கல்வியாளர் சுமித் சாமிந்த “பல்துருவ உலகம்” பற்றிய மாயைகளைப் பரப்புகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான சுமித் சாமிந்த, தனது பர்யாலோகய என்ற யூடியூப் நிகழ்ச்சியின் மூலம், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் குற்றவியல் போரின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்டார். “மத்திய கிழக்கில் போர்நிறுத்தம்: இது ஈரானுக்கு ஒரு மூலோபாய வெற்றியா?” என்ற தலைப்பில் அவர் ஏப்ரல் 10 அன்று கலந்துரையாடினார்.

பர்யாலோகய யூடியூப் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் விரிவுரையாளர் சுமித் சாமிந்தவும் அவரது சகாவான விதர்ஷன கன்னங்கரவும்.

பெப்ரவரி 28 அன்று தொடங்கிய ஆக்கிரமிப்புப் போர் 40 நாட்கள் நீடித்ததைத் தொடர்ந்து, வாஷிங்டனும் தெஹ்ரானும் நிலையற்ற போர்நிறுத்த உடன்பாட்டை எட்டிய உடனேயே இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

சாமிந்தவும், கலந்துரையாடலை நெறிப்படுத்திய விதர்ஷன கன்னங்கரவும், இந்தப் போர்நிறுத்த உடன்பாடு மூலம் வெளிப்படுத்தப்பட்ட நிலைமையை, “பல்துருவ உலகம்” பற்றிய தங்களது ஏகாதிபத்திய-சார்பு முன்னோக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான சிறந்த வாய்ப்பாக உற்சாகத்துடன் சித்தரித்தனர்.

சாமிந்த, பல ஆண்டுகளாக மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) ஆதரித்த பின்னர், அதிலிருந்து பிரிந்த ஒரு குழுவால் அமைக்கப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்தார். ஷான்தல் மூஃப் (Chantal Mouffe), எர்னஸ்டோ லக்லாவ் (Ernesto Laclau), ஸ்லாவோய் ஜிஜெக் (Slavoj Žižek) போன்ற பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களின் மார்க்சிச-விரோத “இடது ஜனரஞ்சகவாதத்தை” (left populism) ஊக்குவிக்கும் இலங்கையின் தட்டுக்களில் அவரும் ஒருவர்.

2024 இறுதியில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஜே.வி.பி.யின் எழுச்சியானது இந்த “இடது ஜனரஞ்சகவாத” திசையமைவின் சாத்தியத்தை உறுதிப்படுத்துவதாக சாமிந்த தொடர்ந்து வாதிட்டு வருகிறார். சாமிந்தவின் ஆதரவுடன், கன்னங்கர, ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வதற்காக “மக்கள் பலம்” (Janatha Balaya) என்ற தளத்தை உருவாக்கி, அவ்வப்போது “தவறுகளைத் திருத்திக்கொள்ள” ஆலோசனை வழங்கி, அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எப்போதும் நியாயப்படுத்தி வந்துள்ளார்.

எவ்வாறெனினும் நடைமுறையில், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களுடன் தன்னை அணிசேர்த்துக்கொண்டுள்ளது. அது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க போரின் ஆதரவாளராகும். திசாநாயக அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கட்டளைகளை ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தி வருவதுடன், அதன் மூலம், பெருவணிக நிறுவனங்களினதும் சர்வதேச நிதி மூலதனத்தினதும் அரசாங்கமாக அது தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த யதார்த்தங்கள் சிந்திக்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு இரகசியமானவை அல்லாத அதேநேரம், அவர்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான கோபமும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், சாமிந்த மற்றும் கன்னங்கர கும்பல், “இடது ஜனரஞ்சகவாத” திசையமைவாக அரசாங்கத்தை குணாம்சப்படுத்தி, அதன் பிற்போக்கு வேலைத்திட்டத்தை நியாயப்படுத்தி வருகின்றது.

