முன்னோக்கு

கமலா ஹரிஸ் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்க்கோஸைச் சந்திக்கிறார்: மனித உரிமைகள் பாசாங்குத்தனமும் போர் வெறியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் இரண்டு நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் விஜயத்தை செவ்வாய்கிழமை நிறைவு செய்தார். ஜனாதிபதி ஃபேர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் மற்றும் துணை ஜனாதிபதி சாரா டுரேற்ற இருவரையும் சந்தித்தல், அந்நாட்டில் அமெரிக்க இராணுவப் படைகளை விரிவுபடுத்துவதற்கு ஏற்பாடு செய்தல் மற்றும் சீனாவுடனான போருக்கான தயாரிப்புகளை அதிகரித்தல் என அவருக்கு மும்முரமான திட்டநிரல் இருந்தது. ஆனால், ஒரு நிகழ்வில் பேசுகையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் அழுத்தமாக முன்வைத்தார்.

பாசாங்குத்தனம் காட்டுவதில் அமெரிக்காவைப் போன்ற நாடு வேறு இருக்காது. அதன் புவிசார் அரசியல் எதிரிகளான ரஷ்யா, சீனா, ஈரான், மனித உரிமைகளை மீறுவதாகவும், போர்க்குற்றங்கள் புரிவதாகவும், 'இனப்படுகொலைகள்' கூட செய்வதாகவும் வாஷிங்டன் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் அதன் நலன்களுக்குச் சேவையாற்றும் சக்திகளின் மனித உரிமை மீறல்களை அது மன்னித்து விடுகிறது, சர்வாதிகாரத்தைப் பொறுத்துக் கொள்கிறது, வெகுஜனங்களை ஒடுக்குவதற்கு ஒத்துழைக்கிறது. இரத்தத்தில் ஊறிய பாசாங்குத்தனமே அமெரிக்கப் பேரரசின் மூலப்பொருளாக உள்ளது.

மறைந்த சர்வாதிகாரியின் மகனான ஃபேர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர், அவர் தந்தையின் கொடூரமான இராணுவ ஆட்சிக்குப் புத்துயிரூட்ட அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினார், அவரது தந்தையின் ஆட்சி 1972 இல் இருந்து 1986 இல் மார்க்கோஸ் குடும்பம் பதவியில் இருந்து வெளியேற்றப்படும் வரை நீடித்தது. ஜூன் 30 இல் பதவி ஏற்றதில் இருந்து, மார்க்கோஸ் ஜூனியர் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது ஒரு சீரான அத்துமீறலை மேற்பார்வையிட்டுள்ளார். இது ஊடுருவி வரும் ஓர் இராணுவச் சட்டக் கொள்கையாகும்.

அவருடைய துணை ஜனாதிபதி சாரா டுரேற்ற, ஒரு பாசிச குண்டருடன், ஏழைகளுக்கு எதிரான வெகுஜன படுகொலை நடவடிக்கையைத் தொடங்கி வைத்து மேற்பார்வை செய்தவருமான முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுரேற்றவின் மகள் ஆவார், அந்த நடவடிக்கையை அவர் 'போதைப் பொருட்களுக்கு எதிரான போர்' என்று வரையறைப்படுத்தினார், அதில் 30,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். சாரா டுரேற்ற அவர் தந்தையின் பாசிச மரபைத் தழுவி முன்னெடுத்துச் செல்கிறார்.

அவர்கள் மணிலாவை மீண்டும் வாஷிங்டனின் முகாமுக்கு உள்ளேயும் மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் போர்த் திட்டங்களுக்கு உள்ளேயும் இட்டு வந்தால், இவர்களையும் இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து குற்றங்களையும் ஏற்று அரவணைத்துக் கொள்ள பைடென் நிர்வாகம் தயாராக உள்ளது என்பதை ஹாரிஸ் தெளிவாக சமிக்ஞை செய்தார்.

