முன்னோக்கு

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் மாநாடு ஜனநாயகக் கட்சியை ஊக்குவிப்பதற்காக ஒன்றுகூடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆகஸ்ட் 1 இல் இருந்து 8 வரை, அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) 1,300 பிரதிநிதிகள் அந்த அமைப்பின் ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் மாநாட்டிற்காக இணையவழியில் ஒன்று கூடுவார்கள். அம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ள அரசியலின் வரைவு கள ஆவணத்தின்படி, 'ஒழுங்கமைக்கப்பு மற்றும் கட்டுப்பாடு கொண்ட பரந்த பெரும்பான்மை தொழிலாள வர்க்கத்திற்காக உலகை வென்றெடுக்க' நோக்கம் கொண்ட வளர்ந்து வரும் ஓர் இடதுசாரி இயக்கமாக DSA தன்னைக் காட்டிக் கொள்கிறது. ஆனால் அது, அரசியல் ஸ்தாபகத்தின் வலது நோக்கிய அணிவகுப்புக்கு எதிரான எதிர்ப்பைத் தடுப்பதற்காக, ஜனநாயகக் கட்சி செயல்பாட்டாளர்களால் தலைமை தாங்கப்படும் ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவாகும்.

2019 ல் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் அமைப்பின் மாநாட்டு புகைப்படம். (Photo: Steve Eberhart, The Nation)

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் வெடிப்பு, 2020 தேர்தல், 2020-21 வேலைநிறுத்தங்கள் மற்றும் பாரிய போராட்டங்கள் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் ஜனவரி 6 பதவிக்கவிழ்ப்புச் சதி முயற்சி ஆகியவற்றுக்குப் பின்னர் இதுவே DSA தேசிய பிரதிநிதிகளின் முதல் கூட்டமாகும். கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கியும், இந்த பெருந்தொற்றுக்கு சீனாவைப் பலிக்கடா ஆக்கும் அதன் முயற்சிகளை எதிரொலித்தும், புலம்பெயர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்குத் தடை விதித்தும், சமூக வேலைத்திட்டங்களைக் கணிசமாக விரிவாக்காமலும், பைடென் நிர்வாகம் அதன் ஆறு மாதங்களில், அது ட்ரம்ப் நிர்வாகத்தின் சமூக கொள்கைகளையே தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

DSA மாநாட்டு அட்டவணையும் வரைவு கள ஆவணமும் இத்தகைய அடிப்படை அரசியல் கேள்விகளைப் புறக்கணிக்கின்றன அல்லது பல்வேறு மாநில சட்டமன்றங்கள் மற்றும் நகரசபைகளின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுகளுக்குள் தன்னை ஒருங்கிணைக்கும் அந்த அமைப்பின் முயற்சிகளுக்கு அந்த கேள்விகளைப் பின்யோசனைகளாக கையாள்கின்றன.

அந்த வரைவு அரசியல் கள ஆவணத்தில் ஜோ பைடெனைக் குறித்தோ அல்லது அவரது நிர்வாகம் பற்றியோ ஒரேயொரு குறிப்பும் இல்லை, சர்வசாதாரணமாக கடந்து செல்லும் விதத்தில் ஜனநாயகக் கட்சியைக் குறித்து ஒரேயொரு குறிப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது வெள்ளை மாளிகை அல்லது காங்கிரஸ் சபையில் ஜனநாயகக் கட்சியின் கொள்கைகள் குறித்து எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை மேற்கொள்வதற்கான முந்தைய ஜனாதிபதியின் முயற்சிக்கு உண்மையில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதைப் போல, 'பாசிசம்' பற்றியோ, தேர்தல் முடிவுகளை கவிழ்க்க ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியோ அல்லது ஜனவரி 6 நிகழ்வுகள் பற்றியோ அதில் எந்த குறிப்பும் இல்லை. கடந்த நான்காண்டுகளில் DSA இன் எண்ணற்ற உறுப்பினர்களின் அதிகரிப்பைக் குறித்து கூறுவதற்காக மட்டுமே டொனால்ட் ட்ரம்ப் அல்லது ட்ரம்ப் நிர்வாகம் குறித்த குறிப்பு இடம் பெற்றுள்ளது.

