இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஜூலை 5-6 திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிசாரும் நடத்திய தாக்குதல்களை நியாயப்படுத்தும் பிரச்சாரம் அரசாங்க ஆதரவு ஊடகங்கள் மற்றும் பல்வேறு சமூக ஊடக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நீர்கொழும்பிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை எந்தவித விமர்சனப் பரிசோதனையும் இன்றி அப்படியே ஒலிபரப்பும் இந்த ஊடகப் பிரச்சாரத்தின் நோக்கம், மோதலுக்கான முழுப் பொறுப்பையும் கைதிகள் மீது சுமத்துவதாகும். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ விளக்கம் சுருக்கமாகப் பின்வருமாறு: சிறைச்சாலைக்குள் இயங்கி வந்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு அம்பலமானதை அடுத்து வன்முறை வெடித்தது; கைதிகள் சிறைச்சாலை ஊழியர்களைத் தாக்கி, ஆயுதங்களைக் கைப்பற்றி தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் “குறைந்தபட்ச பலத்தை” மட்டுமே பயன்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்.
“குறைந்தபட்ச பலத்தை” பயன்படுத்துவதற்காகவே சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிசாரும் உயிர்த் தோட்டாக்களைப் பயன்படுத்தி கைதிகளை நோக்கி கொலைவெறிச் சூடு நடத்தியிருந்தால், “அதிகபட்ச பலத்தை” பயன்படுத்தியிருந்தால் அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டிருப்பார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இந்தக் மோதலில் உயிரிழந்த 28 பேரில் 24 பேருக்காக விசேட நீதிமன்ற மரண விசாரணைக் குழுவொன்று மேற்கொண்ட மரண விசாரணை அறிக்கைகளின்படி, குறைந்தபட்சம் 14 கைதிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக 21 எனக் கூறப்பட்டுள்ளதுடன், அதற்கு மேலாக பலர் காயமடைந்துள்ளனர். காயங்களால் பின்னர் உயிரிழந்தவர்களும் உட்பட, அதிகாரிகள் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகள் ஒரு மிகப் பெரிய அழிவைத் தடுத்த வீரர்களாகப் புகழப்படுகின்ற அதேவேளை, கைதிகள் உயிரிழந்தது அவர்கள் கொடூரமான தாக்குதல்களில் ஈடுபட்டதன் விளைவாகும் என்று நியாயப்படுத்தப்படுகிறது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கைதிகளான, மரவில, முடுக்கட்டுவாவைச் சேர்ந்த மீனவர்களான ஆர். விராஜ் பிரசன்ன (36), டபிள்யூ.பி. சந்துன் லசந்த (32) ஆகியோரின் உறவினர்கள், உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்களுக்கு விடயங்களை விளக்கினர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோ அல்லது காயமடைந்தோ இருப்பவர்கள் கிராமங்களைச் சேர்ந்த பல அப்பாவி இளைஞர்கள் ஆவர் என அவர்களது உறவினர்களும் அயலவர்களும் தெரிவித்தனர். பிரசன்னவின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் கிரிஷாந்த் என்ற இளைஞரும் பலத்த காயமடைந்து சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது தாய் தெரிவித்தார்.
உயிரிழந்த இந்த இரு இளைஞர்களும் திருமணமானவர்கள். அவர்கள் மீன் விற்பனை உட்பட மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளனர். அவர்களது மரணத்திற்கு எதிராக வெறுப்பையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தவே மீனவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் அவர்களது இறுதிச் சடங்குகளில் பங்கேற்றதாக எமக்குத் தெரியவந்தது.
அவர்களது உறவினர்கள் கூறியவாறு, இந்த இளைஞர்கள், கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களைப் போலவே, பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வசதியான இரைகளாக மாற்றப்பட்டிருந்தனர். பொருளாதார நிலையற்ற தன்மை, வேலையின்மை மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையும், ஹெரோயின் உட்பட போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கு இளைஞர்களைத் தள்ளியுள்ளன.
பிரசன்ன முன்னர் சிறிய படகில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தார். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அவர் அந்தத் தொழிலை கைவிட்டதாக அவரது தாய் தெரிவித்தார்.
