இந்திய விவசாயிகளின் கிளர்ச்சியும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச மூலோபாயமும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

டெல்லியின் புறநகரில் இலட்சக்கணக்கான விவசாயிகள் 3 வாரங்களுக்கும் மேலாக மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டம், நரேந்திர மோடி மற்றும் அவரது தீவிர வலதுசாரி பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசாங்கத்தின் மீதான இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் வெகுஜன எதிர்ப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

தொழிலாளர்களின் உரிமைகள் மீதான கடுமையான தாக்குதலுடன் இணைந்து, செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தின் ஊடாக விரைந்து அமுல்படுத்தப்பட்ட மோடி அரசாங்கத்தின் வணிக-சார்பு வேளாண் சட்டங்கள், மில்லியன் கணக்கான சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச வேளாண் வணிகத்தின் தயவில் வாழ வைக்கும்.

தனது வேளாண் "சீர்திருத்தத்தின்" ஜனநாயக விரோத தன்மையைக் கருத்தில் கொண்டு பா.ஜ.க. அரசாங்கம் விவசாயிகளின் டெல்லி சலோ (டெல்லிக்கு போவோம்) போராட்டத்துக்கு மிகப்பெரும் அடக்குமுறையுடன் பதிலளித்தது. பெருமளவிலான கைதுகள், கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கியை பயன்படுத்திய மாநில பாதுகாப்பு படையின் இரும்புக் கரங்களை மீறி, பல பத்தாயிரக் கணக்கான விவசாயிகள், நவம்பர் 26-27 அன்று தேசிய தலைநகர் பிராந்தியத்தின் எல்லைகளுக்குச் சென்றனர், டெல்லிக்கு செல்லும் பிரதான வழிகளில் அவர்கள் முகாமிட்டுக்கொண்டதற்குப் பின்னர் மோடியும் அவரது தலைமைக் கையாளான உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், ஆர்ப்பாட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டார்கள்.

இந்த பேச்சுவார்த்தைகள் ஒரு அரசாங்கத்தின் சூழ்ச்சியாகும். மோடி மற்றும் ஷா இருவரும் அதிக செல்வமுள்ள விவசாயிகளுக்கும், விளிம்பு நிலை விவசாயிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை கிளறிவிட்டு, மேலும் அரசு வன்முறைகளுக்கான தயாரிப்புகளுக்கு அரசியல் மூடுதிரையை உருவாக்கிக்கொள்ள முடியுமா என்பதை ஆராய்வதை அது நோக்கமாகக் கொண்டதாகும்.

மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்ய மாட்டோம் என்று மோடியும் பா.ஜ.க. அரசாங்கமும் பிடிவாதமாக உள்ளனர். இதில் அவர்களுக்கு பெருவணிகத்தின் முழு ஆதரவும் உண்டு. இந்தியாவின் பெருவணிக உயரடுக்கானது, விவசாயிகளின் இழப்பில் இந்திய விவசாயத்தை மறுசீரமைக்க நீண்ட காலமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கம் பின்வாங்கினால், அது, கடந்த மூன்று தசாப்தங்களாக மோடியும், ஒவ்வொரு அரசாங்கமும் நடைமுறைப்படுத்திய முதலீட்டாளர் சார்பு கொள்கைகளுக்கு எதிரான பரந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஊக்குவித்துவிடும் என்பதே இந்தியாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் மிகப் பெரிய கவலையும் அச்சமுமாக இருக்கிறது. "இதில், அரசாங்கம் பின்வாங்குமாயின் இந்தியாவில் எந்தவொரு சீர்திருத்த முயற்சியும் சில அக்கறைகொண்ட குழுக்களின் எதிர்ப்பால் சீர்குலைக்கப்படலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கும்" என்று டைம்ஸ் ஆப் இந்தியா கடந்த வாரம் கூச்சலிட்டது.

டொயோட்டா தொழிலாளர்களும் கர்நாடக விவசாயிகளும் இணைந்து பெங்களூருவில் ஊர்வலம் நடத்துகின்றனர் [Credit: WSWS]

இந்த நெருக்கடியில் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான சக்தியாக தலையிட வேண்டியது இன்றியமையாததாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி, இந்தியத் தொழிலாளர்கள் தங்கள் தொழில்துறை மற்றும் சுயாதீனமான அரசியல் சக்தியை பலப்படுத்திக்கொண்டு, மோடி அரசாங்கத்தையும் முதலாளித்துவ ஆட்சியையும் எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், கிராமப்புற மக்களை, எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற விவசாயிகளை தங்களின் தலைமையின் கீழ் அணிதிரட்ட வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றது.

