இலங்கை: சோ.ச.க கூட்டம் தொற்று நோய்க்கு எதிராக போராட சோசலிச வேலைத்திட்டத்தை கலந்துரையாடுகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவ கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான சோசலிச மற்றும் சர்வதேச கொள்கையை கலந்துரையாடுவதற்கு, கடந்த வியாழக்கிழமை சக்திவாய்த இணையவழி கூட்டமொன்றை நடத்தியது.

சோ.ச.க. (இலங்கை) இணையவழி கூட்டம்.

ஆகஸ்ட் 26 அன்று நடைபெற்ற இந்தக் கூட்டம், கிட்டத்தட்ட 200 பேரைக் கவர்ந்துள்ளதுடன், 150 பேர் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். மேலும் கட்சியின் முகநூல் பக்கத்தின் ஊடாக பலர் கூட்டத்தை பார்வையிட்டுள்னர். இலங்கை அதே போல் இந்தியா, பிரான்ஸ், மத்திய கிழக்கு மற்றும் உலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பலர் கூட்டத்தை கேட்டுள்ளனர. வீடியோவை 1,200 பேர் இதுவரை பார்வையிட்டுள்ளனர்.

கூட்டத்திற்கு தலைமைதாங்கிய சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் பிரகீத் அரவிந்த, உலகரீதியாக இலட்சக் கணக்காண மக்களின் பேரழிவு நிலைமைக்கு, ஆளும் வர்க்கம் மனித உயிர்களுக்கு மேலாக இலாபத்துக்கு முன்னுரிமை கொடுத்ததன் விளைவாகும், எனத் தெரிவித்தார்.

முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளிலிருந்து தலைதூக்கும் ஒரு “தூண்டுதல் நிகழ்வே” இந்த தொற்றுநோய் என, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வகைப்படுத்தல் நிரூபணமாகியுள்ளதுள்ளதாக கூறிய அவர், உலக ரீதியாக தொழிலாளர் போராட்டங்களின் புதிய அலைகள் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். எவ்வாறெனினும், சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொற்று நோய்க்கு எதிராக போராடுவதற்கு, தொழிலாளர்கள் துரோகத் தலைமைகளிடம் இருந்தும் முதலாளித்துவ கருத்தியலில் இருந்தும் விடுபடவேண்டும், எனவும் அவர் கூறினார்.

சுகாதார தொழிலாளர் நடவடிக்கை குழு (HWAC) சார்பாக பேசிய வைத்தியர் கமல் மஹகம, தொற்று நோய் பரவுவதற்கான விஞ்ஞான பூர்வமான ஆய்வையும் அதற்கு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசாங்கங்களினது குற்றவியல் பிரதிபலிப்பு பற்றியும் கூட்டத்தில் முன்வைத்தார். அவரது அறிக்கை, ஆகஸ்ட் 22 அன்று உலக சோசலிச வலைத் தளம் ஒழுங்கு செய்திருந்த “தொற்றுநோயை நிறுத்துவதற்கும் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு பூகோள மூலோபாயம்” என்ற தலைப்பிலான சர்வதே இணையவழி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் அடங்கிய அட்டவணையை பயன்படுத்தி, இலங்கையில் கொரணா வைரஸ் தொற்றாளர்களதும் மரணித்தவர்களதும் விகிதம், இந்தியாவை விட பத்து மடங்கு மோசமானது என மஹகம சுட்டிக்காட்டினார். உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கல் என்று அழைக்கப்படுவதும் மற்றும் கட்டுப்படுத்துதல் முறையும், இலாபத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன் இந்த மூலோபாயங்கள் மரணகரமானவை என அவர் தெளிவு படுத்தினார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் தொற்று நோயை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற முன்னோக்கு, “முற்று முழுதாக சரியானது. வைரஸ் உடன் வாழவேண்டும் என்ற மனிதாபிமானமற்ற மரணக் கொள்கையை, சுகாதார ஊழியர்களான நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 வைரஸால் மரணித்தவர்களின் சடலங்கள் இலங்கையில் மருத்துவமனை ஒன்றில் நோயாளர் வண்டிகளில் வைக்கப்பட்டுள்ளன ((Source: Facebook))

தொற்று நோயை கட்டுப்படுத்துவது சம்பந்தமான பல வகையான வழிமுறைகளின் விளைவுகளை வரைபடங்களுடன் ஒப்பிட்ட அவர், ”தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்படுமாயின், அதனை இரண்டு வாரத்துக்குள் பூரணமாக ஒழிக்க முடியும்” என அவர் கூறி முடித்தார். அதற்கு பொருத்தமான பொது சுகாதார நடைமுறைகளுடன் முழுமையான பொது முடக்கம் மற்றும் சகல மக்களுக்கும் தடுப்பூசி வழங்குவதும் அவசியமாகும்.