அனைத்து பர்யாலோகய நிகழ்ச்சிகளிலும் வெளிப்பட்டுள்ள அவர்களது முதலாளித்துவ-சார்பு உலகக் கண்ணோட்டத்திலிருந்தே இந்த நிலைப்பாடுகள் தோற்றம்பெறுகின்றன. குறிப்பாக, ஏப்ரல் 10 அன்று 40 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த அவர்களது கலந்துரையாடலில், சாமிந்தவோ கன்னங்கரவோ “ஏகாதிபத்தியம்” அல்லது “முதலாளித்துவம்” என்ற சொற்களை ஒரு முறைகூட பயன்படுத்தவில்லை.

பிரிட்டனதும் அமெரிக்காவினதும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு நீண்டகாலமாக உட்படுத்தப்பட்டிருந்ததோடு, தற்போது வாஷிங்டனின் புதிய காலனித்துவ ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுவரும் ஒடுக்கப்பட்ட நாடான ஈரானுக்கு எதிராக, அமெரிக்காவும் அதன் பிரதான பிராந்தியக் கூட்டாளியான இஸ்ரேலும் முன்னெடுக்கும் குற்றவியல் ஆக்கிரமிப்பை அவர்கள் கண்டனம் செய்யவில்லை.

மினாப்பில் ஆரம்பப் பெண்கள் பாடசாலையில் 150க்கும் மேற்பட்ட மாணவிகள், அதன் ஊழியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் மற்றும் அந்நாட்டு அரசியல் தலைவர்களும் இலக்குவைத்து கொல்லப்பட்டமை, அல்லது அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை குறித்து அவர்கள் எந்தக் கவலையையும் வெளிப்படுத்தவில்லை.

அதற்குப் பதிலாக, கன்னங்கரவின் ஆதரவுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் மன்னிப்பாளர்களைப் போலவே சாமிந்த வாதிட்டார். போர்நிறுத்த உடன்பாட்டில் ஈரானுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதால், அது வாஷிங்டனுக்கு ஒரு பின்னடைவாகும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஈரானின் தாக்குதல்கள் பிராந்திய உள்கட்டமைப்புகளைப் பாதித்ததாக வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) தெரிவித்தமை, ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனும் ட்ரம்புக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயங்கியமை, குடியரசுக் கட்சியின் சில பிரிவுகளின் விமர்சனங்கள், அமெரிக்காவில் நடைபெற்ற “மன்னர்கள் வேண்டாம்” எதிர்ப்புப் போராட்டங்கள் போன்ற பல்வேறு தரப்புகளிலிருந்து எழுந்த “அழுத்தங்களின்” காரணமாகவே போர்நிறுத்தம் ஏற்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஈரான் போர், அமெரிக்காவுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது என்பது உண்மை என்ற போதிலும், அது இவர்கள் கூறும் அர்த்தத்தில் அல்ல. அமெரிக்காவால் மக்களைக் கொல்லவும் உள்கட்டமைப்புகளை அழிக்கவும் முடிந்தபோதிலும், ஈரானை அரசியல் ரீதியில் தோற்கடிக்க முடியாமல் போன அதேவேளை, போரைத் தொடர்ந்து முன்னெடுப்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, கட்டுப்படுத்த முடியாத இராணுவ, பொருளாதார மற்றும் புவிசார்-அரசியல் நெருக்கடியைத் தூண்டும் அபாயத்தை உருவாக்கிய நிலைமைகளின் கீழேயே, அமெரிக்கா போர்நிறுத்தத்துக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டது.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) எச்சரித்ததைப் போல், “போர்நிறுத்தமானது” போரின் ஆபத்து முடிவுக்கு வந்துவிட்டதைக் குறிக்கவில்லை. ஒரு பரந்தளவிலான நெருக்கடியின் மத்தியில் எட்டப்பட்ட நிலையற்ற, தந்திரோபாய ரீதியான, மீண்டும் எப்போது வேண்டுமானாலும் முறிந்து மீண்டும் போர் வெடிக்கக்கூடிய ஒரு தற்காலிக இடைநிறுத்தம் மட்டுமே என்பதை அது சுட்டிக்காட்டியது.

