நேட்டோ உச்சிமாநாடு ரஷ்யாவின் எல்லைகளுக்கு துருப்புக்களை அனுப்புவதைத் தொடர உறுதியளிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் செவ்வாயன்று ருமேனியாவின் புக்காரெஸ்டில் வருங்கால நேட்டோ உறுப்பினர்களான உக்ரேன், பின்லாந்து மற்றும் சுவீடன் பிரதிநிதிகளை சந்தித்து, உக்ரேனில் ரஷ்யாவுடன் நேட்டோ போரை மேலும் விரிவுபடுத்துவது மற்றும் ரஷ்யாவின் மேற்கு எல்லைகளில் அதிக துருப்புக்களை நிறுத்துவது குறித்து விவாதித்தனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், 'உக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, நாங்கள் எங்கள் துருப்புக்களின் தயார்நிலையை உயர்த்துகிறோம்.” மேலும், “பிரான்ஸ் தலைமையிலான ருமேனியாவில் உள்ள துருப்புகள் உட்பட, நாங்கள் நேட்டோ போர்க்குழுக்களின் எண்ணிக்கையை நான்கிலிருந்து எட்டாக இரட்டிப்பாக்கியுள்ளோம்.” எனக் கூறினார்.

நேட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு கிராஃபிக் படம், இராணுவக் கூட்டணியின் 'கிழக்கு பக்கத்தை' காட்டுகிறது. [Photo: NATO]

'நாங்கள் தரையில் எங்கள் நிலைநிறுத்தலை அதிகரித்துள்ளோம், வானில் அதிக நிலைநிறுத்தம் உள்ளது' என ஸ்டோல்டன்பேர்க் கூறினார்.

அவர் தொடர்ந்தார், “கடந்த வாரம்தான், ஸ்பானிய, துருக்கிய மற்றும் அமெரிக்க விமானங்கள், அத்துடன் சார்லஸ் டு கோல் என்ற விமானம் தாங்கி கப்பலில் இருந்து பறக்கும் பிரெஞ்சு ஜெட் விமானங்கள் உட்பட, நேட்டோ நட்பு நாடுகள் ருமேனியாவில் வான் மற்றும் ஏவுகணைத் தடுப்புகளை சோதிக்கும் ஒரு பயிற்சியை மேற்கொண்டன. இது, நேட்டோ நட்பு நாடுகள் எவ்வாறு ஒன்றாகச் செயல்படுகின்றன மற்றும் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்கத் தயாராக உள்ளன, அத்துடன் நேட்டோ நட்பு நாடுகளுக்கு மேலே உள்ள வான்வெளியையும் கூட எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை நிரூபிக்கிறது.

'நேட்டோ நட்பு நாடுகளுக்கு மேலே உள்ள வான்வெளி' வேகமாக விரிவடைகிறது, ஸ்டோல்டன்பேர்க் பின்லாந்து மற்றும் சுவீடனை நேட்டோவின் உறுப்பினர்களாகக் கருதுகிறார். அவர் அறிவித்தார், 'நேட்டோவில் அவர்களின் உறுப்பினர் நிலை என்பது ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பிற்கான விளையாட்டு மாற்றியாகும். இது அவர்களைப் பாதுகாப்பாகவும், நமது கூட்டணியை வலுவாகவும், யூரோ-அட்லாண்டிக் பகுதியை மேலும் பாதுகாப்பாகவும் மாற்றும்.”

ரஷ்யாவுடனான போரில் நேட்டோவின் ஈடுபாட்டை ஸ்டோல்டென்பேர்க் இரட்டிப்பாக்கினார், 'எனவே புக்காரெஸ்டில் இருந்து எங்களின் செய்தி என்னவென்றால், நேட்டோ உக்ரேனுடன் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நிற்கும். நாங்கள் பின்வாங்க மாட்டோம்” என்றார்.

திரைக்குப் பின்னால், போரில் விரிவாக்கப்பட்ட நேட்டோ ஈடுபாட்டின் இந்த பொதுவான உறுதிமொழிகள், அமெரிக்க போர் விமானங்கள், நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் தாக்குதல் ட்ரோன்களை போர் மண்டலத்திற்குள் அனுப்புவதற்கான உறுதியான விவாதங்கள் மூலம் நிரப்பப்படுகின்றன.

புளூம்பேர்க்கில் வெளிவந்த ஒரு கட்டுரையில், ஐரோப்பாவிற்கான நேட்டோவின் நேச நாடுகளின் முன்னாள் உயர் தளபதி ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ், 'மேற்கின் சிறந்த வழி, மோதலின் வான்வழிப் போரில் உக்ரேனுக்கு அதன் உதவியை கணிசமாக அதிகரிப்பதே' என்று அறிவித்தார்.

உக்ரேனுக்கு அமெரிக்க போர் விமானங்களை அனுப்புவது குறித்து நேட்டோ உறுப்பினர்கள் தீவிரமாக விவாதித்து வருவதாக ஸ்டாவ்ரிடிஸ் கூறினார், 'நேட்டோ தலைநகரங்களில் உள்ள தலைவர்களும் போரின் ஆரம்ப நாட்களில் கைவிடப்பட்ட ஒரு யோசனையை மறுபரிசீலனை செய்கிறார்கள்: MiG-29 சோவியத் கால போர் விமானங்களை (போலந்து அவற்றை உக்ரேனியர்களுக்கு மாற்ற முன்வந்தது) அல்லது அமெரிக்காவிடமுள்ள மேலதிகமான F-16 போர் விமானங்கள், இது கற்றுக்கொள்வதற்கு எளிதான பல-பங்கு வகிக்கக்கூடிய போர் விமானம்.'

