தடுப்பூசி ஏற்றுமதி தடைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வாக்களித்துள்ள நிலையில், ஐரோப்பிய தடுப்பூசி நெருக்கடி மிகவும் மோசமடைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் குறித்து ஐரோப்பாவில் கடுமையான விரோதப் போக்குகள் வெடித்துள்ளன.

பல மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றியமும் (EU) பிரிட்டனும், அஸ்ட்ராசெனேகா (AstraZeneca) என்ற பிரிட்டன்-சுவீடன் கூட்டு மருந்து உற்பத்தி நிறுவனத்திடமிருந்து தடுப்பூசியை கொள்முதல் செய்வதில் முரண்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அஸ்ட்ராசெனேகா நிறுவனத்துடன் பிரிட்டன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிலையில், “முதலில் வருபவர்களுக்கு முதல் சேவை” என்ற அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னதாக தங்களுக்குத்தான் முதலில் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. ஜனவரி கடைசியில், வடக்கு அயர்லாந்திற்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் சுருக்கமாக தடை விதித்தது. இதை பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் ஒரு கூறான வடக்கு அயர்லாந்து நெறிமுறையின் ஷரத்து 16 ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தியுள்ளது.

இரு தரப்பிலும் மீண்டும் தேசியவாத வெறி தூண்டுப்பட்டு, பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் வீசப்படுகின்றன. கடந்த வாரம், இருதரப்பினரும் அச்சுறுத்தல்களை எழுப்பி அஸ்ட்ராசெனேகா தடுப்பூசி விநியோகிப்பது தொடர்பான கோரிக்கைகளை வைத்ததால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான மோதல் உச்சபட்ச கொதிநிலையை எட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நிறைவேற்று குழுவாக செயல்படும் ஐரோப்பிய ஆணையம், பிரிட்டனுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுக்கலாமா என்பது குறித்து இந்த வியாழனன்று அதன் மாநாட்டில் வாக்களிக்க திட்டமிடுகிறது.

கடந்த வாரம், ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான ஊர்சுலா வொன் டெர் லெயன், “திட்டமிட்ட ஏற்றுமதியை தடை செய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு உள்ளது… ஏனைய நாடுகளுக்கு தடுப்பூசியை விநியோகிக்க தொடங்குவதற்கு முன்னர் ஐரோப்பா உடனான ஒப்பந்தத்தை முதலில் நீங்கள் நிறைவேற்ற வேண்டும். இதுதான் அஸ்ட்ராசெனேகா நிறுவனத்திற்கு நாங்கள் விடுக்கும் செய்தி” என்று ஜேர்மனியின் Funke ஊடக குழுமத்திற்கு தெரிவித்தார்.

மேலும் அவர், “எங்களை விட கூடுதலான தடுப்பூசி இடப்பட்டுள்ள நாடுகளுக்கான ஏற்றுமதி இன்னும் விகிதாச்சார அடிப்படையில் உள்ளனவா என்று நாங்கள் சிந்திப்போம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தடுப்பூசிகள் நம்பகமான முறையில் விநியோகிக்கப்படுவதை நாங்கள் விரும்புகிறோம், ஒப்பந்தங்களை அதிகரித்துக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம். மேலும் ஏற்றுமதியில் பரஸ்பர பரிமாற்றத்தையும் விகிதாச்சாரத்தையும் நாங்கள் காண விரும்புகிறோம். மேலும் அதனை அடைவதற்கு தடுப்பூசி விநியோகத்திற்கு தேவையான எந்தவொரு வழிமுறையையும் பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். இது, ஐரோப்பாவிற்கு அதன் நியாயமான பங்கு கிடைப்பதை உறுதி செய்வதாகும்” என்று எச்சரித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கச் செய்ய தொழிற்சாலைகளை கைப்பற்றுவது மற்றும் காப்புரிமை உரிமைகளை இரத்து செய்வது உள்ளிட்ட அவசரகால அதிகாரங்களை வொன் டெர் லெயன் கோரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய குழுவால் இத்தகைய கடுமையான அதிகாரங்கள், 1970 களில் உலக எண்ணெய் நெருக்கடி உச்சத்தில் இருந்ததான முன்னைய ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை, இங்கிலாந்து பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் (Ben Wallace), Sky ஊடகவியலாளர் சோஃபி ரிட்ஜிடம் பிரிட்டனால் பதிலடி கொடுக்க முடியும் என்று கூறி, “ஒப்பந்தங்கள் முறிக்கப்படுமானால்… சட்ட விதிமுறை பற்றி தன்னைத்தானே பெருமையடித்துக் கொள்ளும் வர்த்தக கூட்டுக்கு அது பெரும் சேதத்தை விளைவிக்கும்” என்று புரூசெல்ஸை எச்சரித்தார். ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுமதித் தடையை தொடர்வது என்பது “அவர்கள் மிதிக்கும் ஒரு பயங்கரமான பாதையாக” அது இருக்கும் என்று ஞாயிறன்று மாலை Politico இதழுக்கு ஒரு “மூத்த பிரிட்டன் உள்உறுப்பினர்” மிகக் கடுமையாக அறிக்கை விடுத்தார்.

