இஸ்ரேல் மேலும் இரண்டு பாடசாலைகள் மீது குண்டுவீசியதால் ஈரானில் மரண எண்ணிக்கை 1,200ஐ தாண்டியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.

ஈரானின் தெஹ்ரானில், மார்ச் 2, 2026 திங்கட்கிழமை நடந்த தாக்குதலுக்குப் பிறகு புகை மூட்டம் எழுகிறது. [AP Photo/Mohsen Ganji]

தெஹ்ரானின் தென்மேற்கே உள்ள பரண்ட் நகரில் மேலும் இரண்டு பாடசாலைகள் குண்டுவீச்சுக்கு உள்ளானதால், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வியாழக்கிழமை 1,200 ஐத் தாண்டியது. ஆறு நாட்களுக்கு முன்பு குண்டுத் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து மூன்றாவது மற்றும் நான்காவது பாடசாலையும் தாக்கப்பட்டது.

ஈரானின் தியாகிகள் மற்றும் ஊனமுற்ற சிப்பாய்கள் விவகாரங்களுக்கான அறக்கட்டளை 1,230 பேர் கொல்லப்பட்டதாகவும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. 3,090 வீடுகள், 528 வணிக மையங்கள், 13 மருத்துவ வசதிகள் மற்றும் ஒன்பது ரெட் கிரசண்ட் மையங்கள் உட்பட 3,600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தளங்கள் சேதமடைந்துள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது. ஈரானில் சுகாதார உள்கட்டமைப்பு மீதான 13 தாக்குதல்களை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதில் நான்கு சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டு 25 பேர் காயமடைந்தனர். தெஹ்ரானில் உள்ள வலியாசர் பர்ன் மருத்துவமனை இயங்க முடியா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை தாக்கப்பட்ட ஷாஹித் பஹோனர் நடுநிலைப் பாடசாலை மற்றும் அதற்கு முன்னால் தெருவுக்கு எதிரே அமைந்துள்ள அரியன் பூயா ஆரம்ப பாடசாலையிலும் ஜன்னல்கள் வெடித்துச் சிதறியதுடன் வகுப்பறைச் சுவர்கள் இடிந்து விழுந்து பலத்த கட்டமைப்பு சேதம் ஏற்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் படங்கள் தெரிவிக்கின்றன. அதி உயர் தலைவர் அலி கமேனிக்கு ஒரு மாத துக்கத்தை அறிவித்த பின்னர் ஈரானிய அதிகாரிகள் பாடசாலைகளை மூடியதுடன் உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் நாடு முழுவதும் பொதுமக்கள் வாழும் உட்கட்டமைப்பு மீது ஏற்படுத்தப்படும் பேரழிவின் வடிவத்தை இந்த தாக்குதல்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

பரண்டில் உள்ள பாடசாலைகள், இந்த போர் முழுவதும் அடிக்கடி இலக்கு வைக்கப்படும் தொலைத்தொடர்பு கோபுரங்களில் ஒன்றிற்கு அருகிலேயே உள்ளன. சர்வதேச சட்டத்தின் கீழ் பாடசாலைகள் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல்கள் போர்க்குற்றங்களாகக் கருதப்படுகின்றன என்று டைம்ஸ் குறிப்பிட்டது.

