இலங்கை: தனிமைப்படுத்தல் நிவாரணம் கோரி போராடிய வெலிஓயா தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் ஹட்டனுக்கு அருகில் வெலிஓயா தோட்டத்தில், கொவிட்-19 தனிமைப்படுத்தல் நிவாரணம் கோரியும் தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்தும் போராட்டம் நடத்தியதற்காக 12 தொழிலாளர்கள் வட்டவளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 தொழிலாளர்களை கைது செயவதற்கான விசாரணைகள் நடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்ட 12 தொழிலாளர்களும் சனிக்கிழமை மாலை வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், ஹட்டன் நீதவான் முன்நிலையில் முற்படுத்தப்பட்டனர். அங்கு எந்த வருமானமும் இன்றி ஒரு மாதகாலம் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இந்த ஏழை தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5,000 ரூபா ரொக்கப் பிணை விதிக்கப்பட்டது.

எனினும், அந்த பிணையை செலுத்தி விடுதலையாவதற்கு நீதிமன்றத்தில் அலுவலர்கள் இல்லாத காரணத்தால், அந்த தொழிலாளர்கள் அனைவரும் கண்டிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர். மீண்டும் திங்கட் கிழமை அவர்கள் நீதிமன்றுக்கு அழைத்துவர இருப்பதாக கூறப்பட்ட போதிலும், மீண்டும் செவ்வாய் கிழமைக்கு ஒத்திப் போடப்பட்டது. இப்போது அவர்கள் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை வரும் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 15 அன்று தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது, தோட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் சிலரை அலுவலகத்தில் வைத்து பூட்டியதாக தோட்ட நோர்வாகம் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி காரியாலயத்திற்குள் பிரவேசித்தமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை மற்றும் ஊழியர்களை சிறைவைத்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை இந்த தொழிலாளர்கள் மீது சுமத்தி வழக்குத் தொடுப்பதற்கு பொலிஸ் தயாராகின்றது. இந்த குற்றச்சாட்டுக்களை தொழிலாளர்கள் நிராகரிக்கின்றனர்.

தனிமைப்படுத்தலின் பின்னர் வெலிஓயா தோட்டத்தில் ஜூன் 15 நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்  [Photo credit: K. Kishanthan] [Photo: K. Kishanthan]

வெலிஓயா தோட்டம் கடந்த 15ஆம் திகதியே தனிமைபடுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டது. ஒரு மாதகாலமாக வறுமை மற்றும் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை சம்பந்தமான தங்களது எதிர்ப்பை அடக்கி வைத்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அன்று தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்காக ஒன்று கூடினர்.

இந்த போராட்டத்தின்போது அங்கு வந்த பொலிசார், தொழிலாளர்களின் தேவையை நிறுவேற்றுவதாக கூறுகின்ற வீடியோ செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அப்போதிருந்து தொழிலாளர்கள் கைது செய்யப்படும் வரை, மேற் குறித்த குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக எந்த தகவலும் வெளிவரவில்லை.

வெலிஓயா தோட்டத்தொழிலாளர்கள் மீதான வேட்டையாடல், மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தொழிலாளர்கள் மீதான பழிவாங்கலுக்கு சமமானதாகும். கடந்த பெப்பிரவரி மாதம் 1,000 ரூபாய் அடிப்படை ஊதியம் கோரி நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது, ஓல்டன் தொழிலாளர்கள் முகாமையாளரின் வீட்டின் முன்னாள் நடத்திய போராட்டத்தை பற்றிக்கொண்ட நிர்வாகம், முகாமையாளரை தாக்கியதாக செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் பலதடவை 24 தொழிலாளர்களையும் இரண்டு இளைஞர்களையும் கைது செய்தது.