பிலிப்பைன்ஸிற்கு ஓர் உயர்மட்ட அமெரிக்க அதிகாரியின் எந்தவொரு பயணமும், மீண்டூம் ஒரு குற்றம் நடக்க இருப்பதையே பிரதிநிதித்துவம் செய்கிறது. பிலிப்பைன்ஸ் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அமெரிக்காவின் உத்தியோகபூர்வ காலனி நாடாக இருந்தது. ஸ்பெயினுக்கு எதிரான காலனித்துவ எதிர்ப்பு எழுச்சியில் பிலிப்பைன்ஸ் மக்கள் சுதந்திரத்தை அறிவித்த உடனேயே, வாஷிங்டன் அவர்களைக் கொடூரமாக அடிமைப்படுத்தியது. அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய அந்த இரத்தம் தோய்ந்த போரில் 200,000 பிலிப்பைன்ஸ் மக்கள் கொல்லப்பட்டதுடன், ஒட்டுமொத்த மாகாணங்களும் வதை முகாம்களாக ஆக்கப்பட்டன, சிறைக் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டனர், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒட்டுமொத்த கிராமங்களையும் எரித்து நாசமாக்கியது. பிலிப்பைன்ஸ் சுதந்திரத்தின் கருகிய அஸ்திவாரத்தில் தான் வாஷிங்டன் ஆசியாவில் அதன் 'ஜனநாயக காட்சிப்படுத்தலை' கட்டி எழுப்பியது.

போருக்குப் பிந்தைய பிலிப்பைன்ஸில் சமாதான முறையில் கட்டுப்படுத்தவியலாத மட்டங்களுக்கு சமூக அமைதியின்மை அதிகரித்த போது, வாஷிங்டன் அதன் ஜனநாயக பாசாங்குத்தனங்களைக் கைவிட்டு, மார்க்கோஸ் சீனியரின் இராணுவச் சட்ட ஆட்சிக்கு ஒத்துழைத்தது, சாமானிய பிலிப்பைன் மக்களைப் பெருந்திரளாக கைது செய்வது, சித்திரவதை செய்வது மற்றும் படுகொலை செய்வதை மெல்டா மேற்பார்வையிட்டார், அதேவேளையில் மார்கோஸ் குடும்பம் அந்நாட்டையே சூறையாடிய நிலையில், அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு அமெரிக்க நிர்வாகமும் அவர்களை முழுவதுமாக ஆதரித்தது.

ஆசியாவில் அமெரிக்க பேரரசின் முக்கிய காலடித்தடத்தைப் பிலிப்பைன்ஸ் பிரதிநிதித்துவம் செய்தது. கிளார்க் விமானப் படைத்தளம் மற்றும் சுபிக் கடற்படை தளத்தில் இருந்து தான் வாஷிங்டன் அதன் வியட்நாம் போரின் பெரும்பகுதியை நடத்தியது. பிலிப்பைன்ஸில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானங்கள், வியட்நாம் மற்றும் கம்போடியா மற்றும் லாவோஸ் மீது பரவலான குண்டுவீச்சு தாக்குதலை நடத்தின.

அமெரிக்கா ஆட்சி செய்த பிலிப்பைன்ஸ் எல்லையின் பெரும்பாலான முக்கிய பகுதிகளில் இந்த இராணுவ தளங்கள் விடாப்படியாக நிலைத்து வைக்கப்பட்டிருந்தமை, தேசிய இறையாண்மையின் எந்தவொரு சாயலையும் நிலையாக அவமதிக்கும் வகையில் இருந்தன. 1991 இல், பிலிப்பைன்ஸ் செனட் ஒரு வாக்கு வித்தியாசத்தில் குத்தகையைப் புதுப்பிக்க மறுத்து வாக்களித்தது.

ஒபாமா நிர்வாகம் அதன் ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பைத் தொடங்கிய போது, அது சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார பலத்தைக் கட்டுப்படுத்தவும், தலைகீழாக மாற்றவும் இராணுவ வழிமுறைகளைக் கொண்டு முயன்றது. பிலிப்பைன்ஸ் தளங்களை மீளமைப்பது, அமெரிக்க இராணுவ பலத்தைக் காட்ட மிகவும் முக்கியமாக இருந்ததுடன், அந்தத் திட்டங்களில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. 2014 இல் ஒபாமாவுக்கும் மூன்றாம் பெனிக்னோ அக்வினோ நிர்வாகங்களுக்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விரிவான பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம் (EDCA) அந்த முன்னாள் காலனி நாட்டில் மீண்டும் அமெரிக்க இராணுவத் தளங்களை மீளமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் 2016 இல் பதவியேற்ற ரோட்ரிகோ டுரேற்ற, பெய்ஜிங்குடன் நெருக்கமான பொருளாதார உறவுகளைத் தொடர விரும்பியதுடன், வாஷிங்டனின் பல ஆக்கிரோஷமான திட்டங்களை நிராகரித்தார் மற்றும் EDCA உடன்படிக்கையை இரத்து செய்யவும் அச்சுறுத்தினார். அமெரிக்காவுக்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே சிக்கியிருப்பதைக் கண்ட புதிய மார்க்கோஸ் நிர்வாகம், அவ்விரு நாடுகளுடனும் நட்புறவைக் கருதுவதாக வாதிடுகிறது. ஆனால் வாஷிங்டனின் வர்த்தகப் போர் நடவடிக்கைகளும் தைவான் சம்பந்தமான ஆத்திரமூட்டல்களும் ஒட்டுமொத்த ஆசிய பசிபிக் பிராந்தியத்தையும் அடிப்படையில் ஸ்திரமற்றதாக ஆக்கி உள்ளதால், அத்தகைய சமநிலைப்படுத்தும் நடவடிக்கை சாத்தியமில்லை.

