இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் “ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை நிறுத்து!” என்ற தலைப்பில் மத்திய மலையக நகரான ஹட்டனில் நகர மண்டபத்தில் ஏப்ரல் 26 அன்று காலை 10:30 மணிக்கு நடைபெறவுள்ள பகிரங்கக் கூட்டத்திற்கு பரவலான பங்கேற்பை பெறுவதற்காக பிரச்சாரம் செய்து வருகின்றன.
ஹட்டனில் நடைபெறும் இந்தக் கூட்டம், ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தைத் அணிதிரட்டுவதற்காக, உலக சோசலிச வலைத் தளத்தை மையமாகக் கொண்டு, நான்காம் அகிலத்தின் சர்வதேசக் குழுவால் முன்னெடுக்கப்படும் ஒரு பரந்த சர்வதேசப் போராட்டத்தின் பகுதியாகும். 26 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு, சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் ஹட்டன் பேருந்து நிலையம் அருகே ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு எதிராக ஒரு மறியல் போராட்டத்தையும் நடத்தவுள்ளன.
கொழும்பு மற்றும் கண்டியில் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. வெற்றிகரமாக நடத்திய இரண்டு போர் எதிர்ப்பு கூட்டங்களைத் தொடர்ந்தே ஹட்டன் கூட்டம் நடைபெறுகின்றது.
சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள், ஏப்ரல் 19 அன்று, ஹட்டனுக்கு அருகிலுள்ள பண்டாரநாயக்க நகரில், தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் மற்றும் இளைஞர்களிடம் வீடு வீடாகச் சென்று கலந்துரையாடினர். போருக்கு எதிரான ஆழ்ந்த எதிர்ப்பையும், வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் தலைமையில் தீவிரமடைந்து வரும் ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கு, இலங்கை அரசாங்கம் உட்பட முதலாளித்துவ அரசாங்கங்கள் ஆதரவளிப்பது சம்பந்தமாக பெருகிவரும் கோபத்தையும் இந்த கலந்துரையாடல்கள் வெளிப்படுத்தின.
ஹட்டனுக்கு அருகிலுள்ள பண்டாரநாயக்க நகரின் குடியிருப்பாளர்கள், ஈரானுக்கு எதிராக சட்டவிரோதமான மற்றும் ஆத்திரமூட்டும் போரைத் தொடங்கியதற்காக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கடுமையாகக் கண்டித்தனர். அநேகமானோர் ஈரானிய மக்கள் மீது அனுதாபம் தெரிவித்ததோடு, இந்த மோதலின் ஆழமான அரசியல் மற்றும் வரலாற்று வேர்களைப் புரிந்துகொள்ள முயன்றனர். இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் 'நடுநிலைமை' வகிப்பதாக கூறும் மோசடியான கூற்றுகளுக்கு எதிரான எதிர்ப்பும் இந்த கலந்துரையாடல்களில் வெளிப்பட்டது.
கடுமையான சமூகப் பற்றாக்குறையின் கீழ் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ அரசாங்கங்களாலும் தோட்ட நிறுவனங்களாலும் நீண்ட காலமாகச் சுரண்டப்பட்டு வருகின்றனர். மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுடன் வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான இடைவிடாத தாக்குதல்களுக்கு மத்தியில், வெளிநாட்டில் நடக்கும் ஏகாதிபத்தியப் போருக்கும் உள்நாட்டில் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதலுக்கும் இடையிலான தொடர்பை தொழிலாளர்கள் இந்த கலந்துரையாடல்களில் புரிந்துகொண்டனர்.
இந்தப் போரானது மத்திய கிழக்கிலும் உலகெங்கிலும் அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஒரு ஏகாதிபத்திய நடவடிக்கை என்ற சோ.ச.க.யின் பகுப்பாய்வை ஒரு மின்சார ஊழியர் வலுவாக ஏற்றுக்கொண்டார்.
