போலந்து மீதான உக்ரேனிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னர், நேட்டோ கிழக்கு ஐரோப்பாவில் ஆயுதங்களை குவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம், மாஸ்கோவை குற்றம் சாட்டி நேட்டோவை நேரடியாக ரஷ்யாவுடன் போருக்கு இழுக்கும் நோக்கத்துடன், உக்ரேன் குறைந்தது ஒரு ஏவுகணையை போலந்து மீது ஏவி இரண்டு போலந்து குடிமக்களை கொன்றது.

ஏவுகணைத் தாக்குதல் ரஷ்யாவால் ஏவப்பட்டது என்ற உக்ரேனின் கூற்றை அமெரிக்காவும் ஏனைய நேட்டோ அங்கத்துவ நாடுகளும் நிராகரித்தபோதிலும், ஐரோப்பிய நாடுகள் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக இந்த மோதலில் தங்கள் ஈடுபாட்டை கணிசமாக அதிகரித்துள்ளன.

மார்ச் 25, 2022 வெள்ளிக்கிழமை, Rzeszow-Jasionka விமான நிலையத்தில் பேட்ரியாட் ஏவுகணைகள் காணப்படுகின்றன (AP Photo/Evan Vucci) [AP Photo/Evan Vucci]

புதனன்று, NASAMS தரையிலிருந்து வான்வழிக்கு ஏவும் ஏவுகணைகள், HIMARS நீண்ட தூர ஏவுகணைகள், எதிர்ப்பு கதிர்வீச்சு ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள் உட்பட உக்ரேனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்தது.

இன்றுவரையில், இது உக்ரேனுக்கான அமெரிக்க ஆயுத ஏற்றுமதியின் மதிப்பை 19.7 பில்லியன் டாலர்களாக ஆக்குகிறது. கடந்த வாரம் காங்கிரசுக்கு முன்வைக்கப்பட்ட நிதிக் கோரிக்கையில் பைடென் நிர்வாகம் இதனை இரட்டிப்பாக்க முன்மொழிந்தது.

பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ், பிரித்தானியா ஒரு தொகுதி Sea King வானூர்திகளை உக்ரேனுக்கு அனுப்பும் என்று அறிவித்தார். இதுதான் இலண்டன் முதல் முறையாக விமானிகளுடன் விமானங்களை உக்ரேனுக்கு அனுப்புவதாகும்.

திங்களன்று போலந்து பாதுகாப்பு மந்திரி மாரியுஸ் பிளாஸ்சேசக், உக்ரேனுடனான அதன் எல்லையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பேட்ரியாட் ஏவுகணைகளை ஜேர்மனி நிறுத்தும் என்று அறிவித்தார். இதன் மூலம் உக்ரேனிய வான்வெளியில் இயங்கும் ரஷ்ய விமானத்தை நேட்டோ அங்கத்துவநாடு ஒன்று சுட்டு வீழ்த்தும் சாத்தியத்தை எழுப்பினார்.

ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி கிறிஸ்டீன் லம்பிரெக்ட் உடனான தனது திட்டமிடப்பட்ட தொலைபேசி சந்திப்பிற்கு முன்னதாக பிளாஸ்சேசக், 'உக்ரேனுடனான எல்லைக்கு அருகில் இந்த அமைப்பை நிலைநிறுத்த நான் முன்மொழிவேன் என்றார்.

பிளாஸ்சேசக் தனது ட்விட்டில், 'ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் எல்லைக்கு அருகில் பேட்ரியாட் ஏவுகணைகளை வைப்பதற்கான தனது விருப்பத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் இந்த முன்மொழிவை திருப்தியுடன் ஏற்றதாக” கூறினார்.

மார்ச் மாதம், ஜேர்மனியும் நெதர்லாந்தும் ஸ்லோவாக்கியாவிற்கு ஒரு பேட்ரியாட் ஏவுகணை தளத்தை நிலைநிறுத்தியது. பின்னர் அதனுடன் ஒரு அமெரிக்க பேட்ரியாட் இணைக்கப்பட்டது.

