முன்னோக்கு

சீனாவில் போராட்டங்களும், பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைக் கைவிடுதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வார இறுதியில், பல சீன நகரங்களில் போராட்டங்கள் நடந்தன, அவற்றில் பெரும்பாலானவை பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்களை மையமாக கொண்டிருந்தன. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், இந்த ஆர்ப்பாட்டங்கள் மிகப் பெரியளவில் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஜி ஜின்பிங் ஆட்சியின் சர்வாதிகாரத் தன்மையின் அடிப்படையில் பார்த்தால், அந்தப் போராட்டங்கள் குறிப்பிடத்தக்க அரசியல் சம்பவங்களாகும், சமீபத்தில் முடிந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) மாநாட்டில் ஜி சித்தரித்துக் காட்ட முயன்ற உலகிற்கான வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக ஸ்திரப்பாட்டை இவை நிச்சயமாகக் கீழறுக்கின்றன.

அந்தப் போராட்டங்களின் உண்மையான அளவும் நோக்கங்களும் மேற்கத்திய ஊடகங்களின் விடையிறுப்பில் முக்கியமற்றதாக காட்டப்படும் நிலையில், அந்தப் போராட்டங்களை அவை சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு எதிரான பிரச்சாரத்திற்கு உரிய ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி வருகின்றன. அந்த வைரஸால் எத்தனை மில்லியன் பேர் கொல்லப்பட்டாலும் அல்லது ஊனமானாலும் அதைப் பொருட்படுத்தாமல் சீனா பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்க வேண்டும் என்று அவை கடந்த இரண்டாண்டுகளாகக் கோரி வந்துள்ளன. இந்தப் பிரச்சாரத்தில் நம்பிக்கை வைத்திருந்தால், மொத்த சீனாவும் இப்போது கோவிட்-19 நோய்தொற்றில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்.

பெய்ஜிங்கில் போராட்டத்தின் போது போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதினர். ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 27, 2022 [AP Photo/Andy Wong]

சீனாவில் ஒரு தீவிரமான சமூக அரசியல் நெருக்கடி நிலவுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் தளர்வைத் தொடங்கும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நவம்பர் 11 இல் அதன் 'இருபது ஷரத்துக்கள்' வெளியிட்டதில் இருந்து இது தீவிரமடைந்து வருகிறது. திங்கட்கிழமை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (NHC) 40,347 புதிய கோவிட்-19 நோயாளிகளை பதிவு செய்தது, இது தொடர்ந்து ஐந்தாவது நாளாக அதிகபட்ச நோய்தொற்று என்பதோடு, இது புவியியல் ரீதியாக இன்று வரையிலான அந்நாட்டின் மிகவும் பரவலான வெடிப்பாக உள்ளது.

இந்த ஆழமடைந்து வரும் பொது சுகாதார நெருக்கடிக்கான விடையிறுப்பில், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களான பெய்ஜிங், குவாங்சோ, சோங்கிங் மற்றும் பிற நகரங்களில் உள்ளூர் அதிகாரிகள் பகுதியான சமூக அடைப்புகளையும் மற்றும் பாரிய பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர், அதேவேளையில் வைரஸ் பரவலை முற்றிலுமாக தடுக்க அவசியமானதாக நிரூபணமாகி உள்ள, நகரம் முழுவதையும் அடைக்கும் விதமான சமூக அடைப்பை அவர்கள் மேற்கொள்ளவில்லை.

கடந்த வியாழக்கிழமை ஜின்ஜியாங் மாகாணத்தில் உரும்கியில் ஓர் உயரமான அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு துயரகரமான தீ விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டு ஒன்பது பேர் காயமடைந்த சம்பவமே இந்த வாரயிறுதி போராட்டங்களைத் தூண்டின.

சமூக அடைப்புக்காக வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்புகளால் தீயணைப்பாளர்களால் உரிய நேரத்திற்கு அக்கட்டிடத்தை சென்றடைய முடியவில்லை என்று மேற்கத்திய ஊடகங்களும் மற்றும் சீன சமூக ஊடகங்களின் பல்வேறு கருத்துரையாளர்களும் வலியுறுத்துகின்றனர். ஆனால் இத்தகைய வாதங்கள், இந்தப் பெருந்தொற்றுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்தத் தடுப்புக் கட்டைகள் —அதாவது போக்குவரத்துக்குத் தடைகளாக இந்த செங்குத்து தடுப்புகள்— அமைக்கப்பட்டிருந்தன என்ற உண்மையோடு முரண்படுகின்றன. அக்கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்ற வாதங்களும் அக்கட்டிடத்தை விட்டு அவர்கள் தப்பியோடும் காணொளி காட்சிகளுடன் முரண்படுகின்றன. அனைத்திற்கும் மேலாக, இந்தத் தீ விபத்து ஏற்பட்ட மாவட்டத்தில் அப்போது கடுமையான சமூக அடைப்பே இருக்கவில்லை.