அந்த கள வரைவு ஆவணம் கோவிட்-19 பெருந்தொற்று குறித்தும் சுருக்கமாகவே குறிப்பிடுகிறது, அந்த வைரஸ் 'நூறாயிரக் கணக்கானவர்களைக் கொன்றுள்ளது' என்று மட்டுமே கூறுகிறது. உண்மையில், இந்த பெருந்தொற்று உலகெங்கிலும் 4 மில்லியனுக்கும் அதிகமானவர்களைக் கொன்றுள்ளதுடன், அதிகப்படியான இறப்புகளால் அளவிடப்பட்டவாறு அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த கள வரைவு ஆவணம், முதலாளித்துவ இலாபத்திற்காக தொழிலாளர்களின் உயிர்களைத் தியாகம் செய்யும் விதத்தில் இந்த பெருந்தொற்றுக்கு விடையிறுத்த முதலாளித்துவ வர்க்க கொள்கைகளைப் பற்றி எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.

அதற்கு மாறாக, செனட் சபையிலுள்ள முட்டுக்கட்டைகளை மாற்றுவது, கூடுதல் பெடரல் நீதிபதிக்களை நியமிப்பது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான பதவிக் காலம் மற்றும் (ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட்டில் நிலுவையிலுள்ள) ஜனநாயகக் கட்சி கொண்டு வந்த பல்வேறு சட்டமசோதாக்களை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றுவது உள்ளடங்கலாக அற்ப தேர்தல் சீர்திருத்தங்களுக்கான பல்வேறு முன்மொழிவுகளையே அந்த கள வரைவு ஆவணம் உள்ளடக்கி உள்ளது. 'பாலினம்' அல்லது 'பெண்ணியம்' குறித்து 13 குறிப்புகள், 'பாலியல் நடவடிக்கை' குறித்து எட்டு குறிப்புகள், 'இனம்' குறித்து 10 க்கு மேற்பட்ட குறிப்புகள், 'கறுப்பினம்' குறித்து 11 க்கும் அதிகமான குறிப்புகள், “வெள்ளையினத்தவர்' தோல் நிறம் குறித்து 12 குறிப்புகள் என இவற்றை உள்ளடக்கி நடுத்தர வர்க்க அரசியலின் டஜன் கணக்கான குறிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன.

'சோசலிசத்தை கட்டமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அலுவலகத்தைப் பயன்படுத்துதல்' என்றவொரு தலைப்பு உள்ளடங்கலாக, ஜனநாயகக் கட்சியில் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவதற்கான தந்திரோபாயங்கள் பற்றி விவாதிக்க அந்த மாநாட்டு அட்டவணை நான்கு அமர்வுகளைக் கொண்டுள்ளது. 'மத பாரம்பரியங்கள் இடதுக்கு என்ன வழங்க முடியும்' என்பது உட்பட மதத்திற்காக அங்கே மூன்று பகுதிகள் அர்பணிக்கப்படுகின்றன. ஒரு பகுதி கார் பிரேக் விளக்குகளை எப்படி சரி செய்வது என்று உறுப்பினர்களுக்குக் கற்றுத் தருகிறது. ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி, ஏகாதிபத்தியம் அல்லது போர் குறித்து குறிப்பிடும் தலைப்புகளில் அங்கே எந்த பகுதியும் இல்லை.

DSA தலைவர்கள் அடிப்படை அரசியல் பிரச்சினைகளில் தெளிவான நிலைப்பாடுகளை எடுப்பதற்காக அந்த அமைப்பின் களத்தை அர்பணிக்க முடியாது. ஏனென்றால் அவ்வாறு தெளிவான நிலைப்பாடுகள் எடுப்பதென்பது, அதிகரித்து வரும் சோசலிச உணர்வை, முதலாளித்துவ, ஏகாதிபத்திய கட்சியான ஜனநாயகக் கட்சியின் பின்னால் திருப்பிவிடுவதே DSA தலைமையின் நோக்கம் என்ற அந்த அமைப்பின் கருமையத்திலுள்ள முரண்பாட்டை அம்பலப்படுத்தி விடும்.

இந்த அரசியல் இயக்கவியல், DSA மற்றும் DSA ஆதரவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் வகிக்கும் பாத்திரத்தால் உறுதிப்படுத்தப்படுகிறது, இந்த அமைப்பு ஜனநாயகக் கட்சிக்கு இடது நோக்கி அழுத்தம் கொடுப்பதற்கான அதன் முயற்சிகளின் வெற்றிக்கு ஆதாரமாக இந்த அரசியல் இயக்கவியலை ஊக்குவிக்கிறது. 'பேர்ணி சாண்டர்ஸின் ஜனாதிபதி பதவிக்கான இரண்டு ஜனநாயக சோசலிஸ்டுகளின் பிரச்சாரங்களின்' வெற்றியையும், 'அரசாங்கத்தின் எல்லா மட்டங்களிலும் தொழிலாள வர்க்க தேர்தல் வெற்றிகளையும்' அந்த கள வரைவு ஆவணம் மேற்கோளிடுகிறது.

