முன்னோக்கு

வெனிசுவேலாவில் நிலநடுக்கப் பேரழிவு: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு குற்றம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வெனிசுவேலாவின் மீட்புப் பணிகளில் வேர்ஜீனியா மாநிலத்தின் ஃபேர்ஃபாக்ஸ் கவுண்டியைச் சேர்ந்த நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்புக் குழு பங்கேற்ற போது. [Photo: @StateDep]

ஜூன் 24 அன்று வெனிசுவேலாவைத் தாக்கிய இரட்டை நிலநடுக்கங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியம் செதுள்ள ஒரு மாபெரும் குற்றத்தை அம்பலப்படுத்தியுள்ளன. ஆறு மாதங்களுக்கு முன்பு, அமெரிக்கா அந்த நாட்டின் மீது படையெடுத்து, அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கடத்திச் சென்று, அந்நாட்டின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்காக அவரது அரசாங்கத்தை வாஷிங்டனின் பொம்மை ஆட்சியாக மாற்றியது. வெனிசுவேலாவை ஆக்கிரமித்து, அந்நாட்டில் கொள்கைகளை “வழிநடத்தும்” அதிகாரமாகத் தன்னை அறிவித்துள்ள வாஷிங்டன், இந்தப் பேரழிவுக்கும், அதற்குப் பதிலளிக்க மறுத்துள்ள அதன் குற்றகரமான அலட்சியத்திற்கும் நேரடிப் பொறுப்பாகும்.

இந்தப் படையெடுப்பும் மதுரோவை அகற்றியதும், அதனால் நாட்டில் உருவாக்கப்பட்ட குழப்பமும் ஒழுங்கின்மையும், நிலநடுக்கத்துக்குப் பிந்தைய பேரழிவுகரமான நிவாரண நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன. இவை அனைத்தும், அதற்கு முன்னரே பல ஆண்டுகளாக அமெரிக்கா முன்னெடுத்த பொருளாதார நாசவேலையைத் தொடர்ந்து நிகழ்ந்தன. அந்த நாசவேலை, வெனிசுவேலாவின் மருத்துவமனைகள், மின்விநியோக அமைப்பு மற்றும் மிகவும் அத்தியாவசியமான பொருட்களைக்கூட இறக்குமதி செய்யும் திறனை முடக்கிவிட்டிருந்தது.

குடும்பங்கள் தங்களின் வெற்று கைகளால் கொங்கிரீட் இடிபாடுகளைத் தோண்டிக் கொண்டிருக்கும் வேளை, வெனிசுவேலா மீதான தனது கட்டுப்பாட்டை மேலும் இறுக்குவதற்காக ட்ரம்ப் நிர்வாகம் இந்த பேரிடரைத் தங்களுக்குச் சாதகமாக சுரண்டிக்கொள்வதற்காக, போர்க்கப்பல்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் விமான நிலையத்தைக் கைப்பற்ற ராணுவப் படைகளையும் அனுப்பியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைக்குள், உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்த அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகார அலுவலகம், 50,000 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை மேற்கோள்காட்டியது. El País வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வு, காட்டியா லா மாரிலிருந்து லா குவைரா மற்றும் சர்வதேச விமான நிலையம் வழியாக கரபல்லேடா வரையான மக்கள் அடர்த்தி கொண்ட கடலோரப் பகுதியான, சான் செபாஸ்தியான் புவிப்பிளவில் அழிவு துல்லியமாகப் பரவியிருப்பதைக் காட்டுகிறது. பேரழிவுகரமான நிலநடுக்க ஆபத்து குறித்தும், நவீன பொறியியல் தரங்களுக்கு ஏற்ப கட்டிடங்களை மீளக் கட்டியெழுப்பவோ அல்லது வலுப்படுத்தவோ வேண்டியதன் அவசியம் குறித்தும் பல தசாப்தங்களாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் அனைத்தும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன.