'இந்த கலந்துரையாடலின் மூலம் இந்தப் போரின் உண்மையான தன்மையை நான் புரிந்துகொண்டேன்,' என்று அவர் கூறினார். 'அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்தை அறிவித்த பின்னரும், இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல்களைத் தொடுத்தது. இது, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக ஒரு சட்டவிரோதப் போரை நடத்தி வருகின்றன என்பதை நிரூபிக்கிறது. உலக ஆதிக்கமே அமெரிக்காவின் குறிக்கோளாக இருக்கும் அதேவேளை, இஸ்ரேல் இப்பிராந்தியத்தில் அதன் கூட்டாளியாகச் செயல்படுகிறது.'
இலங்கை அரசாங்கத்தின் நடுநிலை நிலைப்பாடு எனப்படுவதை சுட்டிக்காட்டி, அவர் கூறியதாவது:
'அரசாங்கத்தின் நடுநிலைமை ஒரு மோசடி ஆகும். அது ஆக்கிரமிப்பாளரையும் பாதிக்கப்பட்டவரையும் ஒரே நிலையில் வைக்கிறது. உண்மையில், அரசாங்கம் அமெரிக்காவுடன் அணிசேர்ந்துள்ளது.'
முந்தைய அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் மீதான பரவலான கோபத்தைச் சுரண்டி ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை அவர் கண்டித்தார்.
'இந்த அரசாங்கத்தின் கீழ் மாற்றம் வரும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் எதுவும் மாறவில்லை,' என்று அவர் கூறினார். 'இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு தனியார்மயமாக்கலுக்குத் தயாராகி வருகிறது. தொழிலாளர்களுக்கு அவர்களின் வேலைகளுக்கோ உரிமைகளுக்கோ எந்த உத்தரவாதமும் இல்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஜே.வி.பி. தனியார்மயமாக்கலை எதிர்த்தது. இப்போது அதன் தொழிற்சங்கங்கள் அதை ஆதரிக்கின்றன.'
போர் குறித்து தொழிற்சங்கங்கள் மௌனம் காப்பதைக் கண்டித்த அவர், ஏகாதிபத்திய இராணுவவாதத்தை எதிர்க்க மறுப்பதானது ஒரு அரசியல் சார்புநிலை என்று கூறினார்.
ஒரு பாடசாலை ஆசிரியையான சிவராஞ்சனி, ஒரு பரந்த உலகளாவிய மோதலின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன் பேசினார்.
'அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தும் இந்தப் போரை நான் எதிர்க்கிறேன்,' என்று அவர் கூறினார். 'இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல், அதன் பொருளாதார விளைவுகள் சாதாரண மக்களைப் பேரழிவுக்கு உள்ளாக்குகின்றன. எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயரும்; வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும்; மக்களால் உயிர்வாழ முடியாது.'
'இந்த மோதலில் சீனாவும் ரஷ்யாவும் இழுக்கப்பட்டால், அது ஒரு அணு ஆயுத உலகப் போராக மாறக்கூடும்.'
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போர் எதிர்ப்பு உணர்வைச் சுட்டிக்காட்டி, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே இந்தப் பேரழிவை நோக்கிய சரிவைத் தடுக்க முடியும் என்ற சோ.ச.க.யின் வலியுறுத்தலை அவர் ஏற்றுக்கொண்டார்.
'உலகெங்கிலும் உள்ள மக்கள் போரை எதிர்ப்பதை நான் தொலைக்காட்சியில் காண்கிறேன்,' என்று அவர் கூறினார். 'தொழிலாளர்கள் சர்வதேச அளவில் ஒன்றுபட்டால், இந்தப் போரைத் தடுத்து நிறுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன்.'
ஓய்வுபெற்ற கல்வி அதிகாரியான சுந்தரலிங்கம், ஒரு மூன்றாம் உலகப் போரின் அபாயம் குறித்து எச்சரித்தார்.