உரும்கியில் ஏற்பட்ட இந்த சோகமான தீ விபத்து, தெளிவாக அந்தக் கட்டிடத்திற்குள் போதிய தீ விபத்து பாதுகாப்பு இல்லாததாலும், தீயணைப்பாளர்கள் செல்வதற்குத் தடையாக இருந்த மோசமான நகர்ப்புற திட்டமிடுதலின் விளைவாகவும் ஏற்பட்டிருந்தது, இந்தப் பிரச்சினைகள் சர்வதேச அளவில் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் உள்ளன.

இந்த வாரயிறுதி போராட்டக்காரர்கள், பெரும்பாலும் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் மீதிருந்த கோபம் மற்றும் உரும்கி தீ விபத்தில் இறந்தவர்கள் மீதான அனுதாபத்தால் தூண்டப்பட்டு இருந்தனர். அந்தப் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் —குறிப்பாக மேற்கத்திய ஊடகங்களை அணுகுபவர்கள்— உண்மையில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையே இந்தப் பேரழிவில் பங்கு வகித்ததாக நம்புகிறார்கள்.

முதலாளித்துவ மீளமைப்பு செல்வச்செழிப்பான ஒரு நடுத்தர வர்க்க சமூக அடுக்கை உருவாக்கி உள்ளது, இதுவே சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்தின் முக்கிய அடித்தளமாகும். இந்தச் சமூக அடுக்கு, சீனாவின் பிரமாண்ட ஃபயர்வால் தடுப்புமுறையைக் கடந்து மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை அணுக, மெய்நிகர் பிரத்யேக வலையமைப்புகள் (VPN) அல்லது பிற முறைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவ்விதத்தில், “ஓமிக்ரோன் அதிக பாதிப்பில்லாதது,” என்றும் “தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தால், கோவிட் தொற்றுவது என்பது சாதாரண சளிக் காய்ச்சல் போன்றது” என்றும், அனைத்திற்கும் மேலாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கூறிய 'பெருந்தொற்று முடிந்து விட்டது' என்ற பொய்யையும் எடுத்துரைக்கும் இடைவிடாத பிரச்சார மழை கடந்தாண்டு அவர்கள் மீது வீசப்பட்டது.

எவ்வாறிருப்பினும், ஊடகங்கள் இந்தப் போராட்டங்களை, கோவிட்-தடுப்பு நடவடிக்கைகளை கைவிடுவதற்கான ஒரேமாதிரியான ஆதரவு என்று சித்தரிப்பது, தவறாக இருக்கும் என்பதோடு, அரசியல் ரீதியில் பிற்போக்குத்தனமாகும். சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கான சோசலிச கீதமான 'சர்வதேசிய கீதத்தை' மாணவர்கள் பாடியதாக அங்கே பல செய்திகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் பூஜ்ஜிய கோவிட் கொள்கையைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடைமுறைப்படுத்தியதன் பொருளாதார பாதிப்புகள் மீது தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் செல்வசெழிப்பில் குறைந்த நடுத்தர வர்க்க பிரிவுகள் மத்தியிலும் கோபம் உள்ளது. சமூக அடைப்புகளின் போது அரசாங்கம் நடைமுறையளவில் தொழிலாளர்களுக்கு எந்த நிதி உதவிகளும் வழங்கவில்லை, பரிசோதனைக்கான கட்டணங்களையும் சமீபத்தில் மக்களையே செலுத்தச் செய்யத் தொடங்கியது.

கடந்த செவ்வாய்கிழமை, ஜென்ஜோவில் (Zhengzhou) உள்ள ஃபாக்ஸ்கான் மலிவுழைப்பு ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் கொடூரமான நிலைமைகளுக்கு எதிராகவும், நிலுவைச் சம்பளத்திற்காகவும் போராடினர். உலகின் ஆப்பிள் ஐபோன்களில் சுமார் பாதியை 350,000 வரையிலான தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தி செய்யும் இந்த ஆலை, கோவிட்-19 வெடிப்பால் அக்டோபரில் இருந்து மூடிய வளைய முறையில் (closed-loop system) செயல்படுகிறது. உற்பத்தியைப் பேணுவதற்காக, தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பாமல் அவர்கள் சிறைக்கு நிகரான நிலைமைகளில் ஆலையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கத்திய ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதைப் போலன்றி அதற்கு முரண்பட்ட விதத்தில், ஃபாக்ஸ்கானுக்கு வெளியே நடந்த போராட்டம் 'சமூக அடைப்புக்கு எதிராகவோ' அல்லது பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு எதிராகவோ நடத்தப்படவில்லை. மாறாக, முழு சம்பள கோரிக்கைக்குக் கூடுதலாக, தொழிலாளர்கள், இவர்கள் அனைவரும் வைரஸ் பரவலைத் தடுக்க முகக்கவசங்கள் அணிந்திருந்தனர், இன்னும் அதிகளவில் வழமையான கோவிட்-19 பரிசோதனைக்காகவும், பாதுகாப்பான தனிமைப்படுத்தலுக்காகவும் மற்றும் தனிமைப்படுத்தும் நெறிமுறைகளுக்காகவும் போராடி இருந்தனர்.

