இலங்கையில் தொழில்கள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் மஸ்கெலியாவில் உள்ள காட்மோர் தோட்டத் தொழிலாளர்கள், தொழில்கள் மற்றும் சமூக உரிமைகளை பாதுகாக்க, டிசம்பர் 28 அன்று ஆரம்பித்த வேலை நிறுத்தம், தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த புதன்கிழமை தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அனுப்ப எடுத்த முயற்சியை தொழிலாளர்கள் நிராகரித்துள்ளனர்.

காட்மோர் தொழிலாளர்கள் தோட்டத்தின் புதிய உரிமையாளரின் கீழ், ஊழியர் சேமலாப நிதி மற்றும் சேவைகாலப் பணம் உட்பட, தமது தொழில் மற்றும் நிலமைகள், உத்தரவாதம் அழிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். 290 ஹெக்டயர் தனியார் தோட்டம் முன்பு சொய்சா குடும்பத்திற்கு சொந்தமாக இருந்தது.

காட்மோர் தோட்டத்தில் லயன் அறைகள் [Credit: WSWS Media]

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (தே.தொ.ச), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகிய தொழிற்சங்கள் தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட்டதனால் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்தனர்.

இ.தொ.கா., இராஜக்ஷ அரசாங்கத்துடன் இணைந்திருப்பதுடன் அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தற்போதைய தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராவார். ஏனய தொழிற்சங்கள் வலதுசாரி ஜக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு சேர்ந்துள்ளன.

55 வயதில் இருந்து 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கும் மற்றும் ஒய்வு பெறுபவர்களுக்கும் மட்டுமே சேவைகாலப் பணம் வழங்கப்படும் என முன்னால் தோட்ட உரிமையாளர் டிசம்பர் 14 அன்று தொழிலாளர்களிடம் கூறினார். அத்துடன் புதிய உரிமையாளர், தொழிலாளர்கள் ஒய்வு பெறும்போது எல்லா சலுகைகளையும் வழங்குவார் எனவும் அவர் கூறினார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அந்த உத்தரவாதத்தை நம்பாததோடு, உத்தரவாதம் அளிக்கப்பட்ட கொடுப்பனவுகள் இன்னமும் கொடுக்கப்படவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர் சொய்சா குடும்பம் தோட்டத்தின் ஒரு பகுதியை விற்றபோது தொழிலாளர்கள் தொழில் மற்றும் சலுகைகளை இழந்தார்கள்.

புதிய தோட்ட முகாமைத்துவம், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்திணைக்கள அலுவலர்களுக்கும் இடையில் நடைபெற்ற மூன்று கலந்துரையாடல்களும், புதிய உரிமையாளர் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்த காரணத்தால் தோல்வியில் முடிந்தன.

காட்மோர் தொழிலாளி புஷ்பவதி தனது வீட்டுச் சுவர் வெடித்து இருப்பதை காட்டுகிறார் [Credit: WSWS Media]

ஜனவரி 17 அன்று, இப்போது தாங்கள் புதிய நிலமைகளை எதிர்கொள்வதாக புதிய உரிமையாளர் தொழிலாளர்களிடம் கூறினார்.

முந்தைய ஐந்து ஆண்டுகளில் உற்பத்தித்திறன் குறைவாக இருந்த எந்தவொரு தொழிலாளியும், வாக்குறுதியளிக்கப்பட்ட சேவைக்கால கொடுப்பனவுகளைப் பெறமாட்டார் என்றும் அவர் புதிய தொழிலாளியாக பதிவு செய்யப்படுவார் என்றும் அவர் அறிவித்தார். இந்த வகைப்படுத்தலுக்குள் 53 தொழிலாளர்கள் உள்ளார்கள். தோட்டத்தில் மரங்கள் குறைந்து செல்வதால், மரண வீடுகளுக்கு விறகுகளை கொடுக்க முடியாது என்று புதிய முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களை வெகுவாக குறைப்பதற்காக, தேயிலைக்குப் பதிலாக தோட்டத்தை உல்லாச மையமாக மாற்றுவதற்கான திட்டங்களை தற்போதைய உரிமையாளர் வைத்திருப்பதாக காட்மோர் தொழிலாளர்கள், உலக சோசலிச வலைத் தளத்துக்கு (WSWS) தெரிவித்தார்கள். பிறப்பு மற்றும் இறப்பு, சுகாதார மற்றும் ஏனைய குடும்ப ஆவணங்கள் உட்பட முக்கியமான தனிப்பட்ட ஆவணங்கள் தற்போது தோட்ட அலுவலகத்தில் உள்ளன. அவை புதிய முகாமைத்துவத்தின் கீழ் பாதுகாக்கப்பட மாட்டாது என, சில தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

பெருமாள் கூறியதாவது: “எமது முன்னைய உரிமைகள் ஒழிக்கப்பட மாட்டாது என எமக்கு எழுத்து மூலம் உத்தரவாதம் தரவேண்டும். எதிர்காலத்தில் நாங்கள் வேலை இழப்புக்கு முகம் கொடுத்துள்ளோம். நாங்கள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தம் செய்தால், எங்களின் பிள்ளைகள் பட்டினி இருக்க வேண்டும், அவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று கூறி, தொழிற்சங்கங்கள் எங்களை உற்சாகமிளக்கச் செய்கின்றன.

