சீனா முழுவதும் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக பெய்ஜிங் தெரிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவில் கோவிட்-19 நோய்தொற்றுக்களின் சமீபத்திய எழுச்சி நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது, தேசிய சுகாதார ஆணையம் (NHC) ஞாயிற்றுக்கிழமை உச்சபட்சமாக கிட்டத்தட்ட 27,095 புதிய நோய்தொற்றுக்களை பதிவு செய்துள்ளது, இது தினசரி ஏழு நாள் சராசரி புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையை 23,056 என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளது. மேலும், வார இறுதியில், பெய்ஜிங்கின் சுகாதார அதிகாரிகள் கோவிட்-19 நோயால் 91 வயது முதிய பெண்மணியும் 88 வயது முதிய ஆண் உட்பட மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளனர், இது மே 26 க்குப் பின்னர் சீனாவில் பதிவான முதல் இறப்புகளாகும்.

[Photo by Our World In Data / CC BY 4.0]

இதுவரை, தற்போதைய நோய்தொற்று எழுச்சியை எதிர்கொள்வதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது, உலகசோசலிசவலைத்தளத்தின் மதிப்பீட்டை உறுதிப்படுத்தும் வகையில், தொற்றுநோயின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வரும் பூஜ்ஜிய-கோவிட் ஒழிப்பு மூலோபாயத்தில் இருந்து CCP மாறத் தொடங்கியுள்ளது. நெருக்கடி தீவிரமடையும் நிலையில், CCP பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை மீண்டும் நடைமுறைப்படுத்த முற்றிலும் சாத்தியமுள்ளது, ஆனால் நோய்தொற்றுக்கள் அதிகரித்து வரும் தற்போதைய கட்டத்தில் அது தலைகீழாக மாறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

நவம்பர் 11 அன்று, NHC ‘சக்திவாய்ந்த பூஜ்ஜிய’ கோவிட் கொள்கையில் 20 மாற்றங்களை வெளியிட்டது, இவை அனைத்தும் கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளைக் குறைக்கின்றன. வைரஸ் பரவலை விரைவாக கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ள பாரிய பரிசோதனைகள், தொடர்புத் தடமறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் நெறிமுறைகள், மற்றும் அனைத்திற்கும் மேலாக நகர அளவிலான பூட்டுதல்களின் வரம்பு ஆகிய நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

NHC ஆனது, ‘அதிகப்படியான மற்றும் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரே அளவு அணுகுமுறைகள்’ அடிப்படையில் சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கத்துடன் 20 மாற்றங்களை உருவாக்குகிறது, ஆனால் அவை பூஜ்ஜிய-கோவிட் கொள்கையிலிருந்து விலகியதன் ஆரம்பத்தை குறித்துக் காட்டுகின்றன என்பது இப்போது தெளிவாகிறது. தற்போதைய எழுச்சி தீவிரமடையும் போது இந்த மாற்றத்தின் தாக்கங்கள் பற்றி அதிகரித்தளவிலான கவனம் செலுத்தப்படுகிறது.

21.5 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவின் தலைநகரான பெய்ஜிங், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் மிக மோசமான கோவிட்-19 வெடிப்பை இப்போது எதிர்கொண்டுள்ளது, ஞாயிற்றுக்கிழமை 962 நோய்தொற்றுக்கள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் கட்டாயப் பூட்டுதலை செயல்படுத்துவதற்குப் பதிலாக, உள்ளூர் அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு எந்த நிதியுதவியும் வழங்க முடியாத நிலையில், குடியிருப்பாளர்கள் தானாக முன்வந்து வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். பல குடியிருப்பாளர்கள் இந்த பரிந்துரையைப் பின்பற்றுகிறார்கள் மற்றும் சில பள்ளிகள் தானாக முன்வந்து தொலைநிலைக் கற்பித்தலுக்கு மாறியுள்ளன, என்றாலும் நகரம் முழுவதும் வணிகங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

11 மில்லியன் மக்கள் வசிக்கும் அருகிலுள்ள ஷிஜியாஜூவாங் நகரில், நோய்தொற்றுக்கள் சீராக அதிகரித்து வருகின்றன, ஞாயிற்றுக்கிழமை 641 நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக, உள்ளூர் அதிகாரிகள் பூட்டுதல் விதிப்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டனர், அதற்கு பதிலாக அடுத்த ஐந்து நாட்களுக்கு மாவட்டத்தின் எட்டு நகரங்களில் ஆறில் பாரிய பரிசோதனைகள் நடைபெறும் என்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர். அவர்கள் இணைய வழியாக பொருட்களை வாங்க குடியிருப்பாளர்களை ஊக்குவித்தனர், மற்றும் சில பள்ளிகளை தொலைநிலைக் கற்பித்தலுக்கு மாறுமாறு உத்தரவிட்டனர்.