உலக ரீதியாக பல நாடுகளில் பாடசாலைகளை மீண்டும் திறந்து விட்டதன் விளைவாக, சிறுவர்களின் இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினரும், சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கபில பெர்னான்டோ தெரிவித்தார். அரசாங்கம் எல்லா மாணவர்களுக்கும் இணையவழி கல்வி வசதிகளை விரிவுபடுத்துவதை நிராகரித்துள்ளது என கூறினார்.

“இராஜபக்ஷ அரசாங்கம் தொற்றுநோயின் சுமையை முற்று முழுதாக தொழிலாளர்கள் மீது சுமத்தியுள்ள அதேநேரம், பெரிய முதலாளிகள் இலாபத்தை அதகரிப்பதற்கான வசதிகளை வழங்கியுள்ளது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது இலங்கை ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தைப் பற்றி விபரித்த அவர், மற்றுமொரு காட்டிக் கொடுப்புக்கு தயாராகி வரும் தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, சோ.ச.க. உருவாக்கியுள்ள நடவடிக்கை குழுவில் இணையுமாறு ஆசிரியர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

கொவிட்-19 தொற்று நோயை தனி ஒரு நாட்டில் ஒழிக்கமுடியாது, அதற்கு, பூகோள ரீதியாக ஒன்றிணைக்கப்பட்ட நடவடிக்கை அவசியமென கூட்டத்தில் பிரதான உரையை நிகழ்த்திய சோ.ச.க. துணைச் செயலாளர் தீபால் ஜயசேகர விபரித்தார். “தொற்று நோயுடன் போராடுவதற்கு, பூகோள வளங்களை ஒன்றிணைப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான பொறுப்பை சர்வதேச தொழிலாள வர்க்கம் தன்கையில் எடுக்க வேண்டும்” என அவர் கூறினார்.

உலகம் முழுதும் உள்ள ஆட்சியாளர்களைப் போலவே, ஜனாதிபதி இராஜபக்ஷவும் “யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் “வைரஸ் உடன் வாழவேண்டும்” என்றும் கூறுகின்றார் என பேச்சாளர் தெரிவித்தார். இதன் அர்த்தம், முதலாளிகள் இலாபத்தை உறுஞ்சுவதற்காக, தொழிலாளர்கள் தமது பிள்ளைகள் மற்றும் அன்புக்குரியவர்களினதும் உயிரை பணயம் வைத்து, பாதுகாப்பற்ற நிலமையில் வேலை செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் பைடன் தொடக்கம், பிரித்தானியாவில் பொரிஸ் ஜோன்சன் மற்றும் இந்தியாவில் நரேந்திர மோடி வரையில், உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்கள், முதலாளித்துவ பொருளாதாரத்தை முழுமையாக திறந்து விடுவதற்காக, நடப்பில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஜயசேகர தெரிவித்தார்.

“இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள், முலாளிகளுக்கு பாரிய இலாபத்தை உருவாக்குவதால் அவை ‘அத்தியாவசிய சேவையாக’ வகைப்படுத்தப்பட்டு, இடையூறு இல்லாமல் இயங்குகின்றன” என அவர் கூறினார். தொற்று பரவும் காலத்தில் இயங்க வேண்டிய அத்தியாவசிய சேவை பற்றி தீர்மானிக்க வேண்டியது தொழிலாள வர்க்கமேயொழிய, முதலாளி வர்க்கமல்ல” என அவர் மேலும் தெரிவித்தார்.

