நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் இலங்கை விவசாயிகளின் போராட்டத்தைப் பாதுகாப்போம்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மட்டக்களப்பில், நெல் கொள்வனவை அதிகரிக்கவும் கொள்வனவு விலையை உயர்த்தவும் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது. [Photo: Facebook/Battinews]

மட்டக்களப்பில், நெல் கொள்வனவையும் விலையையும் உயர்த்தக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது

இலங்கை முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், நெல்லுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட நியாயமான விலை, தாங்கக்கூடிய விலையில் போதியளவு உரம் மற்றும் விவசாய இரசாயனங்கள், மானிய விலையில் எரிபொருள் ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் 16 முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, அம்பாறை, அம்பாந்தோட்டை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதாக அறிவித்துள்ள விவசாயிகள், அரசாங்கம் பதிலளிக்கத் தவறினால், தமது போராட்டத்தை கொழும்பு வரை விரிவுபடுத்துவதாக எச்சரித்துள்ளனர்.

விவசாயிகளின் இந்தப் போராட்டம், ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள சிக்கனக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மீது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் மேலும் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் சுமையைத் திணித்துவரும் மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்திற்கு எதிராக வளர்ந்துவரும் பரந்த வெகுஜன எதிர்ப்பின் ஒரு பகுதியாகும்.

விவசாயிகளின் நியாயமான விலைக் கோரிக்கையை நிராகரித்த வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, கடந்த பருவத்தில் எந்த விலையில் நெல் கொள்வனவு செய்யப்பட்டதோ, அதே விலையிலேயே இப்பருவத்திலும் நெல் கொள்வனவு செய்யப்படும் என ஜூலை 1 அன்று அறிவித்தார்.

அரசாங்கம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிராக மிரட்டல்கள் விடுத்த பின்னரே விவசாயிகளின் கோரிக்கைகளை நிராகரிக்கும் இந்த அறிவிப்பை வெளியிட்டது. எந்தப் போராட்டத்திற்கும் அரசு அடிபணியாது என விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்த அதேவேளை, வீடமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் பிரதியமைச்சர் டி.பி. சரத், இந்தப் போராட்டங்களை 'அரசாங்கத்தைக் கவிழ்க்க' முயற்சிக்கும் 'கசிப்பு வியாபாரிகள்' ஏற்பாடு செய்கின்றனர் எனக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது சேரடித்தார்.

ஜூன் 24 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய லால்காந்த, ஒரு கிலோகிராம் நெல்லை உற்பத்தி செய்வதற்கான செலவு 137 ரூபாயாக உயர்ந்துள்ளதாக ஒப்புக்கொண்ட போதிலும், அரிசி விலை உயர்வதால் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் காரணம் காட்டி, அரசாங்கத்தால் விவசாயிகள் கோரியபடி நெல் கொள்வனவுக்கான உத்தரவாத விலையை கிலோவுக்கு 120 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக உயர்த்த முடியாது என வலியுறுத்தினார்.

அரசாங்கம் நுகர்வோரைப் பாதுகாக்கிறது என்ற இந்தக் கூற்று முற்றிலும் பொய்யாகும். அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நாசமாக்கும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் அதேநேரம், பெரும் செல்வந்தர்கள் மேலும் செல்வத்தைக் குவித்துக்கொள்ள பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் கிராமப்புற மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டிக்கின்றது. கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் ஏழை விவசாயிகளைப் பாதுகாக்குமாறு சோ.ச.க. தொழிலாள வர்க்கத்தை கேட்டுக்கொள்கின்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தலைமையிலான அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ள சிக்கனக் கொள்கைகளின் கீழ், தொழிலாளர்களும் இதேபோன்ற தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அமைச்சர்களின் அச்சுறுத்தல்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதைப் போலவே, கிராமப்புற மக்களுக்கும் எதிராக பொலிஸ் அடக்குமுறையையும் குண்டர்களையும் பயன்படுத்த அரசாங்கம் தயங்காது என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

உரம் மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதால், ஒரு ஏக்கரில் நெல் பயிரிடுவதற்கான செலவு தற்போது 120,000 முதல் 150,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அரசாங்கம் உற்பத்திச் செலவிற்குக் குறைவான விலைக்கே நெல்லைக் கொள்வனவு செய்வதுடன் மட்டுமல்லாமல், நெல் கொள்வனவையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதன் விளைவாக, விவசாயிகள் தமது நெல்லை ஒரு கிலோகிராம் 80 ரூபாய் போன்ற மிகக் குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளுக்கு விற்க நிர்ப்பந்திக்கப்படுவதுடன் அவர்கள் பாரிய இழப்புகளைச் சந்திக்கின்றனர்.