நிலநடுக்கம் நிகழ்ந்து நான்கு நாட்கள் கடந்த பின்னரும், குடும்பத்தினர் பெரிய கத்திகள், கடப்பாரைகள், நீரியல் வாகனத் தூக்கிகள் மற்றும் தங்களது வெறும் கைகளைக் கொண்டும் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்ட கொங்கிரீட் இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருக்கின்றனர். இடிபாடுகளுக்குக் கீழே சிக்கியுள்ள குழந்தைகள் அழும் சத்தம் பின்னர் நின்றுபோவதாகவும், அதேவேளையில் சடலங்களின் தாங்க முடியாத துர்நாற்றம் வீசுவதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிர் பிழைத்த பிள்ளைகள், தங்களது மணிக்கட்டில் அடையாளமிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள பட்டிகளைத் தவிர வேறு எந்த அடையாளமும் இன்றி தனியாக மருத்துவமனைகளுக்கு வருகின்ற அதேவேளை, மருத்துவமனைகளும் சவக்கிடங்குகளும் உயிரிழந்தவர்களால் நிரம்பி வழிகின்றன.

“எந்த இயந்திரமும் வரவில்லை, எதுவுமே இல்லை,” என்று காட்டியா லா மாரைச் சேர்ந்த ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். “எங்களுக்கு மின்சாரமும் இல்லை, தண்ணீரும் இல்லை. குடியிருப்பு மாடிமனைகள் மிகவும் மோசமாக சேதமடைந்திருப்பதால் அங்கிருந்து எங்களை வெளியேற்றுமாறு குடியிருப்பாளர்கள் கேட்கின்றனர்.” கராகஸில் அனைத்தையும் இழந்த ஒரு பெண், “தங்குமிடம் குறித்து எவரும் எங்களிடம் எதுவும் கூற வரவில்லை. இங்கே எல்லாமே அயலவர்களை மட்டுமே நம்பியுள்ளது,” ஏன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுபவர்களில், நிலநடுக்கம் ஏற்பட்ட அன்று காலை அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களை ஏற்றிவந்த விமானத்தில் இருந்த முழு பயணிகளும் அடங்குவர். அந்த விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்ட 147 பேரில், அவர்கள் தங்கியிருந்த விடுதி இடிந்து விழுந்த பின்னர் வெறும் 12 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.

உயிரிழந்த ஆயிரக்கணக்கானோர் ஒரு இயற்கைப் பேரழிவின் பலியாடுகள் மட்டுமல்ல. வெனிசுவேலாவின் சீர்குலைந்த வீட்டு வசதிகள், அதன் சுகாதார அமைப்பின் சரிவு, மின்விநியோகக் கட்டமைப்பின் சிதைவு, மற்றும் எந்தவொரு அர்த்தமுள்ள அவசரகால நிவாரண நடவடிக்கையையும் ஒழுங்கமைக்க அரசின் இயலாமை ஆகிய அனைத்தும், 1902–1903 வெனிசுவேலா நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் வெனிசுவேலாவை அரைக்காலனித்துவ முறையில் ஒடுக்கி வந்ததன் விளைவாகும்.

1902–1903 வெனிசுவேலா நெருக்கடியின் போது, செலுத்தப்படாத கடன்களை வசூலிக்கும் பெயரில் ஜேர்மன், பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய போர்க்கப்பல்கள் வெனிசுவேலாவின் துறைமுகங்களை குண்டுவீசித் தாக்கின. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட், வெனிசுவேலாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக அன்றி, மாறாக, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏதேனும் ஒன்று “ஒழுக்கப்படுத்தப்பட” வேண்டியிருந்தால் அதை அமெரிக்காவே செய்யும் என்பதை நிலைநாட்டுவதற்காகத் தலையிட்டார். இந்த மோதலானது, மன்ரோ கோட்பாட்டிற்கான (Monroe Doctrine) ரூஸ்வெல்ட் திருத்தக் கொள்கை (Roosevelt Corollary) உருவாவதற்கு வழிவகுத்து, மேற்கு அரைக்கோளத்தில் “சர்வதேச பொலிஸ் அதிகாரத்தை” நடைமுறைப்படுத்துவதற்கான பிரத்யேக உரிமையை வாஷிங்டன் தானே எடுத்துக்கொண்டது.