பிரதான பெருந்தோட்டத் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), கைது செய்யப்பட்ட தொழிலாளர்களின் பெயர் பட்டியலை தயாரித்துக் கொடுத்து உதவியதுடன் சிலரை பொலிசில் ஒப்படைப்பதற்கும் முன்வந்தது. இந்த நேரடி காட்டிக்கொடுப்பு உதவியுடன் ஹொரண பெருந்தோட்டக் கம்பனி இப்போது 38 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. தற்போது ஓல்டன் தோட்டத்தில் பொலிஸ் காவலரன் ஒன்றையும் அமைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

போராட்டத்தில் பங்குபற்றிய வெலிஓயா தோட்டத் தொழிலாளர்கள் [Photo credit: K. Kishanthan]

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், “வருமானம் ஏதும் இல்லாமல் மண்ணையா உண்பது?”, “முடக்கப்பட்ட கிராமத்திற்கு பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்படும் நிதி எங்கே?”, “5,000 ரூபா நிவாரணம் எங்கே?”, “கொரோனாவால் வாடுவதை விட பசியால் வாடுவதே கொடியது”, “வருமானம் இல்லாத மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கு வழி என்ன?” போன்ற இன்னும் பல சுலோக அட்டைகளை ஏந்தி இருந்தனர்.

தனிமைப்படுத்தல் காலத்தில் தோட்ட நிர்வாகத்தினால் திணிக்கப்பட்ட அடக்குமுறைகளை பற்றி கருத்து தெரிவித் தொழிலாளர்கள், அத்தியவசியப் பொருட்களை கொண்டுவரும் வாகனங்களை உள்ளே விடுவதில்லை, பிசிஆர் பரிசோதனை அறிக்கையை கேட்டால் தோட்ட வைத்திய அதிகாரி ஜனாதிபதியிடம் கேட்குமாறு கூறுகின்றார், தலைவலி என்றாலும் தோட்ட வைத்திய அதிகாரி பிசிஆர் பரிசோதனை எடுக்கச் சொல்கிறார் என்று கூறுகின்றனர்.

தனிமைப்படுத்தப்படும் போது அடிப்படை வசதிகள் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை உட்பட சுகாதாதர் தேவைகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டிய சுகாதார அதிகாரிகள், தோட்ட நிர்வாகம் மற்றும் பொலிசும் எந்த உதவியையும் செய்வில்லை என தொழிலாளர்கள் குற்றச்சாட்டினர்.

கிட்டத்தட்ட ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யும் வெலிஓயா தோட்டத்தில் தனிமைபடுத்தல் காலத்தில் கூட்டுறவு சங்க கடையில் ஒரு குடும்பத்துக்கு 5 ஆயிரம் ரூபா பெருமதியான உணவுப் பொருட்களே வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்தப் பொருட்களை முறையாக அவர்களுக்கு வாங்க முடியாமல் இருதுள்ளது. அநேகமான வெலிஓயா தோட்ட இளைஞர்கள் பெரும்பாலும், ஹட்டன் நகரில் உள்ள கடைகளிலேயே வேலை செய்கின்றனர். பலர் அன்றாட வருமானம் தேடுவோர் ஆவர். இவர்கள் பயணத்தடை காரணமாக எந்த வருமானமும் இன்றி தவிக்கின்றனர்.

வெலிஓயா தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வெலிஓயா தொழிலாளர்களைப் போலவே ஏனைய தோட்டத் தொழிலாளர்களும் அதேபோல், நாடு பூராவும் உள்ள ஏழைகளும் அவர்களை உதாரணமாக கொண்டு தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா நிவாரணங்களைக் கோரி போராட்டத்துக்கு வருவதை தடுப்பதாகும்.

குறிப்பாக, வெலிஓயா போராட்டத்தை அடுத்து அதே பிரதேசத்தில் உள்ள கரோலினா தோட்டத்தின் தொழிலாளர்கள், அதிகளவில் பெண் தெழிலாளர்கள், வெள்ளிக்கிழமை பிற்பகல் நிவாரணம் கோரி விதிக்கு வந்து மறியல் போராட்டம் நடத்தி இருந்தனர். கடந்த மே மாதம் தனிமைபடுத்தப்பட்டிருந்த போடைஸ் தோட்டத் தொழிலாளர்கள் நிவாரணம் கோரி போராட்டம் நடத்தி இருந்தனர்.

