சீனாவுக்கு எதிராக AUKUS ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர் பாரிஸ் ஆக்கிரோஷமான ஐரோப்பிய ஒன்றியக் கொள்கையை கோருகிறது

பிரான்சுடனான பல பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து ஆஸ்திரேலியா விலகியது, சீனாவுக்கு எதிராக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் கூட்டணி வைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே தொடர்ந்து மோதலைத் தூண்டியுள்ளது.

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவுக்கு எதிராக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் AUKUS கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டதும் ஆஸ்திரேலியா உடனடியாக பிரான்சுடன் ஒப்புக்கொள்ளவிருந்த 56 பில்லியன் யூரோ மதிப்பு கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை நிராகரித்ததன் பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஒரு சுதந்திரமான ஐரோப்பிய ஒன்றிய (EU) இராணுவக் கொள்கைக்கு தீவிரமாக அழைப்பு விடுக்கிறார்.

பாரிஸூக்கு வெளியே, கிரீடில் மார்ச் 29, 2021, திங்கட்கிழமை, கோவிட்-19 தடுப்பூசி பணிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த பிரெஞ்சு சமூக பாதுகாப்பு காப்பீட்டிற்கான அழைப்பு மையத்தை பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பார்வையிடுகிறார்.

சுலோவேனியாவின், லுப்ல்ஜானாவுக்கு வெளியே உள்ள பிர்டோ கோட்டையில் அக்டோபர் 5 அன்று ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு வருகை தந்த மக்ரோன், AUKUS ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையும், ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா அவமானகரமாக வெளியேறியதையும் சுட்டிக்காட்டினார். நேட்டோ கூட்டணி தொடர்பாக “தெளிவுபடுத்தவும் அதில் புதுப்பிக்கப்பட்ட ஈடுபாட்டுக்கும்” வாஷிங்டனுக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளை, “நமக்கும், நமது எல்லைகளுக்கும், நமது பாதுகாப்பிற்கும், மற்றும் நமது எரிசக்தி, தொழில், தொழில்நுட்பம் மற்றும் இராணுவ சுதந்திரத்திற்கும் மற்றும் நமக்கு என்ன தேவை என்பதிலும் நாம் தெளிவாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

AUKUS ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவை நிரந்தரமாக சேதப்படுத்தியது என்பதை மக்ரோன் தெளிவுபடுத்தினார்: “எங்கள் கூட்டாளிகளால் எடுக்கப்பட்ட முடிவுகளை குறித்து நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும். பிரான்ஸ் அல்லது ஐரோப்பாவிற்கு சரியாக மரியாதை காட்டாத முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன,” என்று மக்ரோன் கூறினார். லுப்ல்ஜானா உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிக்கோள் “அதன் வரலாற்று பங்காளிகள் மற்றும் கூட்டாளிகளுடன் நல்ல விசுவாசத்துடன் தொடர்ந்து பணியாற்றுவதாகும், ஆனால் அதேவேளை அதன் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை அதிகரிப்பது முக்கியம்,” என்று அவர் கூறினார்.

இதன் பொருள் என்னவென்றால், கொரோனா வைரஸை ஒழிப்பதற்கும் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் முக்கிய பொது சுகாதார முயற்சிகளுக்கு பணம் செலுத்த தங்களுக்கு பணம் இல்லை என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூறினாலும், முன்னணி ஐரோப்பிய ஒன்றிய வல்லரசுகள் தங்கள் புவிசார் அரசியல் அபிலாஷைகளை மேலும் அதிகரிக்க பாரியளவில் இராணுவச் செலவினங்களை அதிகரிக்க உறுதிபூண்டுள்ளன. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஆறுமாத காலத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறை தலைமையை ஏற்கவுள்ள பேர்லின் மற்றும் பாரிஸ் இரண்டும் ஐரோப்பிய ஒன்றிய இராணுவ கட்டமைப்பிற்கு தீவிரமாக அழுத்தம் கொடுத்துள்ளன.

சீனாவுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்கள் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய பதட்டங்களையும், மற்றும் பால்கன் மற்றும் மத்திய தரைக்கடலில் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பு நகர்வுகளையும் தீவிரப்படுத்துவதை லுப்ல்ஜானா உச்சிமாநாடு அடிக்கோடிட்டுக் காட்டியது.

உச்சி மாநாட்டிற்கு வருவதற்கு சற்று முன்பாக அதே நாளில் மக்ரோன், அமெரிக்க-பிரெஞ்சு உறவுகளை மேம்படுத்துவது தொடர்புபட்ட பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கனை பாரிஸில் வரவேற்றிருந்தார்.

பிளிங்கன் வருவதற்கு முன்னதாகவே, அவரது விஜயம் AUKUS ஒப்பந்தம் குறித்த நெருக்கடியை தீர்க்காது என்பதை மக்ரோன் தெளிவுபடுத்தினார். மேலும் அவர், “சற்றேறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா முதலில் தன்னைப் பற்றியும், மற்றும் சீனா மற்றும் பசிபிக் குறித்த அதன் மூலோபாய நலன்கள் மீது மீண்டும் கவனம் செலுத்துவது பற்றியும் மிகுந்த கவனம் வைத்திருந்தது என்பதை கவனிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அது அவர்களின் உரிமை, மேலும் அவர்களின் சொந்த இறையாண்மை. நான் மக்கள் இறையாண்மையை மதிக்கிறேன், ஆனால் மறுபுறம் நாங்கள் அப்பாவியாக இருப்போம் அல்லது அதிலிருந்து நம் சொந்த முடிவுகளை எடுக்காவிட்டால் பயங்கரமான தவறு செய்வோம்.” என்று கூறினார்.

“இது நீடிக்கும் ஒரு நெருக்கடியாகும், உறுதியான நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இதிலிருந்து நாம் வெளியேற முடியும்,” என்று லு மொண்ட் நாளிதழுக்கு ஒரு அநாமதேய பிரெஞ்சு அதிகாரி தெரிவித்தார்.

பிளிங்கன் அவரது பிரெஞ்சு சமதரப்பாளரான வெளியுறவு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன் (Jean-Yves Le Drian) ஐ சந்தித்தார், ஆனால் கூட்டு செய்தியாளர் சந்திப்பு எதுவும் நடத்தப்படவில்லை. இந்த வழமைக்கு மாறான முடிவு பற்றி விளக்கமளித்து ஒரு பிரெஞ்சு அதிகாரி, “இரண்டு அமைச்சர்களும் ஏதாவது பேச வேண்டியிருந்தால் பேசுவார்கள்” என்று சுருக்கமாக கூறினார்.

ரோமில் அக்டோபர் 30-31 தேதிகளில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டின் போது பைடெனை நேரடியாக சந்திப்பதற்கு முன்னதாக, இந்த மாதம் நடுப்பகுதியில் அவருடன் தொலைபேசியில் உரையாட மக்ரோன் திட்டமிட்டுள்ளார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் முழு மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் பல தசாப்தங்களாக அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு போர்களின் தோல்வி சர்வதேச மோதல்களையும் போர் அச்சுறுத்தலையும் தீர்க்கவில்லை, ஆனால் மாறாக அதை தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் விளைவாக நேட்டோ சக்திகள் தங்கள் பொது எதிரியை இழந்து 30 ஆண்டுகளுக்குப் பின்னரும், அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஆழ்ந்த பதட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது மத்திய ஆசியாவில் ஒரு சக்தி வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது, யூரேசியா முழுவதும் பெரும் சக்திகளுக்கிடையேயான போட்டிகளை தீவிரப்படுத்துகிறது மற்றும் அமெரிக்கா தலைமையிலான புதிய போரின் அபாயத்தை அதிகரிக்கிறது.

