இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் சிக்கன வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் ஐக்கியப்பட்ட போராட்டத்தைத் தடுக்கும் தொழிற்சங்கத் தலைவர்களின் முயற்சிகளுக்கு மத்தியிலும், பல்லாயிரக்கணக்கான இலங்கைப் அரச ஊழியர்கள் நவம்பர் 23 அன்று நாடு தழுவிய “எதிர்ப்பு தினத்தில்” கலந்துகொண்டு, மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் 2027 வரவு-செலவுத் திட்டத்துக்கு (பாதீடு) எதிராகப் போராடினர்.

அரசாங்கத்தின் மூன்றாவது சிக்கன பாதீடு, செலவினங்களைக் குறைக்கவும் வணிகங்களுக்கு ஆதரவான மறுசீரமைப்பை முன்னெடுக்கவும் சர்வதேச நாணய நிதியம் விடுத்த கோரிக்கைகளைப் பின்பற்றுகிறது. தொழிலாளர்களின் குறைந்து வரும் கொள்வனவு சக்தியை ஈடுசெய்யும் வகையில் பொதுவான சம்பளத்தில் கணிசமான அதிகரிப்பை இது வழங்கவில்லை; தெரிவுசெய்யப்பட்ட சில கொடுப்பனவுகளில் சிறிய அதிகரிப்புகளை மட்டுமே வழங்கியது.

கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் 23 நவம்பர் 2026 அன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது

கடந்த வாரம், அரச பொறியியலாளர்கள், அரசாங்க நிர்வாக அதிகாரிகள், நீர்ப்பாசனத் தொழில்நுட்ப உதவியாளர்கள், அனர்த்த நிவாரண அதிகாரிகள் மற்றும் அரச பல்கலைக்கழகங்களின் பத்தாயிரத்துக்கும் அதிகமான கல்விசாரா ஊழியர்களும் போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழகத் தொழிற்சங்கக் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக எஸ். பிரியந்த அறிவித்தபடி, அரச பல்கலைக்கழகங்களில் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தமும் போராட்டப் பிரச்சாரமும் உட்பட, எதிர்வரும் வாரங்களில் மேலும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன. தீர்க்கப்படாத சம்பளக் கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 30 அன்று வேலைநிறுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் உட்பட வேறு பல அரச ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.

நவம்பர் 23 ஆர்ப்பாட்டங்களில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 25,000 ரூபா இடைக்கால மாதாந்தக் கொடுப்பனவை வழங்குமாறு கோரப்பட்டது. தொழிற்சங்க ஒருங்கிணைப்புக்கான கூட்டு மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ சேவை அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள், தொழில்நுட்ப மற்றும் நலன்புரி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.

இலவசக் கல்வித் துறையின் தொழிற்சங்கங்கள், தமது உறுப்பினர்களை வேலைத்தள ஆர்ப்பாட்டங்களிலோ அல்லது வேலைநிறுத்தங்களிலோ பங்கேற்க அழைக்கவில்லை. அதற்குப் பதிலாக, அதிபர் தர அதிகாரிகள் சங்கமும் ஆசிரியர் தொழிற்சங்கங்களும், வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்களும் அதிபர்களும் கறுப்பு உடையணிந்து பாடசாலைகளுக்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்தன.

நூற்றுக்கணக்கான அரசாங்க அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் உள்ள தொழிலாளர் குழுக்கள், தமது வேலைத்தளங்களுக்கு வெளியே மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டம் நடத்தின.

கொழும்பில், ஏறத்தாழ 600 கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் “25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு” கோரும் பதாகையை ஏந்தியபடி, மாநகர சபையிலிருந்து லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள கடிகாரக் கோபுரம் வரை ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், ஏறத்தாழ 30 நிமிடங்கள் போராட்டம் நடத்தினர். சுமார் 200 சுகாதார ஊழியர்களும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு முன்னால் மதிய உணவு இடைவேளைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டி நகர மையத்தில் ஜோர்ஜ் ஈ. டி சில்வா பூங்காவுக்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தில், அபிவிருத்தி அதிகாரிகள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், தபால், புகையிரதம் மற்றும் பிற அரச திணைக்களங்களின் ஊழியர்களும் கலந்துகொண்டனர். இதில் சுமார் 500 தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

வட மாகாணத்தின் பல இடங்களில் சுமார் 1,000 அரச ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். நாட்டின் பல தசாப்தகால உள்நாட்டுப் போரால் பேரழிவுக்குள்ளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பகுதிகளின் பிரதேச செயலகங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

25,000 ரூபா கொடுப்பனவுடன் சேர்த்து, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பளத்தைச் சீரமைத்தல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகளை நீக்குதல், அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருதல், ஜனநாயக விரோதச் சட்டங்களை இரத்துச் செய்தல், அரச மருத்துவமனைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டைத் தீர்த்தல் ஆகியவற்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள், ஜே.வி.பி./தே.ம.ச.யின் சிக்கன வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிரான பொதுப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்பு! சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராடு! என அழைப்புவிடுக்கும் கட்சியின் அறிக்கையை விநியோகித்தனர்.