அந்த கள வரைவு ஆவணம் சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் அனுபவத்தைப் பகுப்பாய்வு செய்ய முயலவில்லை, ஏனென்றால் அவ்வாறு செய்வது பேர்ணி சாண்டர்ஸ் பிரச்சாரங்கள் அமெரிக்க முதலாளித்துவ அரசியலில் இடது நோக்கி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, மாறாக வலதை நோக்கியே மாற்றத்தை ஏற்படுத்தின என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். 2020 ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளர் போட்டியில் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்களின் வாக்குகளை வென்ற சாண்டர்ஸ், ஏப்ரலில் பைடெனை ஆமோதித்து அந்த போட்டியை விட்டுக் கொடுத்தார். அவர் பிரச்சாரம் ஓர் 'அரசியல் புரட்சியை' ஏற்படுத்தவில்லை, மாறாக முதலாளித்துவ அரசின் வரவு-செலவுத் திட்டக் கணக்கை மேற்பார்வையிடும் செனட் குழுவின் தலைவராக சாண்டர்ஸ் இணைந்ததில் போய் முடிந்தது!

2020 பொதுத் தேர்தலில், சாண்டர்ஸூம், நியூ யோர்க் ஜனநாயகக் கட்சியின் அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்ட்டேஸ் (DSA இன் ஓர் உறுப்பினர்) மற்றும் DSA தலைமையின் பெரும்பான்மையினரும் வங்கிகள், இராணுவம், கடன் அட்டை வழங்கு நிறுவனங்கள் மற்றும் சிறைச்சாலை-தொழில்துறை கூட்டின் ஒரு பிரதிநிதியும் வலதுசாரியுமான பைடைனுக்காக செயலூக்கத்துடன் பிரச்சாரம் செய்தனர். பெருநிறுவன செய்தி ஊடகம் அவை குறிப்பிடும் 'நடைமுறைவாத' அணுகுமுறைக்கு அவர் திரும்பியதைப் பாராட்டுவதுடன், பைடென் நிர்வாகத்திற்கு முட்டுக் கொடுக்க சாண்டர்ஸின் ஆழமான முயற்சிகள் மீது இப்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றன.

இந்த வாரம், குடியரசுக் கட்சியின் ஆதரவுடன் செனட் மூலம் ஒரு பழமைவாத உள்கட்டமைப்பு பொதியை நிர்பந்திக்க சாண்டர்ஸ் உதவி செய்தார். மார்ச் 2020 இல் பெருநிறுவனங்களுக்கான பல ட்ரில்லியன் டாலர் அன்பளிப்பான கேர்ஸ் சட்டத்திற்கு (CARES Act) வாக்களித்த பின்னர், சாண்டர்ஸ் இப்போது வறுமை மற்றும் சமத்துவமின்மையை எதிர்கொள்வதற்கான சமூக வேலைத் திட்டங்களுக்கோ அல்லது வேலைவாய்ப்பு திட்டங்களுக்கோ டிரில்லியன்களைச் செலவிட கோரும் அழைப்புகளைத் தடுத்து வருகிறார். முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மூத்த ஆலோசகர் டேவிட் ஆக்செல்ராட் Politico க்கு கூறுகையில், சாண்டர்ஸ் 'கொள்கைரீதியான பாதையில் நடைமுறைக்கு உகந்தவராக' மாறி இருப்பதாக தெரிவித்தார். சாண்டர்ஸ் இன்னும் பழமைவாத தன்மைக்கு மாறிவிட்டாரா என்ற கேள்விக்கு, ஜனநாயகக் கட்சியின் மிதவாத செனட்டர் பிரையன் ஷாட்ஸ், 'நான் அவரை சிக்கலில் சிக்க வைக்க விரும்பவில்லை' என்ற பதிலில் ’ஆம்’ என்பதைத் தேர்வு செய்ததாக' Politico குறிப்பிட்டது.

சாண்டர்ஸின் அரசியல் அமைப்பான 'எமது புரட்சி', 'வேறொரு முத்திரையைப் பெற்று கொண்டிருக்கிறது... சாண்டர்ஸின் அடையாளமாக விளங்கும் அனைவருக்குமான, அரசு நிதியுதவி பெறும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம், ‘அனைவருக்கும் மருத்துவக் கவனிப்பு’ திட்டத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக அல்லது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் பசுமைக் கட்சியுடனான புதிய உடன்படிக்கைக்குப் பதிலாக, எமது புரட்சி அமைப்பு ஜனாதிபதி ஜோ பைடென் ஆமோதிக்கும் மிகவும் மிதவாத மாற்றீடுகள் மீது ஒருங்குவிந்து வருகிறது,” என்று அசோசியேட்டட் பிரஸ் புதன்கிழமை குறிப்பிட்டது.

