முன்னோக்கு

கோவிட்-19 ஐ முற்றிலுமாக ஒழிக்கும் மூலோபாயத்தின் பாகமாக அனைத்து அமெரிக்க பள்ளிகளும் மூடப்பட வேண்டும்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா எங்கிலும் மழலையர் முதல் 12ம் வகுப்புவரையான (கே-12) பள்ளிகளை மீண்டும் திறந்திருப்பது பேரழிவுகரமாக இருக்குமென்பது ஏற்கனவே நிரூபணமாகி உள்ளதுடன், கோவிட்-19 பெருந்தொற்று மிகப்பெரியளவில் அதிகரிக்க அது எரியூட்டி வருகிறது. ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்களின்படி, ஏழு நாட்களின் நாளாந்த புதிய நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை இப்போது 137,270 ஆக உள்ளது, இது கடந்தாண்டு தொழிலாளர் தினத்தில் இருந்த சராசரியை விடவும் மூன்று மடங்கிற்கும் அதிகமாகும். கடந்த மாதத்தில் மட்டும் நான்கு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பள்ளிகளை மீண்டும் திறந்துள்ள பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஏனைய நாடுகளிலும் அதிகரிப்புகள் இருக்கின்றன, அதேவேளையில் தடுப்பூசி இடும் விகிதங்கள் ஸ்தம்பித்துள்ள நிலையில், இந்த பெருந்தொற்று எங்கேயுமே அகற்றப்படும் நிலைமைக்கு அருகில் இல்லை.

மிகவும் அச்சமூட்டும் வகையில், செப்டம்பர் 2 இல் முடிவடைந்த வாரத்தில் 251,781 குழந்தைகள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க குழந்தை மருத்துவ அகாடமி குறிப்பிடுகிறது. இந்த பெருந்தொற்று தொடங்கியதற்குப் பின்னர், இதுவே குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச அளவாகும், மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த அளவை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

ஆகஸ்ட் 26, 2021 அன்று வடக்கு டகோட்டாவின் வாட்ஃபோர்ட் நகரில் உள்ள ஃபாக்ஸ் ஹில்ஸ் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான கதவை அதிபர் பிராட் ஃபோஸ் திறந்து வைத்திருக்கிறார். (AP Photo/Matthew Brown)

கோவிட்-19 நோய்தொற்றுகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்று கொண்டிருக்கையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான இந்த உலகளாவிய கொள்கை, “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்,” தீவிர பரவலைக் குறைக்கும் தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் முற்றிலுமாக ஒழித்தல் என கோவிட்-19 பெருந்தொற்றுக்காக எழுந்துள்ள மூன்று மூலோபாயங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் கூர்மையாக வெளிப்படுத்துகிறது.

அமெரிக்காவில் கோவிட்-19 ஐ அகற்றி இறுதியில் இந்த வைரஸை உலகம் முழுவதும் ஒழிக்கும் ஒரு பரந்த மூலோபாயத்தின் பகுதியாக எல்லா பள்ளிகளையும் உடனடியாக மூட வேண்டியதன் அவசியத்தை அமெரிக்காவில் நிகழ்ந்து வரும் பேரழிவு தெளிவுபடுத்துகிறது. இந்த மூலோபாயம் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது, பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுதல், வெகுஜனங்களுக்கு தடுப்பூசிகள், பயணக் கட்டுப்பாடுகள், முகக்கவசம் அணிதல், அனைவருக்கும் பரிசோதனை, நோயின் தடமறிதல் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல் என இவற்றின் மூலம் முற்றிலுமாக இதை ஒழிக்க முடியும் என்பதை இந்த மூலோபாயம் நிரூபிக்கிறது. கோவிட்-19 ஆல் ஏற்பட்ட உண்மையான உலகளாவிய இறப்பு எண்ணிக்கை சுமார் 15.2 மில்லியனாக இருக்கலாம் என்ற எக்னோமிஸ்ட் இதழின் சமீபத்திய மதிப்பீடு, தொழிலாள வர்க்கத்திடையே இந்த மூலோபாயத்தைப் பிரபலப்படுத்த வேண்டியதன் அவசரத்தை அடிக்கோடிடுகிறது.