சீனாவில் உள்ள ஒட்டுமொத்த நோய்தொற்றுக்களில் தோராயமாக மூன்றில் ஒரு பகுதி குவாங்டாங் மாகாணத்தில் பரவியுள்ளன, இங்கு தற்போது தினசரி ஏழு நாள் சராசரி நோய்தொற்றுக்கள் 8,706 ஆக உள்ளது, இவற்றில் பெரும்பகுதி நோய்தொற்றுக்கள் கிட்டத்தட்ட 19 மில்லியன் மக்கள் வசிக்கும் மாகாணத்தின் தலைநகரம் குவாங்சோவுவில் பரவியுள்ளன. உள்ளூர் அதிகாரிகள், நகரம் முழுவதுமான கடுமையான முழு அளவு பூட்டுதலை விதிப்பதற்குப் பதிலாக, நவம்பர் 5 முதல் நகரின் பல்வேறு மாவட்டங்களில் பகுதியளவு பூட்டுதல்களை அமல்படுத்தியுள்ளனர். திங்களன்று, குவாங்சோவுவில் உள்ள அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டமான பையுனில் ஐந்து நாள் பூட்டுதல் தொடங்கியது, அதே நேரத்தில் நகரின் முக்கிய வணிக மாவட்டத்தில் உணவருந்தும் சேவைகள், இரவு நேர கிளப்புகள் மற்றும் திரையரங்குகள் ஆகியவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்சமயம் சீனா முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களை அங்கீகரிப்பதற்காக, ஷாங்காயில் நிகழ்ந்த கடந்த வசந்த கால எழுச்சியின் அனுபவங்களை இது மதிப்பாய்வு செய்கிறது.

மார்ச் 28, 2022 அன்று, புதிய நோய்தொற்றுக்களின் தினசரி ஏழு நாள் சராசரி 3,662 ஆக இருந்தது. ஷாங்காயில் உள்ள அதிகாரிகள் நகரம் முழுவதுமான பூட்டுதலை செயல்படுத்த மாட்டோம் என்று பலமுறை மறுத்துவிட்ட நிலையில், தேசிய அதிகாரிகள் இறுதியில் தலையிட்டு அவ்வாறு செய்யுமாறு கோரினர். கிட்டத்தட்ட சரியாக இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 380,000 க்கும் மேற்பட்ட மொத்த நோய்தொற்றுக்கள் மற்றும் 337 இறப்புக்களுடன் நகரம் இறுதியாக பூட்டுதலில் இருந்து வெளியேறியது.

ஷாங்காயில் ஏற்பட்ட அனுபவம், மிகுந்த தொற்றும் தன்மை கொண்ட ஓமிக்ரோன் மாறுபாட்டைக் கட்டுப்படுத்த பூஜ்ஜிய-கோவிட் மூலோபாயத்தை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நாடு முழுவதும், கடுமையான நோய்தொற்று வெடிப்புக்களை விரைவாகக் கட்டுப்படுத்த, நோய்தொற்றுக்கள் அதிகரிக்கத் தொடங்கியவுடன், நகர்ப்புற பூட்டுதல்களை மிக விரைவாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறத்தப்பட்டிருக்க வேண்டும். அவர்கள், ஒவ்வொரு குடிமகனுக்கும் N95 அல்லது சிறந்த முகக்கவசங்கள் வழங்கப்பட்டிருப்பதை, காற்றுவழி வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து பொது இடங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகள் புதுப்பிக்கப்பட்டிருப்பதை, பாரிய பரிசோதனை மற்றும் பிற அத்தியாவசிய பொது சுகாதார நடவடிக்கைகளை பராமரிக்க ஒவ்வொரு நகரத்திற்கும் முழு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.

மாறாக, ஐந்து மாதங்களுக்குப் பின்னர், எதிர்மறையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குவாங்சோவுவில் நகரம் முழுவதுமான பூட்டுதலை செயல்படுத்த மறுப்பது குறிப்பாக இதை வெளிப்படுத்துகிறது. தற்போது, குவாங்சோவுவில் புதிய நோய்தொற்றுக்களின் தினசரி ஏழு நாள் சராசரி, இறுதியாக பூட்டுதல் செயல்படுத்தப்பட்ட மார்ச் 28 அன்று ஷாங்காயில் இருந்த எண்ணிக்கையை விட 138 சதவீதம் அதிகமாக உள்ளது.

சந்தேகத்திற்கு இடமின்றி, CCP உலகளாவிய நிதி மூலதனத்திலிருந்து பெரும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்கிறது, இது சீனத் தொழிலாள வர்க்கத்தின் உற்பத்தி மற்றும் அவர்கள் மீதான சுரண்டலை அதிகரிப்பதற்காக பூஜ்ஜிய-கோவிட் கொள்கை நீக்கப்பட வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்துள்ளது. ஷாங்காயில் விதிக்கப்பட்ட தாமதமான பூட்டுதலால் பெரிதும் விலைகொடுக்க நேரிட்டது, மேலும் சமீபத்திய மாதங்களில் பல நகரங்கள் பாரிய பரிசோதனைகளுக்காக பரிசோதனை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை கணிசமாக நிலுவையில் வைத்துள்ளன.

