இலங்கை கட்டுக்கலை தோட்டத்தில் 11 தொழிலாளர்களை பொலிஸ் கைதுசெய்தது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான தலவாக்கலை தோட்டத்தின் ஒரு பிரிவான கட்டுக்கலை தோட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 11 தொழிலாளர்களை செப்டம்பர் 30 அன்று பொலிசார் கைது செய்தனர்.

கட்டுக்கலை தோட்டத்தில் போரட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் [Photo: WSWS media]

வேலைச் சுமை அதிகரிப்பு மற்றும் ஊதிய வெட்டுக்கு எதிராக செப்டம்பர் 26 வேலைநிறுத்தத்தில் தீவிரமாக தலையிட்ட பெண் தொழிலாளி பொன்னிறசெல்வியை பழிவாங்கும் விதமாக, தோட்ட நிர்வாகம் செப்டம்பர் 28 முதல் அவருக்கு வேலை வழங்கவில்லை. இதை எதிர்த்து செப்டம்பர் 29 ஆரம்பித்த வேலை நிறுத்தத்தில் 130 தோட்டத் தொழிலாளர்கள் கலந்துக்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்பட்ட பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க பொலிசார் எதிர்ப்பு தெரிவித்ததால், அக்டோபர் 5 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மீண்டும் இந்த வழக்கு அக்டோபர் 5 அன்று அழைக்கப்பட்டு 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக பொலிசார் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. சிறையில் உள்ள தொழிலாளர்களில் நான்கு பெண் தொழிலாளர்களும் உள்ளனர்.

எம். அண்ணாத்துரை, ஏ. பொன்னிறச்செல்வி, எஸ். ஸ்ரீதேவி, ஸ்ரீகாந், சிவஞானம், சசிரேஹா, எம். சிவனேஸ்வரன், எம். விஜிதரன், பாலச்சந்திரன், ப. விஜயலட்சுமி மற்றும் திருச்செல்வமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக செப்டம்பர் 29 அன்று தோட்ட நிர்வாகம் மேற்கொண்ட ஆத்திரமூட்டல் நடவடிக்கையை அடுத்தே தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆத்திரமூட்டல் நடவடிக்கையின் போது தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்தில் உள்ள பலருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்து, லிந்துலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பொன்னிறச்செல்வி, ஸ்ரீதேவி ஆகிய இரண்டு பெண் தொழிலாளர்களும், சிகிச்சை முடிவுறாத நிலையிலும் கைது செய்யப்பட்டனர்.

இந்த அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சக தொழிலாளர்களை விடுவிக்கவும், நிபந்தனையின்றி பொன்னிறச்செல்வியை வேலைக்கு அமர்த்தவும் கோருகின்றனர். பின்னர் அக்டோபர் 7 அன்று, இந்த தொழிலாளர்கள் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.

கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கட்டுக்கலை தொழிலாளர்கள் [Photo: WSWS media]

தலவாக்கலை பெருந்தோட்டத்தின் மற்றொரு பகுதியான அல்பலகந்தை, சென் கிளேயர், ரூப் மற்றும் கொரின் தோட்ட தொழிலாளர்களும் கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செப்டெம்பர் 29 வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். எனினும், தோட்டத் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி போன்ற தொழிற்சங்கங்கள் எத்தகைய நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடலானது தோட்டக் கம்பெனி, பொலிஸ் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டுச் சதி ஆகும். இந்த பொலிஸ் அடக்குமுறை தொழிலாள வர்க்கத்தால் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதோடு பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி வேலை நிறுத்தங்கள், மறியல் போராட்டங்கள் உள்ளிட்ட வர்க்க நடவடிக்கைகளில் தீவிரமாக தலையிட வேண்டும்.