போராட்டத்தில் இறங்கும் தொழிலாளர்களை எதிர்கொள்ள இராஜபக்ஷ ஆட்சி, ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு தயார் செய்வதாக பேச்சாளர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்திற்கு தளராத ஆதரவை கொடுத்து வருகின்ற தொழிற்சங்களின் வகிபாகம் பற்றி விபரித்த பேச்சாளர், ஒவ்வொரு வேலைத்தளங்களிலும் நடவடிக்கை குழுக்களை அமைத்து தொழிலாளர்கள் தமது போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மோசமாகி வரும் தொற்று நோய்க்கு எதிராகவும் இராஜபக்ஷ அரசாங்கத்தினது ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுவதற்கு, இலங்கையில் உள்ள தொழிலாளர்கள், அடிப்படையில் இப்பிராந்தியத்தில் உள்ள தொழிலாளர்களுடனும், உலகத் தொழிலாளர்களுடனும் ஒன்றிணந்து சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆய்வுகளையும் மற்றும் வேலைத்திட்டங்களையும் கற்குமாறும், சோசலிசத்திற்காக போராடுவதற்காக சோ.ச.க. இல் இணையுமாறும் கேட்டுக் கொண்டு, ஜயசேகர உரையை நிறைவு செய்தார்.

கூட்டத்தின் கலந்துரையாடல் நேரத்தில் வைத்தியர் மஹகமவிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. கோவிட்-19 தொற்று நோயை முற்று முழுதாக ஒழிப்பதற்கு, அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளை மூடி, பொது முடக்கத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என அவர் தெளிவு படுத்தினார். “முழுமையான சுகாதார வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வளங்களுக்கு பற்றாக்குறை இருக்க கூடாது. ஆனால் தொழிலாள வர்க்கம் அந்த வளங்களை முதலாளிகளிடமிருந்து கைப்பற்றாவிட்டால் அது சாத்தியப்படாது” எனவும் அவர் கூறினார்.

வைத்தியர் மஹகமவின் அறிக்கைக்கு, கலந்துரையாடலில் பங்குபற்றியவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. அதைச் சுட்டிக் காட்டி சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், கலந்துரையாடலில் பங்கு பற்றி, அதன் பரந்த சூழ்நிலையில் இருத்தினார்.

“உழைக்கும் மக்களுக்கு கோவிட்-19 தொற்றின் தாக்கத்தின் உண்மையான விஞ்ஞான ரீதியான விளக்கத்தில் மிகவும் அக்கறை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. பூகோள முதலாளித்துவம், தமது இலாபத்தை பாதுகாப்பதற்காக, விஞ்ஞான ரீதியான விளக்கத்திதை முழுமையாக நிராகரித்து செயற்படுகின்றது. நெருக்கடியில் உள்ள முதலாளித்துவம், விஞ்ஞானத்திற்கு எதிராக திரும்பியுள்ளது” என அவர் கூறினார்

பிரபுத்துவ மாயவாதத்திற்கு எதிராக மனித முன்னேற்றத்திற்காக, முதலில் விஞ்ஞானத்தை அபிவிருத்தி செய்த முதலாளித்துவம், இப்பொழுது ஏகாதிபத்தியம் என்ற வடிவில் அதன் உச்ச இறுதிக் கட்டத்தில் உள்ளதுடன், விஞ்ஞானத்தின் உண்மையான உயர்வுக்கு எதிராக திரும்பி உள்ளது.

வரலாற்றின் நிகழ்காலத்தில், முதலாளித்துவத்தின் மிலேச்ச இலாப கோரிக்கைக்கு எதிரான, தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலனுடன் இணைந்தவாறே விஞ்ஞானம் மலரும். இது தொற்றுநோய் காலத்தில் போதுமானளவு வெளிப்பட்டுள்ளது, என டயஸ் தொடர்ந்தார்.

