முன்னோக்கு

பிரிட்டனின் ஆபத்தான புதிய COVID-19 வைரஸ் திரிபு: இப்போதே அவசரமாக செயல்பட ஒரு எச்சரிக்கை!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகம் முழுவதும் ஏற்கனவே 1.7 மில்லியன் மக்கள் இறந்து, மருத்துவமனைகள் நிரம்பி விட்ட நிலையில், பிரிட்டனில் தோன்றியுள்ள ஒரு புதியதும், மிகவும் தொற்றுநோய் ஏற்படுத்தும் திரிபுடையதுமான COVID-19 பற்றிய அபாய ஒலி எச்சரிக்கைகளை விஞ்ஞானிகள் எழுப்புகின்றனர், அங்கு தொற்றுகள் ஒரு வேகமான அதிகரிப்பிற்கு வழிவகுத்திருக்கிறது.

COVID-19 இன் புதிய திரிபு, இந்த மாதத்தில் இங்கிலாந்தில் புதிய தினசரி COVID-19 தொற்றுக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. நாட்டில் ஞாயிற்றுக்கிழமை 35,000 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளன, இது மிக உயர்ந்த மட்டமாகும், இது இரண்டு வாரங்களுக்கு முன்பு சராசரியாக 15,000 ஆக இது இருந்தது.

இந்த புதிய திரிபின் பாரிய பரவல், ஜோன்சன் அரசாங்கத்தின் தொற்றுநோய் தொடர்பான பொறுப்பற்ற மற்றும் குற்றவியல் விடையிறுப்பு பற்றிய மற்றொரு குற்றமாக இருக்கிறது. இந்த வைரஸினை ஒழிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கைவிட்டதன் மூலம், அரசாங்கம் மக்களை மிகவும் பாதிப்பிற்குள்ளாகும்படி விட்டுவிட்டு, ஒரு பயங்கரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது, இதனுடைய விளைவுகள் இன்னும் அறியப்படவில்லை.

டிசம்பர் 15, 2020 செவ்வாய்க்கிழமையன்று, லண்டனில், வெஸ்ட்மின்ஸ்டர் நிலத்தடி நிலையத்தை கடக்கும்போது, ஒரு நபர் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க முக்ககவசத்தை அணிந்துள்ளார் (AP Photo/Alberto Pezzali)

புதிய திரிபு, தற்போது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரவி வரும் மாறுபாடுகளை விட 70 சதவீதம் அதிக வீரியமுள்ள தொற்றுநோயாகத் தோன்றுகிறது.

இந்த நோயின் புதிய மாறுபாடு முதன்முதலில் செப்டம்பரில் கண்டறியப்பட்டாலும், நவம்பர் மாதத்திற்குள் இலண்டனில் கால்வாசி புதிய நோயாளிகள், இந்த நோய்க்கு காரணமாக இருந்தனர். டிசம்பர் நடுப்பகுதியில், இது அனைத்து புதிய நோயாளிகளில் முக்கால்வாசி நிலையை அடைந்தது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, புதிய மாறுபாடு, பிரிட்டனின் அனைத்து பகுதிகளுக்கும் மட்டுமல்ல, நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் பரவியுள்ளது. "புதிய மாறுபாடு கட்டுப்பாட்டில் இல்லை" என்று பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக்கும் கூறியுள்ளார்.

வெல்கம் சாங்கர் இன்ஸ்டிடியூட்டில் (Wellcome Sanger Institute) COVID-19 ஜீனோமிக்ஸ் இனிசியேட்டிவ் (Genomics Initiative) இயக்குனர் ஜெஃப்ரி பாரெட், பைனான்சியல் டைம்ஸிடம் "இந்த புதிய மாறுபாடு, மிகவும் கவலையளிப்பதும் நாம் இதுவரை கண்ட எதையும் போலில்லாமல் உள்ளது.