மினாபில் உள்ள ஷஜாரே தய்யீபே பெண்கள் தொடக்கப் பாடசாலையில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில், அதிகளவு 7 முதல் 12 வயதுடைய சிறுமிகள் உட்பட 168 பேர் கொல்லப்பட்ட, போரின் மிகவும் மரணகரமான அட்டூழியம் நடந்து ஒரு வாரத்திற்குள் பரண்ட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பிபிசி வெரிஃபையின் தகவல் சரிபார்ப்பினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட வீடியோவின் பகுப்பாய்வு, பாடசாலை மற்றும் அருகிலுள்ள ஐஆர்ஜிசி கடற்படை வளாகமும் தாக்கப்பட்டதை வெளிப்படுத்தியது. வெடிமருந்து நிபுணர் என்.ஆர். ஜென்சன் ஜோன்ஸ், 'ஒரே நேரத்தில் அல்லது கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட பல தாக்குதல்கள்' என்று இதை விவரித்தார். சம்பவ இடத்திலிருந்து வந்த வீடியோவில், இரத்தக்கறை படிந்த பாடசாலைப் பைகள் மற்றும் புத்தகங்களை தூக்கிக்கொண்டு, குடும்பங்கள் இடிபாடுகள் வழியாக உயிரைக் காத்துக்கொள்ள ஓடிய காட்சியைக் காட்டுகின்றன. மூன்று நாட்களுக்குப் பிறகு கைப்பற்றப்பட்ட வான்வழி காட்சிகள், அருகிலுள்ள மயானத்தில் வரிசையாக தோண்டப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட புதைகுழிகளைக் காட்டின. மினாப் தெருக்களில் வெகுஜன இறுதிச் சடங்கிற்காக நிரம்பியிருந்த கவலைகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள், சவப்பெட்டிகளின் ஊர்வலத்தின் மீது ரோஜா இதழ்களை வீசினர். அவற்றில் சில சிறுவர்களின் அளவிலானதாக இருந்தன. அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதற்குப் பொறுப்பேற்கவில்லை.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் செய்தி நிறுவனத்தின்படி, சண்டை தொடங்கியதிலிருந்து குறைந்தது கடந்த ஐந்தாம் திகதி வரை 1,114 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 183 பிள்ளைகள் ஆவர்.

ஈரானிய சமூகத்தை அழிப்பது துரிதப்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகள், பாடசாலைகள், குடியிருப்பு பகுதிகள், டெஹ்ரான் கிராண்ட் பஜார் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கோலெஸ்தான் அரண்மனை வளாகம் உட்பட 33 பொதுமக்கள் தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. தாக்குதல்கள் நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமான ஆசாதி ஸ்டேடியத்தையும் சேதப்படுத்தியுள்ளன. தெஹ்ரான் குடியிருப்பாளர்கள் குண்டுவீச்சு தீவிரமடைந்ததாக தெரிவித்தனர். 'இன்று நேற்றை விட மோசமானது' என்று ஒரு குடியிருப்பாளர் அல் ஜசீராவிடம் தொலைபேசியில் தெரிவித்தார். 'அவர்கள் வடக்கு தெஹ்ரானைத் தாக்குகிறார்கள். எங்களுக்கு எங்கும் செல்ல முடியவில்லை. இது ஒரு போர் மண்டலம் போன்றது,' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் கிட்டத்தட்ட மொத்த இணைய முடக்கத்தின் கீழ் உள்ளது - இணைப்பு சாதாரண மட்டங்களில் 1 சதவீதமாக உள்ளது - மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் வங்கிகளை சீர்குலைத்துள்ளன. பல தசாப்தங்களாக விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் மிதமிஞ்சிய பணவீக்கத்தால் ஏற்கனவே பேரழிவிற்குள்ளான பொருளாதாரம் தடையற்ற வீழ்ச்சியில் செல்கின்றது -போர் தொடங்குவதற்கு முன்பே உணவுப் பொருட்களின் விலைகள் 105 சதவீதம் உயர்ந்திருந்தன.

வியாழக்கிழமை டம்பாவில் உள்ள அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகத்தில், போர் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் அட்மிரல் பிராட் கூப்பரும் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அவர்கள் முன்னெடுக்கும் போரின் அடுத்த கட்டம் ஈரானின் மறுகட்டமைப்பு திறனை திட்டமிட்டு அழிப்பதே என சுட்டிக் காட்டினர்.

'நாங்கள் அவர்களிடம் உள்ளதை மட்டும் தாக்கவில்லை. அவர்களின் மறுகட்டமைப்பு திறனை நாங்கள் அழித்து வருகிறோம்,' என்று கூறிய கூப்பர், கடந்த 72 மணி நேரத்தில் அமெரிக்கப் படைகள் கிட்டத்தட்ட 200 இலக்குகளைத் தாக்கி, முப்பதுக்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படைக் கப்பல்களை அழித்துள்ளதுடன் ஆழமாகப் புதைக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள் மீது B-2 குண்டுவீச்சு விமானங்களிலிருந்து டஜன் கணக்கான 2,000 பவுண்டு ஊடுருவல் குண்டுகளை வீசியுள்ளன என்று அறிவித்தார்.

