wsws : Tamil
 
1888ம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பின் முகவுரை

 
 
 

1888ம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பின் முகவுரை

இந்த அறிக்கை தொழிலாளர்களது சங்கமான 'கம்யூனிஸ்டுக் கழகத்தின்' வேலைத்திட்டமாய் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்டுக் கழகம் முதலில் முற்றிலும் ஜேர்மன் தொழிலாளர்களுக்கு மட்டுமாய் இருந்தது. பிறகு சர்வதேச நிறுவனமாயிற்று. 1848க்கு முன்பு கண்டத்தினுள் நிலவிய அரசியல் நிலமைகளில் தவிர்க்க முடியாதபடி இது இரகசிய சங்கமாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கழகக் காங்கிரஸ், முழு அளவிலான தத்துவார்த்த, நடைமுறைக் கட்சி வேலைத்திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்தளிக்கும்படி மார்க்சையும் எங்கெல்சையும் பணித்தது. 1848 ஜனவரியில் ஜேர்மன் மொழியில் தயாரித்து முடிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி பெப்ரவரி 24 பிரெஞ்சுப் புரட்சிக்குச் [10] சில வாரங்களுக்கு முன்னால் லண்டன் அச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. பிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஒன்று 1848 ஜூன் எழுச்சிக்கு சற்று முன்னதாய் பாரிசில் வெளியாயிற்று. முதலாவது ஆங்கில மொழிபெயர்ப்பு மிஸ் ஹெலன் மாக் ஃபர்லெனால் செய்யப்பட்டு, லண்டனில் ஜோர்ஜ் ஜூலியன் ஹார்னியின் Red Republican பத்திரிகையில் 1850ல் வெளிவந்தது. டேனிஷ், போலிஷ் பதிப்புக்களும் வெளியாகியிருக்கின்றன.

பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான முதலாவது பெரும் போராய் 1848 ஜூனில் பாரிசில் மூண்ட எழுச்சி தோல்வியுற்றதைத் தொடர்ந்து சிறிது காலத்துக்கு ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் சமூக, அரசியல் ஆர்வங்கள் மீண்டும் பின்னிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் பிறகு மேலாண்மைக்கான போராட்டம் மீண்டும் பெப்ரவரி புரட்சிக்கு முன்பிருந்ததுபோல் சொத்துடைத்த வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையில் மட்டும் நடைபெறும் போராட்டமாகியது. தொழிலாளி வர்க்கம் அரசியல் நடமாட்ட இடத்துக்காகப் போராட வேண்டிய நிலைக்கும், முதலாளித்துவ வர்க்கத்தின் தீவிரவாதிகளது தீவிரசாரியாய் இருக்கும் நிலைக்கும் தாழ்த்தப்பட்டது. எங்கேயாவது சுயேச்சையான பாட்டாளி வர்க்க இயக்கங்கள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் அறிகுறிகள் வெளிப்படுமாயின் ஈவிரக்கமின்றி அவை நசுக்கப்பட்டன. இவ்வாறுதான் பிரஷ்ய போலிஸ் அப்போது கோலோனில் இருந்த கம்யூனிஸ்டுக் கழக மையக்குழுவை வேட்டையாடிற்று. மையக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பதினெட்டு மாதங்களுக்குச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். பிறகு 1852 ஒக்டோபரில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. புகழ்பெற்ற இந்த ''கொலொன் கம்யூனிஸ்டு வழக்கு விசாரணை'' ஒக்டோபர் 4 லிருந்து நவம்பர் 12 வரை நடைபெற்றது. கைதிகளில் ஏழு பேருக்கு மூன்றிலிருந்து ஆறு ஆண்டுகள் வரையிலான கோட்டை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சியிருந்த உறுப்பினர்கள் கம்யூனிஸ்டுக்கழகம் கலைக்கபட்டதாய் அறிவித்தனர். அறிக்கையைப் பொறுத்தவைரை இனி அது தடமற்றது மறைந்து விடும் என்பதாகவே தோன்றிற்று.

ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் திரும்பவும் ஆளும் வர்க்கங்களைத் தாக்குவதற்குப் போதிய பலம் பெற்றதும், அகில தொழிலாளர் சங்கம் உதித்தெழுந்தது. ஆனால் இந்த நிறுவனம் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் படைத்த பாட்டாளி வர்க்கம் அனைத்தையும் ஓரே அமைப்பாய் இணைத்திட வேண்டுமென்ற குறிக்கோளுடன் நிறுவப்பட்டதால், அறிக்கையில் வகுத்தளிக்கப்பட்ட கோட்பாடுகளை உடனடியாய் இது ஏற்றுப் பிரகடனம் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களும், பிரான்சையும் பெல்ஜியத்தையும் இத்தாலியையும் ஸ்பெயினையும் சேர்ந்த புரூதோன்[11] பற்றாளர்களுக்கும், ஜேர்மனியில் லஸ்ஸாலியர்களுக்கும் [C][12] ஏற்புடையதாகும்படி போதிய அளவு பரவலான வேலைத்திட்டத்தையே அகிலமானது ஏற்க வேண்டியிருந்தது. எல்லாக் கட்சியினருக்கும் திருப்பதிகரமான வகையில் இந்த வேலைத்திட்டத்தை வகுத்தளித்த மார்க்கஸ், ஒன்றிணைந்த செயற்பாட்டின் விளைவாகவும் பரஸ்பர விவாதத்தின் விளைவாகவும் தொழிலாளி வர்க்கத்திற்கு நிச்சயமாய்க் கைவரப் பெறும் அறிவின் வளர்ச்சியில் முழு நம்பிக்கை வைத்திருந்தார். மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தின் நிகழ்வுகளும், நல்லதும் கெட்டதுமான மாற்றங்களும், போராட்டத்தின் வெற்றிகளையும்விட அதிகமாய்த் தோல்விகளும், மாந்தர்தம் அபிமானத்துக்குரிய பலவகைப்பட்ட உத்திகளும் போதுமானவை அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்தி, தொழிலாளி வர்க்க விடுதலைக்கு வேண்டிய மெய்யான நிலமைகள் குறித்து முன்னிலும் அதிகமாய் முழுமையான ஞானம் பிறப்பதற்கு வழி கோலவே செய்யும். மார்க்ஸ் எதிர்பார்த்தது போலவே நடைபெற்றது. அகிலமானது 1864 இல் இருக்கக் கண்ட தொழிலாளி வர்க்கத்தில் இருந்து முற்றிலும் வேறான ஒரு தொழிலாளி வர்க்கத்தை 1874 ல் அது கலைக்கப்பட்ட போது விட்டுச்சென்றது. பிரான்சில் புருதோனியமும், ஜேர்மனியில் லஸ்ஸாலியும் இருந்து மறைந்து கொண்டிருந்தன. பழமைவாத ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களும் கூட, அவற்றில் பெரும்பாலானவை நெடுநாட்களுக்கு முன்பே அகிலத்தில் இருந்து நமது தொடர்பை வெட்டிக் கொண்டுவிட்டன என்ற போதிலும் படிப்படியாய் முன்னேறி, கடந்த ஆண்டில் ஸ்வான்சியில் அவற்றின் தலைவர்[D] பேசுகையில் ''கன்டத்து சோஷலிசத்திடம் எங்களுக்கு இருந்த கிலியெல்லாம் மறைந்துவிட்டது'' என்பதாய் அவற்றின் சார்பில் அறிவிக்கத் துணியும் நிலையை நோக்கி வந்திருக்கின்றன. உண்மை என்னவென்றால், அறிக்கையின் கோட்பாடுகள் எல்லா நாடுகளின் தொழிலாளர்களிடத்தும் கணிச அளவு செல்வாக்கு பெற்றுவிட்டன.