பள்ளிகளை மீண்டும் திறப்பதன் மூலம் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்

கோவிட்-19 நோய் பாதிக்கும் வகையில் 40 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி போடப்படாத குழந்தைகளை, சரியான காற்றோட்டம் இல்லாத வகுப்பறைகளில் நடைமுறையளவில் நெருக்கமாக ஒன்று கூட்டி, பள்ளிகளை முழுமையாக மீண்டும் திறந்திருப்பது, ஆளும் வர்க்க பிரிவுகள் முன்னெடுத்துள்ள 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' மூலோபாயத்தின் மிகவும் கொடூரமான வெளிப்பாடாகும். இளைஞர்களுக்கு வேகமாக நோய்தொற்று ஏற்படுத்துவதன் மூலம் மக்கள்தொகையில் மிகவும் பாதிக்கப்படும் பிரிவுகளை 'பாதுகாக்க' முடியும் என்ற மோசடி வாதத்தின் அடிப்படையில், இந்த மூலோபாயம் நடைமுறையில் சமூகத்தில் அனைவரையும் வைரஸிடம் ஒப்படைப்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழப்பதையும் ஏற்றுக் கொள்கிறது.

பள்ளிகளை மீண்டும் திறப்பதன் மூலம் அமெரிக்காவில் குழந்தைகள், கல்வியாளர்கள் மற்றும் பரந்த மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் சமூக குற்றத்தின் அளவைப் பின்வரும் விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன:

• தெற்கு மாநிலங்களில் குழந்தையர் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்ற நிலையில், கடந்த வாரம் ஒவ்வொரு நாளும் அதிகபட்ச சராசரியாக 365 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

• கடந்த மாதம், கோவிட்-19 ஆல் 73 குழந்தைகள் உயிரிழந்தனர், இது இந்த பெருந்தொற்று ஆரம்பித்ததற்குப் பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட குழந்தை இறப்புகளிலேயே அதிகபட்ச அளவாகும்.

• இந்த கல்வியாண்டில் இதுவரையில் 197 க்கு அதிகமான எண்ணிக்கையில் பள்ளி பணியாளர்கள் உயிரிழந்திருப்பதை #SchoolPersonnelLostToCovid என்ற ட்வீட்டர் பக்கம் பதிவு செய்துள்ளது, இதில் பெரும்பான்மை ஆகஸ்டில் நிகழ்ந்துள்ளது.

• பல கல்வியாளர்களும் இந்த கல்விப் பருவத்தில் டெக்சாஸ் வாகோ, ஜோர்ஜியா புல்லொச் உள்ளாட்சி, புளோரிடா போல்க் உள்ளாட்சி மற்றும் இன்னும் பலவற்றில் ஒரே பள்ளியில் அல்லது மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.

• மியாமி-டேட் கவுண்டி பொது கல்வித்துறை மாவட்டத்தில் குறைந்தபட்சம் 15 கல்வியாளர்கள் மற்றும் பணியாளர்கள் சமீபத்திய 100 நாளுக்குள் கோவிட்-19 ஆல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

• பள்ளிகளில் கட்டாய முகக்கவசம் உத்தரவு நீக்கப்பட்ட டெக்சாஸில், ஆகஸ்ட் 29 இல் முடிந்த வாரத்தில் கோவிட்-19 ஆல் 27,353 மாணவர்கள் பரிசோதனையில் நோய்தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர், இது அதற்கு முந்தைய வாரத்தை விட 51 சதவீதம் அதிகமாகும்.