'எங்கள் காலக்கெடு எங்களுடையது, நாங்கள் மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும்' என்று ஹெக்செத் அறிவித்தார். 'வெடிமருந்துகளுக்குப் பற்றாக்குறை இல்லை' என்று பெருமையாகக் கூறிய அவர், தெஹ்ரான் மீதான தாக்குதல் சக்தி 'வியத்தகு முறையில் அதிகரிக்கப் போகிறது' என்று எச்சரித்தார்.

அதேநாளில், வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், ஈரானின் இராணுவம் அழிக்கப்பட்டுவிட்டது என்று பெருமையாகக் கூறினார். 'அவர்களுடைய கடற்படை போய்விட்டது, மூன்று நாட்களில் 24 கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன... அவர்களுடைய விமான எதிர்ப்பு ஆயுதங்கள் போய்விட்டன, எனவே அவர்களிடம் விமானப்படை இல்லை, வான் பாதுகாப்பு இல்லை. அவர்களுடைய அனைத்து விமானங்களும் போய்விட்டன,' என்றார். ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்ய அழைப்பு விடுப்பதாக அவர் கூறினார். ''நீங்கள் கொஞ்சம் தாமதமாக வருகிறீர்கள்' என்று நான் சொன்னேன்,' 'நாங்கள் இப்போது அவர்களை விட அதிகமாக போராட விரும்புகிறோம்,' என்று டிரம்ப் தெரிவித்தார்.

ஆக்சியோஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் தான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும் என்று அறிவித்த ட்ரம்ப், மறைந்த அதி உயர் தலைவரின் மகனை 'ஏற்றுக்கொள்ள முடியாதவர்' என்று கூறியதோடு, 'வெனிசுலாவில் டெல்சி [ரோட்ரிக்ஸ்] நியமனத்தில் போலவே நான் ஈடுபட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

ஒரு இன-வகுப்புவாத உள்நாட்டுப் போரைத் தூண்டும் முயற்சியின் மூலம், நிலையான சமூகமாக இருக்கும் ஈரானை அழிக்க டிரம்ப் வெளிப்படையாக முயல்கிறார். CNN இன் படி, ஒரு எழுச்சியைத் தூண்டும் நோக்கத்துடன் ஈரானுக்குள் குர்திஷ் படைகளை ஆயுதபாணியாக்க CIA செயல்பட்டு வருகிறது.

மசூத் பர்சானி, பாஃபெல் தலபானி மற்றும் முஸ்தபா ஹிஜ்ரி போன்ற பல குர்திஷ் தலைவர்களை, போர் முயற்சியில் சேர்க்க டிரம்ப் தனிப்பட்ட முறையில் அழைத்தார். PJAK உடன் இணைந்த குர்திஷ் போராளிகள் ஈரானிய எல்லைக்குள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் மேற்கு ஈரானுக்கு குர்திஷ் போராளிகளின் தரைவழி முன்னநகர்வுக்கான பாதையைத் திறக்க இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈராக் எல்லையில் உள்ள ஈரானிய பாதுகாப்பு அரன்களைத் தாக்கி வருகின்றன. அல் ஜசீராவிடம் பேசிய இஸ்ரேலிய அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகர், இஸ்ரேலுக்கு 'சுமூகமான ஆட்சி மாற்றத்தில் உண்மையான ஆர்வம் இல்லை' என்றும் 'ஆட்சியை மற்றும் அரசை கவிழ்ப்பதிலேயே அதிக ஆர்வம்' இருப்பதாகவும் கூறினார்.

