நேட்டோ செயலர் ஸ்டோல்டென்பேர்க் சீனா எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்த அழைப்பு விடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று லண்டனில் பைனான்சியல் டைம்ஸிடம் பேசிய நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், சீனாவுக்கு எதிராக அதன் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்த இராணுவ கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். அவரது கருத்துக்கள், நேட்டோ கூட்டணியால் பின்பற்றப்படும் ஆக்கிரோஷமான கொள்கை மற்றும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளிடையே வெளிப்படும் பிளவுகள் இரண்டையும் எடுத்துக்காட்டுகின்றன.

நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க், அக்டோபர் 11, 2021, திங்கட்கிழமை, லிஸ்பனில் உள்ள ஒரு ஹோட்டலில் நேட்டோ பாராளுமன்ற சட்டசபையின் வருடாந்திர அமர்வில் உரையாற்றுகிறார் (AP Photo/Armando Franca)

சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா-இங்கிலாந்து-அமெரிக்கா (AUKUS) கூட்டணிக்கு திடீரென கையெழுத்திடப்பட்டதன் பின்னர், வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU), அதிலும் குறிப்பாக பிரான்சுக்கு இடையே பதட்டங்கள் அதிகரிக்கையில் ஸ்டோல்டென்பேர்க் பேசினார். ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுக்கு எதுவும் தெரிவிக்காமல் வாஷிங்டன் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்திய இந்த கூட்டணி, பிரான்சுடனான 56 பில்லியன் யூரோ மதிப்பு கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா மறுப்பதற்கு இட்டுச் சென்றது. பாரிஸ் இதற்கு பதிலடியாக அமெரிக்காவிற்கான தனது தூதரை உடனடியாக வாபஸ் பெற்றது, பல ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் கருத்தை எதிரொலித்த பிரெஞ்சு அதிகாரிகள் AUKUS ஒப்பந்தத்தை விமர்சித்தனர்.

ஸ்டோல்டென்பேர்க் வாஷிங்டனில் பைடெனை சந்தித்து பின்னர் திரும்பிக் கொண்டிருந்தார், அங்கு அவர் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்திலும் உரையாற்றினார், அப்போது, ரஷ்யாவின் எல்லையில் உள்ள நாடுகளை நேட்டோ கூட்டணியில் சேர அனுமதிக்க நேட்டோ “மேலும் முன்னேறி இன்னும் அதிகம்” செயலாற்ற வேண்டும் என்று ஆத்திரமூட்டும் வகையில் கோரினார். அவரது பைனான்சியல் டைம்ஸ் நேர்காணல், சீனாவை குறிவைத்து அதிகரித்து வரும் அமெரிக்க போர் முனைப்புக்கு ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் ஒத்துப்போக வேண்டும் என்ற வெள்ளை மாளிகையின் மறைமுகச் செய்தியை வெளிப்படையாக தெரிவிப்பதாக இருந்தது.

நேட்டோ, ரஷ்யாவை மட்டுமல்லாமல் சீனாவையும் குறிவைக்க வேண்டும் என்று ஸ்டோல்டென்பேர்க் வலியுறுத்தினார். மேலும் அவர், “சீனா, ரஷ்யா, ஆசியா-பசிபிக் அல்லது ஐரோப்பா இடையே வேறுபாடு காட்டும், இந்த முழு யோசனையும்” விமர்சித்தார். மேலும், “இதன் ஒரு பெரிய பாதுகாப்பு சூழல் குறித்து, நாம் அனைவரும் ஒன்றாக கலந்துரையாட வேண்டும். … அதாவது எந்தவொரு சாத்தியமுள்ள அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள நமது கூட்டணியை வலுப்படுத்துவதாகும்” என்று கூறினார்.

ஐரோப்பாவில் சீனா ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறி அதனை கண்டம் செய்தார். “உதாரணமாக, ஆபிரிக்காவில் சீனா நம்மை நெருங்குகிறது. நாம் அவர்களை ஆர்க்டிக்கில் பார்க்கிறோம். நாம் அவர்களை விண்வெளியில் பார்க்கிறோம். நமது நாடுகளில் முக்கியமான உள்கட்டமைப்புகளில் சீனா அதிக முதலீடு செய்வதைப் பார்க்கிறோம். நிச்சயமாக, அனைத்து நேட்டோ நட்பு நாடுகளையும் சென்று தாக்கக்கூடிய தொலைதூர தாக்குதல் ஆயுதங்களை அவர்கள் ஏராளமாக வைத்துள்ளனர் என்பதே உண்மை. … கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர தாக்குதல் ஏவுகணைகளுக்காக அவர்கள் பல சேமிப்பு இடங்களை உருவாக்கி வருகின்றனர்” என்றும் கூறினார்.

