Permanent Revolution & Results and Prospects
WSWS : Tamil : Ëôè‹

 

Preface
The Peculiarities of Russian Historical Development
The Towns and Capital
1789---1848---1905
Revolution and the Proletariat
The Proletariat in Power and the Peasantry
The Proletarian Regime
The Prerequisites of Socialism
A Workers’ Government in Russia and Socialism
Europe and Revolution
The Struggle for Power
Further Reading

 

VI. பாட்டாளி வர்க்க ஆட்சி

Use this version to print | Send feedback

ஒரு தேசிய எழுச்சியையும், தேசிய உற்சாகத்தையும் நம்பித்தான் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்ற முடியும். நாட்டினுடைய புரட்சிகர பிரதிநிதியாக, வரம்பிலா அதிகார ஆட்சிக்கும், பிரபுத்துவ காட்டுமிராண்டித்தனத்துக்கும் எதிரான போராட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசத்தின் தலைமை என்னும் வகையில், பாட்டாளி வர்க்கம் அரசாங்கத்தில் நுழையும். ஆனால், அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுவதில், இது ஒரு புதிய சகாப்தத்தை தொடக்கும்; ஒரு புரட்சிகரமான சட்டமியற்றும் சகாப்தமாக, மிகுந்த சாத்தியமான தன்மையுடயை சகாப்தமாக அது இருக்கும். இந்த தொடர்பில் நாட்டின் விருப்பத்தை அங்கீகரிக்கப்பட்ட வெளிப்படுத்துவோராக தனது பங்கை தக்கவைத்துக் கொள்ளுமா என்பது பற்றி அதற்கு உறுதியாகத் தெரியாது. தாராளவாத பேடிகள் மக்கள் திரளிடையே இருக்கக் கூடிய, சில பாரபட்சங்களின் உறுதித் தன்மை பற்றி என்ன கூறினாலும், இந்த சகாப்தம், பழைய ஆட்சியில் இருந்த குப்பை கூளங்கள் நிறைந்த பகுதிகளை அகற்றி, அதன் காப்பாளர்களை விரட்டியடிக்கும் பணியில் நாட்டின் முழுமையான ஆதரவை பெறும்.

இந்த அரசியல் தூய்மைப்படுத்தல், அனைத்து சமூக மற்றும் அரச உறவுகளிலும் ஜனநாயக முறையிலான மறுசீரமைப்புக்களால் நிரப்பப்படும். நேரடியான அழுத்தங்கள், கோரிக்கைகள் இவற்றின் செல்வாக்கினால், தொழிலாளர் அரசாங்கம் அனைத்து உறவுகளிலும், நிகழ்வுகளிலும் ஓர் உறுதியான முறையில் தலையீடு செய்ய கடமைப்பட்டிருக்கும்.

இராணுவம் மற்றும் நிர்வாகத்தில், மக்கள் குருதியினால் கறை படிந்தவர்கள் அனைவரையும் பணியை விட்டு நீக்குதல் அதன் முதல் கடமையாக இருக்கும். மக்களுக்கு எதிரான கடும் குற்றங்களை இழைத்து, பெரும் கறைபட்டுள்ள இராணுவ படைகளை கலைத்து அதில் ஈடுபட்டவர்களையும் பதவி நீக்கம் செய்துவிடும். தேர்ந்தெடுக்கப்பட்ட, பொறுப்புள்ள அதிகாரிகள் முறையை கொண்டு வருவதற்கும், ஒரு தேசிய இராணுவத்தை அமைப்பதற்கும் முன்னதாகவே, புரட்சியின் முதல் நாட்களில் இப்பணி செய்து முடிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த விஷயம் அத்துடன் முடிந்துவிடாது. தொழிலாளர்களின் ஜனநாயகம், உடனடியாக வேலைநாளின் கால அளவு, விவசாயப் பிரச்சினை, வேலையின்மை ஆகிய பிரச்சினைகளையும் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும்.

