கொழும்பில் சோ.ச.க./IYSSE பகிரங்க கூட்டம்: ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை நிறுத்து!

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், ஈரானுக்கு எதிரான உக்கிரமடைந்து வரும் ஏகாதிபத்தியப் போர் பற்றியும் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பணிகள் குறித்தும் கலந்துரையாட, மார்ச் 17 அன்று மாலை 4–6 மணி வரை கொழும்பில் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் ஒரு அவசர பகிரங்க கூட்டத்தை நடத்தவுள்ளன.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய அழித்தொழிப்புப் போர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கான உந்துதலின் ஒரு பகுதியாகும். அதன் தொடர்ச்சியான வரலாற்று வீழ்ச்சியின் மத்தியில், அமெரிக்கா தனது உலக ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக தனது அதீத தாக்குதல் சக்தியைப் பயன்படுத்துகிறது.

ஈரானுக்கு எதிராக இந்த சட்டவிரோதப் போரைத் தொடங்குவதற்கு முன்பு, டிரம்ப் நிர்வாகம் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை முழுமையாக ஆதரித்ததுடன், ஜனாதிபதி மதுரோவைக் கடத்தி, வெனிசுலாவை சரணடையக் கட்டாயப்படுத்துவதன் மூலம், அந்நாட்டின் மீது தனது நவ-காலனித்துவ ஆதிக்கத்தை இராணுவ ரீதியாக நிலைநாட்டியது.

ஈரானுக்கு எதிரான போர் அதன் இரண்டாவது வாரத்தில் நுழையும் நிலையில், பிள்ளைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் நாட்டின் உள்கட்டமைப்பு அழித்தொழிக்கப்பட்டு வருகிறது. ஈரான் 'நிபந்தனையின்றி சரணடையும்' பட்சத்தில் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தப் போர் ஈரான் மக்களுக்கு எதிராக மட்டும் நடத்தப்படவில்லை. இது உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களுக்கு எதிராக வளர்ந்து வரும் உலகளாவிய போரின் ஒரு பகுதியாகும்.

இந்தியப் பெருங்கடலில் ஈரானின் ஐஆர்ஐஎஸ் டெனா ஃப்ரீகேட் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததில் குறைந்தபட்சம் 140 மாலுமிகள் கொல்லப்பட்ட நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் எந்தவொரு சட்டத்துக்கும், உடன்படிக்கைக்கும் அல்லது நாகரிக நடத்தை நெறிமுறைக்கும் அது கட்டுப்பட்டதல்ல என்றும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளுக்கு மட்டுமே அது கட்டுப்படுகிறது என்றும் உலகிற்கு அறிவித்துள்ளது.

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவினதும் அரசாங்கங்கள் அமெரிக்க-இஸ்ரேலியப் போரில் உடந்தையாக உள்ளன. எந்தவொரு நாடும் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் பெயர் குறிப்பிட்டுக் கண்டிக்கவில்லை, அதற்குப் பதிலாக கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளுமாறும் பதற்றத்தைக் குறைக்குமாறும் அர்த்தமற்ற அழைப்புகளை விடுத்துள்ளன.

பாசிச ட்ரம்ப் நிர்வாகத்துக்கோ அல்லது ஏகாதிபத்திய சக்திகளுக்கோ வேண்டுகோள் விடுப்பதன் மூலம் இந்தப் போரை நிறுத்த முடியாது என்று சோ.ச.க. வலியுறுத்துகிறது. ஈரானிய மக்களைப் பாதுகாப்பதற்கும் போர்க்குற்றவாளிகளைத் தோற்கடிப்பதற்கும், பூகோள முதலாளித்துவத்திற்கு எதிராக உலகம் முழுதும் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியில் அணிதிரள வேண்டியது அவசியமாகும். இது ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயத்தின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும்.

இந்தப் போருக்கான காரணங்கள், அதன் உலகளாவிய தாக்கங்கள், இதில் உள்ள வரலாற்று மற்றும் கோட்பாட்டுச் சிக்கல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, இதைத் தடுப்பதற்கு தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாகத் தலையிட வேண்டியதன் அவசியம் பற்றியும் பேச்சாளர்கள் கலந்துரையாடுவார்கள்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திகதி: செவ்வாய், மார்ச் 17

நேரம்: மாலை 4:00–6:00 மணி

இடம்: பொது நூலக கேட்போர் கூடம், கொழும்பு

Loading