இந்த நெருக்கடியின் மையமாக நெதர்லாந்தின் லைடன் (Leiden) நகரில் உள்ள ஒரு உற்பத்தி ஆலை உள்ளது. இந்த ஆலை பெல்ஜியத்திலுள்ள ஒரு நிறுவனத்துடன் இணைந்து அஸ்ட்ராசெனேகா தடுப்பூசி கலவையின் கூறுகளை உற்பத்தி செய்கிறது. நெதர்லாந்து ஆலை டச்சு துணை ஒப்பந்தக்காரரான Halix என்பதால் நடத்தப்படுகிறது, இது பிரிட்டனுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் அஸ்ட்ராசெனேகா கையெழுத்திட்ட ஒப்பந்தங்களிலுள்ள அதிகாரபூர்வ தடுப்பூசி விநியோகஸ்தர்களின் பட்டியலில் உள்ளது. Halix தயாரிப்பு முதலில் பிரிட்டனின் தடுப்பூசி திட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் கோருகிறது, அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ராய்ட்டர்ஸிடம், “Halix உற்பத்தி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட வேண்டும்” என்று கூறுகிறது.

இதுவரை, அறியப்படாத அளவிற்கு ஏற்கனவே Halix ஆல் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய நாட்கள் வரை, Halix உற்பத்தி செய்யும் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒப்புதல் பெறப்படவில்லை. ஒப்புதல் இல்லாமல், ஹாலிக்ஸ் தயாரிக்கும் எந்த தடுப்பூசிகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்த முடியாது. இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒப்புதல் வழங்குமாறு கோரிக்கை வழங்கப்பட்டு, புதன்கிழமை அதன் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Oxford Biomedica மற்றும் Cobra Biologics ஆகிய நிறுவனங்களால் நடத்தப்படும் இங்கிலாந்திலுள்ள இரண்டு ஆலைகளிடம் விநியோகத்திற்காக புரூசெல்ஸ்ஸூக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியமும் கோரிக்கைகளை விடுத்துள்ளது. இவ்விரண்டு இங்கிலாந்து ஆலைகளும் அஸ்ட்ராசெனேகாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் விநியோகஸ்தர்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. என்றாலும், இங்கிலாந்து ஆலைகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இதுவரை எதையும் அனுப்பவில்லை.

பிப்ரவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 33 நாடுகளுக்கு குறைந்தது 41 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி அளவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டதில் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனுக்கு 10 மில்லியன் தடுப்பூசிகளை புரூசெல்ஸ் அனுப்பியுள்ளது என்று வொன் டெர் லெயன் வலியுறுத்தினார்.