எவ்வாறெனினும், பல்வேறு “அதிகார மையங்கள்” இப்போது உலக அரசியலை வடிவமைத்து வருகின்றன என்பதற்கான சான்றாகவே சாமிந்த இந்தப் போர்நிறுத்தத்தை முன்வைக்கிறார். ரஷ்யாவும் சீனா, அத்துடன் பிரேசில், ஈரான், இந்தியா உட்பட பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு, ஐரோப்பிய வல்லரசுகள், மற்றும், நிச்சயமாக லத்தீன் அமெரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் தமக்கென செல்வாக்கு மண்டலத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் அமெரிக்காவுமாக, உலகம் பல்துருவத்தை நோக்கி நகர்கிறது என்பதற்கான ஆதாரங்களாக அவர் இவற்றைக் காட்டுகிறார்.

இதன் மூலம், அரசுகளுக்கிடையில் முரண்பாடுகள் இருந்தாலும், உலக முதலாளித்துவத்துக்கு போட்டியிடும் அதிகார மையங்களின் ஊடாக ஒரு புதிய சமநிலையையும் ஸ்திரத்தன்மையையும் அடைய முடியும் என்றே அவர் அறிவிக்கின்றார். இந்தக் கருத்துருவின் படி, மறுசீரமைக்கப்பட்ட புவிசார்-அரசியல் சமநிலையின் கீழ் மனிதகுலம் அமைதியாக முன்னேற முடியும். உலகப் போரின் ஆபத்து எதுவுமில்லை, பல்துருவ சமநிலையை நோக்கிய ஒரு மாற்றம் மட்டுமே இடம்பெறுகின்றது, என்பதே பர்யாலோகய முன்வைக்கும் அரசியல் முன்னோக்கு ஆகும்.

தனது வாதத்தை வலுப்படுத்தும் நோக்கில், “மேற்கத்திய நாகரிகம்” வீழ்ச்சியடைந்து, அதன் இடத்தை ஒரு புதிய கிழக்கத்திய நாகரிகம் பிடித்துவருவதையே தற்போதைய நிலைமைகள் நிரூபிப்பதாகக் கூறும் பிற்போக்கு சிங்கள-பௌத்த மேலாதிக்கவாதக் கூற்றுகளை பற்றியும் சாமிந்த குறிப்பிடுகிறார். இந்த தர்க்கத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொள்கின்ற அவர், அதை ஒரு கரடுமுரடான சூத்திரமாக நிராகரித்து, “பூகோள மேலாதிக்கம் ஒரு நெருக்கடிக்குள் நுழைந்துகொண்டிருக்கின்றது. அதற்குப் பதிலாக, புதிய அதிகார மையங்கள் உருவாகி வருகின்றன,” என்று வாதிட்டார்.

மறுமலர்ச்சிக் காலமும் ஜனநாயக மரபுகளும் உள்ளடங்கிய மேற்கத்திய நாகரிகம், சீனாவும் ரஷ்யாவும் பிரதிநிதித்துவப்படுத்தும் தன்னலக்குழு ஆட்சி முறைகளைவிட வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறினார்.

இதற்கு இணங்கிய கன்னங்கர, “உலகளாவிய ஜனநாயகத்திற்காக, பொதுவாக பல் அதிகார மையங்களையே நாம் விரும்புகிறோம்... பூகோள அரசியலில் பல அதிகார மையங்கள் செயற்படுவது முக்கியமானது,” என்றார். “மேற்கத்திய நாகரிகம்”, மறுமலர்ச்சி, மற்றும் ஜனநாயக மரபுகளை முற்றாகக் கைவிட்டு பிற்போக்குக்கு மாற்றமடைந்து நீண்டகாலமாகிவிட்டது. “கிழக்கத்திய நாகரிகம்” எனப்படுவதும் தன்னலக்குழு ஆட்சி முறைகளால் ஆளப்படுகிறது.