சனிக்கிழமையன்று, அரசாங்கத்தின் அவசரநிலைகளுக்கான விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் (SAGE) உறுப்பினரான ஜோன் எட்மண்ட்ஸ், புதிய திரிபு தோன்றியுள்ளமை "என்னைப் பொறுத்தவரை முழு தொற்றுநோய்களின் மோசமான தருணம்" என்று விவரித்தார். "புதிய திரிபின் அசாதாரண தொற்று" பற்றி அவர் எச்சரித்தார்.

எட்மண்ட்ஸ் வலியுறுத்தினார், "இந்த நிகழ்வுகளை குறைக்க எங்களுக்கு மிகவும் கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படும். இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், நாங்கள் ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் மற்றும் [தேசிய சுகாதார சேவை] ஊழியர்களுடன் அழுத்தத்தில் இருக்கிறோம். இது மிகவும் நிலைமையாக இருக்கிறது".

ஞாயிற்றுக்கிழமை, ஆஸ்திரியா, பெல்ஜியம், இத்தாலி, அயர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள நாடுகள், இனி பிரிட்டனில் இருந்து பயணிகளை அனுமதிக்கப்போவதில்லை என்று அறிவித்தன. ஜோன்சன் சனிக்கிழமையன்று இலண்டனின் 32 பெருநகரங்களில் சுமார் 9 மில்லியன் பேர் உட்பட, தென்கிழக்கு இங்கிலாந்தின் பெரும்பகுதியிலும் 16.4 மில்லியன் மக்களை பாதிக்கும் ஒரு புதிய அளவிலான கட்டுப்பாடுகளை "கட்டம் 4" ஐ அறிமுகப்படுத்தினார்.

COVID-19 இன் புதிய மாறுபாடு, வைரஸின் கட்டமைப்பில் பிறழ்வுகளை உள்ளடக்கியுள்ளது. வைரஸின் மரபணுக் குறியீட்டின் 23 எழுத்துக்கள் மாறிவிட்டன என்று பாரெட் குறிப்பிட்டார், இதில் 17 எழுத்துக்கள் வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் பரவுகிறது என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த ஆண்டு இதுவரை COVID-19 வைரஸ் மூன்று பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது என்று விஞ்ஞானி லாரூ காரெட் குறிப்பிட்டார். “இது ஏன் நடக்கிறது? உலகில் இப்போது நிறைய வைரஸ் இருப்பதால், அவை வேகமாக பரவுகின்றன, இதனால் சீரற்ற பிறழ்வுகளின் சாத்தியத்தை [அதிகரிக்கிறது]. அமெரிக்காவில் புதிய பிறழ்வு உள்ளதா? யாருக்குத் தெரியும்?"

COVID-19 இன் இந்த கொடிய புதிய திரிபு தோன்றியிருப்பது, தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில் ஜோன்சன் அரசாங்கத்தின் குற்றவியல் பொறுப்பற்ற தன்மையையும் அதன் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மார்ச் மாதம், அரசாங்கத்தின் தலைமை விஞ்ஞான ஆலோசகரான சர் பாட்ரிக் வலன்ஸ், ஜோன்சனுடன் சேர்ந்து நின்று, "அனைவரும் அதைப் பெறுவதைத் தடுக்க முடியாது, அது விரும்பத்தக்கதல்ல" என்று அறிவித்தார். மார்ச் 5 அன்று, ஜோன்சன், தொற்று நோய் பற்றிய தனது அரசாங்கத்தின் பதிலை கோடிட்டுக் கூறினார், "ஒருவேளை நீங்கள் அதை ஒரு முக கன்னம் வழியாக பெற்றுக் கொள்ளலாம், அனைத்தையும் ஒரே முறையில் பெற்றுக் கொள்ளலாம், மேலும் பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல், மக்கள்தொகை மூலம் செல்ல அனுமதிக்கலாம்."

முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின், மார்ச் மாதத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் "மக்களை இறக்க அனுமதிப்பதன் மூலம் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கத்தை வலுப்படுத்துவதே" அதன் நோக்கம் என்று அவருக்கு அறிவித்ததாக ஆகஸ்டில் விளக்கினார், இது "யூஜெனிக் சூத்திரங்கள்" என்று அழைக்கப்பட்ட கொள்கையால் நியாயப்படுத்தப்பட்டது. கோர்பின் ஆறு மாதங்களாக அரசாங்கத்தின் கொலைகார நோக்கங்கள் குறித்து மௌனமாக இருந்துள்ளார்.

இந்தக் கொள்கையின் விளைவாக ஒரு பேரழிவு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 70,000 பேர் இறந்துள்ளனர். இந்த நாடு தனிநபர் இறப்பு விகிதத்தை அமெரிக்காவை விட அதிகமாகவும், ஒட்டுமொத்த ஐரோப்பாவை விட 50 சதவீதம் அதிகமாகவும் உள்ளது. இப்போது, தொற்றுநோய் முதன்முதலில் தோன்றி கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்தநிலையில், இது அரசாங்கத்தின் வார்த்தைகளில், நோயின் புதிய திரிபின் வடிவத்தில் “கட்டுப்பாட்டை மீறி” பரவி வருகிறது.

பல வாரங்களாக, ஜோன்சன் அரசாங்கம் COVID-19 தடுப்பூசிகளின் வெளியீட்டைப் பயன்படுத்த முயன்றது -இது சில மாதங்களுக்குள் பொது மக்களுக்கு கிடைக்கும்- நோயைக் கட்டுப்படுத்த எந்தவொரு தீவிர நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கு தொடர்ந்து அதிகரித்து வரும் இறப்பு விகிதத்தை தடுப்பூசி அறிமுகத்தினை இடைவிடாது வெளியிடுவதன் மூலம் மூழ்கடிக்க முயன்ற ஊடகங்கள் சேர்ந்து விளையாடுவதில் மகிழ்ச்சியாக இருந்தன.

ஜோன்சன் சனிக்கிழமையன்று, "மூன்று நாட்களுக்கு முன்பு நான் உங்களுடன் கடைசியாக பேசியதிலிருந்து நிலைமை மோசமடைந்தது" என்று கூறினார் - அந்த நாளில் 24 மணி நேரமும் கடைகளைத் திறப்பதற்கான திட்டங்களிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்றும் கிறிஸ்துமஸில் ஐந்து நாட்களில் மூன்று குடும்பங்களின் "குமிழிகள்" சந்திக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்தார். "இந்த வார தொடக்கத்தில்" புதிய திரிபு குறித்து அரசாங்கம் முதலில் அறிந்து கொண்டிருந்தது.

இவை அப்பட்டமான பொய்கள்.

அதன் கொடிய திட்டங்களை கைவிடவேண்டும் என்ற விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைத் தடுக்க அரசாங்கம் கடந்த வாரத்தை செலவிட்டுள்ளது. புதிய தொற்றுநோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, உத்தியோகபூர்வமாக பள்ளிக்காலம் முடிவடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த பல இலண்டன் உள்ளூர் அதிகாரிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அது அச்சுறுத்தியுள்ளது. மேலும், உலக சுகாதார அமைப்பின் COVID-19 தொழில்நுட்ப அதிகாரி மரியா வான் கெர்கோவ் ஞாயிறன்று BBC யிடம் கூறுகையில், “செப்டம்பர் முதல் தென்கிழக்கு இங்கிலாந்தில்” பரவும் புதிய வைரஸ் பாதிப்பு குறித்து இங்கிலாந்து அறிந்திருப்பதாக தெரிவித்தார்.