காங்கிரஸ் சபையிலுள்ள DSA உறுப்பினர்களின் 'கூட்டமும்' அதே பாத்திரம் தான் வகித்துள்ளன. நியூ யோர்க் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் DSA உறுப்பினர்கள் ஜமால் பௌமன் மற்றும் ஒகாசியோ-கோர்ட்டெஸ் ஆகியோர் கடந்த வாரம் (ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரியான) நியூ யோர்க் நகர ஜனநாயகக் கட்சியின் பழமைவாத மேயர் வேட்பாளர் எரிக் ஆடம்ஸை சந்தித்தனர். ஒகாசியோ-கோர்ட்டெஸுக்கு அடுத்து பேசிய பௌமன், இதுவொரு 'நல்ல சந்திப்பு' என்று கூறியதுடன், 'இது சித்தாந்தம் அல்லது கட்சி சம்பந்தப்பட்டதில்லை, அதெல்லாம் முட்டாள்தனமானது. நாங்கள் அதுகுறித்து பேசவில்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஜனநாயகக் கட்சியின் வலதுசாரிகளை மீது DSA தலைவர்கள் பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கின்ற அதேவேளையில், கொள்கையளவில் DSA க்கு அது எந்த விட்டுக்கொடுப்புகளையும் செய்யாது என்பதைத் தெளிவுபடுத்தி வலது விடையிறுத்து வருகிறது. எரிக் ஆடம்ஸூம் சரி பைடெனும் சரி இருவருமே சமீபத்தில் சோசலிசத்தைக் கண்டித்தனர், பைடென் கூறுகையில், 'கம்யூனிசம் ஒரு தோல்வியுற்ற அமைப்புமுறை, உலகளவில் தோல்வியுற்ற அமைப்புமுறை. சோசலிசத்தை மிகவும் பயனுள்ள மாற்றீடாக நான் பார்க்கவில்லை, என்றாலும் அது மற்றொரு கதை,' என்றார். அவர் கட்சியின் இடது சாரியைக் கண்டிக்கும் அதேவேளை, பைடென் குடியரசுக் கட்சியினரை ஊக்குவிக்க அழைப்பு விடுக்கிறார். ட்ரம்பின் ஜனவரி ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியைக் குடியரசுக் கட்சியினர் ஆதரித்த சில நாட்களுக்குப் பின்னர் அவர் கூறுகையில், 'நமக்கு குடியரசுக் கட்சி வேண்டும்,' என்று கூறிய அவர், 'நமக்கு கொள்கை அடிப்படையில் வலுவான ஓர் எதிர்கட்சி வேண்டும்' என்றார்.

இந்த DSA மாநாடு AFL-CIO அதிகாரத்துவத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது, DSA உறுப்பினரும் விமானச் சிப்பந்திகள் சங்க தலைவருமான சாரா நெல்சலும் பேச்சாளர்கள் வரிசையில் உள்ளார். AFL-CIO அதிகாரத்துவத்திற்கு எதிராக தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் கிளர்ச்சி பற்றி DSA மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு நன்றாகவே தெரியும், தொழிற்சங்கங்களின் அரை நூற்றாண்டு காட்டிக்கொடுப்புகளில் AFL-CIO அதிகாரத்துவம் உடந்தையாய் இருந்தது என்று கூறுவதற்கு பதிலாக, அவர்களை “தொழிற்சங்க பிளவுகளால்' பாதிக்கப்பட்டவர்களாக அவை காட்டுகின்றன. இந்த கள வரைவு ஆவணம் 2018 ஆசிரியர்கள் திடீர் வேலைநிறுத்த அலையை தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிராக சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியாக அல்ல, மாறாக ஒரு 'தொழிற்சங்க சீர்திருத்த இயக்கமாக' முன்வைக்கிறது. அந்த கள வரைவு ஆவணம், PRO Act சட்டத்தை ஊக்குவிப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தின் மீது AFL-CIO இன் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதை உறுதி செய்கிறது.

இதற்கிடையே, DSA உம் ஜாகோபின் சஞ்சிகை உள்ளடங்கலாக அதனுடன் தொடர்புடைய வெளியீடுகளும், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் நடத்திய காட்டிக் கொடுப்புகளுக்கு எதிராக சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியாக அபிவிருத்தி அடைந்த, வேர்ஜீனியாவின் டப்ளின் வொல்வோ ஆலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மீது முழுமையாக மௌனம் சாதித்தன.