அறிக்கை இவ்வாறு திரும்பவும் முன்னிலைக்கு வந்தது. 1850 முதலாய் ஜெர்மன் மூலத்தின் மறுபதிப்புகள் பலதடவை சுவிட்ஸர்லாந்திலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வெளியாகியிருக்கின்றன. 1872 ல் நியூயோர்க்கில் இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Woodhull and Claflin's Weekly இல் வெளியிடப்பட்டது. நியூயோர்க் Le Socialiste ஏடு இந்த ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து பிரஞ்சில் மொழிபெயர்த்து வெளியிட்டது.அதன் பிறகு குறைந்தது மேலும் இரு ஆங்கில மொழிபெயர்ப்புகள், அதிகமாகவோ குறைவாகவோ சிதைத்துக் குலைக்கப்பட்ட வடிவில் அமெரிக்காவில் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒன்று இங்கிலாந்தில் மறுபதிப்பாய் வெளியாகியிருக்கின்றது. முதலாவது ருஷ்ய மொழிபெயர்ப்பு பக்கூனினால் செய்யப்பட்டு, 1863 ஆம் ஆண்டின் வாக்கில் ஜெனீவாவில் கெர்த்சனின் கோலகல் ஏட்டின் அச்சகத்திலிருந்து வெளியாயிற்று. இரண்டாவது ருஷ்ய மொழிபெயர்ப்பு வீரமிக்க வேரா ஸசூலிச்சால்[13] செய்யப்பட்டு 1882 ல் ஜெனீவாவில் வெளியாயிற்று. புதிய டேனிஷ் பதிப்பு ஒன்றை Social-demokratisk Bibliothek (கோப்பன்ஹெகன்,1885) நூல் தொகுப்பில் காணலாம். பாரிசில் 1885 ல் Le Socialiste ஏட்டில் ஒரு புதிய பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இதிலிருந்து ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட்டு 1886 ல் மாட்ரிடில் வெளியாயிற்று. ஜேர்மன் மறுபதிப்புகளுக்கு கணக்கில்லை, மொத்தம் பன்னிரண்டுக்குக் குறையாது. ஆர்மீனிய மொழிபெயர்ப்பு ஒன்று சில மாதங்களுக்கு முன்பு கான்ஸ்டான்டி நோப்பிளில் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் மார்க்சின் பெயரைக் கொண்ட ஒரு புத்தகத்தைக் கொண்டுவர பதிப்பாளர் பயந்ததாலும், மொழிபெயர்ப்பாளர் அதைத் தமது படைப்பாய்க் குறிப்பிடுவதற்கு மறுத்தாலும் அது வெளிவராமல் நின்றுவிட்டதாய்க் கேள்விப்படுகிறேன். வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது பற்றிக் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவற்றை நான் நேரில் பார்த்ததில்லை. இவ்விதம் அறிக்கையின் வரலாறு நவீனத் தொழிலாளி வர்க்க இயக்கத்தைப் பெருமளவுக்குப் பிரதிபலிக்கிறது. தற்போது சோஷலிச இலக்கியங்கள் யாவற்றிலும் இது மிகவும் பல்கிப்பரவி அதிக அளவுக்கு அகிலம் தழுவிய வெளியீடாய் இருக்கிறது என்பதிலும், சைபீரியாவிலிருந்து கலிபோர்னியாவரையில் கோடானுகோடி தொழிலாளி மக்களால் பொது வேலைத்திட்டமாய் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் ஐயப்பாட்டுக்கு இடமில்லை. ஆயினும் இது எழுதப்பட்ட காலத்தில் அதற்கு நாங்கள் சோஷலிஸ்டு அறிக்கை என்பதாய்ப் பெயர் சூட்ட முடியவில்லை. 1847 ல் சோஷலிஸ்டுகள் எனப்பட்டோர் ஒருபுறத்தில் வெவ்வேறு கற்பனாவாத கருத்தமைப்புகளைச் சேர்ந்தோராய் இருந்தனர். இங்கிலாந்தில் ஓவனியர்கள், [14] பிரான்சில் ஃபூரியேயர்க்ள், [15] இரு வகையினரும் ஏற்கனவே குறுங்குழுக்களின் நிலைக்குத் தாழ்த்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தவர்கள். மறுபுறத்தில் மிகப் பல்வேறுபட்ட சமூக மருத்துவப் புரட்டர்களாய், மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் எந்தத் தீங்கும் நேராதபடி பலவகையான ஒட்டுவேலைகள் மூலம் எல்லாவகையான சமூகக் கேடுகளையும் களைகிறோமெனக் கூறிக்கொண்டவர்களாய் இருந்தனர். இரு வகைப்பட்டோரும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு வெளியே இருந்து கொண்டு, ''படித்த'' வகுப்பாரின் ஆதரவையே அதிகமாய் நாடி வந்தனர். தொழிலாளி வர்க்கத்தில் எந்தப் பகுதி வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் நடைபெற்றால் போதாது என்பதை ஐயமுற உணர்ந்து, முழுநிறைவான சமுதாய மாற்றம் ஏற்படுவது இன்றியமையாததெனப் பறைசாற்றியதோடு, அந்தப் பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண்டது