கடந்த காலத்தில், மக்கள் விடுதலை முன்னணி, விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சக்தியாகத் தன்னைச் சித்தரித்துக்கொண்டு, தனது அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் மூலம் பல்வேறு போராட்டங்களை ஏற்பாடு செய்தது. 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர்கள் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகவும், தாம் ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தனர். இவை அனைத்தும் விவசாயிகளின் வாக்குகளைப் பெறுவதற்காகவே கூறப்பட்ட பொய்யான வாக்குறுதிகளாகும்.

உழைக்கும் மக்களுக்கு வழங்கிய மற்றைய அனைத்து வாக்குறுதிகளையும் போலவே, திசாநாயக அரசாங்கமும் இந்த வாக்குறுதிகளைக் கைவிட்டு, இன்று நெல் உற்பத்தியிலும் அரிசி வியாபாரத்திலும் ஆதிக்கம் செலுத்தும் பெரிய பெருநிறுவனங்களதும், பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களதும் நலன்களைப் பாதுகாத்து வருகிறது.

வறுமை, கடுமையான கடன் சுமை, பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள உரம், விவசாய இரசாயனங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களின் விலையேற்றம் மற்றும் போதிய நிலமின்மை போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளால் விவசாயிகள் பல தசாப்தங்களாக துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இலங்கையின் கிராமப்புற மக்களில் பெரும்பான்மையினர் ஏழை விவசாயிகளே ஆவர். அவர்களில் 81 சதவீதத்தினர் பலபரிமாண வறுமையில் வாழ்கின்றனர். கிராமப்புற விவசாயிகளில் சுமார் 27 சதவீதத்தினருக்கு சொந்த நிலமே இல்லை. அவர்கள் குறுகிய கால குத்தகை அடிப்படையில் அல்லது சிறிய வாழ்வாதார நிலங்களில் விவசாயம் செய்யவோ, அல்லது நெல் விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யவோ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

முதலீட்டாளர்களுக்கு சாதகமான பொருளாதார மறுசீரமைப்புகள் காரணமாக, மலிவான அரசுக் கடன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளில் சுமார் 10 சதவீதத்தினரால் மட்டுமே வங்கிக் கடன்களைப் பெற முடிகிறது. ஏறத்தாழ 60 சதவீதம் பேர், தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அதிக வட்டிக்குக் கடன் கொடுப்போரிடம் கடன் பெற்றுள்ளனர். அவர்கள் தமது எதிர்கால அறுவடையில் கடனைத் திருப்பிச் செலுத்த தம்மை அடகு வைத்துள்ளனர்.

வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற கடுமையான காலநிலைப் பேரழிவுகளையும் விவசாயிகள் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். கடந்த டிசம்பரில் ஏற்பட்ட தித்வா சூறாவளி, விவசாயத்திற்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்தியது. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, சுமார் 108,000 ஹெக்டேர் நெற்பயிர் நிலங்கள் இதனால் அழிவடைந்தன.

கிராமப்புற விவசாயிகள் பல தசாப்தங்களாக எதிர்கொண்டுவரும் இந்த நெருக்கடி, அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த முதலாளித்துவ அரசாங்கங்கள் அமுல்படுத்திய கொடூரமான பொருளாதாரக் கொள்கைகளால் மேலும் தீவிரமடைந்துள்ளது.

1950 மற்றும் 1970 களுக்கு இடையில் தேசியவாத “தற்சார்பு” கொள்கைகளின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட மானியத் திட்டங்கள்கூட, 1977 ஆம் ஆண்டு திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் படிப்படியாகக் கலைக்கப்பட்டன. 1950 களிலிருந்து நடைமுறையில் இருந்த உர மானியம் தொடர்ந்து வெட்டிக் குறைக்கப்பட்டது. விவசாயிகளின் விளைபொருட்களைக் கொள்வனவு செய்து, அவர்களுக்கு கடன் வழங்கிய கூட்டுறவு அமைப்புகள் கலைக்கப்பட்டன. நெல் சந்தைப்படுத்தல் சபையின் கொள்வனவுச் செயற்பாடுகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டன. அரசுக்குச் சொந்தமான நெல் களஞ்சிய வசதிகளும் பெருமளவில் ஒழிக்கப்பட்டன.

