போல்சனாரோவின் ஆட்சிக்கவிழ்ப்பு அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக பிரேசிலிய PT மற்றும் PSOL கூட்டணி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரேசிலில், ஜனாதிபதி ஜெய்ர் போல்சொனாரோ மற்றும் அவரது தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் ஒழுங்கமைத்த ஆர்ப்பாட்டங்கள் ஒரு சர்வாதிகார ஆட்சி ஸ்தாபிக்கப்படுவதை வெளிப்படையாக ஆதரிக்கின்ற நிலையில், செப்டம்பர் 7 அன்று அங்கு ஒரு பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு அச்சுறுத்தல் தெளிவான புரிதலுடன் வெளிப்பட்டது.

பிரேசிலில், சாவோ பாலோவில் வலதுசாரி குழுக்களால் அழைப்பு விடுக்கப்பட்ட செப்டம்பர் 12 போல்சொனாரோ எதிர்ப்பு பேரணி (AP Photo/Marcelo Chello)

ஆர்ப்பாட்டங்கள் முடிந்து இரண்டு நாட்களில், போல்சொனாரோ “தேசத்திற்கு ஒரு கடிதம்” வெளியிட்டார், அதில் அவர் ஜனநாயகத்தின் மீதான தனது விசுவாசத்தை அறிவித்ததுடன், “குடியரசின் எந்த அதிகாரத்தையும் தாக்கும் நோக்கம் தனக்கு இருந்ததில்லை” என்று தெரிவித்தார். இதைவிட இழிந்த அறிக்கை இருக்க முடியாது.

போல்சொனாரோ ஒரு “நிறுவன முறிவுக்கு” கடுமையாக அச்சுறுத்தல்கள் விடுத்து, பாசிச பேரணிகளுக்கு முறையாக தயாரிப்பு செய்ய பல வாரங்களை செலவழித்தார். “இராணுவ தலையீட்டை” கோரி பதாகைகளை ஏந்தியிருந்த கூட்டத்தின் முன்பாக செப்டம்பர் 7 அன்று அவர் உரையாற்றுகையில், நீதித்துறை அமைப்பை மூடப்போவதாக வெளிப்படையாக அவர் அச்சுறுத்தியதுடன், கடவுள் மட்டுமே அவரை அதிகாரத்திலிருந்து அகற்றுவார் என அறிவித்தார். பாசிச ஜனாதிபதி மேலும், “சூடான தருணங்கள் மற்றும் விவாதத்தின் போது வெளிப்படும் எனது வார்த்தைகள், சில நேரங்களில் வலிமையாக இருந்தாலும், எப்போதும் அவை பொது நலனை நோக்கமாகக் கொண்டதே” என்று தனது “கடிதத்தில்” தெரிவித்திருந்தார்.

இந்த ஆவணம் பிரேசிலிய ஜனநாயக இயக்கத்தின் (Brazilian Democratic Movement-MDB) முன்னாள் பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் டெமரின் வெளிப்படையான உதவியுடன் எழுதப்பட்டது. தில்மா ரூசெப்பின் (Dilma Rousseff) வலதுசாரி துணைத் தலைவரான இவர் மோசடி குற்றச்சாட்டுக்களின் பேரில் தொழிலாளர் கட்சி (PT) ஜனாதிபதி மீது குற்றம்சாட்டப்பட்டதன் பின்னர் 2016 இல் ஜனாதிபதியானார்.

போல்சொனாரோவின் நல்லிணக்கத்திற்கான அடையாளமாக பிரேசில் நாட்டின் உயர்மட்டங்களுக்குள் “தேசத்திற்கான கடிதம்” பாராட்டப்பட்டது, மேலும் அவர் முறையாக மேம்படுத்தி வந்துள்ள பேரழிவு வெறுமனே தவறான புரிதலாக உடனடியாக மன்னிக்கப்பட்டது!

காங்கிரஸின் தலைவரான, முற்போக்குக் கட்சியின் (Progressive Party-PP) ஆர்தர் லிரா, “நடந்தவை அனைத்தும் ‘முடிந்துவிட்டவை,’ எனவே நாம் அவற்றை அரசியல் தீவிரமாகவும், அந்த தருணத்தின் உணர்ச்சி வேகமாகவும் வரையறுக்க முடியும்… குடியரசின் தலைவர் கோபத்தை சரியாக அமைதிப்படுத்துகிறார்” என்று அறிவித்தார். செனட்டின் தலைவரான ஜனநாயகக் கட்சியின் ரொட்ரிகோ பச்சேகோ (DEM) அவரது பங்கிற்கு, அந்த கடிதம் “போல்சொனாரோவின் நேர்மறை சிந்தனைக்கு ஒரு அடையாளம்” என்பதுடன் “பெரும்பாலான பிரேசிலியர்களின் எதிர்பார்ப்பை அது நிறைவேற்றும்” என்று கூறினார்.