இதில் ஒன்று மட்டும் தெளிவாகும். கடக்கப்படும் ஒவ்வொரு நாளும், அதிகாரத்தில் இருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் கொள்கையை ஆழ்ந்த தன்மை உடையதாக்கும். மேலும் மேலும் அதன் வர்க்கத் தன்மையை தெளிவுபடுத்தும். இதோடு இணைந்த முறையில், பாட்டாளி வர்க்கத்திற்கும், நாட்டிற்கும் இடையேயுள்ள புரட்சிகர பிணைப்புக்கள் முறிவடைந்து, விவசாயிகளின் வர்க்கச் சிதைவு அரசியல் வடிவத்தை கொள்ளும் என்பதோடன்றி, பாட்டாளி வர்க்கம் தன்னை வரையறுத்துக் கொள்ளும் கொள்கையின் விகிதத்திற்கேற்ப அதில் உள்ளடங்கியுள்ள பல கூறுபாடுகளுக்கு இடையே உள்ள விரோதப் போக்கும் பெருகும்; ஆட்சி, பொது-ஜனநாயகம் என்றில்லாமல், வர்க்கக் கொள்கையாக மாறிவிடும்.

விவசாயிகள், அறிவுஜீவிகள் இவர்களிடையே, திரண்ட பூர்சுவா - தனிநபர் மரபுகள் இல்லாமை, மற்றும் பாட்டாளி வர்க்க எதிர்ப்பு பாரபட்சங்கள் இல்லாமை போன்றவை, பாட்டாளி வர்க்கத்திற்கு அதிகாரத்திற்கு வருவதில் உதவிபுரியும் என்றாலும், மற்றொருபுறம் இந்த பாரபட்சங்கள் இல்லாதது அரசியல் நனவினால் அல்ல மாறாக அரசியல் காட்டுமிராண்டித்தனத்தினால், சமூக வடிவமைப்பற்ற தன்மையினால், பழைமைத்தனம் மற்றும் குணநலன்கள் அற்ற தன்மை ஆகியவற்றினால் ஆகும் என்பது நினைவில் வைக்கப்பட வேண்டும். இந்த சிறப்பியல்புகள் எதுவுமே நிலைத்த, தொடர்ந்த, செழலூக்கமான பாட்டாளி வர்க்க கொள்கைக்கு நம்பிக்கையான அடிப்படையை எந்த வகையிலும் தோற்றுவித்திடாது.

நிலப்பிரபுத்துவமுறை அகற்றப்படுதல், சுமையை இதுகாறும் தாங்கியிருந்த சமூகப்பிரிவு என்ற முறையில் முழு விவசாயப் பிரிவிடம் இருந்தும் ஆதரவைப் பெறும். வருமான உயர்விற்கேற்பக் கூடுதலான வரி என்பது பெரும்பாலான விவசாயிகளால் ஆதரிக்கப்படும். ஆனால், விவசாய தொழிலாளரைப் பாதுகாக்கும் வகையிலான எந்தச் சட்டவாக்கத்திற்கும் விவசாயப் பிரிவின் பெரும்பான்மையோரிடம் இருந்து தீவிரப் பரிவுணர்வு கிடைக்காது என்பதோடு, அவர்களுடைய ஒரு சிறு பிரிவில் இருந்து தீவிர எதிர்ப்பும் கிடைக்கும்.