மோடி அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும். முஸ்லிம் விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், ஜனவரி 8 மற்றும் நவர்பர் 26 இல் மில்லியன் கணக்கானவர்கள் கலந்து கொண்ட அகில இந்திய எதிர்ப்பு வேலைநிறுத்தங்கள் மற்றும் (உற்பத்தி) வேக அதிகரிப்பு, ஊதிய வெட்டுக்கள் மற்றும் கோவிட் -19 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான தற்போதைய வேலைநிறுத்த மற்றும் போராட்ட அலைகள் உட்பட கடந்த ஆண்டு நடைபெற்ற சமூகப் போராட்டங்கள் அனைத்தும் எடுத்துக்காட்டுவது ஒரு தொழிலாள வர்க்க தலைமையிலான எதிர்த்தாக்குதலுக்கான பிரமாண்டமான சாத்தியத்தை தான்.

மோடி அரசாங்கம் விவசாயிகளை தனிமைப்படுத்த, சோர்வடையச் செய்ய மற்றும் பிளவுபடுத்தவும் திட்டமிடும் அதே சமயம் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கும் எடுத்து வரும் தயாரிப்புகளில் அது வெற்றிபெற அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளின் கிளர்ச்சியில் "தேச விரோத" சக்திகள் (அது சீனா, பாகிஸ்தான், நக்சலைட்டுகள் அல்லது காலிஸ்தானியர்கள்) ஊடுருவி இருப்பதாக சித்தரிக்க அரசாங்கம் மேற்கொண்ட தோல்விகண்ட முயற்சிகளும் மற்றும் விவசாயிகளின் கிளர்ச்சி சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் முக்கிய பேச்சுவார்த்தைகளில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இருப்பதும், வன்முறையான நடவடிக்கை மூலம் ஒடுக்குமுறைக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதை கோடிட்டுக் காட்டுகின்றன.

இந்திய ஆளும் வர்க்கமும் கோவிட்-19 தொற்றுநோயும்

மோடி அரசாங்கமும் இந்திய ஆளும் வர்க்கமும் ஒரு சமூக பேரழிவிற்கு தலைமை தாங்குகின்றன. கோவிட்-19 தொற்றுநோய்க்கான அவர்களின் அழிவுகரமான பதிலிறுப்புக்கும் மற்றும் தொற்றுநோய்க்கு முன்னரே வெடித்து அதனால் பெருமளவில் ஆழமாக்கப்பட்ட உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு உள்ளேயான நெருக்கடிக்கும், தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற மக்களையும் விலைகொடுக்க வைப்பதை நோக்கமாகக் கொண்ட வேளாண் சட்டங்கள், மிகவும் பரந்த வர்க்க-போர் தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

முதலாவதாக, மோடி அரசாங்கம், வைரஸின் பரவலை வெளிப்படையாகவே தடுக்கத் தவறிய, முன்னறிவிப்பு அல்லது திட்டமிடல் இல்லாத ஒரு பொதுமுடக்கத்தை அமுல்படுத்தியது. பின்னர், ஒரே இரவில் ஒட்டுமொத்த வருமானத்தையும் இழந்த கோடிக்கணக்கானவர்களுக்கு சமூக ஆதரவை வழங்கத் தவறியதால் உருவாக்கப்பட்ட துயரத்தை சுரண்டிக்கொள்ள முயன்ற அது, மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கு ஈவிரக்கமின்றி அழுத்தம் கொடுத்தது. அதனால் பெரும் திரளானவர்கள் இறந்தனர்.

