ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு எதிராக இலங்கை சோ.ச.க./IYSSE நடத்திய கூட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கூட்டத்தின் ஒரு பகுதி

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும் (IYSSE), ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை எதிர்த்தும், சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தை விளக்கியும், இலங்கையின் மத்திய பெருந்தோட்ட மாவட்டத்திலுள்ள ஹட்டனில், நகர மண்டபத்தில், ஏப்ரல் 26 அன்று ஒரு பகிரங்கக் கூட்டத்தை நடத்தின. கொழும்பு மற்றும் பேராதனையில் நடைபெற்ற கூட்டங்களைத் தொடர்ந்து நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஏனையோரிடமிருந்தும் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்தது.

அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகளால் ஏற்பட்டுள்ளன உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுடன், உலகம் முழுதும் உள்ள ஏனையோரைப் போலவே, இலங்கையிலும் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் போரின் பொருளாதாரப் பாதிப்புகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாள வர்க்கத்தில் மிகவும் சுரண்டப்படும் பிரிவினரில் ஒரு பகுதியினரான தோட்டத் தொழிலாளர்கள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள், ஹட்டன் மற்றும் அருகிலுள்ள பண்டாரநாயக்க நகரத்திலும், தோட்டப்புறங்களிலும் தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசுவதற்காக வீடு வீடாகச் சென்று விரிவாகப் பிரச்சாரம் செய்தனர்.

ஈரான் மீதான பேரழிவுகரமான தாக்குதல்களைக் கண்டித்தும் இலங்கையில் ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்க்ள மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தீவிரமடைந்து வரும் தாக்குதல்களுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தியும், கட்சி ஆதரவாளர்கள் ஹட்டன் பேருந்து நிலையத்துக்கு அருகில் ஒரு போராட்டத்தை நடத்தினர். இப் போராட்டம், தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், இளைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரை ஈர்த்தது. பல ஊடக நிறுவனங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டன.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு எதிராக ஹட்டனில் சோ.ச.க.-IYSSE நடத்திய ஆர்ப்பாட்டம், 26 ஏப்ரல் 2026

போரைக் கண்டிக்க மறுத்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தனது கூட்டணியை ஆழப்படுத்தி வரும் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் 'நடுநிலை' வகிப்பதாக கூறுவதன் மோசடியைப் பற்றி வளர்ந்து வரும் கோபத்தை இந்த கலந்துரையாடல்கள் வெளிப்படுத்தின.

தோட்ட வாகன சாரதியான எஸ். லோகேஷ்வரன், போரினால் தேயிலை ஏற்றுமதிக்கான கேள்வி குறைந்து, ஏற்கெனவே சொற்பமானதாக இருக்கும் தனது வருமானம் மேலும் குறைந்துவிட்டதாகக் கூறினார். “தனது ஏழு பேர் கொண்ட குடும்பம் சந்திக்கும் பெரும் இன்னல்களை விளக்கிய அவர், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன, ஆனால் எங்கள் சம்பளம் உயரவில்லை,” என்றார்.

ஹட்டனைச் சேர்ந்த 17 வயது மாணவியான ஜே. ஷல்மிதா, விரிவடைந்து வரும் போர் மத்திய கிழக்கில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக எச்சரித்தார். “என் தாயும் சகோதரியும் சவூதி அரேபியாவிலும் கத்தாரிலும் பணிபுரிகிறார்கள்,” என்று அவர் விளக்கினார். “ஏவுகணைத் தாக்குதல்கள் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் வேலையை இழந்தாலோ அல்லது கொல்லப்பட்டாலோ, இலங்கையில் உள்ள பல குடும்பங்கள் வறுமையில் தள்ளப்படும்.”

ஒரு மின்சாரத் துறை ஊழியர், போர் பற்றிய சோ.ச.க.யின் பகுப்பாய்வை வலுவாக ஆதரித்தார். “நமது கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்தப் போரின் உண்மையான தன்மையை நான் இப்போது புரிந்துகொள்கிறேன்,” என்று அவர் கூறினார். “அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்தை அறிவித்த பின்னரும், இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல்களைத் தொடுத்தது. இது, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக ஒரு சட்டவிரோதப் போரை நடத்தி வருகின்றன என்பதை நிரூபிக்கின்றது.”

'இலங்கை அரசாங்கத்தின் 'நடுநிலை நிலைப்பாடு' ஒரு மோசடி, ஏனெனில் அது ஆக்கிரமிப்பாளரையும் பாதிக்கப்பட்டவரையும் சம நிலையில் வைக்கிறது. உண்மையில், அரசாங்கம் அமெரிக்காவுடன் அணிசேர்ந்துள்ளது,' என்று அவர் கூறினார்.

தொழிலாளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை அரசாங்கம் கைவிட்டதை அவர் கடுமையாகக் கண்டித்தார். இலங்கை மின்சார சபையைக் கலைத்ததையும், அதனைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி 'இந்த அரசாங்கத்தின் கீழ் மாற்றம் வரும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் எதுவும் மாறவில்லை,' என்று தெரிவித்தார். ஏகாதிபத்திய இராணுவவாதத்தை எதிர்க்க மறுப்பது அரசியல் உடந்தைக்குச் சமம் என்றும் கூறிய அவர், போர் குறித்து மௌனம் காக்கும் தொழிற்சங்கங்களையும் அவர் கடுமையாகச் சாடினார்.

சீனாவும் ரஷ்யாவும் இதில் இழுக்கப்பட்டால், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஒரு அணு ஆயுத உலகப் போராக வலுப்பெறக்கூடும் என்று பாடசாலை ஆசிரியை சிவரங்கனி எச்சரித்தார். ஈரானுக்கு எதிரான போரை எதிர்த்த அவர், ஒன்றுபட்ட சர்வதேச தொழிலாளர் வர்க்க நடவடிக்கையால் மட்டுமே காட்டுமிராண்டித்தனத்தை நோக்கிய வீழ்ச்சியைத் தடுக்க முடியும் என்றும் கூறினார்.

சோ.ச.க. பிரச்சாரகர்களுடன் பேசிய பிறகு, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரியான சுந்தரலிங்கம் கூறியதாவது: “முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் 1917 ரஷ்யப் புரட்சி இவ்வளவு தீர்க்கமான பங்கை வகித்தது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. போரை நிறுத்துவதற்கு, சர்வதேச அளவில் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராட வேண்டும் என்பது இப்போது எனக்குத் தெளிவாகப் புரிகிறது.”

எம். தேவராஜா

ஹட்டன் கூட்டத்தை ஆரம்பித்து வைத்து பேசிய சோ.ச.க.யின் மத்திய குழு உறுப்பினர் எம். தேவராஜா, ஈரானுக்கு எதிரான போர் என்பது “ஒரு தொலைதூர பிராந்தியப் பிரச்சினை அல்ல,” மாறாக “முதலாளித்துவச் சரிவின் காலகட்டத்தில் எரிசக்தி வளங்களைக் கைப்பற்றுவதற்கும், அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கும், அதன் இஸ்ரேலியக் கூட்டாளியின் ஆதரவுடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்தும் ஒரு கொள்ளையடிக்கும் தாக்குதல்” என்று விளக்கினார்.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் தொடக்கத்துடன் வரலாற்று ஒப்புமைகளைச் சுட்டிக்காட்டிய தேவராஜா, மனிதகுலம் 'போர் மற்றும் புரட்சிக் காலகட்டத்திற்குள்' நுழைந்துள்ளதாகக் கூறினார். 1917ல் போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் ரஷ்யத் தொழிலாளர் வர்க்கம் ஆட்சிக்கு வந்து, ஏகாதிபத்தியப் போரை சோசலிசப் புரட்சியின் மூலமாக மட்டுமே முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பதை நிரூபித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

தெற்காசியாவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றை மீளாய்வு செய்த தேவராஜா, இரண்டாம் உலகப் போரின்போது, இலங்கையில் இந்திய போல்ஷ்விக் லெனினிசக் கட்சியின் (BLPI) தலைமையில் தோட்டத் தொழிலாளர்கள் ஏகாதிபத்தியப் போரை எதிர்த்து, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு ஐக்கிய தெற்காசிய சோசலிசக் குடியரசுக்காகப் போராடினர்கள் என்று விளக்கினார்.

இதற்கு மாறாக, இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்த ஸ்ராலினிசக் கட்சிகள் போரின் போது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை ஆதரித்தன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பிரிவாகிய சோ.ச.க. ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான பி.எல்.பீ.ஐ.யின் புரட்சிகர அனைத்துலகவாதப் போராட்டத்தைத் தொடர்கிறது என்று பேச்சாளர் வலியுறுத்தினார்.