சாமிந்த மற்றும் கன்னங்கரவின் வாதங்கள் பலவற்றை அம்பலப்படுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, அடிப்படை சமூக முரண்பாடுகள் அற்ற ஒரு உலகத்துக்காக -அதாவது, புவிசார்-அரசியல் பதற்றங்களைத் தணிக்கக்கூடிய, முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்தக்கூடிய மற்றும் தாங்களுக்கு ஏற்றவாறான அமைதியான மற்றும் வசதியான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு உலகத்துக்காக- மத்தியதர வர்க்க சலுகைபெற்ற அடுக்குகளின் அபிலாஷைகளையே இவை வெளிப்படுத்துகின்றன.

இது முற்றிலும் ஒரு கற்பனாவாதக் கண்ணோட்டமாகும். உலக அரசியலை இயக்கும் உண்மையான முரண்பாடுகளுடன் இதற்கு எந்தத் தொடர்பும் கிடையாது. போர் என்பது அரசியல் தலைவர்கள் ஒத்துழைக்கத் தவறுவதாலோ அல்லது இராஜதந்திரம் போதுமானதாக இல்லாததாலோ உருவாவதில்லை. அது முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியிலிருந்தே தோன்றுகிறது.

இரண்டாவதாக, சாமிந்தவின் அரசியல் கட்டமைப்பிற்குள், வலுவான மற்றும் பலவீனமான தேசங்களின் புவியியல் பரப்பாக மட்டுமே உலகம் காணப்படுகின்றது. வலுவான நாடுகள், பலவீனமான நாடுகளைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயல்கின்றன. சந்தைகள், மூலப்பொருட்கள், உழைப்பு வளங்கள், புவி-மூலோபாய நிலம் மற்றும் இலாபம் போன்ற, இந்த முரண்பாடுகளின் பொருளாதார அடித்தளம் குறித்து அவர் எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை. நாடுகள், முதலாளித்துவ உற்பத்தி முறையில் வேரூன்றிய குறிப்பிட்ட வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசுகளாக அன்றி, வரலாற்றுக்கு மேலாக மிதக்கும் அருவமான அரசியல் செயற்பாட்டாளர்களாகவே சித்தரிக்கப்படுகின்றன.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் விளக்கியவாறு, அமைதியான “பல்துருவ உலகம்” பற்றிய கோட்பாடானது முதலாம் உலகப் போருக்கு முன்பு ஜேர்மன் திருத்தல்வாதியான கார்ல் காவுட்ஸ்கி முன்வைத்த “அதி-ஏகாதிபத்தியம்” (ultra-imperialism) என்ற கோட்பாட்டின் நவீன வடிவமே ஆகும்.

போரைத் தவிர்ப்பதற்காக, ஏகாதிபத்திய வல்லரசுகள் இறுதியில் அமைதியான ஒத்துழைப்பை நோக்கித் திரும்பும் என்று காவுட்ஸ்கி வாதிட்டார். இந்த முன்னோக்கை முற்றாக நிராகரித்த லெனின், முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள் தவிர்க்க முடியாமல் பிரதான வல்லரசுகளை மோதலுக்குள் தள்ளும் என்பதை வலியுறுத்தினார். டேவிட் நோர்த் இதை பின்வருமாறு விளக்கினார்:

“முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய அரசுகளுக்கு இடையில் உலக வளங்களை அமைதியான முறையில் பகிர்ந்துகொள்வதும் மறுவிநியோகம் செய்வதும் சாத்தியமற்றது. உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பிற்கும் இடையிலான முரண்பாடே போருக்கான பாதையைத் திறக்கிறது.”

அவர் மேலும் எச்சரித்ததாவது: “‘ஒற்றைதுருவ’ உலகை ‘பல்துருவ’ உலகால் பதிலீடு செய்ய முயலும் கற்பனாவாத முயற்சி, அதன் சொந்த தர்க்கத்தின் அடிப்படையிலேயே, மூன்றாம் உலகப் போருக்கும், பூகோளத்தின் அழிவின் விளிம்பிற்கும் இட்டுச் செல்லும்.” (2023 சர்வதேச இணையவழி மே தினக் கூட்டத்தில்)

போட்டி அதிகார மையங்களால் ஒழுங்குபடுத்தப்படும் அமைதியான முதலாளித்துவம் பற்றிய போலி-இடது அமைப்புகளினதும் கல்வியாளர்களினதும் கற்பனைகளுக்கு மாறாக, முதலாளித்துவ அமைப்பானது, சமூக சமத்துவம், ஜனநாயகம் மற்றும் உலக அமைதியுடன் பொருந்தாது ஒன்று என்பதை சர்வதேச அளவில் தொழிலாளர்களும் இளைஞர்களும் மேலும் மேலும் உணர்ந்து வருகின்றனர்.