அடுத்த ஆண்டு மாட்ரிட்டில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில், நேட்டோ நேரடியாக சீனாவை குறிவைத்து, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவை சீனா முந்திச்செல்லும் சாத்தியம் இருக்கிறதா என்பது பற்றி விவாதிக்கும் என்று அவர் அறிவித்தார். “மாட்ரிட்டில் நாம் சந்திக்கும்போது, சீனாவின் எழுச்சி, சீனாவின் தாக்கம் மற்றும் நேட்டோ மீதான அதன் அதிகார சமநிலையை மாற்றுவது ஆகியவை பற்றி, ஏனைய தலைப்புக்கள் உட்பட, புதிய மூலோபாய கருத்தாக்கத்தில் முழுமையாக உரையாற்றப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன். நேட்டோவின் தற்போதைய மூலோபாய கருத்தாக்கத்தில் சீனாவை பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை,” என்று கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை பற்றி பேசுகையில், அவர்கள் ஆயுதப் படைகளுக்கு பில்லியன்களுக்கு அதிகமாக செலவு செய்யும் நிலையில், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் நேட்டோ உடனான எந்தவொரு போட்டியையும் தவிர்க்க வேண்டும் என்று ஸ்டோல்டென்பேர்க் வலியுறுத்தினார். “நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயல்படுகின்றன, எனவே எந்தவித முரண்பாடுகளையும் நாம் உருவாக்கக் கூடாது,” என்று கூறினார்.

2016 இல் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, பேர்லின் மற்றும் பாரிஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுதந்திரமான ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கான திட்டங்கள் பற்றி கேட்கப்பட்டதற்கு, அவை நேட்டோ பாதுகாப்புக்கு சாத்தியமான அச்சுறுத்தல்கள் என்று ஸ்டோல்டென்பேர்க் விவரித்தார்: “[ஒரு ஐரோப்பிய இராணுவம்] என்றால் அதற்கு வெவ்வேறு விளக்கங்கள் உள்ளன. … அதன் பொருள் ஏராளமான ஐரோப்பிய சிப்பாய்கள், போர்க்கப்பல்கள், ஆளில்லா தாக்குதல் விமானங்கள் (ட்ரோன்கள்), போர் விமானங்கள் என்பதை குறிக்கும் என்றால், அதை நாங்கள் தீவிரமாக வரவேற்கிறோம் மேலும் வலியுறுத்துகிறோம். மாறாக அதே திறன்களுக்கு ஈடாக போட்டியிடும் புதிய கட்டமைப்புகளை அது குறிக்குமானால், அது நமது பாதுகாப்பைக் குறைமதிப்பிற்குட்படுத்தும். ஆனால், அது திட்டம் அல்ல என்று எனக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனவே, நமக்கு புதிய கட்டமைப்புக்கள் தேவையில்லை” என்கிறார்.

AUKUS குறித்த பாரிஸின் கவலைகளையும் அவர் நிராகரித்தார். மேலும், “பாரிஸ் ஏமாற்றமடைந்துள்ளது பற்றி நான் புரிந்துகொள்கிறேன். … ஆனால் அதே நேரத்தில், இது ஐரோப்பாவுக்கோ அல்லது நேட்டோவுக்கோ எதிரான ஒரு ஒப்பந்தம் அல்ல” என்றார்.