மார்கோஸ் நிர்வாகத்தின் விசுவாசத்தைத் தக்க வைப்பதற்காக, பைடென் நிர்வாகம் ஜனநாயக உரிமைகள் மீதான அவரது தாக்குதல்களைக் கண்டு கொள்ளாது என்பதைச் சமிக்ஞை செய்தது. அவர் குடும்பத்தின் மொத்த மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்புடைய வழக்குகளில், அமெரிக்காவின் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக மார்கோஸ் ஜூனியர் 350 மில்லியன் டாலருக்கும் அதிகமான அபராதத்தை முகங்கொடுக்கிறார். செப்டம்பரில் அவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்ததற்காக நீதிமன்ற குற்ற அவமதிப்பு அழைப்பாணை மற்றும் கைது நடவடிக்கையை அவர் எதிர்கொண்டிருக்க வேண்டும், ஆனால் மார்கோஸ் நியூ யோர்க்கிற்கு பாதுகாப்பாக பயணம் செய்வதை பைடென் நிர்வாகம் ஏற்பாடு செய்ததுடன், அங்கே அவர் அமெரிக்க ஜனாதிபதியுடன் நட்புரீதியான ஒரு சந்திப்பை நடத்தினார். ஆயிரக்கணக்கான பிலிப்பினோக்கள் சித்திரவதை செய்யப்பட்டது மற்றும் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாக மார்க்கோஸ் ஜூனியருக்கு எதிரான சட்ட வழக்குகள் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு குறுக்கில் நின்றன, பைடென் ஈவிரக்கமில்லாமல் அவர்களின் உரிமைகளைப் புதைத்துவிட்டார்.

ஹரிஸ் அவரின் பிலிப்பைன்ஸ் விஜயத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விடாப்பிடியான கோரிக்கைகள் மற்றும் அதன் மனித உரிமை பாசாங்குத்தனங்கள் இரண்டையும் அவருடன் எடுத்துச் சென்றார். இன்னும் கூடுதல் இடங்களை அமெரிக்க இராணுவத் தளங்களாகப் பயன்படுத்த மார்க்கோஸ் அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்பது வாஷிங்டன் கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. பென்டகன் பிலிப்பைன்ஸில் அது விரும்பிய ஐந்து இடங்களைத் தேர்ந்தெடுத்து, அது கோரும் பகுதிகளின் ஒரு பட்டியலை உருவாக்கி இருந்தது. அந்தப் பட்டியலை ஹாரிஸ் மார்க்கோஸிடம் வழங்கினார்.

டுரேற்றயின் ஆறு ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் ஏறக்குறைய உயிரிழந்து விட்ட EDCA ஒப்பந்தம், கடிவாளமற்ற நவ-காலனித்துவத்திற்கான ஆவணமாகும். அது ஒரு நிர்வாக ஒப்பந்தம் என்பதோடு, அந்நாட்டில் எந்தவொரு வெளிநாட்டு துருப்புகள் இருப்பதையும் கண்காணிப்பதற்கான பிலிப்பைன்ஸ் செனட்டின் அரசியலமைப்பு அதிகாரத்திற்கு அது குழிபறிக்கிறது.

