பேர்லினில் புதிய மாநில தேர்தல்: சோசலிச சமத்துவக் கட்சி போருக்கான எதிர்ப்பிற்கு ஒரு குரலையும் முன்னோக்கையும் வழங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தீவிர தேர்தல் முறைகேடுகள் காரணமாக, பிரதிநிதிகள் சபை மற்றும் அனைத்து 12 மாவட்டங்களுக்கும் தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று பேர்லின் அரசியலமைப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த முடிவை சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei - SGP) வரவேற்பதுடன், அதன் சொந்த வேட்பாளர் பட்டியலுடன் இத்தேர்தலில் பங்கேற்கும். இந்த வழியில், சமூக ஜனநாயகவாதிகள் (SPD), இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சியினர் இரக்கமின்றி பின்பற்றி வரும் வெறுக்கப்படும் கொள்கைகளான போருக்கும், சமூக அழிவுக்கும் எதிராக மக்கள் வாக்களிக்க வாய்ப்புக் கிடைக்கும்.

தேர்தல் பிழைகள் மிகவும் தீவிரமானவை என்பதால், நீதிமன்றத்தால் தேர்தலை முழுமையாக மீண்டும் நடத்த உத்தரவிடுவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியாது. தேர்தலின் பொதுவான தன்மை, சமத்துவம் மற்றும் தேர்வு சுதந்திரம் ஆகியவற்றின் கொள்கைகள் மிகவும் தீவிரமாக மீறப்பட்டதாக நீதிபதிகள் கண்டறிந்தனர். அது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே நாளில் நடந்த மத்திய நாடாளுமன்றத்திற்கான (Bundestag) தேர்தலும் பல பேர்லின் தொகுதிகளில் மீண்டும் நடத்தப்பட வேண்டும். பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் பெப்ரவரி 12 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி பின்னர் தீர்மானிக்கப்பட உள்ளது.

ஆனால் பொதுவான தவறுகளால் மட்டும் தேர்தல்கள் சட்டவிரோதமானதல்ல. அரசியல் ரீதியாக, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் தங்கள் வலதுசாரி மற்றும் இராணுவவாத கொள்கைகளுக்கு மக்களிடம் இருந்து எந்த ஆணையையும் பெற்றிருக்கவில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், எந்தக் கட்சியும் தேர்தலுக்குப் பின்னர் அது என்ன போர் மற்றும் சமூக அழிவுகளின் பேரழிவுக் கொள்கையை பின்பற்றும் என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கவில்லை.

இரண்டாம் உலகப் போர் முடிந்து 77 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்யாவிற்கு எதிராக மீண்டும் ஜேர்மன் டாங்கிகளை பயன்படுத்தவும், இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை 100 பில்லியன் யூரோக்கள் சிறப்பு நிதியுடன் மூன்று மடங்காக உயர்த்தவும், கண்டத்தின் வலிமையான இராணுவ சக்தியாக ஜேர்மனியை மேம்படுத்தவும் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. ரஷ்யாவிடமிருந்து ஒரு பிரதிபலிப்பைத் தூண்டுவதற்காக நேட்டோ சக்திகள் திட்டவட்டமாக ரஷ்யாவை சுற்றி வளைத்துள்ளன. இப்போது அவர்கள் புட்டின் ஆட்சியின் உக்ரேனின் பிற்போக்குத்தனமான படையெடுப்பை பயன்படுத்தி போரைத் தீவிரப்படுத்தவும் ரஷ்யாவை அடிபணியச் செய்யவும் முனைகின்றனர்.

இதன் விளைவுகள் உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் பேரழிவை ஏற்படுத்துகின்றன.