புளூம்பேர்க்கிற்கு அளித்த பேட்டியில், லாத்வியன் வெளியுறவு மந்திரி கேப்ரியலியஸ் லாண்ட்ஸ்பேர்கிஸ் (Gabrielius Landsbergis), ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க உக்ரேனை நேட்டோ 'அனுமதிக்க வேண்டும்' என்று கூறினார். ரஷ்யாவின் பதிலுக்கு நேட்டோ 'அஞ்சக்கூடாது' என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டத்திற்கு முன்னதாக, லாண்ட்ஸ்பேர்கிஸ் ட்வீட் செய்தார், 'இன்றைய நேட்டோ கூட்டத்தில் சக வெளியுறவு மந்திரிகளுக்கு எனது செய்தி எளிதானது: அமைதியாக இருங்கள், டாங்கிகளை கொடுங்கள்.'

இத்தகைய அழைப்புகள், உக்ரேனிய அதிகாரிகளின் கோரிக்கைகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டவை. “நா வன்மையான எந்த சொற்பொழிவும் உறுதியான நடவடிக்கையை விட அதிகம் பேசாது” “உக்ரேனுக்கு 'Patriot’, ‘F-16’, அல்லது ‘Leopard’,' என்று உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கேலோ பொடோலியாக் ட்வீட் செய்துள்ளார் – அவர் அமெரிக்க F-16 போர் விமானங்கள் மற்றும் ஜேர்மன் லியோபார்ட் போர் டாங்கிகளை குறிப்பிடுகிறார்.

இதற்கிடையில் அமெரிக்க செனட்டர்கள் குழு, 'கிரே ஈகிள்' என்று அழைக்கப்படும் உக்ரேனுக்கு ஆபத்தான தாக்குதல் ஆயுத ட்ரோன்களை வழங்குமாறு அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்து ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது.

மிக முக்கியமாக, ஆயுதமேந்திய ஆளில்லா வான்வழி அமைப்புகள் (Unmanned Aerial Systems - UAS) கருங்கடலில் ரஷ்ய போர்க்கப்பல்களைக் கண்டுபிடித்து தாக்க முடியும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

'MQ-1C, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நீண்ட தூர சுடு திறன்களுடன், ரஷ்யப் படைகளை வெளியேற்றுவதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை மீண்டும் பெறுவதற்கும் உக்ரேனுக்கு கூடுதல் சேதத்தை ஏற்படுத்தும் திறனை அளிக்கிறது' என்று அவர்கள் அறிவிக்கின்றனர்.

கையொப்பமிட்டவர்களில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் முக்கிய செனட் கூட்டாளியான ஜோ மஞ்சின் மற்றும் ட்ரம்பின் கூட்டாளியான லிண்ட்சே கிரஹாம் ஆகியோர் அடங்குவர்.

மோதலைச் சுற்றியுள்ள பதட்டத்தின் அளவைக் குறிக்கும் வகையில், இந்த வாரம் ரஷ்யா, அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை கடைசி நிமிடத்தில் இரத்து செய்தது.

துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் கூறுகையில், “இந்த மோதலில் அமெரிக்கர்களின் விரிவாக்கம் மற்றும் அவர்களின் எப்போதும் ஆழமான ஈடுபாடு ஆகியவை விளைவுகள் நிறைந்தவை என்பதற்கான சமிக்ஞைகளை நாங்கள் அவர்களுக்கு அனுப்புகிறோம். அபாயங்கள் அதிகரித்து வருகின்றன' என்றார்.

மோதலில் அமெரிக்கா மேலும் மேலும் நேரடியாக தலையிடுவதால், அதன் இராணுவ மூலோபாயவாதிகள் தங்கள் நோக்கங்களை இன்னும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றனர். 'உக்ரேனுக்கு அமெரிக்க உதவி: ஒரு முதலீடு அதன் பலன்கள் அதன் செலவை பெரிதும் மீறுகிறது' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் மூத்த அமெரிக்க புவிசார் மூலோபாய நிபுணர் அந்தோனி எச். கோர்ட்ஸ்மன் 'உக்ரேனில் நடக்கும் போர் ரஷ்யாவுடனான பினாமிப் போருக்குச் சமமாகிவிட்டது' என்று ஒப்புக்கொள்கிறார்.

'உக்ரேனுக்கு உதவுவதன் மூலம் அமெரிக்கா ஏற்கனவே பெரும் மூலோபாய நன்மைகளைப் பெற்றுள்ளது' என்று கோர்ட்ஸ்மன் விளக்குகிறார், அதே நேரத்தில் 'ரஷ்யா ஏற்கனவே அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளை விட உக்ரைனில் போரை எதிர்த்துப் போராட அதன் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தில் மிக அதிகமாக செலுத்துகிறது. ஆயுதங்கள், போர் இருப்புக்கள் மற்றும் இராணுவ வீரர்களின் பாரிய இழப்புகளை சந்தித்துள்ளது.”

கோர்ட்ஸ்மனின் கட்டுரை ரஷ்ய துருப்புக்களின் இறப்புகளையும் ரஷ்ய பொருளாதாரத்தின் பேரழிவையும் ஒரு நன்மையாகக் கருதும் அதே வேளையில், அது உக்ரேனிய உயிர்களின் விலை அல்லது போரினால் உக்ரேனிய மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களில் இது எங்கும் காரணியாக இல்லை.

அமெரிக்காவும் நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவில் ஆயுதங்களைத் தொடர்ந்து செலுத்தி வரும் நிலையில் கூட, ரஷ்யா பல வாரங்களாக உக்ரேனின் மின்சாரம் மற்றும் நீர் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. இதனால் கியேவின் தலைநகரின் பெரும்பகுதி உட்பட மில்லியன் கணக்கான மக்கள் உறைபனி குளிரில் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.

Loading