வாஷிங்டன் இந்தக் கோட்பாட்டை விரைவாகவே வெனிசுவேலாவில் நடைமுறைப்படுத்தி, 1908 இல் ஆட்சி மாற்றச் சதியை முன்னெடுத்து, ஜுவான் விசென்டே கோமேஸ் என்ற சர்வாதிகாரியை ஆட்சியில் அமர்த்தியது. சித்திரவதை, சங்கிலித் தொழிலாளர் முகாம்கள் மற்றும் வெகுஜன மரணதண்டனைகள் மூலமாக 1935 வரை ஆட்சி செய்த கோமேஸ், ரொக்கஃபெல்லர்களின் ஸ்டாண்டர்ட் ஒயில் நிறுவனத்திற்கும் பிற அமெரிக்க பெருநிறுவனங்களுக்கும் பரந்தளவிலான எண்ணெய் சலுகைகளை வழங்கி, வெனிசுவேலாவை உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக மாற்றினார்.

பின்னர் வாஷிங்டன், மார்கோஸ் பெரெஸ் ஜிமெனெஸ் தலைமையிலான மற்றொரு கொடூரமான சர்வாதிகார ஆட்சிக்கும் ஆதரவளித்தது. அவரது இரகசியப் பொலிசானது படுகொலைகள், பலாத்காரமாக காணாமல் ஆக்குதல் மற்றும் வதைமுகாம்கள் மூலம் பயங்கரவாத ஆட்சியை நிறுவியது. வெகுஜனங்களை அடக்கி ஒடுக்கி வழங்கிய சேவைகளுக்கு வெகுமதியாக, அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர், பெரெஸ் ஜிமெனெசுக்கு லெஜன் ஒஃப் மெரிட் (Legion of Merit) அமெரிக்க உயரிய இராணுவ விருதை வழங்கினார்.

1976 இல் எண்ணெய்த் தொழில் தேசியமயமாக்கப்பட்டமை அடிப்படையில் எதையும் மாற்றவில்லை. அதே கட்டமைப்புகள், அதே அமெரிக்க பெருநிறுவனங்களின் துணை நிறுவனங்கள், மற்றும் ஒரே ஒரு ஏற்றுமதிப் பொருளைச் சார்ந்த அதே பொருளாதார அமைப்பு தொடர்ந்தது. 1980களின் பிற்பகுதியில் எண்ணெய் விலைகள் சரிந்தபோது, ஜனாதிபதி கார்லோஸ் ஆண்ட்ரெஸ் பெரெஸ், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின்படி அதிர்ச்சி வைத்திய பொருளாதாரக் கொள்கைகளைத் திணித்ததால் வெடித்த கரகாசோ வெகுஜன எழுச்சி, இராணுவச் சட்டத்தையும் தெருக்களில் போராட்டக்காரர்கள் விசாரணையின்றி சுட்டுக்கொல்லப்படுவதையும் எதிர்கொண்டது.

1998 இல் ஹூகோ சாவேஸ் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை வாஷிங்டனின் அதிகரித்த விரோதத்தைத் தூண்டியது. அதன் உச்சக்கட்டமாக, 2002 ஏப்ரலில் அமெரிக்காவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்புச் சதியினால் சாவேஸ் தற்காலிகமாக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட போதிலும், வெகுஜன போராட்டங்கள் அவரை மீண்டும் பதவிக்குக் கொண்டுவந்தன. சாவேஸின் மறைவிற்குப் பின்னர் நிக்கோலஸ் மதுரோ பதவியேற்றதைத் தொடர்ந்து, ஒபாமா நிர்வாகம் வெனிசுவேலாவை “அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதாக” அறிவித்து, கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.