எவ்வாறாயினும், 2014-2015 இல் ரஷ்யாவுடனான போருக்காக தீவிர வலதுசாரி உக்ரேனிய ஆயுதப் படையினரை ஆயுதபாணியாக்கும் அமெரிக்க முயற்சிகள் குறித்து வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் மோதிக் கொண்டதன் பின்னர், சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் அச்சுறுத்தல்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆளும் வட்டாரங்களில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. “பிரான்சின் இந்தோ-பசிபிக் ‘மூன்றாவது வழி’” என்ற தலைப்பிலான கட்டுரையில், சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளையின் (Carnegie Foundation of International Peace) சிந்தனை குழாம், வாஷிங்டனுக்கும் AUKUS ஒப்பந்தத்தால் வெளிப்படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை சுட்டிக்காட்டுகிறது.

“ஒத்த சிந்தனையுள்ள ஜனநாயக நாடுகளை அணிதிரட்டுவது பற்றிய அறிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பிரான்ஸின் எதிர்வினையை பைடென் நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை. இது டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் ஏற்கனவே சேதமடைந்துபோன அமெரிக்காவின் கௌரவத்திலும் அட்லாண்டிக்கிற்கு அப்பாற்பட்ட உறவுகளிலும் நீண்டகால எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்,” என்றும், “பசிபிக் மீதான வாஷிங்டனின் புதிய கவனம் ஐரோப்பிய ஒன்றிய நலன்களுக்கு ஏற்றதல்ல,” என்ற உணர்வு பிரான்சின் அண்டை நாடான ஜேர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளிடையே அதிகரித்து வருகிறது” என்றும் இது எழுதியது.

சர்வதேச உறவுகளுக்கான பிரெஞ்சு நிறுவனத்தின் (French Institute for International Relations-IFRI) சிந்தனை குழாம், சீனாவை குறிவைக்கும் AUKUS ஒப்பந்தத்தினால் தூண்டப்படுவதான அணுசக்தி போர் உள்ளிட்ட அதிகரித்து வரும் போர் அபாயத்தை விமர்சித்தது.

“AUKUS ஒப்பந்தம் கையெழுத்தாவது ஒரு (அணு) ஆயுதப் போட்டியைத் தூண்டலாம், மேலும் அத்தகைய நடவடிக்கை ஆபத்தான முறையில் கிழக்கு ஆசியாவில் பதட்டத்தை அதிகரிக்கிறது,” என்று IFRI எச்சரித்துள்ளது. இது, AUKUS ஒப்பந்தத்தால் கோபமடைந்த பிராந்திய நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர், அத்துடன் தாய்லாந்து, லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளை சேர்த்தது. இந்தோனேசிய அரசாங்கத்தின் அறிக்கைகள் “இப்பிராந்தியத்தில் தொடரும் ஆயுதப் போட்டி மற்றும் போர் முனைப்பு குறித்து ஆழ்ந்த கவலையடைவதையும்” “பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை தொடர்ந்து உறுதியுடன் பராமரிக்க” ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பு விடுப்பதையும்” இது மேற்கோள் காட்டியது.

ரியூனியன் அல்லது நியூ கலிடோனியா போன்ற அதற்கு பாத்தியப்பட்ட தீவுகள் வழியாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பிரான்சின் நிலையை சுட்டிக்காட்டி, “சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் கண்மூடித்தனமான மற்றும் நிபந்தனையற்ற ஆபத்தான பாதையை பின்பற்ற விரும்பாத இந்தோ-பசிபிக் பகுதியிலுள்ள ஒரே நாடாக பிரான்ஸ் மட்டும் இல்லை” என்று IFRI முடித்தது.

எவ்வாறாயினும், போர் மற்றும் பெரும் சக்தி மோதலுக்கான முனைப்பு என்பது, ஆக்கிரோஷமான அமெரிக்க வெளியுறவு கொள்கைகளின் விளைவுகள் மட்டுமல்ல, மாறாக மிக அடிப்படையாக, முதலாளித்துவ தேசிய-அரசின் அமைப்பு முறையே அதற்கான காரணம். ஐரோப்பிய ஒன்றிய ஏகாதிபத்திய சக்திகளின் புவிசார் அரசியல் முறைகள், வாஷிங்டனின் மிக அப்பட்டமான ஆக்கிரமிப்பு கொள்கையிலிருந்து அடிப்படையில் வேறுபட்டவை அல்ல.

