wsws : Tamil
 
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

 
 
 

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் --கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும் ஜாரரசனும், மெட்டர்னிஹும் கிஸோவும்,[26] பிரெஞ்சுத் தீவிரவாதிகளும் ஜேர்மன் உளவாளிகளுமாய், பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இத்தப் பூதத்தை ஓட்டுவதற்காக புனிதக் கூட்டு சேர்ந்திருக்கின்றன.

ஆட்சியிலுள்ள தனது எதிராளிகளால் கம்யூனிஸ்ட் என்று ஏசப்படாத எதிர்க் கட்சி எங்கேனும் உண்டா? கம்யூனிசம் என்று இடித்துரைத்துத் தன்னிலும் முன்னேறிய எதிர்த்தரப்பாருக்கும், மற்றும் பிற்போக்கான தனது எதிராளிகளுக்கும் பதிலடி கொடுக்காத எதிர்க் கட்சிதான் உண்டா?

இரண்டு முடிவுகள் இவ் உண்மையிலிருந்து எழுகின்றன;

1. கம்யூனிசமானது ஒரு தனிப்பெரும் சக்தியாகிவிட்டதை ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டன.

2. பகிரங்கமாய் அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் தமது நோக்கங்களையும் தமது போக்குகளையும் வெளியிட்டு, நேரடியாய் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

இந்த நோக்கத்துடன், பல்வேறு தேசிய இனங்களையும் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் லண்டனில் கூடி, அடியிற் கண்ட அறிக்கையை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலியன், ஃபிளெமிஷ், டேனிஷ் மொழிகளில் வெளியிடுவதற்காக வகுத்திட்டனர்.


குறிப்புகள்

26) போப்பு, ஒன்பதாம் பயஸ் {Pius} 1846ல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மிதவாதியாய்க் கருதப்பட்டார், ஆனால் 1848ம் ஆண்டுப் புரட்சிக்கு முன்பிருந்தே ஐரோப்பாவின் போலிஷ் அடக்குமுறை அதிபராய்ச் செயல்பட ஆரம்பித்துவிட்ட ஜார் மன்னர் முதலாம் நிக்கலாயைப் போல் அதே அளவுக்கு சோஷலிசத்தின் வைரியாய் இருந்தார். ஆஸ்திரிய முடிப் பேரரசின் சான்சலராய் மெட்டர்னிஹ் {Metternich} ஐரோப்பியப் பிற்போக்கின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராய் இருந்தார். அக்காலத்தில் இவர் பிரெஞ்சு நாட்டுப் பிற்போக்குத் தலைவராய் இருந்த கிஸோவுடன் {Guizot} (பிரெஞ்சு முதலாளித்துவ வரலாற்றியலாளர், அமைச்சர், பெருநிதி மூலதனத்தின், தொழில் துறை மூலதனத்தின் சித்தாந்தவாதி, பாட்டாளி வர்க்கத்தின் ஜென்மப் பகையாய் இருந்தவர்) கூட்டு சேர்ந்து கொண்டார். பிரஷ்ய அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப கார்ல் மார்க்சை பாரிசிலிருந்து வெளியேறிவிடும்படி உத்தரவிட்டவர் கிஸோ. ஜேர்மன் போலீஸ் ஜேர்மனியில் மட்டுமின்றி, பிரான்சிலும் பெல்ஜியத்திலும் சுவிட்ஜர்லாந்திலும் கம்யூனிஸ்டுக்களை வேட்டையாடி வந்தது, அவர்கள் பிரசார வேலையில் ஈடுபடுவதைப் தடுப்பதற்காக எல்லா வழிகளையும் கையாண்டு வந்தனர். [Top]

   
World Socialist Web Site
All rights reserved