ட்ரம்ப் நியூயார்க் போஸ்ட் பத்திரிகையிடம் பேசும் போது, 'தரைப் படையை அனுப்புவது குறித்து எனக்கு எந்த தயக்கமும் இல்லை' என்று கூறி, தரைப்படைகளை பயன்படுத்துவதை நிராகரிக்க மறுப்பதும், கடற்படை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பீரங்கிகளை கொண்டு செல்லத் தொடங்கும் என்ற அவரது அறிவிப்பும், அமெரிக்கப் படைகள் ஈரானிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளின் எல்லைக்குள், வெறும் 21 மைல் அகலமுள்ள ஒரு நீர்வழிப்பாதையில் இருத்தப்படுவதை குறிக்கின்றன. ஆறு அமெரிக்க வீரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலானது லெபனானை மீண்டும் ஆக்கிரமிக்கவும் காசா மீது முழு முற்றுகையை திணிக்கவும் இந்தப் போரைப் பயன்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய துருப்புக்கள் தெற்கு லெபனானுக்குள் தரைவழி ஊடுருவலில் நுழைந்து நூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் பெய்ரூட்டின் முழு தாஹியே மாவட்டத்திலும் மக்களை வெளியேற்ற இராணுவம் உத்தரவிட்டுள்ளதோடு தாக்குதல்களால் மார்ச் 2 முதல் குறைந்தபட்சம் 77 பேர் கொல்லப்பட்டும் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துமுள்ளனர். காசாவில், மார்ச் 1 அன்று இஸ்ரேல் ஒவ்வொரு எல்லை வாயிலையும் மூடி, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அனைத்து உணவு, எரிபொருள், மருந்து மற்றும் மனிதாபிமான உதவிகளையும் நிறுத்தியது.

ஈரான் அலை அலையாய் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. அட்மிரல் கூப்பரின் கூற்றின்படி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் வளைகுடா நாடுகளை குறிவைத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 2,000 ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன. ஈரானிய ட்ரோன்கள், நக்சிவன் சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கிவிட்டு அஜர்பைஜான் பிரதேசத்திற்குள் ஒரு பாடசாலைக்கு அருகில் தரையிறங்கின. இஸ்ரேலில் பதினொரு பொதுமக்களும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் குறைந்தபட்சம் மூன்று பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

காங்கிரஸின் இரு அவைகளும் ட்ரம்ப் சுதந்திரமாக இயங்க அனுமதிக்க இந்த வாரம் வாக்களித்தன. செவ்வாயன்று செனட் சபை, போர் அதிகாரத் தீர்மானத்தை 47க்கு 53 வாக்குகளால் தோற்கடித்தது. புதன்கிழமை பிரதிநிதிகள் சபை, அதை 212க்கு 219 என்ற வாக்கு எண்ணிக்கையில் நிராகரித்தது.

ஜனநாயகக் கட்சி, நடைமுறை குறித்து இரு பொருள்பட பேசும் அதே வேளை, நிர்வாகத்தின் போர் நோக்கங்களை எதிரொலிக்கின்றது. பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், பிரதிநிதி டெட் லியூ, 'அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட பயங்கரவாத வலையமைப்புகளுக்கு நிதியளிக்கும் ஒரு கொலைகார, மதசார்பு ஆட்சி' என கண்டித்தார். பிரதிநிதி கிறிஸ்ஸி ஹவுலாஹான், 'நான் அந்தத் தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கவில்லை. ஈரான் அச்சுறுத்தலைப் பற்றி நான் தெளிவாகக் காண்கிறேன்,' என அறிவித்தார். பிரதிநிதி மேகி குட்லேண்டர், ஈரானை 'ஒரு கொடூரமான மற்றும் உறுதிப்பாடான எதிரி... நமது சக அமெரிக்கர்களின் இரத்தக் கறையைக் கொண்ட ஒரு ஆட்சி' என்று அழைத்தார். பிரதிநிதி ஜாரெட் மாஸ்கோவிட்ஸ், போர் அதிகாரத் தீர்மானத்தையே 'அயதுல்லா பாதுகாப்புச் சட்டம்' என்று கண்டனம் செய்தார்.

ஜனநாயகக் கட்சியினரின் நடைமுறை பற்றிய ஆட்சேபனைகள் வெறும் மூடிமறைப்பே. அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பிரிவு கூட போரை எதிர்க்கவில்லை.

Loading