ஒரு தலைமுறை இளைஞர்கள் அறியப்படாத நீண்ட கால விளைவுகளோடு நோய்க்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். கோவிட் ஆல் குழந்தைகளுக்கு ஏற்படும் நீண்டகால நோய் பற்றிய உலகின் மிகப் பெரிய ஆய்வின் ஆரம்ப கண்டுபிடிப்புகள், கோவிட்-19 நோய்தொற்றுக்கு உள்ளான குழந்தைகளில் 4 சதவீதத்தினருக்கு 15 வாரங்களுக்குப் பின்னர் மிகவும் பொதுவான சோர்வு மற்றும் தலைவலிகளுடன் அந்த வைரஸூடன் தொடர்புடைய மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருப்பதாக சுட்டிக் காட்டுகின்றன.

நோய்த்தொற்று அதிகரிப்பு, மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளும் பள்ளிகளை மீண்டும் திறப்பதை முற்றிலும் குழப்பமானதாக ஆக்கியுள்ளது. 35 மாநிலங்களில் குறைந்தபட்சம் 1,000 பள்ளிகள் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடையே ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் காரணமாக இந்த பள்ளி கல்வியாண்டை தொலைதூர கற்றலுக்கு மாற்ற வேண்டியிருந்ததாக தரவு சேவை நிறுவனம் பர்பியோ குறிப்பிடுகிறது. கென்டக்கியில், அனைத்து பள்ளி மாவட்டங்களில் ஐந்தில் ஒன்றை மூட வேண்டியிருந்தது, பல வாரங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள பல மாநிலங்களிலும் ஒப்பீட்டளவில் இதேபோன்ற புள்ளிவிபரங்களே இருக்கின்றன.

பள்ளிகளை மீண்டும் திறப்பதை 'பாதுகாப்பாக' செய்ய முடியும் என்றும், இது முற்றிலும் குழந்தைகளின் கல்வி மற்றும் உணர்வுரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்தவே செய்யப்படுகிறது என்றும் அரசியல்வாதிகளும், ஊடகமும், தொழிற்சங்க அதிகாரிகளும் கூறும் கூற்றுக்கள் எரிச்சலூட்டும் பொய்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை இந்த உண்மைகள் தெளிவுபடுத்துகின்றன.

கே-12 பள்ளிகளை மீண்டும் திறப்பதானது, தீவிரத்தைக் குறைப்பதற்கான எந்தவித இன்றியமையா நடவடிக்கைகளும் இல்லாமல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நேரடி வகுப்புகளுக்காக மீண்டும் திறப்பதோடும் ஒத்துப்போகிறது. அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதங்களைக் கொண்டுள்ள டியூக் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் இன்னும் பல பள்ளிகளிலும் ஏற்கனவே குறிப்பிடத்தக்க வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. வடக்கு கரோலினாவின் அப்பலாச்சியன் மாநில பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டமை, அப்பகுதியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகபட்ச மட்டத்திற்கு அதிகரிக்க பங்களிப்பு செய்துள்ளது. தொழிலாளர் தின வார இறுதியில் பார்த்தவாறு, பத்தாயிரக் கணக்கான மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் நிரம்பிய கால்பந்து மைதானங்கள் தவிர்க்க முடியாதபடி பாரியளவில் நோய்தொற்று பரப்பும் நிகழ்வுகளாக ஆகியிருந்தன, இது எண்ணற்ற புதிய நோயாளிகள் மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கும்.

ஆரம்பத்தில் இருந்தே, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் எப்போதும்போல் பொருளாதாரரீதியாகத் தான் உள்ளது, இது பெற்றோரை மீண்டும் வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பெருநிறுவனங்களின் தேவைகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஜூலையில், பைடெனின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகர் பிரையன் டீஸ் குறிப்பிடுகையில், 'குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு, குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் பள்ளிகள்' இல்லாததே இப்போதிருக்கும் 'தொழிலாளர் பற்றாக்குறைக்கு' பின்னால் உள்ள பிரதான காரணிகளில் ஒன்று என்று அப்பட்டமாக கூறினார். பள்ளிகளின் திறப்பு, வேலைவாய்ப்பற்றோருக்கான பெடரல் சலுகை வெட்டுகளுடனும் மற்றும் வெளியேற்றத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால நிறுத்தம் நீக்கப்படுவதுடனும் சேர்ந்து வருகிறது. இது பாதுகாப்பற்ற பள்ளிகளுக்குக் குழந்தைகளையும் அனுப்பி, அவர்களும் பாதுகாப்பற்ற வேலையிடங்களுக்கு திரும்பாவிட்டால் வீடற்ற நிலைமை மற்றும் வறுமைக்கு உள்ளாக வேண்டியிருக்குமென மில்லியன் கணக்கான குடும்பங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