EDCA ஒப்பந்தம் பிலிப்பைன்ஸ் பிரதேசத்தின் சில பகுதிகளை அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு வழங்குகிறது, ஆனால் அமெரிக்க அதிகாரிகளிடம் அனுமதி கோரி ஒரு பிலிப்பினோ அந்தத் தளங்களை அணுக அங்கீகாரம் ஏற்படுத்தி இருப்பதன் மூலம் பிலிப்பைன் இறையாண்மை குறித்த பாசாங்குத்தனத்தை அது பேண முயல்கிறது. அனைத்து அமெரிக்க இராணுவ அதிகாரிகளும் உள்ளூர் அதிகார வரம்பில் இருந்து சட்ட விலக்கீட்டுரிமைப் பெற்றுள்ளனர்; அதாவது, அவர்கள் பிலிப்பைன்ஸ் சட்டத்திற்கு உட்பட மாட்டார்கள். அந்தத் தளங்களைப் பயன்படுத்த வாஷிங்டன் எந்த வாடகையும் செலுத்தாது, அவர்கள் அந்தத் தளத்தைக் கைவிட விரும்பினால், பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தான் எந்தவொரு 'மேம்பாட்டு' செலவுகளுக்கும் பணம் செலுத்த வேண்டும். அந்த இராணுவத் தளத்தில் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் பணியாளர்கள் அமெரிக்க கண்காணிப்புக்கு உட்பட்டு இருப்பார்கள். அங்கே அமெரிக்கா நிலைநிறுத்தும் இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கையில் எந்த வரம்பும் இல்லை.

பிலிப்பைன்ஸ் இராணுவத் தலைமை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பார்டோலோம் பகாரோ பத்திரிகைகளுக்குக் கூறுகையில், EDCA இன் கீழ் அமெரிக்கா புதிதாகக் கேட்கும் பகுதிகளில் தைவான் ஜலசந்தியின் இரண்டு இடங்களும் உள்ளடங்கும், அதேவேளையில் மீதமுள்ளவை தென் சீனக் கடலை ஒட்டி உள்ளன என்றார். இந்த இடத் தேர்வுகள் சீனாவுடனான போர் தயாரிப்புகளுக்காக செய்யப்படுகின்றன.

மார்க்கோஸ் மற்றும் டுரேற்றவுடனான அவரது சந்திப்புக்குப் பின்னர் ஹாரிஸ் மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமைகள் பற்றிய ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார். அங்கே கூடியிருந்த கூட்டத்தினருக்கு அவர் கூறுகையில், “நினைவில் கொள்ளுங்கள். கடவுள் கொடுத்த நம் உரிமைகளுக்கான உங்கள் போராட்டத்தில் நீங்கள் தனியாக இல்லை,' என்றார். குறிப்பாக அவர் பெண்கள் உரிமைக்காகவும் மற்றும் சிறுமிகள் வன்முறையின்றி வாழ்வதற்குமான போராட்டத்திற்குப் பொறுப்பேற்று இருப்பதாக தெரிவித்தார்.

கத்தோலிக்க திருச்சபையின் ஆட்சி மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது மூர்க்கமான ஜப்பானிய ஆக்கிரமிப்புடன் சேர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியமும் மற்றும் அதன் இராணுவமும் ஏற்படுத்தியதை விட பிலிப்பைன்ஸ் பெண்கள் மீது வேறு எந்த சக்தியும் அதிக வன்முறையை ஏற்படுத்தியதில்லை. ஹரிஸ் திரும்பக் கோரும் அந்த இராணுவத் தளங்கள், அந்த அனைத்து நகரங்களையும் காப்பாற்றி வைத்திருந்தது, ஏனென்றால் விபச்சாரமே அவற்றினது பொருளாதாரத்தின் மையத்தில் வைக்கப்பட்டிருந்தது, அது பத்தாயிரக் கணக்கான துருப்புகளுக்குச் சேவையாற்றியது.

அதற்கடுத்த நாள் ஹரிஸ் பலவான் தீவுக்குச் சென்ற போது, வாஷிங்டனின் தனிச்சிறப்பான கலப்பட பாசாங்குத்தனமும் போர் வெறியும் அதன் உச்சத்தை எட்டின. காடுகள் மற்றும் கடற்கரை ஓய்வு விடுதிகளுக்குப் புகழ் பெற்ற அத்தீவுக்குப் பயணம் செய்த முதல் அமெரிக்க உயர் அதிகாரி இவர் ஆவார். தென் சீனக் கடலுக்கு மிக அருகில் உள்ள இந்த தீவு, EDCA இன் கீழ் வாஷிங்டன் உரிமை கோரும் இடங்களில் ஒன்றாகும்.