போலந்து முன்பு பேட்ரியாட் ஏவுகணை தளத்தை அமெரிக்காவிடம் இருந்து 4.75 பில்லியன் டாலர்கள் விலையில் கோரியிருந்தது.

உக்ரேனின் எல்லையில் ஜேர்மன் ஏவுகணைகள் அனுப்பப்பட்டது மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் இருந்தது. உக்ரேனில் அமெரிக்க தலையீட்டிற்கு முன்னணி பிரச்சாரகரான நியூ யோர்க் டைம்ஸ் கூட கவலை தெரிவித்தது.

'போலந்துக்கான ஏவுகணைகள் உக்ரேன் போரில் நேட்டோ நிலைப்பாடு குறித்த கேள்விகளை எழுப்புகின்றன' என்ற தலைப்பிலான கட்டுரையில் டைம்ஸ் பின்வருமாறு எழுதியது. 'எவ்வாறாயினும், நிலைமை எவ்வளவு ஆபத்தானதாக உள்ளது. இந்த வாரம் போலந்து பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பிற்கான கோரிக்கையை ஜேர்மன் ஏற்றுக்கொண்டதாகவும் மற்றும் அவற்றை உக்ரேனின் 'எல்லைக்கு அருகில்' நிறுத்துவதாக அறிவித்தபோது இதற்கு கவனம் செலுத்தப்பட்டது.

டைம்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டது. “ஏவுகணைகளை போலந்தின் மோதல் பகுதிக்கு அருகில் நிலைநிறுத்துவதற்கான போலந்தின் திட்டங்கள், அதன் சொந்த பாதுகாப்பு ஆபத்தில் இருக்கக்கூடும், அல்லது அண்மை நாட்டில் நடக்கும் போர் தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ தனது நாட்டிலும் பரவக்கூடும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன.”

'எங்கள் ரேடார்களை ஏவுகணைகள் வருவதைக் காட்டினால் என்ன நடக்கும், அவை உக்ரைனுக்குள் இடைமறிக்கப்பட வேண்டும்?' என்று டைம்ஸுடன் பேசிய ஒரு இராணுவ ஆய்வாளர் தெரிவித்தார்.

'உக்ரேனிய வான்வெளியில் பேட்ரியாட் ஏவுகணைகள் செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை' அவர் குறிப்பிட்டார். டைம்ஸின் கருத்துப்படி, 'போரில் கை வைப்பதில்லை என்ற நேட்டோவின் அணுகுமுறையையும், மேலும் உக்ரேனுக்கு ஆயுதங்கள் மூலம் ஆதரவளிக்கும் அதன் வலுவான அர்ப்பணிப்பு மற்றும் உள்நாட்டில் எந்த ஈடுபாட்டையும் எந்த விலையையும் கொடுத்து தவிர்ப்பதையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். இது மாஸ்கோவுடனான மோதலுக்கு ஒரு சாக்குப்போக்காக இருக்கும்.

முக்கியமாக, ஏவுகணை அமைப்புகள் ஜேர்மன் அல்லது போலந்து கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை என்று டைம்ஸ் கூறி, “வார்சோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் இதற்கு யார் பொறுப்பில் இருப்பார்கள் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை” என்றும் குறிப்பிட்டது.

அமெரிக்கா தற்போது போலந்தின் ரெட்சிகோவோ நகரில் ஒரு இராணுவ தளத்தை நிர்மாணித்து வருகிறது. இது ஏவுகணை பாதுகாப்புக்காக மட்டுமே என்று அமெரிக்கா கூறுகிறது. இந்த தளமானது டோமாஹாக் உள்ளிட்ட தாக்குதல் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டதாக இருக்கும்.