அவர்களின் தர்க்கங்கள் மூலம், பின்நவீனத்துவ மற்றும் போலி-இடது அரசியலின் அடிநிலையில் உள்ள விதிமுறையும் முதலாளித்துவத்தின் மன்னிப்பாளராக அவை வகிக்கும் வர்க்கப் பாத்திரத்தையும் அம்பலப்படுத்துகின்றன. அதன் இலங்கை வடிவமானது ஆளும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் தொழிலாளர்களினதும் ஏழைகளினதும் வாழ்க்கைத் தரத்தின் மீது கட்டவிழ்த்துவிடும் தாக்குதல்களுக்கு ஆதரவாளராக உருவெடுத்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

மனித சமுதாயத்தின் வரலாற்று அபிவிருத்தியானது, புத்திஜீவிகளினதும் மத்தியதர வர்க்க விமர்சகர்களினதும் விருப்பங்கள், கற்பனைகள் அல்லது ஒழுக்கநெறி அபிலாஷைகளின் படி தீர்மானிக்கப்படுவதில்லை. கார்ல் மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் மூலம் ஸ்தாபித்தவாறு, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலும் அவற்றிலிருந்து தோன்றும் வர்க்க உறவுகளிலும் வேரூன்றியுள்ள, புறநிலை முரண்பாடுகளின் ஊடாகவே சமூக அபிவிருத்தி முன்நகரும்.

சாமிந்த சித்தரிக்கும் உலகமானது வர்க்கங்கள் அற்ற, சுரண்டல் அற்ற, சமூக முரண்பாடுகள் அற்ற ஒரு சமூகமாகும். அவரது உலகில் முதலாளித்துவ வர்க்கம், தொழிலாள வர்க்கம், மத்தியதர வர்க்கம் போன்ற பதங்களே முற்றாக இருக்காது. வரலாறானது இதுவரை இந்த வளர்ச்சியை இயக்கும் சமூக சக்திகள் எதுவுமின்றி, ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்திற்கு தானாகவே நகர்ந்துவந்தது போல் அவர் முன்வைக்கின்றார்.

அதன்படி, வர்க்கங்களுக்குப் பதிலாக, “மக்கள்”, “பிரஜைகள்” அல்லது “ஜனநாயக சக்திகள்” போன்ற நிச்சயமற்ற குழுக்களாலேயே சமூகம் ஆனதாக அவர் கருதுகிறார். முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மற்றும் வர்க்கங்களுக்கிடையிலான மோதல்களின் ஊடாக சமூக நெருக்கடியை விளக்குவதற்கு எதிராக, அவரின் அரசியலானது அடையாளம், தேர்தல் கூட்டணிகள் போன்ற முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே காணப்படும் உரையாடலாகவே அரசியலை முன்வைக்கின்றது.

போர், நெருக்கடிகள் மற்றும் சமூகக் கொந்தளிப்புகள், மக்கள் அவற்றை “விரும்புவதால்” உருவாகுவதில்லை. முதலாளித்துவ முறைமையே, பூகோளப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்பிற்கும் இடையில் தீர்க்க முடியாத முரண்பாடுகளை தொடர்ந்து உருவாக்குவதாலேயே அவை தோன்றுகின்றன.

வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை நிராகரிப்பதானது, தொழிலாள வர்க்கத்தின் தீர்மானகரமான புரட்சிகர வகிபாகத்தை மறுப்பதோடு, சமூகப் போராட்டத்தை முதலாளித்துவ ஒழுங்கிற்குள் பல்வேறு போட்டி பிரிவுகளுக்குக் கீழ்ப்படுத்துகின்ற, பின்நவீனத்துவம் மற்றும் அடையாள அரசியலின் அழுத்தத்திற்கு உள்ளான போலி-இடது போக்குகளின் குணாம்சமாகும்.

