இலங்கையில் நிகழ்நிலை கூட்டம்: போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்! ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்பு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பான, சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE), உக்ரேனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 27 வயதான ட்ரொட்ஸ்கிச சோசலிசவாதியான போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலைக்கான சர்வதேசப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அக்டோபர் 13, செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு சூம் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.

இந்தக் கூட்டம் சிங்கள மொழியில் நடைபெறுவதுடன், தமிழில் நேரடியாக மொழிபெயர்க்கப்படும். கூட்டத்தில் பங்குகொள்வதற்கு இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.

போக்டன் சிரோட்டியுக், உக்ரேனில் செயற்பட்டு வரும் ட்ரொட்ஸ்கிச அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரும் முன்னணி உறுப்பினருமாவார். 25 ஏப்ரல் 2024 அன்று, பாசிசத் குணாம்சம் கொண்ட செலென்ஸ்கி அரசாங்கம், “இராணுவச் சட்டத்தின் கீழ் தேசத்துரோகம்” என்ற சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், உக்ரேன் பாதுகாப்புச் சேவை (SBU) மூலம் அவரைக் கைது செய்தது. அவர் ரஷ்ய அரசாங்கத்தின் முகவர் என்று அரசு கூறியது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான அவரது தடுப்புக்காவல் காலத்தில், இந்த அவதூறான குற்றச்சாட்டுக்கு ஆதரவாக எந்தவொரு ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று, நிக்கோலயேவ் பிராந்தியத்திலுள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், அனைத்துலகக் குழுவின் வெளியீடுகளை அழிக்கவும் உத்தரவிட்டது. அவரது “குற்றம்” உளவு நடவடிக்கையோ, நாசவேலையோ அல்லது எந்தவொரு இராணுவப் படையுடனான ஒத்துழைப்போ அல்ல. மாறாக, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் நேட்டோ சக்திகளால் நடத்தப்பட்டு வரும் போருக்கு பாட்டாளி வர்க்க சர்வதேசவாதக் கண்ணோட்டத்தில் இருந்து எதிர்ப்புத் தெரிவித்ததே ஆகும்.

அவருக்கு எதிரான ஒரே “ஆதாரம்” உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) வெளியிடப்பட்ட அவருடைய சொந்த எழுத்துக்களே ஆகும். அவர் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்குள், உலக சோசலிச வலைத் தளமும் உக்ரேனில் தடை செய்யப்பட்டது.

உக்ரேன் போர் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பற்றிப் பரவும் நிகழ்வுப்போக்கைப் போன்று உலகப் போர் விரிவடைந்து வருகின்றது. நேட்டோவும் அதன் கூட்டணி ஊடகங்களும் சித்தரிப்பதைப் போல, உக்ரேன் போர் “ஜனநாயக அபிலாஷைகளுக்கான” போர் அல்ல. இது உலகை மறுபங்கீடு செய்வதற்கான ஏகாதிபத்தியப் போராகும்.

இதன் இறுதி இலக்குகள், ரஷ்யாவை பால்கன் மயமாக்குவதன் மூலம் அதைப் பல துண்டுகளாக உடைத்து, அதன் இயற்கை வளங்கள் மீது ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டை நிறுவுவதும், சீனாவை ஏகாதிபத்தியங்கள் சுற்றிவளைப்பதற்கான புவிசார் மூலோபாய அனுகூலங்களைப் பெற்றுக்கொள்வதுமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியமே இந்தப் போரின் பிரதான ஆக்கிரமிப்பாளராக இருக்கும் அதேவேளை, நேட்டோவின் விரிவாக்குவதே இந்த மோதலுக்குப் பின்னால் உள்ள பிரதான உந்துசக்தியாகும்.

உலகை மறுபங்கீடு செய்வதற்கான இந்த ஏகாதிபத்தியப் போரில், தீர்வானது ரஷ்யாவின் பக்கமோ அல்லது நேட்டோவின் பக்கமோ நிற்பது அல்ல. மாறாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அதன் சொந்த முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியப்படுத்தி, முதலாளித்துவ முறைமையைத் தூக்கியெறிவதே தீர்வாகும். இந்த அரசுகளுக்கிடையிலான மோதலில் தொழிலாள வர்க்கத்துக்கு எந்தப் பக்கமும் கிடையாது. உக்ரேன், ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களின் உண்மையான எதிரி, அவர்களது சொந்த ஆளும் வர்க்கமே ஆகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் தலைமையின் கீழ், போக்டன் சிரோட்டியுக் இந்த முன்னோக்கிற்காகவே போராடினார். இதன் காரணமாகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிரோட்டியுக் கைது செய்யப்பட்ட உடனேயே, அவரைச் சிறையிலிருந்து விடுதலை செய்வதை உறுதிப்படுத்துவதற்காக அனைத்துலகக் குழு ஒரு சர்வதேச பாதுகாப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியது. ஆகஸ்ட் 10 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டது.

அவரது விடுதலைக்காகப் போராடும் வகையில் freebogdan.org என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏற்கனவே இணையவழி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். சர்வதேச அளவில் தொழிலாளர்கள், மாணவர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் எதிர்ப்புக் கடிதங்களை அனுப்பி, உக்ரேனிய நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜனநாயக விரோதத் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு கோரியுள்ளனர்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அதனது நான்காவது பேராளர் மாநாட்டில், தோழர் போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலைக்காகப் போராடுவதற்கு உறுதியளிக்கும் சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, துருக்கி மற்றும் பல நாடுகளில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளும் குழுக்களும், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்புகளும், சிரோட்டியுக்கின் விடுதலைக்காக பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த சூம் கூட்டமும் அந்த சர்வதேசப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும் இந்த சூம் கூட்டத்தில் பங்கு கொள்ளுமாறும், போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலைக்கான பாதுகாப்புப் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும், மூன்றாம் உலகப் போருக்கு எதிரான சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெறும் சூம் கூட்டத்தில் பங்குகொள்வதற்கு இங்கே பதிவு செய்யுங்கள்.

freebogdan.org இல் மனுவில் கையெழுத்திடுங்கள்.

Loading