இருப்பினும் போல்சொனாரோவின் “கடிதம்,” மூலம் தந்திரோபாய பின்வாங்கலுக்கு சமிக்ஞை செய்யப்பட்டுள்ளதை அவரது சர்வாதிகார முனைப்பின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னர் உடனடி சதித்திட்டத்திற்கு எதிர்பார்த்திருந்த அவரது பாசிச ஆதரவாளர்களில் ஏமாற்றமடைந்த பிரிவினருக்கு பதிலளிக்கும் வகையில், “நான் அங்கு சென்று அனைவரது கழுத்தையும் அறுக்க வேண்டும் என சிலர் விரும்புகின்றனர். [ஆனால்] இன்று தனிமைப்படுத்தப்பட்ட நாடு என்று எதுவும் கிடையாது, அனைத்தும் உலகத்திற்குள் ஒருங்கிணைந்துள்ளன” என்று போல்சொனாரோ அறிவித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாட்டில் ஒரு பாசிச இராணுவ சதியின் நிறைவுக்கு, உட்புற மற்றும் வெளிப்புற காரணிகளின் சீரமைப்பு தேவைப்படுகிறது, இவற்றில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு அடிப்படையானதாகும். அதேவேளை முதலாளித்துவ ஊடகங்களும் குட்டி முதலாளித்துவ போலி இடதும், பிரேசிலில் ஜனநாயகத்திற்கான அரணாக அமெரிக்காவில் ஜோ பைடெனை காண்கின்றன, 1964 இல் பிரேசிலிய இராணுவ சதிக்கு ஆதரவளித்த அதே ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை எந்த வகையிலும் வரையறுக்கப்படவில்லை.

உள் கண்ணோட்டத்தில், ஜனாதிபதியின் இந்த இழிந்த கடிதத்திற்கு பாராளுமன்ற தலைமையின் முக்கியமான பதிலிறுப்பு போல்சொனாரோவின் சதித்திட்ட நடவடிக்கைகளுடன் எந்தளவிற்கு வெளிப்படையாக ஒத்துழைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த அணுகுமுறை பாரம்பரிய முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவம் இரண்டையும் வியாபித்திருக்கிறது. போல்சொனாரோவால் அரசாங்கத்திற்குள் கொண்டுவரப்பட்ட சில ஜெனரல்கள் அவரது பாசிச பேரணிகளின் போது நடைமேடைகளில் தோன்றினர், மேலும் ஏனையோர், ஆயுதப்படைகள் மீதான சட்டமன்றத்தின் “அற்பமான தாக்குதல்களை” ஏற்க முடியாது என்று இராணுவ கட்டளை எச்சரித்து கூட்டறிக்கை வெளியிட்டது போன்று பொதுமக்கள் ஆட்சிக்கு முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர்.

இத்தகைய சம்பவங்கள், அரசு நிறுவனங்களின், குறிப்பாக ஆயுதப்படைகளின் “அரசியலமைப்பு சார்ந்த” கடமைப்பாட்டால் வகுக்கப்பட்ட சுய-ஒழுங்குமுறை வழிமுறைகள் மூலம் சதி அச்சுறுத்தல்களிலிருந்து பிரேசிலிய ஆட்சி பாதுகாக்கப்படுவதாக கூறப்படும் கூற்றுக்களை தகர்க்கின்றன. இன்னும் ஆழமாக பார்த்தால், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான மிருகத்தனமான இராணுவ சர்வாதிகாரத்தை அடுத்து ஒரு சிவில் ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டு 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய அரசின் சீர்குலைவை அவர்கள் அம்பலப்படுத்துகிறார்கள்.

தொழிலாளர் கட்சி மற்றும் அதன் போலி இடது துணைக் கட்சிகளின் தலைமையில் போல்சொனாரோவுக்கு உள்ள வெளிப்படையான எதிர்ப்பானது, நிலவும் ஆழ்ந்த அரசியல் நெருக்கடிக்கு மிகுந்த அரசியல் ரீதியான குற்றவியல் வழியில் பதில் கொடுத்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன அரசியல் இயக்கத்தையும் நடுநிலையாக்க அவர்கள் போராடுகிறார்கள், அதேவேளை சர்வாதிகார அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கான ஒரே வழி முதலாளித்துவ அரசுக்குள் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதுதான் என்று மக்களை நம்ப வைக்க முயல்கிறார்கள்.