நிர்வாகம் தினசரி வேலை இலக்கை உயர்த்துவதற்கும் ஊதியத்தை குறைப்பதற்கும் எதிராக கட்டுக்கலை தொழிலாளர்கள் சமீபத்திய நாட்களில் தொடர்ச்சியான போராட்டங்களிலும் வேலைநிறுத்தங்களிலும் ஈடுபட்டனர். நாளொன்றுக்கு ஒரு தொழிலாளி தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிப்பதை ஏழு டாங்கிகளிருந்து 14 டாங்கிகளாக இரட்டிப்பாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர்கள் ஆகஸ்ட் 18 முதல் 24 வரை ஆறு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் தோட்ட நிர்வாகம் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை பழி வாங்கும் நடவடிக்கையை தொடங்கியது.

இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக செப்டம்பர் 26 அன்று தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, தோட்டக் கங்காணி ஒன்று இரண்டு தொழிலாளர்களின் உதவியுடன் வேலைநிறுத்தத்தை குழப்ப முயன்றார். தொழிலாளர்கள் அதை எதிர்த்தனர். வேலைநிறுத்தம் செய்வதற்கான முடிவை தொழிலாளர்கள் கூட்டாக எடுத்ததாகவும், அதை சீர்குலைக்க அனுமதிக்கமாட்டேன் எனக் கூறிய பொன்னிறச் செல்விக்கும், கங்காணிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவம் கங்காணியால் முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டது.

இதன் விளைவாக, போராட்டத்தில் முன்னணியில் இருந்த பொன்னிறசெல்விக்கு செப்டம்பர் 28 அன்று வேலை மறுக்கப்பட்டதோடு போராட்டத்தில் அவர் ஈடுபட்டது குறித்து விசாரணைக்காக நிர்வாகத்தால் அழைக்கப்பட்டார். அவருக்கு வேலை வழங்கக் கோரி தொழிலாளர்கள் செப்டெம்பர் 29 வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, கொழுந்து நிறுக்கும் மடுவத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகம் நிராகரித்ததால், தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வகிக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, கள அலுவலர் சரவணன், தொழிலாளி ஸ்ரீதேவியை தள்ளிவிட்டார். அவர் தரையில் விழுந்ததில் காயமடைந்தார். இதனால் கோபமடைந்த தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இரண்டு தொழிலாளர்கள், இரண்டு கள அலுவலர்கள் மற்றும் ஒரு உதவி முகாமையாளர் காயமடைந்தனர்.

தோட்ட அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட இந்த ஆத்திரமூட்டலை பயன்படுத்தி பொலிசார் தொழிலாளர்களை கைது செய்துள்ளனர். ஆனால் ஆத்திரமூட்டலுக்கு பொறுப்பான நிர்வாகத்தில் யாரும் கைது செய்யப்படவோ, விசாரிக்கப்படவோ இல்லை. காயமடைந்த அதிகாரிகள் மற்றும் உதவி முகாமையாளர், தோட்டத்திலிருந்து அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் காயமடைந்த இரண்டு தொழிலாளர்கள் தங்கள் சொந்த செலவில் வாடகை வண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டி இருந்தது என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர்கள் முதலில் பொலிஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்க முயன்றனர், ஆனால் தலவாக்கலை பொலிசார் அதை பதிவு செய்ய மறுத்தனர். நிர்வாகம் புகார் அளித்த பின்னரே தொழிலாளர்களின் புகார் பதிவு செய்யப்பட்டது.

'தோட்ட நிர்வாகிகளின் இந்த ஆத்திரமூட்டல் நடவடிக்கையில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க, எந்த தொழிற்சங்கமும் தலையிடவில்லை' எனவும், தொழிலாளர்கள் மீது, தோட்ட உரிமையாளர்கள் வேலை அதிகரிப்பை திணிப்பதை மௌனமாக ஆதரிப்பதாகவும் ஒரு தொழிலாளி கூறினார். இ.தொ.கா. தலைவரும் ஆளும் பொது ஜன முன்னணி அரசின் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், நாளொன்றுக்கு 20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க முடிந்தால் எடுத்துக் கொடுத்து 1,000 ரூபாய் சம்பளம் பெறமுடியும், என தொழிலாளர்களிடம் கூறியதாக அவர் மேலும் கூறினார்.