சீனாவுடனான இராணுவ மோதல் பற்றி ஸ்டோல்டென்பேர்க்கின் சுருக்க விளக்கம் பொய்கள் மற்றும் இழிந்த மழுப்புதல்களின் தொகுப்பாகும். முதலாவதாக, அணுசக்தி போர் உட்பட போரின் அச்சுறுத்தல் முதலில் நேட்டோவிலிருந்து வருகிறது, சீனா அல்லது ரஷ்யாவிலிருந்து அல்ல. சோவியத் அதிகாரத்துவம் 1991 இல் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததிலிருந்து, ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, மேலும் அதற்கு அப்பாலும் இரத்தம் தோய்ந்த போர்களை நடத்தி மில்லியன் கணக்கான உயிர்களை காவு வாங்கி, அந்த நாடுகளை சிதைத்து விட்டு, நேட்டோ தொடர்ந்து அதன் எல்லையை விஸ்தரித்து வந்துள்ளது. நேட்டோ, மற்ற பகுதிகளில் அல்லாமல், பால்டிக், உக்ரேன் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற ரஷ்ய மற்றும் சீன எல்லைகளில் தான் துருப்புக்களை நிலைநிறுத்துகிறது.

ஏகாதிபத்திய நாடுகளின் நாடுகடந்த நிறுவனங்களுக்கு மலிவான உழைப்பை வழங்குவதன் அடிப்படையில், இந்த காலகட்டத்திலான சீனாவின் பரந்த வளர்ச்சி, வேறு வகையில் ஏகாதிபத்தியத்தின் தேக்கநிலையையும் ஊழல் தன்மையையும் வெளிப்படுத்துகிறது. இது கோவிட்-19 தொற்றுநோயால் பேரழிவுகரமான வகையில் வெளிப்பட்டுள்ளது. நேட்டோ வல்லரசுகள் டிரில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தி பெரும் பணக்காரர்களை பிணையெடுத்து எதிர்வினையாற்றின, ஆனால் “வைரஸூடன் வாழ” அழைப்பு விடுத்தமை, பாரிய நோய்தொற்றுக்களுக்கும் அண்ணளவாக 2 மில்லியன் கோவிட்-19 இறப்புக்களுக்கும் வழிவகுத்தது. அதேவேளை கோவிட்-19 வைரஸை முற்றிலும் ஒழிக்க முயன்ற சீனா, மிகக் குறைந்த பொருளாதார மாற்றத்தால் பாதிக்கப்பட்டது மேலும் கோவிட் இறப்புக்களை 5,000 க்கும் குறைவாக தக்க வைத்துக் கொண்டது.

இது குறித்து தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்: நேட்டோவின் போர்க்குணமிக்க அச்சுறுத்தல்கள், அணுவாயுத நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா உடனான மோதலை மட்டும் தூண்டவில்லை, மாறாக, 20 ஆம் நூற்றாண்டில் இருமுறை உலகப் போராக வெடித்த அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான மோதலையும் தூண்டுகிறது. உண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஸ்டோல்டென்பேர்க்கின் எச்சரிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவத் திட்டங்கள் குறித்து அதற்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களின் கண்ணியமான பதிப்புக்களாக உள்ளன. 2019 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிகாரிகள் ஒரு ஐரோப்பிய இராணுவத்தை நேட்டோவுக்கு 'பெரும் பின்னடைவு' என்று கண்டனம் செய்து ஒரு கடிதத்தை அனுப்பினர், இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தை வர்த்தக போர் கட்டணங்களுடன் அச்சுறுத்தினர்.

வாஷிங்டன் சீனாவை மிகக் கடுமையாக அச்சுறுத்தும் அதேவேளையில், நேட்டோவில் உள்ள எந்தவொரு போட்டி ஏகாதிபத்திய பிரிவுகளையும் தொழிலாளர்கள் ஆதரிக்க முடியாது. இந்த அனைத்து சக்திகளும் தங்கள் சொந்த இலாபத்தையும் மூலோபாய நலன்களையும் ஒரே மாதிரியான முறைகள் மூலம் தொடர்கின்றன: அதாவது, வெளிநாடுகளில் போர், மற்றும் “வைரஸூடன் வாழ வேண்டும்” என்ற கொள்கையைத் திணிக்கும் உள்நாட்டின் பொலிஸ்-அரசு ஆட்சி, தொழிலாள வர்க்கத்தை தீவிரமாக சுரண்டுவது போன்ற வகையில். இது ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கை மூலோபாயவாதிகளின் கருத்துக்களில் மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது.

