பிலிப்பைன்ஸ் இராணுவம் நீண்டகால ஒப்பந்தத்தை மீறி, படைகளை பல்கலைக்கழகங்களுக்குத் திரும்ப அனுப்புகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 15 ம் தேதி, பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் டெல்ஃபின் லோரென்சானா, பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் (UP) தலைவர் டானிலோ கொன்செப்சியனுக்கு எழுதிய கடிதத்தில், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்திற்குள் இராணுவப்படைகள் புகுவதை தடைசெய்யும் பாதுகாப்புத்துறைக்கும் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான நடைமுறையிலுள்ள ஒரு உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக கைவிடுவதாக அறிவித்தார்.

லோரென்சானா 30 ஆண்டுகளுக்கும் மேலான தடைக்கு பின்னர் அரசு பல்கலைக்கழக வளாகங்களில் இராணுவத்தின் புதுப்பிக்கப்பட்ட ஊடுருவல்களை நியாயப்படுத்துவதற்காக அரசியல்ரீதியாக அச்சுறுத்தும் மொழியை, மாணவர்களை "கம்யூனிஸ்டுகள்" என்று முத்திரைகுத்த பயன்படுத்தினார். வளாகங்கள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அவரால் பெயரிட்டப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியால் "இரகசிய ஆட்சேர்ப்பு" செய்யப்படும் இடங்கள் என்று அவர் அறிவித்தார். "பிலிப்பைன்ஸ் மக்களின் எதிரிகளுக்கு எதிராக இளைஞர்களை" பாதுகாக்க “இராணுவம் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழக வளாகங்களில் தனது பிரசன்னத்தை நிறுவும்” என்றார்.

பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் மதிப்புமிக்க அரச பல்கலைக்கழக அமைப்பாகும். இது 1908 ஆம் ஆண்டில் அமெரிக்க காலனித்துவ காலத்தில் நாடு முழுவதும் பல வளாகங்கள் நிறுவப்பட்டபோது உருவாக்கப்பட்டதாகும். அதன் முன்னுதாரணமான மெட்ரோ மணிலாவின் கியூசன் நகரில் உள்ள பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகமான டிலிமான் கடந்த அரை நூற்றாண்டுகளாக நாட்டின் மாணவர் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

1989 உடன்படிக்கைக்கு முன்னர், இராணுவம் தனது படைகளை வளாகத்தில் முழு தாக்குதல் தயார்நிலையுடன் வழக்கமாக நிலைநிறுத்தியது. மாணவ செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர் அல்லது ‘காணாமல் போனார்கள்.’ ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் மாணவர் ஆர்ப்பாட்டக்கார்கள் மீது படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஜூன் 1989 இல், கொராஸன் அக்கினோ நிர்வாகத்தின் கீழ், வளாகத்தின் மாணவர் மையமான வின்சன்ஸ் ஹாலில் இருந்து வளாக இதழான Philippine Collegian இற்காக எழுதும் மாணவர் பத்திரிகையாளரான டொனாடோ கொன்டினண்டவை இராணுவம் கடத்தியது. கொன்டினண்ட சித்திரவதை செய்யப்பட்டு அமெரிக்க இராணுவ கேணல் ஜேம்ஸ் ரோவின் படுகொலைக்கு ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரோவ், நாட்டில் கிளர்ச்சி எதிர்ப்பு சக்திகளைப் பயிற்றுவித்து வந்தார். அவர் அப்போது மணிலாவில் இயங்கிக்கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்ப்புற தாக்குதல் அணியான Alex Boncayao படையணியால் பதுங்கியிருந்து தாக்கி கொல்லப்பட்டார்.

கொன்டினண்டவை கடத்திச் சென்றது குறித்த குழப்பத்தின் விளைவாக, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் பிடல் ராமோஸ் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டார். அதில் பல்கலைக்கழக அதிகாரிகளின் வேண்டுகோள் இல்லாமல் இராணுவமும் காவல்துறையும் எந்தப் படைகளையும் “தேடுதல் நடவடிக்கை மற்றும் அதுபோன்ற அவசரகால நிகழ்வுகள் போன்றவை” தவிர அரசு பல்கலைக்கழக வளாகங்களில் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என குறிப்பிடப்பட்டது.

லோரென்சானா இப்போது இந்த ஒப்பந்தத்தை கிழித்துவிட்டார். ஜனவரி 18 திங்கட்கிழமை அவரது கடிதம் பகிரங்கமானபோது, வளாகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் எழுந்த எதிர்ப்புக்களால் உடனடியாக வரவேற்கப்பட்டது. ஹேஷ்டேக்குகளான #DefendUP மற்றும் #UPFight விரைவாக பரவலாக தொடங்கின.

போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் லோரென்சானா தனது அச்சுறுத்தும் கம்யூனிச எதிர்ப்பு வார்த்தைப் பிரயோகத்தை கூர்மைப்படுத்தினார். செவ்வாயன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார், அதில் அவர் 1989 ஒப்பந்தம் "வழக்கற்றுப் போய்விட்டது" என்றும் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் "அரசின் எதிரிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறிவிட்டது" என்றும் அறிவித்தார்”.