புதிய தினசரி வேலை இலக்கை முடிப்பது மிகவும் கடினம் என்று ஒரு பெண் தொழிலாளி கூறினார்: 'கடுமையான வறட்சி மற்றும் கனமழையின் போது, 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாது. இது போன்ற மழை நாட்களில் தற்போதைய 18 கிலோவை கூட பறிக்க முடியாது. அந்த தொகையை விட குறைவாக பறித்தால் எமக்கு கிலோவுக்கு 40 ரூபா மட்டுமே கொடுப்பார்கள். அதாவது 17 கிலோ பறித்தால் எமக்கு 680 ரூபாய் மட்டுமே கிடைக்கும்.”

கொரோனா தொற்றுநோயால் அதிகரிக்கப்பட்ட நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கும், அவர்களின் இலாபத்தை தக்கவைத்துக்கொள்ளவும், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தோட்ட நிறுவனங்கள் வேலை அதிகரிப்பையும் சம்பள வெட்டையும் அமுல்படுத்துகின்றன.

இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் வளர்ந்து வருகின்றன. மஸ்கெலியா கிளனுகி தோட்டத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 6 வரை தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 27 அன்று, நல்லதண்ணி மரே தோட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களாக, அட்டன், டிக்கோயா, பொகவந்தலாவ, தலவாக்கலை மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள பல ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்ததிலும், ஏனைய போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். ஏறக்குறைய இந்தப் போராட்டங்கள் அனைத்தும் தொழிற்சங்கங்களுக்கு வெளியிலேயே தலைதூக்கின. அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் தோட்டக் கம்பனிகளுக்கு எதிராக, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு கிளர்ச்சி வளர்ந்து வருவதையே இது காட்டுகின்றது. இந்தப் போராட்டங்கள் வளர்ந்து வரும் சர்வதேச தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இலங்கையில் ஆசிரியர்கள் மூன்று மாதங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், மேலும் சுகாதார ஊழியர்கள் தங்கள் ஊதியம் உட்பட சமூக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாகும். மார்ச் மாத வேலைநிறுத்தத்தின் போது, தோட்ட முகாமையாளர்கள், பொலிசார் மற்றும் தொழிற்சங்கங்களால் உருவாக்கப்பட்ட ஆத்திரமூட்டல் மூலம் சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

அங்கு போராடி வந்த முப்பத்தெட்டு தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதோடு கைது செய்யப்பட்ட 26 தொழிலாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு இம்மாதம் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட நிர்வாகிகள், தமது பாதுகாப்புக்காக 'ஆயுதம்' வேண்டும் என கோரியபோதிலும், இது தொழிலாளர்கள் மத்தியில் கிளர்ச்சியைத் தூண்டும் என அஞ்சி, அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

கட்டுக்கலை போராட்டங்களுக்குப் பிறகும், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் எதிர்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தோட்ட நிறுவனங்கள் அரசாங்கத்தை கோரின. தலவாக்கலை தோட்ட முகாமையாளர்கள் இதனை அரசாங்கத்திடம் வலியுறுத்தி தலவாக்கலை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்தோட்டத்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு இராஜபக்ச அரசாங்கம் இப்போது அதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் எதிர்ப்பை அடக்க, அரசாங்கம் இராணுவத்தை அனுப்பத் தயாராகி வருவதாக டான் நியூஸ் செய்தி வெளியிட்டது.

இந்த அபிவிருத்திகள் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு கொடூரமான தாக்குதலின் அறிகுறிகள் ஆகும். ஆசிரியர்களின் போராட்டம் 'நியாயமானதோ இல்லையோ' அதை நசுக்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மிரட்டினார். இராஜபக்ச அரசாங்கம் அவசரகாலச் சட்டங்கள் மற்றும் அத்தியாவசிய சேவை விதிமுறைகளைப் பயன்படுத்தி அதன் அடக்குமுறையை வலுப்படுத்தி வருகிறது.

தொழிற்சங்கங்களுக்கு அப்பால் சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் ஊடாக, ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் மட்டுமே, தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கம், இந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவும், தங்கள் உரிமைகளை பாதுகாக்கவும் முடியும்.

Loading