ஹரிஸ் ஒரு பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை கப்பலான தெரேசா மக்பானுவாவில் இருந்து, எந்த படைத்துறைசாரா பிலிப்பைன் அதிகாரியும் உடன் இல்லாமல், அங்கே பிலிப்பைன் இராணுவத்தின் அந்தப் பிரிவு விறைப்புடன் நிற்க அவர்களுக்கு ஓர் உரை வழங்கினார். பிலிப்பைன் அமெரிக்க போரில் தளபதியாக இருந்து அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக கொரில்லா எதிர்ப்பை ஒழுங்கமைப்பதற்குத் தலைமை வகித்த ஒரு பிலிப்பினோ பெண்மணியின் பெயரால் அந்தக் கப்பல் பெயரிடப்பட்டு இருந்தது என்றாலும், வாஷிங்டன் அத்தகைய அற்ப வரலாற்று விஷயங்கள் அதன் வேட்கைகளில் தலையிட அனுமதிப்பதில்லை.

'நீங்கள் முன்னணியில் இருக்கிறீர்கள்,' 'சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்குக்காக நிற்கிறீர்கள்,' என்று அவர்களிடம் கூறினார். யாருடைய நலன்களைப் பாதுகாக்க அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு அவர் தெளிவுபடுத்தினார், “அமெரிக்காவின் செழிப்பு ஒவ்வொரு நாளும் இந்த கடல் வழியே செல்லும் பில்லியன் கணக்கான டாலர்களை நம்பியுள்ளது,” என்றார். அமெரிக்கா 'சீனாவின் விரிவான தென் சீனக் கடல் போக்குவரத்து உரிமைகோரல்களை' நிராகரிப்பதாக அவர் வலியுறுத்தினார். இது 'தேசிய இறையாண்மைக்கான' போராட்டம் என்றார்.

என்ன ஒரு கேலிக்கூத்து! அமெரிக்கா வழமையாக வெளிப்படுத்தும் பாசாங்குத்தனம் மற்றும் துணிச்சல் மட்டத்தை உலகில் வேறெந்த நாடும் கனவும் கூட காணாது. பிலிப்பைன்ஸ் எல்லையில் உள்ள பகுதிகளின் ஒரு பட்டியலைச் சமீபத்தில் ஹரிஸ் முன்வைத்திருந்தார், அவற்றின் மீது அமெரிக்க இராணுவம் கேள்விக்கிடமின்றி ஆட்சி செலுத்த கோரி இருந்தது. ஓர் அன்னிய அதிகாரத்தின் மற்றும் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரின் பிரதிநிதியாக அவர், பிலிப்பைன் ஆயுதப் படைகளின் வாகனத்தில் இருந்து 'தேசிய இறையாண்மை' விஷயத்தைக் குறித்து அங்கே கூடியிருந்த சீருடை அணிந்த சிப்பாய்களுக்கு உரையாற்றினார். பிலிப்பைன்ஸ் வரலாற்றில் அதன் தேசிய இறையாண்மைக்கு எப்போதுமே அமெரிக்க ஏகாதிபத்தியமே ஒரே மிகப் பெரிய அச்சுறுதலாக இருந்துள்ளது.

ஹரிஸின் பிலிப்பைன்ஸ் விஜயம், மார்க்கோஸ் உடனான சந்திப்பு மற்றும் இராணுவத் தளங்களைக் கோருதல் ஆகியவை அப்பட்டமாக வாஷிங்டன் திட்டங்களின் சாரத்தை அம்பலப்படுத்துகிறது. சீனாவுடன் பைடென் நிர்வாகம் எந்த தந்திரோபாய சூழ்ச்சியில் ஈடுபட்டாலும், வார்த்தைஜாலங்களில் அது தற்காலிகமாக என்ன மாற்றங்களைச் செய்தாலும், வாஷிங்டன் ஏற்றுள்ள ஒரு மூலோபாயம் போருக்கு வழிவகுப்பதுடன், ஆயுதமேந்திய மோதல் வெடிப்பதற்கு அது செயலூக்கத்துடன் சடரீதியான தயாரிப்புகளைச் செய்து வருகிறது.

Loading