அரிசோனா, அர்கன்சாஸ், அயோவா, ஓக்லஹோமா, புளோரிடா, தெற்கு கரோலினா, டெக்சாஸ் மற்றும் உற்றா உள்ளடங்கலாக குடியரசுக் கட்சி தலைமையிலான மாநிலங்களின் பள்ளிகளில் கட்டாய முகக்கவசம் ஆணையை நீக்குவதிலிருந்து 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' மூலோபாயம் கொடூரமாக எடுத்துக்காட்டப்படுகிறது, இந்த மாநிலங்கள் குழந்தைகள் உள்ளடக்கி நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்பு விகிதங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களாகும். இந்த பள்ளிகளில், இந்த கல்வியாண்டு தொடங்கி மூன்று மாதங்களுக்குள் சுமார் 91 சதவீத மாணவர்கள் கோவிட்-19 நோய்தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என்றும், நோயாளிகளின் அதிவேக அதிகரிப்பின் காரணமாக முதல் மாத முடிவிலேயே பெரும்பாலான மாணவர்கள் நோய்தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என்றும் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட ஒரு விஞ்ஞான ஆய்வு மதிப்பிட்டது.

பள்ளிகளில் தணிப்பு நடவடிக்கைகள்: நோய்தடுப்பு சிகிச்சையுடன் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்'

தீவிர பரவலைக் குறைக்கும் தணிப்பு நடவடிக்கைகளுக்கான இரண்டாவது பெருந்தொற்று மூலோபாயமானது, முகக்கவசங்கள் அணிவதனாலும், பணியாளர்களுக்கும் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி இட தகுதியான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலமாகவும் பள்ளிகளை மீண்டும் 'பாதுகாப்பாக' திறக்கலாம் என்ற பொய்யான வாதத்தை முன்வைக்கிறது. “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்திற்கு' ஒரு மாற்றீடாக தணிப்பு நடவடிக்கைகளுக்கான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன என்றாலும், யதார்த்தத்தில் அந்த மூலோபாயத்தின் கூர்மையான பகுதிகளைச் சற்று மழுங்கடித்து அதே மூலோபாயத்தின் ஒரு மாற்று வடிவமாக மட்டுமே இது இருக்கிறது.