முதல் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் பொருளாதாரப் போர் இடையறாது தீவிரப்படுத்தப்பட்டதுடன் பின்னர் பைடன் நிர்வாகமும் அதைத் தொடர்ந்ததால்,  இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள், மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்யும் வெனிசுவேலாவின் திறன் திட்டமிட்டு நெரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையளிப்பாளர்கள், இந்தத் தடைகள் பெருமளவிலான மனிதத் துயரத்தை உருவாக்கியதுடன், இலட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளுக்குப் பங்களித்ததாக முடிவு செய்தனர்.

இந்த அனைத்து நிகழ்வுகளும், 2026 ஜனவரி 3 அன்று, எண்ணெய் மற்றும் பிரதான கனிம வளங்களின் மீதான கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக, எவ்வித தூண்டுதலும் இல்லாத ஒரு ஆக்கிரமிப்புப் போராகருக்குச் சமமான ஒரு நடவடிக்கையில், ஜனாதிபதி மதுரோவைக் கடத்துவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் சிறப்புப் படைகளை அனுப்பியதில் உச்சக்கட்டத்தை எட்டின.

அதன் பின்னர் கடந்த ஆறு மாதங்களில், வெனிசுவேலா, மன்ரோ கோட்பாட்டின் “ட்ரம்ப் தொடர்ச்சி” எனப்படுவதன் கீழ், ஒரு அரைக்காலனித்துவ பாதுகாப்பு ஆட்சிப் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. சாவேஸ்வாதிகள் தலைமையிலான தேசியச் சபையில் அவசரமாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் மூலம், உலகின் மிகப் பெரிய உறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் இருப்புகளும் பிரதான தங்கச் சுரங்க வளங்களும் வாஷிங்டனுக்கும் அதன் பெருநிறுவனப் பங்காளிகளுக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட், “தற்போது வெனிசுவேலாவில் கொள்கைகளை அமெரிக்காவே வழிநடத்துகிறது,” என்று வெளிப்படையாக அறிவித்தார்.

ஜூன் 24 அன்று டஜன் கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆகவும் பற்றாக்குறையான அவசரகால நிவாரண நடவடிக்கைகளும், இந்த நூற்றாண்டு கால அரைக்காலனித்துவ ஒடுக்குமுறையின் விளைவாக மட்டுமே விளக்கப்பட முடியும்.

அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்த தன்னலமற்ற மீட்புக் குழுக்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற போதிலும், வாஷிங்டன் முதன்மையாக அனுப்பியிருப்பது ஒரு இராணுவ ஆக்கிரமிப்புப் படையையே ஆகும். USS Fort Lauderdale மற்றும் USS Billings ஆகிய அமெரிக்காவின் இரு போர்க்கப்பல்கள் வெனிசுவேலா கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளன. வெனிசுவேலா விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடமிருந்து சிமோன் பொலிவார் சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதற்காக, அவசரநிலை நடவடிக்கைப் பிரிவினரை ஏற்றிச் செல்லும் ஐந்து C-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானங்கள் தொடர்ந்து பறந்து வருகின்றன. குரசாவோவில் முன்கூட்டியே நிலைநிறுத்தப்பட்டுள்ள MV-22 Osprey, UH-1Y Super Huey உலங்குவானூர்திகள் மற்றும் இராணுவத்தின் CH-47 Chinook உலங்குவானூர்திகள் இந்த இராணுவ நடவடிக்கையின் முழு வரைபையும் வெளிப்படுத்துகின்றன.

இந்த இராணுவ நிலைநிறுத்தம், அமெரிக்காவும் அதன் கைப்பாவை இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ் தலைமையிலான அரசாங்கமும் வெனிசுவேலாவின் உள்பகுதிகளில் ஏற்கனவே கூட்டாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுடன் முற்றிலும் ஒத்துப்போகிறது. பன்னாட்டு சுரங்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில், அமெரிக்க மற்றும் வெனிசுவேலா படைகள் ஒரினோகோ ஆர்க் தங்க மற்றும் கோல்டான் சுரங்கப் பகுதிகளில் குண்டுவீசி, முறைசாரா சுரங்கத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்த நடவடிக்கைகளில், Tren de Aragua கும்பலின் தலைவராகக் கூறப்படும் ஹெக்டர் கெரெரோ ஃபுளோரெஸ் சட்டத்துக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டதும் அடங்கும்.