ஜேர்மன் சான்சலர் ஓலாப் ஷோல்ஸ், ஜேர்மனியில் பேர்லின் அருகே உள்ள ஸ்விலோசியில், ஜேர்மன் ஆயுதப் படைகளின் ‘கூட்டு நடவடிக்கைக் கட்டளையகத்திற்கு’ மார்ச் 4, 2022 வெள்ளிக்கிழமை வருகை தந்தார் [AP Photo/Michael Sohn]

இந்த பைத்தியக்காரத்தனத்தின் செலவை உழைக்கும் மக்களிடம் திணிக்க வாக்காளர்களும் வாக்களிக்கவில்லை. ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரப் போர், விலைகளை அதிகரிக்க வைத்து உண்மையான ஊதியங்கள் வீழ்ச்சியடையச் செய்கிறது. அதே நேரத்தில் பெரும் பணக்காரர்கள் பில்லியன்கள் மதிப்பிலான கையூட்டுகளைப் பெறுவதுடன், நிறுவனங்கள் தொழிற்சாலைகளை மூடிவிட்டு பெருமளவிலான பணிநீக்கங்களை செய்கின்றன. சுகாதாரப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் கல்விக்கான செலவுகள் அடிவரை வெட்டப்படுகின்றன மற்றும் ஆளும் உயரடுக்குகளின் இராணுவவாத பெரும் அதிகாரத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக காலநிலை அழிக்கப்படுகிறது. தொற்றுநோய்க்கு மத்தியில் மத்திய சுகாதார வரவு-செலவுத் திட்டத்தில் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு குறைக்கப்பட்டது. அதே நேரத்தில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான கடைசி மீதமுள்ள நடவடிக்கைகள் அகற்றப்பட்டு, மாணவர்களும் தொழிலாளர்களும் பாரிய தொற்றுக்கு உள்ளாக விடப்படுகிறார்கள்.

SGP இந்த வெறுக்கத்தக்க மற்றும் சட்டவிரோதமான கொள்கைக்கு எதிரான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக பேர்லின் மாநிலத் தேர்தலை மீண்டும் பயன்படுத்தும். தனியார் இலாப நலன்களுக்காக இல்லாது மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம், உத்தியோகபூர்வ அரசியலில் இதுவரை வெளிப்படுத்தப்படாத மகத்தான எதிர்ப்பிற்கு ஒரு சோசலிச முன்னோக்கும், குரலும் கொடுக்கிறோம். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரத்தை உடைத்து அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்காமல் போரை நிறுத்தவோ அல்லது சமூக அழிவை முடிவுக்கு கொண்டுவரவோ முடியாது.

இதற்கு போருக்கும் அதன் மூலகாரணமான முதலாளித்துவத்திற்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின், பெரும்பான்மையான மக்கள்தொகையின் சர்வதேச இயக்கம் தேவைப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து அத்தகைய உலகளாவிய சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக தேர்தல்களில் பங்கேற்கிறது.

இப்போது எல்லா இடங்களிலும் நடைபெறும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் உத்தியோகபூர்வ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். ஆகவே, உலகெங்கிலும் உள்ள போர் மற்றும் சமூகத் தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பை சுயாதீனமாக ஒழுங்கமைக்கவும் ஒன்றிணைக்கவும் பணியிடங்கள், குடியிருப்புக்கள் மற்றும் பள்ளிகளில் சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை உருவாக்குவதற்கான அழைப்போடு எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை இணைக்கிறோம்.

பேர்லினில் மாநில அளவில் பின்பற்றப்பட்ட கொள்கைகள், போரின் பேரழிவு தரும் சமூக தாக்கத்தை கூரிய வடிவில் எடுத்துக்காட்டுகின்றன. பேர்லின் மாநிலத்திற்கான அரசாங்கமாக உள்ள சமூக ஜனநாயகக் கட்சி, பசுமை கட்சி மற்றும் இடது கட்சியின் பேர்லின் செனட் கூட்டணி, பெரும்பாலும் தன்னை ஒரு இடதுசாரி அரசாங்கம் என்று அழைக்கிறது. உண்மையில், அனைத்து செனட் கட்சிகளும் அதிபர் ஷோல்ஸை எவ்வித தடையுமின்றி ஆதரிக்கின்றன. ஏனெனில் அவை இராணுவ மறுஆயுதமயமாக்கலை ஆதரிப்பதுடன் மற்றும் சமூக செலவினக் குறைப்புகளை தீவிரத்துடனும், ஆக்கிரோஷத்துடன் செயல்படுத்துகின்றன.

