பூட்டுதல் எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னர் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்குவதற்கு சீனா தீவிரமாகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வார இறுதியில் பல சீன நகரங்களில் நடந்த போராட்டங்களை அடுத்து, நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் (NHC) செவ்வாயன்று நடத்திய ஒரு செய்தியாளர் மாநாட்டில், நவம்பர் 11 அன்று அறிவிக்கப்பட்ட 20 நடவடிக்கைகளை விரைவாக அமல்படுத்த அழைப்பு விடுத்தது, இது கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்த பல நோய்தொற்று வெடிப்புகளை அடக்கிய நாட்டின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்கத் தொடங்கியது.

செப்டம்பர் 22, 2022, வியாழக்கிழமை, பெய்ஜிங்கில் உள்ள ஒரு கொரோனா வைரஸ் பரிசோதனைத் தளத்தில், முகக்கவசம் அணிந்த குடியிருப்பாளர்கள் தங்களின் வழமையான கோவிட்-19 தொண்டைத் துடைப்பு பரிசோதனைக்கு வரிசையில் காத்திருக்கிறார்கள் [AP Photo/Andy Wong]

அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் செய்தியிதழில் வெளியான ஒரு கட்டுரை, “தொற்றுநோயால் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, தொற்றுநோய் எதிர்ப்பு மேலாண்மை சரியான நேரத்தில் அகற்றப்பட வேண்டும் என தேசிய சுகாதார ஆணையத்தின் (NHC) செய்தித் தொடர்பாளர் மை பெங் கூறியுள்ளார்” எனக் குறிப்பிட்டது.

‘20 நடவடிக்கைகளை’ ‘போதுமான விஞ்ஞான அடிப்படையும் ஆதாரமும் ஆதரிக்கின்றன’ என்றும், கோவிட்-19 வெடிப்புகளை முழுமையாக அடக்குவதை நோக்கமாகக் கொண்டது என்றும் செங் வலியுறுத்தினார், ஆனால் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தமக்காகப் பேசுகின்றன. கடந்த வாரத்தில், சீனா தினசரி புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களின் உச்சபட்ச எண்ணிக்கைகளை பலமுறை எதிர்கொண்டது, செவ்வாயன்று மட்டும் அங்கு 38,421 புதிய நோய்தொற்றுக்கள் உத்தியோகபூர்வமாக பதிவாகியுள்ளன.

சர்வதேச தரத்தில் இன்னும் குறைவாக இருந்தாலும், பாரிய பரிசோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் தனிமைப்படுத்தல் வழிகாட்டுதல்கள், பூட்டுதல்கள் மற்றும் கடுமையான எல்லை மேலாண்மை போன்ற முந்தைய பயனுள்ள நடவடிக்கைகளை தளர்த்துவதற்கான சீனாவின் நகர்வுகளானது, 1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் பாரியளவில் நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் அதிகரிப்பதற்கான உண்மையான ஆபத்தை முன்வைக்கின்றன.

அபாயங்களை மறைமுகமாக அங்கீகரிக்கும் வகையில், குறைந்த தடுப்பூசி விகிதங்கள் காரணமாக குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய வயோதிபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு NHC அழுத்தம் கொடுக்கிறது. இருப்பினும், தடுப்பூசி மட்டும் மூலோபாயம் உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளில் உருவெடுத்த தொற்றுநோய்கள் மற்றும் இறப்புக்களின் அலைகளைத் தடுக்கத் தவறிவிட்டது.

குறிப்பிடத்தக்க வகையில், ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் கடந்த வியாழன் அன்று அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து வார இறுதியில் நடைபெற்ற ஒப்பீட்டளவில் சிறிய, நடுத்தர வர்க்க எதிர்ப்புக்கள் பற்றி குளோபல் டைம்ஸ் எதுவும் குறிப்பிடவில்லை. 18 நகரங்களில் நடந்த போராட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர், சில சந்தர்ப்பங்களில் ஆயிரத்திற்கு சற்று குறைவாக மக்கள் ஈடுபட்டனர், மேலும் தீ விபத்தில் ஏற்பட்ட 10 இறப்புகளுக்கு கோவிட் எதிர்ப்பு கட்டுப்பாடுகள் தான் காரணம் என்று நிரூபிக்கக்கூடிய தவறான கூற்றுக்களும் பகுதியளவில் போராட்டங்களுக்கு எரியூட்டின.

ஆர்ப்பாட்டங்கள் வேறுபட்ட கூறுகளைக் கொண்டிருந்தாலும், சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பிரச்சாரத்தின் உண்மையான போக்கில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஊடகங்களில் எடுக்கப்பட்ட கோவிட் கட்டுப்பாடுகளிலிருந்து 'சுதந்திரம்' என்ற கோரிக்கையே ஆதிக்கம் செலுத்தும் கருப்பொருளாக இருந்தது. இந்த எதிர்ப்புக்கள், பூஜ்ஜிய-கோவிட் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், மற்றும் உலகின் பிற பகுதிகளில் அவை நடைமுறையில் இல்லாததை சுட்டிக்காட்டும் வகையில் சீனாவில் சமூக ஊடகங்களில் பெரும்பாலும் நடுத்தர வர்க்க அடுக்குகளிடையே நடந்துவரும், பிற்போக்குத்தனமான பிரச்சாரத்தை பிரதிபலிக்கின்றன, அதேவேளை கோவிட் நோயால் ஏற்படும் பேரழிவுகர விளைவுகளையும், பெரும் உயிரிழப்புகளையும் அவை புறக்கணிக்கின்றன.