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆனால் இன்னும் கணிசமான இராணுவப் படைகளுக்கு தயாரிப்பு செய்து, ஐரோப்பாவின் தெற்கு மற்றும் கிழக்கு சார்ந்த சுற்றுப்பகுதிகளில் அவர்களது மூலோபாய செல்வாக்கை ஒருங்கிணைக்கும் கொள்கையை அவர்கள் வகுத்தனர். துருக்கிக்கு எதிராக கிரீஸை ஆயுதம் ஏந்த வைக்கவும், மற்றும் ஆபிரிக்க நாடான மாலியில் பிரான்சின் நவ காலனித்துவ போரை அதிகரிக்கவும் என, 1999 ஆம் ஆண்டில் யூகோஸ்லாவியாவில் நடந்த நேட்டோ போரில் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளின் குண்டுவீச்சு தாக்குதலில் சிதைந்துபோன முன்னாள் யூகோஸ்லாவிய நாடுகளை சேர்த்துக்கொள்ள முனைவதை இது உள்ளடக்கியது.

முன்னாள் யூகோஸ்லாவியாவில் ஐரோப்பிய ஒன்றியத்தை “விஸ்தரிக்க” ஏற்பாடு செய்ய லுப்ல்ஜானா உச்சிமாநாடு அழைப்புவிடுத்தது. உச்சிமாநாட்டு அறிக்கை, “மேற்கு பால்கன்கள் தொடர்புபட்ட ஐரோப்பிய முன்னோக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுதியான ஆதரவை வழங்குவதை மீளுறுதி செய்கிறது” என அறிவித்தது.

உச்சிமாநாட்டிற்கு பின்னர், சேர்பிய ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வூசிக் (Aleksandar Vucic), 2008 இல் நேட்டோ ஆதரவுடன் ஒருதலைபட்சமாக சுதந்திரத்தை அறிவித்து பிரிந்துபோன கொசோவோ குடியரசை முதலில் அங்கீகரிக்காமல் சேர்பியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய முடியாது என்று பரிந்துரைத்தார். மேலும், “பிரிஸ்டினாவுடனான [கொசோவோவின் தலைநகரம்] பிரச்சினைகளை தீர்க்காமலும், சேர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர முடியாது” என்றும் வூசிக் கூறினார்.

ஆயினும்கூட, ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் ஒரு தீவிரமான தலையீட்டிற்கான அழைப்புக்களை தீவிரப்படுத்தின. முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசுகளைச் சேர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தை விஸ்தரிப்பது புவிசார் அரசியல் ரீதியாக முக்கியமானது என்று ஆஸ்திரிய சான்சிலர் குர்ஸ் கூறினார். “ஐரோப்பிய ஒன்றியம் இந்த பிராந்தியத்திற்கு உண்மையான முன்னோக்கை வழங்கவில்லை என்றால், சீனா, ரஷ்யா அல்லது துருக்கி போன்ற மற்ற வல்லரசுகள் அங்கு பெரியளவில் தலையீடு செய்யும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இந்த பகுதி புவியியல் ரீதியாக ஐரோப்பாவிற்கு சொந்தமானது, எனவே அதற்கு ஒரு ஐரோப்பிய முன்னோக்கு தான் தேவை” என்று குர்ஸ் தெரிவித்தார்.

ஏஜியன் மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் தொடர்பாக துருக்கியுடன் மோதலில் இருக்கும் கிரேக்கத்திற்கு மூன்று பில்லியன் யூரோ மதிப்புள்ள மூன்று போர் கப்பல்களை விற்பனை செய்வதாக பிரான்ஸ் அறிவித்தது. “பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு,” ஒரு அச்சுறுத்தல் என துருக்கியால் விமர்சிக்கப்பட்ட இந்த விற்பனையை கிரேக்க பாராளுமன்றம் நேற்று அங்கீகரித்தது. மேலும், மாலி மற்றும் சஹேல் பிராந்தியம் எங்கிலும் நடக்கும் பிரெஞ்சு போருக்கு படைகளை அனுப்ப கிரேக்க ஆயுதப் படைகளை ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.

Loading