அது பக்குவம் பெறாத, குத்தாயமாய் வரையப்பெற்ற, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட கம்யூனிஸமாகவே இருந்ததென்றாலும், அடிப்படையான விவகாரத்தைக் குறிப்பிடுவதாய் இருந்தது. பிரான்சில் காபேயின் கற்பனாவாதக் கம்யூனிஸத்தையும் ஜேர்மனியில் வைட்லிங்கின் கற்பனாவாதக் கம்யூனிஸத்தையும் [16] தோற்றுவிக்கும் அளவுக்குத் தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் சக்தி வாய்ந்ததாய் இருந்தது. இவ்விதம் 1847 இல் சோஷலிசம் மத்தியதர வர்க்க இயக்கமாய் இருக்க, கம்யூனிசம் தொழிலாளி வர்க்க இயக்கமாய் இருந்தது. சோஷலிசம், எப்படியும் கண்டத்திலேனும், ''கனவான் மனப் பாங்குடைத்ததாய்'' இருக்க, கம்யூனிசம் இதற்கு நேர் மாறானதாய் இருந்தது. ஆதியிலிருந்தே எங்களுடைய கருத்தோட்டம் ''தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை நேரடியாய்த் தொழிலாளி வர்க்கத்தின் செயலால்தான் பெறப்பட்டாக வேண்டும்'' என்பதாய் இருந்தால், இவ்விரு பெயர்களில் நாங்கள் எதை ஏற்பது என்பது குறித்து ஐயப்பாட்டிற்கு இடம் இருக்கவில்லை. அதோடு அது முதலாய், இந்தப் பெயரை நிராகரிக்கும் எண்ணம் கணமும் எங்களுக்கு ஏற்படவில்லை.

அறிக்கையானது எங்களுடைய கூட்டுப் படைப்பானதால், இதன் மையக் கருவாய் அமைந்த அடிப்படை நிர்ணயிப்பு மார்க்சுக்கே உரியதென்பதைக் குறிப்பிடுவது என் கடமையாகுமெனக் கருதுகின்றேன். அந்த அடிப்படை நிர்ணயிப்பு வருமாறு; வரலாற்றின் வழிவந்த ஒவ்வொரு சகாப்தத்திலும், அப்போது ஓங்கிய நடப்பிலுள்ள பொருளாதார உற்பத்தி, பரிவர்த்தனை முறையும் இதிலிருந்து இன்றியமையாதவாறு பெறப்படும் சமூக அமைப்பு முறையும்தான் அந்த சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றினை விளக்க முடியும். ஆகவே (நிலத்தை பொதுவுடைமையாய்க் கொண்டிருந்த புராதனக் குடிகளது சமுதாயம் சிதைவுற்றகாலம் முதலாய்) மனிதகுல வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது, சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் ஆளப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டங்களது வரலாறே ஆகும். இந்த வர்க்கப் போராட்டங்களது வரலாறானது பரிணாமங்களின் தொடர் வரிசையாய் அமைந்து தற்போது வந்தடையப் பெற்றுள்ள கட்டத்தில் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கம் சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்திவிருந்து தனது விடுதலையைப் பெறவேண்டுமாயின், அதேபோது சமுதாயம் முழுவதையுமே எல்லா விதமான சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்க பாகுபாடுகளிலிருந்தும் வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் முற்றாகவும் முடிவாகவும் விடுவித்தே ஆகவேண்டும் என்றாகியுள்ளது.