இந்த கொள்கை தவிர்க்க முடியாமல் மில்லியன் கணக்கான குழந்தைகளைப் பாதிக்கும் என்பதும், கோவிட்-19 பரவலை ஆழப்படுத்தும் என்பதும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் 'தணிப்பு நடவடிக்கைகளுடன்' பள்ளிகளை மீண்டும் திறப்பதை ஊக்குவிக்கும் ஊடகப் பிரதிநிதிகளுக்குத் தெரியும். மருத்துவமனைகள் மற்றும் பிற சமூக சேவைகளின் பற்றாக்குறை மிதமிஞ்சி நிரம்பி வழிவதைத் தடுப்பதற்காக மட்டுமே அவர்கள் இதை மெதுவாக செய்ய முற்படுகிறார்கள். தீவிரப் பரவலைத் தடுப்பதற்கான அவர்களின் தணிப்பு முயற்சிகள் வைரஸுக்கு எதிரானதல்ல, மாறாக 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கைகளின் விளைவுகளுக்கு எதிராக இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, இந்த பெருந்தொற்றுக்குத் தடுப்பூசி தான் மொத்த தீர்வு என்ற வாதம் தடுப்பூசிகளின் செயல்திறன் பண்புகளைச் சார்ந்தது, இப்போதைக்கு அவை அந்தளவுக்கு கிடையாது. 12 வயதுக்குக் கீழ் உள்ள எல்லா குழந்தைகளும் உள்ளடங்கலாக மக்களின் கணிசமான பகுதிக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக தொடர்ந்து அந்த வைரஸ் பரவிக் கொண்டிருப்பதானது இன்னும் வெகுவாக பரவக்கூடிய மற்றும் தடுப்பூசிக்கு எதிரான புதிய வகைகள் பரிணமிப்பதற்கான நிலைமைகளை தோற்றுவிக்கிறது. தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் நோய்தொற்று ஏற்படுகிறது என்பதோடு அவர்களும் வைரஸைப் பரப்புகிறார்கள், டெல்டா வைரஸ் வகையின் வெளிப்பாடு 'நோய்தொற்றுக்களின்' அதிகரிப்பில் ஒரு 'திருப்புமுனையை' ஏற்படுத்தி உள்ளது, முன்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களும் நோய்வாய் படுகிறார்கள் மற்றும் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது என்பதும் இதில் உள்ளடங்கும்.

தடுப்பூசி ஒரு சக்தி வாய்ந்த கருவி தான் என்றாலும், புதிய நோய்தொற்றுகளை விரைவாக பூஜ்ஜியமாக குறைப்பதையும், அவ்விதத்தில் கோவிட்-19 ஐ ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த மூலோபாயத்திலிருந்து அது துண்டிக்கப்பட்டுள்ளது, தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பிற பரவல் தடுப்பு தணிப்பு நடவடிக்கைகள், நோய்த்தடுப்பு கவனிப்பைத் தவிர வேறொன்றுமில்லை.

'தணிப்பு நடவடிக்கைகள்' உடன் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து மிகவும் குரல் கொடுப்பவர், அமெரிக்க ஆசிரியர் சம்மேளனத்தின் (AFT) தலைவர் ராண்டி வைன்கார்டன் ஆவார், இவர் கடந்த மாதம் அமெரிக்கா எங்கிலும் 20 மாநிலங்களில் இந்த கொலைபாதக கொள்கையை ஊக்குவிக்க 'அனைவரையும் பள்ளிக்குத் திரும்பச் செய்யும்' பிரச்சார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார். தொழிலாளர் தினத்தன்று வெளியிடப்பட்ட ஒரு அசாதாரண அறிக்கையில், AFT உறுப்பினர்கள் 'புதிய பள்ளி கல்வியாண்டில் நேரடி வகுப்புகளுக்குத் திரும்ப இருப்பதைக் குறித்து சந்தோஷப்படுவதாக' வைன்கார்டன் கூறினார்.

'இந்த டெல்டா வகை பள்ளிகளைத் திறந்து விடவும், அவை அனைவருக்கும் பாதுகாப்பானதாக, ஆரோக்கியமானதாக, வரவேற்பதாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்குமான நம் தீர்மானத்தை மாற்றிவிட வில்லை. ஆனால் தடுப்பூசிகள், முகக்கவசங்கள், காற்றோட்ட வசதி, கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளி, பரிசோதனைகள் மற்றும் வெடிப்பு ஏற்பட்டால் அதற்கான தெளிவான வழிமுறைகள் என நம் பள்ளி சமூகங்களைப் பாதுகாக்க வைக்க அது நமக்குத் தெரிந்த கருவிகளை இன்னும் சிறப்பாக பயன்படுத்த செய்துள்ளது,” என்று அந்த பெண்மணி எழுதினார்.