செப்டம்பர் 12 அன்று, பல்வேறு வலதுசாரி அரசியல் கட்சிகளும் இயக்கங்களும், பாசிச அரசாங்கத்தின் மீது வளர்ந்து வரும் வெறுப்பை பெரிதுபடுத்திக் காட்டவும் தம்மை அதற்கான மாற்றீடாக முன்வைக்கவும் முனைந்து போல்சொனாரோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு ஊக்கமளித்தன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுதந்திர பிரேசில் இயக்கமும் (Free Brazil Movement-MBL) மற்றும் Vem Pra Rua (வீதிகளுக்கு வாருங்கள்) இயக்கமும் தலைமை தாங்கின, இவை முதலில் தில்மா ரூசெப் மீதான குற்றச்சாட்டுக்கான தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்களின் ஒழுங்கமைப்பாளர்களாகத் தோன்றி, பின்னர் போல்சொனாரோவின் தேர்வை ஆதரித்தன. இதில், போல்சொனாரோவின் ஆதரவாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேசிலிய சமூக ஜனநாயகக் கட்சியின் (Brazilian Social Democracy Party-PSDB) சாவோ பாலோ கவர்னர் Joao Doria, ஜனநாயக தொழிலாளர் கட்சியின் (Democratic Labor Party-PDT) சிரோ கோம்ஸ், பிரேசில் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (Maoist Communist Party of Brazil-PCdoB) ஆதரவாளர்கள், மற்றும் PT தலைமையிலான CUT தவிர முக்கிய பிரேசிலிய தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பிற்போக்குத்தன அரசியல் அணிவகுப்பில் தொழிலாளர் கட்சியும் அதன் போலி இடதுசாரி கூட்டணி கட்சியான சோசலிசம் மற்றும் சுதந்திரக் கட்சியும் (PSOL) பங்கேற்கவில்லை, அதற்கான ஒரே காரணம், இவ்விரு கட்சிகளின் தலைவர்களின் கூற்றுப்படி, வலதுசாரிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தை “ஒழுங்கமைக்க” அவர்களுக்கு “அழைப்பு விடுக்கப்படவில்லை” என்பதே. Carta Capital சஞ்சிகைக்கு பேசுகையில், தொழிலாளர் கட்சியின் தலைவர் க்ளீசி ஹோஃப்மன் (Gleisi Hoffmann), “நாம் ஜனநாயக களத்தை ஒருங்கிணைத்து கட்டமைப்பது அவசியம். இதுவே முக்கியமாகும். இது ஒட்டிக் கொள்வது அல்ல, மாறாக ஒரு கூட்டுப் பாதையாகும்” என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த அரசியல் நோக்குநிலை இரு கட்சிகளிலும் உள்ள கூறுகளால் நிராகரிக்கப்பட்டது. PSOL இன் முக்கிய பாராளுமன்ற பிரமுகர்களில் ஒருவரான சாவோ பாலோவின் மாநிலத்தின் துணைத் தலைவர் ஐசா பென்னாவின் (Isa Penna) செயல் மூலம் இது தெரியவந்தது, இவர் கட்சியின் முடிவை மீறி, போல்சொனாரோவுக்கு எதிரான வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க வெளிப்படையாக அழைப்புவிடுத்தார்.

பென்னா, பப்லோவாத ஒருங்கிணைந்த செயலகத்துடன் இணைந்த PSOL இன் கிளர்ச்சிக் கன்னையிலிருந்து வருகிறார். இவர் உயர் நடுத்தர வர்க்க அடையாள அரசியலின் ஒரு ஒற்றை-கருப்பொருள் வக்காலத்து வாங்குபவராவர். பிரேசிலிய முதலாளித்துவ ஆட்சியின் சிதைவையும், அதற்கு பதிலிறுப்பாக அவர்கள் வலதை நோக்கி ஊசலாடுவதையும் எதிர்கொள்கையில், இவரது நடவடிக்கைகள் குட்டி முதலாளித்துவ பிரிவுகளின் விரக்தியை வெளிப்படுத்துகின்றன. ஆர்ப்பாட்டத்தின் போதான இவரது பேச்சு, தீவிர வலதுசாரி சக்திகளின் போலித்தனமான இலக்குகளுக்கு ஒரு ஜனநாயக ரீதியிலான மூடிமறைப்பை வழங்கும் அவரது அரசியல் குற்றவியல் முயற்சியை தெளிவுபடுத்தியது. “இன்று அவர்கள் [MBL] ஜனநாயகக் கட்சி முகாமில் இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். …இனிமேல் அவர்கள் பாசிசத்துடன் ஊர்சுற்றும் குழு அல்ல என்பது எனக்குத் தெரியும்,” என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், பென்னா ஊக்குவித்த பிற்போக்குத்தன அரசியல் அவரது கட்சி பரிந்துரைத்த நோக்குநிலையிலிருந்து அடிப்படையில் வேறுபட்டதல்ல. வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் இணைந்து கொள்ளாததற்கான நிறுவன நியாயப்படுத்துதல்களின் பின்னணியில், PSOL உம் PT உம் தங்கள் நடவடிக்கைகளை முற்றிலும் தேர்தல் கணக்கீடுகளின் அடிப்படையில் வகுத்துள்ளன.