டார்வினுடைய தத்துவம் உயிரியலுக்கு ஆற்றிய சேவையை இந்த வரையறுப்பு, என் கருத்துப்படி, வராலாற்றியலுக்கு ஆற்றப் போகிறது. [17] 1845 க்கு முந்திய சில ஆண்டுகளாகவே நாங்கள் இருவரும் இந்த வரையறுப்பை படிப்படியாய் நெருங்கி வந்து கொண்டிருந்தோம். சுயேச்சையாய் நான் எந்த அளவுக்கு இதை நோக்கி முன்னேறி வந்தேன் என்பதை எனது இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலமை [E] நன்கு தெரிவிக்கின்றது. ஆனால் 1845 ஆம் ஆண்டு வசந்தத்தில் நான் பிரஸ்ஸெல்சில் மார்க்சை மீண்டும் சந்தித்த போது, அவர் இந்த வரையறுப்பைப் பூரணமாய் வகுத்து வைத்திருந்தார். இங்கு நான் எடுத்துரைத்திருப்பது போல் எறத்தாழ இதே அளவுக்குத் தெளிவான வாசகத்தில் எனக்கு அறிவித்தார்.

1872ம் ஆண்டு ஜேர்மன் பதிப்புக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதிய முகவுரையிலிருந்து பின்வரும் பகுதியை அப்படியே இங்கு தருகின்றேன்;

''கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருப்பினும், இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவையே. இங்கும் அங்கும் சிற்சில விவரங்களைச் செம்மை செய்யலாம். அறிக்கையே கூறுவது போல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல், எங்கும் எக்காலத்திலும், அவ்வப்போது இருக்கக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில் முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தை இன்று வேறு விதமாய் வரையவேண்டியிருக்கும்.1848 ஆம் ஆண்டுக்கு பிறகு நவீனத் தொழில்துறை பெரு நடை போட்டுப் பிரமாதமாய் முன்னேறியிருக்கிறது. இதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கட்சி நிறுவன ஒழுங்கமைப்பும் மேம்பாடுற்றும் விரிவடைந்தும் உள்ளது. இவற்றையும், மற்றும் முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு இன்னும் முக்கியமாய், முதன்முதலாய்ப் பாட்டாளி வர்க்கம் முழுதாய் இரு மாதங்களுக்கு அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரீஸ் கம்யூனிலும் [18] கிடைத்த நடைமுறை அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாய் ஒன்றை நிருபித்துக் காட்டிற்று. அதாவது 'ஏற்கனவே பூர்த்தியான தயார் நிலையிலுள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்தக் காரியங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது' என்பதை நிரூபித்துக் காட்டிற்று. (பார்க்கவும்; பிரான்சில் உள்நாட்டுப் போர். அகிலத் தொழிலாளர் சங்கப் பொது அவையின் பேருரை, லண்டன், துரூலவ், 1871, பக்கம் 15, இந்த விவரம் மேலும் விளக்கமாய் அங்கே பரிசீலிக்கப்படுகிறது.) தவிரவும், சோஷலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய நிலைவரத்துக்குப் பற்றாக்குறையானது என்பதைக் கூறத் தேவையில்லை. ஏனெனில் 1847ம் ஆண்டு வரையிலான நிலவரம் மட்டும்தான் இந்த விமர்சனத்தில் இடம் பெறுகிறது. அதோடு, பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளுடைய உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாடு அளவில் இன்றும் பிழையற்றவையே என்றாலுங் கூட நடைமுறையில் காலங் கடந்தவை என்பது தெளிவு. ஏனென்றால் அரசியல் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. வரலாற்றின் முன்னேற்றமானது அப்பிரிவில் குறிக்கப்படும் அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்து துடைத்து அகற்றியிருக்கிறது.

''ஆனால் இந்த அறிக்கை வரலாற்று ஆவணமாகிவட்டது. இனி இதைத் திருத்த எங்களுக்கு உரிமை இல்லை.''