என்றும் கண்டிராத கடுமையான பொருளாதார சுருங்கலில் இருந்து இந்தியாவின் பொருளாதா இரத்துக்கு புத்துயிரூட்டுவதன் பெயரில், பா.ஜ.க. அரசாங்கம் "முதலீட்டாளர் சார்பு" சீர்திருத்தங்களை அமுல்படுத்துகிறது. இது ஒரு அதிவேகப் பாய்ச்சல் என்று மோடி அறிவித்தார். நிலக்கரி தொழிற்துறை, ரயில் வலையமைப்பு மற்றும் வங்கித் துறை உட்பட பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல்; பெருநிறுவன -சார்பு வேளாண் சட்டங்களை நிறைவேற்றுதல்; மற்றும் நிலையற்ற ஒப்பந்த தொழிலாளர் வேலைவாய்ப்பை மேலும் விரிவுபடுத்துவது, தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யவும் விரும்பியவாறு ஆலைகளை மூடுவதற்கும் பெரும் முதலாளிகளுக்கு அதிகாரமளித்தல், மற்றும் பெரும்பாலான தொழிற்சங்க நடவடிக்கைகளை சட்டவிரோதமாக்குகின்றவகையில் தொழிலாளர் சட்டத்தை "சீர்திருத்துதல்" போன்ற திட்டங்களையும் அது அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் மூலோபாய தாக்குதலில் இந்தியாவை மேலும் முழுமையாக ஒருங்கிணைத்துள்ள மோடி அரசாங்கம், அமெரிக்கா மற்றும் அதன் பிரதான ஆசிய-பசிபிக் பங்காளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இராணுவ-பாதுகாப்பு உறவுகளை வியத்தகு முறையில் விரிவுபடுத்துகிறது. இந்திய உயரடுக்கு, வெடிக்கும் நிலையில் உள்ள அமெரிக்க-சீன மோதலை, தனது வல்லரசாகும் அபிலாஷைகளை முன்நகர்த்துவதற்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது மட்டுமன்றி, சீனாவுக்கு எதிரான ஒரு மாற்று உற்பத்தி சங்கிலி மையமாக இந்தியாவை மாற்றுவதிலும் வாஷிங்டன் மற்றும் டோக்கியோவின் ஆதரவைப் பெறும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

1991 முதல் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் வர்க்க மூலோபாயத்தின் இரண்டு முக்கிய கூறுகளை இரட்டிப்பாக்குவதன் மூலம் இந்த தொற்றுநோய்க்கு மோடி அரசாங்கம் பதில் கொடுத்தது: அதில் ஒன்று, பூகோள முதலாளித்துவத்திற்கான ஒரு மலிவு-உழைப்பு புகலிடமாக இந்தியாவை மாற்றுவதற்கான உந்துதல்; மற்றையது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உறவுகளை முன்னெடுப்பதும், 2005 முதல் இருந்து வரும் இந்திய-அமெரிக்க "பூகோள மூலோபாய கூட்டைத்" தொடர்வதுமாகும். முதலாவது, இந்தியாவை உலகின் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது - இந்த சமூகத்தில் ஒரு சதவீத பெரும் செல்வந்தர்கள், மிக ஏழ்மையான 70 சதவீத இந்தியர்களை விட நான்கு மடங்கு அதிக செல்வத்தை வைத்திருக்கன்றனர். இந்த வறியவர்களில் கோடிக்கணக்கான மக்கள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள். மற்றையது சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் எரியூட்டும் போர் உந்துதலில் இந்தியாவை ஒரு முன்னணி அரசாக மாற்றியுள்ளது.

இந்த செய்பணி நிரலை பின்பற்றுவதனால் மிகப் பெரும் வெகுஜன எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதை நன்கு அறிந்துள்ள பா.ஜ.க., காவல்துறை, உச்சநீதிமன்றம் மற்றும் ஒட்டுமொத்த இந்திய ஆளும் உயரடுக்கின் ஒத்துழைப்புடன், இடைவிடாமல் வகுப்புவாத எதிர்வினையைத் தூண்டிவிடுகிறது. தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதோடு, தனது பாசிச இந்து மேலாதிக்கவாத ஆதரவாளர்களை அதன் எதிரிகளுக்கு எதிராக, எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக ஒரு அதிரடிப் படையாக அணிதிரட்டுவதே அதன் நோக்கமாக உள்ளது.

ஸ்ராலினிச சி.பி.எம். மற்றும் அதன் இடது முன்னணியின் துரோகத்தனமான பாத்திரம்

கடந்த மூன்று தசாப்தங்களில் இந்திய முதலாளித்துவத்தின் விரிவாக்கமானது தொழிலாள வர்க்கத்தை அளவில் மட்டுமன்றி ஒரு சமூக சக்தி என்ற வகையிலும் அபாரமாக வளர்ச்சியடையச் செய்துள்ளது. வாகன தொழிற்துறையிலும் மற்றும் பூகோள ரீதியில் ஒருங்கிணைந்த தொழிற்துறைகளிலும் பணியாற்றுபவர்கள் உட்பட, தொழிலாளர்களின் எண்ணற்ற போர்க்குணமிக்க போராட்டங்கள் இடம்பெற்றிருந்தாலும் கூட, தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்டு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.