கடந்த வாரம், பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கம், 50 சதவிகித பிரிட்டன் மக்களுக்கு முதல் அளவு தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி திட்டத்தை விரைவில் மந்தமாக்கும் விநியோக சிக்கல்கள் தோன்றியுள்ளன என்று எச்சரித்தது. இந்த பற்றாக்குறை உற்பத்தியாளர்களின், முதன்மையாக அஸ்ட்ராசெனேகாவின் உற்பத்தி நெருக்கடிகளின் விளைவால் தோன்றுகிறதை தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் விநியோக முடக்கத்தால் ஏற்படவில்லை. பூகோள அளவில் தடுப்பூசி விநியோகத்தை பாதிக்கும் இந்த தடுப்பூசி பற்றாக்குறைக்கான காரணங்களாக இந்தியாவில் நிலவும் விநியோக சிக்கல்கள் உள்ளன. அடுத்த மாதம் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு அனுப்பப்படவிருந்த 4 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகள் இப்போது தடுக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், மருத்துவம் மற்றும் சுகாதார பராமரிப்பு பொருட்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பைச் சேர்ந்த ஜூன் ரெய்னுடனும், 10 டவுனிங் வீதியிலுள்ள இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரியான கிறிஸ் விட்டியுடனும் ஒரு கொரோனா வைரஸ் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துகிறார். 18/03/2021 (Picture by Simon Dawson / No 10 Downing Street – FlickR)

கார்டியன் செய்தியிதழின் பகுப்பாய்வின் படி, “பிரிட்டனின் கோவிட் தடுப்பூசித் திட்டம் ஐரோப்பிய ஒன்றிய தடையால் இரண்டு மாத கால தாமதத்தை எதிர்கொண்டுள்ள நிலை, இந்த கோடையில் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை தடம்புரள செய்துள்ளது.” ஃபைசர் / பையோஎன்டெக் தடுப்பூசிகள் பெல்ஜியம் மற்றும் ஜேர்மனியிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை தடை செய்வது ஒவ்வொரு வயதுவந்தோருக்கும் முதல் அளவு தடுப்பூசி கிடைப்பதை ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை தாமதப்படுத்தும் என்று கார்டியன் தரவு பகுப்பாய்வு நிறுவனமான Airfinity மதிப்பிட்டுள்ளது. அரசாங்கம் ஜூன் 20 அன்று பொருளாதாரத்தை முழுமையாக மீளத்திறக்க விரும்புகிறது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜோன்சன் தனிப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் வெறித்தனமான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். கடந்த வாரம், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்ட மற்றும் பெல்ஜிய பிரதமர் அலெக்ஸாண்டர் டூ குரோ ஆகியோருடன் அவர் பேசினார். மேலும் ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆகியோருடனும் பேசினார்.

திங்களன்று பேசுகையில், போரிஸ் ஜோன்சன், கோவிட் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் “முற்றுகைகளைக் காண விரும்பவில்லை” என்பதை அவர் “மீளுறுதி” செய்துள்ளதாக தெரிவித்தார். இலண்டன் “எங்களது தடுப்பூசி திட்டத்தை இயன்றளவு விரைவாக செயல்படுத்தி வருகிறது, என்றாலும் தடுப்பூசி பிரச்சாரம் மற்றும் தடுப்பூசி உற்பத்தி, மற்றும் விநியோகம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, அவை சர்வதேச திட்டங்கள் என்பதுடன், அவற்றுக்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவை” என்றும் பின்னர் தெரிவித்தார்.

பல ஆதாரங்களின்படி, சுமார் 150,000 கோவிட் இறப்புக்களை சந்தித்து, பெருகிவரும் வேலைநிறுத்தங்களையும் எதிர்கொண்ட ஜோன்சன் அரசாங்கம், ஒரு பகுதியளவு பின்வாங்கலுக்கு முகம் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட டச்சு தொழிற்சாலை “5 மில்லியன் தடுப்பூசி அளவுகளுக்கு போதுமான மூலப்பொருட்களை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது… முற்றுமுழுதான தடுப்பூசி வர்த்தகப் போரைத் தவிர்ப்பதற்காக தடுப்பூசியின் மிகப்பெரிய கையிருப்புக்களை பிரித்து வழங்க பிரிட்டன் அரசாங்கம் விரும்புவதாக இன்று டைம்ஸூக்கு உயர்மட்ட டவுனிங் வீதி வட்டாரங்கள் தெரிவித்தன” என்று திங்களன்று Daily Mail தெரிவித்தது.

