இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, பேராதனை பல்கலைக்கழகத்தில் “உக்ரைன் போர் மற்றும் அதை எவ்வாறு நிறுத்துவது“ என்ற தலைப்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்துகிறது. இந்தக் கூட்டம் அரசியல் விஞ்ஞானத் துறையின் 86வது விரிவுரை மண்டபத்தில் செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள், இந்த நிகழ்வைக் கட்டியெழுப்ப கடந்த வாரத்திலிருந்து பல்கலைக்கழகத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த கூட்டத்துக்கு அரசியல் விஞ்ஞான சங்கம் அனுசரணை வழங்குகிறது.
உக்ரேன் போரில்,அமெரிக்காவும் நேட்டோவும் ஆற்றிய பாத்திரத்தை மூடிமறைக்கும் அதே வேளை, ரஷ்யா போரைத் தூண்டிவிட்டதாக கொழும்பு ஊடகங்களின் சில கட்டுரைகள் குற்றம் சாட்டுகின்றன. வாஷிங்டன் பில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதியான இராணுவ உபகரணங்களையும் ஆயுதங்களையும் கியேவிற்கு வழங்கியது பற்றி ஏனைய கட்டுரைகள் தெரிவிக்கின்றன. இந்தக் கட்டுரைகள் அனைத்தும் முடிவில் “புத்திக்கூர்மைக்கும்” மற்றும் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றன.
இந்த அரசியல் உணர்வுகள் இலங்கைப் பல்கலைக்கழக வளாகங்களில் நிலவும் அதேவேளை, மாணவர்கள் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் பிரச்சாரத்திற்கு பிரதிபலித்து, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போர் பற்றி கலந்துரையாட ஆர்வமாக உள்ளனர். பலர் கூட்டத்தில் கலந்து கொள்ள உடன்பட்டனர்.
கடந்த தசாப்தங்களில் ரஷ்ய எல்லைக்கு அருகில் நேட்டோ தனது இராணுவ பிரசன்னத்தை எவ்வாறு விரிவுபடுத்தி, கியேவை ஆகக் கூடியளவு ஆயுதபாணியாக்கி ரஷ்ய படையெடுப்பைத் தூண்டிவிட்டது என்பதை ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்கள் விளக்கினர். அமெரிக்காவும் மற்ற ஏகாதிபத்திய சக்திகளும், ரஷ்யாவை அதன் கனிமங்கள் மற்றும் ஏனைய இயற்கை வளங்களைக் கைப்பற்றி கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிக்க விரும்புகின்றன.
ஐ.வை.எஸ்.எஸ்.இ., உக்ரேன் மீதான புட்டின் ஆட்சியின் பிற்போக்கு படையெடுப்பையும், அதே போல், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரையும் எதிர்ப்பதுடன், இரத்தக்களரி மோதலுக்கு முடிவுகட்டவும், பேரழிவு தரும் அணு ஆயுத மூன்றாம் உலகப் போருக்குள் இறங்குவதை தடுக்கவும், சர்வதேச அளவில் ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்பப் போராடுகிறது.
பிரச்சாரகர்கள், “உக்ரேன் போரை நிறுத்த ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டமைப்போம்!“ என்ற தலைப்பிலான ஐ.வை.எஸ்.எஸ்.இ. அறிக்கையினதும் “ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி 78வது ஆண்டு நிறைவு: 2023ல் சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா?” என்ற உலக சோசலிச வலைத் தள கட்டுரையினதும் நூற்றுக்கணக்கான பிரதிகளை விநியோகித்தனர்.
கலைப் பீட மாணவி ரோஷிகா: எங்களுக்கு உண்மையில் போர் வேண்டாம். எங்கள் அனைவருக்கும் சுதந்திரம் மற்றும் வாழும் உரிமையே வேண்டும். ஐ.வை.எஸ்.எஸ்.இ. மற்றும் WSWS மூலம் பொதுமக்களுக்கு கல்வியூட்டும் திட்டம் மிக மிக முக்கியமானதுடன் அதிகரித்து வரும் சூழ்நிலையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் உள்ளது. நான் கூட்டத்திற்கு வருவேன், மற்ற மாணவர்களையும் பங்கேற்க வலியுறுத்துவேன்,” எனத் தெரிவித்தார்.
ரோஷிகாவுடன் இருந்த பாக்யா, கலந்துரையாடலில் பங்கெடுத்துக்கொண்டார். உலக தானிய உற்பத்தியில் 30 சதவீதத்தை உக்ரைன் உற்பத்தி செய்கின்றது என்பதை அறிந்திருக்கவில்லை என்று விளக்கினார். உணவு, மின்சாரம், போக்குவரத்துக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களின் விலை தாங்க முடியாதளவு அதிகரித்தமை குறித்து அவர் கருத்து தெரிவித்தார். “நாம் எதிர்கொள்ளும் சுமைகள் உலக நெருக்கடியின் ஒரு பகுதியாகும்,” என்று அவர் கூறினார்.