அரசுக்குச் சொந்தமான பண்ணைகள், சி.ஐ.சி., ஹேலீஸ் மற்றும் பிரவுன்ஸ் போன்ற தனியார் பெருநிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. இதனுடன், நெல் மற்றும் அரிசிச் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் சக்திவாய்ந்த அரிசி ஆலை ஏகபோகங்களும் உருவாகின.

சமீபத்திய ஆண்டுகளில், தொடர்ந்து மோசமடைந்து வரும் வாழ்க்கை மற்றும் உற்பத்தி நிலைமைகளுக்கு எதிராக விவசாயிகள் மீண்டும் மீண்டும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 2021 இல், அரசின் மானியக் குறைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ விதித்த இரசாயன உர இறக்குமதித் தடைக்கு எதிராக விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்கள் வெடித்தன. 2022 இல், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற வெகுஜன எழுச்சிக்கு கிராமப்புற மக்களும் வலுவான ஆதரவை வழங்கினர். அந்த எழுச்சியே இராஜபக்ஷவை நாட்டைவிட்டு தப்பியோடவும், பதவி விலகவும் நிர்ப்பந்தித்தது.

ஆனால், முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சியைப் பாதுகாத்த ஜே.வி.பி./தே.ம.ச., ஏனைய முதலாளித்துவக் கட்சிகள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் போலி-இடது அமைப்புகளும், மக்கள் எழுச்சியை அரசியல் ரீதியாகத் திசைதிருப்பி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் முகவரான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதற்கான நிலைமைகளை உருவாக்கின. விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை இரக்கமின்றி நடைமுறைப்படுத்தியதோடு இன்று அந்தத் திட்டங்களையே திசாநாயக அரசாங்கம் மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.

ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவங்களைப் போலவே, ஜே.வி.பி. தலைமையிலான அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனமும் அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது. ஏனைய விவசாய அமைப்புகளும், தங்களை 'சுயாதீனம்' எனக் கூறிக்கொள்ளும் குழுக்களும், அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற மாயையைப் பரப்பி, உண்மையான போராட்டம் உருவாகுவதைத் தடுக்கும் வேலையை செய்து வருகின்றன.

சமீபத்தில் இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்த விவசாய அமைப்புகள்கூட அரசின் விவசாயத் திணைக்களத்துடன் இணைக்கப்பட்டவையாகும். அவையும் இதே மாயைகளை பரப்பி வருகின்றன.

பல தசாப்தங்களாக நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நிரூபித்துள்ள அடிப்படைப் படிப்பினை என்னவென்றால், எந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழும் அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது என்பதே. மாறாக, அந்தப் பிரச்சினைகள் மேலும் மேலும் தீவிரமடைவது மட்டுமே நடந்துள்ளன.

எனவே, கிராமப்புற மக்கள், இந்த விவசாய அமைப்புகள் முன்வைக்கும் முதலாளித்துவ ஆதரவு முன்னோக்கை நிராகரிக்க வேண்டும். அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் அரசியல் ரீதியாக முறித்துக்கொண்டு, தமது கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்காக அவர்கள் வாழும் கிராமங்களிலும் மாவட்டங்களிலும் விவசாயிகள் நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, அவற்றை நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைக் குழுக்களை அமைப்பது குறித்து கலந்துரையாடவும், அவற்றை உருவாக்குவதற்கு உதவவும் சோசலிச சமத்துவக் கட்சி தயாராக உள்ளது. விவசாயிகளின் நெருக்கடிக்குத் தீர்வுகாண இன்றியமையாத கோரிக்கைகளாக நாங்கள் பின்வருவனவற்றை முன்வைக்கிறோம்:

  • * விதைகள், உரங்கள், விவசாய இரசாயனங்கள் மற்றும் விவசாய உபகரணங்களும் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் வழங்கப்பட வேண்டும்.
  • * விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான உத்தரவாத விலையை நிர்ணயிப்பதோடு போதிய நெல் களஞ்சிய வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
  • * வங்கிகளுக்கும் தனியார் கடன் வழங்குவோருக்கும் செலுத்த வேண்டிய அனைத்து மொத்த கடன்களும் முழுமையாக இரத்து செய்யப்படுவதோடு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட வேண்டும்.
  • * அனைத்து விவசாயிகளுக்கும் நிலம் வழங்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் எதனையும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் வென்றெடுக்க முடியாது. அவற்றை நிறைவேற்றுவதற்கு, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் உட்பட முழு முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான அரசியல் போராட்டம் அவசியமாகும்.

