பிரிட்டனில் மருத்துவமனை அனுமதிப்புகள் அதிகரிப்பதுடன் இணைந்து கோவிட் நோய்தொற்றுக்கள் பெரிதும் அதிகரிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இங்கிலாந்தில் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான கோவிட் நோய்தொற்றுக்களும், வாரத்திற்கு சுமார் 1,000 இறப்புக்களும் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. கடந்த வாரம், மேலும் 256,910 நோய்தொற்றுக்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நோய்தொற்று வீதம் முன்னைய வாரத்தை விட 6 சதவீதம் அதிகரித்தது. சனிக்கிழமை 156 இறப்புக்களுடன், அண்ணளவாக மேலும் 30,000 நோய்தொற்றுக்கள் அங்கு பதிவாகின.

ஆகஸ்ட் 2021 அன்று யூஸ்டன் சதுக்க இலண்டன் பாதாள தொடர்வண்டி நிலையத்தில் பயணிகள் காத்திருக்கின்றனர் (WSWS Media)

நோய்தொற்று பரவத் தொடங்கியது முதல் 7.2 மில்லியன் மக்களுக்கும் மேலாக நோய்தொற்று ஏற்படும் அளவிற்கு கோவிட் நோய்தொற்றுக்கள் காட்டுத்தீ போல பரவ அனுமதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான தேசிய புள்ளிவிபர அலுவலக தரவின்படி, இங்கிலாந்தில் பரிசோதிக்கப்பட்டதில் பிரிட்டனில் 70 பேருக்கு ஒருவர் வீதம் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டது. நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் டெல்டா மாறுபாட்டால் தீவிரமடைந்து வருகின்றன, இங்கிலாந்தில் தற்போது 669,000 க்கும் மேற்பட்ட மாறுபாட்டினால் உருவான நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இதில் அரை மில்லியனுக்கும் அதிகமானவை (556,542) இங்கிலாந்தில் உள்ளன. பிரிட்டனில் ஆதிக்க வகை மாறுபாடாக டெல்டா இருந்தாலும், குறைந்தது கோவிட்-19 இன் 16 மாறுபாடுகள் அங்கு புழக்கத்தில் உள்ளன.

சர்வதேச அளவில் பிரிட்டனை விட ஐந்து மடங்கு அதிக மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா மட்டுமே கடந்த வாரத்தில் அதிகமான நோய்தொற்றுக்களை பதிவு செய்தது. இருப்பினும், கடந்த வாரம் பிரிட்டனில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு உருவான நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை (3,761) அமெரிக்காவின் எண்ணிக்கையை (2,830) விட கணிசமாக அதிகமாக இருந்தது.

இங்கிலாந்தில், கடந்த வாரம் 983 பேர் கோவிட் பாதிப்பால் இறந்தனர், இது முன்னைய வாரத்தை விட 198 நோய்தொற்றுக்கள் (25 சதவீதம்) அதிகரிப்பாகும். ஆகஸ்ட் 11 மற்றும் கடந்த வாரத்திற்கு இடைப்பட்ட வாரங்களில் இங்கிலாந்து முழுவதும் பள்ளிகள் மீளத் திறக்கப்பட்டு, ஜூலை 19 அன்று முழு பொருளாதாரமும் திறக்கப்பட்டதன் விளைவாக அங்கு மருத்துவமனை அனுமதிப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

மே மாதத்தில் டெல்டா மாறுபாடு ஆதிக்க வகையாக உருவெடுத்ததிலிருந்து முதல் முறையாக கடந்த வாரம் மருத்துவமனைகளில் நாளாந்தம் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 1,000 ஆனது உட்பட, கோவிட் காரணமாக மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை மார்ச் 10 முதல் மிகவுயர்ந்த மட்டங்களில் உள்ளன. செப்டம்பர் 6 அன்று ஒரே நாளில் 1,063 கோவிட் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 19 முதல் 29 வரையிலான 11-நாள் காலகட்டத்தின் தரவுகளிலிருந்து மருத்துவமனை அனுமதிப்புக்கள் கடுமையாக அதிகரித்துள்ளது தெளிவாகிறது, அப்போது கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் 590 (9 சதவீதம்) அதிகரித்தது. இந்த 11 நாட்களுக்கும் செப்டம்பர் 11 க்கும் இடைப்பட்ட நாட்களில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமானது, அதாவது 7,091 இல் இருந்து 14 சதவீதம் அதிகரித்து 8,098 ஆக உயர்ந்தது, இது ஆறு மாதங்களில் பதிவான எண்ணிக்கைகளின் உச்சபட்சமாகும்.