தற்போதைய இந்த மொழிபெயர்ப்பு, மார்க்சின் மூலதனத்தில் பெரும் பகுதியை மொழிபெயர்த்து அளித்தவரான சாமூவேல் மூர் செய்ததாகும். இருவருமாய்ச் சேர்ந்து மொழிபெயர்ப்பைச் சரிபார்த்தோம். வரலாற்றுச் சுட்டுரைகளை விளக்கும் சில குறிப்புகளை நான் எழுதிச் சேர்த்திருக்கின்றேன்.

பிரெடெரிக் எங்கெல்ஸ்
லண்டன்
, 1888, ஐனவரி 30


குறிப்புகள்

C) தனிப்பட்ட முறையில் லஸ்ஸால் எப்போதுமே எங்களிடம் தாம் மார்க்கின் சீடர் என்பதாய் ஏற்றக்கொண்டார். எனவே அறிக்கையையே அடிநிலையாய்க் கொண்டிருந்தார். ஆனால் 1862 - 64 ஆம் ஆண்டுகளில் பொது மேடைகளிலான அவரது கிளர்ச்சியில், அரசுக் கடன் உதவியுடன் கூட்டுறவுத் தொழிலகங்கள் நடத்தப்பட வேண்டுமெனக் கோருவதற்கு மேல் அவர் செல்லவிலை. (எங்கெல்ஸ் குறிப்பு.) [Top]

D) டபிள்யூ. பீவன். (பதிப்பாசிரியர்.) [Top]

E) The Condition of the Working Class in England in 1844. By Frederick Engels. Translated by Florence K.Wishnewetzky. New York, Lovell--London, W. Reeves, 1888. (1844 ல் இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலமை பிரடெரிக் எங்கெல்ஸ். மொழிபெயர்ப்பாளர்; கே.விஷ்னெவேத்ஸ்கீ, நியூயோர்க், லோவேல்--லண்டன், வீ.ரீவ்ஸ் ) (எங்கெல்ஸ் குறிப்பு) [Top]

10) குறிப்பு 1 ஐப் பார்க்கவும். [Top]

11) புரூதோன் {Proudton}, பியேர் ஜொஸேப் {1809-1865} பிரெஞ்சுக் கட்டுரையாளர், பொருளாதார அறிஞர், சமூகவியல் அறிஞர். குட்டி முதலாளித்துவ வர்க்கத்தாரின் கொள்கைவாதி, அராஜகவாதத்தை ஸ்தபித்தவர்களில் ஒருவர். சிறு தனியார் சொத்துடமையை என்றென்றைக்கும் நிலையாக வைத்திருக்க வேண்டும் எனப் புரூதோன் விரும்பினார். பெரு முதலாளித்துவச் சொத்துடமையை அவர் குட்டி முதலாளியினுடைய நோக்கு நிலையிலிருந்து விமர்சித்தார். விசேஷ ''மக்கள் வங்கி'' நிறுவப்பட வேண்டும் என்றும், தொழிலாளர்கள் சொந்த உற்பத்திச் சாதனங்களை வாங்கிச் சேகரித்து, கைவினையர்கள் ஆவதற்கு இந்த வங்கி ''இலவசக் கடன்'' வாயிலாக உதவும் என்றும் அவர் யோசனை வெளியிட்டார். தனிவகைப்பட்ட ''பரிவர்த்தனை வங்கிகள்'' அமைப்பது பற்றிய புரூதோனின் கற்பனைத் திட்டமும் இதேபோன்ற பிற்போக்குத்தன்மை கொண்டிருந்தது. அவரது திட்டப்படி இந்த வங்கியின் உதவியால் உழைப்பாளி மக்கள் தங்கள் உற்பத்தி பொருளின் ''நியாமான'' விற்பனைக்கு வகை செய்வார்கள், அதே சமயம் உற்பத்திக் கருவிகள், சாதனங்கள் மீது முதலாளித்துவ சொத்துடமையைத் தொடாமல் விட்டுவிடுவார்கள். பாட்டாளி வர்க்கத்துக்குள்ள வரலாற்றுப் பாத்திரத்தை புரூதோன் புரிந்து கொள்ளவில்லை. வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் ஆகியவை குறித்து அவர் மறுதலைப் போக்குடையவராய் இருந்தார். அராஜகவாதியான அவர் அரசின் அவசியத்தையே நிராகரித்தார், முதலாவது அகிலத்தின் மீது தமது கருத்துக்களைத் திணிக்க முயன்ற புரூதோனியர்களைக் கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் முரணின்றித் தொடர்ச்சியாய் எதிர்த்தனர். மெய்யறிவின் வறுமை என்ற தமது புத்தகத்தில் கார்ல் மார்க்ஸ் புரூதோனியத்தைக் கடுமையாய்த் தாக்கித் தகர்த்திட்டார். [Top]