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போருக்கு போலந்தில் உள்ள அமெரிக்க தளம் ஒரு முக்கியமான ஒன்றாக இருக்கும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரேன் நேட்டோவில் இணைந்தால், அது ஆயுதங்களுக்கான களமாக மாறும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரேன் நேட்டோவில் இணைந்தால் “அது ஆயுதங்களால் நிரப்பப்படும். போலந்து மற்றும் ருமேனியாவைப் போலவே நவீன தாக்குதல் ஆயுதங்கள் அதன் பிரதேசத்தில் நிலைநிறுத்தப்படும்” என்றார்.

அமெரிக்காவும் நேட்டோவும் போலந்தின் மீதான தாக்குதலை போரில் தங்கள் ஈடுபாட்டை அதிகரிக்க ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்திக் கொண்டாலும், கடந்த வார சம்பவம் பற்றி பதிலளிக்கப்படாத கேள்விகள் தொடர்ந்து சுழன்று கொண்டிருந்தன.

அசோசியேட்டட் பிரஸ், பெயர் குறிப்பிட விரும்பாத உளவுத்துறை அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில், ரஷ்யா ஏவுகணையை வீசியதாக நவம்பர் 15 குறும் செய்தியை வரைந்ததாகக் கூறப்படும் நிருபர் ஜேம்ஸ் லாபோர்டாவை நீக்கியதாக அறிவித்தது.

அசோசியேட்டட் பிரஸ், பெயரிடப்படாத ஆதாரம் யார், அல்லது செய்திச் சேவையில் யார் குறும் செய்தியை வெளியிட முடிவு செய்தார்கள் என்பது பற்றிய கூடுதல் விவரங்களை வழங்க மறுத்துவிட்டது.

நவம்பர் 16 அன்று, தாக்குதலுக்கு அடுத்த நாள், அசோசியேட்டட் பிரஸ் அதன் முந்தைய அறிக்கைக்கு பின்வரும் ஒரு திருத்தத்தை வெளியிட்டது:

நவம்பர் 15, 2022 அன்று வெளியிடப்பட்ட ஒரு தகவலின் முந்தைய பதிப்புகளில், ரஷ்ய ஏவுகணைகள் போலந்திற்குள் நுழைந்து இரண்டு பேரைக் கொன்றதாக பெயர் குறிப்பிடாது பேசிய மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் தகவலின் அடிப்படையில் அசோசியேட்டட் பிரஸ் தவறாக தகவலளித்தது. அடுத்தடுத்த அறிக்கைகள், ஏவுகணைகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை என்றும், ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பதற்காக உக்ரேனால் சுடப்பட்டிருக்கலாம் என்றும் காட்டியது.

செவ்வாயன்று, அமெரிக்கா மேலும் 4.5 பில்லியன் டாலர்கள் பொருளாதார உதவியை உக்ரேனுக்கு வழங்குவதாக அறிவித்தது. இது போலந்தில் உக்ரேன் ஏவுகணைகளை ஏவிய அதே நாளில் வெளியிடப்பட்ட வெள்ளை மாளிகையின் கோரிக்கையைத் தொடர்ந்து, உக்ரேனுக்கு ஆயுத விநியோகத்திற்கு அமெரிக்கா செலவிட்ட மொத்தத் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

புதன்கிழமை, ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் ரஷ்யாவை 'பயங்கரவாதத்திற்கான அரசு ஆதரவாளராக' வரையறுக்க வாக்களித்தது.

அதே நேரத்தில், ரஷ்யா உக்ரேனிய நகரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, எரிசக்தி கட்டமைப்பை தாக்கி மற்றும் நாடு முழுவதும் இருட்டடிப்பு அலைகளை ஏற்படுத்தியது.

போர் எவ்வளவு விரைவாக தீவிரமடைகின்றது மற்றும் புவியியல் அளவில் பரவுகின்றது என்பது தொடர்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்தின் சில பிரிவுகளுக்குள் வெளிப்படையான கவலைகள் இருந்தபோதிலும், ஐரோப்பிய கண்டத்தில் ஒரு பெரிய தரைப்போரின் ஆத்திரமூட்டல் முழு கண்டத்தையும் தொடர் மோதலுக்கு இழுக்கும் அபாயத்தை கொண்டுள்ளது.

Loading