பெரும்பாலான கல்விசார் மாவட்டங்கள் ஏற்கனவே மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், அறிக்கையை எழுதியிருந்த வைன்கார்டனுக்கு, பெரும்பாலான பள்ளிகளில் இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவில்லை என்பது நன்றாகவே தெரியும். தடுப்பூசிகள் கட்டாயம் ஆக்கப்படவில்லை, முகக்கவசங்கள் அவ்வபோது அணியப்படுகிறது, 30,000 க்கும் அதிகமான அமெரிக்க பள்ளிகளில் பழைய கால காற்றோட்ட அமைப்பு வசதிகளே உள்ளன, பல பள்ளிகளில் சவர்காரம் மற்றும் கைத்துடைக்கும் துணிகள் கூட இல்லை, 30 அல்லது அதற்கு அதிகமான மாணவர்களுடன் வகுப்பறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை, போதுமானளவுக்குப் பரிசோதனைகளும் கிடையாது.

கோவிட்-19 ஐ அகற்றி இறுதியில் முற்றிலுமாக இல்லாதொழிப்பதே கொள்கையின் அடிப்படையாக மற்றும் இலக்காக இருக்க வேண்டுமென பல விஞ்ஞானிகளும், சாமானிய தொழிலாளர்களும், பெற்றோர்களும், பொது சுகாதாரத் துறையில் சம்பந்தப்பட்டவர்களும் தனிப்பட்டரீதியில் நம்புகிறார்கள். ஆனால் அரசாங்கம் மற்றும் நிறுவனங்களின் அளப்பரிய எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள அவர்கள், இந்த சரியான மற்றும் அவசியமான கொள்கையை ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது என நினைக்கிறார்கள். சிறந்த நோக்கங்கள் இருந்தாலும் கூட, தீவிரப் பரவலைக் குறைக்கும் தணிப்பு நடவடிக்கை மூலோபாயத்திற்கே பின்வாங்கி, காற்றோட்ட வசதி, சமூக இடைவெளி, நாளாந்த பரிசோதனை, நோயின் தடம் அறிதல் மற்றும் இன்னும் பலவற்றை உள்ளடக்கிய பரந்த நடவடிக்கைகளின் தொகுப்புக்கே அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள். அவர்கள் அதை நியாயப்படுத்த முயன்றாலும் கூட, இந்த அணுகுமுறை தவறானதே.

முடிந்த வரை உயிர்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருந்தாலும் கூட, தணிப்பு மூலோபாயத்திற்கு எந்த விதத்திலும் பின்வாங்குவது தவறானது என்பதோடு, பள்ளிகளில் வைரஸ் பரவலைக் குறித்த விஞ்ஞானபூர்வ யதார்த்தத்தைத் தவிர்க்கிறது. தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளிடையே இந்த வைரஸை இல்லாது ஒழிக்கும் மூலோபாயத்தைக் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வ புரிதலையும் பாரிய நனவையும் அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே, இந்த பெருந்தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

முற்றிலுமாக ஒழிக்கும் மூலோபாயத்தில் பள்ளி மூடுவது வகிக்கும் பாத்திரம்

பள்ளிகள் வைரஸ் பரவலின் முக்கிய மையங்களாக நீண்ட காலமாக அறியப்பட்டுள்ளன. கோவிட்-19 க்கு இது வேறு விதமாக இல்லை என்பதை ஜனவரியில் வெளியான ஓர் ஆய்வு எடுத்துக்காட்டியது. 10 இல் இருந்து 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் 30-49 வயதுடைய பெரியவர்களிடையே இருந்த நோயாளிகளின் அதிகரிப்பை விட அதிகமாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், அதாவது பாதிக்கப்பட்ட குழந்தைகள் அவர்கள் பெற்றோருக்கு நோய்தொற்றை ஏற்படுத்துகிறார்கள், இதற்கு எதிர்மாறாக இல்லை என்பதே இதன் அர்த்தமாகும்.

