சோ.ச.க. உறுப்பினர்கள் அவசரகால சட்டத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஆகஸ்ட் பிற்பகுதியில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்ட, ஒடுக்குமுறை அவசர கால சட்டம், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பெரும்பான்மையான ஆதரவுடனும் எதிர்க்கட்சிகளின் அடிபணிவான விமர்சனத்துடன் நிறைவேற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களில் சிலர் ஆகஸ்ட் 5 அன்று பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர்

'பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பராமரித்தல்' என்ற போர்வையுடன் அறிவிக்கப்பட்ட இந்த சட்டங்களை நிறைவேற்றுவதில், இராஜபக்ஷ அரசாங்கமானது கடந்த மாதங்களில் அரிசி மற்றும் சீனி போன்ற பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை இரட்டிப்பாகியதை ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்திக்கொண்டது.

இந்தச் சூழ்நிலையில், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஜனாதிபதியின் அடக்குமுறை அவசரகாலச் சட்டத்தை எதிர்த்திடுங்கள்! என்ற தலைப்பில், அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அரசாங்கத்தால் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சுமையை தமது தோள்களில் சுமக்க நிர்பந்திக்கப்பட்டுள்ள தொழிலாளர் வர்க்கமும் கிராமப்புற மக்களுமே இந்த புதிய விதிமுறைகளின் உண்மையான இலக்கு, என எச்சரித்ததோடு, அவர்கள் அதற்கு எதிராக அணிதிரள வேண்டும் என சுட்டிக்கட்டியது.

அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் சோசலிச வேலைத்திட்டத்தை கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் காலத்தில் நடத்தப்படவுள்ள பகிரங்க கூட்டத்தை கட்டியெழுப்பும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்களுடன் சோ.ச.க. ஆரம்பித்த கலந்துரையாடளுக்கு உற்சாகமான பிரதிபலிப்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது,

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் ருசிர, அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கும் அவற்றின் விலையை கட்டுப்படுத்துவதற்கும் போதுமான சட்டங்கள் இருக்கும்போது, அதற்காக அவசர காலச் சட்டத்தை கொண்டு வருவதில் அரசாங்கத்திற்கு உள்ள இலக்கு தெளிவாகின்றது, எனத் தெரிவித்தார். 'அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை அறிந்ததுமே, எவரையும் எந்த நேரத்திலும் கைது செய்ய பொலிசுக்கு அதிகாரம் உள்ளது என்பதே எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அரசாங்கத்துக்கு இந்த நேரத்தில் ஏன் அப்படியானதொன்று தேவைப்பட்டிருப்பது, தொழிலாளர்களை வேட்டையாடுவதற்கே ஆகும், என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையுடன் நான் உடன்படுகிறேன். ஆசிரியர்களின் போராட்டமே அரசாங்கத்தின் முதல் இலக்காக இருக்கும் என்று நினைக்கிறேன்.”

இரண்டு மாத காலத்துக்கு மேலாக நடந்து கொண்டிருக்கும் 250,000 அரச பாடசாலை ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தையும் பல துறைகளிலும் உள்ள தொழிலாளர்கள் மத்தியில், அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பினை கொடூரமாக ஒடுக்குவதற்காக, அரசாங்கம் புதிய அவசரக் கால சட்டத்தினையும் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படும் அத்தியாவசிய சேவை ஆணைகளை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் தயாராகிறது என்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

அவர் தொடர்ந்து கூறுகையில், மற்ற தொழிலாளர்களை மிரட்டுவதற்காக, அரசாங்கம் முதலில் அவசரகால சட்டத்தின் கீழ் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு எதிராக ஒரு பழிவாங்கலை முன்னெடுக்க பெரும்பாலும் முயற்சிக்கும், என்றார். 'அரசாங்கம் எவ்வளவு அடித்தாலும் அதற்கு எதிராக விரலை உயர்த்தாத மக்களையே அரசாங்கம் விரும்புகிறது. தொழிலாளர்கள் அப்படி இருக்க தயாராக இல்லை. அவர்கள் ஒரு வர்க்கமாக தங்கள் சொந்த பலத்தை நம்ப வேண்டும்.'

கொழும்பு துறைமுக நலன்புரி பிரிவில் ஒரு தொழிலாளி 'தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் வளர்ச்சியடைந்து வருகின்ற சூழ்நிலையிலேயே இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார். துறைமுக அதிகார சபையின் காணி மற்றும் ஏனைய சொத்துகளையும் விற்கத் தயாராகி வருவதாகவும், இதனால் தமது தொழிலுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை உருவாகும் என்றும் அவர் கூறினார்.

“இப்போதும் கூட துறைமுக மனிதவளத் தொழிலாளர்கள், குறைந்த ஊதியத்திற்காக சுரண்டப்பட்டு, நிரந்தர தொழிலை அகற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. துறைமுக தொழிலாளர்களின் உத்தியோகபூர்வ வதிவிடங்களை நவம்பருக்குள் ஒப்படைக்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் அமைதியின்றி உள்ளனர். அவர்கள் விரைவில் போராட்டத்தில் இறங்குவார்கள் என்று தெரிந்துகொண்டே அரசாங்கம் இத்தகைய அடக்குமுறை சட்டத்தை கொண்டு வருகிறது,” என்று அவர் வலியுறுத்தினார். 'நான் சோ.ச.க. அறிக்கையுடன் உடன்படுகிறேன். தொழிலாளர்களின் போராட்டங்கள் வெல்லப்பட வேண்டுமானால், சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை உருவாக்குவது அத்தியாவசியமானது.”