“எங்கள் கல்விச் செலவை எங்கள் பெற்றோரால் தாங்க முடியவில்லை. பல மாணவர்கள் பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். கஷ்டப்பட்டு படித்தாலும் நல்ல வேலை தேடுவது கனவாகத்தான் உள்ளது. அரசாங்கங்களுக்கு எதிராக மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்தினாலும் ஆட்சியாளர்கள் தங்கள் கொள்கைகளை மாற்றவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவு விளைவுகள் குறித்தும் பாக்யா பேசினார். “1945 இல் ஜப்பானில் ஹிரோஷிமாவுக்கு ஏற்பட்ட அழிவைப் பற்றி நீங்கள் அறிந்தும் புரிந்தும் இருப்பீர்கள், ஒரு புதிய உலகப் போரில் என்ன நடக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது,” என்று அவர் கூறினார்.
இரண்டு முதலாம் ஆண்டு விஞ்ஞான மாணவர்கள் கலந்துரையாடலில் பங்குகொண்டனர். ஆனால் மாணவர் சங்கத்தால் புதிய மாணவர்கள் மீது அரசியல் கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டுள்ளதால் பெயர் குறிப்பிடாமல் இருக்க விரும்பினர்.
“நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மற்றும் உலகின் வளங்கள் சமமாக பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், ஆனால் நாங்கள் போரை எதிர்கொள்கிறோம், சுற்றுச்சூழலின் அழிவு மற்றும் அதிகரித்து வரும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கிறோம்,” என்று மாணவர்களில் ஒருவர் கூறினார்.
“நாங்கள் முதலாம் ஆண்டு மாணவர்கள், மாணவர் சங்கத்தின் அனுமதியின்றி செயல்பட முடியாது. இந்த வகையான கட்டுப்பாடுகளுக்கு நாங்கள் எதிரானவர்கள்” என்று மாணவர்கள் விளக்கினர். 1970களின் பிற்பகுதியில், சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை கைப்பற்றியதுடன் அதனது அரசியல் கட்டுப்பாட்டைத் தக்கவைக்க சரீர அச்சுறுத்தல்கள் மற்றும் ஏனைய ஜனநாயக விரோத நடைமுறைகளைப் பயன்படுத்தியது.
2011ல் ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்று அமைக்கப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சி (FSP), இப்போது குறித்த மாணவர் ஒன்றியத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் அதேவேளை, அது அதே ஜனநாயக விரோத வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது.
சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்துடன் மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதை எதிர்க்கும் முன்னிலை சோசலிசக் கட்சி, இலங்கை அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் இலவச கல்விக்கான உரிமையை பாதுகாக்க முடியும் என்ற மாயையை பரப்புகிறது.
ஒரு பொறியியல் மாணவர், உயர் கல்வியின் கூடிய மற்றும் அதிகரித்து வரும் செலவை விளக்கினார். ஏறக்குறைய 35,000 ரூபாய்களை ($US108) அவர் தங்குமிட கட்டணமாகவும் ஏனைய கல்விச் செலவுகளுக்காகவும் செலவிடுகிறார். ஆனாலும், அவர் சுட்டிக்காட்டியபடி, சில பல்கலைக்கழக பீடங்களில் போதிய ஆசிரியர்கள் இல்லை. ஏழைக் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் உயர் கல்விக்கான செலவைச் செலுத்த முடியாதுள்ளனர், என அவர் கூறினார்.
“முதல், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழக தங்குமிட வசதிகளைப் பெற முடியும். நாங்கள் இரண்டாம் ஆண்டு படிக்கிறோம், பல்கலைக்கழக விடுதி வசதிகள் குறைவாக இருப்பதால் வெளியில் தங்கி இருக்கிறோம்.
“பருப்பு மற்றும் இரண்டு காய்கறிகளுடன் கூடிய தரம் குறைந்த சாப்பாட்டு விலை 60 ரூபாய், உங்களுக்கு ஒரு துண்டு மீன் வேண்டுமென்றால் நீங்கள் மேலும் பணம் செலுத்த வேண்டும். எங்கள் நண்பர்கள் சிலர் ஒரு சாப்பாட்டைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எங்களுக்காக சரியான வைஃபை வசதிகள் இல்லை, அச்சுப் பிரதிகள் வேண்டுமெனில் அதற்கு நிறைய பணம் செலவாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டதாரியான சுரங்க, பேராதனையைச் சுற்றி டியூஷன் வகுப்புகளை நடத்தி தனது வாழ்வாதாரத்தை ஈட்டுகிறார். அவர் வட மாகாணத்தைச் சேர்ந்தவர், அங்கு அவரது தந்தை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கிளை ஒன்றில் பணிபுரிகிறார்.