தொழிலாள வர்கத்தின் பெயரில் பேசுவதாக பொய்யுரைக்கின்ற முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சி.பி.எம். மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) ஆகிய ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளும் இதற்கு பிரதான பொறுப்பாளிகளாக இருக்கின்றன.

அரசியல் ஸ்தாபகத்துடன் நீண்டகாலமாக ஒருங்கிணைந்துள்ள அவை, வர்க்கப் போராட்டத்தை முறைப்படியாக நசுக்கியதுடன், முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்கள் முதல், உலகில் மூன்றாவது மிகப்பெரிய இராணுவ வரவு செலவு திட்டத்தை கொண்ட நாடாக இந்தியாவை மாற்றிய இராணுவ கட்டுமானத்தை ஏற்றுக்கொள்வது வரை, முதலாளித்துவ செயற்பட்டியலை அமுல்படுத்துவதில் நேரடியாக கலந்துகொண்டுள்ளன.

மூன்று தசாப்தங்களாக சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகியன, வலதுசாரி அரசாங்கங்களின், அநேகமாக காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கங்களின் வெற்றிக்கு முண்டு கொடுப்பதை நியாயப்படுத்துவதற்காக, இந்து வலதுசாரிகளின் அச்சுறுத்தலை தூக்கிப் பிடித்தன. இந்த சமூக நெருக்கடிக்கான தனது சொந்த சோசலிச தீர்வை முன்வைக்க விடாமல் தொழிலாள வர்க்கத்தை தடுப்பதன் மூலம், பரவலான வறுமை, பெருமளவிலான வேலையின்மை மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மரண அச்சுறுத்தலாக தொடர்ச்சியாக விரிவடைந்து வருகின்ற சமூக சமத்துவமின்மை போன்றவை மீதான பெருகிவருகின்ற சமூக விரக்தியையும் கோபத்தையும், இந்து வலதுகள் சுரண்டிக்கொள்வதற்கான வாய்ப்பை ஸ்ராலினிஸ்டுகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இன்னமும் ஸ்ராலினிஸ்டுகளைப் பொறுத்தவரை, அவர்களின் கொள்கையின் வெளிப்படையான தோல்வியானது முழுமையாக அலட்சியம் செய்யப்படும் ஒரு விடயமாக உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் இந்து மேலாதிக்கவாத மோடியை தழுவிக்கொள்வதற்கும் அதன் வர்க்கப்-போர் தாக்குதல்களை தீவிரமாக்குவதற்கும் பதிலளிக்கும் விதமாக, தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸ் கட்சியுடனும் மற்றும் வலதுசாரி சிறு இனக்குழு பேரினவாத மற்றும் சாதிவாத கட்சிகளுடனும் முதலாளித்துவ அரசின் நிறுவனங்களுடனும் கட்டிப்போடும் தமது முயற்சிகளை ஸ்ராலினிஸ்டுகள் இருமடங்காக்கியுள்னர். காஷ்மீருக்கு எதிரான அரசியலமைப்புச் சதி முதல், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயிலைக் கட்டுவது வரை, ஒவ்வொரு திருப்பத்திலும் காங்கிரஸ் கட்சி இந்துத்துவ-பாசித்துடன் மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கி வந்தபோதும் கூட காங்கிரஸ் கட்சியையும் நீதிமன்றங்களையும் மற்றும் “நமது இராணுவத்தையும்” இந்துத்துவ-பாசிசத்திற்கு எதிரான ஒரு “மதச்சார்பற்ற, ஜனநாயக” அமைப்புகளாக சி.பி.எம் மற்றும் அதன் இடது முன்னணி கூட்டாளிகள் தூக்கிப் பிடிக்கின்றன.