DSA அதுவே கூட உள்கட்சி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் இந்த மாநாடு நடக்கிறது. ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தேசியக் குழு உறுப்பினர் டேவிட் துஹால்டே போன்றவர்களைக் கொண்ட அதன் தலைமை, சோசலிசத்திலும் மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொள்ளுவதிலும் உண்மையான ஆர்வம் கொண்ட அடிமட்ட அங்கத்தவர்கள் மீது பெருமளவில் விரோதப் போக்கைக் கொண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

பைடென் நிர்வாகமும் தற்போது பதவி வகிக்கும் ஜனநாயகக் கட்சியினரும் 'இன்னும் அதிக முற்போக்கான திசையில் தங்களை முற்றிலுமாக புதுப்பித்து [வருகிறார்கள்]' என்றும், கீழிருந்து வரும் அழுத்தம் ஜனநாயகக் கட்சித் தலைமையில் 'கிட்டத்தட்ட ஒரு தீவிர மாற்றத்தை' ஏற்படுத்தியுள்ளதாகவும் ஒகாசியோ-கோர்ட்டெஸ் மார்ச் மாதம் DSA இன் Democratic Left பத்திரிகைக்குக் கூறிய போது, ஆயிரக்கணக்கான DSA உறுப்பினர்கள் கோபத்துடன் விடையிறுத்ததனர். பைடென் நிர்வாகத்திலுள்ள சோசலிச எதிப்பாளர்களை 'தனிச்சலுகை கொண்ட' இனவாத 'தீய நம்பிக்கையாளர்கள்' என்று ஒகாசியோ-கோர்ட்டெஸ் தாக்கினார். DSA மற்றும் அதன் ஸ்தாபகர் மைக்கெல் ஹாரிங்டனின் சாக்ட்மனிச வேர்களான கம்யூனிச-எதிர்ப்பைப் பிடித்துக் கொண்ட ஒகாசியோ-கோர்ட்டெஸ் அவர்கள் 'மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை' என்று கூறி 'வர்க்க அத்தியாவசியவாதிகள்' என்று கண்டித்தார்.

ஆயிரக்கணக்கான DSA உறுப்பினர்கள் உட்பட 100,000 க்கும் அதிகமானவர்களால் வாசிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஒகாசியோ-கோர்ட்டெஸின் பேட்டியை அம்பலப்படுத்திய போது, DSA தலைமையின் ஒரு அணி லியோன் ட்ரொட்ஸ்கியின் ஸ்ராலினிச படுகொலையை கேலி செய்வதற்கும் மற்றும் ஸ்ராலினிசத்தின் குற்றங்களைக் குறைத்து காட்டுவதற்குமான ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது. மே 22 இல், உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், அதற்கு பொறுப்பானவர்கள் மீது அந்த அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி DSA அரசியல் இயக்குனர் மரியா ஸ்வார்ட்க்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினார், ஆனால் ஸ்வார்ட் அந்தக் கடிதத்திற்குப் பதிலளிக்கவில்லை. பல DSA கிளைகளும் அந்த விஷயத்தில் ஜனநாயக விவாதம் கோரிய உறுப்பினர்களின் கோரிக்கைகளை தடுத்தன.

பாரிய மரணம், வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பார்ந்த அதிகரிப்பு, பெரியளவில் அச்சுறுத்தும் காலநிலை மாற்ற நெருக்கடி, போர் மற்றும் பாசிசத்தின் அபாயங்கள் என இவற்றுக்கு மத்தியில், DSA, முதலாளித்துவ அரசியலின் கேலிக்கூத்தான இயக்கவியலில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. உலக ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் 200 ஆண்டு கால பழைய அமைப்பான ஜனநாயகக் கட்சிக்கு DSA முட்டுக் கொடுத்து வருகிறது, அந்த கட்சியோ சமூக ஸ்திரப்பாட்டுக்குத் தேவையான ஓர் ஆதார அமைப்பாக குடியரசுக் கட்சிக்கு முட்டுக் கொடுக்கிறது. பின்னர் குடியரசுக் கட்சியினர் 'சட்டம் ஒழுங்கின்' உருவடிவமாகவும் பெருநிறுவன இலாபங்களுக்கான பாதுகாவலராகவும் அதிகரித்தளவில் ட்ரம்பை நம்பி உள்ளனர்.

இதன் விளைவாக, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும், DSA ஐயும் அதனுடன் சேர்த்து, மேலும் கூடுதலாக வலதுக்கு தள்ளுகிறது. புரட்சியாளர்களுக்கு, சோசலிசம் அல்லாத எல்லாவற்றிற்கும் ஒரு முன்னுதாரணமாக DSA இருக்கிறது.

Loading