எதிர்ப்புக்கள் தெளிவாக தன்னியல்பானவை அல்ல. உதாரணமாக, ஷாங்காய் நகரில் சமூக ஊடகங்களில் டெலிகிராம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரணி தெளிவாக வெளிநாட்டு ஊடகங்களை நோக்கியதாக இருந்தது, அதாவது நியூ யோர்க் டைம்ஸ், CNN மற்றும் Associated Press, அத்துடன் கம்யூனிச எதிர்ப்பு Epoch Times மற்றும் CIA உடன் இணைக்கப்பட்ட Radio Free Asia போன்ற ஊடகங்களைச் சென்றடைவதற்கு அதன் உறுப்பினர்களை ஒரு குறிப்பிட்ட செய்தியுடன் ஊக்குவிக்கிறது.

சீன மக்களின் குரலாக இருப்பதற்கு மாறாக, சில ஆர்ப்பாட்டங்களின் காணொளிகள் உள்ளூர்வாசிகள் எதிர்ப்பாளர்களை கண்டிப்பதையும், பூஜ்ஜிய-கோவிட் கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அவர்களின் கோரிக்கைகளை கண்டிப்பதையும் காட்டுகின்றன.

நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் தனிநபர் விகிதங்களை உலகிலேயே மிகக் குறைவாக தக்கவைத்துக் கொண்டுள்ள பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு அதிகளவு அரசியல் பாதுகாப்பு வழங்குவதற்கு மாறாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) அரசாங்கமும், அரசுக்குச் சொந்தமான ஊடகங்களும் போராட்டங்கள் குறித்து பகிரங்கமாக எதுவும் கூறவில்லை. சர்வதேச ஊடகங்களில் நடத்தப்படும் பிரச்சாரப் பிரளயத்திற்கும் எந்த பதிலும் இல்லை.

நேற்று ஒரு வெளியுறவு அமைச்சக சுருக்கச் செய்தியாளர் கூட்டத்தில் எதிர்ப்புகள் பற்றி கேட்கப்பட்டதற்கு, செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், சீன குடிமக்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அனுபவிக்கின்றனர், ஆனால் அவை “சட்டத்தின் கட்டமைப்பிற்குள் பயன்படுத்தப்பட வேண்டும்” என சாதுர்யமாக கூறினார்.

அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் பின்பற்றப்படுவது போன்ற தொற்றுநோய் ‘தடையின்றி பரவட்டும்’ என்ற அதே குற்றவியல் கொள்கையை சீன அரசாங்கமும் படிப்படியாக ஏற்றுக்கொண்டு வருகிறது என்பதற்கு, செவ்வாய்க்கிழமை நடந்த NHC சுருக்கச் செய்தியாளர் கூட்டத்துடன், எதிர்ப்புகள் மீதான உத்தியோகபூர்வ மௌனம் மற்றொரு அறிகுறியாகும். அது பூஜ்ஜிய-கோவிட் கொள்கையிலிருந்து விலகிச் செல்லும்போது, ஆட்சி விரும்பும் கடைசி விஷயம், அதன் மட்டுப்படுத்தல்கள் மற்றும் தனிப்பட்ட சிரமங்கள் ஒருபுறமிருக்க, பெரும்பான்மையான மக்களால் பரவலாகவும் பொறுமையாகவும் ஆதரிக்கப்படும் கொள்கையைப் பற்றி பொது விவாதமாகும்.

செல்வந்த, சுய-மைய நடுத்தர வர்க்க அடுக்குகளின் ‘சுதந்திரத்திற்கான’ அழைப்புகள் தொழிலாள வர்க்கத்தின் அணுகுமுறைக்கு முற்றிலும் மாறுப்பட்ட போக்காகும். கடந்த வாரம் ஷெங்ஷோவுவில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், ஊதியம் மற்றும் ஊக்க ஊதியங்கள் குறித்த வாக்குறுதிகள் மற்றும் பயங்கரமான வேலை, வாழ்க்கை நிலைமைகளை நிறுவனம் மீறியதால் மட்டுமல்லாமல், COVID-19 நோய்த்தொற்றுகளுக்கு எதிராக அதன் ஊழியர்களை போதுமான அளவில் பாதுகாக்கத் தவறியதாலும் உந்தப்பட்டன.