ஜனவரி 8 மற்றும் நவம்பர் 26 பொது வேலை வேலைநிறுத்த போராட்டங்களின் மூலமாக இந்தியத் தொழிலாளர்களும் உழைப்பாளர்களும் மோடி அரசாங்கத்திற்கும் மூன்று தசாப்தகால முதலீட்டாளர்-சார்பு மறுசீரமைப்பின் அழிவுகரமான விளைவுகளுக்கும், தங்களது கோபத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தனர். ஆனால், ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் அவர்களின் தொழிற்சங்க கூட்டாளிகளான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் அனைத்து இந்திய தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் (AITUC) ஆகியவற்றை பொறுத்தவரை, அவை ஒரு மோசமான அரசியல் சூழ்ச்சியாகவே இருந்தன. இவை, மேலும் மேலும் எழுச்சி பெற்று வருகின்ற தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. போன்ற அவர்களின் வலதுசாரி “பா.ஜ.க.-விரோத” கூட்டணிகளின் “முற்போக்கு” நம்பகத்தன்மையை பெருக்குவதற்குமான கருவிகளாகவும் இருக்கின்றன. காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் தொழிற்சங்க முன்னணிகள், சி.ஐ.டி.யு./ஏ.ஐ.டி.யூ.சி. தலைமையிலான மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பில் முன்னணி உறுப்பினர்களாக இருக்கின்றன.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஸ்ராலினிஸ்டுகளின் பதிலிறுப்பானது முதலாளித்துவத்தின் அரசியல் முகவர்கள் என்ற அவர்களின் பாத்திரத்தை முழுமையாக பேணிக்காக்கும் வழியில் தான் உள்ளது. அவர்கள் தொழிலாள வர்க்கத்தை ஒரு செயலற்ற பார்வையாளராக கீழிறக்க முயற்கிக்கும் அதே வேளை, சமீபகாலம் வரை ஆளும் வர்க்கத்தின் விருப்பமான அரசாங்க கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியுடனும் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரசுடன் இணைந்த இந்திய தேசிய தொழிற்சங்க மையத்துடனும் இணைந்து கூட்டறிக்கைகளை வெளியிடுகின்றனர். தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தலையிடுவது மற்றும் மோடி அரசாங்கத்திற்கும் இந்திய முதலாளித்துவத்திற்கும் எதிராக கிராமப்புற உழைப்பாளிகளை அணிதிரட்டுவது குறித்த அவர்களின் விடாப்படியான எதிர்ப்பை கோடிட்டுக் காட்டும் வகையில், சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மற்றும் சி.பி.ஐ. தலைவர் டி. ராஜா ஆகிய இருவரும், விவசாயிகளின் கிளர்ச்சி “அரசியல்-அற்றதாக” இருக்க வேண்டுமென கூறினர்.

மோடியையும் இலாப அமைப்பையும் எதிர்த்துப் போராடுவதற்கான சோசலிச - சர்வதேசவாத வேலைத்திட்டம்

மோடி மற்றும் இந்திய முதலாளித்துவத்துக்கு எதிராக விட்டுக்கொடுக்காமல் போராடுவதற்கு, இந்திய தொழிலாள வர்க்கமானது ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் முறித்துக்கொண்டு, அதன் போராட்ட அச்சாணியாக நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில், சர்வதேச சோசலிச மூலோபாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். லியோன் ட்ரொட்ஸ்கியால் முதலில் அபிவிருத்தி செய்யப்பட்ட நிரந்தரப் புரட்சியானது 1917 ரஷ்யப் புரட்சிக்கும், அதைதொடர்ந்த ஸ்ராலினிச சீரழிவுக்கும் எதிரான போராட்டங்களுக்கு மூலோபாய அடித்தளமாக சேவையாற்றியுள்ளது. அது இந்தியா போன்ற முதலாளித்துவ அபிவிருத்தி காலங்கடந்து வளர்ச்சி கண்ட நாடுகளில், விவசாயிகளின் பிரச்சினைக்கான தீர்வு போன்ற, ஜனநாயகப் புரட்சியின் அடிப்படை கடமைகள், தொழிலாள வரக்கத் தலைமையிலான சோசலிசப் புரட்சி மூலமாகவும் முதலாளித்துவத்திற்கு எதிரான பூகோளரீதியான போராட்டத்தின் ஒரு பாகமாகவும் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும், என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.