எங்கெல்ஸ்சின் லுத்விக் பாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் என்ற நூலின் கடைசி பந்தியை டயஸ் மேற்கோள் காட்டி இந்த விடயத்தை தெளிவுபடுத்தினார். எங்கெல் கூறியதாவது: “எவ்வளவுக்கு எவ்வளவு உறுதியுடனும் தன்னலச் சார்பின்றி விஞ்ஞானம் முன்நகருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது தொழிலாளர்களின் நலன்களுக்கும் அபிலாஷகளுக்கும் இசைவாக இருக்கின்றது. சமுதாயத்தின் வரலாறு முழுவதையும் புரிந்துகொள்வதற்கான திறவுகோல், உழைப்பின் வளர்ச்சி பற்றிய வரலாற்றிலேயே தங்கி இருக்கின்றது என்பதை புதிய போக்கு [மார்சிஸம்] கண்டு கொண்டது. ஆரம்பத்தில் இருந்தே அது தொழிலாள வர்க்கதில் கவனம் செலுத்தியதுடன், உத்தியோகப்பூர்வ விஞ்ஞானத்திடம் இருந்து பெற முடியாத அல்லது எதிர்பார்க்க முடியாத பிரதிபலிப்பை அது இங்கே கண்டது.” மேலும் தொடர்ந்த டயஸ், “எங்களுடைய இந்தக் கூட்டம் சம்பந்தமான ஆர்வம், அதே போல், ஆகஸ்ட் 22 அன்று உலக சோசலிச வலைத் தளத்தின் இணைய வழி கூட்டத்திற்கான பூகோளரீதியான பிரதிபலிப்பு, எங்கெல்ஸின் முன்நோக்கை நீரூபிக்கின்றது,” என்றார்.

“முதலாளித்துவ ஆட்சியாளர்களின் கொலைகாரக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்காக, இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் முதலாளித்துவத்தின் சகல பிரிவுகள் மற்றும் அதன் அனைத்து இடது விசுவாசிகளாலும் உச்சரிக்கப்படும் மந்திரம், இலங்கை ஒரு ஏழை நாடு, அதனால் பொருளாதார நடவடிக்கைகளை முடக்க முடியாது என்பதாகும்.

“இறப்புக்கள் பல மில்லியன் கணக்காக இருந்த போதும், செல்வந்த முதலாளித்துவ நாடுகள் உற்பத்தியை நிறுத்துவதற்கு தயக்கம் காட்டுவதுடன், தாம் பிரநிதித்துவம் செய்கின்ற மற்றும் தழுவிக்கொண்டிருக்கின்ற, அதே முதலாளித்துவ–ஏகாதிபத்திய முறையே முன்னாள் காலனித்துவ உலகத்தின் வறுமைக்கும் பொறுப்பாளி, என்பதை எல்லோரும் மூடிமறைக்கின்றனர்.

“மேல் குறிப்பிட்ட நிலைப்பாட்டுக்காக வக்காலத்து வாங்கும் அதே வேளை, கிராமப்புற ஏழைகளின் சமூக நலன்கள் உட்பட இராஜபக்ஷ அரசாங்கத்தின் தொழிலாளவர்க்க-விரோத தாக்குதலுக்கு போலி-இடதுகள் ஆதரவு கொடுக்கின்றார்கள். ஆனால், அவர்கள் வருடத்திற்கு 400 கோடி அமெரிக்க டொலரை வெளி நாட்டு வங்கிகளுக்கு கடனாக திருப்பி செலுத்துவது சம்பந்தமாக மௌனம் காக்கின்றனர். பெரிய தொழில் வழங்குவோருக்கு பல மில்லியன் வரிச்சலுகை மற்றும் நிதி மானியம் வழங்குதல் சம்பந்தமாக மெளனம் காக்கின்றனர். வெளிநாட்டு வங்கிக் கடன் மீள்செலுத்துகையை நிராகரிக்குமாறும், செல்வந்தர்களுக்கு வரியை அதிகரிக்குமாறும் சோ.ச.க. கோரிக்கையை முன் வைக்கின்றது” என டயஸ் கூறினார்..

கோவிட்-19 வைரஸை முற்று முழுதாக ஒழிப்பதானது தொழிலாள வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதிலேயே தங்கியிருக்கின்றது, என பேச்சாளர் வலியுறுத்தினார். பொருளாதாரத்தின் பிரதான துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் இளைஞர்களுக்கும் கல்வியூட்டுவதற்கு சோ.ச.க. முழுமுயற்சி எடுக்கின்றது. சர்வதேச ரீதியாகவும் தெற்காசியாவிலும் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் பாகமாக, இலங்கையில் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சியை ஒரு வெகுஜன கட்சியாக கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு, அவர் கேட்டுக் கொண்டார்.