wsws : Tamil
 
1893ம் ஆண்டு இத்தாலியப் பதிப்பின் முகவுரை

 
 
 

1893ம் ஆண்டு இத்தாலியப் பதிப்பின் முகவுரை

இத்தாலிய வாசகருக்கு

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான நிகழ்ச்சியானது, மிலானிலும் பேர்லினிலும் புரட்சிகள் நடைபெற்ற 1848 மார்ச் 18ம் நாளுடன் ஒன்றித்து நடந்தேறியதாய்ச் சொல்லலாம். மிலானிலும் பேர்லினிலும் நடைபெற்ற புரட்சிகள், ஒன்று ஐரோப்பாக் கண்டத்தின் மையத்திலும் மற்றென்று மத்தியதரைக் கடற் பிரதேசத்தின் மையத்திலுமாய் அமைந்த இரு தேசங்களது ஆயுதமேந்திய எழுச்சிகளாகும். இரு தேசங்களும் அதுகாறும் பிளவுபட்டு உட்பூசலால் நலிவுற்று அதன் பலனாய் அன்னிய ஆதிக்கத்தில் இருத்தப்பட்டுக் கிடந்தவை. இத்தாலியானது ஆஸ்திரியாவின் பேரரசனுக்கு அடிமைப்பட்டுக் கிடக்க, ஜேர்மனியானது இதனிலும் மறைமுகமானதாயினும் வினை வலிமையால் குறைவாயிராத ஆதிக்கமாகிய அனைத்து ரஷ்யாவின் ஜார் மன்னனது ஆதிக்கத்தில் இருத்தப்பட்டிருந்தது. 1848 மார்ச் 18ன் விளைவுகள் இத்தாலியையும் ஜேர்மனியையும் இந்த அவக்கேட்டிலிருந்து விடுவித்தன. இம்மாபெரும் இரு தேசங்களும் 1848 க்கும் 1871 க்கும் இடையே மீட்டமைக்கப் பெற்று தன்னுரிமையோடு மீண்டும் எழ முடிந்ததெனில், கார்ல் மார்க்ஸ் அடிக்கடி கூறியது போல், 1848ம் ஆண்டுப் புரட்சியை அடக்கியவர்கள் தம்மையும் மீறி இந்தப் புரட்சியின் இறுதி விருப்ப ஆவணத்தை நிறைவேற்ற வேண்டியதாகியதே அதற்குக் காரணமாகும்.

எங்கும் அந்தப் புரட்சி தொழிலாளி வர்க்கம் புரிந்த செயலாகவே இருந்தது. தெருவில் தடுப்பரண்கள் அமைத்து உயிர் இரத்தத்தையும் அளித்துப் போராடியது தொழிலாளி வர்க்கம்தான். ஆனால் பாரிஸ் தொழிலாளர்கள் மட்டும்தான் அரசாங்கத்தை வீழ்த்துகையில் முதலாளித்துவ ஆட்சியமைப்பை வீழ்த்திடும் திட்டவட்டமான நோக்கம் கொண்டோராய் இருந்தார்கள். தமது வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலுள்ள ஜென்மப் பகையை உணர்ந்திருப்பினும்கூட, நாட்டின் பொருளாதார முன்னேற்றமோ, பிரெஞ்சுத் தொழிலாளர்களில் பெருந்திரளானேரின் அறிவுத்துறை வளர்ச்சியோ சமுதாயப் புத்தமைப்பைச் சாத்தியமாக்கக் கூடிய கட்டத்தினை இன்னமும் வந்தடைந்து விடவில்லை. ஆகவே இறுதியில் புரட்சியின் பலன்களை முதலாளித்துவ வர்க்கம் வசப்படுத்திக் கொண்டுவிட்டது. பிற நாடுகளாகிய இத்தாலியிலும், ஜேர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் ஆரம்பத்திலிருந்தே தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தை உயர்த்தி ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதை அன்றி எதுவும் செய்யவில்லை. தேச சுதந்திரம் பெறாமல் எந்த நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியதிகாரம் பெறுவது சாத்தியமன்று. எனவே 1848ம் ஆண்டுப் புரட்சி அதுகாறும் ஒற்றுமையும் தன்னாட்சியும் பெறாதிருந்த தேசங்களுக்கு இவை கிடைக்கச் செய்தாக வேண்டிருந்தது. இத்தாலியும் ஜெர்மனியும் ஹங்கேரியும் இவ்வாறுதான் இவற்றைப் பெற்றுக் கொண்டன. அடுத்து போலந்தும் இவற்றைப் பெற்றுக் கொள்ளும்.