“நாங்கள், தொழிற்சங்கங்களுக்கு தொடர்ச்சியாக சந்தாப் பணத்தினை செலுத்துகின்ற போதிலும், அவை எமது உரிமைகளைப் பாதுகாப்பதில்லை. பதிலாக, அவை எங்களுக்கு எதிராக நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்துகொள்கின்றன. அண்மைய தேர்தலின் போது, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, எமது நாட் சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிப்பதாக உத்தரவாதமளித்திருந்தார். இது வெறும், தேரத்தல்கால உத்தரவாதமாகிவிட்டது.”

தொழிலாளர்களும் மற்றும் அவர்களின் குடும்பமும் முகம்கொடுத்துள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை ஆர். விஜயலட்சுமி விளக்கினார். “எமது அற்ப நாட் சம்பளமான 700 ரூபாவுடன் ($US3.50), நாங்கள் எமது பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டியுள்ளது, எமது வீடுகளைத் திருத்த வேண்டியுள்ளது, ஏனைய செலவுகளையும் செய்ய வேண்டியுள்ளது. மற்றைய தொழிலாளர்களைப் போல நானும் தண்ணீர் விநியோகத்தை பெற 10,000 ரூபா ($US51) செலுத்தினேன். ஆனால் வரட்சிக் காலங்களில் போதுமான தண்ணீர் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.” என அவர் கூறினார்.

கார்ட்மோர் தோட்டத் தொழிலாளர்களின் உறுதியான வேலைநிறுத்தம் நாட்டின் பெருந்தோட்டங்களில் வளர்ந்து வரும் பரந்த அமைதியின்மையின் வெளிப்பாடாகும். சில தோட்டங்களில் கொவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தோட்டங்களில் உள்ள ஆபத்தான நெரிசலான லயன் அறை வீடுகள் மூலம் கொடிய வைரஸ் வேகமாக பரவும் என்று தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

காட்மோர் தோட்டத்தில் தனது லயன் வீட்டுக்கு வெளியில் நிற்கும் ஒரு தொழிலாளி [Credit: WSWS Media]

தொற்றுநோய் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலையையும் கடுமையாக உயர்த்தியுள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் 700 ரூபாய் என்ற அற்ப தினசரி ஊதியத்தில் உயிர்வாழத் திண்டாடுகின்றனர்.

2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தல் காலத்தில், கோட்டாபய ராஜபக்ஷ, தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான 1000 ரூபா நாட் சம்பளத்தை வழங்குவதாக உறுதியளித்தார். இந்த வாக்குறுதி, கடந்த ஆகஸ்ட்டில் நடந்த பொதுத் தேர்தலின் போதும், மீண்டும் வழங்கப்பட்டது. கடந்த நவம்பரில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில், தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பிரச்சினை சம்பந்தமாக தொழிலாளர்களின் மத்தியில் வளர்ந்து வரும் கோபத்தினை திசை திருப்ப முடியும் என்ற நம்பிக்கையில், பிராந்திய தோட்டக் கம்பனிகளின் (RPC) பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலை ஆரம்பித்தார்.

டி. சில்வா, பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், முதலாளிகள் 1,000 ரூபா நாட் சம்பளக் கோரிக்கையை அப்பட்டமாக நிராகரித்தன. பதிலாக, கம்பனிகள் “சம்பள அதிகரிப்புக்காக” இரண்டு முறைமைகளை முன்மொழிந்தன.

முதலாவது திட்டம், கலப்பு ஊதிய முறைமை என்று அழைக்கப்பட்டது. இதன் கீழ், தொழிலாளர்கள் தற்போது நடைமுறையில் உள்ள நாட் சம்பள முறைமையின் கீழ் மூன்று நாட்களும், மற்றைய மூன்று நாட்களும் ஒரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கு 50 ரூபா ஒப்பந்த அடிப்படையிலும் வேலை செய்வதோடு தொழிலாளர்கள் தங்களது ஓய்வூதிய நிதியையும் பெறுவர். இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ மரப்பாலுக்காக 125 ரூபா வழங்கப்படும்.