ஒரு நாட்டுக்குள் பிரத்தியேகமாக நடைமுறைப்படுத்தப்படும் எந்த பூஜ்ஜிய-கோவிட் கொள்கையும் தீர்க்கவியலா பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன என்ற உண்மையே, சீனாவில் போராட்டங்களை உந்தி வரும் பதட்டங்களுக்கு அடியில் உள்ளது. இந்தப் பெருந்தொற்றுக்கு எந்த தேசிய தீர்வும் இல்லை, அது அடிப்படையிலேயே ஓர் உலகப் பிரச்சினையாகும், இதற்கு உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு விடையிறுப்பு தேவைப்படுகிறது. இத்தகைய ஓர் ஒருங்கிணைந்த உலக இயக்கம் இல்லாததால், சீனாவின் பொது சுகாதார மற்றும் சமூக நெருக்கடி வரவிருக்கும் வாரங்களில் மற்றும் மாதங்களில் இன்னும் தீவிரமடைய மட்டுமே செய்யும்.

தடுப்பூசிகள் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவம் பற்றி பெரிதும் தவறான புரிதல்களின் காரணமாக, அந்நாட்டில் மிகவும் குறைவாக தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட வயதினரான சீனாவின் முதியவர்களே இப்போது மிகப்பெரும் அபாயத்தை எதிர்கொள்கிறார்கள். சமீபத்திய NHC புள்ளிவிபரங்களின்படி, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மொத்தம் 21 மில்லியன் சீனர்கள் முற்றிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை, 80 வயதுக்கு மேற்பட்ட 21.5 மில்லியன் பேர் அவசியம் தேவைப்படும் தடுப்பூசி-ஊக்க மருந்தை (booster shot) செலுத்திக் கொள்ளவில்லை.

சீனாவில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை முழுவதுமாக நீக்கினால், வெறும் ஆறு மாதங்களில் 1.6 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவார்கள் என்று மே மாதம் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு மதிப்பிட்டது. அப்போதிருந்து தடுப்பூசி விகிதங்கள் ஸ்தம்பித்துள்ளன என்பதோடு, பெரும்பாலான சீன மக்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, ஆபத்துகளை கூடுதலாக அதிகரித்துள்ளது.

வயதானவர்கள் முகங்கொடுக்கும் பெரும் அபாயங்களுக்கு அப்பாற்பட்டு, ஒட்டுமொத்த சீன மக்களும் நீண்ட கால கோவிட் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள், இது ஏறக்குறைய உடலின் எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடும். உலகம் முழுவதும், கோவிட்-19 ஆல் பத்து மில்லியன் கணக்கானவர்கள் உடல் பாதிக்கப்பட்டுள்ளனர், முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் இதில் உள்ளடங்குவர். ஒருவருக்கு நீண்ட கால கோவிட் ஏற்படும் ஆபத்து தடுப்பூசியால் வெறுமனே ஓரளவுக்குக் குறைக்கப்படுகிறது என்றும், புதிய வகைகள் மீண்டும் தொற்றும் போது, தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், மரணம் மற்றும் நீண்ட கோவிட் ஏற்படுத்தவதற்கான அபாயத்தை உள்ளடக்கி இருக்கும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

சீனாவில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை அகற்றப்படுவதைத் தடுக்கவும் மற்றும் இத்தகைய பொது சுகாதார கோட்பாடுகளைச் சர்வதேச அளவில் நடைமுறைப்படுத்தவும் சீனத் தொழிலாள வர்க்கமும் சர்வதேச தொழிலாள வர்க்கமும் இணைந்து ஒரு கூட்டு போராட்டத்தை அபிவிருத்தி செய்வது இன்றியமையாததாகும்.

பெருந்திரளான மக்களுக்குப் பரிசோதனைகள், தொடர்புகளின் தடமறிதல், உள்கட்டமைப்பைப் புதுப்பித்தல், உயர்தர முகக்கவசங்களைப் பயன்படுத்துதல், சம்பளத்துடன் கூடிய சமூக அடைப்புகள், மிகவும் மேம்பட்ட தடுப்பூசிகளை அபிவிருத்தி செய்வது, வைரஸ் பரவுவதைத் தடுக்கத் தேவையான மற்ற எல்லா நடைமுறைகளையும் உலகளவில் ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மட்டுமே இந்தப் பெருந்தொற்றை முற்றிலுமாக ஒரேயடியாக நிறுத்த முடியும்.

Loading