பிரதான அறிக்கையை வழங்கிய சோ.ச.க.யின் அரசியல் குழு உறுப்பினர் பாணி விஜேசிறிவர்தன, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர், மனிதகுலத்தை 'ஒரு பேரழிவு உலகப் போரின் விளிம்பிற்குக்' கொண்டு வந்துள்ளது என்று அவர் எச்சரித்தார். இந்த மோதல், ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான ஒரு சாதாரண மோதல் மட்டுமல்ல என்றும், இது சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக விரிவடைந்து வரும் ஒரு பரந்த மோதலின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு மற்றும் அதன் பரந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு விரிவான செயல்திட்டத்தின் அங்கம் என்றும் அவர் கூறினார்.

பாணி விஜேசிறிவர்தன

கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய போர்களுடன் ஒப்பிட்டு, ஈரான் மீது திணிக்கப்பட்ட அழிவை பேச்சளாளர் கண்டித்தார். ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் 'நடுநிலை' குறித்த கூற்றுகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்துடனான அதன் கூட்டணியை மூடிமறைக்க முயற்சிக்கும் ஒரு மோசடி என்று அவர் கண்டனம் செய்தார்.

முதலாளித்துவ அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள் சபை, அல்லது அரசியல் ஸ்தாபனத்திடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் ஏகாதிபத்தியப் போரைத் தடுத்து நிறுத்த முடியாது என்று விஜேசிறிவர்தன விளக்கினார். “ஏகாதிபத்தியப் போரைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேசத் தொழிலாளர் வர்க்கமே” என்று பிரகடனப்படுத்திய அவர், சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேசப் போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுத்தார்.

கலந்துரையாடல் அமர்வின் போது, ​​கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர், சோ.ச.க.யின் வேலைத்திட்டம் ஒரு நீண்ட காலத் திட்டமாகத் தோன்றுவதாகக் கூறி, 'போரை விரைவில் நிறுத்துவதற்கு ஏதேனும் வழி உள்ளதா?' என்று கேள்வி எழுப்பினார்.

போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதா அல்லது தாமதிப்பதா என்ற கேள்வி, சர்வதேசத் தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போருக்கு எதிராக அணிதிரட்டப்படுகிறதா என்பதைப் பொறுத்தே அமையும் என்று விஜேசிறிவர்தன பதிலளித்தார். உலக முதலாளித்துவத்தை துாக்கிவீசி, போரை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரே புரட்சிகர சமூக சக்தி அதுவே ஆகும்.

இலங்கையின் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற பல்வேறு மத்தியதர வர்க்கக் குழுக்கள், போரை நிறுத்துவதற்காக ஒரு பரந்த முன்னணியை அமைத்து ஏகாதிபத்தியத்திடம் வேண்டுகோள்விடுக்க வேண்டும் என்று விடுத்த அழைப்புகள் பயனற்றவை என்றும், அவை தொழிலாளர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கியுள்ளன என்றும் பேச்சாளர் விளக்கினார். பல தசாப்தங்களாக, இந்தப் போலி இடது குழுக்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் சேர்ந்து, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கு குறித்து ஐயுறவை விதைத்து வருகின்றன.

'நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும் மட்டுமே இந்த மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச வேலைத் திட்டத்திற்காகவும் முன்னோக்கிற்காகவும் போராடி வருகின்றன. தொழிலாளர் வர்க்கம் இப்போது அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் போராட்டத்தில் இறங்கியுள்ளது. இந்தத் வேலைத்திட்டத்திற்காகப் போராடுவது ஒரு நீண்டகாலத் திட்டம் அல்ல, மாறாக ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே சாத்தியமான வேலைத்திட்டமாகும்,' என்று விஜேசிறிவர்தன கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “உடனடித் தீர்வு எதுவும் இல்லை, ஆனால், தொழிலாளர்கள் உடனடியாகச் செயல்படுத்தத் தொடங்கக்கூடிய ஒரு அவசரமான மற்றும் உறுதியான வேலைத்திட்டம் உள்ளது. அது, போருக்கு மூல காரணமான பூகோள முதலாளித்துவ முறைமையை எதிர்த்துப் போராடுவதாகும். இந்தப் போராட்டம் சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது,” என்றார். ஏகாதிபத்தியப் போரின் தன்மை மற்றும் பின்னணியைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல், தொழிலாளர்களின் வெறும் எதிர்ப்பு மட்டும் இந்த நெருக்கடியைத் தீர்க்காது என்றும் அவர் மேலும் கூறினார்.

ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களை அணிதிரட்டுவதன் பாகமாக, பிரதான துறைகளில் தொழிற்துறை போராட்டங்களை ஒழுங்கமைப்பதற்காக, வேலைத் தளங்களிலும் சுற்றுப்புறங்களிலும் சுயாதீன நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் விஜேசிறிவர்தன அழைப்பு விடுத்தார்.

Loading