந்தார்.

'எல்லா தலைவர்களும் ஒரே எதிரியைக் குறித்த ஒரே கவலையோடு ஒரே படகில் இருந்த அப்போது ஜி20 எப்படி உண்மையில் அந்த வகையான கொள்கையை நெறிப்படுத்தியது என்பதை நான் என் கண்களால் பார்த்தேன்” என்று கூறிய அவர், “இந்த முறை, அவர்களே ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக நிற்கிறார்கள்” என்றார்.

பெருகி வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கான, உலகளாவிய கூட்டுறவு ஒருபுறம் இருக்கட்டும், உலகளாவிய ஒருங்கிணைப்புக்கான எந்த சாத்தியக்கூறையும் கூட, அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஜெனெட் யெலென் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்குக் கூறிய கருத்துக்களில் கண்கூடாகவே உதறித் தள்ளினார்.

'உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பின்னர் இது நீண்டகாலம் சேதப்படுத்தும் வீழ்ச்சியாக இல்லாமல் இருக்க வேலைகளை உருவாக்கும் முயற்சிக்கு எங்களுக்கு நிதி உதவிப்பொதி தேவை என்று கூறி நாடுகள் ஒன்றாக ஒருங்கிணைந்து இருந்திருக்கலாம். ஆனால் இப்போதோ, நாடுகள் வேறுவேறு பணவீக்க அழுத்தங்களுடன், வேறுவேறு நிதி-அரசியல் கொள்கைகளைக் கொண்டுள்ளன” என்றார்.

இந்தக் கருத்துக்கள், ஒன்றோடொன்று இணைந்த மற்றும் ஒருங்கிணைந்த உலகப் பொருளாதாரத்திற்கும், இந்த இலாப அமைப்பு முறை வேரூன்றி உள்ள எதிர்விரோத தேசிய-அரசுகளின் அமைப்பு முறைக்கும் இடையே, இந்த முதலாளித்துவ பொருளாதாரத்தின் மையத்தில் நிலவும் புறநிலை முரண்பாட்டின் வெளிப்பாடாகும்.

இந்த முரண்பாடு ரஷ்யாவுடனான அமெரிக்கப் போரையும் சீனாவுடனான மோதலுக்கான தயாரிப்புகளையும் எரியூட்டி வருகிறது. மில்லியன் கணக்கான உயிர்களைப் பலி கொடுத்து, இந்தப் பெருந்தொற்றைக் கையாள எந்த சர்வதேச விடையிறுப்பும் அபிவிருத்தி செய்யாமல் விடப்பட்டதற்கும், பெருகி வரும் பொருளாதார நாசங்களுக்கு ஆளும் வர்க்கங்கள் எந்த முற்போக்கான விடையிறுப்பும் காட்டுவதைச் சாத்தியமில்லாமல் போவதற்கும் இதுவே காரணமாகும்.

இதற்கான காரணத்தைக் கண்டு செயல்படுங்கள் என்று முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்திற்கு முறையீடுகள் செய்வதன் மூலமாக இதற்குத் தீர்வு காண முடியாது, மாறாக ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகத் தொழிலாள வர்க்கத்தைச் சர்வதேச அளவில் ஒருங்கிணைத்து போராடுவதன் மூலமாக தீர்வு காண முடியும்.

Loading