இரண்டாவது உத்தேச திட்டம், ஒரு நாள் சம்பளம் 1,105 ரூபாவாகும். ஒரு நாளுக்கு அடிப்படை நாள் சம்பளம் 700 ரூபாவும், 300 ரூபா கொடுப்பனவும் மற்றும் 105 ரூபா ஓய்வூதிய நிதியும் இதில் அடங்கும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இரு திட்டங்களும் தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்தப் போவதில்லை, மாறாக உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டும் என்பதால், அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் சம்பளத் திட்டங்களுக்கு “உடன்படவில்லை.” ஒரு அமைச்சரவைப் பத்திரத்தினை சமர்ப்பித்து, ஆகக் குறைந்த நாட் சம்பளத் திட்டத்தை அரசாங்க சம்பளச் சபையின் ஊடாக ஸ்தாபிக்கப்போவதாக தொழில் அமைச்சர் டி. சில்வா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கம்பனிகளின் இலாபங்கள் குறையும் வகையில் எதுவும் செய்யப் போவதில்லை.

டிசம்பர் 5 அன்று, சம்பளப் பிரச்சினை என்பது, “ஒரு பக்கப் பிரச்சினை” அல்ல, “பெருந்தோட்ட தொழிற்துறையையும் தோட்டக் கம்பனிகளையும் பாதுகாப்பது” கட்டாயமாகும் என்று டி. சில்வா பாராளுமன்றத்தில் கூறினார். அதே நாளில், இ.தொ.கா. தலைவர் தொண்டமான், “சம்பளப் பிரச்சினை என்பது, கைத்தொழில் துறையைக் கொலை செய்வதாக இருக்க கூடாது” என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் ஊதிய திட்டங்கள் என்று அழைக்கப்படுபவை, கொரோனா வைரஸ் தொற்றுநோயாலும் அதனுடன் தொடர்புடைய ஏற்றுமதி வீழ்ச்சியாலும் ஆழமடைந்துள்ள தோட்டத் தொழில்துறையின் நெருக்கடியை சமாளிப்பதற்கான ஒரு முயற்சியாகும்.

தோட்டத் தொழிலாளர்கள் 2015 இலேயே முதன் முதலில் 1,000 ரூபா சிறிய தொகை நாட் சம்பளக் கோரிக்கைகயை முன்வைத்தார்கள். அது தற்போது மிகவும் பற்றாக்குறையானதாகும். ஆரம்பத்திலிருந்தே, தொழிற்சங்கங்கள் இந்த சாதாரண அதிகரிப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் போராட்டங்களை தடுப்பதற்கு அல்லது குழிபறிப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டுவந்துள்ளன.

2018 இறுதியில், இலட்சக் கணக்கான தோட்டத் தொழிலாளர்கள், எதிர்ப்பு போராட்டங்களையும் 11 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தினார்கள். இ.தொ.கா. 700 ரூபா மட்டுப்படுத்தப்பட்ட நாட் சம்பளத்துக்கான ஒரு கூட்டு ஒப்பந்த்தில் கையெழுத்திட்டு மிகப் பெரிய பாத்திரத்தை ஆற்றியதுடன், இந்தப் போராட்டங்கள் தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டன.

2018 இல், 1,000 ரூபாவானது 7 அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும். இதே தொகை இந்த மாதம் 5 அமெரிக்க டொலருக்கு சமாமானதாகும்.

காட்மோர் தோட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உறுப்பினர்கள் அந்தப் பிரதேசத்தில் பல தலையீடுகளை மேற்கொண்டார்கள்.

டிசம்பர் 31 நடந்த ஒரு கூட்டத்தில் சோ.ச.க. முன்னணி அங்கத்தவரான எம். தேவராஜா தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது, தோட்டத் தொழிலாளர் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்தார். அவர், ஏனைய தோட்டத் தொழிலாளர்களுடன் ஒரு ஐக்கியப்பட்ட நடவடிக்கைக்காகவும் மற்றும் அவர்களின் கோரிக்கைக்கான போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்காகவும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, தங்களின் சொந்த நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு, வேலை நிறுத்தக்காரர்களை ஊக்குவித்தார்.

எம். தேவராஜா காட்மோர் தொழிலாளர்கள் முன் உரையாற்றுகின்றார் [Credit: WSWS Media]

“தோட்டங்களை தேசியமயப்படுத்துவதற்கும் மற்றும் அவற்றை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்குமான போராட்டம் இல்லாமல், தொழிலாளர்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது.” என தேவராஜா கூறினார்.

"சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைந்து ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கு போராடுவதன் மூலம் மட்டுமே இந்த கடமைகளை இட்டு நிரப்ப முடியும்."

Top of Form

Loading