தொழிலாள வர்க்கம் தமது கிராமப்புற சகோதரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக முன்வந்து, இந்தக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்குத் தேவையான நிலைமைகளை உருவாக்க வேண்டும். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, வேளான்மையில் ஆதிக்கம் செலுத்தி விவசாயிகளைச் சுரண்டுகின்ற:

  • * ஹேலீஸ், சி.ஐ.சி., பௌவர்ஸ், பிரவுன்ஸ், டீமோ போன்ற உரம், விவசாய இரசாயனங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களை உற்பத்தி செய்யும் பெருநிறுவனங்கள்;
  • * விவசாயிகளை அதிக வட்டிக் கடன்களால் சுரண்டும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்;
  • * அனைத்து பிரதான அரிசி ஆலைகள், பெரிய அளவிலான அரிசி வர்த்தக நிறுவனங்கள் உட்பட அனைத்து பிரதான பொருளாதார நிறுவனங்களும்

தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது.

இந்த நடவடிக்கைகள், பிரதான கூட்டுத்தாபனங்கள், தொழில்துறைகள், பெருந்தோட்டங்கள், வங்கிகள், பிரதான பொருளாதார நிறுவனங்கள் மற்றும் அரசுக் கூட்டுத்தாபனங்கள் அனைத்தையும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதை உள்ளடக்கிய பரந்த சோசலிச வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என்பதும், வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதை நிராகரிப்பதும் தொழிலாள வர்க்கத்தின் மைய கோரிக்கைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரே சமூக சக்தி, கிராமப்புற ஏழை மக்களின் ஆதரவைப் பெறும் தொழிலாளர் வர்க்கமே ஆகும். அதாவது, அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்தும் தீர்க்கமாக அரசியல் ரீதியில் விலகி, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதன் மூலமே இது சாத்தியமாகும்.

இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக, முதலாளித்துவக் கட்சிகள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் போலி-இடதுகளிடமிருந்தும் முற்றிலும் சுயாதீனமான தமது சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கான பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள் மத்தியில் முன்னெடுத்து வருகிறது.

இந்தப் போராட்டத்திற்கு ஒரு மூலோபாய நோக்கம் உள்ளது. தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கமானது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நடவடிக்கைக் குழுக்களை ஒருங்கிணைப்பதன் மூலம் கிராமப்புற ஏழை மக்களைத் தன்னைச் சூழ அணிதிரட்டிக்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைக் குழுக்களின் அடிப்படையில், தொழிலாளர்களதும் கிராமப்புற மக்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை உருவாக்கும் முன்னோக்கை சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கிறது. முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி எறிவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட அதிகார மையமாக இந்த மாநாடு கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இந்த வேலைத்திட்டம், ரஷ்யாவில் 1917 அக்டோபர் சோசலிசப் புரட்சிக்கு மூலோபாய முன்னோக்கையும் அரசியல் தலைமையையும் வழங்கிய லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். அந்த சோசலிசப் புரட்சியின் மூலமே, பல நூற்றாண்டுகளாக நிலவிய நிலப்பிரபுத்துவ அடக்குமுறையையும் முதலாளித்துவச் சுரண்டலையும் தூக்கியெறிந்து, விவசாயிகளும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களும் தமது ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான முதல் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது. இதே புரட்சிகரப் பாதையின் மூலமே இலங்கையில் முதலாளித்துவ வர்க்க ஆட்சியால் ஒடுக்கப்பட்டுவரும் விவசாய மக்களின் ஆழமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

இந்த வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு இணையுமாறு தொழிலாளர்களையும் கிராமப்புற மக்களையும் சோசலிச சமத்துவக் கட்சி கேட்டுக்கொள்கின்றது.

Loading