இருபதாம் நுாற்றாண்டின் முதல் பாதியில் தெற்காசியாவை அதிரவைத்த 1942 மற்றும் 1947 ம் ஆண்டுகளுக்கு இடையில் புரட்சிகர பரிமாணங்களை எட்டிய பிரமாண்டமான ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கத்தை, ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலம் முன்னெச்சரிக்கை செய்தவாறு நேரு, காந்தி மற்றும் அவர்களின் இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல் தலைமையின் கீழ் இந்திய முதலாளித்துவம் காட்டிக் கொடுத்தது. துணைக்கண்டத்தை வெளிப்படையான ஒரு முஸ்லிம் பாகிஸ்தான் ஆகவும் இந்து மேலாதிக்கம் கொண்ட இந்து இந்தியா ஆகவும் இரத்தக்களரியில் பிரிப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை தயாரித்ததோடு, பிரிட்டிஷ் காலனித்துவ அரச எந்திரத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு முதலாளித்துவ ஆட்சியை தக்க வைத்தனர். இந்தியா, ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, ஆழ்ந்து-வேரூன்றிய விவசாய நெருக்கடி, சாதிய ஒடுக்குமுறை, பரவலான வறுமை, மற்றும் கொத்தடிமை சுரண்டலை கொண்ட கொடூரமான முதலாளித்துவ அடக்குமுறையினாலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு இந்து மேலாதிக்க குண்டரை அதன் பிரதமராகவும் கொண்டுள்ளது.

இந்திய தொழிலாளர்கள், தமது எண்ணற்ற சமூகப் போராட்டங்களை ஒன்றிணைத்து, ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டத்தில், மோடி மற்றும் இந்திய முதலாளித்துவத்துக்கு எதிராக, கிராமப்புற உழைப்பாளர்களை அணிதிரட்டும் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தப் போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், அதிகாரம் மற்றும் சலுகைக்கான கன்னை மோதலுக்குள் அதை வலிந்து இழுப்பதற்கும் ஆளும் வர்க்கம் துாண்டிவிடுகின்ற இந்து மேலாதிக்கவாதம், சாதியவாதம் மற்றும் சாதி ஒடுக்குமுறைகள் மற்றும் அனைத்து வகுப்புவாத மற்றும் சிறு இனக்குழு பிரிவுகளையும் தொழிலாள வர்க்கம் சமரசமின்றி உறுதியாக எதிர்க்க வேண்டும்.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தினால் மட்டுமே விவசாயிகளின் எரியும் பிரச்சினைகளுக்கும் மற்றும் கிராமப்புற மக்களில் பெரும்பான்மையாக இருக்கும் நிலமற்ற மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கும் ஒரு தீர்வினை வழங்க முடியும். ஒவ்வொரு கட்டத்திலும், MGNREG போன்ற பொதுப்பணித் திட்டங்களில் வேலை செய்கின்ற விவசாய தொழிலாளர்கள், விளிம்புநிலை விவசாயிகள் போன்றவர்களுக்கு தரமான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு உடனடியாக தேவைப்படுகின்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு அனைத்து வேலை செய்யும் விவசாயிகளுக்கும் மலிவான கடன், விவசாய இயந்திரங்கள் மற்றும் விவசாய இடு பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமாயின் அது முதலாளித்துவ இலாப அமைப்பு முறையுடன் மோதலுக்கு இட்டுச் செல்கின்றது. அதற்கு பொதுச் சேவைகளின் பரந்த விரிவாக்கம் அவசியமாகிறது, நிலங்களை தேசியமயமாக்குதல், பிரமாண்டமான அளவில் கூட்டு விவசாயத்தை ஊக்குவித்தல், மேலும் வங்கிகள், உரம் மற்றும் வேளாண்சார் உற்பத்திகளை தொழிலாள வர்க்கத்தின் பொது உடைமை மற்றும் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதை இது அவசியமாக்குகின்றது.

அனைத்துக்கும் மேலாக, இந்திய தொழிலாளர்கள், தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் பூகோளரீதியான எழுச்சியுடன் தங்களது போராட்டத்தை ஒருங்கிணைப்பதற்குப் போராட வேண்டும். 2020 முடியும் தறுவாயில், கோவிட்-19 தொற்று நோய்க்கு முதலாளித்துவ உயரடுக்கின் ஈவிரக்கமற்ற பதிலிறுப்புக்கும் வேலைகள், பொதுச் சேவைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தசாப்த கால தாக்குதல்கள் உக்கிரமாக்கப்படுவதற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு பெருகி வருகிறது. பிரான்ஸ், கிரேக்கம், இத்தாலி, சிலி, தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் வெகுஜனப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