இதில் இடது கட்சி குறிப்பாக மோசமான பாத்திரத்தை வகிக்கிறது. கோடையில் அதன் கட்சி மாநாட்டில், கட்சி நேட்டோவையும் உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதையும் முழுமையாக ஆதரித்தது. ரஷ்ய ஆக்கிரமிப்புப் போர் நேட்டோவிற்கு 'புதிய சட்டபூர்வத்தன்மையை' வழங்கியது என்று கட்சித் தீர்மானம் கூறியது. செனட் கட்சிகளுடன் நெருக்கமாக தொடர்புடைய தொழிற்சங்கங்களும் போர்க் கொள்கையையும் அதன் சமூக விளைவுகளையும் முழுமையாக ஆதரிக்கின்றன.

இராணுவ மறுசீரமைப்புக்கு நிதியளிப்பதற்காகவும், ரஷ்யாவிற்கு எதிரான போரை தீவிரப்படுத்துவதற்காகவும், ஜேர்மன் அரசாங்கம் சமூக செலவினங்களை கடுமையாக குறைத்து வருகிறது. பேர்லின் செனட் இதற்கு அதன் சொந்த வெட்டுக்களுடன் பதிலளிக்கிறது. மார்ச் மாதம், பேர்லின் மாநில அரசாங்கம் 2022 மற்றும் 2023க்கான இரண்டு ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பாரிய சிக்கன நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்தது. பணவீக்கம் இருந்தபோதிலும், இது வரவு-செலவுத் திட்டத்தை 78.3 பில்லியன் யூரோக்களிலிருந்து 76.6 பில்லியன் யூரோக்களாகக் குறைத்தது. அதில் நிதியளிப்பு வெட்டப்படும் ஒரு முக்கிய பகுதி கல்வித்துறையாகும். மருத்துவமனைகளின் நிலைமை மோசமடைந்து வருகின்றன. மேலும் வீட்டுவசதி பெருநிறுவனங்களை கையகப்படுத்துவதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பில் பதிவுசெய்யப்பட்ட தெளிவான பெரும்பான்மை ஆதரவை செனட் உடனடியாக இரத்து செய்தது. மறுபுறம் போலிஸ்துறை பலப்படுத்தப்பட்டு மீண்டும் ஆயுதம் ஏந்தப்பட்டு வருகிறது.

உழைக்கும் மக்கள் மீதான 'சிவப்பு-சிவப்பு-பச்சை' செனட்டின் இரக்கமற்ற அணுகுமுறை, கடந்த தேர்தலில் ஜனநாயகக் கோட்பாடுகளை மீறிய ஆணவத்தில் பிரதிபலிக்கிறது. பின்னர் அனைத்து வகையிலும் மீண்டும் தேர்தலை நடாத்துவதைத் தடுக்க ஒரு வருடகாலம் முயன்றது. அவர்களின் கொள்கைகளின் மீதான வெறுப்பின் காரணமாக, சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சி ஆகியவை பிசாசு போல் தேர்தலுக்கு அஞ்சுகின்றன.

மறுபுறம், சோசலிச சமத்துவக் கட்சி ஒரு தீவிர தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி, நாடாளுமன்றத்திலும் பிரதிநிதிகள் சபையிலும் அவற்றின் வலதுசாரி சதியை எதிர்க்கும். மூர்க்கத்தனமான சமூக சமத்துவமின்மை, சுகாதாரம் மற்றும் கல்வி முறையின் அழிவு மற்றும் இறுதியாக, நமது பூமியின் அணு ஆயுத அழிவை ஏற்க விரும்பாத எவரையும் நாங்கள் எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்து, பெப்ரவரி 12 அன்று சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்! என அழைக்கிறோம். அதற்கு ஆதரவாளராக செயற்படுவதற்கு இப்போதே பதிவு செய்யவும்.

Loading