பாட்டாளி வர்க்கம், வர்க்கப் போராட்டத்தை கிராமங்களுக்குள்ளும் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் தான் தள்ளப்பட்டுள்ளதை உணரும். இவ்விதத்தில் அது அனைத்து விவசாயிகளுக்கு இடையேயும், ஒப்புமையில் குறுகிய வரம்புக்குள்ளாயினும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் காணப்படும் அந்த கூட்டுரிமை அக்கறையை அழிக்கும். தான் அதிகாரத்தை எடுத்துக் கொண்ட அந்தக் கணத்தில் இருந்தே, பாட்டாளி வர்க்கம் கிராமப்புற ஏழைகளுக்கும் கிராமப்புறச் செல்வந்தர்களுக்கும் மற்றும் விவசாயத் தொழிலாளர் வர்க்கத்திற்கும் விவசாய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே உள்ள விரோதங்களில் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்குள் காணப்படும் பல்வேறு கூறுகளுடைய தன்மை ஒரு பாட்டாளி வர்க்க கொள்கைக்கான அடிப்படையை அமைப்பதற்கு இடர்பாடுகளை மற்றும் குறுகிய எண்ணங்களை உருவாக்கும் அதேவேளை, வர்க்கப் பாகுபடுத்தலில் போதுமானதாக இல்லா அளவு, விவசாயிகள் மத்தியில், நகர்ப்புற பாட்டாளி வர்க்கம் நம்பி இருக்கக்கூடிய அபிவிருத்தி அடைந்த வர்க்கப் போராட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு தடைகளை உண்டுபண்ணும். விவசாயிகளின் நாகரிக முதிர்ச்சியற்றதன்மை (பழைமைத்தனம்) பாட்டாளி வர்க்கத்திற்கு தன்னுடைய விரோத நிலையைத்தான் காட்ட முற்படும்.

விவசாயிகள் உஷ்ணம் தணிந்த நிலை, அதன் அரசியல் செயலற்றதன்மை, இன்னும் கூடுதலான வகையில் அதன் உயர்மட்டப் பிரிவினரின் செயலூக்கமான எதிர்ப்பு போன்றவை, நகர்ப்புறத்தில் உள்ள அறிவுஜீவிகளின் ஒரு பிரிவையும், குட்டி பூர்சுவாசியினரையும் செல்வாக்கிற்கு உட்படுத்தாது விடாது.

இவ்வாறு, அதிகாரத்திலுள்ள பாட்டாளி வர்க்கம் இன்னும் கூடுதலான உறுதியுடனும், தீர்மானகரமாகவும் தனது கொள்கையில் நிற்கும்போது, அதனுடைய காலுக்குக்கீழ் உள்ள தளம் இன்னும் குறுகியதாகவும், கூடுதலான ஆட்டம் காணும் தன்மையையும் பெறும். இவை அனைத்தும் அநேகமாக நடந்தேறலாம், தவிர்க்கமுடியாதவை என்று கூடக் கூறலாம்.

பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளிகளிடம் இருந்து எதிர்ப்பை எதிர்கொள்ளும் பாட்டாளி வர்க்க கொள்கையின் இரண்டு பிரதான சிறப்பியல்புகள் கூட்டாண்மையும் மற்றும் சர்வதேசியமுமாகும்.

விவசாயிகளின் குட்டி குட்டிபூர்சுவா தன்மை, மற்றும் பழைமைத்தனம், அதன் குறுகிய வரம்புடைய கிராமப்புற நோக்கு, உலக அரசியல் தொடர்புகளிலும் பிணைப்புக்களிலும் இருந்து அது தனிமைப்பட்ட தன்மை போன்றவை, அதிகாரத்தில் இருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர கொள்கையை உறுதியாக்குவதில் கடினமான இடர்பாடுகளை தோற்றுவிக்கும்.