மேலும், மிக குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் உட்பட, பல நிறுவனங்கள் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை நடைமுறையில் இருக்கும் வரை உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற பகுதிக்கு மாற்ற விரும்புவதாக சமிக்ஞை செய்துள்ளன. 20 நடவடிக்கைகளின் அறிவிப்பை தொடர்ந்து, பங்கு மதிப்புகள் உயர்ந்தன மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொண்டாடினர். எவ்வாறாயினும், கோவிட்-19 இன் அதிகரித்து வரும் பரவலுக்கு மத்தியில் பல்வேறு சீன நுகர்வோர் பங்குகள் வீழ்ச்சி கண்ட நிலையில், திங்களன்று, ஷாங்காய் கூட்டு குறியீடு 0.8 சதவீதம் குறைந்தது, மற்றும் எஞ்சியுள்ள தணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து உற்பத்திக்கு இடையூறாக இருக்கும் என்ற அச்சமும் அங்கு நிலவுகிறது.

20 நடவடிக்கைகள் குறித்து பேசுகையில் PindBridge Investments இலாக்க மேலாளர் ஹனி ரெதா வோல்ஸ்ட்ரீட்ஜேர்னலுக்கு இவ்வாறு தெரிவித்தார், “அனைவரது கவனமும் சீனாவை நோக்கியே உள்ளது. வணிகங்களை மீளத் திறப்பதற்கான எந்தவொரு முயற்சியும் சிக்கலானதாக இருக்கும், ஏனெனில் இந்த விஷயங்களின் மாதிரி பற்றி எங்களுக்குத் தெரியும்: அதாவது, நீங்கள் நோய்தொற்றுக்களின் கடும் அதிகரிப்பை காண்பீர்கள். உண்மையில் நாங்கள் இனிமேல் அந்த நிலையை எட்டப் போவதில்லை, ஏற்கனவே ஏராளமான நோய்தொற்றுக்கள் உள்ளன.”

சீன ஆளும் வர்க்கம் ஒரு குழப்பத்தில் சிக்கியுள்ளது, அதனால் அவர்கள் தங்கள் பொருளாதாரத்தை முழுமையாக மீளத்திறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அதே நேரத்தில் தொடர்ந்து நிலவும் பொது சுகாதார நெருக்கடி கூட பேரழிவுகரமான பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர்.

இந்த கட்டத்தில் CCP உலகிலேயே மிகவும் கடுமையான தணிப்புத் திட்டத்தை பராமரிக்கும் அதே வேளையில், அனைத்து தணிப்பு நடவடிக்கைகளை நீக்குவதற்கும், மற்றும் உலகளவில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் பாரிய நோய்தொற்றுக்களுக்கு காரணமான ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ மூலோபாயத்தை பின்பற்றுவதற்கும் இடையறாது கொடுக்கப்படும் அழுத்தத்தை அது தொடர்ந்து எதிர்கொள்ளும்.

இறுதியில், கோவிட்-19 க்கு எதிரான அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் சீனா கைவிட்டால், விளைவுகள் பேரழிவு தரும். சீனாவின் தற்போதைய தடுப்பூசி விகிதங்கள் பற்றிய தரவுகள் பொதுவில் கிடைக்கவில்லை, ஆனால் South China Morning Post பத்திரிகையின் ஒரு சமீபத்திய கட்டுரை, “ஆகஸ்ட் நடுப்பகுதி நிலவரப்படி, ‘வயோதிபர்களுக்கான’ துல்லியமான வயது வரம்பு குறிப்பிடப்படாமல், சீனாவின் வயோதிபர்களுக்கு வழங்கப்பட்ட பூஸ்டர் தடுப்பூசி விகிதம் வெறும் 68 சதவீதமாக இருந்தது” என்று குறிப்பிட்டது.

Statista இன் சமீபத்திய தரவின்படி, மார்ச் 17 நிலவரப்படி, 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சீன வயோதிபர்களில் 51 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு அளவு தடுப்பூசிகளைப் பெற்றிருந்தனர், மேலும் 20 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றிருந்தனர். அதன் பின்னர் தடுப்பூசி விகிதங்கள் நிச்சயமாக அதிகரித்துள்ளன, இருப்பினும் பாரம்பரிய சீன மருத்துவத்தின் மீதான பரவலான நம்பிக்கையின் காரணமாக, மக்கள்தொகையில் இந்த மூத்த பிரிவினர் மிகக் குறைவாகவே தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்பது பரவலாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த வயது பிரிவினரில் உள்ள 36 மில்லியன் மக்கள் தற்போது பூஜ்ஜிய-கோவிட் கொள்கை நீக்கப்படுவதால் மிகப்பெரிய ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.

Loading