இலங்கை சுகாதார ஊழியர் சகோதர சகோதரிகளே

கோரிக்கைகளை வெல்லும் போராட்டத்தை நம் கையில் எடுத்துக்கொண்டு வழிநடத்துவோம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை செப்டம்பர் 20 ஆம் திகதிக்குள் நிறைவேற்றப்படாவிட்டால், செப்டம்பர் 22 மதியம் 12 மணிக்கு அரச தாதியர் சங்கம் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் உட்பட 35 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய சுகாதாரப் பாதுகாப்பு தொழிற்சங்கங்கள், அனைத்து வைத்தியசாலைகள் முன்னால் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்யப்போவதாக அறிவித்துள்ளன.

ஜூன் 11 அன்று அம்பாறையில் சுகாதார ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் (Photo: Facebook)

கடந்த மூன்று மாதங்களுக்கு கொடுக்கப்பட்ட 7,500 ரூபா கொடுப்பனவு மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது அதிக வேலை காரணமாக வழங்கப்பட்ட சிறப்பு விடுமுறையை தொடர்ந்தும் வழங்குமாறும், பாதுகாப்பான போக்குவரத்து வசதி, மேலதிக நேர ஊதியம் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) உட்பட கோவிட்-19 ஒழிப்புக்கு அவசியமான முழு வசதிகளையும் வழங்கவுமாறும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோருகின்றன.

  • கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தொற்றுநோயால் மோசமடைந்துள்ள கடினமான வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை எதிர்கொள்ளும் எமக்கு, தொற்று நோய் காலத்தில் விசேட மாதாந்திர கொடுப்பனவு மற்றும் விடுமுறையை பெற்றுக்கொள்வதும், அதே போல், சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதும் எரியும் பிரச்சினையாகும்.
  • பெரும்பாலான வார்டுகளுக்கு பி.பி.இ. தேவையான அளவை விட மூன்றில் ஒரு பகுதியே வழங்கப்படுகின்றன. அதனால், மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாத இந்த ஆடைகளை துவைத்து மீண்டும் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இதன் விளைவாக உயிருக்கு ஆபத்தும் அதிகரித்துள்ளது. எங்கள் சொந்த அலட்சியத்தாலேயே நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கூறும் சுகாதார அதிகாரிகள், நோய்த்தொற்றுக்கான பொறுப்பை எங்கள் மீதே சுமத்தும் சுற்றறிக்கைகளை தவறாமல் வெளியிடுகின்றனர்.
  • தற்போது அரசாங்கம் பேணி வரும் வரையறுக்கப்பட்ட பூட்டுதலில் போக்குவரத்து வசதிகள் இல்லாமை, சுகாதாரப் பணியாளர்களாகிய நாம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளில் ஒன்றாகும். நம்மில் சிலர் போக்குவரத்துக்காக ஒரு நாளைக்கு 500 முதல் 750 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது. போக்குவரத்து சிரமங்களால் விடுதியில் தங்கியிருக்கும் ஊழியர்கள், அதற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டும். அத்துடன் வேலை செய்யும் போது உணவு கிடைப்பது கூட மிகவும் கடினமாக உள்ளது.
  • அதே போல், தொற்றுநோயால் பாதிக்கப்படும் சுகாதார ஊழியர்கள், நோய்த்தொற்று ஏற்பட்ட 10 நாட்களுக்குப் பிறகு வேலைக்கு அழைப்பதையும், நோய் தொற்று கண்டறியப்படாத தொழிலாளர்களை தொடர்ந்தும் வேலை வாங்குவதையும் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதனால் தொற்றுக்கு உள்ளான மற்றும் ஆரோக்கியமான தொழிலாளர்களுக்கும் போலவே அவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மரணகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் மூடி மறைக்கப்பட்டிருந்தாலும், சராசரி கணிப்பீட்டின்படி சுமார் 6,000 சுகாதார ஊழியர்கள் இப்போது தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்படுவதோடு சிலர் மரணித்தும் உள்ளனர்.
ஜூன் 11 அன்று கம்பளை மருத்துவமனையில் சுகாதார ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் (Photo credit: WSWS meida)

இந்த சூழ்நிலையில், எங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை வெற்றி வரை கொண்டு செல்லும் பலமான உறுதிப்பாடு எங்களிடம் இருந்தாலும், வெற்றி பெறுவதற்கு அது மட்டும் போதாது. இந்த போராட்டத்தில், நாம் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களை அடையாளம் கண்டு, அந்த சவால்களை வெற்றிகொள்ளக் கூடிய ஒரு விஞ்ஞானப்பூர்வமான வேலைத்திட்டத்தின் அடிப்படையில், நமது போராட்டத்தை அடிப்படையாகக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.

சுகாதாரத் துறையிலும், அதே போல், ஏனைய துறைகளிலும் தொழிலாளர் போராட்டங்கள் ஒவ்வொன்றின் போதும், தாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியின் மத்தியில், தொழிலாளர்களின் எந்தவொரு கோரிக்கையையும் நிறைவேற்ற முடியாது என்று அரசாங்கம் கூறுகிறது. 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி நடத்திவரும் வேலைநிறுத்தம் இரண்டு மாதங்களை கடந்து தொடர்ந்த போதும், அரசாங்கம் தொடர்ந்து கோரிக்கையை நிராகரித்து வருகிறது.