முதலாளித்துவத்தால் ஒரு ஜனநாயக பல்துருவ மாற்றீடாக அமைதியான முறையில் பரிணமிக்க முடியும் என்ற மாயையை சாமிந்தவும் கன்னங்கரவும் பரப்புவது ஏன்?

ஒரு வரலாற்றுப் பரிசீலனை, இந்த முன்னோக்கின் பிற்போக்கு மற்றும் கற்பனாவாதத் தன்மையை அம்பலப்படுத்துகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல், அவர்கள் “மூலதனத்தை நித்தியமானதும் இயற்கையானதுமான (வரலாற்றுக்கு அப்பாற்பட்ட) உற்பத்தி முறையாகக் கருதுகின்றனர்...” (க்ருண்ட்ரிஸ்ஸே-Grundrisse, பென்குயின் பதிப்பு, பக்கம் 460).

முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடு என்னவெனில், அது ஒருபுறம் ஒருங்கிணைந்த உலகப் பொருளாதாரத்தை உருவாக்கியுள்ள அதேநேரம், அது சந்தைகள், வளங்கள், மூலோபாயப் பிரதேசங்கள் மற்றும் புவிசார்-அரசியல் மேலாதிக்கத்திற்காகப் போட்டியிடும் முரண்பட்ட தேசிய-அரசுகளாகப் பிரிந்தே காணப்படுவதாகும்.

அமெரிக்காவும் பிரதான ஐரோப்பிய வல்லரசுகளும் வெறும் “அதிகார மையங்கள்” அல்ல. அவை ஏகாதிபத்திய அரசுகளாகும். இருபதாம் நூற்றாண்டில் காலனித்துவங்கள், மூலப்பொருட்கள், வர்த்தகப் பாதைகள் மற்றும் உலக மேலாதிக்கத்திற்கான போட்டியிலும், ஏகாதிபத்திய அமைப்பு மனிதகுலத்தை இரண்டு உலகப் போர்களுக்குள் இழுத்துச் சென்றது.

இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவை சிதிலங்களாக மாற்றியது. அடோல்ஃப் ஹிட்லரின் நாஜி ஆட்சி முன்னெப்போதும் இல்லாத அளவிலான காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் அணுகுண்டுகளை வீசி, இலட்சக்கணக்கான பொதுமக்களை கணநேரத்தில் கொன்றதன் மூலம் அந்தப் போர் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட அனைத்து அரசியல் மற்றும் பொருளாதார சமநிலைகளும் இன்று சிதைந்து வருகின்றன. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்கா உலகம் முழுவதும் இடையறாத இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

தற்போதைய தசாப்தத்தில் மட்டும், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர், பாலஸ்தீனத்துக்கு எதிரான இனப்படுகொலைப் போர் மற்றும் ஈரானுடனான விரிவடைந்து வரும் மோதல் ஆகியவை, இருபதாம் நூற்றாண்டின் உலகப் போர்களை உருவாக்கிய அதே முரண்பாடுகள் இன்னும் வெடிப்புத் தன்மை கொண்ட ஒரு கட்டத்தை அடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றன.

முதலாம் உலகப் போரானது பால்கன் பிராந்தியத்தில் ஒரு பிராந்திய மோதலாகத் தொடங்கி, வேகமாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உலகப் போராக விரிவடைந்தது போலவே, இன்றைய புவிசார்-அரசியல் மோதல்களும் மேலும் மேலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவையாக மாறிவருகின்றன.

எண்ணெய், அரிய கனிமங்கள், கடல் வழித்தடங்கள் மற்றும் மூலோபாய உட்கட்டமைப்பின் மீதான பிரதான வல்லரசுகளின் போட்டி தீவிரமடைந்துள்ளது. ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் விரிவடைந்துள்ள சீனாவின் “நிலவழி, கடல்வழிப் பாதை” (Belt and Road Initiative) திட்டத்தை, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக மேலாதிக்கத்திற்கு நேரடியான சவாலாகக் கருதுகிறது.