12) லஸ்ஸாலியர்கள் ஜேர்மன் குட்டி முதலாளித்துவ சோஷலிஸ்டு பெர்டினாண்டு லஸ்ஸாலை {Lassalle} ஆதரித்துப் பின்பற்றியவர்கள், லைப்ஸிக் நடந்த தொழிலாளர் சங்கங்களின் காங்கிரஸில் {1863} நிறுவப்பட்ட ஜேர்மன் தொழிலாளர்களின் பொதுச் சங்கத்தின் உறுப்பினர்கள். சங்கத்தின் முதல் தலைவர் லஸ்ஸால். சங்கத்தின் வேலைத்திட்டத்தையும் செயல்தந்திர அடிப்படைகளையும் வரையறுத்தவரும் அவரே. தொழிலாளி வர்க்கத்தின் வெகுஜன அரசியல் கட்சி ஒன்று நிறுவப்பட்டதானது ஜேர்மனியில் தொழிலாளி வர்க்கத்தின் வர்ச்சியில் ஒரு முன்னேற்றப் படியாகும். ஆனால் லஸ்ஸாலும் அவரைப் பின்பற்றியோரும் பிரதான தத்துவார்த்த, அரசியல் பிரச்சனைகளில் சந்தர்ப்பவாத நிலையை அனுசரித்தனர். சமுதாயப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குப் பிரஷ்ய அரசைப் பயன்படுத்துவது சாத்தியமே என்று கருதி அவர்கள் பிரஷ்யாவில் பிஸ்மார்க் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முயன்றார்கள். லஸ்ஸாலியத் தத்துவத்தையும் போர்த்தந்திரத்தையும் நிறுவன ஒழுங்கமைப்புக் கோட்பாடுகளையும் ஜேர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் செயல்படும் ஒரு சந்தர்ப்பவாதப் போக்காகுமென்று கண்டித்து மார்க்சும் எங்ககெல்சும் கடுமையாய் அவற்றை எதிர்த்து போராடினர். [Top]

13) உண்மையில் இம்மொழிபெயர்ப்பைச் செய்தவர் கி. வ. பிளெஹானவ் என்பதைப் பிற்பாடு எங்கெல்ஸ் ரஷ்யாவில் சமூக உறவுகள் என்னும் கட்டுரையின் பின்னுரையில் பிழையின்றி குறிப்பிடுகிறார். [Top]

14) ஓவனியர்கள் பிரிட்டிஷ் கற்பனாவாத சோஷலிஸ்டான ராபர்ட் ஓவன் {Owen} {1771-1858} என்பவரின் ஆதரவாளர்கள். ராபர்ட் ஓவன் முதலாளித்துவ அமைப்பைக் கடுமையாய்க் கண்டித்தார். ஆனால் முதலாளித்துவ முரண்பாடுகளின் மூல காரணங்களை அவரால் புலப்படுத்திக்காட்ட முடியவில்லை. சமூக ஏற்றத்தாழ்வுக்குப் பிரதான காரணம் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையல்ல, அறிவொளி போதிய அளவு பரவாமலிருப்பதே என்று கருதினார். கல்வியின் மூலம், சமூகச் சீர்திருத்தங்களின் மூலமும் சமூக ஏற்றத் தாழ்வுகளை அகற்றிவிடலாம் என்றார். இதற்குரிய சீர்திருத்தங்களுக்கான விரிவான ஒர் வேலைத்திட்டத்தை வகுத்து முன்வைத்தார். வருங்காலப் ''பகுத்தறிவு'' சமுதாயம் சிறிய, தன்னாட்சி மக்கள் கூட்டுக்களின் சுதந்திரச் சம்மேளனமாய் இருக்குமெனச் சித்தரித்தார். ஆனால் அவருடைய இந்தக் கருத்துக்களை நடைமுறையில் செயல்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றன. {இந்தப் பதிப்பின் பக்கங்கள் 93-98 ஐயும் பார்க்கவும்.}[Top]