சோ.ச.க. உறுப்பினர்களுடன் பேசிய கொழும்பு தேசிய மருத்துவமனையின் தாதியான தில்ஷான், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் மீது தமக்குள்ள கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தினார். 2024 இன் பிற்பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, தொழிற்சங்கங்கள் ஜே.வி.பி./தே.ம.ச. மீது மாயைகளை வளர்த்தன. அந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த தில்ஷான், “உண்மையில், தேர்தல்களின்போது நாங்கள் ஏமாற்றப்பட்டோம். இது ஒரு சோசலிச அரசாங்கம் என்று என்னிடம் கூறப்பட்டது. அத்தகைய மாயைகளைக் கொண்டிருந்த எவருக்கும், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் செயறப்பாடுகளும் இந்த பாதீடும் அந்த மாயைகளைத் தகர்த்துள்ளன.”

இந்த பாதீடு தனக்கு சுமார் 6,000 ரூபா மட்டுமே கூடுதலாக வழங்குவதாகவும், அதில் 3,000 ரூபா 2027 ஜூனிலும் மீதித் தொகை 2028இலும் வழங்கப்படும் என்றும் தில்ஷான் கூறினார். தொழிலாளர்கள் அந்தப் பணத்தைப் பெறுவதற்கு முன்பே அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு அதன் மதிப்பை அரித்துவிடும் என்றும் அவர் கூறினார்.

கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான வரிச் சலுகைகளை வழங்குவதாகவும், இந்தத் துறைகளுக்கான நிதியை அதிகரிப்பதாகவும் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

தேசிய மருத்துவமனையின் கடினமான இருதயவியல் பிரிவில் பணியாற்றும் தில்ஷான், உபகரணங்கள் மற்றும் ஊழியர் பற்றாக்குறையும் வேலைச்சுமையை அதிகரிப்பதுடன் விடுமுறை எடுப்பதையும் கடினமாக்குவதாக விவரித்தார். பல சுகாதாரப் ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறுவதாகவும் அல்லது புலம்பெயர்வதாகவும் வேறொரு தொழிலுக்கு மாறுவதும் கடினம் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற விடயத்தில் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்களுடன் உடன்பட்டார். “2028இல் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகளையும் வட்டியையும் திருப்பிச் செலுத்துவதற்காக, தொழிலாளர்கள் மீது பாரிய வரிகளை விதித்தும் சம்பளங்களைக் குறைத்தும் அரசாங்கம் திறைசேரியை நிரப்புகிறது என்பது தெளிவாகிறது. இது நியாயமற்றது,” என்று தில்ஷான் கூறினார்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மீதான தமது நம்பிக்கையின்மையையும் அவர் வெளிப்படுத்தினார்: “தொழிற்சங்கத் தலைமையுடன் எனக்குப் பிரச்சினைகள் உள்ளன. எனினும், எமக்குப் பின்னால் நின்று ஆதரவளிக்கும் தலைமைத்துவமும் ஒரு குழுவும் தேவை என்று நான் நம்புகிறேன். அதை மனதில் கொண்டே இந்தப் போராட்டத்தில் பங்கேற்றேன். இல்லையெனில், அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.”

யாழ்ப்பாணத்தில் அரசாங்க ஊழியரான டி. விஜயச்சந்திரன், “சில அற்பமான சலுகைகளை” மட்டுமே வழங்கியதற்காகவும், அரசாங்கத்தின் முந்தைய வாக்குறுதிகளைக் கைவிட்டதற்காகவும் பாதீட்டை விமர்சித்தார். பரந்த போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தத் தொழிற்சங்கங்கள் தவறிவிட்டதாகக் கூறிய அவர், தலைவர்கள் “தொழிலாளர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இவ்வாறு செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறார்கள்” என்றார். கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தொழிலாளர்களின் போராட்டங்களைக் காட்டிக்கொடுத்த ஜே.வி.பி. உடன் தொடர்புடைய தொழிற்சங்கத் தலைவர்களையும் அவர் கண்டித்தார்.

சுயாதீன தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவது பற்றிய சோ.ச.க.யின் முன்மொழிவுக்குப் பதிலளித்த அவர், அத்தகைய அமைப்புகள் ஜனநாயகமானவையாகவும் சுயாதீனமானவையாகவும் இருக்க வேண்டும் என்றும், “அரசாங்கத்தின் அழுத்தத்துக்கு அடிபணியக் கூடாது” என்றும் வலியுறுத்தி ஆதரவு தெரிவித்தார்.