2022 தேர்தலில் போல்சொனாரோவுடன் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வா (Lula da Silva) வை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க PT உம் PSOL உம் நோக்கம் கொண்டுள்ளன. செப்டம்பர் 12 ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்புவிடுத்தவர்கள் “மூன்றாவது வழியில்” முன்னேற முடியும் என நம்புவதுடன், அவர்கள் “லூலாவும் அல்ல, போல்சொனாரோவும் அல்ல,” என்ற பதாகையை உயர்த்தியுள்ளனர், இதை PT அல்லது PSOL எதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பிரேசிலின் தேசிய முதலாளித்துவத்தின் பேரில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான PT இன் முயற்சிகள் முற்றிலும் பிற்போக்குத்தனமாக உள்ளன.

செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு முன்னதாக, அந்த நாளுக்கான போல்சொனாரோவின் சதித்திட்டங்களுக்கு பதிலிறுக்கும் விதமாக லூலா ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டார், அப்போது அது ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டிருந்தது. தான் சேவையாற்றும் ஆளும் வர்க்கத்திடம் நேரடியாக பேசுகையில், லூலா, போல்சொனாரோவின் செயல்கள் “சக்திகளை ஒன்றிணைப்பதற்கு பதிலாக, பிரிவினையைத் தூண்டுகின்றன” என்ற நிலைப்பாட்டில் இருந்து அவரைத் தாக்கினார்.

லூலாவின் கருத்துப்படி, “இப்போதும் எதிர்காலத்திலும் நம்பிக்கையை உயிரோட்டமாக வைத்திருப்பதிலும் தடைகளை கடப்பதற்கான சாத்தியம் இருப்பதைக் காட்டுவதிலும் குடியரசின் ஜனாதிபதியின் பங்கு உள்ளது.” மேலும், ஜனாதிபதியாக, “குறிப்பாக இதுபோன்றதொரு கடினமான வருடத்தின் செப்டம்பர் 7 ஆம் தேதியில்” அவர் “தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களுக்கு” ஆறுதல் சொல்லும் வகையில் உரையாற்றியிருப்பார் என்பதுடன், வேலையின்மை மற்றும் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள “தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில்” திட்டங்களையும் முன்வைத்திருப்பார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

சமூக சமுத்துவமின்மையின் அருவருக்கத்தக்க நிலைகள், வெகுஜன துயரம் அதிகரித்து வருவது மற்றும் கோவிட்-19 மூலம் நூறாயிரக்கணக்கான இறப்புக்களை இயல்பாக்குவது ஆகியவற்றின் காரணமாக உழைக்கும் மக்களின் முன்னிலையில் முற்றிலும் மதிப்பிழந்துபோன பிரேசிலிய முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியை எதிர்கொள்கையில், சமூகப் பிளவுகளை ஆழப்படுத்துவதற்கு அல்லாமல், அதை தணிப்பதற்கு தகுதியான ஒரு தலைவர் தான் முதலாளித்துவத்திற்கு தேவை என்று லூலா வாதிடுகிறார்.

ஆனால் பிரேசிலிலும் சர்வதேச அளவிலும் காணப்படும் சமூக மோதல்களின் வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாததாக உள்ளது. முதலாளித்துவ ஆட்சியை ஒன்றிணைந்து நடத்த PT உம் PSOL உம் முன்மொழிந்த அழுகிப்போன கூட்டணி அதன் நெருக்கடியை ஆழப்படுத்துவதற்கும் மற்றும் பாசிச சதித்திட்டம் குறித்து பெருகிவரும் அச்சுறுத்தல்களுக்கும் மட்டுமே வழிவகுக்கும்.

போல்சொனாரோ போன்ற ஒரு கொடூரமான நபர் பிரேசிலிய அரசின் உயர்மட்ட பதவிக்கு உயர காரணம் எதுவுமில்லை, மாறாக முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் நெருக்கடிக்கான அறிகுறியாக அது உள்ளது. உலகளவில் இதுபோன்ற பாசிச சக்திகளின் எழுச்சியை அதிகரிக்கச் செய்யும் அதன் உண்மையான வேர்கள், உலக முதலாளித்துவ அமைப்பின் ஆழ்ந்த நெருக்கடியிலும் மற்றும் சர்வதேச அளவில் வளர்ச்சி காணும் வர்க்கப் போராட்டத்திற்கான ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பிலும் புதைந்துள்ளன.

இந்நிலையில், சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் மட்டுமே, சர்வாதிகார அச்சுறுத்தல், பெருகிவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் குறித்து தொடரப்படும் கொலைகார நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு ஒத்திசைவாக பதிலளிக்க முடியும்.

Loading