“ஒரு புயல் நாளில் படகு கவிழ்ந்து, சுமார் 20 மணி நேரத்திற்குப் பிறகுதான் என் மகனைக் கண்டுபிடித்தோம். அந்த நாளிலிருந்து அவர் அந்த வேலையை விட்டுவிட்டார். அதற்கு முன்பு தினமும் வேலைக்குச் செல்வார். இங்கே நல்ல துறைமுக வசதிகள் இல்லை. பொருளாதாரப் பிரச்சினைகளால் என் மகன் ஒன்பதாம் வகுப்புவரைதான் படித்தார். வேறு வேலை செய்ய முடியாது. அதனால்தான் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டார்,” என்று அவர் கூறினார்.
“இந்த மரணத்திற்கு யார் பொறுப்பு?” என்று வேதனையுடன் கேள்வியெழுப்பிய பிரசன்னவின் பெரியம்மா, “எங்கள் பிள்ளைகள் கொலைகாரர்கள் அல்ல. ஆனால் ஊடகங்கள் அவர்களை பாதாளக் கும்பல் ரவுடிகள் என்று சித்தரிக்கின்றன,” என்று வேதனையுடன் கூறினார்.
“அருகில் போதைப்பொருள் இருந்தது என்று கூறி கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். சிறைச்சாலைகள் இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களால் நிரம்பியுள்ளன. யாருக்கும் பிணை வழங்கவதில்லை. ஆனால் போதைப்பொருளை விநியோகிக்கும் பெரிய கடத்தல்காரர்களில் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை,” என்று அவர் ஆத்திரத்துடன் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் நிலவும் மோசமான நிலைமைகளை அவர் பின்வருமாறு விவரித்தார்: “இடப்பற்றாக்குறையால் கைதிகள் மாறிமாறி உறங்குகிறார்கள். இடம் இல்லாததால் கழிப்பறைக்குச் செல்லும் வழியில்கூட இளைஞர்கள் படுத்துத் தூங்குகிறார்களாம். சாப்பிடுவதற்கு போதுமான உணவு கிடையாது. வீட்டிலிருந்து கொண்டு செல்லும் உணவைக் கூட வைத்துப் பின்னர் சாப்பிட அனுமதிப்பதில்லை; உடனே சாப்பிட வேண்டும். கழிப்பறை வசதிகளும் முறையாக இல்லை. குளிக்கவும் முடியாது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பாராசிட்டமோல் மாத்திரைகூட கிடைப்பதில்லையான். ஏன் இப்படி நடக்கிறது? இதைப் பற்றி எந்த ஊடகமும் பேசுவதில்லை. ‘இவர்களைக் கொல்ல வேண்டும்’ என்பதைத்தான் பரப்புகிறார்கள். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மட்டும்தானா குடும்பங்களும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்?”
ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டவுடன், அவருக்காக எந்தவொரு நடைமுறை மறுவாழ்வு திட்டமும் இல்லாத சூழ்நிலையில், அவர் மீண்டும் மீண்டும் அதே குற்றச் சுழற்சிக்குள் தள்ளப்படுகிறார். அதிலிருந்து விடுபடுவதற்கு வழியே இல்லை என்பதைப் பிரசன்னவைப் பற்றிய அவரது உறவினர்களின் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன. “பொலிசார் இவர்களைச் வீதியில் பார்த்தால்கூட எந்த விசாரணையும் இன்றி ஜீப்பில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்கிறார்கள்,” என்று ஒரு உறவினர் தெரிவித்தார்.