வியாழக்கிழமை இரவு, அமெரிக்க கடற்படையின் மேஜர் ஜெனரல் கெவின் ஜே. ஜரார்ட் கராகஸுக்கு வந்து, அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் படையின் (SOUTHCOM) நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கும், நடைமுறையில் காலனித்துவ நிர்வாகியாகச் செயல்படுவதற்கும் பொறுப்பேற்றார். அதேவேளை, ரொட்ரிக்ஸ், பொலிவேரிய தேசியக் காவல்படையின் மேஜர் ஜெனரல் ஜுவான் எர்னெஸ்டோ சுல்பரான் குயின்டெரோவை அவசரநிலைக்கான ஒரே அதிகாரியாக நியமித்தார். அமெரிக்கா வெனிசுவேலாவை ஆக்கிரமித்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில், கராகஸ் பெருநகரப் பகுதியையும் அதைச் சூழவுள்ள பிராந்தியங்களையும் உள்ளடக்கிய பேரிடர் வலயம் தற்போது முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

2010 ஆம் ஆண்டு ஹைட்டி நிலநடுக்கத்துடனான ஒப்பீடு நடுங்க வைக்கிறது. அப்போதும் வாஷிங்டன் பேரழிவுகரமான நிலநடுக்கத்தைப் பயன்படுத்தி 20,000 துருப்புக்களை அனுப்பி, போர்ட்-ஒ-பிரின்ஸ் விமான நிலையத்தைக் கைப்பற்றி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அது ஆதிக்கம் செலுத்திய அந்த நாட்டின் மீது நேரடி இராணுவ நிர்வாகத்தைத் திணித்தது. அவசரமாகத் தேவைப்பட்ட மருத்துவ உபகரணங்களைக் கொண்டு வந்த எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் நிவாரண விமானங்கள், அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்த விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படாத அதேவேளை, நோயாளிகள் உயிரிழந்தனர். அந்த நடவடிக்கையின் நோக்கம் மீட்பு அல்ல. ஆக்கிரமிப்பே ஆகும்.

கராகஸைத் தலைமையிடமாகக் கொண்ட அதிகாரமும் மூலோபாயமும் (Poder & Estrategia) என்ற ஆலோசனை நிறுவனத்தின் அரசியல் ஆய்வாளர் ரிக்கார்டோ ரியோஸ், முதலாளித்துவ வர்ணனையாளர்கள் அரிதாகவே இவ்வளவு வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் உண்மையைச் சுட்டிக்காட்டினார்: 'இந்த நிலநடுக்கமானது, வெனிசுலாவில் அமெரிக்காவின் இருப்பை அதிகரிக்கவும், அந்நாட்டின் மீதான அதன் கட்டுப்பாட்டை பலப்படுத்தவும் மிகச் சிறந்த முறையில் சுரண்டிக்கொள்ளப்படப் போகிறது. மேலும், ரோட்ரிக்ஸ் தனது முதன்மை கூட்டாளியாக அமெரிக்காவைச் சார்ந்து இருப்பதற்கும் இது வழிவகுக்கும்.'

