மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 11 பிராந்திய ஆம்புலன்ஸ் சேவைகளில் 10 இல், துணை மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அவசர சிகிச்சை உதவியாளர்கள் மற்றும் உதவி அழைப்புக்களை கையாளுபவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
GMB, Unison மற்றும் Unite தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் பழமைவாத அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 4 சதவீத ஊதிய உயர்வுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தனர். ஆனால், இது குறைவான நிதியுதவி மற்றும் தனியார்மயமாக்கலின் முடமான விளைவுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது அதிக வேலை செய்யும் ஊழியர்களால் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை வழங்க முடியாத நிலையை உருவாக்குகிறது.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உயிருக்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்தும் அனைத்து வகை 1 அழைப்புகளுக்கும் சேவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
1989-90 ஆம் ஆண்டு ஆம்புலன்ஸ் தகராறின் போது தாட்சர் இராணுவத்தை அழைத்த பின்னர் முதன்முறையாக 750 சிப்பாய்களை கருங்காலிகளாக நிறுத்த கன்சர்வேடிவ் அரசாங்கம் வேலைநிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டது. வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள வெலிங்டன் பாராக்ஸில் 170 படையினர்கள் ஆம்புலன்ஸ்களை ஓட்டுவது எப்படி என்பதை அறிய விபத்து பயிற்சி பெற்றதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இங்கு நோக்கம் ஒரு உயிரைக் காப்பாற்றுவது அல்ல, மாறாக சுனாக் அரசாங்கத்தை மூழ்கடிக்கும் வேலைநிறுத்த அலைகளை அடக்குவதற்கான சர்வாதிகார நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாகும். இவற்றில் குறைந்தபட்ச சேவை சட்டத்தின் (Minimum Service Level legislation) மூலம் முக்கிய துறைகளில் வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்கும் திட்டங்களும் அடங்கும். ஜூலை மாதம், வேலைநிறுத்தம் செய்பவர்களின் வேலையை தற்காலிக பணியாளர்கள் செய்ய அனுமதிக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
டோரி அரசாங்கம் தேசிய சுகாதார சேவையில் (NHS) ஏற்படுத்திய வெட்டுக்கள் ஆம்புலன்ஸ் சேவையை தாமதப்படுத்துவதுதான் நோயாளிகளின் உயிருக்கு உண்மையான அச்சுறுத்தலாக உள்ளது, தொற்றுநோயை குற்றகரமாக கையாண்டதன் விளைவாக முறிவு நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு நெருக்கடியாகும்.
வேலைநிறுத்தக்காரர்களில் சுமார் 10,000 பேர் GMB ஆல் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். ஜூலை மாதம் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சங்கம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, மூன்றில் ஒரு பகுதி நோயாளிகளின் மரணம் ஆம்புலன்ஸ் தாமத வழக்குகளுடன் தொடர்புடையவை. 85 சதவீத ஆம்புலன்ஸ் தாமதங்கள் நோயாளியின் மீட்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறினர்.
அக்டோபரில் 999 அவசர அழைப்புக்களில் கால்வாசிக்கு ஆம்புலன்ஸ் குழுவினரால் பதிலளிக்க முடியவில்லை, இது இதுவரை பதிவு செய்யப்படாத உச்சபட்ச விகிதமாகும், படுக்கைகள் இல்லாததால் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதே இதற்குக் காரணம்.
இங்கிலாந்தில் உள்ள பத்து பிராந்திய ஆம்புலன்ஸ் சேவைகளின் தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆம்புலன்ஸ் தலைமை நிர்வாகிகள் சங்கத்தின் (ACCE) நிர்வாக இயக்குநர் மார்ட்டின் ஃபிளாஹெர்டி, “NHS ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்கும் உயிர்காக்கும் பாதுகாப்பு வலையமைப்பானது, இந்த தேவையற்ற தாமதங்களால் கடுமையாக பலவீனமடைந்து, நோயாளிகள் தினமும் இறக்கின்றனர், மேலும் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர்” என்று கருத்து கூறியுள்ளார்.
ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பாதுகாப்பு மீதான கடுமையான உத்தியோகபூர்வ அலட்சியத்தால், அவர்கள் பெருமளவில் கோவிட்-19 நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இது 1,500 சுகாதார மற்றும் சமூகப் பணியாளர்களின் உயிரைக் கொன்றது மற்றும் நெடுங்கோவிட் நோயின் காரணமான நீண்ட உடல்நலக் குறைவு உட்பட, பலரை கடுமையான நோய் பாதிப்புக்குள்ளாக்கியது.
ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மறுக்கப்பட்டுள்ளது, அவர்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர் மற்றும் அதிக வேலை வாங்கப்படுகின்றனர். NHS நிதி பற்றாக்குறையில் திண்டாடும் அதேவேளை, தனியார் துறையானது தொடர்ந்து மில்லியன் கணக்கான பவுண்டுகளை சுரண்டி வருகிறது. இங்கிலாந்தில் உள்ள 10 அறக்கட்டளைகள் மூன்று ஆண்டுகளில் அவசர மற்றும் அவசரமற்ற போக்குவரத்துக்காக தனியார் துறைக்கு 235 மில்லியன் பவுண்டுகளை வழங்கியுள்ளன என்று ஒரு GMB அறிக்கை காட்டுகிறது.
தேசிய சுகாதார சேவை (NHS), உதவி அழைப்புகளை கையாளுபவர்கள், சுத்தம் செய்பவர்கள், உணவு வழங்குநர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட அதன் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு ஒரு ஊதியச் சலுகையை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது போன்ற அற்ப ஊதிய மட்டங்களுக்கு சுகாதார சங்கங்கள் தலைமை வகிக்கின்றன, இது சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதிய மட்டத்தை மீறியதற்காக வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படுகிறது, அதாவது தற்போது ஒரு மணி நேரத்திற்கு வழங்கப்பட்டு வரும் வெறும் 9.50 பவுண்டுகள் ஊதியம், அடுத்த ஆண்டு 10.42 பவுண்டுகளாக உயரும்.
தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் பெருகிவரும் சீற்றத்தால் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன, ஆனால் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலை வளர்ச்சியடையவிடாமல் தடுக்க திரைமறைவில் நாசவேலை பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்காட்டிஷ் தேசிய கட்சி பொறுப்பிலுள்ள அரசாங்கம் சராசரியாக வெறும் 7.5 சதவீத ஊதியச் சலுகையை வழங்க அதற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் Unison மற்றும் Unite தொழிற்சங்கங்கள் ஸ்காட்லாந்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டன. மிகக் குறைந்த ஊதியம் பெறுவோருக்கு பணவீக்கத்திற்கு ஏற்றவாறு 11.24 சதவீதம் ஊதிய உயர்வு கூட வழங்கப்படவில்லை.
GMB கூட கடந்த மாதம் கருத்து வாக்கெடுப்பு நடத்துவதாகக் கூறி ஸ்காட்டிஷ் ஆம்புலன்ஸ் சேவையில் வேலைநிறுத்த நடவடிக்கையை வாபஸ் பெறச் செய்தது. இருப்பினும், கடந்த வாரம் தொழிற்சங்கத்தின் NHS ஊழியர்களில் மூன்றில் இரண்டு பகுதி பெரும்பான்மையினரால் இந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டது, இது GMB பிரதிநிதித்துவப்படுத்தும் 1,700 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உட்பட 8,000 செவிலியர்கள், சுமை தூக்குபவர்கள் மற்றும் ரேடியோகிராஃபர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பின் ஆழத்தைக் காட்டுகிறது.
ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் NHS க்கு ஆதரவாக நிற்பது பற்றி தொழிற்சங்கத் தலைவர்களின் இரட்டைப் பேச்சானது, இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 1,600 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் Unite தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷரோன் கிரஹாமால் உருவகப்படுத்தப்பட்டது. Unite இல் 1,500 ஆம்புலன்ஸ் ஊழியர்களை உள்ளடக்கிய ஸ்காட்லாந்தில் வழங்கப்பட்ட ஊதியச் சலுகையை அவர் பாராட்டினார், இது ‘சிறந்த வேலைகள், ஊதியம் மற்றும் சுகாதார சேவையின் நிலைமைகளுக்காக’ போராடுகிறது என்பதற்கான சான்றாகும்.
அவ்வாறு செய்வதன் மூலம், கிரஹாம் ஒவ்வொரு திருத்தத்திற்குப் பின்னரும் உண்மையான ஊதியக் குறைப்புகளைக் குறிக்கும் சலுகைகளை 'வெற்றிகள்' என்று சித்தரிக்கிறார். இங்கிலாந்தின் மிகப்பெரிய தனியார் துறை சேவைகள் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தடுப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. யூனைட் என்பது ரயில்வே தொழிலாளர்கள், பேருந்து தொழிலாளர்கள், நகராட்சி குப்பை சேகரிப்பாளர்கள், கப்பல்துறை மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் போன்றவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பிரதமர் ரிஷி சுனாக் தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கிரஹாமின் அவநம்பிக்கையான வேண்டுகோளின் பின்னணியில் இந்த இலக்கு உள்ளது. நேற்று Sky News இல் அவர் பேசுகையில், ‘இது ஒரு நீண்ட பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டியதில்லை, நாங்கள் இதை ஏற்கனவே ஸ்காட்லாந்தில் செய்துள்ளோம்” என்று கெஞ்சினார்.