"நகர்ப்புற தோட்டக்கலை" பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கப் போகிறார்கள் என்ற அபத்தமான சாக்குப்போக்கின் கீழ், கனரக ஆயுதமேந்திய படையினரின் வாகனங்களில் உருமறைப்பு ஆடைகளில் திலிமான் வளாகத்திற்கு (Diliman campus) அனுப்பும் வாய்ப்பை இராணுவம் புதன்கிழமை பயன்படுத்தியது.

1989 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழக-தேசிய பாதுகாப்புத் துறை (DND) ஒப்பந்தத்தை இரத்து செய்வது, நாட்டின் பாசிச அதிபர் ரோட்ரிகோ டுரேற்றவின் நிர்வாகத்தால் நடத்தப்படும் எதிரிகளை கறுப்பு பட்டியலிடும் மற்றும் அடக்குமுறை பிரச்சாரத்தில் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் ஆகும். கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்திற்காகவும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து இயங்குவதாக குற்றம்சாட்டப்பட்டவர்களை தண்டிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட பெரிதும் நிதியளிக்கப்பட்ட அரசாங்க அமைப்பான உள்ளூர் கம்யூனிஸ்ட் ஆயுத மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேசிய பணிக்குழுவை (NTF-ELCAC) உருவாக்குவதை டுரேற்ற மேற்பார்வையிட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளில், 30,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள "போதைப்பொருட்களுக்கு எதிரான போர்" என்ற பெயரில் காவல்துறை, இராணுவம் மற்றும் துணை இராணுவ குழுக்கள் நடத்திய ஏழைகளுக்கு எதிரான பாரிய கொலை மற்றும் அடக்குமுறை பிரச்சாரத்தை டுரேற்ற நிர்வாகம் மேற்பார்வையிட்டுள்ளது.

டுரேற்ற நிர்வாகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் மேலாக எழுச்சியுறும் வெகுஜன சமூக அமைதியின்மைக்கு எதிரானவையாகும். டுரேற்ற நிர்வாகத்தின் பாசிச மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகள் கடுமையான சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கத்தால் செயற்படுத்தப்படும் சர்வாதிகார ஆட்சிக்கான மாற்றத்தின் ஒரு தேசிய வெளிப்பாடாகும்.

டுரேற்ற தனது நிர்வாகத்தின் ஆரம்ப கட்டங்களில் ஸ்ராலினிச பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெற்றார். ஆனால் இராணுவத்தின் கடுமையான அழுத்தத்தின் கீழ், குறிப்பாக லோரென்சானாவினால், டுரேற்ற பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொண்டு, அதன் அரசியல் தலைமையுடன் இணைந்த அமைப்புகளுக்கு எதிராக அரசின் கொலைகார எந்திரத்தை நோக்கி திரும்பினார்.

"கம்யூனிஸ்டுகள்" என்று குற்றம் சாட்டப்பட்ட அங்கத்தவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டுடன் பிணைக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கு எதிராக அதிகரித்து வரும் தாக்குதல்கள் பிலிப்பைன்ஸ் ஆளும் உயரடுக்கில் கூர்மையான பதட்டங்களை வெளிப்படுத்துகின்றன.

டுரேற்ற உடனான பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறவுகள் துண்டிக்கப்பட்டபோது, கட்சி அவரது முதலாளித்துவ போட்டியாளர்களை நோக்கித்திரும்பி, இப்போது எதிர்க்கட்சியான தாராளவாத கட்சி மற்றும் அதன் தலைமையான துணைத் தலைவர் லெனி ரோபிரெடோவுடன் ஒரு உண்மையான கூட்டாக செயல்படுகிறது. பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மற்றும் தத்துவார்த்த தலைவரான ஜோஸ் மரியா சிஸன், டுரேற்றவிற்கான ஆதரவைத் திரும்பப் பெறவும், துணை ஜனாதிபதியை பதவியில் அமர்த்தவும் இராணுவத் தலைமையின் தீவிரமான பிரிவுகளுக்கு அழைப்பு விடுத்து கடந்த ஆண்டு பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழக வளாகங்களுக்கு பிலிப்பைன்ஸ் இராணுவம் திரும்புவது என்பது உயரடுக்கின் போட்டி பிரிவுகளுக்கிடையில் நடந்து வரும் போராட்டத்திலும், சர்வாதிகார ஆட்சியை நோக்கிய மற்றொரு படிக்கான புதிய தயாரிப்பாகும்.

நேரடி இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கு டுரேற்ற எடுத்த நகர்வுகள் மிகவும் முன்னேறியுள்ளன. பிலிப்பைன்ஸ் இராணுவம் இப்போது அரை தன்னாட்சி முறையில் செயல்படுகிறது. ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் ஹாரி ரோக் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழக உடன்படிக்கை இரத்து செய்யப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் லோரென்சானா ஆலோசிக்கவில்லை. எவ்வாறாயினும், லோரென்சானா டுரேற்றவின் "நம்பிக்கையான நண்பன்" என்று அவர் மேலும் கூறினார். எனவே "நிச்சயமாக, செயலாளர் லோரென்சானாவின் முடிவை ஜனாதிபதி ஆதரிக்கிறார்" என்றார்.

Loading