சமூக ஜனநாயகவாதிகள் இடைக்கால அரசாங்கத்தில் நுழைந்து, புரட்சிகர ஜனநாயக சீர்திருத்த காலத்தில் அதற்கு தலைமை வகித்து, தீவிரத்தன்மையில் அவர்களுக்காக போராடி, அதை நிறைவேற்றும் பொருட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத்தை அவர்கள் நம்புவதும், அதன் பின்னர் ஜனநாயக வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், அவர்கள் முதலாளித்துவக் கட்சிகளுக்கு வழிவிட்டு தாங்கள் எதிர்க்கட்சியினராக சென்றுவிடுவதற்கு ஏற்ப, தாங்கள் எழுப்பியுள்ள மாளிகையில் இருந்து வெளியேறி, இவ்வாறு பாராளுமன்ற முறை அரசியற் காலகட்டத்தை திறந்துவிடுவது சமூக ஜனநாயகவாதிகளின் வேலை என்று கற்பனை செய்வது, தொழிலாளர்கள் அரசாங்கம் என்ற கருத்தையே சமரசத்திற்கு உட்படுத்திவிடும் வழியில் கற்பனை செய்வதாகும். இவ்வாறான பிரச்சினையை அருவமான வடிவத்தில் எழுப்புவதே அர்த்தம் சிறிதும் இல்லாத ஒன்று என்றாலும், 'கொள்கையளவில்' இது அனுமதிக்கத்தக்கது அல்ல என்பதால் அல்லாது, இது முற்றிலும் யதார்த்தமற்றதுடன், இது கற்பனாவாதத்தின் மிகமோசமான வகை மட்டுமல்லாது, ஒருவகையான புரட்சிகர பிலிஸ்தீனிய கற்பனாவாதமாகும்.

இக்காரணத்தினால்:

எமது வேலைத்திட்டத்தை அதிகபட்ச வேலைத்திட்டம், குறைந்தபட்ச வேலைத்திட்டம் என்று பிரிப்பது, பூர்சுவாக்களின் கைகளில் அதிகாரம் இருக்கும்போது, மிகவும் கொள்கையளவிலான முக்கியத்துவத்தை பெறும்.

பூர்சுவாசி அதிகாரத்தில் உள்ளது என்ற உண்மையே, உற்பத்திச்சாதனங்களில் தனிச்சொத்துடைமையுடன் ஒவ்வாத அனைத்துக் கோரிக்கைகளையும் நமது குறைந்தபட்ச வேலைத்திட்டத்திலிருந்து அகற்றிவிடும். ஒரு சோசலிசப் புரட்சியின் உள்ளடக்கத்தை வடிவமைக்கும் அத்தகைய கோரிக்கைகள், ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான முன்னிபந்தனையாகும்.

ஆயினும், சோசலிசப் பெரும்பான்மை உள்ள ஒரு புரட்சிகர அரசாங்கத்தின் கைகளில் அதிகாரம் மாற்றப்பட்டவுடன், உடனடியாக நம்முடைய வேலைத்திட்டத்தை அதிகபட்ச வேலைத்திட்டம், குறைந்தபட்ச வேலைத்திட்டம் என்று பிரித்தல், கொள்கையளவிலும், உடனடி நடைமுறை என்ற முறையிலும் அனைத்து முக்கியத்துவத்தையும் இழந்துவிடும். ஒரு பாட்டாளி வர்க்க அரசாங்கம் எந்த சூழ்நிலையிலும் அத்தகைய வரம்பிற்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாது. உதாரணமாக எட்டு-மணி நேர வேலைநாள் என்ற பிரச்சினையை எடுத்துக் கொள்ளுவோம். அனைவரும் நன்கறிந்துள்ளபடி, இது முதலாளித்துவ உறவுகளுக்கு எவ்விதத்திலும் எதிரானதல்ல. எனவே, இது சமூக ஜனநாயகத்தின் குறைந்தபட்ச வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகிவிடுகிறது. ஆனால் இந்த நடவடிக்கையை ஒரு புரட்சிக் காலத்தில், மிகத்தீவிரமான வர்க்க ஆர்வ உணர்வுகள் இருக்கும் காலத்தில் உண்மையாக அறிமுகப்படுத்துகிறோம் என்றால், அந்த நடவடிக்கை முதலாளித்துவத்திடம் இருந்து கதவடைப்பு, ஆலைமூடல் போன்ற வடிவங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட, உறுதியான எதிர்ப்பை பெறும் என்பதில் கேள்விக்கே இடமில்லை.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தாங்கள் வீதியில் தூக்கியெறியப்பட்டுவிட்ட நிலையை கண்டுகொள்வர். அரசாங்கம் அப்பொழுது என்ன செய்யவேண்டும்? ஒரு முதலாளித்துவ அரசாங்கம், அது எவ்வளவுதான் தீவிரமானதாக இருந்தாலும், விவகாரங்களை அந்தக் கட்டத்தை அடைய அனுமதிக்காது. ஆலைகள் மூடப்படும் நிலையை எதிர்கொண்டால், அது ஆட்சிஅதிகாரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடும். அது பின்வாங்குமாறு நிர்பந்திக்கப்படும், எட்டுமணி நேர வேலை நாள் அறிமுகப்படுத்தப்படாது, வெறுப்பும் சீற்றமும் கொண்ட தொழிலாளர்கள் நசுக்கப்படுவர்.