மாத்தறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கல்வித் திணைக்கள ஊழியர்கள், 2026 நவம்பர் 23

தெற்கு நகரான மாத்தறையில், தமது தொழிற்சங்கத் தலைவர்கள் தங்களைப் போராட்டத்துக்கு அழைக்காவிட்டாலும், தமது சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளித்ததாக ஒரு தபால் ஊழியர் கூறினார். குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்காகச் சில தபால் ஊழியர்கள் நிலத்தில் வேலை செய்வதாகவும் அல்லது வேலையின் பின்னர் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதாகவும் அவர் விளக்கினார்.

“அரசாங்கம் சர்வேச நாணய நிதிய திட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதுடன் அது கட்டளையிடுவதை அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது. தொழிலாளர்கள் இதற்கு எதிராகப் போராட வேண்டும்,” என்று அவர் கூறினார். “எமது சம்பளத்தைப் போதுமான அளவு அதிகரிக்க அரசாங்கம் மறுக்கும் அதேவேளை, முதலாளிகளுக்கு வரம்பின்றிச் சலுகைகளை வழங்குகிறது. இந்தக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட, மற்ற தொழிலாளர்களுடன் நாம் ஐக்கியப்பட வேண்டும் என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.”

2027 பாதீடு இன்னும் குழுநிலை விவாதத்தில் இருப்பதால், சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர். பாதீட்டின் மூன்றாவது மற்றும் இறுதி வாசிப்பு டிசம்பர் 14 அன்று நடைபெறவுள்ளது. பாதீட்டுக்கு எதிரான ஐக்கியப்பட்ட போராட்டத்தைத் தடுக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள், அரசாங்கம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய இன்னும் காலம் இருப்பதாகக் கூறி, நவம்பர் 30 வரை காத்திருக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகின்றனர். அரசாங்கம் எந்தச் சம்பள அதிகரிப்பையும் வழங்காது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவும் அவரது அமைச்சர்களும் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ள போதிலும் சங்கங்கள் இதை வலியுறுத்துகின்றன.

ஜே.வி.பி./தே.ம.ச. மீது தொழிற்சங்கங்களால் கட்டியெழுப்பப்பட்ட மாயைகள் தகர்ந்து வருவதுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் பொறுப்பைத் திசைதிருப்ப முயல்கின்றனர். கொழும்பு நகர மண்டபத்தில் நடந்த போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய மாகாண முகாமைத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரசன்ன தியுனுகே, “இந்த அரசாங்கத்துக்கு அதிகாரத்துக்கு வருவதற்கான வழிமுறையாக மட்டுமே தொழிலாளர் இயக்கமும் தொழிற்சங்க இயக்கமும் முக்கியமாக இருந்தனவா? இப்போது அது அதிகாரத்துக்கு வந்துவிட்ட நிலையில், தொழிலாளர் இயக்கத்தையும் தொழிற்சங்க இயக்கத்தையும் அரசாங்கம் மறந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது” என்று ஊடகங்களிடம் முறையிட்டார்

ஜனாதிபதி திசாநாயகவை “தோழர் அனுர” என்று குறிப்பிட்ட அந்தத் தொழிற்சங்கத் தலைவர், நவம்பர் 30க்குப் பின்னர் மேலும் தொழில்துறை போராட்ட நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக 25,000 ரூபா கொடுப்பனவை வழங்கி “தவறைச் சரிசெய்யுமாறு” அரசாங்கத்தைக் கோரினார்.

அச்சுறுத்தல்களை விடுத்ததன் மூலம் அரசாங்கம் போராட்ட இயக்கத்துக்குப் பதிலளித்தது. “பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மாற்றத்துக்கான ஒரு சகாப்தத்தை நோக்கி இட்டுச் செல்லும்” பாதீட்டை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதால், நாசவேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று ஜே.வி.பி.யின் தேசிய தொழிற்சங்க மையம் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் தொழிலாளர்களை எச்சரித்தது. போராட்டங்களைக் கண்டித்த பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, அவை “நியாயப்படுத்த முடியாதவை” என்றும், “இந்த வகையான போராட்டங்களுக்கு நாம் எந்த வகையிலும் அடிபணியத் தயாராக இல்லை” என்றும் கூறினார்.

தொழிலாள வர்க்கத்தின் மீதான அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது. துரோகத் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து சுயாதீனமாக ஒவ்வொரு வேலைத்தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்பி, போராட்டத்தைத் தமது சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு நாம் அழைப்புவிடுக்கிறோம்.

வளர்ந்து வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தவும் காட்டிக்கொடுக்கவும் தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை இந்தக் குழுக்கள் எதிர்க்க வேண்டும். சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சோசலிச அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைப்பதற்காகவும், கிராமப்புற உழைப்பாளர்களுடன் சேர்த்து முழுத் தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டவும், இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களுடன் உறவுகளை ஏற்படுத்தவும் அவை போராட வேண்டும்.

Loading