பிரசன்னவின் மார்பு, வயிறு மற்றும் ஒரு காலில் மூன்று தோட்டாக்கள் பாய்ந்ததன் விளைவாக ஏற்பட்ட கடுமையான இரத்தப்போக்கினால் அவர் உயிரிழந்ததாகவும், அவருக்கு வேறு எந்த நோயும் இருக்கவில்லை என்றும் மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்தார். யார் சுட்டார்கள்? இந்த மரணத்திற்கான பொறுப்பை யார் ஏற்கிறார்கள்? அனாதைகளாக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? இவற்றில் எதற்கும் எந்தவித பதிலும் இல்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
சந்துன் லசந்தவின் வீடு பிரசன்னவின் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. லசந்தவுக்கு ஆறு வயது மற்றும் இரண்டு வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளனர். அவர் அண்மைக்காலத்தில்தான் போதைப்பொருளுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
லசந்த பலநாள் கடலுக்குச் செல்லும் மீன்பிடிப் படகில் வேலை செய்துவந்தார். சுமார் இரண்டு மாதங்கள் கடலில் தங்கி டூனா மீன் பிடிக்கும் இந்த மீனவர்களும் மிகவும் கடினமான வாழ்க்கை நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். எரிபொருள் உட்பட செலவுகள் அதிகரிப்பு மற்றும் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் கொள்வனவு விலையை குறைத்திருப்பதன் காரணமாக, பல சந்தர்ப்பங்களில் அவர்கள் எந்த வருமானமும் இன்றி வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.
“வீட்டுக்கு அருகில் நண்பர் ஒருவருடன் இருந்தபோதுதான் பொலிசார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். அவரிடம் போதைப்பொருள் இருந்ததா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. பொலிசாரைக் கண்டதும் லசந்த தப்பி ஓட முயன்றார். ஆனால் அவர்கள் துரத்திப் பிடித்தார்கள். முன்பும் சண்டைகளில் சிக்கியதற்காகவும், தேங்காய் திருடியது போன்ற சிறிய குற்றங்களுக்காகவும் அவர் சிறைக்குச் சென்றிருந்தார். இந்த முறைதான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்,” என்று அவரது உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
லசந்தவின் மார்பு, வயிறு மற்றும் காலில் ஏற்பட்ட கடுமையான காயங்களாலும், அதிகளவிலான இரத்தப்போக்கினாலும் அவர் உயிரிழந்துள்ளார். மரண விசாரணை அறிக்கைகளில் தமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஏனைய கைதிகளின் சடலங்களையும் தாங்கள் நேரில் பார்த்ததாக அவர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தனர்.
மாரவிலவை அண்டிய வென்னப்புவ, சிறிகம்பல பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேரும், நாத்தாண்டிய, மரதவெல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரும் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் உயிரிழந்ததாக லசந்த மற்றும் வீராஜின் உறவினர்கள் நமது நிருபர்களிடம் தெரிவித்தனர்.
இலங்கையில் போதைப்பொருள் பெருந்தொற்று என்பது போர், வேலையின்மை, நிலங்களும் வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டமை, மற்றும் மக்களின் வாழ்க்கையை திட்டமிட்டு சீரழித்தமை போன்ற முதலாளித்துவ சமூக அமைப்பின் விளைவே அன்றி, கொள்கைகளின் தோல்வியின் விளைவு அல்ல. இந்த நிலைமைகளால் சீர்குலைக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஆயுத பலத்தைப் பிரயோகிப்பதே அரசாங்கத்தின் பதிலாக அமைந்துள்ளது. இந்த அரச அடக்குமுறை, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீது அரசின் ஒடுக்குமுறை ஆட்சியை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒரு கருவியாக மாற்றப்பட்டுள்ளது.
தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபையின் (NDDCB) மதிப்பீடுகளின்படி, நாடு முழுவதும் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். ஆனால் அரசாங்கத்தின் வசம் தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபையின் நான்கு தன்னார்வ மறுவாழ்வு மையங்களும், மறுவாழ்வு பணியகத்தின் கீழ் இயங்கும் மூன்று மையங்களும் மட்டுமே உள்ளன. அவற்றின் மொத்த கொள்ளளவு சுமார் 1,120 படுக்கைகள் மட்டுமே உள்ளன. 2024 ஆம் ஆண்டு முழுவதும் 3,140 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறினால், சிகிச்சை தேவைப்படுவோரில் 0.4 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே சிகிச்சை கிடைக்கிறது.