ட்ரம்பே தனது கருத்தின் மூலம் காலனித்துவ ஆணவத்தின் மிக வெளிப்படையான வாக்குமூலத்தை அளித்தார். நிலநடுக்கத்திற்குப் பிறகு ஆற்றிய உரையில், அமெரிக்காவின் சர்வாதிகாரி ஆகத் துடிக்கும் அவர் அறிவித்ததாவது: “வெனிசுலா அருமையாக உள்ளது, நாங்கள் சிறந்த உறவைக் கொண்டுள்ளோம். அது ஒரு நாள் போர், நாம் அவர்களை மிகவும் பலமாக தாக்கினோம், இப்போது நாம் மில்லியன் கணக்கான பீப்பாய் எண்ணெயை எடுத்துள்ளோம், மேலும் போருக்கான செலவை விட பல மடங்கு இலாபத்தை ஈட்டியுள்ளோம்... அது மீண்டும் ஒரு மகிழ்ச்சியான நாடாக மாறிவிட்டது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் தெருக்களில் நடனமாடுகிறார்கள்.'

அமெரிக்கப் படையெடுப்புக்கு முன்னர், வெனிசுவேலாவின் பொருளாதாரம் ஒரு தசாப்த காலத்தில் சுமார் 80 சதவீதம் சுருங்கியிருந்தது. இதன் விளைவாக 80 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தள்ளப்பட்டனர்.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களும் சேர்ந்து தொடர்ந்து பேணிய பொருளாதாரத் தடைகள், திட்டமிட்ட பொருளாதாரப் பற்றாக்குறையை உருவாக்கி, நேரடியாக மிக அதிகமான வெனிசுவேலா மக்களின் உயிர்களைப் பறித்ததுடன், புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பிந்தைய பேரழிவுக்கான அடித்தளத்தையும் அவையே அமைத்தன.

லா குவைரா மற்றும் கராகஸில் உயிரிழந்தவர்கள், முதலாளித்துவ தேசியவாதத்தின் வரலாற்றுத் திவால்நிலைக்கும், அதன் “பொலிவேரிய” வடிவத்திற்கும் பலியானவர்களாகவும் உள்ளனர். ஹூகோ சாவேஸ், நிக்கோலஸ் மதுரோ மற்றும் தற்போது ரொட்ரிக்ஸ் தலைமையிலான சாவேஸ்வாத அரசாங்கங்கள், வரலாற்றிலேயே மிகப் பெரிய எண்ணெய் வருவாய் உயர்வுகளில் ஒன்றை மேற்பார்வையிட்டபடி, ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் ஆட்சியில் இருந்தன.

அவை “பொலிவேரியப் புரட்சி” மற்றும் “21ஆம் நூற்றாண்டின் சோசலிசம்” என்று பிரகடனம் செய்தன. ஆனால், புதன்கிழமை இரவு இடிந்து தரைமட்டமான கொங்கிரீட் மற்றும் செங்கல் அடுக்குமாடிக் கட்டிடங்கள் —அவற்றில் பல, 1999 ஆம் ஆண்டு வர்காஸ் பேரழிவுக்குப் பின்னர் நிலநடுக்கப் பொறியியல் தரநிலைகள் இன்றி மீளக் கட்டப்பட்டவை— அந்த “சோசலிசம்” உண்மையில் எதை வழங்கியது என்பதற்கான நினைவுச் சின்னங்களாக நிற்கின்றன. மனித உயிருக்கு உண்மையிலேயே முன்னுரிமை அளித்திருக்கும் ஒரு அரசாங்கமெனில், எண்ணெய் வளத்தால் கிடைத்த அந்த ஆண்டுகளின் வருவாயைப் பயன்படுத்தி, நாட்டின் குடியிருப்புக் கட்டிடங்களை நவீன நிலநடுக்கத் தரநிலைகளுக்கு ஏற்ப முறையாக வலுப்படுத்தி மீளக் கட்டியிருக்கும்; மருத்துவமனை அமைப்பை பலப்படுத்தியிருக்கும்; மேலும், விஞ்ஞானிகள் வெளிப்படையாக எச்சரித்திருந்த இத்தகைய பேரழிவுகளைச் சமாளிக்கக்கூடிய அவசரகாலத் தயார்நிலை அமைப்புகளையும் உருவாக்கியிருக்கும்.