கோவிட்-19 பரவுவதற்கு மனித உடலைப் பயன்படுத்துகிறது என்பதோடு, அது பரவும் எல்லா வழிகளையும் துண்டிப்பதன் மூலமாக மட்டுமே அதை ஒடுக்க முடியும் என்பதே அகற்றுதல் - முற்றிலுமாக ஒழித்தல் மூலோபாயத்தின் அடிப்படை விதியாகும். இதற்கு, பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுதல், பயணக் கட்டுப்பாடுகள், பாரிய பரிசோதனை, முகக்கவசம் அணிதல், நோயின் தடம் கண்டறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல் மற்றும் பாரிய தடுப்பூசிகளுடன் சேர்ந்து பிற அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளும் அவசியப்படுகின்றன.

ஆகஸ்ட் 22 இல் நடத்தப்பட்ட உலக சோசலிச வலைத் தள இணையவழி கூட்டத்தில் பேசிய கால்கரி பல்கலைக்கழகத்தின் டாக்டர் மால்கோர்சாட்டா காஸ்பெரோவிச் (Malgorzata Gasperowicz), தீவிரமான பொது சுகாதார நடவடிக்கைகள் இருந்திருந்தால் 2020 தொடக்கத்தில் 37 நாட்களிலேயே புதிய நோயாளிகளை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்திருக்கும், மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார். டெல்டா மாறுபாட்டின் பரவலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அவரது மாதிரி வடிவம் ஒரு குறிப்பிட்ட நாட்டில் தடுப்பூசிகளோடு சேர்ந்து தீவிரமான பொது சுகாதார நடவடிக்கைகள் மூலமாக இரண்டே மாதங்களில் அந்த வைரஸை அகற்ற முடியும் என்று மதிப்பிடுகிறது. இதன் பரவலை நிறுத்த தடுப்பூசிகள் மட்டுமே போதுமானது இல்லை என்று வலியுறுத்திய அவர், 'அதை நிறுத்த, அதன் வேகத்தைக் குறைக்க நம் கருவிப்பெட்டியில் நாம் வைத்திருக்கும் அனைத்தும் நமக்குத் தேவைப்படுகிறது,' என்றார்.

1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு பரந்த சமூகமான சீனாவிலும், நியூசிலாந்திலும் பிற நாடுகளிலும், மேலே குறிப்பிடப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளின் தொகுப்பைப் பயன்படுத்தியதன் மூலம், வைரஸை அகற்றும் மூலோபாயம் மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. கோவிட்-19 ஐ அகற்றிய பின்னர், இந்த நாடுகள் இப்போது சர்வதேச பயணத்தின் மூலம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட டெல்டா மாறுபாடு மீண்டும் வெடித்திருப்பதை எதிர்த்துப் போராடி வருகின்றன.

சீனாவின் மிக சமீபத்திய வெடிப்பு குவாங்ஜோவில் சர்வதேச பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை, அந்த ஹோட்டலில் 42 வயதான தொழிலாளர் ஜ்சூ, பரிசோதனையில் கோவிட்-19 நோய்தொற்றுக்கு ஆளாகி இருந்தார், சீனாவில் அனைத்து கோவிட்-19 நோயாளிகளுக்கும் செய்யப்படுவதைப் போல, உடனே அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். சுற்றியுள்ள பகுதிகளில் பாரியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது, சனிக்கிழமை நள்ளிரவுக்குள் சேகரிக்கப்பட்ட 92,185 மாதிரிகள் அனைத்தும் எதிர்மறையாக இருந்தன. ஜ்சூ உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடங்களில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

சீனா, நியூசிலாந்து மற்றும் பிற முதலாளித்துவ அரசாங்கங்களின் விடையிறுப்பு இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட முடியும் என்பதைக் காட்டுகிறது. அவை செயல்படுத்திய அவசியமான பொது சுகாதார நடவடிக்கைகள், கிட்டத்தட்ட மொத்த அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனமும் விவரிக்கும் விதத்தில், எந்த வகையிலும் 'எதேச்சதிகாரம்' அல்ல. மாறாக, கோவிட்-19 ஐ அகற்ற சமூகத்தின் ஆதார வளங்களைத் திரட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை அவை எடுத்துக் காட்டுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் ஓர் உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் இது மேற்கொள்ளப்பட்டால், இந்த பெருந்தொற்றை விரைவிலேயே ஒழித்து விட முடியும்.