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்தின் கீழ், எட்டு மணி நேர வேலை நாள் அறிமுகம் முற்றிலும் வேறுவிதமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். தாராளவாதம் செய்வதுபோல் மூலதனத்தினை நம்பியிராது, பாட்டாளி வர்க்கத்தை நம்பியிருக்க விரும்பும் ஒரு அரசாங்கத்திற்கு மற்றும் பூர்சுவா ஜனநாயகத்தின் 'பாரபட்சமற்ற' நடுவர் பாத்திரத்தை ஆற்ற விருப்பத்தைப் பெற்றிராத அரசாங்கத்திற்கு, ஆலைகளை மூடுவது என்பது வேலை நேரத்தை அதிகப்படுத்துவதற்கு ஒரு சாக்குப்போக்காக இருக்காதுதான். தொழிலாளர் அரசாங்கத்தை பொறுத்தவரை ஒரே வழிதான் இருக்கும்: மூடப்பட்ட ஆலைகளை பறித்து எடுத்துக் கொண்டு சமூகவுடைமை அடிப்படையில் அங்கு உற்பத்தி முறையை ஒழுங்கமைப்பதாகும்.

இவ்விதத்திலும் நாம் வாதிடக்கூடும்: தொழிலாளர்களின் அரசாங்கம், தன்னுடைய வேலைத்திட்டத்தின் உண்மைத் தன்மைக்கு ஏற்ப, நாளிற்கு ஒரு எட்டுமணி நேர வேலை ஆணையை வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்ளுவோம். இதற்கு மூலதனம் ஒரு எதிர்ப்பை முன்வைக்குமானால், அது தனியார் சொத்துடைமையை பாதுகாக்கும் ஒரு ஜனநாயக திட்டத்தின் வளங்களால் கடக்கப்பட முடியாது, சமூக ஜனநாயகவாதிகள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாட்டாளி வர்க்கத்திற்கு முறையிடுவர். அத்தகைய தீர்வானது, அரசாங்கத்தின் உறுப்பினர்களை கொண்டிருக்கும் ஒரு குழுவின் நிலைப்பாட்டிலிருந்து மட்டுமே பெறப்படும் ஒரு தீர்வு என்று ஆகுமே ஒழிய, புரட்சியின் வளர்ச்சிக்கோ அல்லது பாட்டாளி வர்க்கத்திற்கோ தீர்வாக இருக்காது. சமூக ஜனநாயகவாதிகளின் ராஜிநாமாவிற்கு பின்னர் வரும் நிலைமை, அவர்கள் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டபோது எத்தகைய தன்மையை கொண்டிருந்ததோ, அதேபோன்ற நிலைதான் மீண்டும் இருக்கும். மூலதனத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பிற்கு முன் ஓடி மறைதல் என்பது அதிகாரத்தில் பங்குபெற முதலில் மறுப்பதை விட பெரிய காட்டிக்கொடுப்பாகும். இத்தகைய முறையில், தன்னுடைய சொந்த பலவீனத்தை வெளிப்படுத்திக்கொண்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதைவிட, தொழிலாள வர்க்க கட்சி உண்மையில் அரசாங்கத்தில் நுழையாமல் இருப்பதே இன்னும் மேலாகும்.