நாளாந்த மருத்துவமனை அனுமதிப்புகள் 1,500 ஐ எட்டுமானால், தேசிய சுகாதார சேவை (NHS) கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட காலத்திற்கு நிகழும். Independent ஊடகம் சனிக்கிழமை அன்று, “விஞ்ஞான பகுப்பாய்வு நிறுவனமான Airfinity இன் புதிய பகுப்பாய்வு, தற்போது மருத்துவமனை அனுமதிப்புகள் கட்டுப்பாடற்று தொடர்ந்து அதிகரிக்குமானால் நவம்பர் நடுப்பகுதியில் இங்கிலாந்தில் முன்னைய பூட்டுதல்களுக்கு இட்டுச்சென்ற மருத்துவமனை அனுமதிப்புகளின் தொடக்க நிலையை எதிர்கொள்ள நேரிடும். இந்த நிலையை அடைய நாளாந்த நோய்தொற்றுக்கள் 50,500 ஐ தாண்ட வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது, வெள்ளிக்கிழமை 37,622 நாளாந்த நோய்தொற்றுக்கள் அங்கு பதிவாகியுள்ளன என்பதைக் காட்டுவதாக” தெரிவித்தது.

ஜூலை 19 அன்று அனைத்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளும் கைவிடப்பட்டதன் பின்னர், 217 NHS அறக்கட்டளைகளில் 154 அறக்கட்டளைகள் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றி பதிவு செய்துள்ளதை Mirror செய்தியிதழ் NHS தரவு குறித்த அதன் சொந்த பகுப்பாய்வில் வெளிப்படுத்தியது. இலண்டன், பேர்மிங்காம், லிவர்பூல், மான்செஸ்டர், நோட்டிங்ஹாம், மற்றும் லைய்செஸ்டர் உள்ளிட்ட இங்கிலாந்தின் சில பெரிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் சேர்க்கை “மிகவும் அதிகரிப்பதாக” பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவது
சிவப்பு, கறுப்பு நிறங்களால் விழிப்பூட்டப்படுகிறது. வெள்ளிக்கிழமை, Royal Cornwall Hospitals NHS Trust, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை “உச்சமடைந்ததால்” ஏற்பட்ட தீவிரமான அழுத்தங்களின் காரணமாக, வழமையான மற்றும் அவசர அறுவை சிகிச்சைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

சிவப்பு எச்சரிக்கை என்றால் மருத்துவமனைகள் ஒரு ‘குறிப்பிடத்தக்க தாக்கத்தை’ எதிர்கொள்வதுடன், ஒரு கறுப்பு எச்சரிக்கையையும் எதிர்கொள்கிறது, அதாவது தற்போது ‘Opel 4’ என்றறியப்படுவதன்படி, ஒரு மருத்துவமனை ‘விரிவான கவனிப்பை வழங்க இயலாது’ என்பதுடன் நோயாளியின் பாதுகாப்பு சமரசத்திற்கு உள்ளாகும் நிலையை எதிர்கொள்ளும். சனிக்கிழமை, டெர்பிஷையரில் உள்ள ராயல் டெர்பி மருத்துவமனையும் மற்றும் செஸ்டர்ஃபீல்ட் ராயல் மருத்துவமனையும் Opel 4 எச்சரிக்கைகளை அறிவித்தன. “செஸ்டர்ஃபீல்ட் ராயல் மருத்துவமனை, ராயல் டெர்பி மருத்துவமனை மற்றும் ஸ்டாஃபோர்ட்ஷையரில் Burton-upon-Trent பகுதியிலுள்ள குயின்ஸ் மருத்துவமனை ஆகியவற்றின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக் குழுக்கள் திங்களன்று மட்டும் 1,038 நோயாளிகளை எதிர்கொண்டன. மூன்று தளங்களிலும் சேர்த்து கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்தது, கடந்த வாரம் 65 இல் இருந்து 11 பேர் மிக மோசமான நிலையில் இருந்ததும் சேர்த்து இவ்வாறு அதிகரித்தது” என்று BBC செய்திகள் சனிக்கிழமை தெரிவித்தது.