‘பூஜ்ஜிய-கோவிட் கொள்கையிலிருந்து சீனா வெளியேறுவதை ஆர்ப்பாட்டங்கள் துரிதப்படுத்துகின்றன’ என்ற தலைப்பில் ஆசியாடைம்ஸ் நாளிதழில் நேற்று வெளியான ஒரு கட்டுரை, பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை தளர்த்துவதற்கான முடிவுகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரஸூக்கு முன்னதாகவே எடுக்கப்பட்டன, ஆனால் ‘ஓமிக்ரோன் நோய்தொற்றுக்கள் அதிகரித்து வரும் மற்றும் போராட்டங்கள் கைமீறிப் போக அச்சுறுத்தும் நிலையில், இந்த விஷயம் மிகவும் அவசரமாகிவிட்டது’ என்று அநாமதேய சீன ஆதாரங்கள் தெரிவித்ததை மேற்கோள் காட்டியது.

கட்டுரை மேலும், “ஆதாரங்களின்படி, பெய்ஜிங் தொற்றுநோயின் முடிவை முறையாக அறிவிக்கவுள்ள மற்றும் கோவிட் நோயை ஒரு உள்ளூர் நிரந்தர தொற்றுநோயாக வகைப்படுத்தவுள்ள ஜனவரி மாதத்தில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை மேலும் தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது மிக முன்னதாகவே திட்டமிடப்பட்டது” என்று குறிப்பிட்டது.

பெய்ஜிங், குவாங்ஷோவு, சோங்கிங் மற்றும் ஷெங்ஷோவு உள்ளிட்ட முக்கிய சீன நகரங்கள், NHC அதிகாரிகள் ‘புதிய உகந்த நடவடிக்கைகள்’ என்று அழைத்த நடவடிக்கைகளை ஏற்கனவே முன்னெடுத்து வருகின்றன, அவை வரையறுக்கப்பட்ட, உள்ளூர்மயமாக்கப்பட்ட பூட்டுதல்களுக்கு சாதகமாக கடந்த காலங்களில் நோய்தொற்று வெடிப்புகளை திறம்பட கட்டுப்படுத்திய நகர அளவிலான பூட்டுதல்கள் முடிவுக்கு வருவதைக் குறிக்கின்றன.

சீனாவில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை நீக்கப்படுவது, மேற்கத்திய ஊடகங்களில் பண்டிதர்கள் மீண்டும் மீண்டும் அறிவிப்பது போல, இந்தக் கொள்கையின் தோல்வியின் விளைவு அல்ல, மாறாக அது செயல்படுத்தப்பட்டுள்ள தேசிய கட்டமைப்பின் மட்டுப்படுத்தல்கள் தான் அதற்கு காரணம்.

சீனாவில் நோய்தொற்று அலைகள் மீண்டும் மீண்டும் உருவெடுப்பது, உலகின் பிற பகுதிகளில் பில்லியன் கணக்கானவர்களுக்கு நோய்தொற்று ஏற்படும் வகையிலும் மில்லியன் கணக்கானவர்கள் இறக்கும் வகையிலும் மக்கள் மத்தியில் வைரஸ் வெடித்துப் பரவ அனுமதிக்கப்படுவதன் நேரடி விளைவாகும் – அதேவேளை புதிய, அதிக தொற்றும் தன்மையுள்ள மற்றும் நோயெதிர்ப்பு-தவிர்ப்புத் திறன் கொண்ட மாறுபாடுகள் இனப்பெருக்கம் அடைவதற்கும் அது களம் அமைத்துக் கொடுக்கிறது.

வைரஸ் பரவுவதை திறம்பட நிறுத்திய கொள்கைகளை நியூசிலாந்து மற்றும் வியட்நாம் போன்ற பிற நாடுகள் கைவிடுவதற்கு வழிவகுத்தது போலவே, சீன மக்களிடையே வைரஸ் தடையின்றி வெடித்துப் பரவும் வகையில் சீன அரசாங்கமும் அதே பெரும் அழுத்தங்களுக்கு அடிபணிகிறது. பல தசாப்தங்களாக முதலாளித்துவ மறுசீரமைப்பிற்கு தலைமை தாங்கி வரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, உழைக்கும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையை விட இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தும் சக்திவாய்ந்த பெருநிறுவன நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

ஐபோன் நகரம் என அழைக்கப்படும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் தாயகமான ஜெங்ஜோ, கோவிட் எதிர்ப்பு கட்டுப்பாடுகளை மேலும் எளிமையாக்கிய முதல் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலவரப்படி, இயக்கக் கட்டுப்பாடுகள் என்றழைக்கப்படுவனவற்றை, அதாவது பூட்டுதல்கள், மற்றும் ‘சாதாரண கோவிட்-எதிர்ப்பு நடவடிக்கைகளை’ – வேறுவிதமாகக் கூறினால், புதிய வரையறுக்கப்பட்ட ‘20 நடவடிக்கைகளை’ நகரம் அகற்றும். விடுமுறை கால கொள்முதல் பருவகாலத்தில் சமீபத்திய ஐபோன் மாடலின் உற்பத்தியை அதிகரிக்க ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆப்பிள் நிறுவனம், சந்தேகத்திற்கு இடமின்றி நகரின் நடவடிக்கைக்கு நன்றியுள்ளதாக இருக்கும்.

Loading