இரண்டாவதாக, தனிமைபடுத்தல் காலத்தில் நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள், வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியமைக்காக தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையே என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியம் வழங்க உத்தரவிட்டதில் இருந்து, கம்பனிகள் கட்டவிழ்த்துவிடும் சம்பள வெட்டு, வேலை நாள் குறைப்பு மற்றும் உற்பத்தி திறன் அதிகரிப்புக்கும் எதிராக கடந்த மாதம் இடம்பெற்ற வேலை நிறுத்தங்களில் வெலிஓயா தொழிலாளர்களும் பங்கெடுத்திருந்தனர். ஆயிரம் ரூபா ஊதியம் கொடுக்க வேண்டுமெனில், பறிக்க முடியாதளவு கிலோ தேயிலை கொழுந்துகளை பறிக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கும் தோட்டக் கம்பனிகள், அவ்வாறு செய்யாத தொழிலாளர்களின் ஊதியத்தை வெட்டுகின்றது.

மனித உயிரை விட முதலாளிகளின் இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாங்கத்தின் கொள்கையின் விளைவாக, கடந்த ஆண்டு பொது முடக்க காலத்திலும், பயணத் தடை காலத்திலும், எந்த நிவாரணமும் வழங்கப்படாமல் தோட்டத் தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டனர். இதன் விளைவாக பெருந்தோட்டப் பிரதேசங்களிலும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் மத்தியிலும் கொவிட்-19 வைரஸ் தொற்று பரவியுள்ளது.

கடந்த ஏப்பிரல் மாதத்தின் பின்னர் மட்டும் பிரதான பெருந்தோட்ட மாவட்டமான நுவரெலியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 625 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நுவரெலியாவில் 70க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இப்போது திங்கள் முதல் பயணத்தடைகள் நீக்கப்பட்டு வேலைக்குத் திரும்ப பணிக்கப்பட்டுள்ள நிலைமையின் கீழ், தொற்று நோய் வேகமாக பரவி மரணங்கள் அதிகரிக்கும் பேராபத்து காத்திருக்கின்றது.

போதுமானளவு ஊட்டச்சத்து உள்ள உணவுகளை பெற முடியாதளவு வறுமையில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படக் கூடிய நிலைமையில் உள்ளனர். ஒன்றோடு ஒன்று இணைந்த லயன் (வரிசை) வீடுளிலேயே அவர்கள் வசிக்கின்றனர். சில லயன்களுக்கு முறையான மலசலகூட வசதி கிடையாது. பல தோட்டங்களில் தொழிலாளர்கள் பொது நீர் குழாயையே பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமைகள் அவர்களுக்கு மத்தியில் கொரோனா தொற்று பரவும் அபாயத்தை கொண்டுள்ளன. அவர்களுக்கு கிடைக்கும் அன்றாட ஊதியத்தில், முகக் கவசம், கிருமி நாசினிகள் போன்ற பாதுகாப்பு பொருட்களை வாங்குவதற்கு ஒதுக்க முடியாது.

ஓல்டன் தோட்டத்தில் ஒரு லயன் குடியிருப்பு (WSWS Media)

இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவை அடங்கிய தமிழ் முற்போக்கு கூட்டணியும், எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி தோட்டத் தொழிலாளர்களிடம் வேலை வாங்குவதை முழுமையாக ஆதரித்தது மட்டுமன்றி, அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கோ தனிமைபடுத்தப்பட்ட தோட்டங்களுக்கு அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கோ எந்த நவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடனும் கம்பனிகளுடனும் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் ஒத்துழைத்து செயற்படுகின்றன.

Loading