கொழும்பு துறைமுகத்தின் பழுதுபார்க்கும் பிரிவில் உள்ள ஒரு தொழிலாளி, இலங்கையை போன்ற அநேக நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள் முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியின் விளைவாக சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கின்றன என்ற சோ.ச.க. அறிக்கையில் கூறப்பட்டுள்ள விளக்கத்தை தான் ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். அதே போல், இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பொய்யானது என்றும் அவர் கூறினார். 'அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன எழுச்சியையிட்டு பீதியடைந்துள்ளன.'

கலந்துரையாடலின் போது, சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள், அரசாங்கத்தின் வர்க்கப்-போர் தயாரிப்புகளை போலி-இடதுகளும் தொழிற்சங்கங்கள் உட்பட எதிர்க்கட்சிகளின் அனைத்து குழுக்களும் மூடி மறைக்கும் விதத்தை சுட்டிக்காட்டினர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, துறைமுக ஊழியர் பின்வருமாறு கூறினார்: “ஆரம்பத்தில், துறைமுகத் தொழிலாளர்கள் மீது அத்தியாவசிய சேவை ஆணை விதிக்கப்பட்ட போது, ஒரு எதிர்க் கட்சியோ அல்லது போலி-இடது கட்சியோ, அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள், முதலாளித்துவ சார்பு இயக்கங்களாக இருப்பதாலேயே, இந்த அடக்குமுறைக்கு எதிராக போராடும் போது தொழிலாளர்கள் சுயாதீன நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகின்றது.”

கட்டுமானத் துறையில் உள்ள ஒரு தொழில்நுட்ப அதிகாரி, தொழிலாள வர்க்கம் இலங்கையில் அவசரகாலச் சடட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட வரலாற்றைப் பார்த்தால், தங்களுக்கு ஏற்படும் ஆபத்தை புரிந்து கொள்ள முடியும், என்று கூறினார். “எனக்குத் தெரிந்தவரை, இலங்கையில் இந்த அவசரச் சட்டத்தைப் பயன்படுத்தி திரைப்படக் கலைக்குக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த நாட்களில் அரசாங்கத்திற்கு எதிராகப் பேசும் சமூக ஊடக ஆர்வலர்கள், தவறான தகவல்களைத் பரப்புவதாக குற்றம் சுமத்தப்பட்டு வேட்டையாடப்படுவதைப் பார்க்கிறோம். இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அரசாங்கம் தமக்கு எதிராக வரும் எந்த விமர்சனங்களுக்கும் இடமளிக்காது என்பதை காண முடியும். அரசாங்கம், அவசரகாலச் சட்டத்தின் கீழ் மேலும் மேலும் இத்தகைய தாக்குதல்களுக்கு செல்லும்.”

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவே அரசாங்கம் அவசரகால நிலையை விதித்ததாக தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பிரமைகளும் இருக்கக்கூடாது என அவர் கூறினார்.

“அரசாங்கம், மக்களின் நலனை கருதி இருந்தால், இந்த சந்தர்ப்பத்தில் தொற்று நோயில் இருந்து உயிர்களைக் காப்பாற்றி இருக்க வேண்டும். அத்தியாவசியமற்ற உற்பத்திகள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். நாங்கள் வேலை செய்யும் இடங்களில், தினசரி தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். ஆனாலும், அரசாங்கமானது முதலாளிகளின் இலாபத்தைப் பாதுகாக்க இவற்றைத் திறந்த நிலையில் வைத்திருக்க அனுமதித்துள்ளது. இப்போது பி.சி.ஆர். பரிசோதனைகள் மேலும் மேலும் குறைக்கப்படுகின்றன. மருத்துவமனை வசதிகளில் அதிகரிக்கப்படவில்லை. ஒருபுறம், பொருட்களின் விலைகள் உயர்கின்ற போது, மறுபுறம், மக்களுக்கு கிடைக்கும் அற்ப மானியங்கள் கூட குறைக்கப்படுகின்றன. அவசரகால நிலை மக்களின் நலனுக்காக என்று அரசாங்கம் கூறும் கதையை இந்த அலட்சியத்துடன் நாம் ஒப்பிட வேண்டும். அப்போது அரசாங்கத்தின் பொய்களை புரிந்து கொள்ள முடியும்.”

சோ.ச.க. அரசியல் வழிகாட்டலின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு நடவடிக்கை குழுவின் நேற்றைய கூட்டத்தில், சோ.ச.க. அறிக்கை கலந்துரையாடப்பட்டது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அதன் பக்கத்தில் வர்க்கப் போரைத் தீவிரப்படுத்துவதாகும் என்ற விளக்கத்துடன் தான் உடன்படுவதாக அங்கு ஒரு ஆசிரியர் கூறினார். 'எதிர்காலத்தில் போராட்டங்கள் தலை தூக்குவதற்கு முன்பே அதை நசுக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. இந்த சட்டங்கள், தொழிலாள வர்க்கத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களாக உள்ளன. முடிந்தால் எழுந்திடுங்கள், நாங்கள் உங்களுக்கு எதிரான அனைத்து ஆயுதங்களையும் கூர்மைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்று அரசாங்கம் தொழிலாளர்களுக்கு கூறுகிறது.

இனிமேலும் இந்த நிலைமையை எதிர்கொள்ள தொழிலாளர்கள் தயாராக இல்லை என்று அவர் கூறினார். அவ்வாறு செய்ய அவர்கள் நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு, அந்த குழுக்களிடையே பரந்த கலந்துரையாடல்களை நடத்தி இந்த ஆபத்தின் உண்மையான ஆழத்தை புரிந்து கொள்ள வேண்டும். 'ஒரு வர்க்கமாக தங்கள் பலத்தை சுயாதீனமாக ஒருமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உள்ள ஒரே வழி ஆகும்.'

Loading