நாம் வேறு ஒர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். வேலையின்மை பிரச்சினையை தீர்ப்பதற்கு, மிகப்பெரும் ஆற்றல் உள்ள நடவடிக்கைகளைத்தான், அதிகாரத்தில் இருக்கும் பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ளும். ஏனெனில், அரசாங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள், வேலையின்றி இருக்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு புரட்சியின் பூர்சுவா தன்மை பற்றிய விவாதங்களால் விடைகூற முடியாது என்பது மிகவும் தெளிவான ஒன்றாகும்.

ஆனால் வேலையற்றோருக்கு தக்க பாதுகாப்பு தருவதாக அரசாங்கம் உறுதிமொழி கொடுத்தால் --எந்த வடிவத்தில் என்பது இப்பொழுது நமக்கு முக்கியமல்ல-- அது உடனடியாக மிகக் கணிசமான வகையில் பொருளாதார சக்தியை பாட்டாளி வர்க்கத்திற்கு மாற்றிவிட்டதைப் போல் அமையும். ஏராளமான மேலதிக தொழிலாளர்களை நம்பி தொழிலாளர்களை நசுக்கும் முதலாளிகள் பொருளாதார முறையில் தாங்கள் சக்தி இழப்பதை உணர்வர். அதே நேரத்தில் புரட்சிகர அரசாங்கம் அவர்களை அரசியலில் செயலற்ற தன்மையில் ஆழ்த்திவிடும்.

வேலையற்றோரை பாதுகாப்பதாக உறுதிமொழி கொடுக்கப்படும்போது, அதன் மூலம் அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்பவர்களை பேணுவதற்கும் ஆதரவு கொடுக்கும் உறுதிமொழியையும் கொடுக்கிறது என்று பொருளாகும். அவ்வாறு அது செய்யாவிடின், உடனடியாகவும், மறுபடியும் மீட்டுப்பெற முடியாமலும் அதன் சொந்த இருப்பிற்கான அடிப்படையையே கீழறுத்துவிடும்.

முதலாளிகளுக்கு கதவடைப்பு செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது. அதாவது ஆலைகளை மூடுவதை தவிர வேறு ஏதும் அவர்கள் செய்வதற்கில்லை. கூடுதலான காலத்திற்கு உற்பத்தி நிறுத்தப்பட்டால், வேலைக்கு அமர்த்துபவர் தொழிலாளர்களைவிட சிறிது நிலைத்து நிற்பர் என்பது தெளிவு. எனவே, ஒரு பொது கதவடைப்பிற்கு தொழிலாளர் அரசாங்கம் கொடுக்கக் கூடிய ஒரே விடை: அது, ஆலைகளை கைகளில் எடுத்துக் கொண்டு, குறைந்த பட்சம் அவற்றில் பெரியவற்றில் அரச அல்லது பொது உற்பத்தி முறையை அறிமுகப்படுத்துவதே ஆகும்.

இதேபோன்ற பிரச்சினைகள் விவசாயத்திலும், நிலம் பறிமுதல் என்ற நிலைமையினால் ஏற்படும். ஒரு பாட்டாளி வர்க்க அரசாங்கம், தனியாருக்கு சொந்தமாக இருந்த பெருமளவு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பண்ணைகளை பறிமுதல் செய்த பின்னர், அவற்றை சிறுதுண்டுகளாக ஆக்கி, சிறு உற்பத்தியாளர்கள் சுரண்டுவதற்கு விற்றுவிடும் என்று கருதிவிடக் கூடாது. இந்தத் துறையில் அவர்களுக்கு உள்ள ஒரே வழி, பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு உற்பத்தியை ஒழுங்கமைத்தல் அல்லது அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் அதைக் கொண்டு வருதல் என்பதுதான். ஆனால், இதுதான் சோசலிசத்திற்கான பாதையாகும்.