ஒரு நில அதிர்வை பெருமளவிலான சவக்குழியாக மாற்றிய சமூக நிலைமைகள், ஒரு நூற்றாண்டுகால ஏகாதிபத்தியக் கொள்ளையாலும், பல தசாப்தங்களாக நீடித்த பொருளாதாரத் தடைகளாலும், தொழிலாள வர்க்கத்தை வோல் ஸ்ட்ரீட்டின் தேவைகளுக்குக் கீழ்ப்படுத்திய ஊழல்மிக்க முதலாளித்துவ தேசியவாதத்தாலும் உருவாக்கப்பட்டவை. வெனிசுவேலாவில் உயிரிழந்தவர்கள் ஒரு வர்க்கக் குற்றத்தின் பலியாடுகளாவர்.

இப்போது வெனிசுவேலாவுக்கு மீட்புக் குழுக்களை அனுப்பிக் கொண்டிருக்கும் அரசாங்கங்கள், அமெரிக்கா அந்நாட்டை பட்டினி, நோய் மற்றும் துயரத்தின் மூலம் அடிபணியச் செய்ய மேற்கொண்ட முயற்சிகளின்போது அமைதியாகக் கைகட்டி நின்றன, அல்லது அவற்றில் நேரடியாக உடந்தையாகச் செயல்பட்டன.

1902 ஆம் ஆண்டு மார்டினிக்கில் 40,000 பேரின் உயிரைப் பறித்த மவுன்ட பெலி எரிமலை வெடிப்பைப் பற்றி எழுதிய ரோசா லக்சம்பேர்க், இத்தகைய தருணங்களின் உண்மையான தன்மையை மிகுந்த தெளிவுடன் சித்தரித்தார். பல தசாப்தங்களாக ஒடுக்குமுறையின் மூலம் எண்ணற்ற உயிர்களைப் பலிகொண்ட பின்னர், உயிர் பிழைத்தவர்களுக்கு உதவி வழங்க விரைந்து வந்த ஏகாதிபத்திய வல்லரசுகளை அவர், “கண்ணீர் வடிக்கும் மாமிச உண்ணிகள்” என்றும், “கொடையாளியின் உடையில் வந்த விலங்குகள்” என்றும் வர்ணித்தார்.

தனது கட்டுரையை லக்சம்பேர்க், வரவிருக்கும் வரலாற்றுக் கணக்குத் தீர்ப்பு பற்றிய சித்தரிப்புடன் நிறைவு செய்தார். ஒடுக்குமுறை நிறைந்த சமூக ஒழுங்கை அடித்துச் செல்லக்கூடிய சமூகப் புரட்சி எனும் ஒரு “எரிமலைக்குப்”, பின்னர் மனிதகுலம் இறுதியாக அதன் ஒரே உண்மையான மற்றும் இறுதி எதிரியான “குருட்டுத்தனமான இயற்கையை” எதிர்கொள்ளும், என்று அவர் அறிவித்தார்.

நிலநடுக்கங்களும் பிற இயற்கை நிகழ்வுகளும் தமது பலிகடாக்களை தேர்ந்தெடுப்பதில்லை. இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவமும் ஏகாதிபத்திய ஆதிக்கமும் சார்ந்த சமூக ஒழுங்கே யார் உயிரிழக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.

வெனிசுவேலாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம், நிலைமையை தமது கைகளில் எடுத்துக்கொண்டு, பயனுள்ள மீட்பு மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்குத் தேவையான வளங்களை அணிதிரட்டுவதற்காக, சுயாதீனமான அடிமட்ட தொழிலாளர் நிவாரணக் குழுக்களை அமைக்கும் அதேவேளை, வெனிசுவேலாவையும் இலத்தீன் அமெரிக்காவையும் வரலாற்று ரீதியாகக் கொள்ளையடித்ததன் மூலம் அமெரிக்கப் பெருநிறுவனங்கள் குவித்த அனைத்து சட்டவிரோதச் செல்வங்களையும் பறிமுதல் செய்து, சமூக சமத்துவத்தின் அடிப்படையில் நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கோர வேண்டும்.

Loading