'அமெரிக்காவும் இஸ்ரேலும் சர்வதேச சட்டத்தை மதிப்பதில்லை. இந்தப் போர் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்களைப் பாதிக்கிறது. இதை நிறுத்த நாம் ஒன்றுபட வேண்டும்,' என்றார்.
ரஷ்யப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகளையும், முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அதன் பங்கையும் கலந்துரையாடிய பிறகு, அவர் கூறியதாவது:
'முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் 1917இல் ரஷ்யப் புரட்சி இவ்வளவு தீர்க்கமான பங்கை வகித்தது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. போரை நிறுத்த, தொழிலாளர்கள் சர்வதேச அளவில் ஒன்றுபட்டு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராட வேண்டும் என்பது இப்போது எனக்குத் தெளிவாகப் புரிகிறது.'
மற்றொரு ஆசிரியையான சமுத்ரா, ஏகாதிபத்திய இராணுவவாதத்தால் ஏற்படும் பேரழிவைக் கண்டித்தார்.
'போர் மனித உயிர்களையும் முழு சமூகங்களையும் அழிக்கிறது. இந்தப் போரினால் உருவாக்கப்பட்ட எரிசக்தி நெருக்கடி ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள மக்களைப் பாதித்து வருகிறது. ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் இடிபாடுகளாகி வருகின்றன,' என அவர் சுட்டிக்காட்டினார்.
'போர் நிறுத்தம் ஒரு பொய். போரின் அடுத்த கட்டத்திற்குத் தயாராவதற்காக இந்த சக்திகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்துகின்றன என்ற உங்கள் விளக்கத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.'
அமெரிக்காவின் மூலோபாய நலன்களை ஆதரிப்பதில் இலங்கை அரசாங்கம் ஆற்றிய பங்கை இந்த கலந்துரையாடல் தெளிவுபடுத்தியதாக அவர் மேலும் கூறினார்.
போருக்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேசவாத மாற்றீட்டைக் காண்பதற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வரும் ஆர்வத்தை ஹட்டன் பிரச்சாரம் வெளிப்படுத்தியது. அவர்கள் போர் தொடர்பான சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தள வெளியீடுகளை வாங்கியதோடு, போர் எதிர்ப்பு இயக்கத்தை ஆதரிக்க குறிப்பிடத்தக்க நிதிப் பங்களிப்புகளையும் செய்தனர்.
தொழிலாள வர்க்கத்திற்குள் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான எதிர்ப்பு வளர்ந்து வருகின்ற போதிலும், இந்த எதிர்ப்பு ஒரு விவேகமான அரசியல் முன்நோக்குடன் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். மத்திய கிழக்கில் அரங்கேறும் பேரழிவு தனிப்பட்ட அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளின் விளைவு அல்ல. மாறாக முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியினதும் இராணுவ வன்முறை மூலம் உலகை மீண்டும் பங்கீடு செய்துகொள்ள ஏகாதிபத்திய சக்திகள் காட்டும் உந்துதலினதும் விளைவாகும்.
போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக சமத்துவமின்மையை உருவாக்குகின்ற, முதலாளித்துவ அமைப்பை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவது இன்றியமையாத பணியாகும். சர்வதேச சோசலிசத்திற்கான இந்தப் போராட்டத்தில் இணைந்து, அதனை முன்னெடுத்துச் செல்லுமாறும், அதன் ஒரு பகுதியாக வரும் 26 அன்று ஹட்டனில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறும் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கின்றன.
மேலும் படிக்க
- ஹோர்முஸ் நீரிணையை IRGC மூடியதை அடுத்து ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது குண்டு வீசப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
- சர்வதேச நாணய நிதியம் வெளிப்படையாகக் கூறுகிறது: போருக்கான செலவைத் தொழிலாளர்கள்தான் ஏற்க வேண்டும்
- இலங்கைத் தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை ஆதரிக்கின்றன