சில நாட்களுக்கு முன்பு வேல்ஸில் உள்ள Aneurin Bevan Health Board ஐ சேர்ந்த தீவிர சிகிச்சை ஆலோசகர் அமி ஜோன்ஸ், நிர்வாகம், தீவிர சிகிச்சைப் பிரிவின் பெரும்பகுதியை Amber (கோவிட் அல்லாத) வகையிலிருந்து சிவப்பு எச்சரிக்கை (கோவிட்) வகையாக “மாற்றியது”. எங்கள் பிரிவில் கோவிட் நோயாளிகள் தான் தற்போது பெரும்பான்மையாக உள்ளனர்” என்று ட்வீட் செய்தார். மேலும், “தடுப்பூசி நோய்தொற்றுக்களுக்கும் மருத்துவமனை அனுமதிப்புகளுக்கும் இடையிலான தொடர்பை நிச்சயமாக பலவீனப்படுத்தியுள்ளது. என்றாலும் அது இந்த தொடர்பை துண்டிக்கவில்லை என்பதுடன், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் தடுப்பூசி போடப்படாதவர்கள் அதிகமாக உள்ளனர்” என்றும் சேர்த்துக் கூறினார்.

பள்ளிகளின் மறுதிறப்பு நோய்தொற்றுக்களின் அதிகரிப்பை தீவிரமாகத் தூண்டுகிறது. இங்கிலாந்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் 11 முதல் ஸ்காட்லாந்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த மாதம் இறுதிக்குள் ஸ்காட்லாந்தில் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்தன. புதிய நோய்தொற்றாளர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் குழந்தைகளாக இருந்தனர், அதாவது கடந்த வியாழக்கிழமை பதிவான 6,836 புதிய நோய்தொற்றுக்களில் 2,729 குழந்தைகளுக்கு ஏற்பட்டிருந்தது. கடந்த வாரம், ஸ்காட்லாந்தில் அநேகமாக 45 பேரில் ஒருவருக்கு (சுமார் 117,300 பேருக்கு) கோவிட் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது. முன்னைய வாரம் நோய்தொற்றுக்கள் 140 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் பதிவாகியிருந்தது.

10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் இன்னும் அதிகபட்ச பரவல் விகிதத்துடன், பல மாதங்களாக இளையோர் மத்தியில் நோய்தொற்றுக்கள் அதிகரித்து வருவதால், பழைய தலைமுறையினரிடையே நோய்தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக புதிய தரவு காட்டுகிறது. ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரும் சுகாதார சமத்துவமின்மை மாதிரியாளருமான கொலின் ஆங்கஸின் (Colin Angus) ஆராய்ச்சி, ஜூலை மாதத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட கோவிட் நோயாளிகளில் பெரும்பகுதியினர் 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்பதைக் காட்டுவதாக Independent குறிப்பிட்டது. ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து இது மாறிப்போனது, அதாவது 75 முதல் 84 வயதுக்குட்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் வீதம் உச்சபட்சமாக இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மத்தியில் நோய்தொற்றுக்கள் “தெளிவாக அதிகரிக்கின்றன” என்றும், “ஆறு வாரங்களுக்கு முன்னைய புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் பழைய நோய்தொற்றுக்களில் உறுதியான ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆங்கஸ் கூறினார். மேலும், “இது நோயெதிர்ப்பு சக்தியின் மட்டங்கள் குறைந்து வருவது பற்றியது அல்ல, மாறாக இது அநேகமாக வைரஸ் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது பற்றியது” என்பதே ஆங்கஸின் முடிவாகும்.

இத்தகைய பரவலான நோய்தொற்று, தற்போதுள்ள தடுப்பூசிகளை எதிர்க்கும் மாறுபாடுகள் உருவெடுக்கக்கூடிய தொற்றுநோயின் இன்னும் பேரழிவு தரும் கட்டத்திற்கு அடித்தளம் அமைக்கிறது. இதை எதிர்கொள்வதில், ஆளும் உயரடுக்கு அதன் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையிலும், மற்றும் “பொருளாதாரத்தை பாதுகாப்பதிலும்” அதாவது பெருநிறுவனங்களின் இலாபத்தை பாதுகாப்பதிலும் பிடிவாதமாக உள்ளது.

இந்த வார இறுதியில் வெளியான ஊடக அறிக்கைகளின்படி, பிரதமர் போரிஸ் ஜோன்சன், பெரும் வணிகர்கள் அவர்களது இலாபத்தை குவிப்பதற்கு எந்த வகையிலும் தடையாக இருக்கும் இங்கிலாந்துக்கு பொருந்தக்கூடிய கொரோனா வைரஸ் சட்டத்திற்கான அதிகாரங்களை இரத்து செய்ய வேண்டும் என்று கோரப்படுகிறது. “இது, பொது விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்ற பொருளாதாரத்தின் பிரிவுகளை மூடுவதற்கான, மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் ஆகியவற்றை மூடுவதன் மூலம் கல்வி அணுகப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான திறனை உள்ளடக்கியது” என்று டெலிகிராஃப் தெரிவித்தது. அறிவிக்கப்படவுள்ள நடவடிக்கைகளின் கீழ், “நோய்தொற்றுள்ள நபர்களை இனி சட்டபூர்வமாக தடுத்து வைக்க முடியாது, மேலும் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது.”