சமூக ஜனநாயகவாதிகள் ஒரு புரட்சிகர அரசாங்கத்தில் நுழைய முடியாது என்பதை இவை அனைத்தும் தெளிவாகக் காட்டுகின்றன. ஒரு மிகக் குறைந்தபட்ச வேலைத்திட்டத்தில் எதையும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை தொழிலாளர்களுக்கு முதலில் கூறிவிட்டு, அதேநேரத்தில் முதலாளித்துவத்திற்கு அப்பால் செல்லமாட்டோம் என்று கூற இயலாது. அத்தகைய வகையில் இருதரப்பையும் பொறுப்பெடுப்பது முற்றிலும் நிறைவேற்ற இயலாததாகும். அதிகாரமற்ற பிணைக் கைதிகள் போல் இல்லாமல், வழிநடத்தும் சக்தியாக பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் அரசாங்கத்தில் நுழைவது என்பது மிகக் குறைந்தபட்ச வேலைத்திட்டம், மிக அதிகபட்ச வேலைத்திட்டம் என்பவற்றிற்கிடையே உள்ள எல்லைக் கோட்டை அழித்துவிடும்; அதாவது, கூட்டுவேலை முறையைத்தான் அன்றாட நடவடிக்கையாக்கிவிடும். பாட்டாளி வர்க்கம் இந்த திசையில் அதன் முன்னேற்றத்தில் எப்பொழுது தடை செய்யப்படும் என்பது சக்திகளின் உறவுகளில் தங்கியுள்ளதே தவிர பாட்டாளி வர்க்க கட்சியின் ஆரம்ப நோக்கங்களில் அல்ல.

இக்காரணத்தை ஒட்டித்தான், பூர்சுவா புரட்சியில் ஏதோ ஒரு சிறப்பான வடிவிலான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி அல்லது பாட்டாளி வர்க்க ஜனநாயக சர்வாதிகாரம் (அல்லது பாட்டாளிகளதும் விவசாயிகளதும் சர்வாதிகாரம்) என்பது பற்றிய பேச்சே இருக்க முடியாது. தொழிலாள வர்க்கம் அதனுடைய சர்வாதிகாரத்தின் ஜனநாயகக் கூறுபாடுகளை, அதனுடைய ஜனநாயக வேலைத்திட்டத்தின் வரம்புகளை மீறுவதை கைவிடாமல் காத்துக்கொள்ள முடியாது. இந்த நிலைப்பாட்டில் ஏதேனும் பிரமைகள் இருந்தால் அவை மரண ஆபத்தை உடையதாக இருக்கும். அது சமூக ஜனநாயகத்தை மிக ஆரம்பத்தில் இருந்தே சமரசத்திற்கு உட்படுத்திவிடும்.

பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை ஒருமுறை எடுத்துக் கொண்ட பின்னர், இறுதிவரை அதை தக்கவைத்துக் கொள்ளுவதற்காக போராடும். இந்த தக்கவைத்துக் கொள்வதற்கான மற்றும் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான போராட்டத்தின் ஆயுதங்களில் ஒன்று, குறிப்பாக நாட்டுப்புறத்தில் கிளர்ச்சி மற்றும் அமைப்புக்களை ஒழுங்கமைப்பதாக இருக்கும். மற்றொன்று கூட்டாண்மைக் கொள்கையாகும். கூட்டாண்மையானது அதிகாரத்தில் இருக்கும் கட்சி தன்னையே கண்டுகொள்ளும் அதன் நிலைப்பாட்டிலிருந்து முன்னேறுவதற்கான தவிர்க்கமுடியாத வழியாக மட்டுமல்லாது, பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவுடன் இந்நிலைப்பாட்டை தக்கவைத்து கொள்ளுவதற்கான வழிமுறைகளாக இருக்கும்.