15) ஃபூரியேயர்கள் பிரெஞ்சுக் கற்பனாவாத சோஷலிஸ்டான ஷார்ல் ஃபூரியே {Fourier} {1772-1837} என்பவரின் ஆதரவாளர்கள் ஃபூரியே முதலாளித்துவ சமுதாயத்தைக் கடுமையாய் விமர்சித்தார். மனித உள்ளத்து உணர்ச்சிகளை அறிந்து கொள்வதன் அடிப்படையில் அமையப் பெறும் வருங்காலத்தின் ''இசைவான'' சமுதாயத்தைச் சித்தரித்தார். பலாத்காரப் புரட்சியை அவர் எதிர்த்தார். வருங்கால சோஷலிச சமுதாயத்துக்கான மாற்றத்தை முன்மாதிரி ''பலான்ஸ்டேர்களை'' [Top]

{''வேலைக் கூட்டமைவுகள்''} சமாதான வழியில் விளக்கி பிரசாரம் செய்வதன் மூலமே நடந்தேறச் செய்ய முடியும் என்றார். இந்த ''பலான்ஸ்டேர்களில்'' எல்லாரும் தாமே மனமுவந்து வேலை செய்வார்கள். உழைப்பு அவர்களுக்கு இனிமை பயப்பதாய் இருக்கும். ஆனால் ஃபூரியே தனியுடமையை அகற்றிவிடவில்லை. அவருடைய ''பலான்ஸ்டேர்களில்'' பணக்காரர்களும் ஏழைகளும் இருந்தனர். {இந்தப் பதிப்பின் 93-98 ஆம் பக்கங்களைப் பார்க்கவும்.}

16) காபே {Cabet}, எத்தியேன் {1788-1856} பிரெஞ்சுக் குட்டி முதலாளித்துவக் கட்டுரையாளர். கற்பனாவாதக் கம்யூனிசத்தின் பிரபலப் பிரதிநிதி. சமூகத்தை அமைதியான முறையில் மாற்றி அமைப்பதன் மூலம் முதலாளித்துவ அமைப்பின் குறைகளை அகற்றிவிட முடியும் என்று காபே எண்ணினார். ஐகேரியாவில் பயணம் 1840} என்னும் நூலில் அவர் தமது கருத்துக்களை விவரித்தார். அமெரிக்காவில் கம்யூனை அமைப்பதன் வாயிலாக இந்தக் கருத்துக்களை அவர் செயல்படுத்த முயன்றார். ஆனல் அவருடைய சோதனைகள் அடியோடு தோல்வி அடைந்தன. {இந்தப் பதிப்பின் 97-98 ஆம் பக்கங்களைப் பார்க்கவும்.} வைட்லிங் {Weitling}, வில்ஹல்ம் {1808-1871} ஜேர்மன் தொழிலாளி வர்க்கத்தின் தொடக்கத்தில் அதன் பிரபலத் தலைவர். கற்பனாவாத சமத்துவவாதக் கம்யூனிசத்தின் சித்தாந்த கர்த்தர்களில் ஒருவர். ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தின் முதலாவது சுயேச்சைத் தத்துவார்த்த இயக்கமாய் வைட்லிங்கின் கருத்தோட்டங்கள் ஆக்க முறையில் பங்காற்றின என்று எங்கெல்ஸ் எழுதினார். ஆனால் விஞ்ஞானக் கம்யூனிசம் உதித்தெழுந்தபின் இக்கருத்தோட்டங்கள் பாட்டாளி வர்க்க உணர்வின் வளர்ச்சிக்குத் தடையாய் அமையலாயின. [Top]

17) குறிப்பு 9 ஐப் பார்க்கவும். [Top]

18) குறிப்பு 5 ஐப் பார்க்கவும். [Top]

   
World Socialist Web Site
All rights reserved