“கடந்த சில தசாப்தங்களில் மத்திய கிழக்கு உட்பட உலகம் முழுவதும் இந்தப் போர்களை வழிநடத்தியது அமெரிக்க ஏகாதிபத்தியம்தான். உக்ரேன் ஒரு வருடத்திற்கும் மேலாக போரில் ஈடுபட்டு வருகிறது, ஆனால் ரஷ்யா பின்வாங்கவில்லை, எனவே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஆபத்து அதிகரித்து வருகிறது,” என்று அவர் கூறினார்.
“இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கல்வி கற்பது முக்கியம்,” என்று அவர் தொடர்ந்து கூறினார்: “சமூகத்தில் போரை சவால் செய்யக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.”
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் நடத்திய போரை சுரங்க கண்டித்தார். “எங்கள் நாட்டில் போரின் பயங்கரங்கள் மற்றும் பேரழிவுகளை நான் அனுபவித்திருக்கிறேன்,” என்று அவர் விளக்கினார்.
“இலங்கையில் போர் என்பது சாதாரண சிங்கள-தமிழ் மக்களிடமிருந்து எழவில்லை - நாங்கள் எந்த பிரச்சனையும் இன்றி ஒன்றாக வாழ்ந்தோம் - சிங்கள மற்றும் தமிழ் தலைவர்கள் தான் இனவாதத்தை தூண்டுகிறார்கள். மேலும் சமீபகாலமாக முஸ்லீம் மக்களுக்கு எதிராக ஆத்திரமூட்டல்கள் இடம்பெற்று வருகின்றன,” என்றார்.
29 வயதான சவிந்த, தனது மோட்டார் சைக்கிளில் உணவுப் பொட்டலங்கள் மற்றும் பிற பொருட்களை விநியோகம் செய்வதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்து வருகிறார். அவர் முன்னர் சீன கட்டுமான நிறுவனமான சினோஹைட்ரோவில் பணிபுரிந்தார். ஆனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிறுவனம் நீர் திட்டத்தை நிர்மாணிப்பதை நிறுத்தியதால் அவர் வேலையை இழந்தார். “உலக வல்லரசுகள் நாடுகளை எப்படி கொள்ளையடிப்பது என்பது பற்றி மட்டுமே சிந்திக்கின்றன, இந்த சமூக அமைப்பு தூக்கியெறியப்பட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அரசியல், சர்வதேச அபிவிருத்திகள் மற்றும் சோசலிசம் பற்றி நாம் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார்.
கலைப் பீடத்தைச் சேர்ந்த கல்விசாரா ஊழியரான ரஞ்சித் கூறியதாவது: “[உக்ரைன்] போரைப் பற்றி நான் செய்தித்தாள்களில் இருந்துதான் கற்றுக்கொண்டேன், அதனால் புடினை ஆத்திரமூட்டுபவர் என்றும், ரஷ்யா தனது சக்தியை அதிகரிக்க மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது என்றும் நினைத்தேன். அமெரிக்கா ஏன் இந்தப் போரைத் தூண்டியது என்று எனக்கு எதுவும் புரியவில்லை, ஆனால் ரஷ்யாவில் இன்றியமையாத வளங்களைக் கைப்பற்றுவது ஒரு காரணம் என்பதை இப்போது புரிந்துகொள்கிறேன்.”
ரஞ்சித் தான் எதிர்கொண்ட கடினமான பொருளாதார நிலையை விளக்க முயன்றார். “ஜனாதிபதி விக்கிரமசிங்க பாரிய தாக்குதல்களை மக்கள் மீது சுமத்துகிறார். தண்ணீர் கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் பாரியளவில் அதிகரித்து, மற்ற அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
“எங்கள் சம்பளம் வாழ்வதற்குப் போதாது, பிள்ளைகளுக்கு எப்படி உணவளிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் சூழ்நிலையை நாம் எவ்வாறு சமாளிப்பது என்ற பிரச்சினை காரணமாக எங்கள் வீடுகளில் ஒரு யுத்த சூழ்நிலையே உள்ளது,” என்று அவர் கூறினார்.
உக்ரேன் போருக்காக வெள்ளை மாளிகை மேலும் 24 பில்லியன் டொலர்களை கோருகிறது
ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்