தார்மீகரீதியில் எவர் மேல்நிலையில் இருப்பது என்பதற்கு ஜோன்சனும் வொன் டெர் லெயனும் போட்டியிடுவதைக் காட்டிலும் வேறெதுவும் வெறுக்கத்தக்கதல்ல. இருவருமே வர்த்தகப் போர் கொள்கைகளை செயல்படுத்துகின்றனர், மேலும் தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்ள மறுப்பது பொது சுகாதாரத்தின் மீது பேரழிவுகர தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கவலைப்படவில்லை. மாறாக தடுப்பூசி விநியோகத்தை நிறுத்துவது பொருளாதாரம் முழுமையாக மீண்டும் திறக்கப்படுவதை தாமதபடுத்தும் என்பது பற்றியும், பெருநிறுவனங்கள் தொடர்ந்து இலாபமீட்ட முடியுமா என்பது பற்றியுமே கவலைப்படுகின்றனர்.

முன்னணி ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்கள், வரவிருக்கும் வர்த்தக மற்றும் இராணுவ ரீதியிலான மோதலில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு முக்கிய பங்காளராக இருக்க முடியும் என்பதை இது நிரூபிக்கும் என்ற அடிப்படையில் தடுப்பூசி தடையை வெளிப்படையாக ஆதரிக்கின்றன. Der Spiegel செய்திக்கு பேசுகையில், மேர்க்கெலின் ஆளும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் முன்னணி பிரமுகரும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பழமைவாத நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான மன்ஃபிரெட் வெபர், “ஐரோப்பிய ஒன்றியத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் தற்காலிக ஏற்றுமதி தடையை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் தற்போது பரிசீலிக்க வேண்டும்… எங்களுக்கு ‘ஐரோப்பிய ஒன்றியத்திற்கான முன்னுரிமை’ இன்னும் கொஞ்சம் தேவைப்படுகிறது… ஐரோப்பியர்களாக எங்களது திறன்களின் அடிப்படையில், பெருந்தொற்றைத் தடுக்கும் முதன்மையானவர்களில் ஒருவராக இருக்கும் வாய்ப்பு இன்னும் எங்களுக்கு உள்ளது. ஆனால் எங்களது அணுகுமுறையை நாங்கள் மாற்றவில்லை என்றால், பொருளாதார விளைவுகள் மட்டும் கணிசமானதாக இருக்காது, ஏனென்றால் ஐரோப்பியர்கள் பாரிய பொருளாதார சக்தியை இழக்க நேரிடும், அதேவேளை சீனாவும் அமெரிக்காவும் தங்களை உயர்த்திக் கொள்ளும்” என்று கூறினார்.

ஐரோப்பிய தடுப்பூசி நெருக்கடியின் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும், அது எதிர்கால வர்த்தகம் மற்றும் இராணுவ ரீதியிலான மோதலிலும், மற்றும் கொடிய நோய்க்கு மேலும் தடுக்கக்கூடிய உயிரிழப்பு ஏற்படுவதிலும் தங்கியுள்ளது. உலகத்தின் சில பணக்கார முதலாளித்துவ நாடுகளை உள்ளடக்கிய கண்டத்தில், தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் 55 தொழிற்சாலைகள் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் பெருமிதம் கொள்கிறது. ஆயினும் கூட, மக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான எந்தவொரு தடயமும் அங்கு இல்லை.

தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான எந்தவொரு விஞ்ஞான அடிப்படையிலான திட்டத்தையும் செயல்படுத்த அவர்கள் மறுத்ததன் காரணமாக, 100 நபர்களில் வெறும் 13 பேருக்கு மட்டுமே முதல் அளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வைரஸ் ஐரோப்பா முழுவதும் அதன் வசந்தகால எழுச்சியை தொடங்கியுள்ள நிலையில், 20 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகள் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன.

பெருந்தொற்றுக்கான ஒரே தீர்வு என்பது ஒரு சர்வதேச தீர்வாக மனிதகுலத்தின் நலன்களுக்காக தொழிலாள வர்க்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அதாவது இந்த போராட்டம், பெருநிறுவனங்களின் இலாப விருப்புகள் மற்றும் உலகத்தை போட்டியிடும் தேசிய அரசுகளாக பிரிப்பது ஆகியவற்றுக்கு எதிராக சமூக நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

Loading