ஸ்டோல்டென்பேர்க் பைனான்சியல் டைம்ஸூக்கு பேசுவதற்கு முன்னர், சர்வதேச உறவுகளுக்கான பிரெஞ்சு நிறுவனத்தின் (French Institute for International Relations-IFRI) சிந்தனைக் குழாமின் தலைவர் தியரி டு மொன்ட்பிரியல் (Thierry de Montbrial), பிரெஞ்சு நிதி நாளிதழான Les Echos இடம் சீனா குறித்த அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய பதட்டம் குறித்து பேசினார். “அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குறைந்தது ஒபாமாவுக்கு பின்னர் பின்வரும் புறநிலை காரணங்களுக்காக ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது: அதாவது அவர்கள் ஆசியாவிற்கு ‘முன்னோக்கி’ செல்ல வேண்டும் என்பதாகும். ஜோ பைடெனின் தேர்வு நல்ல பழைய காலத்தை மீளக் கொண்டுவரும் என நம்பியவர்கள் தவறிழைத்துவிட்டனர். வெள்ளை மாளிகை தற்போது இன்னும் கொஞ்சம் கண்ணியமாக உள்ளது, என்றாலும் அது மிருகத்தனமானது” என்று மொன்ட்பிரியல் கூறினார்.

இது அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் நீடித்த வேறுபாட்டை உருவாக்கியது என்று அவர் கூறினார். “அட்லாண்டிக் கூட்டணியை விட்டு வெளியேற எங்களுக்கு எந்த காரணமும் இல்லை, ஆனால் அதுவே சீன எதிர்ப்பு கூட்டணியாக மாற்றப்படுவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. பிரெஞ்சு அல்லது ஐரோப்பிய நலன்கள் அமெரிக்க நலன்களுக்கு ஒத்ததாக இல்லை” என்றும், “சீனாவை பற்றி கூறுவதானால், அதே பழைய கதை தான். ஜேர்மனியர்கள் ரஷ்யாவைப் போல வணிக நலன்களுக்காக அவர்களை பாதுகாக்க அனைத்தையும் செய்கிறார்கள். சீனாவுடனான கொடூரமான மோதலுக்கு கட்டாயப்படுத்தப்படுவதை எந்த ஐரோப்பிய நாடும் விரும்பவில்லை. பிரச்சினை என்னவென்றால்: அமெரிக்க அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது?” என்று கூறுகிறார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் சோவியத் இராணுவ இருப்புக்கும் மற்றும் சீனாவுக்கும் நேட்டோவுக்கும் இடையில் தோன்றியுள்ளதாகக் கூறப்படும் “புதிய பனிப்போருக்கும்” இடையேயான ஒப்பீடுகளை அவர் நிராகரித்தார். “இன்று சீனா முன்வைக்கும் பிரச்சினைகளோ மிகவும் வேறுபட்டவை. இன்று ஐரோப்பாவில் சீன அச்சுறுத்தல் எங்கே? ஐரோப்பியர்கள் பாதுகாக்க ஆர்வம் கொண்டுள்ளனர். நாம் முதலில் அவர்களை சரியாக அடையாளம் காண வேண்டும். ஆனால் அதற்காக எங்களுக்கு இராணுவக் கூட்டணி தேவையில்லை” என்றார்.

எவ்வாறாயினும், மொன்ட்பிரியல் முன்மொழிவது அமைதி அல்ல, மாறாக போட்டி ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர்வது மட்டுமே. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஓய்வூதியங்களையும் மற்றும் வேலையின்மை காப்பீட்டையும் குறைப்பது, இராணுவத்திற்காக தாராளமாக நிதி ஒதுக்கீடு வழங்குவது போன்ற “பொருளாதார சீர்திருத்தங்களுக்கு” அவர் கோரினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் பிரான்ஸ் மாலியில் போர் தொடங்கியும், மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் ஆபிரிக்கா மற்றும் பால்டிக் குடியரசுகள் முழுவதும் படைகளை நிலைநிறுத்தியும் உள்ள நிலையில், “தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள [எங்கள்] சுற்றுப்புறம் எங்கள் முக்கிய மையமாக இருக்க வேண்டும்” என்று மொன்ட்பிரியல் வலியுறுத்தினார்.

இத்தகைய கருத்துகள், போர் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயை அரசியல் ரீதியாக குற்றகரமாக உத்தியோகபூர்வமாக கையாண்டதற்கு எதிராகவும் மற்றும் சோசலிசத்திற்காகவும், ஒரு சர்வதேச இயக்கமாக தொழிலாளர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டி ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

Loading