மறுபுறம், 2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் பேரில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்களை கைது செய்ய அரசாங்கம் பொலிசாரையும் இராணுவத்தையும் பயன்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, நாட்டிலுள்ள 36 சிறைச்சாலைகளும் அவற்றின் கொள்ளளவை விட 300 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பியுள்ளன. கைதிகளில் 65 சதவீதம் பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக அடைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவருக்கு ஒரு படுக்கையை வழங்க அரசாங்கத்தால் முடியவில்லை; ஆனால் அது ஒவ்வொரு முறையும் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஒரு சிறைக்கூடத்தை வெற்றிகரமாக ஒதுக்கிவிடுகிறது.
மருத்துவத் துறையின் நிலைமையும் இதே திட்டமிட்ட புறக்கணிப்புக் கொள்கையையே அம்பலப்படுத்துகிறது. 22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில் வெறும் 108 மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது, ஒவ்வொரு 500,000 மக்களுக்கும் ஒருவர் என்ற விகிதத்தில் மட்டுமே மனநல மருத்துவர் உள்ளார். நாடு முழுவதும் மருத்துவ உளவியலாளர்களின் எண்ணிக்கை ஐந்துக்கும் குறைவாகும்.
மொத்த சுகாதாரச் செலவினத்தில் மனநல சிகிச்சைக்காக வெறும் 1.6 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்த விகிதம் 2012 முதல் எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது. போதைப்பொருள் பயன்பாடு மிக அதிகமாகவும், போரின் உளவியல் காயங்கள் மிகவும் ஆழமாகவும் காணப்படும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய மனநல மருத்துவர்கள் அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.
2023 ஜனவரியில், பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 29 பேர் மட்டுமே கலந்துகொண்ட அமர்வில் நிறைவேற்றப்பட்ட மறுவாழ்வு பணியகச் சட்டத்தின் மூலம், போதைப்பொருள் மறுவாழ்வு நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆயுதப் படைகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன.
கந்தக்காடு மற்றும் சேனபுர புணர்வாழ்வு மையங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், 2022 ஜூன் மாதத்தில் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவர் படையினரின் தாக்குதலால் உயிரிழந்தார். கட்டாய இராணுவ புணர்வாழ்வு மையங்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 12 அமைப்புகள் கோரியுள்ளன. இந்தச் சட்டம் “வலுக்கட்டாயமான, தன்னார்வமற்ற மறுவாழ்வுக்கு வழிவகுக்கிறது” என்று சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் தெரிவித்தது. உலக சோசலிச வலைத் தளம் சுட்டிக்காட்டியவாறு, அரசியல் எதிரிகளைக்கூட போதைப்பொருள் பயன்படுத்துவோர் என்ற பெயரில் குறிவைத்து வேட்டையாடுவதற்கான வாய்ப்பை இந்தச் சட்டம் அரசாங்கத்திற்கு வழங்குகிறது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் புணர்வாழ்வுக்காக 2026 வரவு-செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபாய் (சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்) ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 100,000 பேரைக் கைது செய்வதற்கான செலவு, அளவுக்கு மீறி நிரம்பியுள்ள சிறைச்சாலைகளை பராமரிப்பதற்கான செலவு மற்றும் வடக்கில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான செலவுகளுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் அற்பமான தொகையாகும். தண்டனை பெற்ற கைதிகளில் 57.2 சதவீதம் பேர் அதே குற்றத்தை இரண்டாவது முறையாகச் செய்தவர்களாக இருபதோடு, 5.2 சதவீதம் பேர் பதினொரு முறையோ அதற்கு மேற்பட்ட முறைகளோ குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள், சிறையிலடைத்தல் என்பது மறுவாழ்வை ஏற்படுத்துவதில்லை, மாறாக, சீர்குலைக்கப்பட்ட மனிதர்களை மீண்டும் அதே சீர்குலைந்த சமூக நிலைமைகளுக்குள் தள்ளுகிறது என்பதைக் காட்டுகின்றன.
இலங்கையில் போதைப்பொருள் அடிமைத்தனம் என்பது, 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் மற்றும் அதன் உளவியல் ரீதியான பேரழிவுகரமான விளைவுகளின், இளைஞர் வேலையின்மையின், போருக்குப் பிந்தைய இராணுவமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்ட மக்களின் வறுமையின், மற்றும் சிக்கனக் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட நீண்டகால பொருளாதார வன்முறையின் நேரடியான பெறுபேறாகும்.