மிகுந்த நோய்பரப்பும் நிகழ்வுகளாக நிரூபிக்கப்பட்டுள்ள அனைத்து வகை பாரிய கூட்டங்களும் அனுமதிக்கப்படுகின்றன. செப்டம்பர் 16 முதல் 19 வரை, அதன் 141,000 க்கு சற்று கூடுதல் மக்கள்தொகையினருக்கு மத்தியில் கோவிட் நோய்தொற்று வெடித்து பரவக்கூடிய நிலைமைகளின் கீழ், Isle of Wight நிகழ்வில் 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை உள்ளூர் செய்தியிதழ் County Press, முன்னைய வாரத்திலிருந்து 30 அதிகரித்து, தற்போது 34 தீவிர சிகிச்சை படுக்கைகள் கோவிட் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக தெரிவித்தது. இது தீவு முழுவதிலும் கோவிட் நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை படுக்கைகள் மொத்தத்தில் 20 சதவீதத்தைக் குறிக்கிறது. தீவின் ஒரே மருத்துவமனை செயின்ட் மேரிஸில் இரண்டாவது தீவிர சிகிச்சைப் பிரிவு திறக்க நேரிட்டது, அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ஜோ ஸ்மித் பிரிவுகள் “முற்று முழுதாக நிரம்பிவிட்டதாக” ஏற்கனவே கூறியுள்ளார்.

“அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் ஜூலை கடைசி வாரத்திற்கும் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவில் நோய்தொற்று தொடங்கியதிலிருந்து பதிவான மொத்த நோய்தொற்றுக்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு அளவிற்கு 2,289 நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளதைக் காட்டுகிறது” என்று செய்தியிதழ்கள் தெரிவிக்கின்றன.

கோவிட் நோய்தொற்றின் அதிவேக வளர்ச்சி, ஏராளமானோர் பயணிக்கும் பொது போக்குவரத்து அமைப்புகளை அச்சுறுத்துகின்றது. கடந்த திங்கட்கிழமை, இலண்டன் சுரங்க தொடர்வண்டி வலையமைப்பு (London Underground) தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் பரபரப்பான காலை நேரத்தை பதிவு செய்தது, இதில் பள்ளிகள் தொடர்புபட்ட பயணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு மில்லியனுக்கு சற்று குறைவான சுரங்க தொடர்வண்டி பயணங்கள் பதிவு செய்யப்பட்டன, இது முன்னைய வாரத்திலிருந்து கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்திருந்தது என்பதுடன், மார்ச் 2020 இல் பிரிட்டனில் முதல் பூட்டுதல் விதிக்கப்பட்டதிலிருந்து மிக உயர்ந்த மட்டமாகும்.

இரயில் போக்குவரத்து அளவு கோவிட் காலத்திற்கு முன்னைய விகிதத்தில் வெறும் 33 சதவீதமாக உள்ளது என்று இரயில் விநியோகக் குழு (Rail Delivery Group-RDG) புகாரளிப்பது உட்பட, இரயில்களில் பயணிக்க இன்னும் அதிகமான பயணிகளை திரும்ப வைப்பதற்காக தனியாருக்குச் சொந்தமான ஒரு இரயில் வலையமைப்பு பிரச்சாரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த முறையீட்டின் மைய கருத்து, இரயில் நிறுவனங்கள், மற்றும் பெரும்பாலான பெரியளவு வீதி வணிகங்களை (High Street businesses) சொந்தமாகக் கொண்ட பெரும் நிறுவனங்கள் ஆகியவற்றின் இலாபங்களை பாதுகாப்பதே. “RDG க்காக WPI Economics மேற்கொண்ட ஆய்வு, இந்த பயணிகள் உணவு மற்றும் பான வகைகள், கடைவீதிகளில் பொருட்கள் வாங்குதல், பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம், உள்ளூர் வணிகங்களை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு ஆண்டுக்கு மொத்தம் 30 பில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளதை சுட்டிக்காட்டுவதாக” BBC கூறியது.

Loading