ஈரானுடனான மோதலை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வாகப் புரிந்துகொள்ள முடியாது. அது எரிசக்தி வழங்கல்களையும் மூலோபாய வர்த்தகப் பாதைகளையும் சீர்குலைப்பதன் மூலம் சீனாவை பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான அமெரிக்க மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்.

பூகோளப் போரின் ஆபத்து என்பது ஒரு அருவமான சாத்தியமல்ல. அது உலக முதலாளித்துவத்தின் புறநிலை முரண்பாடுகளிலிருந்தே உருவாகி வருகிறது.

ஆனால், தங்களது கலந்துரையாடலின் போது சாமிந்தவும் கன்னங்கரவும் இந்த ஆபத்துகளை நிராகரித்தனர். “ஈரானிய நாகரிகத்தை அழித்துவிடுவோம்” என்று ஏப்ரல் 7 அன்று ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலைக் குறிப்பிட்ட சாமிந்த, அது அணுவாயுதத் தாக்குதலைக் குறிக்கக்கூடும் என்ற அச்சங்களை நிராகரித்து, “சிலர் இது அணுவாயுதத் தாக்குதலைக் குறிக்கிறது என்று கூறுகின்றனர். ஆனால், சீனா, ரஷ்யா, வட கொரியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற பிற அணுவாயுத வல்லரசுகள் இருப்பதால் அது சாத்தியமில்லை,” என்றார்.

இவ்வாறு தன்னைத் தானே தேற்றிக்கொள்வது, வரலாற்றின் படிப்பினைகளை நிராகரிக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஒவ்வொரு பெரிய போரும், அரசியல் தலைவர்கள் ஆரம்பத்தில் “சாத்தியமில்லை” என்று கருதிய எல்லைகளைத் தாண்டியே விரிவடைந்தன.

இந்த அரசியல், தொழிலாளர்களையும் இளைஞர்களையும் முதலாளித்துவ ஒழுங்குடன் கட்டிப்போட்டு வைப்பதற்கும், அவர்களது போராட்டங்களை முதலாளித்துவத்திற்கும், முதலாளித்துவ அரசுக்கும், உயர் மத்தியதர வர்க்க அடுக்குகளுக்கும் கீழ்ப்படுத்துவதற்குமான ஒரு பொறிமுறையாகச் செயல்பட்டு வந்துள்ளது.

விரிவடைந்து வரும் பூகோளப் போர் வலையின் ஒரு பகுதியாக விளங்கும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் குற்றவியல் போரை நிறுத்துவதற்காக, சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசரமான பணியாக ஆகியுள்ளது. பல்வேறு முதலாளித்துவ சார்பு மத்தியதர வர்க்கக் குழுக்களை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்துவது, இந்தப் போராட்டத்தின் இன்றியமையாத அங்கமாகும்.

சாமிந்த போன்ற கல்வியாளர்கள் தங்களது சொற்பொழிவுகள், ஆய்வுக்கட்டுரைகள், கட்டுரைகள் மற்றும் நூல்கள் மூலமாக நாள்தோறும் பொய்யான மற்றும் பிற்போக்கு கோட்பாடுகளை உற்பத்தி செய்து, அவற்றை மாணவர்களுக்குக் கற்பிப்ப்பதோடு சமூகத்தில் பரப்புகின்றனர். ஏகாதிபத்தியமும் அதனுடன் இணைந்த தேசிய முதலாளித்துவ வர்க்கங்களும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அரசியல் ரீதியாக நிராயுதபாணிகளாக்குவதற்காக இத்தகைய கோட்பாடுகளைப் பயன்படுத்துகின்றன.

மார்க்சிசத்தை நோக்கித் திரும்புங்கள் என தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கு புத்திஜீவிகளிடமும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) தலைமையிலான அதன் சோசலிச சமத்துவக் கட்சிகளும், அதன் அரசியல் குரலாக விளங்கும் உலக சோசலிச வலைத் தளமும் மட்டுமே மார்க்சிசத்தின் தொடர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.