1848ம் ஆண்டுப் புரட்சி இவ்விதம் சோஷலிசப் புரட்சியாய் இருக்கவில்லை. ஆயினும் அது சோஷலிசப் புரட்சிக்குப் பாதையைச் செப்பனிட்டது. எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ ஆட்சியமைப்பு பெருவீதத் தொழில் துறைக்குத் தூண்டுதல் அளித்ததன் மூலம் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் எங்கும் மிகுந்த எண்ணிக்கையுடையதாய், ஒன்று குவிந்திருக்கும், சக்தி மிக்கதான பாட்டாளி வர்க்கத்தைத் தோற்றுவித்திருக்கிறது. இவ்வாறு அது, அறிக்கையின் சொற்களில் சொல்வோமாயின், தனக்குச் சவக்குழி தோண்டுவோரை எழச் செய்திருக்கிறது. ஒவ்வொரு தேசத்துக்கும் தன்னாட்சியையும் ஐக்கியத்தையும் மீட்டளிக்காமல் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை உண்டாக்குவதோ, பொது நோக்கங்களுக்காக இந்தத் தேசங்களிடையே சமாதான வழிப்பட்ட அறிவார்ந்த ஒத்துழைப்பை ஏற்படுத்துவதோ முடியாத காரியம். 1848க்கு முன்பிருந்த அரசியல் நிலைமைகளில் இத்தாலிய, ஹங்கேரிய, ஜேர்மன், போலிஷ், ரஷ்யத் தொழிலாளர்கள் கூட்டாய்ச் சர்வதேச நடவடிக்கை எடுத்திருக்க முடியுமெனக் நினைப்பதும்கூட சாத்தியம் அல்லவே!

ஆகவே, 1848ல் புரியப்பட்ட போர்கள் வீணாகிவிடவில்லை. அந்தப் புரட்சி சகாப்தத்துக்குப் பிற்பாடு கழிந்திருக்கும் நாற்பத்தைந்து ஆண்டுகளும் வீணில் கழிந்து விரயமாகிவிடவில்லை. இவற்றின் பலன்கள் முற்றிப் பக்குவமடைந்து வருகின்றன. நான் விரும்புவது எல்லாம், முன்பு மூல மொழிப்பதிப்பு சர்வதேசப் புரட்சிக்குக் கட்டியங் கூறுவதாய் அமைந்தது போல், இப்போது இந்த இத்தாலிய மொழிபெயர்ப்பு இத்தாலியத் தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிக்குக் கட்டியங் கூறுவதாய் இருத்தல் வேண்டும் என்பதுதான்.

கடந்த காலத்தில் முதலாளித்துவம் ஆற்றிய புரட்சிகரப் பங்கினை அறிக்கை தக்கச் சிறப்புடன் எடுத்துரைக்கிறது. இத்தாலிதான் முதலாவது முதலாளித்துவ தேசம். பிரபுத்துவ மத்திய காலத்தின் இறுதியையும் நவீன முதலாளித்துவச் சகாப்தத்தின் துவக்கத்தையும் குறிப்பவனாய் விசுவ உருவம் தரித்து நிற்கும் மாமனிதன் ஓர் இத்தாலியன், மத்திய காலத்தின் கடைசிக் கவிஞனும் நவீன காலத்தின் முதற் கவிஞனுமான தாந்தே என்பான். 1300ம் ஆண்டைப் போலவே இன்றும் ஒரு புதிய வரலாற்றுச் சகாப்தம் நெருங்கி வருகின்றது. இந்தப் புதிய, பாட்டாளி வர்க்கச் சகாப்தத்தைக் குறிப்பவனாய் ஒரு புதிய தாந்தேயை இத்தாலி நமக்கு அளிக்குமா?

பிரெடெரிக் எங்கெல்ஸ்
லண்டன்
, 1893, பிப்ரவரி 1

   
World Socialist Web Site
All rights reserved