சுகாதார மற்றும் கல்வி அமைச்சு உட்பட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் செலவுகளைக் வெட்டிக் குறைக்குமாறும் புதிய ஆள்சேர்ப்புகளை நிறுத்துமாறும் நிதி அமைச்சு சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்த சூழலில் தொழிற்சங்கங்கள், அரசாங்கம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் சுமையை தங்கள் உறுப்பினர்கள் மீது சுமத்தப்படுவதற்கு ஏற்றவாறு கோரிக்கைகளை வெட்டிக் குறைக்கும் மோசடி ஒப்பந்தங்களையே நாடுகின்றன,. அடிப்படை சம்பளத்தில் 78 சதவீத விசேட மாதாந்த கொடுப்பனவை தொற்றுநோய் காலத்தில் வழங்குமாறு கோரி, ஜூன் 11 அன்று சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை, 7,500 ரூபாய் வரை வெட்டிக் குறைத்து, மூன்று மாதங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட மாதாந்திர கொடுப்பனவாக கீழிறக்கி, காட்டிக்கொடுப்பதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்தன.

ஆசிரியர் சங்கங்களும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தங்கள் உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக, அசல் ஊதியக் கோரிக்கையை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் ஒரு உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், அசல் கோரிக்கையின் பன்னிரெண்டில் ஒரு பகுதியைத் தவிர வேறு எதையும் வழங்க முடியாது என்று அரசாங்கம் கூறுகிறது. இந்தச் சூழலில், ஆசிரியர் சங்கங்களின் வகிபாகம்,. முதலாளித்துவ நெருக்கடியை ஆசிரியர்கள் மீது திணிப்பதாகவே உள்ளது

மறுபுறம், அரசாங்கம் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களை நசுக்குவதற்காக, இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் 'உத்தரவுகளிலும் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குதல் என்ற போர்வையிலும் அரசாங்கம் சமீபத்தில் திணித்த அவசரகாலச் சட்டத்தின் உண்மையான நோக்கம், இந்தப் போராட்டங்களை கொடூரமாக நசுக்குவதே ஆகும்.

அத்தியாவசிய சேவை உத்தரவுகள் மற்றும் அவசரகால நிலைகளின் இந்த ஆபத்துகளை, தொழிலாளர்களிடமிருந்து மறைக்கும் சுகாதாரத் துறை உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும், அதை எதிர்க்கவில்லை. அதற்கு காரணம், அவை முதலாளித்துவ அரசு மற்றும் முதலாளித்துவ அமைப்பின் பாதுகாவலர்களாக இருப்பதே ஆகும்.

தொற்றுநோயால் ஆழப்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமையை, தொழிலாள ஒடுக்கப்ட்ட மக்களின் முதுகில் சுமத்தவும், அதற்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்களை கொடூரமாக நசுக்கவும் எதேச்சதிகார வழிமுறைக்கு மாறுவதற்கு, இராஜபக்ஷ அரசாங்கம் உட்பட உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள் புறநிலை ரீதியாக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை வெல்ல முடியாது என்பதை இலங்கையிலும் உலகம் முழுதும் உள்ள தொழிலாளர்கள் அனுபவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், எமது போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கு, முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ அமைப்பிற்கும் சவால் விடும் ஒரு அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்வது அவசியமாகும். முதலாளித்துவ முறைமையுடன் உறுதியாக பிணைந்திருக்கும் தொழிற்சங்கங்கள் அத்தகைய போராட்டத்திற்கு முற்றிலும் விரோதமானவை ஆகும். சுகாதார ஊழியர்களின் மத்தியில் வளர்ந்து வரும் போர்க்குணத்தை இத்தகைய சுயாதீன அரசியல் போராட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து விலக்கி, அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் போராட்டத்துக்குள் சிறைப்படுத்தும் நோக்கிலேயே 22 ஆம் திகதி போராட்டத்திற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

அதனாலேயே, சுகாதார பணியாளர்களான நாங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஏனைய சுகாதார நிறுவனங்களில், சுயாதீன தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும். உறுப்பினர்கள் மத்தியில் ஜனநாயக பூர்வமான கலந்துரையாடல்கள் மூலம் முடிவுகளை எடுக்கும் அந்தக் குழுக்கள் மூலம், போராட்டத்தை எமது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

தராதர வேறுபாடின்றி, சுகாதார சேவையினுள் ஏற்பாடு செய்யப்பட வேண்டிய இந்தப் போராட்டம், இப்போது வாழ்க்கைச் சுமை மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். குறிப்பாக ஆசிரியர்களின் போராட்டத்துடன் சுகாதார ஊழியர்களின் போராட்டத்தை ஒருங்கிணைப்பது அவசியமாகும்.

சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கை குழு, சுகாதாரத் துறையிலும் அதே போல் ஏனைய துறைகளிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களையும், தங்கள் வேலைத் தளங்களில் இத்தகைய சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்குமாறு அழைப்பு விடுக்கின்றது. அத்தகைய குழுக்களின் வலையமைப்பை நாம் கட்டியெழுப்ப வேண்டும். ஏனைய நாடுகளில் உள்ள சுயாதீன தொழிலாளர் நடவடிக்கை குழுக்களுடன் இணைந்து, நடவடிக்கை குழுக்களின் ஒரு சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்ப நாங்கள் போராடுகிறோம்.

பின்வரும் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி மூலம் எங்களைத் தொடர்புகொண்டு எங்களுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை குழு

மின்னஞ்சல்: healthworkers-sl@wsws.org

தொலைபேசி: 0773562327

Loading