“உலகத் தொழலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற கம்யூனிஸ் கட்சி அறிக்கையின் வழிநடத்தும் வாக்கியமானது இந்தளவு மிக யதார்த்தமானதாகவும் மிக அவசரமானதாகவும் எப்போதும் இருந்ததில்லை. உற்பத்தியின் பூகோளமயமாக்கமானது உழைக்கும் மக்களின் இழப்பில் சந்தைகள், மூலவளங்கள், உழைப்புச் சுரண்டல் மற்றும் பூகோள மூலோபாய நலன்களுக்குமான முதலாளித்துவத்தின் உள்-மோதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. நாடுகடந்த நிறுவனங்கள் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச உழைப்புச் சந்தையைப் பயன்படுத்துகின்ற அதே வேளை, ஏகாதிபத்தியங்களும் பெரும் வல்லரசுகளும் மற்றும் இந்தியா போன்ற பல்வேறு அபிலாசைகளைக் கொண்ட பிராந்திய மேலாதிக்க அரசுகளும் ஆயுதங்களை வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் முதலாளித்துவத்தின் வீழ்ச்சி, சோசலிச புரட்சியில் அதன் முற்போக்கு தீர்வுக்கான புறநிலை நிலைமைகளையும் உருவாக்கியுள்ளது. பூகோளமயமாக்கலானது தொழிலாள வர்க்கத்தின் பரந்த புதிய படையை ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தின் அமெரிக்காவிலும் உருவாக்கியுள்ளது மற்றும் அதன் உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கின் மூலமாக வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானிலும் உள்ள தொழிலாளர்களுடனும் ஐக்கியப்பட்டுள்ளது. தற்போது டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள் உற்பத்தியை 25 சதவிகிதம் அதிகரிக்க வேண்டுமென்ற நிர்வாகத்தின் கோரிக்கையை எதிர்ப்பதற்காக மீண்டும் வேலைக்குத் திரும்பும்படி கோரும் அரசாங்கத்தின் அரசாங்கத்தின் உத்தரவை சவால் செய்வதன் மூலம் அவர்கள் இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காகவும் ஒரு தாக்குதலைத் தொடுத்திருக்கின்றனர்.

இந்தப் புறநிலை ஐக்கியமானது ஒரு நனவான மூலோபாயமாக மாறவேண்டும். உழைக்கும் மக்கள் மீதான மூலதனத்தின் இடைவிடாத தாக்குதல்களுக்கும் மற்றும் முழு இலாப நோக்கு அமைப்பு முறைக்கும் எதிரான ஒரு பூகோளரீதியான எதிர்த் தாக்குதலில் இந்தியத் தொழிலாளர்கள் உலகெங்கிலுமுள்ள தமது வர்க்க சகோதர, சகோதரிகளுடன் தங்களது போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டமானது போருக்கு எதிரான போராட்டதில் இருந்து பிரிக்க முடியாததாகும். இந்திய தொழிலாளர்களும் உழைப்பாளர்களும் சீன-விரோத இந்திய-அமெரிக்க போர் கூட்டணியையும் பாகிஸ்தானுடனான ஆளும் வர்க்கத்தின் பிற்போக்கு மூலோபாய மோதலையும் எதிர்க்க வேண்டும். இவை இரண்டும் ஒரு அணுவாயுதப் பேரழிவை கட்டவிழ்த்து விடும் அச்சுறுத்தலை கொண்டுள்ளன. வகுப்புவாத மோதலுக்கும் தேசிய-இன பகைமைகளுக்கும் ஒரு நச்சுக் குளமாகவும், தொடர்ச்சியான ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கான ஒரு பொறிமுறையாகவும் சேவையாற்றுகின்ற 1947 பிரிவினையின் மூலம் உருவாக்கப்பட்ட பிற்போக்கு தேசிய அரசு அமைப்பு முறைக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் தெற்காசிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தை முன்நிறுத்த வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்திற்காகப் போராடவும், இந்திய தொழிலாளர் மற்றும் உழைப்பாளர்களின் வளர்ச்சிகண்டு வரும் கிளர்ச்சிக்கு தலைமை வழங்கவும், ஒரு புரட்சிகர தொழிலாள-வர்க்க கட்சியை கட்டியெழுப்ப வேண்டும் -அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்தியப் பகுதியைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக உள்ள அனைவரையும், இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த தீர்க்கமான போராட்டத்தில் நாம் அனைத்து ஆதரவையும் வழங்குவோம்.

Loading