கிரஹாம் கூறிய ஸ்காட்டிஷ் ஒப்பந்தம் யுனைட் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினரால் நிராகரிக்கப்பட்டது. யுனிசனின் ஸ்காட்டிஷ் சுகாதாரக் குழுவின் தலைவரான வில்மா பிரவுனுக்கு, 57 சதவீத ஆதரவுடன் மட்டுமே நிறைவேற்றப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மீதான பரவலான அதிருப்தியை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ‘இது ஒருமித்த முடிவிற்கு அப்பாற்பட்டிருந்தது, மற்றும் பல NHS தொழில்முறை தரநிலைகள் மோசமாக ஏமாற்றமடைந்ததாக உணர்கிறது,’ என்று அவர் கூறினார். ‘யுனிசன் NHS ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இந்த சமீபத்திய ஊதியச் சலுகையை நிராகரிக்க வாக்களித்தனர், மேலும் ஏற்க வாக்களித்த பலரும் தயக்கத்துடன் தான் அதைச் செய்தனர்’ என்றும் கூறினார்.
உண்மையாக போராட விரும்பும் கோபமான உறுப்பினர்கள் மீது குறைவான ஒப்பந்தத்தை கட்டாயப்படுத்துவது, இங்கிலாந்தின் மிகப்பெரிய தொழிற்சங்கமும் மற்றும் NHS இல் உள்ள கிட்டத்தட்ட அரை மில்லியன் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதுமான யுனிசன் தொழிற்சங்கத்துடன் சுகாதார ஊழியர்களின் சங்கங்கள் கொண்டுள்ள பங்கை சுருக்கமாகக் கூறுகிறது.
Royal College of Nursing (RCN) இல் உள்ள 100,000 செவிலியர்களின் தேசிய நடவடிக்கையின் இரண்டாவது நாளைத் தொடர்ந்து, அதே கேலிக்குரிய ஊதியச் சலுகையை எதிர்த்தும், பணவீக்கத்தை விட 5 சதவீதம் ஊதியத்தை அதிகரிக்கக் கோரியும் உடனடியாக ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. ஸ்காட்லாந்தில் உள்ள 30,000 RCN உறுப்பினர்கள் SNP உடன் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை 82 சதவீத பெரும்பான்மையுடன் தூக்கியெறிந்தனர். இதேபோல், Royal College of Midwives உறுப்பினர்களும் இந்த ஒப்பந்தத்தை 65 சதவீத அளவிற்கு நிராகரித்தனர்.
நேற்றைய வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்கள் விதைக்கும் பிளவுகளையும் அம்பலப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட சேவைகளில் GMB ஆல் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ஒன்பது தொழிலாளர்களும், யுனிசனால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ஐந்து தொழிலாளர்களும், மற்றும் யுனைட்டால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மூன்று தொழிலாளர்களும் அடங்குவர். வேலைநிறுத்தங்கள் ஒரே துறையில் நடந்தாலும் கூட, தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தடுக்க வேலை நிறுத்தங்கள் வெவ்வேறு நேரங்களில் தொடங்குவதையும் முடிவதையும் உறுதி செய்கின்றன.
போலி- இடது Socialist Worker தனது தொழிற்சங்க அதிகாரிகளின் நண்பர் ஒருவரிடமிருந்து ஏற்கனவே வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ள 20 தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு அல்லது வாக்கெடுப்பு பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். இது பிப்ரவரி 1 ஆம் தேதி தனியார் துறையில் ஒரு நாள் வெளிநடப்பு சாத்தியம் பற்றியது.
அப்படி ஒரு அடையாளப் போராட்டம் நடத்தப்பட்டால், அதில் ஒரு மில்லியன் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள். இதற்கு நேர்மாறாக, தொழிற்சங்க எந்திரத்தின் மரண அழுத்தத்தால் கடந்த இரண்டு வாரங்களாக இரயில்வே, ராயல் மெயில் மற்றும் NHS வேலைநிறுத்தங்களில் கால் மில்லியன் தொழிலாளர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
NHS தொழிலாளர்களின் போராட்டமானது சுனாக் அரசாங்கம் மற்றும் முதலாளிகளுக்கு எதிரான ஒரு பொது வேலைநிறுத்தத்தின் மையமாக மாற முடியும், ஆனால் அத்தகைய போராட்டத்திற்கு முக்கிய தடையாக தொழிற்சங்க அதிகாரத்துவம் உள்ளது. அதன் நாசவேலை மற்றும் ஒடுக்குமுறை பிரச்சாரத்தை எதிர்க்க, சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவதன் மூலம், அதிகாரம் இருக்கும் இடத்திற்கு, அதாவது தொழிலாளர்களின் கைகளுக்கு அதிகாரம் திரும்ப வேண்டும். இது தொடர்பாக, ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை சோசலிச சமத்துவக் கட்சியின் இந்த அறிக்கையைப் படிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம், “டோரி அரசாங்கத்திடம் இருந்து NHS ஐப் பாதுகாக்க செவிலியர்கள் போராடுவதற்கு ஆதரவாக மீண்டும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக: சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குங்கள்”.