பிறழ்வின் தோற்றம் குறித்து உறுதியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், டோரி அரசாங்கத்தின் முன்கூட்டிய மற்றும் குற்றவியல் செயலற்ற தன்மை அதைத் தடையின்றி பரப்ப அனுமதித்தது. பள்ளிகளை மீண்டும் திறக்குமாறு அரசாங்கம் வலியுறுத்திய அதே சமயத்தில் ஒரு மாதத்திற்குப் பின்னர் மாணவர்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த கொள்கைகளை அரசாங்கம் அனுமதித்தது, ஏனெனில் அரசாங்கம் முக்கிய கிறிஸ்துமஸ் செலவுகளில் பெருநிறுவனங்களின் இலாபங்களை உறுதி செய்ய விரும்பியது மற்றும் வைரஸை தோற்கடிப்பது ஒரு நேரத்திற்கான விடயம் மட்டும் தான் என்ற விவரிப்பிற்கு சவால் விட அவர்கள் விரும்பவில்லை.

பாதுகாப்பிற்கும் மனித உயிர்களுக்கும் மேலாக இலாபங்களை வைப்பது, வைரஸின் தொற்றுநோய்க்கு வழிவகுத்து, இந்த வாரங்களில் இது உலகம் முழுவதும் பரப்புவதற்கும் வழிவகுத்துள்ளது.

ஜோன்சன் அரசாங்கத்தின் கொலைகார நடவடிக்கைகள் ஒவ்வொரு நாட்டிலும் அதன் சகாக்களால் எதிரொலிக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் 320,000 பேர்கள் இறந்துள்ளனர். பிரான்சில் 60,418 பேர்கள் இறந்துள்ளனர், ஜேர்மனியில் 26,414 பேர்கள் இறந்துள்ளனர். அது ட்ரம்ப் அல்லது பைடென், மேர்க்கெல் அல்லது மக்ரோன் என யாராக இருந்தாலும், ஆளும் வர்க்கத்தின் இந்த பிரதிநிதிகள் சொல்லும் ஒரு வார்த்தையைக் கூட யாராலும் நம்ப முடியாது. ஆரம்பத்தில் இருந்தே அவர்களுடைய முழு விடையிறுக்கும் தன்மை பெருநிறுவனங்களின் நலன்களாலும் ஒரு பெரும் செல்வந்த தன்னலக் குழுவினாலும் தான் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அரசியல் நிறம் எதுவாக இருந்தாலும், கொள்கை ஒன்றுதான்: இலாபங்கள் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன, மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உயிர்கள் வேட்டையாடப்படுகின்றன.

உலகளவில் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் உயிர்கள் ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இழக்க நேரமில்லை! வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவர அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

பிரித்தானியாவிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சி (SEP), உலகெங்கிலுமுள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) சகோதரக் கட்சிகளுடன் இணைந்து, அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களையும் பள்ளிகளையும் உடனடியாக மூடக் கோருகிறது. இந்த நடவடிக்கை, இழந்த ஊதியங்கள் மற்றும் சிறு வணிகங்களின் வருமானத்திற்கான முழு இழப்பீட்டையும் கொண்டிருக்க வேண்டும்.

COVID-19 க்கு சிகிச்சையளிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும், எதிர்காலத்தில் தொற்று நோய் அச்சுறுத்தலிலிருந்து சமூகம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் சுகாதார உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

உயிர்களைப் பாதுகாக்க தேவையான இந்த அவசர நடவடிக்கைகளுக்கு பணம் இல்லை என்ற கூற்று பொய்யாகும். மக்கள்தொகையின் மிக முக்கியமான பொது சுகாதாரத் தேவைகளுக்குத் தேவையான சமூக வளங்கள் ஒரு நிதிய உயரடுக்கால் ஏகபோகப்படுத்தப்படுகின்றன, அவற்றின் நலன்கள் சமூகத்தின் தேவைகளை முற்றிலும் எதிர்க்கின்றன.

தங்களுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டியது தொழிலாளர்கள் தான்! இந்த திட்டத்திற்காக போராட விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இன்று எங்களை தொடர்பு கொள்ளுமாறு சோசலிச சமத்துவ கட்சி (SEP) கேட்டுக்கொள்கிறது.

Loading