இடையறா புரட்சி என்ற கருத்து சோசலிச செய்தித் தாள்களில் இயற்றப்பட்ட பொழுது, அக்கருத்தை வரம்பிலா அதிகார ஆட்சி மற்றும் நிலப்பிரபுத்துவ முறையை சோசலிசப் புரட்சியின் மூலம் தகர்த்துவிடுதல் என்பதோடு தொடர்புபடுத்தி, பெருகிவரும் சமூக மோதல்கள், மக்கள் திரட்டின் புதிய பிரிவுகளின் எழுச்சிகள், ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதரா சலுகைகள்மீது பாட்டாளி வர்க்கத்தால் நடத்தப்படும் முடிவுறா தாக்குதல்கள் இவற்றோடும் தொடர்புபடுத்தி, நம்முடைய ''முற்போக்கு'' செய்தித்தாள் ஒரே உரத்த குரலில் இகழ்ச்சியை வெளிப்படுத்தியது. ''ஓ! நாம் பலவற்றை பொறுத்துக் கொண்டோம்; இதை அனுமதியோம்." புரட்சி என்பது ''சட்டபூர்வமாக ஆக்கப்படும் ஒரு பாதை ஆகாது'' என்று கூக்குரலிட்டது. ''அசாதாரண நடவடிக்கைகளை செயல்படுத்துதல் என்பது அசாதாரண சூழ்நிலைகளில்தான் அனுமதிக்கப்படமுடியும். தளைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற இயக்கத்தின் நோக்கம் புரட்சியை நிரந்தரமாக்குவதாக இருக்கக் கூடாது, மாறாக எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு ஒழுங்கிற்குள் இட்டுச்செல்வதாகும், இத்தியாதி, இத்தியாதி'' என்று அது புலம்பியது.

இந்த ஜனநாயகத்தின் அதிதீவிரமான பிரதிநிதிகள், ஏற்கனவே பாதுகாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு ரீதியான 'நலன்கள்' என்ற கண்ணோட்டத்தில் இருந்துகூட புரட்சிக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் அபாயத்தை விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்தவரை பாராளுமன்ற வாதத்திற்கு முன்னரே வந்த இந்த பாராளுமன்ற குறைவளர்ச்சியானது, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு எதிரான ஒரு வலுவான ஆயுதத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுக்கின்றனர். அவர்கள் சட்டத்தின் அடிப்படையில் என்றில்லாமல், உண்மைகளின் அடிப்படை என்று அவர்களுக்கு தோன்றுகின்றதன் மீதாக --வரலாற்றில் "சாத்தியத்தன்மையின்" அடிப்படையில், அரசியல் "யதார்த்தத்தின்" அடிப்படையில்..... இறுதியாக 'மார்க்சிசம்' என்ற அடிப்படையில் நிலைப்பாட்டை கொள்ளுகின்றனர். ஏன் அப்படியிருக்ககூடாது? அந்த வெனீஸ் நாட்டுப் பக்தி நிறைந்த பூர்சுவாசியான ஆன்டோனியா, மிகப் பொருத்தமாகவே கூறியுள்ளார்:

"சாத்தான் தன்னுடைய நோக்கத்திற்கேற்ப வேதத்தில் இருந்து மேற்கோள் காட்டலாம்."

இந்த தீவிர ஜனநாயகவாதிகள், ரஷ்யாவில் தொழிலாளர் அரசாங்கம் என்பதை மிக விசித்திரமானது என்று கருதுவது மட்டும் அன்றி, ஆனால் வரவிருக்கும் வரலாற்று சகாப்தத்தில் ஐரோப்பாவில் ஒரு சோசலிசப் புரட்சி வரக்கூடும் என்ற சாத்தியத்தையும் கூட மறுத்துள்ளனர். 'புரட்சி ஏற்படுவதற்கான முன்நிபந்தனைகள் இன்னும் காணப்படவில்லை' என்று அவர்கள் கூறுகிறார்கள். அது உண்மையா? நிச்சயமாக இது சோசலிசப் புரட்சிக்கு ஒரு தேதி குறிப்பிடுவது பற்றியதல்ல, மாறாக அதன் உண்மையான வரலாற்று வருங்கால வாய்ப்புக்களை சுட்டிக்காட்ட வேண்டியது இன்றியமையாததாகும்.