இந்த முற்றிலும் ஒழிக்கும் மூலோபாயம், பொது சுகாதார முறையைத் தனியார் இலாபத்திற்கு கீழ்ப்படியச் செய்வதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்துடன் ஒன்றுசேர்கிறது. கடந்தாண்டில், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்குக் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் காட்டிய கோபம் வேண்டுமென்றே தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியால் நசுக்கப்பட்டது, என்றாலும் அது அலபாமா, டென்னசி, ஹவாய், ஜோர்ஜியா மற்றும் இன்னும் பல மாநிலங்களில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வித்துறை தொழிலாளர்களின் எதிர்ப்புக்கள், மருத்துவ விடுப்புகள் மற்றும் வேலைநிறுத்த போராட்டங்கள் மூலமாக அபிவிருத்தி அடைய தொடங்கி உள்ளது. அந்த வைரஸை முற்றிலுமாக ஒழிக்கும் மூலோபாயத்தைச் செயல்படுத்துவதில் இந்த எதிர்ப்பு ஒருமுனைப்பட வேண்டும்.

பல தசாப்தங்களாக, அமெரிக்க ஆளும் வர்க்கம் பொதுக் கல்விக்குக் குழிபறித்து, பிற்போக்குத்தன்மை மற்றும் தனிநபர்வாதத்தை வளர்த்ததன் மூலம், இப்போது மில்லியன் கணக்கானவர்கள் தடுப்பூசி மீது ஐயறவு கொள்ளும் நிலைமைகளை உருவாக்கி உள்ளது. இந்த பெருந்தொற்றைக் குறித்த விஞ்ஞானத்தையும், கோவிட்-19 ஐ முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்பதையும், அதை எவ்வாறு செய்ய முடியும் என்பதையும் மக்களிடையே கல்வியூட்ட எல்லா முயற்சிகளும் செய்யப்பட வேண்டும்.

பெருநிறுவன இலாபங்களுக்காக அதன் பலிபீடத்தில் பல மில்லியன் உயிர்களின் தியாகம், நவீன வரலாற்றில் மிகவும் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகும். ஆளும் உயரடுக்குகளின் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கை மற்றும் தீவிர பரவலை குறைக்கும் தணிப்புக் கொள்கைகள் ஆகியவற்றைத் ஒரு பாரிய தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டமைக்காமல் மாற்ற முடியாது. நாட்டின் மற்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும், பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவதற்கு பாரிய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்குத் தயாரிப்பு செய்யப்பட வேண்டும்.

ஆசிரியர் சங்கங்கள் மற்றும் இரு பெரு வணிகக் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக அமைக்கப்பட்ட சாமானிய குழுக்கள், இலாபங்களை விட தொழிலாளர்களின் உயிருக்கு முன்னுரிமை வழங்க அமெரிக்கா முழுவதிலும் மற்றும் உலகளவிலும் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வேலையிடங்களை உடனடியாக மூடவும், அத்துடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட எல்லா தொழிலாளர்களுக்கும் போதிய ஆதாரவளங்களை வழங்கவும் மற்றும் உயர்தரமான தொலைதூர கல்வி வழங்கவும் போராடுவதற்கு, ஒவ்வொரு பள்ளிக்கல்வி மாவட்டத்திலும் மற்றும் அண்டைப் பகுதியிலும் இந்த வலையமைப்பு கட்டமைக்கப்பட வேண்டும். உலகளவில் கோவிட்-19 ஐ அகற்றி இறுதியில் முழுமையாக ஒழிக்க சாமானிய குழுக்கள் என்ற வடிவத்தில் மட்டுமே அவசியமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதை அவை நிரூபிக்கும்போது, இத்தகைய ஒரு இயக்கம் தொழிற்சாலை மற்றும் நாடெங்கிலும் வேகமாக பரவும்.

Loading